உணவும் – அரசியலும்

887
0
SHARE

 

வான் உட்கும் வடி நீள்மதில்;

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,

ஒரு நீ அகல் வேண்டினும், சிறந்த

நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்ற அதன்

தகுதி கேள், இனி, மிகுதியாள!

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே;

வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்

வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,

அடு போர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

– (புறநானூறு – பாடல் 18)

(இதன் பொருள், அரசனே! நீ வல்லவன் என்ற பெயரை சம்பாதிக்கவோ, நல்லவன் என்ற பெயரை எடுக்கவோ, இறந்த பிறகு சொர்க்கம் போகவோ விரும்பினால்! உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதை அறிக! உணவெனப்படுவது நிலமும் நீரும் ஆகும். வானம் பார்த்த பரந்த நிலப்பரப்பு இருந்தால் போதாது, நிலத்தையும், நீரையும் இணைப்பவனே உடம்போடு உயிரை ஒட்டச்செய்தவன் ஆவான். நான் சொல்வதை இகழாது கேள்! பள்ளங்களில் நீரைத்தேக்கு, அதை செய்தால் ஒருவர் விரும்பியதை பெறமுடியும், செய்யவில்லையானால் இருப்பதையும் இழந்துவிடுவர்)

உணவுப் பாதுகாப்பே ஒரு நாட்டை வல்லரசாக்கும். ஆயுதங் களல்ல அதாவது அணுகுண்டு போன்ற பேராயுதங் களல்ல என்ற ஞானம் இன்றையத் தேவை என்பதை இந்த சங்க காலப் புலவரின் கவிதை வரிகள் நமக்கு உணர்த்தவில்லையா?

சமீபத்தில் ராஜஸ்தான் மாநில ஏழைகளுக்கு இலவச செல்போன்கள் வழங்கும் விழா நடந்தது. பத்திரிகைகள் கிண்டல டித்தன. வயிற்றுக்கு உணவுக் கேட்டால் செவிக்குணவூட்டும் செல்போனா? என்று சிலர் கேட்டனர். அரசுக்கு என்ன, ரொட்டி கேட்ட மக்களை கேக் தின்னச் சொன்ன பிரெஞ்சு அரசியின் ஆணவமா? என்று சிலர் விமர்சித்தனர். இந்த கேள்விக்கும், கோபத்திற்கும் ஒரு பின்னணி உண்டு.

ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) 2001-ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணைத் தொடரில் 2010-ஆம்ஆண்டில் ஏழைகளுக்கு உணவு வழங்க நீதிபதிகள் போட்ட  இடைக்கால உத்தரவை பிரதமர் விமர்சித்ததால் மேற்படி விமர்சனங்களை பத்திரிகைகள் வெளியிட்டன.

உணவை இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 21-வது பிரிவின்படி அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அறிவிக்கக் கோரி 2001-இல் சுப்ரீம் கோர்ட் படி ஏறிய இந்த பொதுநல வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை. அனுமார் வால்போல் அது நீண்டு கொண்டே போகிறது. போபால் விஷவாயு பேரழிவு நட்ட ஈடு வழக்கு, பாப்ரி மசூதி இடிப்பு வழக்கு போன்றவைகளை விட ஜவ்வாக இழுக்க இதில் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இருந்தாலும் இடை இடையே நீதிபதிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 21-வது ஷரத்தின் உட்பொருளைப் புரிந்தோ புரியாமலோ இரக்க உணர்வில் சில இடைக்கால உத்தரவுகளைப் போட்டு வழக்கை முடிவிற்கு கொண்டு வராமலே தள்ளிப்போட்டு வருகின்றனர். சமீபத்தில் (ஆகஸ்ட் 10, 2010) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது உச்சநீதி மன்றம் சர்ச்சைக்குரிய அந்த உத்தரவைப் போட்டது.

தேவையான சேமிப்பகங்கள் அரசால் கட்டப்படாததாலும், வாடகைக்கு இடம் பிடிக்க நிதி ஒதுக்காததாலும் அரசு கொள்முதல் செய்த பல லட்சம் டன் தானியங்கள் கெட்டுப் போகிற அளவிற்கு வெட்ட வெளியில் கிடப்பதையும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி தானிய ஏற்றுமதிக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்த செய்தியையும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு போன போது அந்த தானியங்களை ஏற்றுமதி செய்வதை தவிர்த்து எலிகள் தின்று அழிப்பதையும் தடுத்து அரசு கணக்குப்படி வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் 7 கோடி ஏழைகளுக்கு இலவசமாகவோ, செலவுத் தொகையை மட்டும் ஈடு கட்டி குறைந்த விலையிலோ விநியோகிக்க ஆகஸ்ட் 10, 2010 அன்று இடைக்கால உத்தரவை போட்டது. அரசு கேட்க மறுக்கவே ஒரு கட்டத்தில் இந்த இடைக்காலத் தீர்ப்பு ஆலோசனை அல்ல, தாக்கீது என்று உச்சநீதிமன்றம் சொன்னது.

பணமூட்டைகளின் நிர்வாகக் குழுவாக இருக்கும் மன்மோகன்சிங்கின் அமைச்சரவை அந்த தாக்கீதை நிராகரித்தது. பிரதமர் கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று எச்சரித்தார். சில ஏட்டறிவு அறிஞர்கள் அரசிற்கும் உச்சநீதி மன்றத்திற்கும் இது மோதலை உருவாக்கும் என்று பயந்தனர். ஆனால் நீதிமன்றம் மன்மோகன் சிங் கூறியதை ஏற்றுக் கொண்டது.

இதில் வியப்பெதுவுமில்லை. 21வது ஷரத்து கூறுவதென்ன? (ஹசவiஉடந 21: “சூடி யீநசளடிn ளாயடட நெ னநயீசiஎநன டிக hளை டகைந டிச யீநசளடியேட டiநெசவல நஒஉநயீவ யஉஉடிசனiபே வடி யீசடிஉநனரசந நளவயடெiளாநன லெ டயற) ஒருவரின் உயிரையும், சுதந்திரத்தையும் சட்டப்படியான முறைகளைக் கொண்டு அல்லாமல் பறிக்கக் கூடாது என்பது தான். பிரதமரின் விமர்சனத்தால் சர்ச்சைகள் எழுந்தன. “உணவுப் பொருட்களை புளுத்துப் போக விடுவதா? பசித்தவனுக்கு கொடுப்பதா? என்பதை அரசுதான் தீர்மானிக்கும். இதில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. கொள்கை வகுக்கும் அரசியல் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை  மக்கள்தான் தேர்தல் மூலம் தீர்மானிக்க முடியும். நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அந்த வகையில் மன்மோகன் சிங் கூறியது சரி” என்று சில நிபுணர்கள் கூறினர். “எந்தக் கொடுமையும் செய்ய இயலாத ஏழைகளை பட்டினிப் போட்டு சாகடிக்கலாமா? சட்டமில்லாமல், காரணமும் இல்லாமல் அரசு (தானியத்தை முடக்கி) உயிரைப் பறிக்க முடியாது என்ற பொருளும் கொண்டது தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் ஷரத்து 21 ஆகும். எனவே நீதிமன்றம் அந்த சட்ட ஷரத்தை மதிக்க அரசிற்கு உத்தரவிடலாம்” என்று எதிர்வாதம் முன் வைக்கப்பட்டது. இப்படி வாதமும் எதிர்வாதமும் திண்ணைப் பேச்சாக நீண்டு ஒரு பக்கம் நடக்கிறது. அது நடக்கட்டும்.

கொள்கை வகுக்கும் உரிமை யாருக்கு என்ற வாதத்தில் நாம் திசை மாறிப் போகாமல் அரசின் கொள்கை என்ன? அதன் விளைவுகளென்ன? இவைகளை அலசுவதே இங்கே நமது நோக்கம். முதலில் கவனிக்க வேண்டியது;

ஏற்றுமதி செய்வது, இல்லையெனில் உணவு தானியத்தை ஏழையின் பசியைப் போக்க தராமல் உளுத்துப்போக விடுவது அல்லது எலிகள் தின்னவிடுவது, என்பதே மன்மோகன் சிங்கின் கூட்டணி அமைச்சரவையின் மிகத் தெளிவான கொள்கை யாகும்.

வெட்ட வெளியில் அரசு கொள்முதல் செய்த தானியம் கிடப்பது கவனக்குறைவோ, அல்லது அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடா முறையோ காரணமல்ல என்பது பிரதமரின் எச்சரிக்கையே காட்டுகிறது. உணவு அமைச்சகமும் தானியத்தை மைதானத்தில் குவித்து பிளாஸ்டிக் பாயால் மூடுவதை சிக்கன சீரமைப்பு என்கிறது.

அரசாங்கத்தின் திட்டமிட்ட கொள்கை இது என்பதை சாய்நாத் என்ற பத்திரிகையாளர் (செப்14, 2010, இந்து ஆங்கில நாளிதழ்) ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். அவர் முதலில் சுட்டிக்காட்டியது கொள்முதல் செய்யும் தானியங்கனை பாதுகாப்பாக சேமிக்க குடோன்களை புதிதாகக் கட்டுவதை அரசு நிறுத்தி பல வருடங்களாகி விட்டன . அதற்குப் பதிலாக தனியாரிடம் வாடகைக்கு எடுத்து வந்தது. 2004-லிருந்து 2006க்குள் வாடகைக்கு எடுத்த தனியார் குடோன்களையும் வேண்டாமென திருப்பி ஒப்படைக்கத் துவங்கியது. பல லட்சம் டன்கள் கொள்ளளவு கொண்ட குடோன்களை திருப்பியதால் கொள்முதல் செய்த தானியங்களில் ஒரு பகுதியை (சுமார் 3 கோடி டன் என்று ஒரு புள்ளி விவரம் காட்டுகிறது) மைதானத்தில் குவித்து பிளாஸ்டிக் பாய்களால் மூடியது. இப்பொழுது மீண்டும் தனியார் குடோன்களை வாடகைக்கு எடுக்கப் போவதாகவும் அரசு இடத்தில் புதிய குடோன்கள் கட்டப் போவதில்லை என்றும் புதிய கொள்கையை 2010 பட்ஜெட் உரையில் அறிவிப்பு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளைக் காட்டி அரசின் தானியத்தை கெடப்போடும் கோட்பாட்டை சாய்நாத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் .

பல லட்சம் டன் தானியத்தை வெட்ட வெளியில் போடுவது. தேவைப்பட்டால் கூடுதல் வாடகை கொடுத்து குடோன்களை எடுப்பது அரசிற்கு சொந்தமான இடங்களில் குடோன்களை இனி அரசு கட்டாது, என்பது தான் அரசின் புதிய கொள்கை என்றால் அதன் நோக்கமென்ன?

தானியத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசு கொள்முதல் செய்யவில்லை என்பதை சந்தையில் தானிய விலை உயர்ந்து கொண்டே போவது காட்டுகிறது. கட்டுப் படியான விலை கொடுத்து விவசாயிகளைக் காப்பாற்றும் நோக்கோடும் கொள்முதல் செய்யவில்லை என்பதை விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்வது காட்டிக் கொடுக்கிறது. பொது விநியோக முறை மூலம் ஏழைகளுக்கு கொடுக்கும் நோக்கமும் அரசிற்கு இல்லை  என்பது உச்சநீதிமன்ற தாக்கீதை அரசின் கொள்கையை காட்டி பிரதமர் நிராகரித்த வேகம் காட்டிக்கொடுக்கிறது. பின் எதற்கு பல லட்சம் டன் தானியத்தை அரசு கொள்முதல் செய்து புழுக்கவிட வேண்டும். அதற்கு இரண்டில் ஒரு நோக்கம் தான் இருக்க முடியும். சந்தையில் கிராக்கியை ஏற்படுத்தி தானியங்களின் விலை இறங்காமல் பறக்கவிட வேண்டும் அல்லது ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு நோக்கம் இருக்க முடியாது.

குடோன்களை அரசு இடத்தில் கட்டாமல், தனியாரிடம் வாடகைக்கு எடுக்கும் நோக்கமென்ன? ரியல் எஸ்டேட் பிசினஸால் நவீன நிலப்பிரபுக்களின் கையில் திரண்டு கிடக்கும் நிலம் வருவாய் இல்லாமல் கிடக்கலாமா? அரசின் பணம் அவர்கள் பக்கமாக பாயட்டும் என்பதுதான்! பொதுவிநியோக தானியத்தின் அடக்க விலையில் இந்த வாடகையும் சேருவதால் அது மக்கள் தலையில் விழும் அல்லது அரசின் பட்ஜெட் தாங்க வேண்டும். இப்பொழுதே நிர்வாக செலவாகக் காட்டி பொது விநியோக தானிய விலையை அவ்வப்பொழுது அரசு உயர்த்துவதில் குடோன் வாடகையும் அடங்குகிறது என்பது பலர் அறியாத சிதம்பர ரகசியம். 2004-க்குப் பிறகு ரேஷன் பொருட்களின் விலையை அரசு உயர்த்தவில்லை என்று அரசு கூறுவதற்கு காரணம், இக்காலங்களில் வாடகைக்கு குடோன்கள் எடுப்பதை நிறுத்தி மைதானத்தில் குவிக்கத் தொடங்கியதால் செலவு கூடவில்லை.

கடந்த ஆகஸ்ட்டில் அரசே அறிவித்தது என்ன? ஸ்டாக் வைக்க இடமில்லாததால் கோதுமையை கமிஷன் ஏஜென்டுகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும், அமைச்சரவை 50 ஆயிரம் டன் கோதுமையை பங்களாதேசத்திற்கு (டன் 340 டாலர் விலை,) ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய செய்தியை ராய்ட்டர் செய்தி நிறுவனம் (ஹரப 6, 2010 11:11யீஅ ஐளுகூ) வெளியிட்டது. இதே காலத்தில் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த ரஷ்யா தானிய ஏற்றுமதியை தடைசெய்து அறிவித்தது.

இந்திய தானியத்தை ஏற்றுமதி செய்வதை சமூக அக்கறையுள்ள பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தனர். தானியத்தை ஏற்றுமதி செய்து வறுமையை இறக்குமதி செய்கிறார்கள் என்று சாடினர். இந்த விமர்சனத்தை ஏற்க மறுத்து இந்தியாவில் தானிய உற்பத்தி அமோகமாக இருப்ப தாகவும், பொது விநியோகத்திற்கு போக மிஞ்சுவதையே  ஏற்றுமதி செய்வதாகவும் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. இது உண்மையல்ல.

மக்கள் நல பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென். நோபல் பரிசு வாங்க உதவிய அவரது     வறுமையும் அரசின் பதிலும் என்ற ஆய்விலிருந்து மேற்கோள்காட்டி சில நிபுணர்கள் அமோக விளைச்சல் என்பதற்கு பின்னால் இருக்கும் பொய்யை ஊதித்தள்ளினர். நல்ல விளைச்சல் இருந்தாலும் அரசின் கொள்கைகளால் பஞ்சத்தை உருவாக்க முடியும் என்பதை பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்ததை சென் குறிப்பிடுகிறார். அமர்த்தியா சென் சிறுவனாக இருந்த பொழுது பிரிட்டீஷ் அரசு தானியத்தை ஒதுக்கி 1945-இல் பஞ்சத்தை உருவாக்கியது. ஒரு பக்கம் தானிய குவியல், மறுபக்கம் உணவின்றி மக்கள் தவிப்பு. இந்த முரண்பாட்டை சென் நெஞ்சத்தில் தைக்கிற மாதிரி விளக்கியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி இப்பொழுது மன்மோகன் சிங் அரசும் வாங்கும் சக்தியற்ற ஏழைகள் பசியில் வாட அரசு தானிய ஏற்றுமதி செய்து  பஞ்சத்தை விளை விக்கிறது. பதுக்கல் கொள்ளையனைப்போல் அரசு நடக்கிறது என்று அவர்கள் விமர்சித்தனர்.

இன்னொரு கோணத்தில் மத்திய அரசின் கொள்கையால் தானிய உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு வருவதை சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அரசின் புள்ளி விபர மாயாஜாலத்தை போட்டு உடைக்கின்றனர். அமோக விளைச்சல் இருக்கலாம் ஆனால் தானியம் விளையும் நிலப்பரப்பு சுருங்குகிறது. அரசின் விவசாயக் கொள்கையும், அதில் தானிய உற்பத்தி பற்றிய அக்கறையின் மையும், சிறப்பு பொருளாதார மண்டலம் அறிவிப்பின் மூலம் விளை நிலம் தரிசாகப் போவதையும், நில விலை ஏற்றமும், அதனால் உருவாகும் குடியிருப்பு பிரச்சனைகளையும்  அரசு அங்கீகரித்த புள்ளி விவரங்களைக் காட்டியே  அரசின் கோட்பாடுகளின் விளைவால் ஏற்பட்ட சரிவை காட்டுகின்றனர். அந்த விவரங்கள் எவ்வாறு வறுமையை வளர்க்கிறது, சராசரி மனிதனின் முன்முயற்சியை புதைத்து பணமூட்டைகளின் அகோரப் பசிக்கு தீனிபோட முயலுகிறது என்பதை உணர வைக்கிறது.

தானிய விலை உயர்விற்கு ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து, திட்டக்குழுத் தலைவர் மாண்டேசிங் அலுவாலியா வரை இந்தியர்கள் அதிகம் உண்பதால் விலை ஏறுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். அதைவிட ஒரு படி போய் இந்தியர்கள் தானிய உணவை குறைத்து முட்டை பால், மீன், மாமிசம், பழம் ஆகியவைகளை உண்ணத் தொடங்கி விட்டதால் சாப்பிடும் தானிய அளவு குறைந்து விட்டதாக ஒரு கற்பனையை கட்டவிழ்த்து விட்டனர். இவைகள் எவ்வளவு பெரிய புளுகு மூட்டை என்பதை பொருளாதார நிபுணர் உஷா பட்நாயக்கும், தானிய நிபுணர் எம்.எஸ் சாமிநாதனும் இந்து பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளில் காட்டிவிட்டனர். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க செய்ய வேண்டியதையும் குறிப்பிடுகின்றனர்.

கட்டங்களில் உள்ள புள்ளி விவரங்கள் 2007-ஆம் ஆண்டு நிலவரத்தை தொகுத்து, 2009-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் உணவுக்கழகம் வெளியிட்டவை.

உஷா பட்நாயக் ஐ.நா.வின் உணவுக்கழகம் தந்த மேலே உள்ள புள்ளி விவரத்தைக் காட்டி  அரசின் பிரச்சாரத்தை அம்பலப் படுத்துகிறார் (இந்து, 13-9-2010). இந்த விவரங்கள் அந்தந்த நாட்டு அரசுகள் கொடுத்த தகவல்களே. இந்திய மக்களுக்கு சராசரியாக ஒரு நபருக்கு நேரடி உணவாகவும், மாமிசமாகவும் வருடத்திற்கு கிடைப்பது 174.2 கிலோ தானியமே, இது ஆப்பிரிக்க கண்டம் நாடுகளை விட (196.4 கிலோ), இதர வறுமை மிகு நாடுகளை விட (182.1 கிலோ) குறைவே. 9வது கட்டம் மொத்த தானியத்தில் நேரடி உணவல்லாத பயன்பாட்டிற்கு போனதின் சதவிகிதம் காட்டப் படுகிறது. மற்ற நாடுகளை விட மாமிச உணவாக கிடைப்பது மிகக் குறைவு என்பதை இது காட்டுகிறது.7,8,9-வது கட்டங்கள் இந்திய மக்கள் தானிய உணவை குறைத்து, சத்துமிகு மாமிச உணவிற்கு மாறி விட்டார்கள் என்பது ஆகப் பெரிய புளுகு என்பதை காட்டுகிறது. நம்மைவிட மாமிச உணவு ஆப்பிரிக்க மக்களுக்கும், வளர்ச்சியுறாத நாடுகளின் மக்களுக்கும் கிடைக்கிறது என்பதை இவ்விவரங்கள் தெரிவிக்கின்றன.

70 கோடி மக்களை வறுமை, சுகாதாரமின்மை இவையிரண்டும் சீரழிக்கிற பொழுது  பல லட்சம் டன் தானியம் புளுத்துப்போக விடப்படும் என்று ஒரு அரசு கூறினால் கோபம் கொள்ளும் அறிவாளிகள் மிகச் சிலரே. பட்டினி தேசத்திலே அரசே உருவாக்கும் தானிய மலையா அவமானம் என்கிறார் நெல் நிபுணர் எம்.எஸ். சாமிநாதன். தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியதாக கூறியதோடு ஆங்காங்கு குடோன்கள் கட்ட அரசு முதலீடு செய்ய வற்புறுத்துகிறார். தானியத்தைக் கெடாமல் பாதுகாக்க நவீன முறைகளை கையாளச் சொல்கிறார். பலமுறை கவனப்படுத்தியும் அரசு கவனிக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். (இந்து, 14-9-2010). “உலகிலேயே மிக அதிகமான நோஞ்சான் குழந்தைகளும், உணவுப் பற்றாக்குறையால் ஆரோக்கியமற்ற ஆண்களும் பெண்களும் நிறைந்த நாடாக நம்மை வகைப்படுத்தியிருக்கிற நிலையில் லட்சக்கணக்கான டன் தானியங்களை கெடவிடுவதின் மூலம் வேதகாலம் முதல் தானியத்தை தெய்வாம்சம் பொருந்தியதாக கருதும் நமது பண்பாட்டை தானியக்கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைக்காமல் பொறுப்பேற்றவர்கள் அவமதித்து விட்டனர். ஆயுதங்களைக் கொண்ட நாடல்ல தானிய செழிப்புள்ள நாட்டிற்கே இனி எதிர்காலம் உண்டு என்பதையும், 120 கோடி மக்களுக்கும் 100 கோடி கால்நடைகளுக்கும் உணவளிக்க நமது விவசாயிகள் படுகிற கஷ்டங்களையும் நான் பலமுறை கவனப்படுத்தியிருக்கிறேன். விவசாயத்தில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் தாங்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு விளைவித்த தானியத்தை கவனிப்பாரற்று உளுத்துப்போக வெட்ட வெளியில் போட்டுவிட்டார்களே என்பதை காண்கிற பொழுது  எவ்வளவு மனவேதனை அடைவார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். லட்சக் கணக்கான டன்  தானியங்களை புளுத்துப் போகப் போடப்பட்டிருப்பதை பத்திரிகைகள் காட்டியதால் தேசமே அவமானத்தால் தலை குனிகிறது.  இந்த அவமான உணர்வு ஆட்சியாளர்களை செயல் பட விரட்டட்டும் ” என்கிறார் சாமிநாதன். பொருளாதார நிபுணர் உஷா பட்நாயக் தானிய உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் சரிவை சுட்டிக்காட்டி, அதை உணர மறுக்கும் மரக்கட்டைகளாக இருக்கும் அரசைப்பார்த்து மக்களின் குறிப்பாக ஏழைகளின் வருமானத்தை பெருக்க வழி தேடுங்கள் என்கிறார்.

அரசின் கொள்கையால் ஏற்பட்ட விளைவுகளை அரசு தரும் இன்னொரு வகையான புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது. இந்திய அரசே மனித மேம்பாட்டு தரம் கடந்த 10 ஆண்டில் எப்படி மாறியுள்ளது என்பதை அளந்து தயாரித்த புள்ளி விவரத்தை சீத்தாராம் யெச்சுரி சுட்டிக் காட்டுகிறார்

¨              இன்று 77 சதவிகித மக்கள் தினசரி வருவாய் 2 டாலருக்கும் (சுமார் 90 ரூபாய்) குறைவு.

¨              51 சதவிகித மக்களுக்கே கழிப்பிட வசதி உள்ளது. அதாவது சுமார் 60 கோடி மக்கள்  வெட்ட வெளியையும், சாலை ஓரத்தையும் கழிப்பிடமாக பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்.

¨              எல்லா நகரங்களிலும் ஒரு பகுதி சாக்கடை  சுத்திகரிக்கப்படாமலே ஆற்றிலும்  கடலிலும் தள்ளிவிடப் படுகிறது.

பரம்பரை ஏகபோகங்கள், அந்நிய நிறுவனங்கள், போண்டி ஆகாத நிலப்பிரபுக்களின் வாரிசுகள், புதுப் பணக்காரர்கள்  இவர்கள் சம்பாதிக்கும் மின் வேகத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் டிஜிட்டல் பணம்  வங்கிகளிலே முடங்கிடாமல்  தானிய வர்த்தகத்தில் பாய்ந்து பெருக உத்தரவாதமான வழியை தேடிக் கொடுப்பதையே கடமையெனக் கொண்ட  பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை இந்த புள்ளிவிவரங்களை பார்த்துக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்க வில்லை. அந்த விவரங்களைக் கொண்டு ஆய்வு செய்யும் சமூக உணர்வுள்ள இந்த நிபுணர்களின் கருத்துக்களை காதிலே வாங்குகிற நிலையிலும் இல்லை என்பது தெளிவு. தானியத்தை கமிஷன் ஏஜென்டுகள் மூலம் ஏற்றுமதி செய்வோம், இல்லையெனில் புளுத்துப் போக விடுவோமே தவிர ஏழைகளுக்கு வழங்கி தானியத்தின் சந்தை விலையை சறுக்கவிட மாட்டோம் என்பதில் அரசு உறுதி காட்டுகிறது.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதால் இந்தியப் பொருளாதாரமே, அதாவது பணக்காரர்கள் பணத்தை பெருக்க இயங்கும் நமது பொருளாதார சக்கரம் படுத்துவிடும். உணவு விலை குறைந்தாலே அதில் முடக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி டிஜிட்டல் பணம் காணாமல் போய் வங்கிகள் திவாலாகி அதிலிருக்கும் மக்களின் சேமிப்புகளும் ஆவியாகி  நிதி மூலதனத்தின் மீது அணுகுண்டு வீசியது போல் ஆகிவிடும். இந்த பயமே மன்மோகன்சிங்கின் அமைச்சரவையை விரட்டுகிறது. பணக்காரர்கள் முடக்கிய பணம் காணாமல் போவதை விட70 கோடி மக்கள் நடைப்பிணமாக ஆகட்டும் என்பதே இந்த அரசின் கோட்பாடு என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா?  ஈவு, இறக்கம், மனிதாபிமானம் எல்லாம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணாமல் போய்விடும் என்று மார்க்ஸ் சொன்னதை மறக்க இயலுமா.

பட்டினிப் போடும் அரசின் கொள்கையை புரிய வேண்டுமானால் சில அடிப்படைகளை மனதில் போட்டுக் கொள்வது அவசியம். இதன் அரசியல் பொருளாதார அடிப்படையை முதலில் கவனிப்போம். முதலாளித்துவப் பொருள் உற்பத்தி உறவு என்பது ஏழை பணக்காரன், சுரண்டப் படுபவன், சுரண்டுபவன் என்ற முரண்பாட்டை அஸ்திவாரமாகக் கொண்டது. இந்த சமூக அடிப்படையைக் கட்ட முதலாளி வர்க்கம் கையாண்ட துவக்கக் கால கொடுமைகளை மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் தொகுப்பை படித்தவர்களே உணர முடியும். அல்லது நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அதிகாரப் பூர்வமாக மறைக்கப்படும் முதலாளித்துவத்தை கட்டுவதற்காக நடந்த கொடுமைகள் பற்றிய பகுதியை படித்தாலும் உணர முடியும்.  மூலதன திரட்சிக்கு குழந்தை உழைப்பு, தினக் கூலிகள், வேலை நேர நீட்டிப்பு இவைகளே அடிப்படையாகும். இந்தியாவின் நவீன பனியன் தொழில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, வேலை நேர நீடிப்பிற்கு சாப்ட்வேர் தொழில் எடுத்துக்காட்டு. வாழ்விற்கேற்ற கூலி என்ற கோட்பாடு இந்திய முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே ஆகாது. விவசாயி களின் வறுமை மூலதனம் திரள மிக அவசியம்.

இந்த வர்க்கப் பிரிவினை தான் இன்றையப் பொருளாதாரச் சக்கரத்தை சுழற்றுகிறது. சமூக உழைப்பால் உருவாகும் செல்வத்தை பணவடிவில் பெருக்குகிறது. இந்த வர்க்கப் பிரிவினையால் விளையும் வர்க்கப் போராட்டமே வரலாற்றை சுழற்றுகிறது. இந்த இரண்டும் தானாக நிகழ்வதில்லை உணர்வுப் பூர்வமான அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டமே அரசியலை தீர்மானிக்கிறது. அது எந்த வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருக்கிறதோ அதனுடைய ஆயுதமாக ஆகிவிடுகிறது. தொழிலாளி-விவசாயி ஒற்றுமையைக் கெடுப்பதன் மூலம் முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசு மக்களைப் பட்டினி போடும் முடிவை எடுக்க எப்படி சாத்தியமானது என்பதை இங்கே தேடுவது அவசியம்.

சுரண்டும் வர்க்கக் கருத்தோட்டத்திற்கு ஏழைகளும் அடிமைப்படுவதால் இது சாத்தியமாகிறது. ஏழைகளை உபரியாகவும், வேண்டாத குப்பைகளாகவும் கருத்து பரவலாக உள்ளது. ஏழைகளின் மனதிலும் இந்தக் கருத்து ஆட்சி செய்கிறது. அவர்களது உழைப்பு சக்திதான் செல்வத்தின் உயிர் நாடி என்பதை ஏழைகளே உணரவிடாமல் அடையாள அரசியலின் தாக்கம் உள்ளது. அவர்கள் உழைக்காமல் எந்த சரக்கும் இல்லை. அந்த எண்ணத் தெலையாத சரக்குகளும், சேவைகளும் இல்லாமல் பணம் பல்பொடி மடக்க உதவும் வெறும் தாளே, அதிலும் வங்கிகளின் கணினிகளிலே மில்லியன் கணக்கில் கிடக்கும் டிஜிட்டல் பணம் நாக்கு வழிக்கக் கூட உதவாது. இந்த சாதரண உண்மை ஏழைகளின் கண்ணில் படாமல் போவதற்கு முதலாளித்துவ தத்துவக் கண்ணோட் டத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பதே காரணமாகும். விவசாயிகள் சொந்த உழைப்பால்  தானியங்களையும், இதர கச்சாப் பொருட் களையும் விளைவிப்பதால்  பூர்சுவாபோல் பணக்குவியல் மீது மோகமும் எளிதில் பற்றிக் கொள்கிறது. வாழ்வின் எதார்த்தமும், அனுபவங்களும் இந்த மூடக் கருத்திற்கு எதிராக இருப்பதால் போராட்டங்கள் வெடிக்கின்றன. பொருளாதாரத்தின் அடிப்படை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உயிர் வாழவும், உயரவும் சமூக உழைப்பு சக்தியை எவ்வாறு நிர்வகிப்பது என்பதுதான் இதனை விவசாயிகளும், தொழிலாளர்களும் உணர்ந்து, அரசியல் ரீதியாக இணைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் பூர்சுவாக்களின் பண மோகமே பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றி வரும். பங்குச்சந்தை மூலதனமோ, குடும்பப் பாணி மூலதனமோ பணத்தைப் பெருக்க குறுக்குவழிகளில் அவைகள் ஈடுபடுகிற பொழுது  உருவாகும் நெருக்கடிக்கு விவசாயிகளும் தொழிலாளர்களும் பலியாவதை தடுக்க முடியாது.

 

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்