சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

2159
1
SHARE

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

இன்றைய உலகில் பொருளாதார வளர்ச்சி பற்றிய விவாதங்களில் மீண்டும் மீண்டும் முன்னுக்கு வரும் ஒரு கேள்வி நிகழும் வளர்ச்சி சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கும் எனபதாகும். சூழல் பற்றிய அக்கறை பல கோணங்களில் இருந்து எழலாம். ஒருமட்டத்தில் உலகம் தழுவிய அளவில் சூழல் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. உலக ஐக்கிய நாடுகள் முன்முயற்சியில் 1972 இல் ஸ்வீடன் நாட்டின் ஸ்டோக்ஹோம் நகரில் நடந்த மானுட சுற்று சூழல் மாநாடு, 1992 இல் பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு, 2012 இல் மீண்டும் ரியோவில்  நடைபெற்ற சுற்று சூழல் மாநாடு என்று தொடர்ந்து பன்னாட்டு அரங்குகளிலும் அனைத்து நாடுகளிலும் அறிஞர்கள் மத்தியிலும் உலக அளவில் சுற்று சூழலுக்கும் வளர்ச்சிக்கும் உள்ள உறவுகள், பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகள் பேசப்பட்டு வந்துள்ளன. உள்ளூர் மட்டத்திலும் வளர்ச்சி என்ற பெயரில் ஆளும் வர்க்க அரசுகள் முன்வைக்கும்  திட்டங்கள் தொடர்பாகவும் சுற்று சூழல் தொடர்பான கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. அண்மைக்காலங்களில் தொழில் வளர்ச்சி திட்டங்கள் அமலாக்கப்படும் பொழுது சூழல் மாசுபடுவதும் மக்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு கேடு விளைவிப்பதும் திட்டங்களால் மக்கள் புலம் பெயர நேரிடும்பொழுது உரிய மாற்று ஏற்பாடுகள் இன்றி மக்கள் வஞ்சிக்கப்படுவதும் என்று பல எதிர்விளைவுகள் சமகால சமூகத்தில் முக்கிய பிரச்சினைகளாக முன்வந்துள்ளன. சுற்று சூழல் நலனுக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கும் முரண்கள் எழும்பொழுது பொதுவான தீர்வு என்று எதையும் முன்வைத்துவிட முடியாது. மாறாக, அவ்வாறு எழுகின்ற ஒவ்வொரு பிரச்சினையையும் அதன் பிரத்யேக தன்மையிலிருந்தும் ஸ்தூலமான, திட்டவட்டமான விவரங்களில் இருந்தும் தான் துவங்கி பயணித்து தீர்வு காண இயலும்.

இன்றைக்கு அப்பட்டமான மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் சூழலை முற்றிலும் கெடுத்து மக்களின் வாழ்வை சீர்குலைத்து விலைமதிப்பற்ற பல மனித உயிர்களைக் குடித்துள்ளதற்கும் இலக்கணமாக ஆகியுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை பிரச்சினை, காவிரிப் படுகையில் பெட்ரோகெமிகல் மண்டலம் போன்ற சவால்கள் மக்கள் மத்தியில் தொழில் வளர்ச்சி என்றாலே சூழல்கேடுகள் தொடர்பான பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.  நமது அனுபவம் என்ன? இதுவரை வந்துள்ள மத்திய மாநில அரசுகள்  பெரும் தொழில்/பாசன திட்டங்களை அறிவிப்பதும், அதற்காக நிலங்களை கையகப்படுத்துவதும் நிலம், நீர், ஆற்றல் உள்ளிட்ட வளங்களை பன்னாட்டு, இந்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு மலிவாக அளிப்பதும் ஒருபுறம்; மறுபுறத்தில்,  ஏராளமான மக்கள் இதனால் புலம் பெயர நேரிடுவது அல்லது உருவாக்கப்படும் தொழில்களால் மாசுக்கும் சூழல் கேடுக்கும் உள்ளாவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் அரசுகள் பாதிக்கப்பட்டோருக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாத நிலை. எனவே, இயல்பாகவே புதிய வளர்ச்சி திட்டங்கள் வேலை வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்த்த காலம் போய் புதிய திட்டங்களால் பாதிப்புகளே அதிகம் என்ற பார்வை இன்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மக்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது தான். அதே சமயம், நம்மிடையே உலா வரும் சுற்று சூழல் அடிப்படைவாதிகளும் தங்கள் பங்கிற்கு பல நேரங்களில் உண்மைக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் முற்றிலும் புறம்பான வகையில் சூழல் – வளர்ச்சி முரண்கள் பற்றிய தவறான கருத்துக்களையும் பார்வைகளையும் முன்வைக்கின்றனர் என்பதும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

மேலே முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில், நாம் இக்கட்டுரையில் சூழல் – வளர்ச்சி ஒற்றுமை / முரண்கள் பற்றிய மார்க்சீய புரிதல் என்ன என்று பரிசீலிப்போம்.

வளர்ச்சி – சூழல்  பற்றிய மார்க்சீயப் பார்வை

மார்க்சீயம் மானுட வரலாற்று வளர்ச்சியை இயக்கவியல்–வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்கிறது. இதன் மையப்புள்ளி இயற்கைக்கும் மானுட உயிரினத்திற்கும் இடையேயான ஒற்றுமையும் முரணும் ஒருசேர இணைந்துள்ள உறவும் உணர்வுபூர்வமான, நோக்கம்சார் மானுட உழைப்பும்தான்.

வரலாற்றில் எந்த ஒரு மானுட சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த சமூகம் இயற்கையோடு உறவு கொள்ளாமல் வாழமுடியாது, தன்னை மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியாது. மனித உழைப்பு இன்றியும் இது சாத்தியமில்லை. மானுட சமூகத்தின் உற்பத்திக்கு உழைப்பு தந்தை என்றால், இயற்கை தாய் என்றே கொள்ள வேண்டும். ஆகவே இயற்கைக்கும் மானுட சமூகத்திற்கும் உள்ள உறவில் ஒற்றுமை என்பது ஒரு முக்கிய அம்சம். அதேபோல், இயற்கையின் ஒரு பகுதியாக உள்ள மானுட உயிரினம் தன்னை சமூகமாக மறுஉற்பத்தி செய்துகொள்கையில் இயற்கையை மாற்றுவது தவிர்க்க இயலாதது. இவ்வியக்கத்தில் மானுடமும் மாறுகிறது என்பதும் தவிர்க்க முடியாதது. இவ்வாறு இயற்கைக்கும் மானுட சமூகத்திற்குமான உறவு ஒற்றுமை, முரண் இரண்டையும் தன்னகத்தே கொண்டது. மிக முக்கியமாக, மாறாத இயற்கை, மாறாத மானுடம் என்ற இரண்டுமே சாத்தியமில்லை. புனைவுகளாகவே இருக்க முடியும்! ஏதோ மாறாத, அப்பழுக்கற்ற புனிதமான இயற்கை என்று ஒன்று இருப்பதுபோலவும், அதனை அழிப்பது மானுடத்தின் நடவடிக்கைகள்தான் என்றும் கற்பனை செய்துகொள்வது சூழல் அடிப்படைவாதிகளின் அடிப்படைக் கோளாறு. இந்த தவறான புரிதலில் இருந்து வளர்ச்சிக்கும் சூழலுக்கும் தீர்க்க இயலாத பகைமை முரண்கள் இருப்பதாகவே சூழல் அடிப்படைவாதிகள் கருதுகின்றனர். இப்படி சொல்வதன் பொருள்  மானுட சமூக பொருளாதார வளர்ச்சி இயற்கையின் மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பது அல்ல. ஆனால் மானுடம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டால் புனிதமான, ‘துவக்க’ நிலையில் இருந்த இயற்கை ஏற்படும் என்றோ, இயற்கையில் மாற்றங்களே ஏற்படாது என்றோ கருதுவது அபத்தமாகும்.

வரலாற்று வளர்ச்சியில் மானுடம்  தனது சமூக உழைப்பால்  இயற்கை பற்றி மேலும் மேலும் கற்றுக்கொண்டு உற்பத்தி சக்திகளை வளர்த்துக் கொள்கிறது. இதில் ஒரு கட்டத்தில் உருவாகும் உபரி உற்பத்தி, ஒரு சிலர் (ஆளும் வர்க்கம்) பிறர் (ஆளப்படும் உழைப்பாளிகள்) உழைப்பில் கிடைக்கும் உபரியை வைத்து வாழலாம் என்ற  வர்க்கச் சுரண்டலை சாத்தியமாக்குகிறது. வர்க்க சமுதாயங்களில்  முன்னேறிய அமைப்பாக முதலாளித்துவம் உருவாகிறது. இந்த வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இருவகை உறவுகளை மார்க்ஸ் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார். ஒரு மானுட சமூகத்திற்கும் இயற்கைக்கும் நிலவும் உறவு எந்த அளவிற்கு அந்த மானுட சமூகம் இயற்கையின் விதிகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு அதனை தனது மறு உற்பத்தியில் பயன்படுத்திக்கொள்கிறது என்ற அம்சத்தைக் குறிப்பது தான் ஒரு சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிநிலை. உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சி மானுட வரலாற்றின் தவிர்க்க முடியாத அம்சம். எக்காலத்திலும் சமூகத்தின்  வாயிலாகவே உற்பத்தி நடைபெறுவதால், உற்பத்திசக்திகள் மேலும் மேலும் வளரும் பொழுது, உற்பத்திக்கான சமூக ஏற்பாடுகளில் – சமூகத்தின் உற்பத்திசார் உறவுகளில் – மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. இவ்வகை மாற்றங்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இதில் இன்று நாம் வாழும் உலகில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற உண்மையில் இருந்துதான் சமகாலத்தில் மானுடத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவு பற்றிய நமது புரிதல் துவங்க வேண்டும்.

முதலாளித்துவமும் இயற்கையும்

மார்க்சும் எங்கல்சும் தங்கள் படைப்புகள் அனைத்திலும் லாப வெறி அடிப்படையில் செயல்படும் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு எப்படி,  மானுட உழைப்பாளிகளை மட்டுமல்ல, இயற்கையையும் அழிக்கும் தன்மை கொண்டது என்று விளக்கியுள்ளனர்.

இயற்கை மற்றும் சூழல் பற்றிய மார்க்சிஸ்ட் அணுகுமுறையை விமர்சனம் செய்யும் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலும் மூலதனம் நூலில் ஆங்காங்கும்  உற்பத்தி சக்திகளின் மிக வேகமான வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று ரீதியான பங்கை மார்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளதை  திரித்து மார்க்சிஸ்டுகளுக்கு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே முக்கியம், இயற்கை அழிவதை பற்றியோ, நிலைத்தகு வளர்ச்சி குறித்தோ கவலை இல்லை  என்று விமர்சனம் செய்கின்றனர். இந்த தவறான புரிதலுக்கு நேர் எதிராக, முதலாளித்துவத்தில் நிகழும் வளர்ச்சி எப்படி இயற்கையையும் உழைக்கும் மனிதர்களையும் அழிக்கிறது என்று பல இடங்களில் மார்க்ஸ் பதிவு செய்திருக்கிறார். மூலதனம் நூலின் முதல் பாகத்தில் அவருக்கே உரிய இயக்கவியல் பாணியில் அவர் கூறுகிறார்:

முதலாளித்துவம் மக்களை பெரு நகரங்களில் குவிக்கிறது. இதன்மூலம் நகர மக்கள் தொகை பெரிதும் அதிகரிக்கிறது. இதனால் சமூகத்தின் வரலாற்றை முன்னெடுத்துச்செல்லும் சக்தியை (அதாவது, தொழிலாளிவர்க்கத்தை) ஒருமுகப்படுத்துகிறது. ஆனால், மறுபுறம், மண்ணுக்கும் மாந்தருக்கும் இடையேயான பொருள் பரிமாற்றத்தை தகர்த்து விடுகிறது. அதாவது, உணவாகவும் உடையாகவும் மனிதர்கள் நுகர்கின்ற பொருட்கள் மீண்டும் மண்ணுக்குள் செல்வதை தடுத்துவிடுகிறது. இதன் மூலம், மண்ணின் நிரந்தர சத்து நிலைத்து தொடர்வதற்கான  வழியை அடைத்துவிடுகிறது. மேலும் இந்த செயல் மூலம் நகர்ப்புற உழைப்பாளியின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. கிராமப்புற உழைப்பாளியின் அறிவுசார் வாழ்க்கையையும் பறித்துவிடுகிறது…..நகர்ப்புற தொழில்களில் நடப்பது போலவே, நவீன வேளாண்மையிலும் இயக்கப்படும் உழைப்பின் கூடுதல் ளவும் உற்பத்தித் திறனும் உழைப்பு சக்தியை அழித்து நோய்கள் மூலம் உழைப்பாளியின் உயிரைக் குடித்து பெறப்படுகிறது. மேலும், முதலாளித்துவ வேளாண்மையின் முன்னேற்றம் என்பது உழைப்பாளியின் வாழ்வைக் களவாடுவது மட்டுமல்ல, மண்ணின் வளத்தையும் களவாடுவதேயாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மண்ணின் வளத்தை மேம்படுத்தும்  முன்னேற்றம் எல்லாம் அந்த மண்வளத்தை நிரந்தரமாக தக்கவைக்கும் மூலங்களை அழிப்பதான முன்னேற்றமே. எனவே        “முதலாளித்துவம் தொழில்நுட்பத்தை எவ்வாறு வளர்க்கிறது? பல்வேறு  செயல்முறைகளை ஒட்டுமொத்த சமூக செயல்முறையாக  எவ்வாறு இணைக்கிறது?” என்று கேட்டால், “அனைத்து செல்வங்களுக்கும் ஆதார மூலங்களான மண்ணையும் உழைக்கும் மாந்தரையும் அழிப்பதன் மூலம் தான்.” என்பதே பதில். 

இயற்கையையும் இந்த பூமியையும் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு மார்க்ஸ் அக்கறை கொண்டிருந்தார் என்பதையும் இதற்கும் உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள தொடர்பை எவ்வளவு துல்லியமாக அறிந்திருந்தார் என்பதையும், மூலதனம் நூலின் மூன்றாம் பாகத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளில் காணலாம்:

தற்பொழுதுள்ள (முதலாளித்துவ) உற்பத்தி அமைப்பைவிட மேலான (பொதுவுடமை) சமூக அமைப்பின் பார்வையில் நாம் வாழும் உலகின், மண்ணின் மீதான தனி நபர்களின் தனி உடமை என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனின்மீது தனிவுடமை கொண்டாடுவது எவ்வளவு அபத்தமோ, அவ்வாறே கருதப்படும். .ஏன், ஒரு சமூகம் முழுவதும் கூட, ஒரு நாடும் கூட, அனைத்து நாடுகளும் சமூகங்களும் கூட,சேர்த்து வைத்துப் பார்த்தாலும், இந்த உலகின், மண்ணின், இயற்கையின், சொந்தக்காரர்கள் அல்ல.அவர்கள் அனைவரும் தற்சமயம் இதனை கையில் வைத்திருப்பவர்கள், இதனால் பயன் அடைவோர். (உண்மையில்) இவர்கள் இந்த பூமியை, பூர்வீக சொத்து என்று கருதி, அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு மேம்பட்ட நிலையில் தரவேண்டியவர்களே.

இதுதான் இயற்கை பராமரிப்பு மற்றும் மானுட சமூக வளர்ச்சி என்பது பற்றிய மார்க்சீய அணுகுமுறையின் சாரம் என்றே சொல்லலாம்.

சமகால உலகில் சூழல்-வளர்ச்சி உறவும் முரணும்

மேலே கூறியவற்றில் இருந்து சமகால சூழல் பிரச்சனைகளை மொட்டையாக “தொழில் வளர்ச்சியின் விளைவு” என்றோ “தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வந்த கேடு” என்றோ மார்க்சீயம் பார்க்கவில்லை என்பது தெளிவாகும். மார்க்சீயப் பார்வை என்ன கூறுகிறது? குறிப்பாக, லாப வெறி அடிப்படையில் இயங்குகிற முதலாளித்துவ அமைப்புதான், அதன் இயக்க விதிகளும் செயல்பாடுகளும்தான் சமகால சூழல் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் என்றே கூறுகிறது. ஆகவே முதலாளித்துவ அமைப்புக்கு முடிவு கட்டி, அதன் இடத்தில் திட்டமிட்ட சோஷலிச பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் மானுடம் சூழல் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர இயலும். இது நாம் ஏற்றுக் கொள்ளத்தக்க பொது நிலைப்பாடு.  உலக முதலாளிகள் பட்டியலில் முன்னணியில் உள்ள பில் கேட்ஸ் கூட பருவநிலை மாற்றம் என்ற சவாலுக்கு முதலாளித்துவம் தீர்வுகாணமுடியாது. சோஷலிச அமைப்பில்தான் தீர்வுகாண இயலும் என்று பொருள்பட பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

அதேசமயம், மார்க்சும் எங்கல்சும் சுட்டிக் காட்டியதுபோல், மானுட வரலாற்றில் ஆகப்பெரிய அளவிற்கு முதலாளித்துவம் நவீன அறிவியலை உற்பத்தியின் ஒவ்வொரு அம்சத்திலும் தனது லாப நோக்கத்திற்காக திணித்துள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இதன் ஒரு பொருள் என்னவெனில், சரியான அறிவியல் அணுகுமுறையில் சமூகம் இயங்கினால், நவீன அறிவியல் மானுட வாழ்வின் மேம்பாட்டின் முக்கிய கருவியாக அமைய முடியும் என்பதாகும். ஆகவே, நாம் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நமது எதிரிகளாகவோ சூழலுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளாகவோ பார்க்க மறுக்கிறோம். நாம் வாழும் உலகில் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது.  இது வெறுமனே ஒரு நாட்டின் அமைப்பாக மட்டும் இல்லை. உலகம் தழுவிய ஏகாதிபத்திய அமைப்பாகவும் உள்ளது. மறுபக்கம், காலனி ஆதிக்கத்தில் இருந்து  கடந்த 6௦ – 7௦ ஆண்டுகளில் விடுதலை பெற்று வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் வாழ்வில் மேம்பாடு காண நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் மிக முக்கியமானவை. அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி லாப நோக்கில் மட்டுமே நிகழும்பொழுது இயற்கை அழிவும் உழைப்பாளி மக்கள் முன்பைவிட அதிகமான அளவில் சுரண்டப்படுவதும் விளைவுகளாக முன்வருகின்றன. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு மிக அவசியம் என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது.

சுற்று சூழல்-வளர்ச்சி: பன்னாட்டு அம்சங்கள்

சுற்று சூழலும் வளர்ச்சியும் என்ற பிரச்சினையின் பன்னாட்டு அம்சத்தைப் பொறுத்த வரையில் முன்னணி முதலாளித்துவ நாடுகளும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளும் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையும் தத்தம் நாடுகளின் உழைப்பாளி மக்களையும் சுரண்டியும் இயற்கை வளங்களை எந்த வரைமுறையுமின்றி சூறையாடியும் கார்பன் வெளியில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஆனால், ‘குறைவான கார்பன் பாதையில் உங்களது வளர்ச்சி இருக்கவேண்டும்’ என்று பன்னாட்டு அரங்குகளில் வளரும் நாடுகளை நிர்ப்பந்தித்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறைவான கார்பன் பாதையில் பயணித்து வளர்ச்சியை அடைவதற்கான தொழில்நுட்பங்களையும் அவை வளரும் நாடுகளுக்கு தர மறுக்கின்றன. பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் மேலை நாடுகளும் பன்னாட்டு ஏகபோகங்களும் தரும் அழுத்தத்திற்கு நாம் இரையாகிவிடக்கூடாது என்பதே மார்க்சீய நிலைப்பாடு. அதே நேரத்தில் நிகழ்ந்துவரும் முதலாளித்துவ வளர்ச்சியில் நமது நாட்டிலும் மார்க்ஸ் முன்வைத்த மூலதன சேர்க்கை பற்றிய பொது விதி – செல்வங்கள் துருவத்தின் ஒருபுறம் குவிந்து துயரங்கள் துருவத்தின் மறுபக்கம் குவியும் என்ற விதி – அமலாகிவருகிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதிகரித்துவரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் சூழலைக் கெடுப்பதிலும்  பங்காற்றுகின்றன. செல்வந்தர்கள் வாழ்க்கை முறை – அவர்களது நுகர்வு அளவு மற்றும் தன்மை, அவர்களின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு போன்றவை    ஏழைகளுக்கு கிடைக்கும் இயற்கைக் கொடையையும் கெடுத்துவிடுகின்றன. சுற்று சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையில் உள்ள உறவு வர்க்கத்தன்மைக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை இதுவும் நமக்கு நினைவூட்டுகிறது. பன்னாட்டு அரங்கில் மட்டுமின்றி உள்நாட்டிலும் வர்க்க ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல் உறவுகளை மறந்துவிட்டு வளர்ச்சிக்கும் சூழலுக்கும் உள்ள உறவை விவாதிக்க இயலாது.

இந்தியாவில் சுற்று சூழலும் வளர்ச்சியும்

இந்தியா விடுதலை அடைந்த பிறகு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கியது. அதே சமயம், இந்த வளர்ச்சிக்கு அரசின் பங்கு இன்றியமையாதது என்பது விடுதலைக்குப் பின் பல பத்தாண்டுகள் ஏற்கப்பட்ட கருத்தாக இருந்தது. நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் பங்கும், இத்துறைகளில் வேகமான  முன்னேற்றம் காண்பதன் அவசியமும் ஏற்கப்பட்டன. பெரும் அளவிலான தொழில் வளர்ச்சி திட்டங்கள் போடப்பட்டு அரசு உருவாக்கிய பொதுத்துறை மூலம் அவை அமலாக்கப்பட்டன. தனியார் துறையும் வளர்ந்தது. பொதுவாக, பொருளாதாரத்தின் மீதும் தனியார் துறையின் மீதும் அரசின் கண்காணிப்பும் நெறிமுறைகளும் அவசியம் என்றும் விடுதலைக்குப்பின்வந்த முதல்  முப்பது ஆண்டுகளுக்கு பொதுகருத்து நிலவியது. உலக அளவில் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளின் அனுபவத்தில் நவீன முதலாளித்துவ வளர்ச்சியால் சூழல்கேடுகள் ஏற்படும் என்றும் எனவே அத்தகைய பாதிப்புகளை குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அரசு சூழல்சார் சட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டுமென்பதும் பொது அங்கீகாரம் பெற்றது. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் ஆட்சியாளர்கள் மத்தியிலும் குறைவாகவே இருந்தது. எனினும் 1950 களில் இருந்து 199௦ வரையிலுமான காலத்தில் பல சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. மத்தியிலும் மாநிலங்களிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் சுற்று சூழல் துறைகளும் உருவாக்கப்பட்டன. நடைமுறையில் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், சூழல் பாதிப்புகளை எதிர்த்த இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நிகழ்ந்தன. “சிப்கோ” (மரங்களை கட்டிக்கொள்ளுதல்) என்ற பெயரிலான வனம் காக்கும் இயக்கம், கேரளாவில் அமைதிப் பள்ளத்தாக்கு இயக்கம், நர்மதா அணைக்கட்டுகள் தொடர்பான நர்மதா பாதுகாப்பு இயக்கம் என்று எழுபதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் இவை விரிவடைந்தன. ஆனால் 1990களில்  தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய மூன்று அம்சங்களைக்கொண்ட புதிய தாராளமய கொள்கைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தின் மைய அம்சமாக இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளை இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளச்செய்வதன் மூலம்தான் வளர்ச்சியும் ஏற்படும்; வேலை வாய்ப்பும் பெருகும் என்ற நிலைபாட்டை ஆளும் வர்க்க கட்சிகளும் அவர்கள் தலைமையிலான அரசுகளும்  எடுத்தன. இதனால், சுற்று சூழல் பிரச்சினைகளில் கட்டுப்பாடுகள் வலுவாக இருப்பது முதலீடுகளுக்கு ஊக்க மறுப்பாக அமையும் என்ற கருத்து ஆட்சியாளர்கள் மத்தியில் மேலோங்கியது. இவ்வகையான தாராளமய கொள்கைகளை எதிர்த்து நாம் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களின் பகுதியாகவே சுற்று சூழல் பாதுகாப்பிற்கான நமது அணுகுமுறை புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஜனநாயக நெறிமுறைகள் அவசியம்

வளரும் நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி மிக அவசியம். இவ்விலக்கை நோக்கி பயணிக்க  நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை. அதே நேரத்தில் வளர்ச்சியின் வர்க்கத் தன்மை என்ன என்பது மார்க்சிஸ்ட்டுகளுக்கும் மக்களுக்கும் முக்கியமான கேள்வி. எது ‘வளர்ச்சி’ என்ற கேள்வியும் எழுகிறது. வளர்ச்சியின் தன்மை பற்றியும் , மக்களுக்கான வளர்ச்சி என்பதன் இலக்கணங்கள் குறித்தும் ஜனநாயக பூர்வமான விவாதமும் தேவை. ஆளும் வர்க்கங்கள் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் திணிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் ஏற்க இயலாது. அதே நேரத்தில், ‘வளர்ச்சி என்றாலே நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வரும்; இவை இயற்கைக்கு எதிரானவை’  என்ற பிற்போக்கான நிலைபாட்டையும் நாம் அங்கீகரிக்க முடியாது. வளர்ச்சி திட்டங்கள் பற்றிய விவாதங்களில் நாம் ஜனநாயக பண்பாட்டையும் அணுகுமுறையையும் வலியுறுத்த வேண்டும். முன்வைக்கப்படும் திட்டத்தின் தன்மையைப்  பொருத்து, அதன் தாக்கம் ஸ்தல அளவில் இருக்கலாம் அல்லது அதை தாண்டியும் இருக்கலாம். ஒரு திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன்பாக அதன் அனைத்து அம்சங்களும் மக்கள் முன் வைக்கப்படவேண்டும்.  தெளிவாக விளக்கப்படவேண்டும். திட்டம் கொண்டுவரும் அரசோ அல்லது தனியார் நிறுவனமோ மட்டுமே அதனை அறிந்தவர்கள்; மதிப்பீடு செய்ய தகுதி பெற்றவர்கள் என்ற நிலையை நிராகரித்து, இவர்களை சாராத சுயேச்சையாக செயல்படும் அறிஞர்களும் நிபுணர்களும் திட்டம், அதன் டிசைன், அதன் தொழில்நுட்பங்களின் பொருத்தப்பாடு ஆகியவை பற்றி மக்களிடம் கருத்து  சொல்லும் வாய்ப்பு இருக்க வேண்டும். திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் மற்றும் இதர விளைவுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களிடம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தன்மை, அவற்றை கணக்கில் கொண்டு தரப்பட உள்ள  நட்ட ஈடு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒளிவு மறைவு இன்றி மக்கள் முன்வைக்கப்பட்டு ஜனநாயக முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இவற்றை நாம் குறிப்பிடும்பொழுது இதெல்லாம் ஒரு முதலாளித்துவ – அதுவும் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டுள்ள – நாட்டில் நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியும் எழக்கூடும். தாராளமய, தனியார்மய உலகமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் நாட்டில், அந்நிய, இந்திய பெருமூலதனங்கள் அரசுகள் மீது கூடுதல் செல்வாக்கு செலுத்தும் நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழும். கடந்த மத்திய அரசு காலத்திலேயே சுற்று சூழல் நெறிமுறைகள் வேகமான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன என்று அன்றைய பிரதமரே கருத்து சொல்லியதை நாம் அறிவோம். நடப்பு மத்திய அரசு சுற்று சூழல் துறையை அதிகார பூர்வமாக கலைக்கவில்லையே தவிர, அனேகமாக சுற்று சூழல் நெறிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுவிட்டன, அல்லது ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் கண்டுகொள்ளப்படுவதில்லை  என்ற நிலைமை உள்ளது.

நாம் மேற்கூறிய பரிந்துரைகளை முன்வைப்பது விவாதத்தை துவக்குவதற்காக என்று கொள்ளலாம். அது மட்டுமல்ல. பொது வெளியில் அறிவியல் விரோத சூழல் அடிப்படை வாதிகளையும் ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

நிறைவாக

கடந்த பல பத்தாண்டுகளாக தாராளமய கொள்கைகள்  உழைக்கும் மக்களின் வாழ்வை நாடு முழுவதும் சீரழித்து வருகின்றன. இவ்விளைவுகளை எதிர்த்து மக்கள் ஆங்காங்கு தன்னெழுச்சியான போராட்டங்களில் களம் இறங்குகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான வர்க்க வெகுஜன அமைப்புகளும்  மற்ற இடதுசாரி இயக்கங்களும் களத்தில் நிற்கும் மக்களுடன் களம் இறங்கி தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் அரசின் கொள்கைகளின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்த அனைத்துவகை போராட்டங்களையும் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்றனர். நாடுமுழுவதும் நிலைமை இப்படி என்றால், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலும் அசாதாரணமான நிலைமை உள்ளது. மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் போர் தொடுத்துள்ளது போன்ற நிலைமை உள்ளது. தமிழகத்தில் இன்று எழுந்துள்ள காவிரிபடுகையை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்கும் முயற்சி, மத்திய மாநில அரசுகளின் ஆதரவு பெற்ற, சூழல் விதிகளையும் நாட்டின் சட்டங்களையும் சற்றும் மதிக்காமல் தூத்துக்குடி மக்களின் வாழ்வை நாசப்படுத்திவரும் ஸ்டெர்லைட் கம்பனி விவகாரம் ஆகிய சூழல்சார் பிரச்சனைகளை அறிவியல் அணுகுமுறையில் எதிர்கொள்வதற்கான துவக்கப்புள்ளி எது? வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையேயான உறவுகள் முதலாளித்துவ அமைப்பில், அதிலும் தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கிவரும் முதலாளித்துவ அமைப்பில் எத்தகைய வர்க்கத்தன்மை கொண்டவை என்பது தொடர்பான மார்க்சீய பார்வையும் புரிதலும்தான் அந்த துவக்கப் புள்ளியாக இருக்க முடியும்.

 

ஒரு கருத்து

  1. […] சூழலியல் சிக்கல்களும், பொருளாதார வளர… கட்டுரை மேற்கண்ட நிலைமைகளோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றாகும். மூலதனத்தின் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இயற்கையை ஒட்டச் சுரண்டும் நடவடிக்கைகளை மார்க்சியம் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த நம் போராட்டத்தில், சூழலியல் நோக்கு, பிரிக்கவியலாத பகுதியாகும். […]

கருத்தைப் பதிவு செய்யவும்