உணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்

476
0
SHARE

 

உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமோ, தினந்தோறும் “ விலை இறங்கிவிட்டது” என்று காட்டுவதற்கான புள்ளி விவரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

உணவுப் பணவீக்கம் 16 சதவிகிதம் என நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.  “உணவுப் பணவீக்கம்” என்ற வார்த்தையே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வில்லை; உணவுப்பொருள் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது என்று காட்டுவதற்காக மட்டும் அவர்கள் கூறுவதாக கருத வேண்டாம். மக்களுக்கு வாங்கும் சக்தி கூடிவிட்டது, முன்னைவிட அதிக உணவுப் பொருளை மக்கள் வாங்க முற்படுவதால் விலை ஏறுகிறது என்ற பிரமையை உருவாக்கவும் அது கூறப்படுகிறது. சமீபத்தில் பூண்டு விலை ஏறியது. பத்திரிகைகள் பூண்டு இலங்கைக்கு ஏற்றுமதி ஆவதால் விலை ஏறிவிட்டதாக புரளியை கிளப்பினர். ஏன் இந்த பிரச்சாரம், இதற்கு ஒரு அரசியல் நோக்கமுண்டு,

ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்கள்

இடது சாரி கட்சிகள் தொடர்ந்து கூறுகிற காரணங்களை மக்கள் நம்பக் கூடாது என்ற நோக்கமே இதற்கு அடிப்படை. நமது நாட்டு பெருமுதலாளி கூட்டத்தின் கையிலிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை கொண்டு நடத்தும் முன் பேர வர்த்தகத்தால் விலை ஏறுகிறது என்று திரும்ப, திரும்ப இடதுசாரிகள் கூறுவதை மறுக்க, மக்களை குழப்ப ஏதாவது காரணம் மக்கள் நம்புகிற மாதிரி கூறவேண்டும். ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்களை உற்பத்தி செய்கிற நிபுணர்கள்  அங்கே உண்டு. உண்மையில் விலை ஏற்றத்திற்கு காரணம் முன்பேர வர்த்தகமே. இரண்டாவது காரணம்  எரிபொருட்களின் விலை உயர்வு ஆகும்,இப்பொழுது அரசு ஒரு புதிய பொய்யை சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டது எனலாம்   அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், காய்கறிகள் விலையும் மேலும் கடுமையாக அதிகரித்து மக்களை தாக்கத் துவங்கியுள்ள நிலையில், உணவுப்பணவீக்கம் திடீரென்று 9.67 சதவீதமாக குறைந்ததாக அறிவித்தனர். விலைகள் உயரும் பொழுது எப்படிபணவீக்கம் வீழ்ச்சியடையும். அந்த மாயம் மன்மோகன்சிங் காலத்தில்தான் நடக்கும். மக்களின் பண வருவாய் சுருங்கி, பெரு முதலாளிகளிடத்தில் மலை போல் பணம் குவிவதால் இப்படியும் நடக்குமோ,?அரசிற்கே வெளிச்சம்.

இந்தப் பின்னணியில், விலை உயர்வு  நினைத்தவுடன் உலகில்  எங்கு வேண்டுமானாலும் உரு மாறி பாயும் நிதி மூலதனம் – சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு இடையிலிருக்கும் தொடர்பை புரிந்துகொள்வது நமது போராட்டத்தை தீவிரப்படுத்த உதவும்.

 

ஐஐ

உணவுக்கான கலவரம்

உலகம் முழுவதிலுமே, குறிப்பாக வளர்முக நாடுகளில் இருக்கும் மிகப்பெருவாரியான மக்கள் உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட தடாலடியான விலை உயர்வு களின் தாக்குதலை 2006ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்திலிருந்தே சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பல சிறிய நாடுகளில் உணவு கிடைக்காமையால் கலவரம் நடக்கிறது. பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்வால் தானியங்கள் பயோடீசல் உற்பத்தி செய்ய திருப்பி விடப்படுவதால் தானியங்களின் விலையை எட்டாத உயரத்திற்கு கொண்டுசெல்வதாக நிபுணர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் 2007-இல் துவங்கி இன்று வரையிலும் நீடிக்கும் நிதி மூலதன நெருக்கடி, இந்த துயரத்தை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. இதற்கு அடிப்படை முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிறவிக் கோளாறு ஆகும். உலகமயச் சூழலும், தனியார் மயமும் பொருந்த மறுக்கிறது. சந்தையில் நிதி மூலதன ஆதிக்கமே இந்த பொருந்தா உறவிற்கு அடிப்படை.

ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு முகாம்கள் உண்டு. ஒன்று சந்தையை அரசு கண்காணித்து, மூலதனத்தின் பாய்ச்சலை அரசு நெறிப்படுத்த வேண்டும் என்று ஒரு முகாம் கூறுகிறது, மற்றொன்று சந்தைக்கு புத்தியுண்டு அது மூலதனம் எங்கு போகவேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துவிடும். அரசு தலையிடக் கூடாது என்கிறது இன்னொரு முகாம். முதலாவது முகாம் பிரிட்டிஷ் மாடல். இரண்டாவது முகாம்அமெரிக்க மாடல்.ஆனால் இரண்டு மாடல்களுக்குமே முதலாளிகளின் லாப வேட்டையால் உருவாகும் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் தந்திரோபாயங்களை உருவாக்குவது தான் நோக்கமே தவிர சமூக உழைப்பு சக்தியால் சரக்குகள் வடிவில் உருவாகும் செல்வத்தை நியாய அடிப்படையில் மக்களிடையே விநியோகிப்பது என்பதல்ல, சரக்குகளாக இருக்கும் செல்வத்தை பண வடிவில் மாற்றி சிலர் சுருட்ட பாதுகாப்பு கொடுப்பதே அரசின் கடமை என்பதில் இரண்டு மாடல்களுக்கும் ஒற்றுமை உண்டு.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி இருந்தவரை பிரிட்டிஷ் மாடலை உலகளவில் திணிக்கும் முயற்சி இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற சந்தை முறையை உலகத்தின் மீது திணிக்கத் துவங்கினர். உலக வங்கியின் மூலம் இதை சாதித்து வருகின்றனர். ஒரு காலத்தில், பொதுபரிவர்த்தனை கருவியாக தங்கமும் வெள்ளியும் இருந்தது. 1930-களில் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு, பணம் என்பது தங்கம், வெள்ளி  என்ற சிறப்புமிகு உலோகங்களைஅடிப்படையாகக் கொண்டு இருக்கப் போய்த்தான் பணசூழற்சியில் நெருக்கடி ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக. கருதினர், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், டாலரை சர்வதேச செலவாணியாக ஆக்கி படிப்படியாக 1970-களில்  சரக்குகளையும் நிலம் போன்ற சொத்துகளையும் பணத்திற்கு அடிப்படையாக  கொள்வது என முடிவு செய்தனர். நாணய பரிவர்த்தனை முறையைப் புகுத்தினர்.இப்பொழுது பண உற்பத்தி காட்டு வெள்ளமாக ஆகிவிட்டது.

சுரண்டும் பணம் பல வடிவங்கள்

கடன்பத்திரங்கள், பங்குபத்திரங்கள், சரக்குபத்திரங்கள் என்று பணம் பல அவதாரங்களை எடுப்பதாலும், தாள் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பணம் வந்துவிட்டதால் கட்டுக்கடங்காமல் பணம் உருண்டு ஓடுகிறது. ஈரானிலிருந்து எண்ணெய் கப்பல் இந்தியாவிற்கு வருவதற்குள் பலர் கைமாறி விலையை உயர்த்தி விடுகிறது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் கொடுத்தவுடன், நிலவிலை தாறுமாறாக உயர்ந்தது. இந்த வீட்டுக் கடனை பத்திரங்களாக்கி வங்கிகள் விற்றன. இதை வாங்கிய நிதி நிறுவனங்கள் வட்டியை உயர்த்தி தவணைத் தொகையை உயர்த்தியது. தவணைத்தொகை உயர்ந்ததால், நிலுவைகள் பெருகின. வீடுகளை கைப்பற்றி நிதி நிறுவனங்கள் ஏலம் போட ஆரம்பித்தனர் 50 லட்சம் கடன் கொடுத்த வீடு 30 லட்சத்திற்கு ஏலம் போனால் என்ன ஆவது, நில விலை சரிய வங்கிகள், நிதிநிறுவனங்கள் திவாலாகின, இவைகளில் திரண்ட மக்களின் சேமிப்பு காணாமல் போனதால் வருவாய்க்கு அதை நம்பி வாழ்ந்த கோடான கோடி அமெரிக்க மக்கள் வருமானம் சுருங்கியது. அது சரக்குசந்தையை பாதித்தது. இதில் கவனிக்க வேண்டியது, அமெரிக்க வீட்டுக்கடன் பத்திரங்களை பெருமளவு வாங்கிய ஐரோப்பிய வங்கிகளும், ஐஸ்லாந்து போன்ற சிறிய நாடுகளின் வங்கிகளும், இந்தியா, சீனா போன்ற டாலரை அந்நிய செலவாணியாக வைத்திருக்கும் அரசுகளின் சேமிப்புகளும் மதிப்பிழந்தன. இதனால் அமெரிக்க நெருக்கடி உலக மயத்தால் எல்லா நாடுகளிலும் பரவியது.

சந்தைக்கு புத்தி கிடையாது

வங்கித்துறையில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எங்கெல்லாம் தாராளமயக் கொள்கைகள் வங்கித்துறையில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் இந்த வீழ்ச்சி மின்சாரம் போல் தாக்கியது. ஐஸ்லாந்து வங்கிக்கட்டமைப்பு வீழ்ந்தது. ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிரான்ஸ், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த நாட்டின் வங்கிகள் 2.8 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் = 100,000 கோடி) வருமானத்தை இழந்துள்ளன. ஐரோப்பிய வங்கி 1.6 டிரில்லியன் டாலர் வருமானத்தை இழந்துள்ளது. இவர்களை நம்பி எரிபொருள் வியாபாரம் உள்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அரபு உலகம் மட்டும் 3 டிரில்லியன் டாலரை இழந்துள்ளது. இது அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகளை கடும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே இந்த கதி என்றால், வளர்முக நாடுகளைப் பற்றி கேட்கவேண்டியதில்லை.

நெருக்கடியிலிருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்க ஒபாமா நிர்வாகம் 700 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) ஊக்க நிதியும் ஐரோப்பிய யூனியன் 750 பில்லியன் டாலர் ஊக்க நிதியும் அளித்துள்ளன.

எனினும் 2007-இல் துவங்கிய இந்தப் பொருளாதார நெருக்கடியை – ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பொருளா தார வீழ்ச்சியை – இன்னும் அவர்களால் மீட்க முடியவில்லை.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள பெரும் நிதி நிறுவனங்கள் தான்தோன்றித்தனமான நடைமுறைகளை பின்பற்றியதாலும், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றாததாலுமே இத்தகைய நெருக்கடி தோன்றியது என்றும், உரிய ஒழுங்காற்று முறைகளை அமல்படுத்தினாலே மீண்டும் நிலைமையை சரிசெய்துவிடலாம் என்றும் பென் பெர்னான்கே, ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், சைமன் ஜான்சன், பால் குரூக்மேன், ஆலன் கிரீன்ஸ்பான், எரிக் டினலொ, ரகுராம் ராஜன் போன்ற உலகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவர்கள் எல்லொரும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை கடுமையான வீழ்ச்சியிலிருந்து எப்படி மீட்பது என்பது குறித்து கவலைப்படுபவர்கள்.

ஆனால் உண்மையில் முதலாளித்துவ வங்கிக் கட்டமைப்பில் சிறு சிறு ஒழுங்காற்று நடைமுறைகளை அமல்படுத்தினாலே போதும் என்ற இவர்களது கூற்று, முதலாளித்துவம் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதேயன்றி வேறல்ல.

ஐஐஐ

சமூக உழைப்பும் மூலதன பெருக்கமும்

முதலாளித்துவத்தின் இயக்கு சக்தியாக இருப்பது, மக்கள் பயன்படுத்துவதற்கான அல்லது மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான அல்லது சந்தையின் தேவையை நிறைவு செய்வதற்கான பொருளுற்பத்தி செய்வது அல்ல; மாறாக லாபத்தை பெருக்குவதற்கான – அதாவது மூலதனத்தை மேலும் திரட்டுவதற்கான உற்பத்தியே ஆகும். சுருக்கமாகச் சொன்னால், பண வடிவில் மிகப்பெருமளவு மூலதனத்தை ஒன்றுதிரட்டுவதே முதலாளித்துவ உற்பத்தியின் இலக்கு. முதலாளித்துவம் பயன்படுத்தும் மூலதனமான பணம், மிக முக்கிய உற்பத்தி சக்தியான தொழிலாளர்களின் உழைப்பை பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் பல பொருட்களைப் போலவே தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியும் பணம் கொடுத்துப் பெறப்படுகிறது. ஆனால் மற்ற பொருட்களைப் போல் அல்லாமல், தொழிலாளர்களின் இந்த உழைப்புச்சக்தி, முதலாளித்துவ உற்பத்தியில் புதிய மதிப்பை செலுத்துகிறது- அந்த உற்பத்தி பொருளின் மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.  வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால் உற்பத்தி  நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிலாளி செலுத்தும் உழைப்புக்கு இணையாக தரப்படும் கூலி, அவர் உற்பத்தி செய்த பொருளின் மதிப்பைவிட  மிக மிகக் குறைவானது. இந்த வேறுபாட்டையே மார்க்ஸ், உபரி மதிப்பின் அடிப்படையாக சுட்டிக்காட்டினார். இப்படி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தையில் விற்பதன் மூலம் கூடுதல் லாபத்தை ஈட்டி முதலாளித்துவம் தனது மூலதனத்தை மேலும் மேலும் திரட்டிக் கொள்கிறது.

இப்படி உற்பத்தி சக்திகளை மிகப்பெருமளவில் பணம் கொடுத்துப் பெறுவதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சமூகத்தில் இதற்கு முன்பிருந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு முரணாக, முதலாளித்துவம் என்பது உற்பத்தி சக்திகளை தொடர்ச்சியாக புரட்சிகரமாக மாற்றியமைத்து வருகிறது. இது முதலாளித்துவத்தின் அடிப்படையான குணம். ஏனென்றால், உழைப்புத்திறனை, உற்பத்தித் திறனை தொடர்ந்து அதிகரிப்பதே மேலும் உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் லாபத்தையும், அதன் மூலம் மூலதனத்தையும் மேலும் மேலும் குவிக்க முடியும். முதலாளித்துவ உலகில் சந்தையில் ஏற்படும் போட்டி, உற்பத்தி சக்திகளை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிற நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறது. மூலதனத்தின் ஒவ்வொரு கூறும், தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தன்னை ஒன்று திரட்டிக் கொள்வதற்காக உழைப்புச்சக்தியின் திறனை மேம்படுத்த தயாராக இருக்கிறது.

கால வளர்ச்சியின் வெகு வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப மிகப்பெருமளவில் அதிகரித்து வரும் உற்பத்தி நடைமுறைகளில், முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிதிக்கட்டமைப்பும் மாற்றத்தை தழுவுகிறது. மூலதனம்- பணவடிவில் இருக்கும் மூலதனம் – தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள – இருப்பு மூலதனத்தை தொடர்ந்து இயக்கிக் கொண்டேயிருக்க, தனிப்பட்ட பெரு முதலாளிகளிடமிருந்து வெளியில் சென்று லாபம் சம்பாதிக்க துடிக்கிறது. அதற்காக முதலாளித்துவம் ஏற்படுத்திய வழிமுறைகள் இரண்டு.  ஒன்று, கடன் கொடுக்கிற வங்கி கட்டமைப்பு. மற்றொன்று, கம்பெனிகளின் பங்குகளை பகிர்ந்துகொள்கிற பங்குச்சந்தை கட்டமைப்பு.

ஐஏ

1930களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்திற்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசும் தனியாரும் இணைந்த கலப்புப் பொருளாதார கோட்பாட்டை முதலாளித்துவ பொருளாதார நிபுணர் ஜே.எம்.கீன்ஸ் முன்வைத்தார். ஒரு 30 ஆண்டு காலம் இந்த “கினீசிய” பொருளாதாரம்  முதலாளித்துவ உலகிற்கு வழிகாட்டியது. 1960களில் மூலதனத்தின் லாபம் குறையத் துவங்கியது. 1974-75 காலகட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கியது.  வளர்ச்சி குன்றியது. மூன்றாம் உலக நாடுகளின் விடுதலை, அந்த நாடுகளில் ஏற்பட்ட தேசிய அரசுகளின் தன்மை, விடுதலைக்குப்பிந்தைய வளர்ச்சிகளால் ஏற்பட்ட மாற்றங்கள், எண்ணெய் வள நாடுகளின் விழிப்புணர்வு போன்ற பல அம்சங்களின்  பின்னணியில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் – மூலதனத்தின் லாபம் வீழ்ச்சியடையத் துவங்கியது.

முதலாளித்துவம் மாறுகிறது

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவம் எட்டிய மிகப்பெரும் வளர்ச்சி, 1970களின் துவக்கத்தில் வீழ்ச்சியை நோக்கி பயணப்பட்டது. இந்த வீழ்ச்சியை எதிர்கொள்ள முதலாளித்துவம் தனக்குத்தானே சில மாற்றங்களை செய்து கொண்டது. அதில் முதலில் மாற்றம் பெற்றது 1944இல் மேற்கொள்ளப்பட்ட பிரட்டன் உட்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் டாலர் பொது பரிவர்த்தனை கருவியாக முதலிடத்திற்கு வந்தது, பிரிட்டீஷ் பவுண்டின் ஆதிக்கம் பின்னுக்குத்தள்ளப்பட்டது. நாணய பரிவர்த்தனை க்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. நாடுகளுக்கிடையே நாணயங்களின் மதிப்பை துவக்கத்தில் ஒப்பந்தமூலம்  நிர்ணயிக் கப்பட்டது. பின்னர் நாணயச்சந்தையாக இது உருவெடுத்து விட்டது. முதலில் டாலரின் மதிப்பை நிலையாக வைக்க அமெரிக்கா சம்மதித்தது. 1.1 கிராம் தங்கம் ஒரு டாலர் என்று நிர்ணயித்து  டாலர் சர்வதேச செலவாணியாக ஆனது. இது தவிர உலக வங்கி கடன் மூலம்  டாலர் உலக செலவானியாக ஆனது. அமெரிக்க இறக்குமதி  டாலர் கடன் என்ற இரண்டும் சேர்ந்து எல்லாநாடுகளில் டாலர் கையிருப்பு மலை போல் குவிந்தது குறிப்பாக1970களில் எண்ணெய் வள நாடுகளின் கையில் டாலர் மலை போல் குவிந்தது. பெட்ரோ டாலர்’  என்று பெயரும் பெற்றது. 1971ல் ஜனாதிபதி நிக்ஸன், டாலரின் தங்க அடிப்பiயை நீக்கினார். நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளினாலும், இதர காரணங்களினாலும் . அமெரிக்க ஐரோப்பிய  நாடுகளில் 1974-75 விலைவாசி கடுமையாக உயர்ந்தது. முதலாளித்துவப் பொருளாதாரம் மீண்டும் மந்த நிலையை எட்டியது.

நிலைமை இப்படியே தொடர, ஆங்காங்கே மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை துவக்கினார்கள். பிரான்சில், போர்ச்சுக்கல்லில் புரட்சிகரமான போராட்டங்கள் நடந்தன. தேசிய அரசுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், முதலாளித்துவப் பொருளாதாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள புதிய வழியைத் தேடியது. உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்ற நெடுநாள் கனவை நனவாக்க அடியெடுத்து வைத்தது. முதலில் பங்குச்சந்தை மூலம் நீதி மூலதனம் பரவ 1973-இல் சிகாகோ பங்குச்சந்தை உருவாக்கப் பட்டது. இன்று உலகின் எந்த மூலையிலிருந்தும் பங்கு களை வாங்கி விற்க ஏற்பாடுகள் வந்துவிட்டன, பங்குகளை வாங்கி விற்பதே லாபகரமான தொழிலாகிவிட்டது.

இதன் உச்சகட்டத்தில்தான் மீண்டும் வரலாறு தற்போது திரும்பியுள்ளது. அமெரிக்க வங்கிகள் – நிதிநிறுவனங்கள் அள்ளித்தந்த வீட்டுக்கடன்கள்- ரியல் எஸ்டேட் கடன்கள் போன்றவை மூலம் நிதி மூலதனம் எந்த ஊக வணிகத்தை ஊதி ஊதிப்பெரிதாக்கியதோ அந்த ஊக வணிகம் திடீரென்று வெடித்துச் சிதறியபோது நிலைகுலைந்துள்ளது.

முதலாளித்துவ நெருக்கடி

வரலாறு நெடுகிலும் மூலதனம் புதிய புதிய வடிவங்களில் பயணித்து, சுரண்டலை தீவிரமாக்கி, கொள்ளை லாபம் ஈட்டி வந்ததை கண்டோம். இப்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதிலிருந்தும் மீண்டு, தனது கொள்ளையைத் தொடர வேண்டிய நிர்பந்தம் நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டுள்ளது. புதிய வடிவம் எது?

2006ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே உலகம் முழுவதிலும் உணவு மற்றும் எரிபொருள் சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து முதன்மைப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கத் துவங்கிவிட்டது. ஊக வணிகச்சந்தையில் நிதி மூலதனத்தின் தீவிரமான செயல்பாடுகளே இதற்கு அடிப்படையான காரணம். அமெரிக்காவில் வீட்டுக்கடன்-ரியல் எஸ்டேட் வணிகம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி, நிதி மூலதனத்தின் கவனத்தை பொருட்களின் மீது திருப்பியது. இதுவரையிலும் பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களை – அவற்றின் பங்குகளை வாகனமாகக் பயன்படுத்திய நிதி மூலதனம், முதல் முறையாக உற்பத்தி பொருட்களின் மீது கவனத்தை செலுத்தியது. குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்கள் – அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் மீது ஆர்வம் காட்டியது.

இது படிப்படியாக வளர்ச்சி பெற்று, 2007-2010 காலத்தில் அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார பெரும் நெருக்கடி, உலகம் முழுவதிலும் பரவிய நிலையில், தற்போது நிதி மூலதனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஒரே களமாக இருப்பது மேற்கண்ட உணவுதானியங்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியில்தான் இந்த உணவுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஊக வணிகத்திலும் முன்பேர வர்த்தகத்திலும் ஈடுபடுத்துவது துவங்கியது.

முன்பேர வர்த்தகம், அத்தியாவசியப் பொருட்களை ஊக வணிகத்தில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கடுமையாக போராடினாலும் கூட, நிதி மூலதனத்தின் விசையால் இயக்கப்படும் நவீன தாராளமய காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பெருமுதலாளிகளின் – பெரும் நிறுவனங்களின் அரசு, அதை ஏற்பதில்லை. ஏனென்றால் புதிய உலகச்சூழலில் இந்தியா போன்ற மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உணவுதானியம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சந்தை மகத்தானது.  அந்தச்சந்தையை தன்வசப்படுத்தி லாபத்தை ஈட்டுவதைத் தவிர, நிதி மூலதனத்திற்கு வேறு மார்க்கம் இல்லை.

விலை உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்துவது என்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்று  மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது; புள்ளிவிபரங்கள் மூலம் விலையைக் குறைத்து குறைத்துக் காண்பித்தாலும் உண்மைப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலை ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தப் பொருட்களின் மீதான ஊக வணிகம், பதுக்கல் போன்றவற்றால் நிதி மூலதனம் அளவில்லாத கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும்.

இந்தப் பொருட்கள் இந்தியா போன்ற நாடுகளில் சில்லரை வர்த்தகத்தின் மூலமே மக்களைச் சென்றடைகின்றன. அப்படியானால் அந்த சில்லரை வர்த்தகத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்து விட்டால், லாபத்தை சிந்தாமல் சிதறாமல் நிதி மூலதனத்தால் அள்ள முடியும்.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்தே தீரவேண்டும் என்று  மன்மோகன் அரசு துடிப்பதன் அடிப்படை இதுவே.

இந்திய சில்லரை வர்த்தகம் உலகிலேயே மிகப்பெரியது. 180 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை சில்லரை வர்த்தகம் பூர்த்தி செய்கிறது.  2 கோடியே 10 லட்சம் பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது இந்திய உழைப்புச்சக்தியில் சுமார் 7 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 1 கோடியே 20 லட்சம் சில்லரை விற்பனைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் முறைசாராதவையாக, தனி நபர்களின் நிர்வாகத்துடன் கூடிய சிறு சிறு கடைகள். இவை நீடித்தால், நிதி மூலதனம் இதில் புகுந்து லாபத்தை மேலும் பெருக்க முடியாது. நிதி மூலதனம் லாபத்தை பெருக்க வேண்டுமானால் இந்தக் கடைகள் அழிய வேண்டும். அதற்கு ஒரே வழி, இவை அனைத்தையும் ஒரே கட்டமைப்புக்குள் – அதாவது வால்மார்ட் போன்ற அந்நிய பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் கொண்டு வரவேண்டும். இந்த அடிப்படையிலேயே நடப்பு கூட்டத் தொடரிலேயே எப்படியேனும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற மன்மோகன் சிங் அரசு ஆவல் கொண்டுள்ளது.

சமத்துவ இலக்கை நோக்கிய பயணம்

எனவே, விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் – சந்தையை நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கிற போராட்டத்தின் துவக்கம். சரக்குகளின் உற்பத்தியை பெருக்கி மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சந்தையை பயன்பட வைக்கிற போராட்டம், நவீன தொழில் நுட்பங்கள்உலக நாடுகளில் பரவி உண்மையில்  உலகமயம் மக்களுக்கு பயன்படுகிற முறையில் மாற்றிட விழிப்புணர்வை உருவாக்கும் போராட்டம்.இது  பாட்டாளி வர்க்க லட்சியத்தை நோக்கிய பயணத்தின் முதலடி.

 

–எஸ்.பி.ராஜேந்திரன்

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...