கொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்

613
0
SHARE

‘கைகொடுக்கும் அரசு மருத்துமனைகள்: கைவிரிக்கும் கார்ப்பரேட்டுகள்

டாக்டர்.எஸ்.காசி
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்

எப்போழுது டெங்கு, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டாலும், பொது சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளையும், குறைகளையும் அவை வெளிப்படுத்துவது இயல்பு. இந்தியாவில் காணப்படும் நோய்களில் 25% தொற்று நோய்களே ! காசநோய்க்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2 லட்சம் பேர் பலியாகிறார்கள். உலக அளவில் பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களில், ஐந்தில் ஒருவர் இந்தியர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் ஆயிரக்கணக்கானோர் – பெரும்பாலும் ஏழை மக்கள் – இறந்துள்ளனர். இருந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள், பொது சுகாதாரக் கட்டமைப்பைக் கண்டுகொள்வதில்லை. மாறாக தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகள் வசம் மருத்துவ சேவைகளை கைமாற்றுவதிலேயே அவை கவனம் செலுத்துகின்றன.

“பொதுமுடக்கத்தின்” நோக்கங்கள் இரண்டு: 1) கொரோனா வைரஸ் நோயின் பரவலைத் தடுப்பது அல்லது குறைப்பது. 2) இதனால் கிடைக்கும் கால அவகாசத்தை பயன்படுத்தி, பொது சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது. முதல் நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்றது போல் தோன்றினாலும், இரண்டாவது நோக்கத்தை முறையாக நிறைவேற்றாததால், நாம் பெற்ற ஆரம்பகால வெற்றியும் வீணடிக்கப்படுகிறது.

“பொதுமுடக்கம்” அல்லது ”ஊரடங்கு” காலத்தில் ஏற்கனவே இயங்கிவரும் பொதுத்துறை மருத்துவமனைகளே கை கொடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் புதியதாக உள்கட்டமைப்பை விரிவுபடுத்தாமல், ஒரு சில மருத்துவமனைகளை, ”கோவிட்” மருத்துவமனைகளாக மாற்றியதைத் தவிர, எந்த முன்னேற்றத்தையும்  ஏற்படுத்தவில்லை. ஒரு சில இடங்களில், விளையாட்டு மற்றும் வணிக வளாககங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவற்றை, அரைகுறை வசதிகளுடன், ‘தனிமைப் படுத்துத்தல்” (Quarantine) மையங்களாக மாற்றினார்களே தவிர புதியதாக முதலீடோ அல்லது மருத்துவமனைகளோ உருவாக்கப்படவில்லை. பொது சுகாதாரத்திற்காக, உலகிலேயே மிகக்குறைந்த நிதியை செலவுசெய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இந்தியா உள்ளது. ஒவ்வொரு நாடும், தன் தேசிய மொத்த உற்பத்தியில் (GDP), குறைந்தபட்சம் 5 முதல் 6 சதவீதத்தை பொது சுகாதாரத் திட்டங்களுக்கு செலவிட வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் (WHO), கூறியுள்ள நிலையில், 1.2 – 1.3 சதவீதத்தை மட்டுமே இந்தியா ஒதுக்குகிறது. மேலும், தடையற்ற தனியார்மயம் மற்றும் தாராளமயத்தின் விளைவாக, உலகிலேயே மிக அதிகமாகத் தனியார் மயமாக்கப்பட்ட சுகாதார சேவைகளை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் 78% தன் சொந்த செலவில்தான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

இதனால், 3500 பேருக்கு ஒரு மருத்துவர், [WHO – 1000 பேருக்கு ஒரு மருத்துவர்; கியூபா 500க்கு 1] ஒரு லட்சம் பேருக்கு 70 பொதுப் படுக்கைகள் மற்றும் 2.3 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், (சீனா 420/3.5, இத்தாலி 340/12.5) என்ற நிலையில்தான் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஓரளவு (தேசிய சராசரியை ஒப்பிடும் போது) பொது சுகாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன. இருந்தபோதிலும், தமிழ்நாடு  கேரளாவைப் போல கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறமுடிவில்லை அதற்கு, கேரள அரசைபோல், மக்கள் மீது அக்கறையும் அறிவுப்பூர்வமான அணுகுமுறையும் தமிழக அரசுக்கு இல்லை என்பதுதான் காரணம். 24 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் & 24 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் இருந்தபோதும், வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதைக் காணமுடிகிறது. மகாராஷ்டிரா மாநிலம் – தனியார் துறை பெரிய வளர்ச்சிபெற்றுள்ள போதிலும், பொது சுகாதாரக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பதால், மிகப்பெரிய எண்ணிக்கையில் நோய்த்தொற்றையும், இறப்புகளையும் சந்தித்து வருகிறது. அதே போல பலவீனமான பொது சுகாதாரக் கட்டமைப்புடன், அரசியல் காரணங்களும் ஒன்று சேர, குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இறப்புகளை எதிர்கொள்கின்றன. தேசிய அளவில், கொரோனாத் தொற்று இறப்பு விகிதம் 3.5% ஆக இருக்கும் போது, மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் 5 முதல் 10 சதவீதம் இறப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

பெரிய தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், வசதிபடைத்த பணக்காரர்களுக்கு மட்டுமே “கோவிட்-19″ சிகிச்சையளித்து வருகிறார்கள். தொற்று அறிகுறியுடன் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு கூட பரிசோதனைகளுக்காக ஓரிரு நாட்கள் சிகிச்சையளித்து விட்டு, அரசு ‘கோவிட்” மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்து விடுகிறார்கள் நோய்த்தொற்றை உறுதிப்படுத்த செய்யப்படும். ‘RT – PCR’ என்ற பரிசோதனையை இலவசமாக செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியபோது, கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தனியார் ஆய்வகங்களும் அதை ஏற்க மறுத்து, அவர்களுக்கு சாதகமான நீதிமன்ற ஆணையைப் பெற்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகள் வளர்ந்ததன் மூலம் “மருத்துவ சுற்றுலா (MEDICAL TOURISM)வும், மருத்துவ வணிகமும் பல பில்லியன் டாலர்களுக்கு வளர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் ”நாங்க இருக்கோம்”; நாங்க பார்த்துக்கிறோம்’ என்று விளம்பரம் செய்யும் கார்ப்பரேட்டுகள், இந்தக் கொரோனாத் தொற்றுக் காலத்தில் காணாமற் போய்விட்டார்கள்.

கொரோனாத் தொற்று பரவலைத் தடுப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும் பல புதிய சவால்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. பொது சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனத்தாலும், பற்றாக்குறையாலும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் நோய்த் தொற்றுக்கு ஆளாவதும், சிலர் இறந்துபோகவும் நேரிட்டுள்ளது.10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்துள்ளனர். தரமான பாதுகாப்புக் கவசங்களையும், பரிசோதனைக் கருவிகளையும் உரிய நேரத்தில் வழங்காதது; உரிய பயிற்சி அளிக்காதது; தேவையான எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களை நியமிக்காதது; அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிடங்கள் ஏற்பாடு செய்யாதது போன்ற பல காரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும், ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள மருத்துவர், செவிலியர் போன்ற மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை அவர்கள் உணரவில்லை.

பொது சுகாதாரக் கட்டமைப்பின் மூன்றாவது முக்கிய அம்சம் மருந்து / மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி குறித்ததாகும். “மேக் இன் இந்தியா” என்று வெற்றுக்கோஷத்தை நீட்டி முழக்கினார்கள். ஆனால் பொதுத்துறையில் மருந்து மற்றும் உபகரணங்கள் தயாரிப்பதை தவிர்த்து, கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்ததன் விளைவு, கொரோனாப் பரிசோதனைக்கான கருவிகளை (Test Kits) சீனாவிடமிருந்தும், தென்கொரியாவிடமிருந்தும் வாங்கவேண்டியுள்ளது.  அமெரிக்க அதிபர் டிரம்ப்-இன் மிரட்டலுக்குப் பயந்து, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் பல தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைந்துள்ளனர். ”மருத்துவ ஆராய்ச்சி” என்பது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒன்று ”தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (IMCR), செயல்பாடும், வெளிப்படைத் தன்மையுடனும், அறிவியல் அடிப்படையிலும் இல்லை. ஹிந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடட் (HLL), போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து, மருத்துவ பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள் முதலியவற்றை நம் நாட்டிலேயே தயாரித்திருக்க முடியும். கொரோனாத் தடுப்பூசித் தயாரிப்பதற்கு HLL நிறுவனத்தின் துணை நிறுவனமான செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பயோலாஜிகல் லிமிட்டெட் (Hindustan Biological Limited HBL) நிறுவனத்தில் முதலீடு செய்து பயன்படுத்தியிருக்கலாம். மாறாக தனியார் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுவரை தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” அல்லது ”திரள் நோய்எதிர்ப்புசக்தியை” (HERD IMMUNITY) குறித்து கருத்தாக்கம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ”திறன் எதிர்ப்புசக்தியை தடுப்பூசிகளைக் கொண்டு உருவாக்குவதுதான் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது. மாறாக குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீத மக்களுக்கு நோயைப் பரப்புவதன் மூலம் இதனை அடையலாம்” என்ற நடைமுறை இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு ஆபத்தானது. கரோனோத் தொற்று ஏற்பட்டால், 5% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படலாம். அதில் இறப்போர் எண்ணிக்கை 1% என்று எடுத்துக்கொண்டாலும், பல லட்சம் பேர் இறந்து போக நேரிடும். இது போன்ற எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டால் பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பால் எதிர்கொள்ள முடியாது. எனவே ”தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து “திரள் நோய்எதிர்ப்புசக்தி” வரும் வரை, சமூக இடைவெளி, தனிமனித சுகாதார முறைகள் மூலம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை தவிர வேறுவழியில்லை. வலுவற்ற பொது சுகாதாரக் கட்டமைப்பின் பின்னணியில், ICMRன் சமீபத்திய அறிவுறுத்தலைப் புரிந்து கொள்ளவேண்டும். “தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கூட வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறலாம்; மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோரில். தீவிர நோய்த் தொற்று தவிர பிறருக்கு, ”நோயத்தொற்று இல்லை” என்பதை உறுதிசெய்யத் தேவையில்லை” போன்ற வழிகாட்டுதல்கள் பலவீனமான பொதுசுகாதாரக் கட்டமைப்பை நம்பி வரும் நாட்களில் மக்கள் சிகிச்சைபெற முடியாது என்பதை உணர்த்துகிறது.

கொரோனாத் தொற்றை ஒரு வாய்ப்பாக கருதி, பொதுசுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்த உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலந்தோறும் தொற்று நோய் ஆராய்ச்சி நிலையங்களையும், (புனேயில் உள்ள தேசிய வைரஸ் இயல் நிறுவனம் போல), மாவட்டந்தோறும் தொற்று நோய் சிறப்பு மருத்துவமனைகளையும் நிறுவவேண்டும். பொது சுகாதாரத்தில் தனியார் மயம் முழுவதுமாகக் கைவிடப்படவேண்டும். அனைவருக்கும் இலவசமாக அடிப்படை சுகாதார சேவைகள் கிடைக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்தாலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பல்வேறு கொள்ளை நோய்களிலிருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற முடியும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்