கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும்!

1377
0
SHARE

கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான வெகுஜன இயக்கங்களும், ஆளும் வர்க்கம் கொடுக்கக் கூடிய பலதரப்பட்ட தாக்குதல்களையும், இன்னல்களையும் எதிர் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகிறது. மேலும், முன்னேறவே செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த முன்னேற்றத்திற்கான, அடைந்த வெற்றிகளுக்கான பல்வேறு காரணங்களை இங்கு விளக்க தேவையில்லை. சுருங்கக் கூறின், இடைவிடாத முறையில் பரந்து கிடக்கும் மக்களைத் திரட்டுவது, அவர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்தவது, அவர்களின் அரசியல் உணர்வை மேலும், மேலும் வளர்த்து ஒரு மகத்தான மக்கள் சக்தியை தொடர்ந்து திரட்டிக்கொண்டு இருப்பது தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றிகளுக்கு மூலகாரணம். பொதுப் பிரச்சனைகளில் கூட்டு நடவடிக்கைகள், ஐக்கிய முன்னணி தந்திரங்கள், நெழிவு சுழிவான நடைமுறை தந்திரங்கள், உறுதியான ஸ்தாபன கோட்பாடுகள் – இவையெல்லாம் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

அதே அளவிற்கு ஒரு முக்கியமான பங்கு கம்யூனிஸ்ட்டுகள் இடைவிடாது செய்து வரும் தத்துவார்த்த, அரசியல் பணிகள், பிரச்சாரம் போன்றவற்றிற்கும் பெரிய முக்கியத்துவம் உண்டு. கோடிக்கணக்கான மக்களின் மனதுகளில் இன்று இருந்துவரும் தவறான எண்ணப்போக்குகள், மூடநம்பிக்கைகள், பத்தாம்பசலிக் கருத்துக்கள், முரட்டுத்தனமான ஆன்மீக வாதங்கள் போன்றவை உள்ள சூழ்நிலையில் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்ட எதார்த்தமான கருத்துக்களை பிரச்சாரம் செய்வது தவிர்க்க முடியாத கடமையாகும். தவறான பல கருத்துக்களுக்கு எதிரான இடை விடாது பிரச்சாரத்தை செய்து மக்களின் மனநிலையில் படிப்படி யாக புரட்சிகரமான எண்ணங்களை வளர்ப்பது கம்யூனிஸ்ட்டுகளின் மூலாதாரமான கடமை ஆகும். வெகுஜனப் பணிகள் மட்டும் நடத்தி பிரச்சாரப் பணிகளை மட்டும் இடைவிடாமல் பின்பற்றுவதன் மூலம் மார்க்சிஸ தத்துவத்தின் மீதும், இயக்கத்தின் அடிப்படையான கண்ணோட்டங்கள் மீதும், நம்பிக்கை ஊட்ட முடியாது. அதற்கு முக்கியமான காரணம் – நாம் எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சீரிய கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறோமோ அதைவிட அதிகமாக மக்கள் மத்தியில் பல முறைகளில் தீங்கான, தவறான எண்ணங்களும், கருத்தோட்டங் களும் பரவிக்கொண்டே இருக்கத்தான் செய்யும். சுரண்டும் வர்க்கங்களின் கட்டியான பிடிப்பின் காரணமாக ஊடகங்கள் அனைத்தும் பெருமளவில் சுரண்டும் வர்க்கங்களுக்கு ஆதரவான மனோநிலையை வளர்க்கின்றன என்பது மட்டுமின்றி, கம்யூனிச விரோத எண்ணங்களை தொடர்ந்து பரப்பி வருகின்றன என்பது தான் உண்மை. இவற்றை சந்திப்பதற்கு பிரச்சாரம் ஒரு முக்கிய கருவியாகும்.

எதிரி வர்க்கங்களின் பிரச்சாரம் எனும் கருவியினால் பரப்பப்படும் தவறான எண்ணங்கள், கருத்தோட்டங்கள் ஆகியவை ஒரு பக்கம் இருக்க, இவற்றை தர்க்க ரீதியான வடிவத்தில் இடைவிடாமல் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஏராளமான தத்துவங்களும், செல்வாக்குடன் மனிதர்களின் மனதுகளில் ஆழமான வேர்களை அனுப்புகின்றன. இத்தகைய தத்துவார்த்த ரீதியான எண்ணங்களை சந்தித்து அவற்றின்  தவறான தாக்கத்தை உடைத்தெறிந்து தான் மார்க்சியமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் என்றும் முன்னேறியுள்ளன.

மார்க்சிய தத்துவத்தின் துவக்க காலத்தில்…

17 – 19 ம் நூற்றாண்டுகள் வரை சுரண்டும் வர்க்க கருத்துக்களும், ஆன்மீகவாத கண்ணோட்டங்களும் மட்டும் மேலோங்கி நின்ற காலகட்டமாக இருந்திருக்கின்றது. ஆரம்ப நிலை மதவாதக் கருத்துக்களிலிருந்து ஒடுக்கும் வர்க்கங்களின் ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தும் ஏராளமான நூல்களும், பிரச்சாரக் கருவிகளும் மேலோங்கி நின்ற காலம் இது. அதே நேரத்தில் புதிதாக வளர்ந்து வந்த விஞ்ஞான பார்வைகளும், தொழிலாளி வர்க்க கண்ணோட்ட மும் இதே காலத்தில் வளர்ந்தும் வந்தன. இயல்பாகவே பழைய பிற்போக்கு கருத்துக்களும், நவீன தொழிலாளி வர்க்க கண்ணோட் டம் – விஞ்ஞான கண்ணோட்டம் போன்றவையும் மேலும், மேலும் செல்வாக்குடன் பரவியது.

இந்தப் பின்னணியில் தான், தொழிலாளி வர்க்க இயக்கம் சோசலிசத்திற்கான போராட்டமும் வேகமாக முன்னேறின. இந்த புதிய முன்னேற்றத்தின் முன்னோடிகளாக பெரும் தத்துவ மேதைகளாக வளர்ந்து நின்ற கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்றவர் கள் அன்று வேகமாக பரவிவந்த விஞ்ஞான கண்ணோட்டங்களுக்கு ஆழமான வடிவத்தை அளித்து, அதன் மூலம் மார்க்சிய தத்துவ ஞானமும், விஞ்ஞான சோசலிசம் என்ற மகத்தான தத்துவத்தையும், நடைமுறையையும் உலகிற்கு அளித்தனர். இவைதான் இன்று புதிய சகாப்தத்தின் தத்துவமாகவும், நடைமுறையாகவும் வெற்றிக் கொடியை ஏந்தி முன்னேறுகின்றன.

ஆயினும், மார்க்சிய தத்துவமும், சோசலிச கண்ணோட்ட கருத்துக்களும், இம் மாமேதைகளின் மூளைகளில் ஏனோதானோ என்று தோன்றியவை அல்ல. தொழிலாளி வர்கக்கத்தின் வேகமாக பரவிவரும், போராட்ட அலைகள் இந்த தத்துவங்களுக்கு ஆதாரமாக இருந்தன. அதே நேரத்தில் அந்த காலத்தில் பிற்போக் கான ஏராளமான தத்துவங்களும் பரவி வந்தன. ஆன்மீக வாதத்தை ஆதாரமாகக் கொண்டு (எண்ண முதல் வாதம்) பெருமளவில் தத்துவ உலகில் செல்வாக்குடன் செயல்பட்ட பல பெரிய முக்கிய தத்துவ ஞானிகள் இருந்தனர். நவீன விஞ்ஞான சோசலிச கருத்துக்களையும், பொருள் முதல்வாத கண்ணோட்டத்தையும் உயர்த்திப்பிடித்த மார்க்சும், ஏங்கெல்சும் இயல்பாகவே இந்த எண்ண முதல் வாதக்கருத்துக்களையும், அதன் உலகப் பார்வையையும் எதிர் கொண்டனர். அவர்களின் ஆபத்தான விஞ்ஞானத்திற்கு புறம்பான சுரண்டும் வர்க்கங்களுக்கு கேடயமான தத்துவத்தையும், கண்ணோட் டங்களையும் ஆணித்தரமாக விமர்சித்தனர். புதிய கருத்துக்களின் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டி வந்தது. இந்தப்பிற்போக்கு தத்துவ ஞானிகளில் முக்கியமானவர்கள் ஹெகல் என்ற ஜெர்மன் அறிவாளியும், அவரைப் பின்பற்றிய இன்னொரு பிரபல தத்துவ ஞானியான ஃபயர் பாக் என்பவரும் ஆவர். ஆக, ஹெகல், ஃபயர்பாக் போன்றவர்களின் தத்துவார்த்த வாதங்களை உறுதியாக எதிர்த்து உடைத்தெரிந்துதான் மார்க்சிய தத்துவம் முன்னேறியது என்பது தான் உண்மை. இந்த தத்துவப் போராட்டத்தை தெளிவுடனும், உறுதியுடனும் மார்க்சும், ஏங்கெல்சும் நடத்தியிராவிட்டால் மார்க்சிய தத்துவம் இந்த அளவிற்கு பாட்டாளி வர்க்கத்தின், மனித சமுதாயத்தின் முற்போக்கு பகுதிகளின் தத்துவமாக உயர்ந்திருக்காது.

மார்க்சிய  தத்துவத்தின் மூலாதாரமான கண்ணோட்டத்தை தர்க்க இயல் பொருள் முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. (Dialetical Materailism) அந்தக் காலத்தில் படுபிற்போக்கான தத்துவார்த்த கண்ணோட்டங்களை வெளியிட்டு  பிரச்சாரம் செய்த ஒரு அறிவாளியின் பெயர் டூரிங் (Duhring). அவருடையபெரிய நூலில் வெளியிடப்பட்ட  ஏராளமான, தவறான, பிற்போக்கான கருத்துக்களையும், அணுகுமுறையையும் மிகக் கூர்மையாக  விமர் சித்து ஏங்கல்ஸ் அவர்கள் எழுதிய பிரபலமான புத்தகத்திற்கு டூரிங்குக்கு மறுப்பு (Anti Duhring) என்று பெயராகும். இந்த நூல் தான் தர்க்க இயல் பொருள் முதல் வாதத்தின் மிக அடிப்படையான ஒரு நூலாகக் கருதப்படுகிறது. இப்புத்தகத்தைத் தொடர்ந்து இயற்கையின் தர்க்கஇயல் (Dialetics of Nature) என்னும் மிகவும் முக்கியமான புத்தகமானது இன்றும் மார்க்சியத்தின் அடிப் படைகளை விளக்கும் பாடப் புத்தகத்தைப் போல் கருதப்படுகிறது. இதே போல, மார்க்சும், ஏங்கல்சும், அவர்களைச் சார்ந்து நின்ற தோழர்களும், தத்துவஞானத் துறையில் அன்று பிரபலமாக இருந்த பிற்போக்கான கருத்தோட்டங்களை உடைத்தெறியக் கூடிய வகையில் ஏராளமான படைப்புகளை வழங்கினர். ஆக, கருத்துப் போராட்டத்தை தத்துவஞானத் துறையில் கூர்மையாக நடத்தித்தான் மார்க்சிய தத்துவம் உருப்பெற்றது மட்டுமல்ல, வெற்றிப்பாதையில் மார்க்சியத்தை முன்னேறச் செய்தது என்ற உண்மை இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கும் ஒரு ஆழமான கண்ணோட்டமாகும்.

இதேபோல், எந்த காலக்கட்டத்திலும், ஐரோப்பாவில் பல நாடுகளில் பிரபலமாக இருந்த மன்னராட்சி – நிலப்பிரபுத்துவம், சமூக – அரசியல் பிடிப்பிணை எதிர்த்து பரவலான ஜனநாயக எண்ணங் கொண்டவர்களின் போராட்டத்தை மார்க்சும், ஏங்கெல்சும் கூர்மையாகவே நடத்தினார்கள். நிலப் பிரபுத் துவத்திற்கும், அதன் உலகப் பார்வைக்கும் எதிராக ஜனநாயக வாதிகளின் வாதங்களை ஆதரித்த நேரத்தில், மார்க்சும், ஏங்கெல்சும் இவர்களின் குறுகிய எண்ணங்களையும், வாதங்களையும் விமர்சிக்க தவறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும். (ஏனெனில், இத்தகைய ஜனநாயகவாதிகள் உண்மையாகவே வளர்ந்து வரும் பூர்ஷ்வா கண்ணோட்டங்களைத் தான் பிரதிபலித்தன. மார்க்சும், ஏங்கெல்சும் பூர்ஷ்வா தத்துவங்களை உறுதியாக எதிர்த்து தொழிலாளி வர்க்க உலகப் பார்வையை  உயர்த்திப் பிடித்தவர்கள் என்பதால் இந்தப்போராட்டத்தையும் அலட்சியப்படுத்தவில்லை. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், அதற்காக பூர்ஷ்வா வர்க்கத்தின் தவறான கண்ணோட் டங்களை கூர்மையாக விமர்சிக்கும் பணியிலிருந்து இம்மேதைகள் பின்வாங்கவில்லை, அந்தத் தத்துவார்த்தப் போராட்டத்தை புறக்கணிக்கவும் இல்லை!)

சோசலிசத்திற்கான  போராட்டத்திற்கான அறைகூவல்

மேலே குறிப்பிட்ட இப்பணிகள் எல்லாம் ஈடுபட்டிருந்த கட்டத்தில் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி பொங்கி வந்த வண்ணம் இருந்தது. வளர்ந்து வந்த முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தை மிகக்கொடூரமான முறையில் கொடுமைப் படுத்தி வந்த இந்த காலத்தில், இயல்பாகவே மிகச்சிரமமான சூழலில் கூட ஆங்காங்கு தொழிலாளிவர்க்கம் வீரமிக்க போராட்டங்களை நடத்தி வந்தது. முதலாளி வர்க்கம் புரிந்து வந்த அக்கிரமங்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக பெருமளவில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தக் கொந்தளிப்பானது பொதுப் படையான முதலாளித்துவ எதிர்ப்பு எண்ணங்களுக்கு உரமூட்டியது. முதலாளித்துவம் இல்லாத சமத்துவமான ஒரு சமுதாய அமைப்பு உருவாக வேண்டுமென்ற எண்ணங்கள் பரவி  வந்தன.

இந்த நேரத்தில் தான், கம்யூனிஸ்ட் லீக் என்னும் பெயரில் புதிய சமுதாயத்திற்காகப் போராடும் போர் வீரர்கள் சோசலிசத் திற்கான போராட்டத்தில் வழிகாட்டுவதற்காக தோன்றியது. மார்க்சும், ஏங்கெல்சும் இந்த அமைப்பிற்கு வழிகாட்டினார்கள். இந்த அமைப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறைகூவல் தான் – கம்யூனிஸ்ட் அறிக்கை. 1848 ல் வெளியிடப்பட்ட இந்தப் பிரகடனமானது உலகத்தின் வரலாற்றையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்ற வரலாற்று ஆவணமாகும்.

இந்த அறைகூவலானது வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கத்தின் சோசலிசத்திற்கான போர் முரசு ஆகும். முதலாளித் துவத்தை கூர்மையாக கண்டித்தும், விமர்சிக்கும் இந்த நூலானது இன்றைய காலக்கட்டத்திலும் மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான நிலைபாடுகளை பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த ஆதாரமான பிரகடனத்தில் மார்க்சும், ஏங் கெல்சும் அன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்திலும், போராட்ட அரங்குகளிலும், வலுவாக காணப்பட்ட தவறானகண்ணோட்டங் களை விமர்சித்தனர் என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது. உதாரணமாக, முதலாளித்துவமே ஒழிக்கப்பட்டு  சமத்துவ மான ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்ற ஒரு கற்பனைவாத (கனவு போன்ற) எண்ணம் அந்தக்காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. அனைத்தும் சமமாக இருக்கவேண்டும், சுரண்டல் கூடாது, அனைவருக்கும் உணவும், உடையும், சமயவாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பரவலாக இருந்த ஒரு காலத்தில் இவையெல்லாம் நியாயமான ஆசைகள் தான். ஆனால், இவை சாத்தியமாக வேண்டுமானால், தொழிலாளி வர்க்க அரசு  அடிப்படையான முன் தேவையாகும். முதலாளி வர்க்க ஆட்சியை வீழ்த்தி தொழிலாளி வர்க்க ஆட்சியை நிறுவாமல், இக்கனவுகளெல்லாம் கனவுகளாகவே இருக்கும் என்று மார்க்சும், ஏங்கெல்சும் எடுத்துரைத்தனர். அன்று இத்தகைய கற்பனை வாத சோசலிசத்தின் கண்ணோட்டத்தை முன்வைத்த பல பிரபல ஆசிரியர்களை மார்க்சும், ஏங்கெல்சும் கூர்மையாக விமர்சித்தனர்.

செயிண்ட்.சைமன், ஃபுரியர் போன்ற பல தொழிலாளி வர்க்கத் தலைவர்களும், நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்தனர் என்ற போதிலும், அவர்கள் கற்பனைவாதிகளாக இருந்த காரணத்தால் சோசலிசத்திற்கான போராட்டத்தை வழிநடத்திச் செல்ல முடியாது என்று இம்மேதைகள் விமர்சித்தனர்.  ஆக, ஜீவாதாரமான கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூட தவறான கற்பனை வாத கருத்துக்களை மார்க்சும், ஏங்கெல்சும் விமர்சிக்க தயங்க வில்லை. எவ்வளவு நல்லெண்ணத்துடன் போராடினாலும், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை புறக்கணித்து சோசலிச இயக்கம் வெற்றி பெறவே முடியாது என்ற தத்துவார்த்த நிலையில் மார்க்சும், ஏங்கெல்சும் உறுதியாக நின்றனர். மிக வேண்டியவர் களாக இருப்பினும், விமர்சிக்க வேண்டிய  சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்யாமல், இயக்கத்தை உறுதியுடன் நடத்தி செல்ல முடியாது என்று  அவர்கள் போதித்தனர்.

ஆக மார்க்சிய தத்துவத்தின் தோற்ற காலத்திலும், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான காலத்திலும், பிற வர்க்கக் கருத்துக்களையும், தவறான சித்தாந்த நிலைபாடுகளையும் எதிர்த்து போராட வேண்டியது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆழமான கருத்தாகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதல் இந்த விசயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தொடரும்

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...