தற்கால சீனத்தில் புதுமைகாணும் மார்க்ஸியத்தை மையமாகக் கொண்ட ஏழு சமூக சிந்தனைகளின் நீரோட்டங்களும் அவற்றின் வளர்ச்சியும்

2458
0
SHARE

என்ஃபு சேங்1

(சமூக விஞ்ஞானங்களுக்கான சீன அகாடெமி)

தமிழில்: அபராஜிதன்

இன்றைய காலகட்டத்தில் சோஷலிச சீனத்தில் அரசியல், பொருளாதார வளர்ச்சியை தத்துவம் மற்றும் கருத்தியல் சார்ந்த வளர்ச்சியிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது; இவற்றின் பிரதிபலிப்போ அல்லது உள்ளடக்கமோ பின்வரும் ஏழு சமூக கருத்தியல்களில் அடங்கியுள்ளது. அவை: நவீன தாரளவாதம், ஜனநாயக சோஷலிசம், புதிய இடதுசாரிவாதம், பல்கருத்தோட்ட மார்க்ஸிசம், பாரம்பரிய மார்க்ஸிசம், பழமை மீட்சிவாதம், புதுமைகாணும் மார்க்ஸிசம் ஆகியவையே. இங்கு, சமூக நீரோட்டங்கள் என்ற சொற்றொடர்  நடுநிலையான சொல்லாடலாகும்; அதில் மார்க்ஸிசம் என்பது ஒருவகையானது.

1. நவீன தாரளவாதம்:

சீனத்தின் புதிய தாரளவாதம் மூன்று வகையான கொள்கைப் பரிந்துரைகளைக் கொண்டதாக உள்ளது. முதலில், அது, பொருளாதாரத்தை கட்டுப் பாடுகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும், தாரளமயமாக்கப்படவேண்டும் என்றும் கூறுகின்றது. இதில் நிதி, வர்த்தகம், முதலீடு ஆகி யவையும் அடங்கும்;  இதன் பொருள், தனியார் ஏகபோகங்களும், பலம் பொருந்திய ஒரு சில செல்வந்தர்களும் பொருளாதாரம், ஊடகம், கல்வி, அரசியல் போன்றவற்றை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டுப்படுத்தும் சுதந்திரத்தை, பெற்றிருப்பர். இயன்ற அளவுக்கு அரசின் தலையீடு என்பது இல்லாத வகையில், பொது நடவடிக்கைகள் அகற்றப்பட்டு தனியார் நடவடிக்கைகளாக மாற்றியமைக்கப்படும். நவீன தாரளமயவாதிகள், அரசின் தலையீட்டைத் தவிர்க்கும் வகையில், என்றும் அரசு என்பது அளவில் சிறியதாகவும், பலமற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அளவில் சிறுத்த அரசு என்ற கருத்தை, நான் ஏற்றுக்கொண்ட போதிலும், ஆட்சி பொறுப்பின் கடமைகளில், அது, வலுவான நாடாளுமன்றத்தின் பின் துணையுடன், பலம் பொருந்தியதாகவே இருக்க வேண்டும் என்பதே என் வாதமாகும். உதாரணமாக, அரசாங்க மற்றும் கட்சியின் அமைச்சகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஒரு சில பெரிய அமைச்சகங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும்; இக்கருத்தை, நான் இருபது வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளேன். நவீன தாராளமயவாதிகளோ, அரசு என்பது குறைந்த அளவு  ஊழியர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்; எளிதான கட்டமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்; ஏகபோகங்கள் பெரும்பங்கு ஆற்றிட வழி செய்வதற்காகவே அரசின் பங்கு என்பது மிகக் குறைந்த அளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர்.

இரண்டாவதாக, நவீன தாராளமயவாதம் தனியார்மயத்தை வலியுறுத்துகின்றது. நன்கு இயங்கக்கூடிய சந்தை அமைப்புக்கு தனியார்மயமே அடிப்படை என்ற வகையிலும், தனியார் நிறுவனங்களே திறமையுடன் இயங்கக் கூடியவை என்ற அடிப்படையிலும், தற்போது பொதுத் துறையிலுள்ள நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு நவீன தாராளமயம் குரல் கொடுக்கின்றது. இக்கருத்தோட்டத்தின் பிரதிநியாக உள்ள, பீய்ஜிங் பல்கலைக்கழகத்தின் குவான் ஹுவா நிர்வாகப் பள்ளியின் முன்னாள் தலைமையாளரான, பேராசிரியர். ழாங் வேய்யிங், நிலங்கள், நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், அஞ்சல் சேவைகள், சுரங்கங்கள், பொதுப்பயன் துறைகள், போக்குவரத்து சேவைகள் ஆகிய அனைத்தையும் தனியார்மயமாக்கிட வேண்டும் என்று வாதிடுகின்றார். மூன்றாவதாக, மக்கள் நல அமைப்பைத் தகர்த்து, அவரவர் நலம் அவரவர் பொறுப்பு என்று மாற்றப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர். மக்கள் நல அரசு அமைவதை எதிர்க்கின்றனர்; மக்கள் நலன் மேம்படுவதையும் எதிர்க்கின்றனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நவீன தாராளமயவாதிகளின் பொதுவான அம்சமாகவே இது உள்ளது. ஆனால் இது குறித்த தெளிவான பார்வை ஒன்றை உள்நட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ,இவர்களால் கொடுக்க இயலவில்லை. சீனத்தில், நவீன தாராளமயவாதம், தொழிலாளர் நலன் காக்கும் குறைந்தபட்ச கூலி, ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகள் ஆகிய சட்டங்களை எதிர்க்கின்றது. நவீனதாரள வாதத்துக்கும், வாஷிங்டன் ஒருமித்த கருத்து போன்றவற்றுக்கும் ஆதரவானவர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்; ஆனால் இக்கருத் தோட்டத்தின் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

2. ஜனநாயக சோஷலிசம்

சீனத்தின் ஜனநாயக சோஷலிசம் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டதாகும்.

முதலாவதாக, வழிகாட்டும் கருத்தியல் என்ற அடிப்படையில், மார்க்ஸிசம் ஒன்றுதான் வழி காட்டும் நெறி என்பதை ஜனநாயக சோஷலிசம் மறுக்கிறது. பல்வேறுபட்ட உலகக் கண்ணோட்டங்களையும், வழிகாட்டு கருத்தியல்களையும் அது ஆதரிக்கின்றது; அதாவது, சோஷலிசத்தின் அமைவு மற்றும் தத்துவ மூலங்கள் அடிப்படையிலும் பலவகைப்பட்ட சோஷலிசத்தை அது ஆதரிக்கின்றது. பெய்ர்ன்ஸ்டீனின் திருத்தல் வாதத்தையும், கீய்ன்ஸின் பொருளாதாரத்தையும், தனது மூலங்கள் மற்றும் அம்சங்கள் என அது கருதுகின்றது. பல்வகைப்பட்ட கருத்துக்களுக்கும் இடம் அளித்தல் மற்றும் சிந்தனைப் போக்குகளை ஜனநாயகப்படுத்துதல் என்ற பெயரில், எண்ணற்ற நீரோட்டங்களையும் கருத்துக்களையும் ஒன்றிணைக்கப்படுவது, குழப்பமான கலவையையே உருவாக்கியுள்ளது. .இரண்டாவதாக, அரசியல் அமைப்பைப் பொறுத்த வரையில், பல கட்சிகள் போட்டியிடும் முறைகளையும், அரசாங்கங்கள் மாறி மாறி அமைவதையும் ஆதரிக்கின்றது. குறிப்பிட்ட சிறப்பு நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  குழு என்ற வகையிலும், அதிகாரத்தில் அமர வாய்ப்பு உள்ள ஒரே கட்சி என்ற வகையிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியினால், ஊழல்களை தவிர்க்க முடியவில்லை என்று ஜனநாயக சோஷலிசம் வாதிடுகின்றது.

மூன்றாவதாக, பொருளாதார அமைப்பு என்ற வகையில், உற்பத்திக்கான வளங்களை முதலாளித்துவ தனியார் உடைமை என்ற அடிப்படையிலிருந்து  மாற்றியமைக்காமலேயே சோஷலிசத்தை எட்டிவிட முடியும் என்று அது வாதிடுகின்றது. உற்பத்திக்கான வளங்களின் உடைமை கட்டமைப்பு, அதன் சமூக சாரத்தை, அளவீடு செய்வதில்லை அது வாதிடுகின்றது.  சீனத்தில். ஜனநாயக சோஷலிசத்தின் பிரதிநிதிகளில், பேராசிரியர்.ஃக்சின் ஃஜிலிங் மற்றும் பேராசிரியர். ஃஜை தாஓ ஆகியோர் அடங்குவர். அவர்களுடைய பத்திரிகை யான்ஹுவாங்ச்சான்கியு ஆகும்.

3. புதிய இடதுசாரிவாதம்

புதிய இடதுசாரிவாதம் என்பது, சீன அரசியல் செயல்முறைகளின் மீது செலவாக்கு செலுத்தும் வகையில், பத்திரிகைகள் அல்லது இணையதளங்களில் கட்டுரைகளை வெளியிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த, தன்னிச்சையாக செயல்படும் சில அறிவுஜீவிகளின் குழுவாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர், வெளிநாடுகளில் கல்வி பயின்ற அனுபவம் உடையவர்கள். ஒரு சிலர் இன்னும் வெளிநாடுகளில் வாழ்பவர்களே. வுயூழிக்சியாங் என்பது அவர்களுடைய கருத்துக்களை வெளியிடும் முக்கிய தளமாகும். அதன் நிறுவனர், ஹான் டேகியாங், மார்க்சிசத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; ஆனால், அவர் மார்க்சிஸ்ட் அல்ல; ஏனெனில் அவர், உழைப்புசார் மதிப்பு தத்துவத்தையும் வரலாற்று இயக்கவியல் தத்துவத்தையும் எதிர்ப்பவர்; ஆனால் அதேசமயம், அவர், பொது உடைமையை ஆதரிப்பவராகவும், நவீன தாரளமயத்தை எதிர்ப்பவராகவும் உள்ளவர்.

நவீன தாராளமயத்துக்கு மாறாக, புதிய இடதுசாரிவாதம், மூன்று குணங்களைக் கொண்டதாகும்.

முதலில், அது சந்தை சீர்திருத்தங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வலுவான அரசாங்கத்துக்காக குரல் கொடுக்கின்றது. இக்கருத்து, 1993ல், வாங் ஷாவ்குவாங் மற்றும் ஹூஅங்காங் ஆகியோரால் எழுதப்பட்ட சீன அரசு அதிகாரம் குறித்த அறிக்கையில் எதிரொலிக்கின்றது. இந்த அறிக்கை ஜனவரி1994ல் நிறைவேற்றப்பட்ட வரி சீர்திருத்தத்துக்கு தூண்டுகோலாக அமைந்தது. இச்சீர்திருத்தம்  உள்ளுர் வரிகளை அரசு வரிகளிலிருந்து தனியாக பிரித்தெடுத்தது. இது, சீன சமூகத்தில் பரந்த அளவில் மாற்றங்களை உருவாக்கியது. இந்த விஷயத்தில், ந.தா.வாதிகள், சந்தைப் பொருளாதரத்தை ஊக்குவிப்பதற்காக, அரசு தன் அதிகாரங்களை கைவிட வேண்டும் என்று வாதிடுகின்றனர். இரண்டாவதாக, புதிய இடதுசாரிகள், முதலாளித்துவ உலகமயத்தைக் கண்டிக்கின்றனர். மேலும் அது சீன நாட்டில் முதலாளித்துவம் பரவுவதிலேயெ பலன் கண்டுள்ளது என்று சுட்டிக் காட்டுகின்றனர். சீனத்தில் காணப்படும் சமூக பிரச்சினைகளின் வேர்கள் சீனாவுக்கு வெளியே உள்ளன; அதாவது, உலகமயமாக்கம், சர்வதேச மூலதனம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் என்பவையே அவை என்று கூறுகின்றனர்., இவர்களுக்கு மாறாக ந.தா.மயவாதிகள், இவற்றுக்கு உள்நாட்டுக் காரணங்களை வலியுறுத்துகின்றனர்; மேலும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வாக, மேலும் மேலும் சந்தைமயமாக்கலை முன்வைக்கின்றனர்; குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை வலியுறுத்துகின்றனர்.


18 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புக்கள் யாவும் தனி ஒருவரின் படைப்பாக அமையவில்லை…. இயற்கையின் தொழில்நுட்பவியல் வரலாற்றில் – அதாவது தாவரங்கள், விலங்குகளின் உறுப்புகள் – அதாவது உயிர் வாழ வகை செய்யும் உற்பத்தி சாதனங்களாகப் பயன்படுத்தப்படும் அந்த உறுப்புகள் உருவாவதில் டார்வின் நம்மை அக்கறை கொள்ளச் சொல்கிறார். பொருள் உற்பத்திக்கு பயன்படும் மனித உறுப்புகளின் வரலாறு – சமூக ஒழுங்கமைப்பு அனைத்தின் பொருளாயத அடிப்படையாக விளங்கும் இந்த உறுப்புகளின் வரலாறு அதே அளவு அக்கறைக்கு உரியது அன்றோ?

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

டேவிட் ஹார்வி


மூன்றாவதாக, சந்தைப்படுத்தலுக்கான சீர்திருத்தங்கள் என்பவை, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துவதிலேயே சென்று முடிந்துள்ளன என்று வாதிடுகின்றனர். புதிய இடதுசாரிவாதம், எந்த வகையிலாவது பொருளாதார வளர்ச்சி பெறுவதை விட, பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துகின்றது. மறுவிநியோகம் மார்க்ஸிச-கம்யூனிச என்ற கருத்தை முழுமையாக நிராகரிப்பது, இரக்கமற்ற ஒழுக்கமற்ற அணுகுமுறை என்று புதிய இடதுசாரிவாதம் கூறுகின்றது. ந.தா.மயவாதிகள் பார்வையில், வருமான ஏற்றத் தாழ்வுகள், சந்தையின் காரணமாக ஏற்படுவதில்லை; மாறாக, அது ஊழல் காரணமாகவும், அதிகாரம், பணம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பேரங்கள் காரணாமாகவும் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றனர். அடிப்படையில் இது சர்வாதிகாரத்தின் விளைவு என்பது அவர்கள் வாதம். புதிய இடதுசாரிவாதிகள் இயன்ற வரை, உழைப்பாளிகள் பக்கமே இருக்க முயன்ற போதும், அவர்களுடைய விமர்சனங்களும் ஆலோசனைகளும் யதார்த்ததில் மெய்யாக முடியாது. அவர்களுடைய ஒரு சில விவாதங்கள் சீன சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உதாரனமாக பேராசிரியர். க்யு ழியுவான், நான்ஜெய் கிராமத்தை எடுத்து கள ஆய்வு செய்துள்ளார். அதன் மூலம், அவர், கூட்டுடைமை நிறுவனங்கள் ஏன் கூடுதல் திறனுள்ளவை என்பதை, கணிதத்தின் கேம் தியரி மற்றும் கணிதப் பொருளாதார முறையில் நிரூபித்துள்ளார். இவர் அமெரிக்க நாட்டில், அரசியல் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

4. பழமை மீட்சிவாதம் வாதம்

பழமையை வழிபடும் என்ண நீரோட்டமான பழமை மீட்சிவாதம், அந்நாளைய அர்சர்களையும், முனிவர்களையும் ஆளுமையின்  ஆதர்ச சிகரங்களாகவும், புராதன சமூகத்தை ஆதர்சமான சமூக அமைப்பாகவும் கருதுகின்றது. இது சீன நாட்டின் அனைத்து கருத்தியல்களிலும் ஊடுருவி, வலுவான நீரோட்டமாக மாறியுள்ளது. பழமை மீட்சிவாதிகள், பண்டைக் காலத்து முனிவர்களின் தத்துவக் கருத்தியல்களையும் அரசியல் சிந்தனைகளையும் ஆராதனை செய்கின்றனர். தயாள குணம் கொண்ட அரசாங்க அமைப்புக்கு ஆதரவு அளிக்கின்றனர்; கன்ஃபூ ஷியஸ் கூறுவது போல் சாதாரண மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதையும், இயல்பான, தளைகளற்ற, சுதந்திரமான மனப்பாங்கைப் போற்றும் டாவோயிசத்தையும் ஆதரிக்கின்றனர். பண்டைய ஒழுக்கநெறிகளை வணங்குகின்றனர்; தயாள குணம், நீதி, சடங்குகள், விவேகத்துடன் கூடிய பட்டறிவு, மக்கள் சேவை போன்ற மாண்புகளைப் பெரிதும் போற்றுகின்றனர். விஞ்ஞான சோஷலிச நெறிமுறைகள் என்பவை கன்ஃப் யுஷிச தத்துவசாரத்தின் முழுமையான வளர்ச்சியேயாகும்; அது சோஷலிச சமுதாயத்துக்கு ஏற்ற தத்துவம் என்பது மட்டுமல்லாமல், உலகின் கிழக்கிலும் மேற்கிலும் தோன்றிய, மனித சமுதாயத்தின், ஒட்டுமொத்த முற்போக்கான சிந்தனைகளின் தெளிவான வடிவமேயாகும்என்று கூறுகின்றனர். அதன் தோற்றமும் நடைமுறைப்படுத்தலும், சீன சோஷலிசத்தின் விரைவான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் மார்க்சிச கருத்தியல்களை புரட்சிகரமானவையாக ஆக்கி, உலகம் முழுதும் கம்யூனிச சமூகத்தை அமைக்க வழி செய்யும் கலங்கரை விளக்கமாக அது இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பழமை மீட்சி தத்துவத்தின் முக்கிய நபர்கள் தேங் க்சியாவோஜுன் மற்றும் ஜியாங்க்விங் ஆவர். தேங் க்சியாவோஜுன், கன்ஃப்யுஷியனிசம் மற்றும் ஜனநாயகக் கருத்துக்களின் தர்க்க ரீதியான சேர்க்கை என்ற நூலின் ஆசிரியர். இந்நூல் 1995ல் ஸிகுவான் மக்கள் நூல் பதிப்பபகத்தின் வெளியீடாகும். இதில் அவர், கன்ஃபூஷியசம் என்ற தத்துவம், ஜனநாயக கருத்தியல்களுடனும், அதன் மையமான தர்க்கத்துடனும் ஒத்திசைவு கொண்டதே என்ற முடிவை எட்டியுள்ளார். ஆகவே, கன்ஃபூஷியசமும் ஜனநாயக கருத்துக்களும் ஒன்றிணைக்கப்படக் கூடியவையே; தர்க்க ரீதியாக இணைக்கப்பட வேண்டியவையே என்பது அவர் வாதமாகும். ஜியான்ங் க்விங், சீன பெரு நிலப்பகுதியின் நவீன கன்ஃபூஷியச தத்துவத்தின் திறன் மிகுந்த பேச்சாளர் ஆவார். இவர் எழுதிய அரசியல் கன்ஃப்யூஷியசம் என்ற நூல் 2003ம் ஆண்டு  எஸ்டிஎக்ஸ் இணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலில், அவர், மனது மற்றும் இயற்கை குறித்த கன்ஃபூஷியஸ் கருதுகோள்கள் தவிர, அரசியல் தளம் சார்ந்த ஒரு கன்ஃபூஷிய பாரம்பரியம் சீன கன்ஃபூஷியசத்தில் இருப்பதாக வாதிடுகின்றார். இத்தகைய அரசியல் பாரம்பரிய கன்ஃபூஷியசம் என்பது, சிறந்த கருத்துவள ஆதாரமாகும் என்றும் அது மேற்கத்திய அரசியல் பாரம்பரியத்துக்குப் மாற்றாக அமையும் என்றும்,  சீனாவின் தற்கால அரசியல் தேவைகளை நிறைவு செய்யும் என்றும் வாதிடுகின்றார்.. இந்த அம்சத்தை, தேங்க்சியா வோஜுன்னின் கருத்தை மறுப்பதன் மூலம் ஜியாங்க்விங்  நிறுவியிருக்கிறார். ஜியாங்க்விங், கன்ஃபூஷியசத்தையும் ஜனநாயகக் கருத்துக்களையும் இணைப்பதென்பது தேவை மற்றும் சாத்தியப்பாடு சார்ந்த பிரச்சினகளே என்று கருதுகின்றார். அதற்கு அவர் அளிக்கும் பதில் தேவை என்பதும் இல்லை; சாத்தியப்பாடும் இல்லை. என்பதேயாகும். பழமை மீட்சி வாதக் கருத்தோட்டமுடைய வர்த்தகர்கள் சிலர் கோடிக் கணக்கில் நமது நாட்டு மக்களை வெளிநாடுகளில் குடியேறச் செய்து, பன்னாட்டுச் சந்தையை கைப்பற்ற வேண்டும் என்ற அபத்தமான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் கன்ஃபூஷியசம், அரசு அல்லது அரசியல் தளத்தில் மீட்சி அடையக் கூடாது; அடையவும் கூடாது. மாறாக சமூகக் களத்திலும் தனிநபர் அளவிலும் அது மீட்சி பெறலாம்; பெறவேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை ஆய்வு செய்வது வரவேற்கக் கூடியதே. ஆனால் அதன் மீட்சி என்பது பயன் தராது.

5. பல்கருத்தோட்ட மார்க்ஸிஸம் 

பல்  கருத்தோட்ட      மார்க்ஸிசம்    என்பது

  1. முரண்பாட்டின் இரு பக்கங்களையும் முன்னுரிமையின்றி இணைக்கின்றது.
  2. எதிர்மறைத் தத்துவங்களையும், கருத்துக்களையும் கொள்கை அடிப்படை ஏதுமின்றி இயந்திரகதியாக கலக்கின்றது.

பல்கருத்தோட்ட மார்க்ஸிசத்தை பிரதிநிதிப்படுத்துபவர்கள் வாங் தோங்ஜிங், தாங் தேகாங் மற்றும் வாங்சாங்சியாங் ஆவர். இவர்கள் அனைவரும் கட்சியின் மத்திய பள்ளியில் பேராசிரியர்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமையின் விமர்சனுத்துக்கு உள்ளானவர்கள்.

வாங் தோங்ஜிங் கட்சியின் மத்திய பள்ளியில் முன்னாள் பொருளியல் துறை இயக்குனர். இருந்தவர்; இவர், மாநில மற்றும் அமைச்சகத் தலைவர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையில், தனியார் சொத்துடைமையின் மேன்மைகளைப் புகழ்ந்து பேசியுள்ளார். சுயநலப் பண்பை மனித இயல்பு என்று கருதுகின்றார். முழுமையாக சுயநலன்களைப் பாதுகாக்கும் பொருளாதாரக் கொள்கையை அங்கீகரிக்கின்றார்; பறவைகள் இரைக்கு அடித்துக் கொண்டு சாவது போல் மனிதன் பணத்துக்கு அடித்துக் கொள்வதும் அவருக்கு ஏற்புடையதான கருத்தாகும். திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவர், சமத்துவத்தை புறக்கணிக்கும் மனப்பான்மை கொண்டவராவார். மனிதனின் சுயநலப் பண்புதான் சமூகக் கூட்டு முயற்சிக்கும் பொதுநலத்துக்கும் வழி வகுப்பதாக உள்ள காரணி என்பதே அவர் கருத்தாகும். 2. சொத்துடைமையாளர்களின் நலன்களுக்காக மட்டும் வாதாடும் இவர், தொழிலாளிகள் சுரண்டப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வாங்கின் வாதங்களை விமர்சித்து  நான், 2007ல் சோஷியல் சைன்செஸ் இன் சைனாவின் முதல்  இதழில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் புதிய மார்க்ஸிச பொருளாதாரத் தின் நான்கு கருத்தியல் எடுகோள்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவை 3:

எடுகோள் 1: வாழும் உழைப்பு உருவாக்கும் மதிப்பின் புதிய எடுகோள்.

எடுகோள் 2: சுயநலம் சார்ந்த மற்றும் பொது நலம் சார்ந்த பொருளாதார மனிதனைப் பற்றிய எடுகோள்.

எடுகோள் 3:  ஆதாரங்கள் மற்றும் தேவைகள் இவற்றின் வரம்பு சார்ந்த  இரட்டை தடைகள் பற்றிய கருதுகோள்.

எடுகோள் 4: சமத்துவம் மற்றும் செயல்திறன் இவற்றின் ஒன்றுக்கொன்று பரஸ்பர வலுவூட்டல் மற்றும் அவற்றுக்கிடையேயான பரஸ்பர விகிதாச்சார உறவுமுறை ஆகியவை குறித்த எடுகோள். மேலை நாடுகளில் சர்வநலம் பேணும் பொருளாதார எடுகோள்களை ஆய்வு செய்யும் கட்டுரைகள் அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. அவை சமூகத்தில் உள்ள  அமைப்பு ரீதியான ஏற்பாடுகள், சமூகத்தில் நேர்மைப் பண்பைக் கட்டி வளர்க்கும் முறைகள், அறவியல் குறித்த கல்வி முறைகள் ஆகியவற்றின் மீது நல்ல  தாக்கங்களை உருவாக்கும் வகையில் உள்ளன; அதன் மூலம், சமூக கூட்டு முயற்சிகள் மற்றும் பொதுநலம் ஆகியவை பெருக வழி ஏற்பட ஏதுவாகும்.

வாங் தோங்ஜிங், நவீன பொருளாதாரம், சீன பொருளாதாரச் சீர்திருத்தங்களை வழி நடத்தி அதை திறந்த பொருளாதாரமாக மாற்றுவதை ஆதரித்துக் குரல் கொடுக்கும்போது மார்க்சிசத்தை எதிர்க்கும் நிலையை எடுக்கவில்லை. அவர்தம் கட்டுரையின் முடிவில் தேங் க்சியாவோ பிங்கின் கருத்தியல் மற்றும் ஜியாங் ஜேமின்னின் முக்கிய சிந்தனை ஆகியவற்றின் மீது உயரிய மதிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரை பல்கருத்தோட்ட மார்க்சியவாதியாகக் கருதலாம்.


அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலில் மார்க்ஸ் ஒவ்வொரு குறிப்பிட்ட பொருள் உற்பத்தி முறையும் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தில் அதற்கேற்ப அமைந்த உற்பத்தி உறவுகளும் – சுருக்கமாகக் கூறினால், சமுதாயத்தின் பொருளாதார கட்டுமானமே உண்மையான அடித்தளமாகும். இதன் மீதுதான் சட்ட மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுகிறது. சமூக உணர்வு நிலையின் (மனக் கருத்துருவாக்கம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்) குறிப்பிட்ட வடிவங்கள் அதற்கேற்பவே அமைந்திருக்கும் பொருளாயத வாழ்க்கை நிலைகள் சமூக, அரசியல், அறிவுத்தள வாழ்க்கையின் பொது நிகழ்முறைகளை நெறிப்படுத்துகிறது என்பது எனது கருத்து என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

டேவிட் ஹார்வி


தோங் தேகாங், கட்சியின் மத்திய பள்ளியின் தத்துவ இயல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஆவார். சொத்துடைமை குறித்த பிரச்சினைகள் குறித்த நமது சிந்தனைகளை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் 4 என்ற தம் கட்டுரையில் சோஷலிசத்தின் குறிக்கோள் பற்றிக் கூறுகையில், சோஷலிசத்தை அடையும் முயற்சிகளில் மாற்றங்களையும், காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்வதையும் வலியுறுத்தியுள்ளார். சோஷலிசத்தைக் கட்டுவதில் இதுவே முக்கிய வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சொத்துடைமைகள் எவ்வாறு பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் பிரிந்து காணப்படுகின்றன என்பது குறித்து அதிகமாக கவலைப்படத் தேவையில்லை; மாறாக பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அடிப்படையில் பெரும்பான்மையான மக்களால் விரிவாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரும்பான்மையான மக்கள் பகிர்ந்து கொள்ளுதல் என்ற கருத்து ஒட்டுமொத்த பொதுவான வளமைக்கு சமமான கருத்து. ஆனால் அது ஒரு ஸ்தூலமற்ற, அருவமான எண்ணக் கருத்தாகும். அதன் படி சமூக அமைப்பில் பொது உடைமையின் ஆதிக்க பங்கு என்ற கோட்பாடும், அவரவர் உழைப்பின் அடிப்படையில் விநியோகம் என்ற கோட்பாடும் இடம் பெறவில்லை. சமூகத்தில் சொத்தின் பொது உடைமையின் அளவு குறைவது என்பது கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையையே பலவீனப்படுத்திவிடாதா? வெளிப்படையாகக் கூறுவதென்றால், சீன தேசத்தின் பொருளா தாரத்தில் அரசுத்துறையின் பங்கு மொத்த பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளது; அதே சமயம் தனியார் பங்கும் அந்நிய நாட்டுகளின் பங்கும் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்த நிலைமை, சமூகத்தின் செலவம் படிப்படியாக ஒரு சிலரிடம் சென்று குவியும் நிலையை உருவாக்கவே செய்யும். தேங் க்ஸியாவோபிங் தன்னுடைய வயதான காலத்தில்  சீனத்தில் சமூகம் இரு எதிரெதிர் துருவங்களாக ஆவதற்கு மாறாக,  சோஷலிசம் மட்டுமே செயல்பட முடியும் 5 என்று எச்சரித்தார்.

சொத்தின் பொது உடைமையின் பங்கு குறையக் குறைய, ஆட்சியில், கட்சியின் அடிப்படை பலவீனமடையாது என்ற கருத்து உண்மையில் சோஷலிச பொருளாதார அடிப்படையை அரித்துவிடும். டாங் தேகாங்கின் பல கட்டுரைகள் சீன அம்சங்களுடன் உள்ள சோஷலிசத்தை விளக்கவும், சிந்தனைய விடுவிக்கவும் முற்படுவது போல் தோன்றும். சாராம்சத்தில், இது லெனின் குறிப்பிட்ட திருத்தல் வாதத்துக்கே இட்டுச் செல்லும்; இதை பல்கருத்தோட்ட மார்க்ஸிசம் என்ற ஒரு புதிய சொல்லாடலால் விவரிக்கலாம். சிந்தனையை வளர்த்தெடுத்தல் என்ற பெயரில் மார்க்ஸிய  கருத்தியலின் சீனமயமாக்கல் அது சிதைக்கவே செய்யும். வாங் சாங்ஜியாங், கட்சியின் மத்தியப் பள்ளியில், கட்சியைக் கட்டுவிக்கும் துறையின் இயக்குநராவார். ஸ்டடி டைம்ஸ் என்னும் பத்திரிகையில், (534 வது இதழில்) கட்சியின் சொந்த நலன்கள் ஒன்று உண்டென்பது புறவய யதார்த்தமே என்னும் கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அவருடைய கண்ணோட்டத்தில், கட்சியின் நலன்கள் என்று ஒன்று இருப்பதை, நடைமுறை ரீதியாகவும், யதார்த்த ரீதியாகவும் அறிந்து கொண்டால் தான், பல்வேறு நலன்களுக்கிடையே உள்ள உறவுகளைப் புரிந்து கொள்ள முடியும்; குறிப்பாக மக்கள் நலன்களுக்கும், மக்களின் பிரதிநிதியாக செயல்படும் கட்சிக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் கட்சியின் நலன்களை தக்க இடங்களில் பொருத்த முடியும். 6 அவருடைய வாதங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு தெளிவாக முரண்பட்டவையாகும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின்படி,, ஒட்டுமொத்த பாட்டாளிகளின் நலன்களைத் தவிர மற்ற எந்த தனிப்பட்ட நலன்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடையாது.; சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதியின்படி, மக்களுக்கு முழுமனதுடன் சேவை செய்வது ஒன்றே அதன் இலக்காகும். உழைக்கும் வர்க்க நலன்கள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்கள் தவிர மற்ற எந்த தனிப்பட்ட நலன்களையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளக் கூடாது. பொருளாதார, அரசியல் வளர்ச்சிப் போக்கில், பல் கருத்தோட்ட மார்க்ஸிசம் என்பது நம்முடைய திறனாய்வுகளின் முக்கிய இலக்குக்கு ஆளான ஒன்றாகும். மார்க்ஸிசம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், சீன குணாம்சங்களுடன் கூடிய உண்மையான சோஷலிசம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளவும் இப்பல்கருத்தோட்ட மார்க்ஸிசத்தை விமர்சனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

6. பாரம்பரிய மார்க்ஸிசம்

பாரம்பரிய மார்க்ஸிச சிந்தனையின் பிரதிநிதியாக இருப்பது, மாவோவின் கொடி எனப்படும் இணையதளமாகும். அது மாசே துங்கின் கொடியை உயர்த்திப் பிடிப்போம் என்ற அறிவிப்பைச் செய்கின்றது. இந்த இணையதளத்துக்கு விஷயதானம் அளித்து பங்கேற்பவர்களாக கட்சியின் உள்ளேயும் வெளியேயும் உள்ள ஊழியர்களும், பழுத்த அறிவாளிகளும் உள்ளனர்.

பாரம்பரிய மார்க்ஸிசத்தின் முக்கிய பிரதிநிதிகளாக இருப்பவர்கள், லி சேங்க்ரூயி மற்றும் பை யாங் போன்றோரே. லி சேங்க்ரூயி, தேசிய புள்ளிவிவரத் துறையின் முன்னாள் இயக்குநர் ஆவார்.  பை யாங் உருவாக்கிய மாவோவின் கொடியை பாதுகாப்போம் என்பதை பாரம்பரிய மார்க்ஸிஸ்ட் சிந்தனையின் முக்கிய அறிக்கையாக காணலாம். இதன் மையமான கருத்துக்கள்: முதலில், மா சேதுங்கின் சிந்தனையை வழிகாட்டும் தத்துவமாக மீண்டும் நிறுவ வேண்டும். இச்சிந்தனையின் முக்கிய அம்சமே, அரசியல் அமைப்புச் சட்ட விதியை பாதுகாப்பதும், மக்களுக்காக செயல்படும் வகையில்  கட்சியின் சட்ட அமைப்பு விதியை பாதுகாப்பதும் ஆகும்.

கட்சியின் முக்கியமான நான்கு கொள்கைகளில், மிக மிக முக்கியமானது மாவோவின் சிந்தனையைப் பின்பற்றுவதே. இச்சிந்தனையே சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றின் தோற்றம் மற்றும் இருப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையாகும். நாட்டை ஆள்வதற்கும் அதை பொலிவுள்ள நாடாக ஆக்குவதற்கும் அடிப்படையான சிந்தனையாக அது உள்ளது. இச்சிந்தனையே நாட்டின் புது முயற்சிகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பிறப்பிடமாக உள்ளது. இரண்டாவதாக, மா சேதுங்கின் கடைசி வருடங்கள் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாவோவின் வாழ்க்கையின் பின்பகுதி மிகவும் புகழ் வாய்ந்த காலமாகும். அம்மாபெரும் மார்க்ஸிஸ்ட் தன்னுடைய வாழ்க்கையை மக்கள் சேவைக்காகவும், கம்யூனிசத்துக்கான போராட்டத்துக்காவும் அர்ப்பணித்துக் கொண்ட ஆண்டுகளாகும் மாவோவின் வாழ்க்கையின் பின் பகுதியை நியாயமாக மதிப்பீடு செய்வது என்பதன் அடிப்படையான பிரச்சினை இதுதான்: அது, சேர்மன் மாவோவால் துவக்கப்பட்டு வழி நடத்திச் செல்லப்பட்ட கலாச்சாரப் புரட்சியை, நடைமுறை ரீதியிலும், உண்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடுநிலை தவறாமலும் நியாயமாக மதிப்பீடு செய்வதேயாகும். இது கட்சியின் முன்னால் உள்ள தவிர்க்க முடியாத, முக்கியமான அரசியல் கடமையாகும். பல்வேறு தீவிரமான சிக்கல்கள் அடங்கிய காரணங்களினால், கலாச்சாரப் புரட்சி, அனைத்தையும் தூக்கி எறிவது மற்றும் முழுமையான உள்நாட்டுப் போர் போன்ற மோசமான தவறுகளைச் செய்துள்ளது. எனினும் கலாச்சாரப் புரட்சியின் பொதுவான திசைவழியும்,, கொள்கைகளும், அதன் உந்துசக்தியும் முற்றிலும் சரியானவையே.

மூன்றாவதாக, சேர்மன் மாவோவையும் அவருடைய சிந்தனையையும் ஆழ்ந்து படிக்க வேண்டும்; அச்சிந்தனைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். தேங் க்ஸியாவோபிங், சேர்ம்ன் மாவோ இல்லாமல் புதிய சீனம் என்பது இல்லை என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். மா சேதுங் சிந்தனை பல தலைமுறைகளுக்கு அறிவு புகட்டியுள்ளது. மா சே துங் சிந்தனை என்ற பெருங்கொடியை தலைமுறைறையாக என்றென்றும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். எனினும் 1990 களிலிருந்து, சேர்மன் மாவோவை முன்னிலைப்படுத்துதல், மா சேதுங்கின் சிந்தனையை பரப்புதல் போன்ற செயல்பாடுகள் படிப்படையாக பலவீனமடைந்து வந்துள்ளன. நான்காவதாக, மா சேதுங்கை அச்சுறுத்தும் பூதமாக சித்தரிப்பதை கடுமையாக விமரிசன ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சேர்மன் மாவோவின் மனதில் மக்கள் தெய்வமாக இருந்தனர்; அதே சமயம், மக்களின் இதயங்களில், சேர்மன் மாவோ சிவப்புச் சூரியனாக குடி கொண்டிருந்தார்.

கடந்த 30 வருடங்களில், மக்களிடம், தன்னெழுச்சியாக மாவோ மீதான பற்று அலை அலையாக காணப்படுகிறது குடிமைச் சமூகத்தில்,  மாவோவின் கடைசி வருடங்களில் அவர் அளித்த பங்கினை மறுக்கும் போக்கு இருந்த போதிலும் இது நிகழ்ந்துள்ளது. பல்வேறு முறைகளில் சேர்மன் மாவோவைப் போற்றும் நிகழ்ச்சிகளை மக்கள் நடத்தியுள்ளனர். எனினும், மேல் தட்டில் இருப்பதாக எண்ணிக் கொள்ளும்  ஒரு சிலர்,  இத்தகைய மக்கள் கருத்துக்கு எதிரான நிலையை எடுத்து, சேர்மன் மாவோவை அச்சுறுத்தும் பூதமாக சித்தரிக்கும் போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். சேர்மன் மாவோவை அச்சுறுத்தும் பூதமாக சித்தரிக்கும் போக்கின் பிரதிநிதிகள் லி ரூயி மற்றும் யுவான் டேங்ஃபேயி ஆவர். 7  பாரம்பரிய மார்க்ஸிச சிந்தனையின் நேர்மறையான முக்கியத்துவம் என்பது, சில  தவறான கருத்துக்களை, குறிப்பாக நவீன தாரளவாதம், ஜனநாயக சோஷலிசம், பல்கருத்தோட்ட மார்க்ஸிசம் போன்றவற்றை கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்துவதேயாகும். எனினும் சில விமரிசனங்கள், குறிப்பாக, கலாச்சாரப் புரட்சியை ஆதரித்து செய்யப்படும் விமரிசனங்கள், வலிந்து செய்யப்படுபவைகளாக உள்ளன. பாரம்பரிய மார்க்ஸிஸ்டுகள், சகட்டுமேனியாக விமரிசனம் செய்தல் மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற அணுகு முறைகளைக் கையாள்கின்றன. இச்சிந்தனைப் போக்கின் பழுத்த அறிஞர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வுப் படைப்புகளை திறமையான முறையில் மதிப்புரை செய்வதில்லை. அவர்கள் அதீதமான விமரிசனங்களை முன்வைக்கின்றனர்; அவர்களுடைய எழுத்தின் புதுமைத் தன்மை போதுமானதாக இல்லை.

7.  புதுமைகாணும் மார்க்ஸிசம்.

புதுமை காணும் மார்க்ஸிசத்தின் அறிஞர் பிரதிநியாக அறியப்படுபவர், புகழ் பெற்ற பொருளாதார அறிஞரான லியு குவோகுவாங் ஆவார். இவர் சீன சமூக விஞ்ஞான அகடமியின் துணைத் தலைவராக இருந்தவர்,; தற்போது அதன் சிறப்பு ஆலோசகராக செயல்படுபவர். நானும், இக்கருத்தோட்டத்தின் முக்கிய பிரதிநிதியாக அறியப்பட்டவனே. புதுமை காணும் மார்க்ஸிசம் அடிப்படை திசைவழி மற்றும் கருத்தியல்  ஆகியவற்றைப் பொறுத்த வரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் நிலை பாட்டை ஏற்றுக் கொள்கின்றது.

முதலாவதாக, வழிகாட்டும் கொள்கை என்ற வகையில், சீனத்தில் மார்க்ஸிசத்தின் வழிகாட்டு பொறுப்பை புதுமை காணும் மார்க்ஸிசம் வலியுறுத்துகின்றது. பல்வேறு சோஷலிச நாடுகளில் வழிகாட்டும் கொள்கைகள் வேறுபடுகின்றன. அது வியட்நாமில் ஹோசி மின் சிந்தனை: கியூபாவில் அது ஜோஸ் மார்ட்டி சிந்தனை. வடகொரியாவில் கிம் இல் சுங்கின் ஜுஷே சிந்தனை. என்னுடைய கருத்தில் சீனத்தை வழிநடத்திச் செல்லும் கருத்தியல் என்பது, ஒரு வரியில் இருக்க வேன்டும். அதாவது மார்க்ஸிச லெனினிச வழி காட்டும் கொள்கை மற்றும் சீனமயமாக்கப்பட்ட அதன் கருத்தியல் என்று இருக்க வேண்டும். வழி நடத்தும் கருத்தியல் நீண்ட பட்டியலாக இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் அது அறிஞர்களின் கேலிக்கு ஆளாகின்றது.

இரண்டாவதாக, அரசியல் அமைப்பைப் பொறுத்த வரையில், புதுமை காணும் மார்க்ஸிசம், சீன உழைக்கும் வர்க்கத்து அரசியல் கட்சியின் தலைமையை ஏற்கின்றது. சீனா கம்யூனிஸ்ட் கட்சியை உழைக்கும் வர்க்கத்தின் ஈட்டி முனையாகக் கருத வேண்டும்; மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; சோஷலிசத்தை நிறுவும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். பல கட்சி கூட்டுறவு, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரசியல் கூட்டாலோசனைக்கான ஏற்பாடு ஆகியவை தற்போதைய அரசியல் நிலையில் மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் ஒரு வடிவமேயாகும்; இதுவே, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அது ஆட்சி செய்யும் சீன நாட்டின் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையான கொள்கையாகும்.

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள உறவுகளைச் சரியான முறையில் கையாள, இதையே அரசியல் அளவீடாகக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார அமைப்பு என்ற ரீதியில், சீனத்தில் உற்பத்திச் சாதனங்களின் உடமையைப் பொறுத்த வரையில், பொதுத்துறையே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற கருத்தையே புதுமை காணும் மார்க்ஸிசம் வலியுறுத்துகின்றது. சோஷலிசத்துக்கும் முதலாளிதுவத்துக்கும் இடையே அடிப்படையான பொருளாதார அமைப்பைப் பொறுத்தமட்டில், உள்ள முக்கியமான வேறுபாடே, உற்பத்திக் கட்டமைப்பில் காணப்படும் சமூக உடைமையேயாகும். பொது சமூக உடைமையின் ஆதிக்கம் அளவிலும் குணத்திலும் சாதகமான சூழ்நிலையை தருகின்றது; வலுவான நாட்டை உருவாக்குவதிலும், சோஷலிசத்தைக் கட்டியமைப்பதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அரசுக்குச் சொந்தமான, பலமான பொருளாதரம் கேந்திரமான பங்கை ஆற்றுகின்றது. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி என்ற மேல்கட்டுமானத்திற்கு பொருத்தமான சோஷலிசத் தன்மை கொண்ட பொருளாதார அடித்தளமாக அமைகிறது.

நான்காவதாக, இறுதி இலட்சியம் என்ற வகையில் , புதுமை காணும் மார்க்ஸிசம், சோஷலிச இயல்பையும் கொள்கையையும் சீனா கடைப்பிடித்து ஒழுக வேண்டுமென்று நம்புகின்றது; உற்பத்திச் சக்திகளின் முழு வீச்சையும் விடுதலை செய்து, வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகின்றது. சுரண்டலை ஒழிப்பதையும் சமூகம் துருவங்களாக பிரிவதைத் தடுத்து, எல்லாரும் ஒட்டுமொத்த சமூகம் வளமடைவதையும் விரும்புகின்றது. இறுதியில் உற்பத்திச் சக்திகளின் மாபெரும்  முன்னேற்றத்தின் துணையுடன், சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிசத்தை சாதிக்க வேண்டுமென்று விரும்புகின்றது.

இது வரலாற்றுப் பரிணாம வளர்சியையும், அமைப்பில் உருவாகும் புதிய வகை முயற்சிகளையும் கொண்டு நிகழ வேண்டிய நீண்ட காலப் போக்காகும்.

மார்க்ஸிய ஆய்வுகள் மற்றும் மார்க்ஸிசத் தொகுப்பு என்பவை இப்புதுமை காணும் மார்க்ஸிசத்தின் சஞ்சிகைகள் ஆகும். குறிப்பாக மார்க்ஸிசத் தொகுப்பு பத்திரிகை மார்க்ஸிய கருத்தியல் கண்ணோட்டங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றது. மார்க்ஸிச்ச ஆய்வு இணையதளம் புதுமைகாணும் மார்க்ஸியத்தின் கருத்தியல் செயல்போக்குகளை அவ்வப்போது பிரதிபலிக்கின்றது. என்னுடைய கருத்தில், கருத்தியல் ரீதியான புதுமையும், ஆய்வும் மற்றும் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளும், உலக சூழ் நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, இறுதியாக சீன நாட்டில் நிலவும் நிலைமைகளை அடிப்படையாகக் கொன்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தை திறந்து விடுதல் – சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் – சீனத்தின் வளர்ச்சி குறித்த மற்ற கொள்கைகள் போன்றவற்றில் எதை முன் செய்வது எதைப் பின் செய்வது என்ற செயல்பட்டியலைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு, முதலில் உள்நாட்டு நிலைமைகளையும், உலக நிலைமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பின் சீனத்துகேற்ற செயல்வடிவத்தை இறுதி செய்ய வேண்டும். பின் இக்கொள்கைகள் சோதனை முறையில் பரிசீலிக்கப்பட்டு அமல் செய்யப்பட வேண்டும். இதன் வரிசை மாற்றப்பட்டால், உதாரணமாக கொள்கைகளின் சோதனைகள் வெறும் மனத்தளவில் செய்யப்பட்டலோ அல்லது ஊழியர்கள் இச்சோதனைகள் அனைத்தும் மிகச் சரியாகவே நடக்கின்றன என்று தங்கள் இஷ்டத்துக்கு முடிவு செய்தாலோ, பின் கொள்கை முடிவுகள், சரியான சட்டத்தின அடிப்படை மற்றும் நெறிப்படுத்தும் வழிமுறைகள் இன்றி அமலுக்கு வரும்; அப்போது பெரும் குறைபாடுகள் ஏற்பட இது வழி வகுக்கும்.

எனவே சுருக்கமாகக் கூறுவதென்றால், சீனத்தில் மார்க்ஸிசத்தின் புதுமை காண்பது என்பது, புதுமையான, அனைத்தையும் உள்ளடக்கிய புதுமை காணும் முயற்சியாக இருக்க வேண்டும். அடிப்படையில் மார்க்ஸிசம்: வேர்களாக தேசிய பாரம்பரியம்; கருவியாக மேலைநாட்டுச் சிந்தனைகள் என்ற அடிப்படைக் கொள்கைகளை  கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம் உலக நிலைமையையும், சமூக யதார்த்தத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்; சீன கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுரிமைப்படுத்த வேன்டும். புதுமை காணும்  மார்க்ஸிசத்தின் கண்ணோட்டம் குறித்தும், அது முக்கிய பங்காற்றக் கூடிய இடங்கள் குறித்தும் மேலும் விவரிக்க, சோஷலிசம் செல்ல வேண்டிய திசை குறித்து வலியுறுத்த விரும்புகிறொம். 21 ம் நூற்றாண்டில் அதன் விஞ்ஞான வளர்ச்சி நிறுவனங்களுக்கு சரியான அமைப்பு முறைகளை வளர்த்தெடுத்து, செம்மைப்படுத்துதலில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.


இந்திர சாதனம் தொழிலாளியை விஞ்சிவிடும் ஒரு போட்டியாளனாக மட்டும் செயல்படுவதில்லை. அவரை தேவையற்றவராக ஆக்குவதற்காக இடையறாது செயல்படுகிறது. அது அவரது நலன்களுக்கு தீங்கு பயக்கும் சக்தியாகும். அந்த உண்மையை மூலதனம் கூரை மீது ஏறி நின்று திட்டமிட்ட முடிவைப்போல உரக்க அறிவிக்கிறது. அதனை அவ்வாறே பயன்படுத்திக் கொள்கிறது. மூலதனத்தின் ஆதிபத்தியத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் அவ்வப் போதைய எழுச்சிகளான வேலை நிறுத்தங்களை ஒடுக்குவதற்கான சக்திவாய்ந்த ஆயுதமாகும் இது.

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

டேவிட் ஹார்வி


முதன்மையாக, சீன குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசத்தின் மூலம்  பொருளாதார அமைப்பை கட்டமைப்பது என்பதன் பொருள் இதுதான். அடிப்படையான பொருளாதார அமைப்பை மேம்படுத்துவதில், பொது உடைமையே ஆதிக்க நிலையில் இருக்கும்; சொத்து உடைமையின் மற்ற வடிவங்கள் பொருளாதார அமைப்பில் உடன் காணப்படும்.

தேங் க்ஸியவோ பிங்க்கின் வார்த்தைகளச் சுருக்கமாகக் கூறுவதென்றால், பொருளாதார அமைப்பின் அடிப்படையைப் பொறுத்த வரையில், சோஷலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமைக் கட்டமைப்பில் அடங்கியுள்ளது. பொதுச் சமூக உடைமையின் ஆதிக்கம் அளவிலும் குணத்திலும் சாதகமான சூழ்நிலையைத் தருகின்றது; வலுவான நாட்டை உருவாக்குவதிலும், சோஷலிசத்தைக் கட்டியமைப்பதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அரசுக்குச் சொந்தமான பலமான பொருளாதாரமும், சிறப்பாக இயங்கும் கூட்டுடைமை மற்றும் கூட்டுறவுப் பொருளாதாரமும்  கேந்திரமான பங்கை ஆற்றுகின்றன. ஆகையால், ஜியாங் ஜேமிங் கூறியபடி, அது, சோஷலிசத்தின் பொருளாதார அஸ்திவாரமாக உள்ளது; ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேல் கட்டமைப்பாக அதன் மீது இயங்கும்.  தற்சமயம்,உற்பத்திச் சக்திகளின் முழுவளர்ச்சியின்மை காரணமாக, சீனாவால், உற்பத்திச் சாதனங்களின் முழு பொது உடை மையை சாதிக்க இயலவில்லை. எனினும், பல வேறு வகையான தனியார் உடைமை பொருளாதாரத்தையும் வளர்த்தெடுக்கும் வேளையிலேயே, பொருளாதாரத்தில் பொது உடைமைத் தன்மையின் ஆதிக்க நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு பொது உடைமையின் ஆதிக்க நிலையை உறுதி செய்வதன் மூலமே செல்வம் மற்றும் வருமான விநியோக அமைப்பு உண்மையில் மேம்பாடு அடையும். உழைப்புக் கேற்ற கூலி என்ற அடிப்படையில் வருமான விநியோகம் ஏற்படும், அனைவருக்கும் பொதுவான வளமை மற்றும் சமநீதியை சாதிக்க முடியும்.

வளர்ச்சி என்பது மக்கள் சார்ந்த, விஞ்ஞான அடிப்படையிலான வளர்ச்சி ஏற்பட இயலும். இவை அனைத்தும்,மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்திற்கும், வலுவான, விரைவான பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்க்கும் ஏற்ற பொருளாதார அடிப்படையை வழங்கும். இரண்டாவதாக, அரசியல் அமைப்பு ரீதியில், சீன குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசம் என்பது, மூன்று கூறுகள் நான்கு அடுக்குகள் கொண்ட அமைப்பை மேம்படுத்தும். அதாவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம், அனைத்துக்கும் எஜமானராக மக்கள், அரசின் விவகாரங்களைக் கையாள்வதில் சட்டப்படி இயங்குதல் என்ற மூன்று கூறுகளின் இயற்கையான இணைப்பை வலியுறுத்துதல் என்றே அதன் பொருள். மேலும் இதன் பொருள் கீழ்க்கண்ட வற்றையும் ஏற்று அவற்றை மேம்படுத்துவதையும் உள்ளடக்கும்: மக்கள் காங்கிரஸ் அமைப்பு, பல கட்சி கூட்டுறவு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள அரசியல் கலந்தாலோசனை அமைப்பு, இனச் சிறுபான்மையினருக்கான பிராந்திய தன்னாட்சி அமைப்பு, ஒரே நாட்டிற்குள் இரு அமைப்புகள் என்ற கொள்கை, அடிமட்ட அளவில் தன்னாட்சி. இதன் மூலம், சுய மேம்பாடு மற்றும் சோஷலிச அரசியல் அமைப்பு ஆகியவற்றின் தொடர் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகத்துக்கு கருத்திலும் வடிவத்திலும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தும். உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாவலன், மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்ற கொள்கை, சோஷலிசப் பணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் ஆகியவற்றை இயல்புகளாககக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கெ சீன நாடு தொடர்ந்து வலு சேர்க்க வேண்டும்.

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில், தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து முன்னேறிய ஊற்பத்திச் சக்திகளின் பிரதிநிதியாக திகழ்கிறது; முன்னேறமடைந்த உற்பத்தி உறவுகளின் உறைவிடமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கமே; முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து விட்டு, சோஷலிசம் மூலம் கம்யூனிசத்தை கட்டமைக்கும் வரலாற்றுப் பணியை இன்னமும் செய்யப்போவது இந்த உழைக்கும் வர்க்கமே; புதிய அமைப்பில் பல வகைப்பட்ட சமூக வர்க்கங்களும் அடுக்குகளும் தோன்றி ஒன்றுடன் ஒன்று இனைந்து வாழக்கூடிய சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்தின் முன்ணணிப்படையாக  இயங்கும் இயல்பையும், உழைக்கும் வர்க்கத்தின் மீது முழுமனதுடன் சார்ந்துள்ள இயல்பையும் தொடர்ந்து கடைப் பிடிக்க வேண்டும். பல கட்சி கூட்டுறவு, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரசியல் கூட்டாலோசனைக்கான ஏற்பாடு ஆகியவை தற்போதைய அரசியல் நிலையில் மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் ஒரு வடிவமேயாகும்; இதுவே, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அது ஆட்சி செய்யும் சீன நாட்டின் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையான கொள்கையாகும். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள உறவுகளைச் சரியான முறையில் கையாள, இதையே அரசியல் அளவீடாகக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, பண்பாட்டு அமைப்பு ரீதியில், சீன குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசம் என்பது, மார்க்ஸிசத்தை உயிரோட்டமாகக் கொண்ட சோஷலிச அம்சங்களை  மையமாகக் கொண்டு அமைந்த சமூக  மதிப்பு அமைப்பை மேம்பாடு அடையச் செய்யும். அதன் மூலம், பலவகையான சமூக சிந்தனைக்கும், சமூக செயற்பாடுகளுக்கும் இட்டுச் செல்லும்; பண்பாட்டு வளர்ச்சியையும், வளத்தையும் வளர்த்தெடுக்கும். விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்தையும், செயற்முறையையும் கொண்ட மார்க்ஸிசம், சோஷலிச இயக்கத்தின் கருத்தியல் அடிப்படையாகும். எனவே, சீன குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசத்தை நடைமுறைப்படுத்துவதில் அது வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே அதை அவ்வாறு வழிகாட்டியாக கருதுவதன் பொருள், எல்லா இடத்துக்கும் ஏற்ற மார்க்ஸிசக் கொள்கைகளை, நடப்பில் உள்ள சீனாவின் யதார்த்தத்துடன் இணைத்து புதிய நிலைமைகளை ஆய்வதும், கிடைக்கும் புதிய ஒட்டுமொத்த அனுபவங்களின் அடிப்படையில் புதிய பிரசினைகளுக்குத் தீர்வு காண்பதும்தான்.

நான்காவதாக, சமூக அமைப்பை கட்டுவது என்ற ரீதியல், சீன குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசம், ஒரு கட்டமைப்பு, மூன்று இடைவினைகள், மற்றும் நான்கு செயல்முறைகள் கொண்ட அமைப்பை மேம்படுத்த உதவும். முதலில், ஒரு சோஷலிச இணக்கமான சமூகத்தை கட்டியமைப்பதற்கு தேவைப்படுவது, கட்சி கமிட்டிகளின் தலைமைப் பண்புகள், அரசாங்கத்தின் பொறுப்பு, அரசு சாரா அமைப்புகளின் ஆதரவு மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக மேலாண்மைக் கட்டமைப்பின் மேம்படுத்தலே.8 இரண்டாவதாக, கட்சியின் தலைமையின் கீழ், பொது நிர்வாக அமைப்பை புதுமைப்படுத்த வேண்டும்; அரசின் கட்டுப்பாட்டுக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் இடையே உள்ள தொடர்பை  திறம்பட வளர்த்தெடுக்க வேண்டும்; அரசாங்க நிர்வாகத்துக்கும் சமூக தன்னாட்சிக்கும் இடையே உள்ள பயனுள்ள  உறவை வளர்க்க வேண்டும். அதனால், சமூகத்தில் உள்ள பல்வேறு நலன்கள், பல்வேறு கோரிக்கைக் குரல்கள், சர்ச்சைகளை மத்தியஸ்தம் செய்தல் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை ஒருங்கிணைக்க விஞ்ஞான ரீதியான பலன் தரக்கூடிய வழிவகைகளை உருவாக்க வேண்டும் சோஷலிச ஜனநாயக அமைப்பு, முழுநிறைத் தன்மையை இது வரை பெறாத்தால், சிலர், சோஷலிசம் குறித்த புரிதல் இன்றி, முதலாளித்துவத்தை ஜனநாயகத்துடனும் சோஷலிசத்தை சர்வாதிகாரத்துடனும் சமன் செய்து பார்க்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

சோஷலிச ஜனநாயக அமைப்பை மேம்படுத்தாமல், நவீன தாரளமயம், சமூக ஜனநாயகம், ஜனநாயக சோஷலிசம் ஆகியவற்றின் போலித் தன்மையை மட்டும் குறை கூறுவோமானல், அது இம்மண்ணில் மேலை நாட்டு ஜனநாயகம் துளிர் விட்டு வளர்வதை தடுக்கவே முடியாது. மேலை ஜனநாயகங்களை, விஞ்சிச் செல்ல இருக்கும் ஒரு வழி, சோஷலிச நாடுகள், பங்கேற்பு ஜனநாயகம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவதை விட சோஷலிசமே மேன்மையானது என்ற கருத்துக்கு வலுவான செறிவூட்டல் ஆகிய நடவடிக்கைகளில், மற்ற நாடுகளை விட அதிகமான சாதனைகளை தொடர்ந்து புரிய வேண்டும். விஞ்ஞானக் கருத்தின் அடிப்படையில் வளர்ச்சியை நாடுவது என்பதைத் தேர்ந்தெடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பின்புலத்தில், இணக்கமுள்ள சோஷலிச சமூகத்தைக் கட்டமைப்பதும், வலுவான, விரைவான, பொருளாதர வளர்ச்சியை நாட்டில் நிறுவுவதும் நம்மால் சாதிக்கக் கூடிய இலக்குகளே. கோர்பசேவின் ஜனநாயக சோஷலிச சீர் திருத்ததைப் பின்பற்றினால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் துன்பத்தையே கொண்டு வந்து சேர்க்கும். சீன நாடு அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது. சீனாவில் சோஷலிசத்தின் எதிர்காலமும் செல்திசையும் எவ்வாறு இருக்கும் என்பதை, புதுமை காணும் மார்க்ஸிசம் என்ற கருத்தியல் சீன கல்விப் புலத்தின் இடையேயும் அரசியல்வாதிகளிடையேயும் எந்த அளவுக்கு மைய நீரோட்டச் சிந்தனையாக மாறுகிறது என்பதைப் பொறுத்தே உள்ளது என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

குறிப்புகள்

  1. Enfu Cheng is President and Professor of the Academy of Marxism at the Chinese Academy of Social Science, and Chair of the World Association for Political Economy
  2. Wang Dongjing. The theoretical pivot of operating economy, Wenhui Daily. June 7, 2004. Also see his Clarification of three major economic problems, China Reform no. 6. 2006.
  3. Chen Enfu. Four Theoretical Hypotheses of Modern Marxist Political Economy, Social Sciences in China no. 1 2007.
  4. Dong Degang. We should further emancipate the mind on the question of ownership. http://news.163.com/08/0229/08/45RUN67600012I5M.html.
  5. Chinese Communist Party Literature Research Center. 2004. Chronicle of Deng Xiaoping (1975-1997). Vol. 2: 1317. Beijing: The central literature press.
  6. Wang Changjiang: It is an objective reality that party has self-interest. Study Times, no. 534.
  7. Bai Yang. Defend Mao Zedong’s banner to the death. http://mzd.wyzxsx.com/Article/Class18/201007/3361.html.
  8. Selected Important Documents since the Sixteenth CPC Congress, Part ¢ò, the Central Literature Publishing House, 2008, pp.662.

 

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்