ஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது …

887
1
SHARE

– எஸ்.கண்ணன்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல், என்பதாக, இந்திய நிலை மாறிவருகிறது. யாரும் நேர்மையானவர்கள் அல்ல என்ற சந்தேகம் ஆட்கொண்டும், பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற லஞ்சம் பெறும் போக்கும்  வலுத்து வருகிறது. இவையெல்லாம் தவிர்க்க முடியாதது, இதற்கு மாற்று இல்லை, போன்ற கருத்து பிரச்சாரம் தீவிரமாக சமூகத்தில் பரப்பபட்டு வருகிறது. இவை அனைத்துமே கடந்த 25 ஆண்டுகளில் உருவாகி வளர்ந்த கருத்தாக்கமாகும்.

 

மாற்று என்பதெல்லாம் வெற்றுப் பிரச்சாரம் (There is no alternative) என எழுப்பும் முதலாளித்துவ தாராளமயமாக்கலின் குரல், கடந்த 20 ஆண்டுகளாக போராட்ட சக்திகளை நோக்கியும், போராடுபவர்களுடன் கரம் கோர்க்க நினைப்பவர்களிடத்திலும், முன்வைக்கப்பட்டு, நம்பிக்கையை சிதறடிக்கிறது.

இதுவும் தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கத்திற்கான திட்டமிடல் மற்றும் செயல் திட்டத்தின் உள்ளடக்கம், என்பது மிகை அல்ல.

 

முதலாளித்துவத்தின் உடன்பிறப்பே ஊழல்:

 

முதலாளித்துவத்தின் பொது விதியை மார்க்சிய மூலவர்கள் குறிப்பிடுகிற போது, “மூலதனம், 10 சதம் லாபம் கிடைக்குமானால் தாவிக்குதிக்கும், 30 சதம் லாபம் கிடைக்குமானால் பாய்ந்து செல்லும், 300 சதம் லாபம் கிடைக்கும், அதற்கு முதலாளி தூக்கிலிட்டுக் கொள்ள வேண்டும் என நிபந்தனை வைத்தால், அதையும் நிறைவேற்றும்”, எனக் குறிப்பிடுகின்றனர். லாபத்திற்காக தன்னையே மாய்த்துக் கொள்ளத் தயங்காத மூலதனம், சமூகத்தை எப்படி விட்டு வைக்கும்? என்பதில் இருந்து, முதலாளித்துவத்தையும், அதன் உப உற்பத்தியான ஊழலையும், புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

நவதாராளமயக் கொள்கை அமலாக்கம் துவங்கிய காலம், லாப விகிதத்தை கார்ப்பரேட்கள் வசம் பெருமளவில் குவித்த காலமாகும். மூலதனத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளை தகர்ப்பதிலும், நாடுகளின் எல்லைகளை உடைத்து நொறுக்குவதிலும், தொழில் துவங்குவதற்கான உரிமம் வழங்குவதில் இருந்த நிபந்தனைகளை அழிப்பதிலும், இயற்கையின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாடுகளை அழிப்பதிலும் தீவிரம் செலுத்தியது. அனைத்தும் சுதந்திர சந்தைமயம் என்பதும் இக்காலத்தில் மையப்படுத்தப்பட்ட மிகமுக்கியமான கருத்தாக்கம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகள் மீதும், இத்தகைய செல்வாக்கை, வளர்ந்த நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தின.

 

பேரா. பிரபாத்பட்நாயக் தனது ஆய்வை பின்வருமாறு குறிப்பிடுகிறார். உலகமயமாக்கல் நோக்கம் நிறைவேற, முதலாளித்துவம் தனது கொள்கைகளை மட்டும் நம்பி இருப்பதில்லை. தனிநபர்களையும் உருவாக்குகிறது, அதாவது பாரம்பரியமான அரசியல்வாதிகளை விட, நுட்பம் அறிந்த அறிவாளிகள் அதிகம் பயன்படுவர் எனக் கருதுகிறது. அந்த வகையிலேயே, இத்தகைய கொள்கை அமலாக்கத்திற்காக பெரும்பங்காற்றி வரும் நிறுவனங்களான, உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம், ஆகியவற்றின் முன்னாள் பொறுப்பாளர்களை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தியதைப் பார்க்க முடிந்தது. அத்தகைய நபர்கள் மேற்படி அமைப்பின் தேவையை, நிதி செயல்பாடு, மொழி என அனைத்து வகையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால், சிறந்த நிர்வாகத்தை, இந்த தாராளமயக் கொள்கைகளுக்கு சாதகமாகத் தரமுடியும், என்ற வகையில் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு துருக்கியில் டான்சு சில்லர், பாகிஸ்தானில் ஆஸிஸ், இந்தியாவில் மன்மோகன்சிங் என்று இந்த பட்டியல் தொடர்கிறது என்கிறார்.

 

பாரம்பரியமான, நிலப்பிரபுத்துவ அரசியல் தலைவர்களுக்கு இத்தகைய நபர்கள் மூலம் பதட்டத்தை உருவாக்கி, அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி, வளைக்கிற ஏற்பாட்டையும் மூலதனம் செய்துவிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளில், பழங்குடி மக்கள், விவசாயிகளின் சொத்துக்கள் மற்றும் பொது சொத்துகளை சூறையாடி வருவது, இத்தகைய தலைவர்களை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கியதுடன் இணைந்தது. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அரசியல் தலைவர்களின் வாரிசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் முதலாளித்துவ அரசியல் தலைவர்களாக வளர்ச்சி பெற்று இருப்பதையும் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல, இந்தியா ஒளிர்கிறது, சாமான்ய மனிதர்களின் ஆட்சி, மனித முகம் பொருந்திய சீர்திருத்தம் போன்ற முழக்கங்களின் பின்னணியையும், டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, விஷன் 23, மேக் இன் இந்தியா, போன்ற இன்றைய முழக்கங்களும் மேற்குறிப்பிட்டவைகளுடன் இணைந்த ஒன்றே ஆகும்.

 

என்.ராம், தான் எழுதிய, “தாராளமயமாக்கல் காலத்தில் ஊழல்”, என்ற புத்தகத்தில், இந்த 25 ஆண்டு காலத்தில் 25 மெகா ஊழல்கள் நடந்துள்ளதாக குறிப்பிடுகிறார். பலநூறு கோடி டாலர் சம்பந்தப்பட்டதாக இந்த ஊழல்கள் இருந்ததாகவும், இவைகளின் சராசரி 36 ஆயிரம் கோடி என்றும் குறிப்பிடுகிறார். பெரும்பான்மையான ஊழல் பொது சொத்துகளை சூறையாடுவதுடன் இணைந்திருக்கிறது.

 

கார்டியன் இதழில் பேரா. ஜெயதிகோஷ் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான இயக்கம் குறித்து விவாதிக்கிறார். அதில், கடந்த இரண்டு பத்தாண்டுகள், கார்ப்பரேட் வழி நடத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. கார்ப்பரேட்களின் லாப வளர்ச்சிக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ற பெயரில், செய்த சலுகைகள் அனைத்தும் மூலதனத்திற்கான ஆதி திரட்டலுடன் இணைந்ததாக உள்ளது, எனக் குறிப்பிடுகிறார். எனவே ஊழல் முதலாளித்துவ சமூக அமைப்புடன் ஒட்டிப்பிறந்த,  மிக மோசமான சமூக சீரழிவு என்பதை அழுத்தமாக விவாதிக்க வேண்டியுள்ளது.

 

இயற்கை வளக் கொள்ளை:

 

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரம், உள்ளிட்ட அனைத்திலும் வளர்ச்சி என்ற சொல், ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். இந்த வளர்ச்சி மேலே குறிப்பிட்ட முதலாளித்துவத்தின் இயற்கை வளங்களின் மீதான சுரண்டலுடன் இணைந்தது என்பதையும், அறிய முடியும். கிட்டத்தட்ட தாராளமயக் கொள்கைக்கான, சலுகைகளைப் பெறுவதற்கு, வளர்ச்சி என்ற முழக்கம் பயன்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இயற்கை வளம், இக்காலத்தில் ஏலம் போய் இருப்பதை அறிய முடியும். உதாரணத்திற்கு, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெருமளவில், மணல், கிரானைட், கற்குவாரி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பெரும் கோடீஸ்வரர்களாகி இருப்பதை சொல்ல முடியும்.

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு எடுத்த விவகாரம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கிரானைட் கொள்ளை குறித்த புகாரில், பாஜகவின் ரெட்டி சகோதரர்கள், ஜெகன் மோகன் ரெட்டி, பி.ஆர்.பி ஆகியோர் மீதான வழக்குகளும், அது ஏற்படுத்திய அதிர்ச்சியும் எளிதில் கடந்து செல்லக் கூடியது அல்ல. தமிழகத்தில் தாது மணல் கொள்ளை மீது எத்தனையோ விதமான புகார்கள் எழுப்ப பட்டும், அதன் மீது, போதுமான அக்கறையைத் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளின் ஆட்சியாளர்களும் மேற்கொள்ள வில்லை. மத்திய பாஜக ஆட்சியும் இதன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை. தாது மணல் எடுப்பதில் முதலிடத்தில் உள்ள, வி.வி. மினரல் நிறுவனத்தின் செல்வாக்கு அப்பட்டமாக அரசியல் தொடர்புகள் கொண்டதாக உள்ளது.

 

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மீதான திருத்தத்தை இன்றைய பாஜக அரசு, அவசர சட்டமாக பலமுறை நிறைவேற்றியதும், செயல்படுத்த முயற்சித்ததும், வழக்கமான செய்திகளில் முடங்கிப் போகிற ஒன்றாக இருக்க முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம், குறைந்த விலையில் ஒப்படைக்கப் பட்டது எப்படி? அதானி குடும்பத்தாரிடம், கமுதி சூரிய வெப்பத்தினாலான மின்சார உற்பத்திக்கான  நிலம் தேர்வு, ஒப்படைப்பு ஆகியவையும் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல. அதானிக்கு நாடு முழுவதும் இதுபோல் பல திட்டங்கள் எளிதாக கிடைத்துள்ளன.

 

ரியல் எஸ்டேட் வணிகத்தில் ராபர்ட் வதோரா துவங்கி முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அல்லது உறவினர்கள் பெருமளவில் ஈடுபட்டு வந்திருப்பதும் நாம் பார்த்த நிகழ்வுகளே. கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா, பெங்களூர் நகரில் தனது ரத்த உறவினருக்கு அரசு இடத்தை ஒதுக்கீடு செய்ததும் விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க ஊழல் குறித்த குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள் என சிறைத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருப்பவர், மதுகோடா. பாஜகவில் துவங்கி, சுயேட்சை உறுப்பினராக வெற்றி பெற்று, மாநில முதல்வராக காங்கிரஸ் ஆதரவுடனும், சுரங்கத் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய அமைச்சர் பொறுப்புகளை, பாஜக ஆதரவுடனும் வகித்தவர். 4000 கோடி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. லைபீரியாவில், சுரங்கம் சொந்தமாக நடத்தும் அளவிற்கு பொருள் செல்வாக்கு கொண்ட தலைவராக இருந்துள்ளார். பாபுலால் மொராண்டி, சிபுசோரன் போன்ற தலைவர்கள் மீதும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளது.

 

தாராளமயக் கொள்கை அமலாக்கத்தில், இத்தகைய இயற்கையை சூறையாடும் நிகழ்வு ஒரு புறம் என்றால், மறுபுறம் அடையாள அரசியலின் பங்களிப்பும் இத்தகைய கொள்ளைக்கு உதவியாக இருந்துள்ளது. மதுகோடா, சிபுசோரன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தங்களுக்குப் பின்னால் எளிய பழங்குடி அல்லது உழைக்கும் மக்களை அடையாளத்தின் பெயரில் திரட்டியுள்ளனர். இது அரசியல் நிர்ப்பந்தம் அளிக்கவும், இத்தகைய தலைவர்களின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யவும் பயன்பட்டு வருகிறது.

 

சேவை மற்றும் இதர துறைகளில் வளர்ந்து வரும் ஊழல்:

 

முதலாளித்துவ அரசியலுக்கு பணம் மிகப் பெரும் தேவையாக உள்ளது. இது நியாயமா? இல்லையா? என்பது தனிக்கதை. ஆனாலும் இன்று பணம் இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல் தலைவர்களின் பலம், குறைந்து விடும் நிலை இருப்பதை, கண்கூடாக பார்க்க முடிகிறது. முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் தங்களைப் பலம் பொருந்தியவர்களாக இக்காலத்தில் நிறுவிக் கொண்டது, மக்களுடைய பொதுச்சொத்துகளையும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட நடவடிக்கைகளையும் பறித்ததன் மூலம் ஆகும்.

 

இந்தியத் தொலைத் தொடர்புத் துறை, சுக்ராம் துவங்கி, 2ஜி வரை தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதை பார்க்கிறோம். இந்திய அரசியலில் பெரும் புயலை உருவாக்கி கார்ப்பரேட் நலனை அப்பட்டமாக உயர்த்தி பிடித்த ஒரு வழக்காக 2ஜி அமைந்ததை இக்கட்டுரை எழுதும் நிலையில் பார்க்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு வெற்றியாக சொல்லப்படுவதை விட, கார்ப்பரேட்களின் வெற்றி என்பதை, புரிந்து கொள்வது மிக அவசியம்.

 

ராணுவ தளவாடங்கள் பெறுவதிலும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. தாராளமயம் என்ற பதத்திற்கு முன்னதாக, இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற சொற்றொடர் பயன்பாட்டில் இருந்த போது, வெளிவந்த போஃபர்ஸ் பீரங்கி ஊழல், ராஜீவ் காந்தியின் ஆட்சியை பறித்தது. இன்றுவரை விமானம் வாங்கியதில், ஹெலிகாப்டர் வாங்கியதில் என்று குற்றச் சாட்டுப் பட்டியல் குறையாமல் நீண்டு செல்வது நாம் அறிந்தது. பாஜகவின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றதை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய நிகழ்வு 2000 ஆண்டின் இறுதியில் வெளிப்பட்டது. அன்று பாஜக ஆட்சியில் இருந்தது. அடுத்தடுத்த சவப்பெட்டி, ஊழல், ராணுவ வீரர்களுக்கு காலனிகள், பூட்ஸ் வாங்கியதில் ஊழல் மலிந்து இருந்த விவரங்கள் மறைக்க முடியாததே. இவை 64 கோடியில் துவங்கி 20 ஆயிரம் கோடிகள் வரையிலும், தொடர்புடையதாக வளர்ந்து, பொதுமக்கள் பணம் சூறையாடப்பட்டது.

 

பங்கு சந்தை விவகாரங்களில், ஹர்சத் மேத்தா, கேத்தன் பரேக் ஆகிய பெயர்கள் மறைக்க முடியாத ஒன்று. பல ஆயிரம் கோடி ஊழல் தொடர்புடையவை. இன்றும் பலர் தங்கள் சொத்துகளை, இந்த பங்குச்சந்தை மூலம் பறி கொடுத்து வருகின்றனர். அதேபோல், தெல்கி என்ற நபர் ஸ்டாம்ப், மற்றும் பத்திரங்கள் குறித்த ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவர். பெரும் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இவைகள் தொடர்பு கொண்டிருக்கவில்லை, மேலும் அத்தகைய பெரும்பகுதி மக்களால், இவைகளை நினைவில் கொண்டு கொள்கை மாற்றைத் தேட முடியவில்லை, என்பது முதலாளித்துவ தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கவாதிகளுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்து வருகிறது.

 

கேத்தன் தேசாய் என்பவர் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த போது நடந்த ஊழல் பரபரப்பானது. பாமக அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார். கல்வியை தனியார் மயமாக்குவது அதிகரித்த நிலையில், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகியவை மாணவர் சேர்க்கையின் போது, பல கோடி லாபமீட்டு வருவது நடைபெறுகிறது. இக்கட்டுரை எழுதப்படும் இக்காலத்தில், பாஜக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பைக் களைத்து விடுவதாகவும், தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதாகவும் மோடி அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் பாஜக அரசு நியமிக்கும் நபர்களே உறுப்பினர்களாக இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் மீது அரசுக்கு இருந்த சமூக கட்டுப்பாட்டை அடியோடு அழிக்கும் செயலாக இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விதிகள் மீதான நடவடிக்கைகள் ரத்தாகும். அல்லது தனியார் வசமே அத்தகைய பொறுப்பு ஒப்படைக்கலாம். இதன் மூலம் கட்டண கொள்ளையை தீவிரப்படுத்தலாம்.

 

வேலை வாய்ப்பு உருவாக்குவது சார்ந்த ஊழல் வியாபம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியின் காலத்தில் வியாபம் என்றழைக்கப் படுகிற இந்த ஊழல் குற்றச்சாட்டில், பல ஆயிரம் கோடி தொடர்புடையது, மேலும் 45 பேரின் மர்ம மரணமும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடலை மிட்டாய் பள்ளி சிறார்களுக்கு விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள ஊழல் முறைகேடு, ரூ 200 கோடி மதிப்பிலானது. அதில் பாஜக அமைச்சர், பங்கஜ முண்டே என்பவர் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது, முக்கியமானது.

 

மாட்டு தீவன ஊழல் புகார் 20 ஆண்டுகளாக நடந்து தற்போது லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோர்  தண்டிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டுள்ளனர்.

 

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் தலைநகர் டில்லியில் நடந்த போது பல ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அன்றைய அமைச்சர் சுரேஷ் கல்மாடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது.

 

மேலே குறிப்பிட்ட ஜேம்ஸ் பெட்ரோஸ் குறிப்பிட்ட, ஏகாதிபத்தியத்தின் தேவையான, தனியார்மயமாக்கல் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ள மேற்குறிப்பிட்ட உண்மைகள் உதவும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் கபளிகரம் செய்வதில் ஊழல் அதிபயங்கர பங்களிப்பு செய்துள்ளது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்து மத்திய அரசு பட்ஜெட் முன்மொழிவாக மாறியதும், தாராளமய கொள்கை மேலாதிக்கத்தில் இருந்தே வெளிப்படுகிறது.

 

மொத்தமாக, கல்வி, வேலை, சுகாதாரம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இக்காலத்தில் பெரும் ஊழல் புகார் கொண்டதாக மாறியுள்ளது. இங்கு வளர்ச்சி குறித்த விவாதத்தை இணைத்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் மனிதவளக் குறியீடாக இருப்பது, கல்வி, வேலை, சுகாதாரம் ஆகியவை ஆகும். ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்துள்ள நிலையில், உலக மனிதவள வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 137 வது இடத்தில் இருக்கிறது. இந்த பிற்போக்கு நிலை விவாதமாகாமல் தடுக்கப்படுகிறது. ஊடகங்கள் துவங்கி அனைத்து அமைப்புகளுக்கும் இந்த தாராளமய கொள்கை அமலாக்கத்திற்கும், பெரும் மூலதனம் குவியலும் உடந்தையாக இருப்பதால், இந்தியாவில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் விவாதப் பொருளாகவில்லை.

 

நீதிமன்றங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்:

 

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பாக உள்ள இந்தியாவில், மேற்குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பல்வேறு வகையில், வழக்காக்கப்பட்டு, நீதிமன்ற விவாதமாகியுள்ளன. அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தண்டிக்கப்பட்டும் உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, லாலுபிரசாத் யாதவ், மதுகோடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுக்ராம், உள்ளிட்டோர், பிரபலங்களான, கேதன் தேசாய், கேதன் பரேக், ஹர்சத் மேத்தா, போன்றோர் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் வரையிலான பலரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி, ஆ. ராசா போன்றோர் அண்மையில் குற்றவாளிகள் அல்ல என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இவற்றில் ஒரு பகுதி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் மற்றொரு பகுதி விடுவிக்கப்பட்டும் உள்ளது. நீதித்துறை தன்மீதான நம்பகத்தன்மையைப் பாதுகாக்க சில சரியான நடவடிக்கைகளை எடுத்தாலும், அது தாராளமயக் கொள்கைக்கு  மாற்றான தீர்வாக அமையவில்லை. உதாரணத்திற்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, தனது தீர்ப்பில் பல்வேறு ஆவணங்கள் சி.பி.ஐ அதிகாரிகளால் முறையாக தாக்கல் செய்யப்பட வில்லை, எனக் குறிப்பிட்டு அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்துள்ளார். இது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. ஊழலை மறைப்பதானது   அதிகார வர்க்கம் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

 

மற்றொரு நிகழ்வும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. வோடாபோன் குறித்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் அவ்வாறே உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி அளவிலான தொகைக்கு உரிய வருமான வரி ஓரிரு ஆயிரம் கோடி ரூபாயை, வோடோபோன் நிறுவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதை தனது தரப்பு வழக்காக வருமான வரித்துறையினர் தாக்கல் செய்கின்றனர். ஆனால் நீதிமன்றம், வோடோபோன் என்ற பிரிட்டன் நிறுவனம், இந்திய எல்லைக்கு வெளியில் நின்று ஒப்பந்தம் செய்து கொண்டதால், அதற்குரிய வரியை இந்திய வருமான வரித்துறை கேட்பது நியாயமற்றது. ஒருவேளை தொடர்ந்து, அவ்வாறு வருமான வரி கேட்பது, அந்நிய நேரடி முதலீட்டிற்கு தடையாக இருக்கும் என சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமல்ல என்ன சட்ட விதியின் படி வரி கேட்டு வழக்கு தொடுத்தீர்கள் என நீதிமன்றம், கேட்ட கேள்விகள், முழுமையாக நீதி மன்றத்தின் மீதான நம்பிக்கையின்மைக்கு வழிவகுத்துள்ளன.

 

அதேபோல் நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டிய வரி சார்ந்த நீதிமன்ற வழக்கும் தீர்ப்பு நெடுநாளாக நீடிக்கிறது. 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான, தொகைக்கான வரி செலுத்தப்படாமல் ஏமாற்றப் பட்டுள்ளது. அதேநேரம் அதன் சந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இந்திய அரசினாலோ, வருமானவரி துறையினாலோ ஏற்படவில்லை. இந்த உண்மையே தாராளமயத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்த போதுமானதாகும். நீதித் துறையின் செயல்பாடு இந்த வகையில் தொடர்ந்து கார்ப்பரேட்களின் நலன் காத்து வருகிறது.

 

அண்ணா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ்:

 

ஊழல் ஒரு சமூக அவலம் என்பதை கம்யூனிஸ்டுகள் சொல்வதன் பொருள் கொள்கை மாற்றத்துடன் இணைந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, ஊடகங்கள் பிரமாண்ட முக்கியத்துவம் தந்தன. அதன் தொடர்ச்சியாக பெரும் மக்கள் திரள் பங்கெடுத்ததை முதன்மை செய்தியாக வெளியிட்டு வந்தன. அதேபோல் பாபா ராம்தேவ் என்ற யோகா குரு நடத்திய போராட்டங்களையும் தீவிரமாக ஊடகங்கள் ஒளிபரப்பின. மக்கள் திரள்திரளாக அழைத்து வரப்பட்டு ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகியது.

 

இன்று நிலையென்ன? என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அண்ணா ஹசாரே வாய் மூடி மௌனம் காப்பதும், ராம் தேவ் தன்னுடைய யோகா பயிற்சியை கார்ப்பரேட் மயமாக்கியிருப்பதும் அம்பலமாகி உள்ளது. குறிப்பாக ராம்தேவ்வினுடைய பதஞ்சலி இந்தியா முழுமைக்கும் அறிமுகமான, பெரும் நுகர்வு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகமாக உருமாறியுள்ளது. பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் தொழிலாக யோகாவின், பதஞ்சலி நிறுவனமும் வளர்ச்சி பெற்றுள்ளன..

 

ஊழல் எதிர்ப்பு ஒருவகையான கார்ப்பரேட் காண்ட்ராக்டாக மாறியதை ஊடகங்கள் அம்பலப்படுத்த வில்லை. பாஜக ஆட்சிக்கு முன், பாஜக ஆட்சிக்கு பின், என்ற தன்மையிலேயே, ஊழல் எதிர்ப்பில் ஊடகங்களின் பங்கு அமைந்துள்ளது.

 

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா:

 

காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, லோக்பால் சட்டம் இயற்றப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, நாடாளுமன்ற உறுப்பினரை அல்லது தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியை, அரசு ஊழியர் உள்ளிட்ட பலரை, மக்கள் திரும்பப் பெற முடியும், எனவே உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும், என அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்றோர் போராடினர். நெடிய போராட்டத்திற்கு பின், 2103 ல் இது சட்டமானது. ஆனால் சட்டம் இயற்றப் பட்ட பின்னர் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. மேற்படி சட்டத்தினால் எந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்? அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

 

ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட, ஒளிவு மறைவு இல்லாத, நாடுகளில் இந்தியா 95 ம் இடத்தில் உள்ளது. ஆனால் வளர்ச்சி குறித்த வாதம் அளவிற்கு அதிகமாகி வருகிறது. இருந்தாலும் மனிதவளக்குறியீடு அல்லது சமூக குற்றங்கள் குறித்த விவரங்கள் பட்டியலில் இந்தியா பின்தங்கி உள்ளது. இதுபற்றி ஆட்சியாளர்கள் சிறிதும், கவலை கொள்வதில்லை.

 

சி.பி.ஐ அல்லது வருமான வரித்துறையினரின் சோதனை இக்காலத்தில் மிக அதிகமாக நடந்துள்ளது. 2016 ம் ஆண்டில் சி.பி.ஐ நடத்திய சோதனைகளின் எண்ணிக்கை, 677 ஆகும் ஆனால் இதில் எத்தனை சோதனைகள் உரிய வகையில் வழக்காக்கப்பட்டு நடத்தப்படு வருகின்றன, என்பது கேள்விக்குறியதாகும். 2016 நவம்பர் 8 உயர் பணமதிப்பு செல்லாது அறிவிப்பை மோடி வெளியிட்ட, பின் 3100 காரணம் கோரும் அறிவிப்புகள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையும் சி.பி.ஐ செய்ததாக, சி.பி.ஐ இணையதளம் குறிப்பிடுகிறது. ஆனால் எத்தனை நோட்டீஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் இல்லை. எனவே பாஜக ஊழல் குறித்து பேசிய பேச்சுகளுக்கும், அதிகாரத்தைப் பயன் படுத்தி எடுத்த நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை, என்பது அப்பட்டமான உண்மை. மிகப் பெரும்பான்மையான சோதனைகள் பிராந்திய கட்சிகளை மிரட்டி தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதற்கே இத்தகைய சோதனைகள் பயன்பட்டுள்ளன.

 

அதுமட்டுமல்ல, இக்காலத்தில் பாஜக தொடர்புடைய கார்ப்பரேட் ஊழல்களும் அம்பலத்திற்கு வந்துள்ளன. அனைத்தும் சலுகைசார் முதலாளித்துவத்தின் பகுதியாகவே உள்ளது, என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாடு முதல், அனைத்து மாநாடுகளிலும் அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும், அரசியல் தீர்மானத்திலும், தொடர்ந்து இந்தியாவின் ஊழல் குறித்து விவாதித்து வருகிறது.

 

ஊழலுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மிக அதிகமாக நடத்தியது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளுமே ஆகும். அதேநேரத்தில் கொள்கை மாற்றத்துடன் ஊழல் ஒழிப்பும் தொடர்புடையது என்பதை வலியுறுத்தி வருகிறது. தாராளமயக் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், பெருமுதலாளிகளுக்கான சலுகைகள் முடிவுக்கு வராது என்பதை சுட்டிக்காட்டுகிறது. சலுகைகள் வழங்கப்படுவதும், பொது சொத்துகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான வசதியை உருவாக்கித் தருவதுமாகவே அரசுகளின் பணியாக உள்ளது. என்பதை அம்பலப்படுத்த படுத்துவதும் கம்யூனிஸ்டுகளே. கார்ப்பரேட் மற்றும் அரசுகளின் கூட்டு கொள்ளை என்பதாகவே தனது விமர்சனத்தை மார்க்சிஸ்ட் கட்சி மத்திய ஆட்சியாளர்கள் மீது முன் வைத்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே, இடதுசாரிகள் எதிர்ப்பை திட்டமிட்டு ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ, வகுப்புவாத சக்திகள் செய்துவருகின்றன.

 

லோக் ஆயுக்தா சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என மத்திய அரசின் சட்டம் தெளிவு படுத்தியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற வேண்டும், என்பதை வலியுறுத்தி வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் நீதி மன்றம் மாநில அரசிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் நிறுத்தியுள்ளது. பல மாதங்கள் கடந்த நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றைய தமிழக அரசு, அதிகாரம் அற்றதாக இருந்தாலும், அதன் அதிகாரத்தை அனைத்து பிரிவுகளிலும் வலுவாக செலுத்த முடிவதற்கு காரணம், தாராளமயமாக்கலின், கார்ப்பரேட் செல்வாக்கு ஆகும்.

 

எனவே ஊழல் எதிர்ப்பு என்பது ஒற்றை வரி முழக்கமல்ல, கொள்கையை மாற்ற, சலுகையின் திசையை உழைப்பாளிகளின் உரிமைக்கான திசையாக மாற்ற, வேண்டிய கொள்கை சார்ந்து மக்களைத் திரட்டும் அவசியம் உள்ளது.

 

ஒரு கருத்து

Please start yout discussion here ...