அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

2474
1
SHARE

(குரல்: தீபன், ஆடியோ எடிட்டிங்: மதன் ராஜ்)

– அன்வர் உசேன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து இந்து ராஷ்ட்ரா எனும் சமூக அமைப்பை உருவாக்க முயல்கிறது என்பது அனைவரும் அறிந்ததே! இந்து ராஷ்ட்ரா கோட்பாடு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்துக்களிடையேயும் கூட பிற்படுத்தப்பட்ட, தலித், ஆதிவாசி மக்களுக்கு எதிரானது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தனது இந்து ராஷ்ட்ரா கோட்பாடுகளை அமலாக்கிட ஆர்.எஸ்.எஸ். இரு முனைகளில் செயல்படுகிறது. ஒன்று, மக்களிடையே நேரடியாக செயல்பட்டு மத மோதல்களை உருவாக்குவது. இன்னொன்று, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அரசு இயந்திரத்தை வலுவாக பயன்படுத்தி கொள்வது. தனது கருத்தியலை மக்கள் மீது திணிக்க அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடு தன் கைகளில் இருக்க வேண்டும் என்பதை சங்  புரிந்து வைத்துள்ளது. குறிப்பாக 1998-2004 வாஜ்பாய் ஆட்சியிலும் அதற்கும் மேலாக 2014 மோடி ஆட்சியிலும் அரசு இயந்திரத்தை தனது ஆளுமைக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயற்சிக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய அரசியல் சட்டம் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவானது என்று கூறிவிட முடியாது. பல குறைகளை கொண்டுள்ளது. எனினும் விடுதலைக்கு பின்பு அச்சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது பன்முகத்தன்மையை உயர்த்தி பிடித்தது. காந்திஜியின் படுகொலை பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தனிமைப்பட்டிருந்தது. அம்பேத்கார் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை நேரு தலைமையிலான காங்கிரஸ் மட்டுமல்லாது, பொதுவுடமை கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன. எனவே பன்முகத்தன்மையை உயர்த்திபிடிக்கும் அரசியல் சட்டம் உருவானது. மக்கள் ஏற்றுக்கொண்டனர்

இந்த அரசியல் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அன்றைக்கே நிராகரித்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் பத்திரிக்கையான 30.11.1949 ஆர்கனைசர் இதழில் இந்திய அரசியல் சட்டத்தின் ஆவணமாக திகழ்வதற்கு தகுதி படைத்தது மனுஸ்மிருதிதான் என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது. இந்த மனுஸ்மிருதி நால் வர்ண பேதங்களை உயர்த்தி பிடிக்கிறது. அதன் அடிப்படையில் உருவான சாதிய அமைப்பை ஆர்.எஸ்.எஸ். வலுவாக ஆதரிக்கிறது. சாதிய அமைப்பு குறித்து கோல்வால்கர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“நமது மகத்தான தேசிய (இந்துத்துவ) வாழ்வில் சாதியம் என்பது பன்னெடுங்காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது. சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் பிணைப்பாக சாதியம் செயல்படுகிறது.” (சிந்தனை கொத்து/பகுதி-2/ அத்தியாயம்10).

மூவர்ண கொடியையும் ஆர்.எஸ்.எஸ். ஏற்றுகொண்டதில்லை. காவிதான் அவர்களது கொடியின் நிறம். ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமையகமான நாக்பூரில் 2000ம் ஆண்டுதான் முதன் முதலாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. தனது நிகழ்ச்சி நிரலை அமலாக்க இந்திய அரசியல் சட்டத்தை சிதைக்க வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸ்.க்கு உள்ளது. அதற்கு அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். பிடியில் மோடி அரசாங்கம்

2014ம் ஆண்டிற்கு பிறகு அரசு இயந்திரத்தை வஞ்சகமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வலுவாக கிடைத்துள்ளது. அதனை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தி கொள்கிறது எனில் மிகை அல்ல. இந்திய அரசு இயந்திரத்தின் உயர்ந்தபட்ச பொறுப்பு ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி பதவிகள் ஆகும். இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஜனாதிபதியும் உதவி ஜனாதிபதியும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்திய அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய படிமம் ஆளுநர் பதவி!  இந்தியாவில் 35 ஆளுநர்கள் உள்ளனர். இவர்களில் 25 பேர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள். இவர்கள்தான் இந்திய அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய கடமை படைத்தவர்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் என்ற முறையில் இவர்கள் இதே அரசியல் சட்டத்தை நிராகரிப்பவர்கள். எனவே அரசியல் சட்டத்துக்கு என்ன பாதுகாப்பு எனும் கேள்வி எழுகிறது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் அவர் அமைச்சரவையில் பலரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்தியாவில் 29 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 29-ல் நான்கு மாநிலங்களில்தான் பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் ஆட்சியில் உள்ளன. தெலுகு தேசம் தற்பொழுதுதான் பா.ஜ.க.வை எதிர்க்க தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் பா.ஜ.க. தனியாக அல்லது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி செய்கிறது. எனவே, மத்தியிலும், பல மாநிலங்களிலும் அரசு இயந்திரத்தின் கடிவாளம் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கைகளை மோடி அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து சுனில் பையா ஜோஷி, சுரேஷ் சோனி, தத்தராய்யா ஹோஸ்பேல், கிருஷ்ண கோபால், ராம்மாதவ் ஆகியோரும் பா.ஜ.க. தரப்பிலிருந்து ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா, ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பல முக்கியமான அமைச்சகங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் இணைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகளை கிருஷ்ண கோபால் ஒருங்கிணைக்கிறார். இந்த ஏற்பாடுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தனது ஆளுமையை அரசு இயந்திரத்தில் நிலைநாட்ட முயல்கிறது.

அரசு இயந்திரம் மூலம் திருத்தப்படும் இந்திய வரலாறு

2017ம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் வரலாற்று ஆசிரியர்களின் கூட்டத்தை பா.ஜ.க. கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா கூட்டினார். இந்த கூட்டத்தின் நோக்கம்: “இந்திய வரலாறை திருத்தி எழுதுவது”. தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர் என பெருமையுடன் அழைத்து கொள்கிறார் இவர். “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்துதான் வழிகாட்டுதல் பெறுகிறேன்” என இவர் சொல்லிக்கொள்வதில் என்ன ஆச்சர்யம்?

ஏன் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் வைத்யா கூறுகிறார்:

“இந்திய வரலாற்றின் உண்மையான வண்ணம் காவிதான். இதனை நிலைநாட்ட கலாச்சார மாற்றம் உருவாக்கவேண்டியுள்ளது. இதற்கு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியம்.”

இதற்காக 14 பேர் கொண்ட குழு போடப்பட்டுள்ளது. இதன் தலைவர் கே.என். தீட்சீத் தொல்லியல் துறையின் முன்னாள் மூத்த அதிகாரி. மற்றவர்களும் இந்துத்துவா ஆதரவாளர்கள் என்பதை கூறத் தேவையில்லை. இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் நாடு முழுதும் உள்ள பாடப்புத்தகங்களில் இணைக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர். “இராமாயணம் கற்பனை அல்ல; அது ஒரு வரலாற்று ஆவணம்; இந்து ஆன்மீக நூல்கள் அனைத்தும் வரலாற்று பெட்டகங்கள்தான்.” என்கிறார் மகேஷ் சர்மா. இவர் தலைமை தாங்கும் கலாச்சார அமைச்சகத்திற்கு ஆண்டுக்கு ரூ3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. வரலாற்றை திருத்தி எழுத இந்த நிதி போதாதா என்ன?

வரலாறு திருத்தி எழுதும் முயற்சி ஏன்?

இதுவரை உள்ள அறிவியல் ஆதாரங்கள் இந்தியா எனும் தேசம் உருவானதில் இடப் பெயர்வுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என நிலைநாட்டுகின்றன. ஆரியர்கள் இங்கே புலம் பெயர்ந்தவர்கள்தான் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் மேலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்துள்ளன. ஆனால் இந்துத்துவ வாதிகள் இதனை மறுக்கின்றனர். ஆரியர்கள்தான் பூர்வகுடி மக்கள் என வலுவாக நிலைநாட்ட முயல்கின்றனர். இதற்காகவே வரலாற்றை திருத்தி எழுதும் வஞ்சக செயல்.

தொடக்க கால வரலாறு மட்டுமல்ல; இந்துத்துவவாதிகளுக்கு மத்திய கால வரலாறும் மாற்றப்பட வேண்டும். மத்திய காலம் மிகவும் சிக்கல் நிறைந்த கால கட்டம். சமணம், பவுத்தம், சைவம் , வைணவம், இஸ்லாம் ஆகிய பெரும் மதங்கள் தமது மேலாண்மையை நிலைநாட்ட கடுமையாக போராடின. இந்த முரண்பாடு பல மோதல்களை உருவாக்கின. அதே சமயத்தில் பல ஒற்றுமைகளையும் உருவாக்கியது. மதத்தின் அடிப்படையிலும் கொள்ளைக்காகவும் கோவில்களை அழித்த கஜனி முகம்மதுவின் வரலாறும் உண்டு. கோவில்களை பாதுகாத்த இப்ராகிம் லோடி, துக்ளக், அக்பர், திப்பு சுல்தான் ஆகியோரின் வரலாறும் உண்டு. மறுபுறத்தில் மசூதிகளை கட்டிகொடுத்த விஜயநகர மன்னர்கள் மற்றும் மராட்டிய வீரர் சிவாஜி ஆகியோரின் வரலாறும் உண்டு.

மத்திய காலகட்டத்தில்தான் மதத்தின் பெயரால் சைவ மற்றும் வைணவ மதங்கள் ஏராளமான சமண மற்றும் பவுத்த கோவில்களை அழித்தன. சங்பரிவாரத்திற்கு வரலாற்றின் இந்த பக்கங்களை அழிக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. எனவே, வரலாற்றை மாற்றி எழுத அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அதற்கு மோடி அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இந்துத்துவ தேசியத்தை இந்திய தேசியமாக நிலைநாட்டுவதற்கு இத்தகைய வஞ்சக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

இந்த கருத்தியலுக்கு எதிராக மாற்று கருத்தியலை முன்வைக்கும் நேரு பல்கலை கழகம். முடக்கப்படுகிறது. நேரு ஆராய்ச்சி மையம், இந்திய வரலாற்று ஆய்வு மையம் போன்ற பல ஆய்வு மையங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். சமஸ்கிருதத்தை முன்னெடுக்க “சான்ஸ்கிரீட் பாரதி”” எனும் அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது. 2016-ம் ஆண்டு அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் சமஸ்கிருதத்தில் பாடங்களை தொடங்க வேண்டும் என கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. 2018ம் ஆண்டு ஜனவரியில் கான்பூர் ஐ.ஐ.டி. சமஸ்கிருதம், இந்து ஆன்மிக ஆவணங்கள் குறித்து ஆடியோக்களை வெளியிட்டது.

நீதி மற்றும் நிர்வாகத் துறைகளில்!

அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய பகுதி அதிகாரிகள் அடங்கிய நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகும். நீதித் துறையில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலையீடுதான் மூத்த நான்கு நீதிபதிகளை பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டியது. இந்துத்துவ ஆதரவாளர்களாக உள்ள பலர் உச்ச நீதிமன்றத்தில் கூட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி ஜோசப் போன்றவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவிகாலம் நீட்டிக்கப்படாததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று சங் பரிவாரத்தின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் எதிர்த்ததும் ஒன்று.

அரசு இயந்திரம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டதற்கு சில நடைமுறை உதாரணங்கள்:

  • அந்தமான் விமான நிலையத்திற்கு சவார்க்கர் பெயரை சூட்டியது.
  • சண்டிகார் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயரை சூட்ட பஞ்சாப் அரசாங்கம் முடிவு செய்த பொழுது, அதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பெயரை சூட்ட ஹரியானா அரசாங்கத்தின் முயற்சி.
  • ஹெட்கேவர் வீட்டை அதிகார பூர்வ சுற்றுலாத் தலமாக ஆக்கியது.
  • தீனதயாள் உபாத்யா உட்பட பல இந்துத்துவா தலைவர்களின் பெயரில் மத்திய அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
  • அரசு இயந்திரத்தின் உதவியுடன் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 50 வெளிநாடுகளின் தூதுவர்களை ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத் சந்தித்தது.
  • மும்பை பங்குச் சந்தை கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் உதவியுடன் மோகன் பகவத் பேசியது.
  • 2014ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் தனது தசரா உரையை மோகன் பகவத் பேச அனுமதித்தது.
  • ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்த உடற்பயிற்சி மையங்களை ஹரியானா அரசாங்கம் உருவாக்கியது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். தலையிடுவது.

சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட  அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல! மதச்சார்பின்மை சக்திகள் இந்த சவாலை முறியடிக்க வேண்டும். மக்கள் ஒன்றுதிரளும்போது அது சாத்தியமான ஒன்றுதான்!

ஒரு கருத்து

கருத்தைப் பதிவு செய்யவும்