கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …

1453
0
SHARE

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது காங்கிரஸ் முடிவுகள் பற்றி அதன் முதன்மை செயலாளர் ரால் காஸ்ட்ரோ ஆற்றிய தொடக்கவுரை பயன் தருமா?

கடந்த ஏப் 19 அன்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் நிறைவு பெற்றது. அதில் நிறைவுறை ஆற்றிய கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளரும், அதிபருமான, ரால் காஸ்ட்ரோ ஆற்றிய உரை, குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அண்மையில் ஒபாமா கியூபாவிற்கு பயணம் செய்தது, பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது. அந்நிலையில் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உறுதி மற்றும் கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ஆகியவையின் நிலைபாட்டில், மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ரால் காஸ்ட்ரோ, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சோசலிசத்திற்கான கொள்கைப் பாதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், அதை மேலும் முன் எடுத்துச் செல்லும் விதமாக மாநாட்டில் பேசியுள்ளார். அது மாநாட்டின் தீர்மானமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. கியூப குடியரசின் அரசியல் சட்டம் வரையறுத்துள்ள, அரசியல் மற்றும் சமூக கட்டுமான பணிகளை நிறைவேற்றுவதில், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைப் பணி தொடரும், என குறிப்பிட்டுள்ளார். அதற்காக கட்சி உறுப்பினர்கள் மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்களிப்பு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கட்சியின் திட்டம் சார்ந்த பணியாகும், என வலியுறுத்துகிறார்.

6வது கட்சி காங்கிரஸ் முன்மொழிந்த கியூபாவிற்கான பொருளாதார கொள்கை, ஒன்று அல்லது இரண்டு ஐந்தாண்டுகளில் நிறைவு பெறக் கூடியது அல்ல. தொடர்ந்து மக்களுடனான இரண்டரக் கலந்த செயல்பாடுகள் மூலமாக, மேற்குறிப்பிட்ட கொள்கை அமலாக்கத்திற்கான வேகம் இருக்கும். அதே நேரத்தில் உறுதியான அரசியல் செயல்பாடாக தொடரும். முதலாளித்துவத்திற்கு மாற்றான சோசலிச சமூகத்திற்கான புரட்சி மூலமான போராட்டம், எளிய மனிதர்களுக்காக, எளிய மனிதர்களால் உருவானது, என்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகள் நினைவில் கொள்ளப்பட வேண்டும். அது நீடித்துத் தொடர வேண்டும்.

அதேநேரத்தில் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதன்மூலம் கியூபா மீதான பொருளாதாரத் தடை தானாக விலகிவிடும் என்ற நம்பிக்கை, நமக்கு இல்லை. அதற்கான போராட்டத்தை, கியூபாவின் அண்டை நாடுகளான தென் அமெரிக்க மற்றும் கரீபியன் நாட்டு மக்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்பதை மறந்து விட முடியாது எனக் குறிப்பிட்டது, கவனிக்கத் தக்கது. நெடிய போராட்டங்கள் சில நிகழ்வுகளில் முடிந்து விடுகிற ஒன்றல்ல. சோசலிசத்திற்காக நீடித்த போராட்டத்துடன் இணைந்தது.

கட்சி அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்:

முதன்மைச் செயலாளராக மீண்டும் ரால் காஸ்ட்ரோ தேர்வு ஆகியுள்ளார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக, ஐந்து புதியவர்கள் உள்ளிட்டு, 4 பெண்கள் உள்பட 17 பேர் தேர்வாகியுள்ளனர். 142 நபர்களைக் கொண்ட மத்தியக் குழுவில், மூன்றில் இரண்டு பங்கு, புரட்சிக்குப் பின்னர் பிறந்தவர்கள். 2011ல் தேர்வான மத்தியக் குழுவின் சராசரியை விட இளமையான மத்தியக் குழு தேர்வகியுள்ளது. அதாவது 54.4 வயது என்பது புதிய மத்தியக் குழுவின் சராசரி வயதாகும். 44.37 சதம் பெண்கள் அங்கம் வகிக்கும் வகையிலும், 35.92 சதம் கியூபர்களுடன் கலந்த கருப்பினத்தவர்கள் அங்கம் வகிக்கும் வகையிலும், 98 சதம் பேர் பல்கலைக் கழக கல்வி பெற்றவர்கள் என்ற வகையிலும், புதிய மத்தியக் குழு தேர்வாகியுள்ளது. 55 புதிய உறுப்பினர்கள் மத்தியக்குழுவிற்கு தேர்வாகியுள்ளனர். அனைவரும் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

இந்த காம்பினேசன் குறித்து ரால் காஸ்ட்ரோ குறிப்பிடுகையில், 2021 ல் நடைபெறும் மாநாட்டின் போது, இளைய தலைமுறை, கட்சியின் கோட்பாடுகள் மற்றும் புரட்சியின் இலக்கு குறித்து முழுமையாக புரிந்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இன்றுள்ள புரட்சியில் பங்கெடுத்த அல்லது முதிய தலைமுறைக்கு இந்த காங்கிரஸ் இறுதியானதாகக் கூட இருக்கலாம். புரட்சியின் இலக்கு மற்றும் நோக்கம் அடுத்தடுத்த தலைமுறையின் இலக்காக நோக்கமாக மாற்றுகிற பரிமாற்றத்தை, கியூப கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே உணர்ந்திருந்தது, என்கிறார்.

ஃபிடல் கற்பித்த மற்றும் ஒரு கருத்தை, ரால் காஸ்ட்ரோ மாநாட்டில் பதிவு செய்தது கவணிக்கத் தக்கது. ”ராணுவமும் ராணுவ வீரனும் கட்சியின் முழுநேர ஊழியர்கள் போன்ற வாழ்க்கை கொண்டவர்கள் என்பதைப் படித்து அறிய வேண்டும். இரண்டு, அரசின் தலைவர்கள், அவர்களுடைய அலுவலகம் அல்லது வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டுள்ள பெயர் பலகைகளில் மட்டும் இடம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது”. இந்த பாடம் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லாக் காலத்திலும் தலையாயக் கடமையாக இருக்க வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இந்த உரையும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது காங்கிரஸ் விவாதித்த செரிவான கருத்துக்களும், நம்பிக்கையூட்டுகிற, பின்பற்ற வேண்டிய ஒன்றாக உள்ளது.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...