தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு !

3740
0
SHARE

வணக்கம். இனி நீங்கள் மார்க்சிஸ்ட் கட்டுரைகளை கேட்கவும் முடியும்.

எழுத்தறிவுக் குறைபாடுகளோ, பார்வைத் திறன் சிக்கலோ, பயண நேர களைப்போ, இனி வாசிப்புக்கு ஒரு தடையில்லை. மார்க்சிஸ்ட் இதழின் கட்டுரைகளின் கடினம் கருதி தயக்கம் இருப்பினும் கூட, இனி வாசிப்புக்கு உதவியாக ஒலித்துணை இருக்கப் போகிறது.

தமிழ்ப் பரப்பில் மார்க்சிய தத்துவம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனைகளைத் தாங்கி வெளிவரும் ஏடு, மார்க்சிஸ்ட் இதழாகும். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகி, வெள்ளிவிழாக் கண்டுள்ள மார்க்சிஸ்ட். தனது பயணத்தில், நவீன வசதிகளை ஈர்த்துக் கொண்டு புதிய புதிய வாசகர்களை நாடி வருகிறது.

செயலி, இணையதளம் மற்றும் அச்சு ஊடகம் வழியே மட்டுமல்ல வெவ்வேறு புது வாய்ப்புகள் தேடி, அதிலெல்லாம் மார்க்சிய வாசிப்பை உங்களிடம் சேர்க்கவே உழைக்கிறோம்.

அச்சுப் பிரதி ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரம் என்ற எண்ணிக்கையைக் கடந்து முன்னேறிவருகிறது.

அதே சமயம் செயலியும், இணையமும் மேம்படுத்தப்படுகிறது. ஒலி வடிவில் கட்டுரைகளை கொடுக்க டி டி எஸ் தொழில்நுட்பமும், மனிதக் குரலை பதிவு செய்கிற தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன. கணிணி வழியாக டி டி எஸ் நுட்ப மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீனிவாசன், பத்மகுமார், மோகனம், ராமன், நாகராஜன், ஹேமா , மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ் சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இவ்வசதியை மேலும் மேம்படுத்த கைகோர்க்க விரும்பும் எவரும் எங்களோடு இணைந்து செயல்பட இரு கரம் சேர்த்து அழைக்கிறோம்.

ஜனவரி மாதம் 2018 முதல் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் தமிழில், ஒலி வடிவிலும் கிடைக்கும். இனி வரும் நாட்களில் தன்னார்வளர் பங்கேற்பு மூலம் இவ்வசதி புத்தக வாசிப்புக்கும் வளர்த்தெடுக்கப்படும்.

மார்க்சிஸ்ட் இதழின் புதிய முயற்சிகளை ஆதரித்து, ஊக்கப்படுத்தும் வாசகர்களுக்கு நன்றி. ஆண்டு சந்தா சேர்ப்பு மற்றும் வாசகர் வட்ட அமர்வுகளை இடைவிடாமல் நடத்தும் உங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வேண்டுகிறோம். அதன் அடித்தளத்தில்தான் மார்க்சிஸ்ட் இதழின் வெற்றி அமைந்துள்ளது.

கூடுதலாக ஒரு இனிப்பான செய்தி, மார்க்சிஸ்ட் இதழின் செயலியில் இனிமேல் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. செயலிக்கு உள்ளாகவே விவாதிக்க வசதி உள்ளது. உடனே, புதிய பொழிவில் மார்க்சிஸ்ட் செயலியை தரவிறக்குங்கள்.

நன்றி, வணக்கம்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...