ஜூன் (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …

926
0
SHARE

அமெரிக்க சமூகமும்,உலகமும் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில்  அமெரிக்க  அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். ஆனால்,நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக, அடுத்தடுத்து, அவர் எடுத்து வரும் பல நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக வெப்பமயமாதல் பிரச்னையை சிக்கலாக்கி, உலக இருப்புக்கு ஆபத்தை டிரம்ப் அரசு ஏற்படுத்தி வருகிறது.மக்களின் நலனை புறக்கணித்து,பெரும் கார்ப்பரேட் நிறுவங்களின் மூலதன வேட்டைக்கு டிரம்ப் அரசு துணை நிற்கிறது.

அவரது ஆட்சி நூறு நாட்கள் முடிவடைவதற்குள் அமெரிக்க மக்கள் தங்களது அதிபர் தேர்வு சரியானதல்ல என்று உணரத் துவங்கினர். ஜூன் இதழில் தோழர் விஜயன் உலக வெப்பமயமாதல் பிரச்னையில் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைளின் விளைவுகளை விளக்கியுள்ளார்.

இந்தியாவில் மூன்றாண்டு நிறைவுற்ற மோடி அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.மாடு விற்பனைக்கு மோடி கொண்டு வந்த புதிய விதிகளை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றுபட்ட  போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிலர் இப்பிரச்னையில் கருத்தியல் தளத்தில் மட்டும் போராடுவது போதுமானதல்ல என்கின்றனர்.மாட்டிறைச்சி விற்பனையை கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதித்து, விவசாயிகளுக்கு கால்நடை மூலம் கிடைக்கும் சொற்ப வாழ்வாதாரத்தையும் பறிக்கும் முயற்சி என்கிற கோணத்திலிருந்து இப்பிரச்னையை அணுக வேண்டுமென்று அவர்கள் எழுதுகின்றனர்.

உண்மை என்னவென்றால்,மக்களின் பொருளாதார வாழ்வு அழிப்பு  என்பது ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் பா.ஜ.க அமைப்புக்களின்  நடவடிக்கைகள் அனைத்திலும் இருக்கிறது.

அவர்களின்    வரலாறு முழவதிலும் இதனைக் காண முடியும். அவர்களது வகுப்புவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் பொருளாதார பரிணாமம்  உண்டு.எனவே கருத்தியல் தளத்தில் வகுப்புவாதத்தையும்,பொருளியல் பாதிப்புக்களை முன்னிறுத்தி களப்போராட்டங்களை நடத்தி மக்களைத் திரட்டுவதும் அவசியமாகிறது.

இந்த இதழில் தோழர் வாசுகி முத்தலாக்க பிரச்னை குறித்து வகுப்புவாதம்,பெண்ணுரிமை உள்ளிட்ட கோணங்களிலிருந்து ஆராய்ந்துள்ளார்.

இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை பிரகடனம் ஒரு இருண்ட அத்தியாயம். மீண்டும் இது நிகழாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே தோழர் பிரகாஷ் காரட் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளோம் வி.ப.கணேசன் மொழிபெயர்த்துள்ளார்.

மே தின தியாகிகள் குறித்து எராளமான வரலாற்று விவரங்களுடன் தோழர் சுகுமால் சென் எழுதிய கட்டுரையை சிசுபாலன் மொழிபெயர்த்துள்ளார். இணையத்தில் முழுக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

சிங்காரவேலர் வரலாற்றின் அறியாத பக்கங்களைக் குறித்து பகத்சிங் எழுதியுள்ளார்.

கட்சி திட்ட தொடர், சங்கப் பரிவாரங்கள் அம்பேத்கரை ‘ஹைஜாக்’ செய்கிற மோசடித்தனத்தை விளக்கும் கேள்வி-பதில் பகுதி இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

இணைய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் இதழின் சந்தா உயர்ந்துள்ளது. இதனால் வாசிப்பு பரப்பும் உயரும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. வாசகர்களின் ஆதரவு தொடரட்டும்.

-ஆசிரியர் குழு.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்