வி.பி. சிந்தன் மேற்கோள்கள் …

832
1
SHARE

இந்திய மண்ணில் பொருள்முதல்வாதம் என்ற நூலில் இருந்து…

  • புத்த தத்துவம் அல்லது புத்தமதம்  ஆரம்ப காலத்தில் உலகத்தை அது அணுகிய முறை – மக்கள் அத்தத்துவ இயக்கத்திற்கு அளித்த மதிப்பு; அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் இன்றைக்குப் புத்த மதக் கோட்பாடுகள் என்ரு சொல்லப்படும் கருத்துக்களை வைத்து மதிப்பிடவே முடியாது. பௌத்தம் என்று இன்று கூறப்படுவதற்கும் ஆரம்ப காலத்தில் இருந்ததற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது.
  • உபநிஷத்துகளின் ஒருதலைப்பட்சமான கொள்கையும் அக்காலச் சமுதாயத்தில் நிலவிய வர்ண அமைப்புகளும் ஜாதிமுறைகளும் சமுதாய முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கின்றன என்பதை உணர்ந்தவர்களில் புத்தரும் ஒருவர்.
  • பரப்பிரம்மத்தைப் பற்றியும் எல்லாம் வல்ல இறைவனைப் பற்றியும் உபநிஷதங்கள் பாடிப் புகழ்ந்த கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் அக்கருத்துக்களை எதிர்த்தே புத்தர் தனது உலகக் கண்ணோட்டத்தை விளக்கினார்.
  • லோகாயதவாதிகளும் சார்வாகர்களும் உயிரற்ற பொருள்களின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கையின்போது உயிர் என்னும் தகுதி உருவாகிறது என்றார்கள். இந்தச் சிறப்பிற்குரிய கருத்து குறித்து புத்தர் ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பண்டைக்கால பொருள்முதல்வாதிகளில் தலைசிறந்து விளங்கியவர்கள் லோகாயதவாதிகளே. இவர்களை சார்வாகர்கள் என்றும் அழைப்பது உண்டு. உயிருக்கும் பொருளுக்கும் உள்ள உறவைப் பற்றி ஓரளவுக்கேனும் விளக்கம் தந்த பெருமை இவர்களைச் சாரும். உள்ளத்திற்கும் உடலுக்கும் உள்ள உறவைப் பற்றியும் விளக்குவதில் மற்றவர்களை விட முன்வரிசையில் லோகாயதவாதிகள் நின்றதைக் காணலாம். புத்தர் இவ்வளவு  தூரம் முன்னேறவில்லை.
  • பிரபஞ்சத்தைப் படைத்த சர்வ வல்லமை படைத்த ஒரு கடவுளை வேதத்தில் பார்க்க முடியாது. இந்திரன் தான் அவர்களின் முதன்மையான கடவுள். இன்றும் வேதம் இந்து மதத்தின் ஆணிவேர் என்று கூறுகின்ற வைதீகர்கள் உட்பட இந்திரனைக் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஊழ்வினை, மறுபிறவி முதலிய கருத்துக்களும் மோட்சம் எனும் கருத்தும் அங்கே பார்க்கமுடியாது.
  • சொத்துடையவர்கள் சொத்து இல்லாதவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் தங்களுடைய நலனுக்காக கொள்கையையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே சமுதாய அமைப்பிலும் உற்பத்தி உறவுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தாமல் வெறும் கடவுள் எதிர்ப்பை மட்டுமே கடைப்பிடித்தால் மக்களை கடவுள் பிடிப்பிலிருந்து மீட்க முடியாது.
  • எவ்வாறு மதமும் கடவுளும் இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததோ, அதைப் போன்றே – ஆனால் நிச்சயமாக உயர்ந்த ஒரு நாகரிக அமைப்பில் – மதம், கடவுள் இல்லாத ஒரு அமைப்பினை நோக்கி மனித சமுதாயம் செல்லும் என்பது உறுதி.
  • ஜாதி உணர்வுகளும் மதவெறியும் பிரதேச உணர்வுகளும் இன்று எவ்வளவு தீமைகள் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது இந்தக் கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்புவதன் அவசியத்தை உணரலாம்.
  • வெறும் தர்க்கவாதத்தின் குறுகிய எல்லைகளுக்குள் நின்று நாத்திகம் பேசுவது மட்டும் போதாது. சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கெதிராகப் போராட வேண்டும்.  மார்க்சியமே அத்தகைய சிறப்பிற்குரிய பொருள்முதல் வாதமாகும்.

ஒரு கருத்து

Please start yout discussion here ...