வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 3

1010
1
SHARE

– டி.கே.ரங்கராஜன்

திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பண்படுத்திய தமிழக மண்ணில் சாதிய, மத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி வருவதாகத் தெரிகிறதே? புதிய, புதிய வழிபாடுகளும், மக்கள் கோயில்களை நோக்கி படையெடுப்பதும் இப்போது அதிகமாகி வருகிறதே?

இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகளுடைய பணியும், திராவிட இயக்கத்தின் பணியும், தியாகமும் பாராட்டத்தக்கவை. தமிழகத்தின் சீர்திருத்த இயக்கம் பற்றிய புரிதல் நமக்கு உண்டு. பேராசிரியர் அருணனின் ‘தமிழகத்தில் இரு நூற்றாண்டு சமூக சீர்திருத்தம்’ கட்டுரைகளில் அந்தச் சிந்தனைகள் நன்கு வெளிப்படுகின்றன.

பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்தின் வரலாறு தமிழகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியதென்பதில் எவ்வித சந்தேகமும் நமக்குக் கிடையாது. அவருடைய செயல்பாடுகளும் கருத்துக்களும் தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வடிவத்தைக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
எதிர்காலத்திலும் அதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

டாக்டர் க.சிவத்தம்பி குறிப்பிடும்போது, “இந்து சமூகத்தில் இதுவரை நிலவி வந்த விவாதிக்கவே தயங்கும் பேச்சுத் திறனற்ற ஒரு நிலையை மாற்றி, மதச்சார்பற்ற தன்மைக்காகவும் ஜனநாயக நடைமுறைக்காகவும் ஒரு மிகப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டமைக்காக பெரியார் ஈ.வே.ரா பாராட்டுக்குரியவர். ஜனநாயக நெறிமுறைப்படுத்தல் என்னும் இந்த நடைமுறை சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களை முன்னே கொண்டு வர வழிவகுத்தது. யுனெஸ்கோ மன்றம் 1970 ஆம் ஆண்டில் தந்தை பெரியாருக்கு அவர் தொண்டிற்காக சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தியது.”

இன்றும் கூட இந்தியாவின் பல வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு உதவியுள்ளது. உதாரணமாக பீகார், உ.பி., ஒரிசா இவற்றைக் கூறலாம். தமிழகத்திலும் கேரளத்திலும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கென்பது இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டார்களோ, அங்கெல்லாம் மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கூடிய பாங்கை கம்யூனிஸ்ட் இயக்கம் செய்துள்ளது.

மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களை எதிர்த்து திராவிட இயக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாதியினரையும் ஓர் ஐக்கிய முன்னணியாக பெரியார் தலைமை ஒன்றுபடுத்தியது. சாதிகள் இருந்தன; அந்தந்த சாதியில் இருந்தவர்கள் தங்களுடைய நலன்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக சாதியையும், பெரும்பாலோர் கடவுள் பக்தியையும் விடாமலே இதன் பலனைப் பெற்றார்கள். 1949ஆம் ஆண்டு திராவிடர் கழகம் உடைந்த பிறகு, திமுகவினுடைய தலைவர் அண்ணா பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து விலகி ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்கிற திருமூலரின் திருமந்திரத்தை முன்மொழிந்தார். ”பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன்; பிள்ளையாரையை வணங்கவும் மாட்டேன்” என்று திமுக பெரியார் கொள்கையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டது.

இந்தியாவில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் தகர்க்கப்படவில்லை. அதனால்தான் நம்முடைய கட்சித் திட்டம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்து தொழிலாளர் விவசாயிகளின் கூட்டு வேண்டுமென சொல்கிறது. நிலப்பிரபுத்துவம் தடுக்கப்பட்ட நாடுகளில் கூட முதலாளித்துவம் இருக்கும். எனினும் முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் தொடரும் – சோசலிசத்தில்தான் அது முற்றுப்பெறும். கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சி உருவாக்கிய சூழல் இடதுசாரிகள் வளரவும் உதவியது. அதேநேரத்தில் இடதுசாரிகள் இல்லாத, அல்லது அவர்கள் பலவீனமாக உள்ள இடங்களில் சாதிய சக்திகள், வலதுசாரி சக்திகள் வளர்வதற்கும் அது உதவியது.

சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இந்து மகாசபை போன்ற அமைப்புகள் இந்து மதவெறியை கிளப்பிக் கொண்டேதான் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இன்றும் அந்தப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. எனவே இடதுசாரி கருத்தோட்டமும், வலதுசாரிக் கருத்தோட்டமும் ஒரு கடுமையான போராட்டத்தில் எதிரும் புதிருமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்டுகளும் பெரியாரும் நடத்திய இயக்கமென்பது நிலப்பிரபுத்துவ குணாம்சங்களை எதிர்த்து நடத்திய இயக்கம். இன்று நிலப்பிரபுத்துவம் புதிய வடிவங்களை எடுத்து சாதியவாதம், தீண்டாமை, பெண்ணடிமை என்று புதிய உத்வேகத்துடன் இயங்கி வருகிறது.உலகமயகொள்கை, மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து வரும் நிலையில் பக்தியும் கோயில்களும் அதிகமாகி வருகின்றது.

கம்யூனிஸ்டுகளின் இன்றைய கடமை பெரியாரிய இயக்கத்தின் பணிகளை நாமும் உள்வாங்கிக் கொண்டு – மத்திய அரசின் உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுகிற அதே நேரத்தில், சாதியவாதம், தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றையும் எதிர்த்துப் போராடி அந்த பாதிப்புகளில் இருந்தும் மக்களை மீட்க வேண்டும். இத்தகைய ஒரு பெரிய கடமை நமக்கு உள்ளது. வரலாற்று அடிப்படையிலான இந்தக் கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது. நம்மைத் தவிர வேறு யாராலும் இதனை மேற்கொள்ளவும் முடியாது. இதனை செய்து முடிப்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியென்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களப் போராட்டங்களையும் கருத்தியல் போராட்டத்தையும் இணைந்து நடத்ததிட வேண்டும்.

<<< முந்தைய பகுதி

ஒரு கருத்து

  1. […] தேர்தல் போராட்டம் … 1அடுத்த கட்டுரைவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே த… Editorial var block_td_uid_1_576139783563e = new td_block(); block_td_uid_1_576139783563e.id = […]

Please start yout discussion here ...