காலனியாதிக்க விடுதலையும் சுயசார்புத் தன்மையும்

537
0
SHARE

பிரபாத் பட்நாயக்

தமிழில் : சி. கிருத்திகா பிரபா

சுயசார்புத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தைக் குறிக்கும். வர்த்தகத்திற்கு இடமில்லை என்பதல்ல இதன் பொருள். உதாரணத்திற்கு இன்று சீன நாட்டின் மொத்த உற்பத்தியில், வர்த்தகத்தில் அதிக விகிதம் கொண்டுள்ளது. அதற்காக அதன் பொருளாதாரம் சுயசார்பற்றது எனக் கூற இயலாது. மாறாக, பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும் வகையில் உற்பத்திக்கான கட்டமைப்பு பெற்று இருப்பதையே அது குறிக்கும். சுயசார்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதற்கு, உற்பத்திக்கான அமைப்பு முறையும் காலத்திற்கேற்ப மாறிவர வேண்டும். தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்த சுயசார்புத் தன்மையை ஈட்டும் முயற்சியாக அப்போதிருந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு, உற்பத்தி அமைப்பு முறையில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை ஏற்படுத்தியது.

முதல் நிகழ்வானது, 2வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, தொழில்மயமாக்கலை மையப்படுத்தி, குறிப்பாக அடிப்படை மற்றும் பிரதானப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான தூண்டுகோலாக அமைந்தது. நீண்டகால காலனியாத்திக் கத்திலிருந்து விடுதலை பெற்றபோது, ஒரு காலனியப் பொருளாதாரம் உருவாக்கக் கூடிய உற்பத்தி அமைப்பையே இந்தியா பெற்றிருந்தது. அது பெருமளவு விவசாயத்தைச் சார்ந்த பொருளாதாரமாகவே இருந்தது. தொழில் என்றால் அது துணிகள் உற்பத்தியாக, அதாவது முதன்மை விவசாயப் பொருட்களான சணல், பருத்தியை பயன்படுத்துவதாகவே இருந்தது. குறைந்த அளவு எஃகு உற்பத்தியும் இருந்தது. போருக்கு இடைப்பட்டக் காலங்களில் சர்க்கரை மற்றும் சிமெண்ட் ஆலைகள் உருவாகின. போர்க்காலங்களில் இறக்குமதி நடைபெறாததால், பொறியியல் மற்றும் இரசாயன ஆலைகள் விரிவுபடுத்தப்பட்டன. ஆனால், இதற்கான கட்டமைப்பு ஆரம்பநிலையிலேயே இருந்ததனால், அதிநவீன தொழில் நுட்பத்தினாலான பொருட்கள் அனைத்தையும் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஏற்றுமதி பொருட்களான தேயிலை, சணல் மற்றும் பருத்தித்துணிகள் போன்றவை அதிக அளவு ஏற்றுமதி ஆகாத காரணத்தினால், அதிவேக வளர்ச்சி இருந்தும் அதற்கான நவீன தொழிற் தயாரிப்புகளை அதிக அளவில் இறக்குமதி செய்ய இயலாத சூழ்நிலை நிலவியது.

நவீனமயமான உற்பத்தி
மேற்கூறிய உற்பத்திக் கட்டமைப்பிலிருந்து உருவான பொருட்கள் சந்தைக்கு வருவது இயல்பாக அமையாததினால், இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதே, பேராசிரியர் பி.சி. மகாலனோமிஸ் தலைமையிலான 2வது ஐந்தாண்டுத் திட்டத்தின் குறிக்கோளாக ஆனது. இதனை பல பொருளாதார நிபுணர்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய அமைப்புகள், பலவாறாக விமர்சித்தன. உள்நாட்டு தாரிப்புகளை தேவையற்றதாக ஆக்கும் வர்த்தக முறைகளைப் பற்றித் தெரியாமல் உள்ளது அவரின் அறியாமையையே காட்டுகிறது என்றும் விமர்சித்தனர். ஆனால் அவரது இந்த நவீனத் திட்டமானது, சர்வதேச வர்த்தகத்தில் தீவிரப்பங்கேற்கும் எந்தப் பொருளாதாரமும் தனது உற்பத்தித் திறனையே பெரிதும் சார்ந்துள்ளது என்ற ஆழ்ந்த அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆகையால் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவது வர்த்தகத்தை மறுப்பதற்கு அல்ல, மாறாக அதனைப் பெருக்குவதற்குத்தான் என்பதும் தெரிகிறது.

இந்த வாதம் சரியானதாக இருந்தபோதிலும், இதனது அடிப்படை எதுவென்றால், முதலீடு செய்ய வேண்டிய அவசிய மின்றி, விவசாயத் துறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களாலேயே விவசாயப் பொருட்களின், குறிப்பாக உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதும், அம்முதலீட்டை எந்தத் தடையுமில்லாமல் தொழில் தளத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம் என்பதுமே ஆகும். நிலச்சீர் திருத்தங்கள் நிறுவனச் சீர்திருத்தங்களின் அடிப்படையாக இருந்தது. நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அவற்றால் நிலங்கள் ஒருமுனைப்படுத்தப் படுவதை தடுக்க இயலவில்லை. இச்சட்டங்கள், நிலப்பிரபுக்களை பெருமுதலாளிகளாகவும், பெரும்பான்மை நிலங்களின் உரிமையாளர்களாகவும் ஆக்கவே பயன்பட்டன. ‘உழுபவனுக்கே நிலம்’ என்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. இதன் விளைவாக, விளை நிலங்களை அதிகரிக்கச் செய்த முயற்சிகளும், கிடைத்த இடங்களில் பாசன வசதி அமைக்க முடிந்தவற்றில் பல்வகை விளைத்தல் முறைகளைக் கையாண்டும், பலனளிக்காத காரணத்தால் அறுபதுகளில் நாடு கடுமையான உணவு நெருக்கடியைச் சந்தித்தது; அதன் காரணமாக ஏகாதிபத் தியத்தைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையும் உருவானது.

பசுமைப்புரட்சியும் எண்ணெய் உற்பத்தியும்
சுயசார்புத் தன்மைக்கான உற்பத்தி கட்டமைப்பு மாற்றத்தில் நடந்த இரண்டாம் நிகழ்வானது, “பசுமைப் புரட்சி” என்ற ரூபத்தில் வந்தது. இது இந்திய விவசாயத்தில் முதலாளித்துவம் பெருகும் முறையை ஒருங்கிணைப்பதாகவும், இந்தியக் கிராமங்களில் நினைத்தற்கரிய பெரும் மாற்றங்களை விளைவிப்ப தாகவும் இருந்தது. பொருளாதாரமானது, பெருகி வருகின்ற உணவுத் தேவையை தனது உள்நாட்டு உற்பத்தியின் வாயிலாகவே பூர்த்தி செய்ததின் விளைவாக, பசுமைப்புரட்சி உணவு தானியத்தில் இந்தியாவை ‘தன்னிறைவு’ ஆக்கிய தென்றாலும், பெரும்பான்மை மக்களின் வறுமை நிலையையும், அவர்கள் கைவசமிருந்த வாங்கும் திறனையும் வைத்துப் பார்த்தால், ‘தன்னிறைவு’ என்பது கட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே அமைந்திருப்பது தெரியும்.
உலகத்தின் வருவாயானது, வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலிருந்து எண்ணெய் வளம்மிக்க மத்தியகிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்தியப் பொருட்களையும் சேவைகளையுமே இறக்குமதி செய்ய விரும்புகின்ற மத்திய கிழக்கு நாடுகளின் மனப்பாங்கினால், எழுபதுகளில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியால் இந்தியாவின் இறக்குமதி பட்டியல் அதிகரித்தபோதும், அந்நியச் செலவாணி வருவாய்க்கு அது ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. இருப்பினும், இரண்டாவது எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, இந்திய அரசானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கக் கூடிய, அரசியல் உறுதியோடு தவிர்த்திருக்கக் கூடிய, நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக் கடனை உலக வங்கியிடமிருந்து வாங்கியது. இத்தகைய சூழலில்தான், உற்பத்திக்கட்டமைப்பு மாற்றத்தின் மூன்றாம் நிகழ்வானது, “பாம்பே ஹையை” உருவாக்கியதில் ஏற்பட்டது. இது, இந்தியாவின் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி, பொருளா தாரத்திற்கு பெரிதும் தேவைப்பட்ட தற்காலிக விடுதலையைத் தந்தது.

உற்பத்திக் கட்டமைப்பு மாற்றத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும், அந்த மாநில அரசு மற்றும் பொதுத்துறைகளின் முழுப்பங்களிப்பினாலேயே சாத்தியமானது. நீண்டகாத்திருப்புக் காலங்கள், மொத்தமான முதலீடு, அதிக ரிஸ்க் காரணமாக அடிப்படை மற்றும் முதன்மைப் பொருட்கள் சார்ந்த தொழில் களில் நுழைய தனியார் துறைகள் தயங்கியபோது, அத்தொழில்களில் பொதுத்துறைப் பிரிவுகள் அமைத்ததன் மூலம், மகாலனோமிஸின் திட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகச் சந்தையிலிருந்து தொழில் நுட்பத்தைப் பெற்று அதன் மூலம் பொதுத்துறைப் பிரிவுகளை அமைத்து, உற்பத்தியைப் பெருக்கி சுயசார்புத் தன்மை என்ற இலக்கை அடைவது என்பதல்ல நடந்தது; மாறாக, பொருளாதாரத்தின் தொழில் நுட்பத் திறனைப் பெருக்க பொதுத்துறையே அடிப்படைக் கருவி ஆயிற்று. எந்தத் துறையாக இருப்பினும், அந்தத் துறையின் தொழில் நுட்பப் பயன்பாடு பற்றிய அறிவைப் பெற்று, தொழில் நுட்பத்தில் இந்தியா சுயசார்புத் தன்மை அடைந்தது; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிதியுதவி, அரசின் நீடித்த சேவைகள், அரசு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் அரசின் உறுதிப்படுத்தப்பட்ட விலைகளில் கொள்முதல் மற்றும் ஆதரவு போன்றவை.

பொதுத்துறையின் மீதான ஊசலாட்டம்
தொழில் நுட்பத்தில் இந்தியா அடைந்த சுயசார்புத் தன்மையைப் பொறுக்காத வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் அதன் பாதையில் பல தடைகளை உருவாக்க முயற்சித்து, பல பரிவுகளில் வெற்றியும் கண்டன. ஒரு நாளைக்கு 850 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளைச் சொந்தமாக அமைக்கும் திறன் இந்தியா பெற்றிருந்தபோதும், 1300 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகள் அமைக்க நிர்பந்தித்து, ‘தால்-லைஷெட்’, ‘ஹசீரா’ ஆகிய ஆலைகள் அமைக்கக் கடன் வழங்கி, உரத்துறையில் அயல்நாட்டு உற்பத்தியாளர்கள் நுழைய, உலக வங்கி வழிவகை செய்தது. அதன் குறிக்கோள் அந்நிய உற்பத்தியாளர்களை பதவியில் ஏற்றி உள்நாட்டு பொதுத்துறை பிரிவுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதே என்பது, பொருளாதார அளவுகோளுக்கு ஏற்பவே இந்த நிர்பந்தங்கள் என்ற அதனது அடிப்படையில்லாத வாதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. வளர்ந்த நாடுகளின் கடன் உதவி மற்றும் அந்நிய தொழிற் கூடங்கள் இறக்குமதி என்ற இரு தரப்பு “உதவிகளை” நியாயப்படுத்த, ‘ரூபாய் கட்டுப்பாடு’ என்ற பொய்யான வாதத்தின் மூலம், மின் உற்பத்தியில் நுழைந்து, பொதுத்துறை ‘பெல்’லிற்கு இடையூறு ஏற்படுத்தின. சுயசார்புத்தன்மை அடைவதற்கும்,

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரணாகவும், பொதுத்துறைகளை உருவாக்கிய நிலப்பிரபுத்துவ அரசு, ஒரு கட்டத்தில், பொதுத்துறை மீதான ஏகாதிபத்தியதின் தாக்குத லாலும், அதன் வளர்ச்சிக்கான பாதைகள் அடைக்கப்பட்ட தாலும், தடுமாற்றத்தை அடைந்தது. ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்திற்காகவும், புழ்ச்சிக்காகவும் நிலப்பிரபுத்துவ அரசு, பொதுத்துறை நலன்களை எவ்வாறு உதறித்தள்ளுகிறது என்பதற்கு பெல் – சீமன்ஸ் ஒப்ந்தம் முன்னுதாரணமாக அமைந்தது.

அரசின் இந்த ஊசலாட்டம், அதன் முழுமையான கொள்கை மாற்றத்திற்கான, அதாவது புதிய தாராளமயக் கொள்கை சுவீகரிப்பிற்கும், சுயசார்புத்தன்மை என்ற இலக்கை உதறுவதற்கும், ஆன முன்னுரையாக இருந்தது. புதிய தாராளமயக் கொள்கையானது, புதிய வர்த்தக் கொள்ளையி லிருந்து பல விதங்களில் மாறுபட்டு உள்ளது. வர்த்தக பொருளாதாரமானது, உலகச் சந்தையைக் கைப்பற்ற முயற்சிகள் செய்தாலும், தனது உள்நாட்டுச் சந்தையை அந்நியர்க்கு விட்டுக் கொடுக்காது. வரியோடு கூடிய அல்லது வரியில்லாத தடைவேலிகள் மூலமாகவோ, வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுள்ள பரிமாற்ற விகிதத்தின் மூலமாகவோ அது தனது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்துக்கொண்டு, தேன் மூலம் கிடைக்கின்ற லாபத்தை அந்நிய நாட்டுச் சந்தைகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்திற்குப் பயன்படுத்தியது. நீண்டகாலமாகவும், வெற்றிகரமாகவும் கிழக்குஆசியா பின்பற்றி வரும் இக்கொள்கை முறையே, “ஏற்றுமதி தந்த வளர்ச்சி” என அழைக்கப்படுகிறது. இந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு, நாட்டின் பணவரத்து மீதான கட்டுப்பாடு மிக அவசியம்; அப்படிக் கட்டுப்பாடு இல்லாதபோது, அந்நாட்டின் பொருளா தாரக் கொள்கையானது உலகமய நிதியின் விருப்பத்திற்கேற்ப ஆட வேண்டியுள்ளதால், நாட்டின் சுதந்திரம் பலவகையிலும் பாதிக்கப்படுகிறது. எந்தப் பொருளதாரத்தில், உலகமய நிதி மற்றும் சர்வதேச முதலீட்டின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டு, அதனுடன் நட்புப் பாராட்டும் மேல்தட்டு மக்கள் உருவாக்கப் படுகிறார்களோ, அந்தப் பொருளாதாரம் பின்பற்றக் கூடிய கொள்கையே புதிய தாராளமயம் ஆகும்.

உலகமயமாதல்
இந்தியா பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையானது, சங்கிலித் தொடர்போல பல பின்விளைவுகளைத் தன்னுடன் வைத்துள்ளது. புதிய தாராளமயத்தைத் தொடர்வது ‘வர்த்தகத் தாராளமயம்’ – அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை அழித்து விட, அதைத் தொடர்வது பொதுத்துறைகளைத் தனியார்மயம் ஆக்குதல் – அது அரசின் நலன், முதலீடு மற்றும் செலவுக்கு வரையறை விதித்து உள்நாட்டுச் சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுகிறது. இந்தியாவின் ஏகபோக நடுத்தர வர்க்கமானது, தனது சொந்த நலனை தலைநகரின் நலனோடு முரண்பட்டதாகப் பார்க்காமல் அதனுடன் ஒத்ததாகக் கருதுவதையே, இப்புதிய தாராளமயக் கொள்கை பிரதிபலிக்கிறது. அதுவும் இப்போது “உலக மயமாகிவிட்டது.”
‘சுயசார்புத்தன்மை’ என்ற இலக்கு கைவிடப்பட்டதினால், பழைய அனுபவங்கள் மூலம் கிடைத்த தெளிவுகளில் குறிப்பிடத்தகுந்த சிலவான – வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும், அடைக்க வேண்டிய மீதமுள்ள கடன் திருப்பிச் செலுத்த இயலாமல் போகும், இந்தியாவின் முதலீட்டைப் பெருநகரங்களின் முதலீடு நசுக்கிவிடுதல் – போன்றவைகள் மறுபடியும் வந்துவிடப்போவதில்லை; ஆனால், ‘ஒரே அரசுக்குட்பட்ட மக்கள்’ என்ற கருத்து அர்த்தமில்லாததாகி விட்டதையே குறிக்கிறது.

ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பொருளாதாரத்தில், பல்வேறு பிரிவுகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்; ஒரு முழுமையான ஆனால், தேசிய முதலாளித்துவ முறையின் எல்லைக்குட்பட்ட, பொருளாதரத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய, திட்டமிட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும் அரசு இருக்கும்; இத்தகைய பொருளாதாரத் திற்கு மாற்றாக ஒரு பிளவுபட்ட தேசியப் பொருளாதாரம் தற்போது வந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அயல்நாடுகளில் சொத்து குவித்தும், உலகமயத்திட்டங்களை விரிவுபடுத்தியும், மற்றொரு பிரிவின ரான விவசாயிகளும் சிறு வணிகர்களும், உயிர் வாழ்வதற்கு வழி அறியாத நிலையில் உள்ளனர். விவசாயத்தை விரிவுபடுத்து வதற்கு ஆன வழி, பன்னாட்டு நிறுவனங்களை இங்கே தருவிப்பதுதான் என்று இந்த அரசு கூறுவதிலிருந்து, அது எந்த அளவிற்கு அதன் இலக்கான “தேசியப் பொருளதாரத்தின் சுயசார்புத் தன்மையை” விட்டு விலகி வந்துள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்