கேள்வி – பதில்: மே 2016

1338
0
SHARE

கேள்வி: பெண் விடுதலை பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் வர்க்க போராட்டங்களின் பங்கு என்ன?

பதில்: ஆண்களுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று போராடி சமூகத்தை மாற்றுவது தான் பெண்களின் விடுதலையை உறுதி செய்யும். அதே சமயம், ஆண்களை விடவும் கூடுதலாக, பெண்கள் பாலின ஒடுக்குமுறைக்கும் சேர்த்தே ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒடுக்குமுறையை வர்க்க ஒடுக்குமுறையின் மூலம் பாதிக்கப்பட்ட ஆண்களும் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் ஒருங்கே பார்க்க வேண்டி இருக்கிறது.

இவ்வாறு இரட்டை ஒடுக்குமுறை நடப்பதைப் பார்க்கவேண்டுமென ரஷ்யப் புரட்சி வீராங்கனை அலெக்சாண்ட்ரா கொலன்தாய் வலியுறுத்தினார். அது மட்டுமல்ல. பெண் விடுதலைக்கு வர்க்க போராட்டங்கள் முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஒரு பெண் உழைப்பாளியின் தேவைகளும், ஒரு ஆண் உழைப்பாளியின் தேவையைப் போலத்தான் என்று சொல்ல முடியாது. தொழிலாளிகள் என்ற அடிப்படையில் ஆண் பெண் இருவரும் முதலாளிகளால் ஒடுக்கப்படுகின்றனர். அதே சமயம் பணி இடங்களில் பெண்கள் பிரத்தியேகமாக சில பிரச்சினை எதிர் கொள்கிறார்கள். திறமைக் குறைவான பணிகளில் அமர்த்தப்படுதல், ஆண்களை விடவும் குறைவான கூலி அளித்தல், என்பதை சர்வ சாதாரணமாகக் காண முடியும். கூடவே, கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்த்தல், அன்றாட வீட்டுப் பணிகள் என இரட்டை சுமையை சுமக்கிறார்கள். அது மட்டுமின்றி பனி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் பாலின் ஒடுக்குமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்ணிய இயக்கங்கள், பல சமயங்களில் வர்க்க ரீதியாகவும் அவர் ஒடுக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் கண்டுகொள்வதில்லை.

பெண்ணை அவளுக்கு எதிராக இழைக்கப்படும் இரண்டு விதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வைக்க வேண்டும். விஷேசமாக பெண் சந்திக்கும் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடுவதும் அவசியம். ஒட்டு மொத்த போராட்டத்தில், பெண் உழைப்பாளிகளின் விசேஷ கோரிக்கைகளை விசேஷ அம்சமாக பார்க்க வேண்டும். வர்க்க போராட்டங்களில் அவர்களை முழுமையாக ஈடுபடுத்தி, ஒன்று திரட்டுவது, பாலின சமத்துவத்தை நோக்கிய போரட்டத்தை வலுவாக கொண்டு செல்ல உதவும்.

எந்த முதலாளித்துவ கட்சிக்கும் இல்லாத, பெண்ணடிமைதனத்தின் தோற்றம் பற்றிய ஆழமான, வரலாற்று ரீதியில் மட்டுமின்றி, தர்க்க இயல் ரீதியான புரிதல் மார்க்சீயத்திற்கு மட்டுமே உள்ளது. பாலின சமத்துவம் என்பது மார்க்சீய கொள்கையின் அடிப்படை நியதிகளில் ஒன்று. தோழர். பி.டி .ரணதிவே கருத்துக்கள் இங்கே நினைவு கூறத்தக்கவை. “ஒரு காலை முதலாளித்துவ உலகிலும், மற்றொரு காலை முந்தைய கால கட்டத்திலும் வைத்துக் கொண்டுள்ள இந்தியாவில் பெண்களுக்கு சமத்துவம் மறுக்கப்படுவது ஆச்சரியமல்ல. தொழிலாளி வர்க்க போராட்டத்தின் ஒரு அம்சமாக இக்கொடுமையை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம் போராட வேண்டியுள்ளது, பெண்களுக்கு பயிற்சி அளித்து ஆண்களோடு பெண்களும் தொழிற்சங்க தலைமையை ஏற்க வழி செய்வது நமது தொழிற்சங்க தலைமையின் பொறுப்பாகும். ஆயிரமாயிரம் பெண்கள், ஆண் தொழிலாளர்களுக்கு சமமாக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். சிறைவாசம், அடக்கு முறைகளை அனுபவிக்கின்றனர். உழைக்கும் பெண்கள் பிரச்சினை என்பது பெண்கள் மட்டும் அக்கறை கொள்ள வேண்டிய விஷயமல்ல. இது முதலாளித்துவத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்க போராட்டத்தின் ஒரு அம்சமே ஆகும். சுரண்டலிலிருந்து உழைக்கும் வர்க்கம் விடு படும் பொழுது பாலின சமத்துவம் சாத்தியமாகும். பெண் விடுதலை என்பது ஒடுக்கப்பட்டோரின் விடுதலை போராட்டத்துடன் இணைந்ததாகும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்