இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?

1584
0
SHARE

கேள்வி:

இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதை நோக்கிய திட்டமிடல் எதுவும் நடந்ததா?

பதில்:

இடதுசாரி ஜனநாயக அணி என்பது வர்க்கங்களின் அணி. போராட்டங்களால் கட்டப்படும் அணி. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட அரசியல் மாற்றை முன்வைக்கும் திட்டம் இதற்குத் தேவை. இதன் மூலம் வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதில் இடம் பெற வேண்டிய சக்திகள் என்று பார்க்கும் போது, இடதுசாரி கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள், இடதுசாரி மனோபாவம் கொண்ட தனி நபர்கள், சமூக இயக்கங்கள், குழுக்கள் போன்றவற்றைக் கூற முடியும். மாற்று திட்டத்தின் அடிப்படையில் மக்கள் பிரச்னைகளில் உரிய கோரிக்கைகளை முன்வைத்து, பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டும். தொடர்புகளை அரசியல் படுத்திட வேண்டும். அரசியல், ஸ்தாபன, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் வேலைகள் தேவைப்படும். தனித் தனி மேடைகள் கூட இதற்குத் தேவைப்படலாம். மாநிலத்தின் தன்மையையும், அணி சேர்க்க வேண்டிய அமைப்புகளின் பலத்தையும் பொறுத்து அந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பலமான அமைப்பாக, சுயேச்சையான இயக்கங்களை மேற்கொள்ளத் தக்கதாக வளர வேண்டும். ஒவ்வொரு கமிட்டியும், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் கடமையை உணர்ந்து செய்பவராக இருத்தல் வேண்டும். இதை ஒட்டித் தான் ஸ்தாபன சிறப்பு பிளீனம் நடந்து கட்சி ஸ்தாபனம் சீரமைக்கப் படுவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அடுத்து, அகில இந்திய அளவில் 6 இடதுசாரி கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு வலுப்பட்டுள்ளது. கூட்டு அறிக்கைகள், கூட்டு இயக்கங்கள் நடந்து வருகின்றன. 6 கட்சிகளும் கலந்து பேசி, அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து பொது கோரிக்கைகளை உருவாக்கி கூட்டு போராட்டங்களை உருவாக்கும். ஏற்கனவே, வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை (NPMO) செயல்பட்டது. தற்போது, மீண்டும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன், இதர பல சமூக இயக்கங்களையும் இணைப்பதற்கான முயற்சியும் உண்டு.

அடுத்து, இடதுசாரி முற்போக்கு அறிவு ஜீவிகள், படைப்பாளிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். வகுப்புவாதப் போக்குகளைக் கண்டித்து பலர் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். புதிய கல்விக் கொள்கை, மதவெறி எதிர்ப்பு, கருத்து சுதந்திரம் போன்றவற்றுக்கான மேடைகளில் இவர்கள் ஒன்றுபட துவங்கியுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளில் நடந்திராத அளவு மதவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்து மதவெறியை இந்துத்வ சக்திகள் கிளப்பி விட, மறுபக்கம் இசுலாமிய அடிப்படைவாத உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. இது அபாயகரமாக சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்பின்னணியில் மதவெறி எதிர்ப்பு மேடைகள் மாநிலம் தோறும் அமைக்கப்பட்டு, பரந்து பட்டதாக செயல்பட வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இம்மேடை அமைக்கப்பட்டுள்ளது. குறி வைத்துத் தாக்கப்படும் இசுலாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து வலுவாகத் தலையிட வேண்டும். தேசிய அளவில் இதற்கான சிறப்பு மாநாடு நடத்தப் படும்.

இசுலாமிய மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த சச்சார் குழு பரிந்துரை வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அதை ஒட்டி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளும் வெளியிடப்பட்டன. பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அந்த அம்சத்தைக் கையில் எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் மத்தியில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளை இணைத்துக் கொண்டு தேசிய சிறப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலித் அமைப்புகளுடன் சிபிஎம், சிபிஐ வழி நடத்தும் விவசாய தொழிலாளர் இயக்கங்கள், தலித் விடுதலைக்கான தேசிய மேடை, பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசு கட்சி ஒன்றிணைந்து தலித் ஸ்வாபிமான் அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரில் கூட்டு பேரணிகள், இயக்கங்கள் நடத்தப் பட்டுள்ளன. நாட்டின் இதர பகுதிகளுக்கு இவை விரிவாக்கப்படும் திட்டங்கள் உள்ளன.

வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி, வெகுஜன தளத்துடன் கூடிய புரட்சிகர கட்சியாக செயல்பட வேண்டும். நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இடதுசாரி அரசியல் பார்வையுடன் பரிசீலிக்கப்பட்டு, மாற்றுக் கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். ஒரு புறம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலும், மறுபுறம் இடதுசாரி அரசியலும் வரிசைப்படும் போது தான், இதுவா அதுவா என்று மக்கள் யோசிக்க முடியும். முடிவெடுக்க முடியும். இது ஒவ்வொரு முறையும் மத்திய குழு முடிவெடுத்து சொல்லுகிற விஷயமாக இருக்க முடியாது. இந்தப் புரிதலுடன் மாநில, மாவட்ட, இடைக்குழு அளவில், கிளை மட்டத்தில் உணர்ந்து செயல்படுத்தும் நடைமுறையாக மாற வேண்டும்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...