தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்!

2393
0
SHARE
KONICA MINOLTA DIGITAL CAMERA

தோழர் பி.டி. ரணதிவே அவர்கள் வலியுறுத்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்!

– அன்வர் உசேன்

1991ம் ஆண்டு துவங்கப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அனைத்து பகுதியினரும் பாதிக்கப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் இக்கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு துன்பங்களை அளித்தன. இக்கொள்கைகளுக்கு எதிராக அனைத்து பகுதியினரும் போராடியுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக மிக அதிகமாக இயக்கம் நடத்தியது தொழிலாளி வர்க்கம்தான்!

கடந்த 25 ஆண்டுகளில் 16க்கும் அதிகமான அகில இந்திய வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இந்த இயக்கங்கள் காரணமாக தவறான கொள்கைகளின் தாக்குதல்கள் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த கொள்கைகளை முற்றிலுமாக தடுக்க இயலவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் மக்களும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கொள்கைகளால் பாதிக்கப்பட்டனர். இதே கொள்கைகளைதான் தி.மு.க. அ.இ.தி.மு.க. போன்ற மாநில கட்சிகளும் அமுல்படுத்தின. எனினும் உழைக்கும் மக்கள் இதே அரசியல் கட்சிகளுக்குதான் தேர்தல்களில் ஆதரவு அளித்தனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு காரணங்களை குறிப்பிடுவது தவறாகாது. ஒன்று தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு மட்டம். மற்றொன்று தொழிலாளி வர்க்கம் தனது நேச வர்க்கங்களை அணிதிரட்டுவது தொடர்பானது!

தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம்
இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்தும் தொழிலாளி வர்க்கம் சரியான உணர்தலை பெற்றிருக்க வேண்டும் என இந்திய பொதுவுடமை ஆசான்களில் ஒருவரான தோழர். பி.டி ரணதிவே அவர்கள் திரும்பத்திரும்ப கூறிவந்தார். “புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்” எனும் தனது புகழ்பெற்ற கட்டுரையில் தோழர்பி.டி ரணதிவே அவர்கள் குறிப்பிடுகிறார்:

“இப்போராட்டத்தை வழிநடத்த வேண்டிய வர்க்கம் தனது தலைமைப்பாத்திரத்தை உணராமல் உள்ளது.”

தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப்பாத்திரத்தை உணர வேண்டும். அது இல்லாமல் மக்கள் ஜனநாயக புரட்சி சாத்தியமில்லை. ஆனால் அத்தகைய உணர்வு தொழிலாளி வர்க்கத்திற்கு இல்லையெனில் அது மிகப்பெரிய பலவீனம். அந்த பலவீனத்தை களைவது எப்படி? இக்கேள்வியை எழுப்பி அதற்கு பதில் தருகிறார் தோழர். பி.டி. ஆர் அவர்கள்:

“முதலில் தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் பொருட்டு பொது இயக்கத்தை உருவாக்கிட இலட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றுபட்ட இயக்கத்தில் ஈடுபடுத்துவது; அதே சமயத்தில் விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திடவும் மக்களின் இதர ஜனநாயக பகுதியினரின் நலன்களை பாதுகாத்திடவும் தொழிலாளிவர்க்கத்தை செயல்படவைப்பது”

தோழர். பி.டி. ஆர் அவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு அதன் தலைமைப் பாத்திரத்தை உணர்த்திட இரு கடமைகளை முன்வைக்கிறார். ஒன்று தன் சொந்த பொருளாதர மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்காக மேலும் மேலும் அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்களை அணிதிரட்டிட தொழிலாளி வர்க்கத்தை ஈடுபடுத்துவது. இரண்டாவது தனது நேச வர்க்கங்களுக்காக குறிப்பாக விவசாயிகளின் நலன்களுக்காக தொழிலாளி வர்க்கம் களத்தில் ஈடுபடுவதை உத்தரவாதம் செய்வது. இந்த இரு கடமைகளும் நிறைவேற்றப்படுவதுதான் தொழிற்சங்கவாதம் எனும் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து தொழிலாளிவர்க்கத்தை மீட்டெடுப்பதற்கு
ஆரம்பபணி எனவும் தோழர். பி.டி. ஆர். அவர்கள் ஆணித்தரமாக கூருகிறார்.

இதே கட்டுரையில் தோழர். பி.டி. ஆர். அவர்கள் இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார்:

“தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் நிலைநாட்டுவது என்பது மக்களை குறிப்பாக விவசாய வர்க்கத்தை வென்றெடுப்பது என்பதாகும்”

விவசாய வர்க்கத்தை தொழிலாளி வர்க்கம் வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை இடைவிடாது தோழர். பி.டி. ஆர். அவர்கள் முன்வைக்கிறார். அதே சமயத்தில் விவசாயி வர்க்கம் பல பிரிவுகளை கொண்டுள்ளது. சிறு குறு விவசாயிகள், மத்தியதர விவசாயிகள், பணக்கார விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் என பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் நமது வலுவான நேச சக்திகள் எவை என்பது குறித்தும் உணர்தல் இருக்க வேண்டும் எனவும் தோழர். பி.டி. ஆர். அவர்கள் குறிப்பிடுகிறார். கிராமப்புற பாட்டாளிகளான விவசாய தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதும்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னுரிமைப்பணியாக இருக்க வேண்டும் எனவும் தோழர். பி.டி. ஆர். அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் எனும் கோட்பாடை அங்கீகரிக்காத இயக்கம் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியாக இருக்க இயலாது. மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் உள்ள முக்கிய சித்தாந்த வேறுபாடுகளில் இக்கோட்பாடும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பாத்திரத்தை உணர வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கு அந்த உணர்தலை உருவாக்குவது ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னுரிமைக் கடமையாக இருக்க வேண்டும் எனவும் தோழர். பி.டி. ஆர். அவர்கள் வலியுறுத்துகிறார்.

தொழிலாளி வர்க்கத்தினுள் ஏற்பட்ட மாற்றங்கள்

தொழிலாளி வர்க்கத்தினுள் ஏற்பட்ட சில மாற்றங்களை தொழிற்சங்கங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் தோழர். பி.டி. ஆர். அவர்கள் வலியுறுத்துகிறார். தொழிலளர்களின் ஒரு மிகப்பெரிய பிரிவு தொழிற்சங்கத்தின் வட்டத்திற்கு வெளியே உள்ளது என்பதை மிக ஆழமான விமர்சனபார்வையுடன் தோழர். பி.டி. ஆர். அவர்கள் முன்வைக்கிறார்:

“திரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதிதான்! தொழிலாளர்களில் மற்ற பிரிவினரும் உள்ளனர். சிறு தொழில்களில் பணியாற்றுவோர், முறைசாரா தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைகள் அற்ற இளம் தொழிலாளர்கள், வேலையற்ற பகுதியினர் என இவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்.”

“தொழிற்சங்கங்கள் இவர்களை கண்டுகொள்வது இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகள் இவர்களிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. இவர்களை ஈர்ப்பதும் இல்லை.”

முறைசாரா தொழிலளர்களை திரட்ட வேண்டியதன் அவசியத்தை 1980களிலேயே தோழர். பி.டி. ஆர். அவர்கள் அழுத்தமாக முன்வைக்கிறார்:
“முறைசாரா தொழிலாளர்கள் தொழிலாளி வர்க்கத்தின் மிக முக்கிய தீவீரமாக போராடக்கூடிய பகுதி மட்டுமல்ல; மிகவும் கொடூரமாக சுரணடப்படும் பிரிவும் ஆகும். இப்பெரிய பகுதியை அரவணைக்காமல் அவர்களை இயக்கத்தில் பங்கேற்க உத்தரவாதம் செய்யாமல் நமது தொழிற்சங்க இயக்கம் தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதி என கூறிக்கொள்ள இயலாது”

இப்பிரச்சனை இன்று மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக முன்வந்துள்ளது. இந்திய தொழிலாளர்களில் சுமார் 86% முறைசாரா தொழிலாளர்கள்தான் என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை திரட்டாமல் தொழிற்சங்க இயக்கம் விரிவடைவது சாத்தியமில்லை. கட்சி வளர்ச்சியும் சாத்தியமில்லை என்பதையே சமீபத்திய கட்சி மாநாடு அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன. எனினும் இப்பிரச்சனையை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே தோழர். பி.டி. ஆர். அவர்கள் வலுவாக கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

தனியார் துறையிலும் பொதுத்துறையிலும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதையும் முன்கூட்டியே தெளிவுபடுத்தினார். ஒப்பந்த தொழிலாளர்களை திரட்டாவிட்டால் சங்கம் சுருங்கிவிடும். தொழிற்சங்கம் ஒரு சிறுபகுதியாக உள்ள நிரந்தர தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு குறுகிய அமைப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

வேலையில்லா இளைய சமுதாயம் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியே!

வேலையில்லா இளைஞர்களும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியே என்பதை திரும்பத்திரும்ப தோழர். பி.டி. ஆர். அவர்கள் முன்வைத்தார். வேலையின்மை குறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவரது முன்முயற்சி காரணமாகவே துர்காபூரில் ஒரு மிகப்பெரிய மாநாடு “வேலை உரிமை” என்பதை மையமாக வைத்து சி.ஐ.டி.யூ சார்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாடுக்காக தோழர். பி.டி. ஆர். அவர்கள் எழுதிய தீர்மானம் அவரது மரணத்திற்கு சிலநாட்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கிய ஆவணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துர்காபூர் மாநாடுக்கு பிறகு பல சி.ஐ.டி.யூ சங்கங்கள் வேலையில்லா பிரச்சனையை மையமாக வைத்து இயக்கங்களை நடத்தின. தமிழகத்திலும் அத்தகைய இயக்கங்கள் வலுவாக நடந்தன. அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனுபவம். மேலை நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவிட தனி பிரிவை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி நமது தொழிற் சங்கங்களும் அந்த உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தலித்/சிறுபான்மை தொழிலாளர் பிரச்சனைகள்
தலித் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வந்த தொழிலாளர்களையும் சிறுபான்மை பிரிவிலிருந்து வந்த தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தின் பொது நீரோடையில் இணைப்பதில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டி கீழ்கண்டவாறு அறிவுறுத்துகிறார்:

“அனைத்து தொழிலாளர்களுக்கும் உள்ள பொதுவான கோரிக்கைகளுடன் சேர்த்து தலித் மற்றும் சிறுபான்மை பிரிவிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு வேறுசில பிரச்சனைகளும் கூடுதலாக உள்ளன. சில சமயங்களில் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு பொது கோரிக்கைகளைவிட தமக்கு உள்ள பிரத்யேக பிரச்சனைகள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. அவர்களின் பிரத்யேக கோரிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்காவிட்டால் தொழிற்சங்க இயக்கத்தின் பொதுவான நடவடிக்கைகளில் அவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இந்த பலவீனத்தை களைந்து தொழிற்சங்கங்கள் இப்பகுதி தொழிலாளர்களின் குறிப்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.”

இந்திய சமூகத்தில் நிலவும் சாதியமும் மதவாதமும் தொழிற்சங்கத்தினுள் எத்தகைய பிரதிபலிப்புகளை உருவாக்குகின்றன என்பதையே தோழர். பி.டி. ஆர். அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். தலித் பகுதி தொழிலாளர்களை திரட்டிட பொதுவான தொழிசங்க கோரிக்கைகளுடன் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதே போல சிறுபான்மை தொழிலாளர்கள் குறிப்பாக இசுலாமிய பிரிவிலிருந்து வந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளிலும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகிறார்.

தொழிலாளர்களை மதஅடிப்படையில் பிரிப்பதில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவெறியை அம்பலப்படுத்தும் அதே சமயத்தில் ஜமாயத் இசுலாமி போன்ற இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அணுகுமுறையும் தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார்.

பெண் தொழிலாளர் பிரச்சனைகள்
பெண் தொழிலாளர்களின் பிரச்சனையில் தொழிற்சங்கங்கள் போதிய கவனம் செலுத்துவது இல்லை என்பதை தோழர். பி.டி ஆர். அவர்கள் கடுமையாக விமர்சித்தார். இந்த கவனமின்மை என்பது நிலப்பிரபுத்துவ உணர்வின் வெளிப்பாடு எனவும் கடுமையாக சாடினார். சமூக வளர்ச்சியில் மிகவும் முன்னேற்றமான வர்க்கம் தொழிலாளி வர்க்கம். அத்தகைய வர்க்கம் பெண்கள் பிரச்சனையில் நிலப்பிரபுத்துவ உணர்வு கொண்டிருப்பது ஏற்க இயலாது என்பதை வலுவாக கூறினார்.

உழைக்கும் பெண்களை தொழிற்சங்க இயக்கம் திரட்டவில்லையெனில் அவர்களை சில தன்னார்வ அமைப்புகள் திரட்டுவதும் அது தொழிற்சங்க இயக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதும் நடக்கிறது. இதனை தடுத்திட ஒவ்வொரு சி.ஐ.டி.யூ. சங்கமும் உழைக்கும் பெண்களின் விசேட பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பெண் தோழர்களை சங்கத்தின் தலைமைப்பொறுப்பிற்கு உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இன்றைக்கு உழைக்கும் பெண்கள் இயக்கம் வலுவான அமைப்பாக உருவாகியுள்ளது எனில் அதற்கு தோழர். பி.டிஆர். அவர்களின் விடாப்பிடியான போராட்டம் ஒரு முக்கிய காரணம் எனில் மிகை அல்ல!

பொதுத்துறை பாதுகாப்புக்கு முன்முயற்சி:
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது பொதுத்துறைகளை பற்றி ஆய்வு செய்ய அர்ஜுன் சென்குப்தா எனும் கமிட்டியை அமைத்தார். இக்கமிட்டி பொதுத்துறைகளை கலைத்துவிட்டு அவற்றை தனியாரிடம் தாரைவார்த்திட சில ஆபத்தான ஆலோசனைகளை முன்வைத்தது. இதில் உள்ள சூழ்ச்சியை உணர்ந்த சிஐடியூ பொதுத்துறைகளை பாதுகாக்க வலுவான இயக்கங்களை நடத்துவது என முடிவு செய்தது. தோழர். பி.டி. ஆர். அவர்களின் முன்முயற்சி காரணமாக 1985ல் பெங்களூரில் ஒரு முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. இதுதான் பின்னாளில் பொதுத்துறைகளை பாதுகாக CPSTU எனும் அமைப்பு உருவாகவும் பொதுத்துறையை பாதுகாக்க பல இயக்கங்களையும் நடத்திடவும் காரணமாக அமைந்தது.

இம்மாநாட்டில் உரையாற்றிய தோழர். பி.டி. ஆர். அவர்கள் பொதுத்துறை தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பது மட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதும் தொழிற்சங்கத்தின் முக்கிய தேசக்கடமை என்பதை நினைவுபடுத்தினார். பொதுத்துறை அரசு முதலாளித்துவம்தான். எனினும் இந்தியா போன்ற புதியதாக விடுதலை பெற்ற நாடுகளில் பொதுத்துறை தேசத்தின் சுயச்சார்பை பாதுகாப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. எனவே பொதுத்துறையை பாதுகாக்கும் கடமை தொழிற்சங்கத்திற்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தினார்.

இன்று பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனில் அதற்கு தொழிலாளர்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான் காரணம். இதற்கு வலுவான தொடக்கமாக இருந்தது 1985ல் சி.ஐ.டி.யூ. சார்பாக நடத்தப்பட்ட மாநாடுதான்! இதில் தோழர். பி.டி. ஆர். அவர்களின் பங்கு தீர்மானகரமானது.

அதே சமயத்தில் பொதுத்துறை ஊழியர்கள் உட்பட பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்தல்களில் முதலாளித்துவ கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் போக்கு உள்ளதையும் கவலையுடன் தோழர். பி.டி. ஆர். அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். பல ஆண்டுகளாக சி.ஐ.டி.யூ உறுப்பினராக இருக்கும் ஒரு தொழிலாளி தேர்தலில் இடதுசாரி வேட்பாளருக்கு வாக்களிக்காமல் முதலாளித்துவ கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பது ஏன் எனும் கேள்வியை எழுப்பி கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறார்:

“தொழிற்சங்க இயக்கம் நடைமுறைப்படுத்தும் குறுகிய பொருளாதாரவாதம்தான் இதற்கு காரணம் ஆகும். தொழிற்சங்க இயக்கம் தொழிலாளர்களின் உணர்வை செழுமைப்படுத்துவதில் தவறிவிட்டன” எனவும் விமர்சிக்கிறார். தனக்கே உரிய கூர்மையான நையாண்டி முறையில் அவர் குறிப்பிடுகிறார் “நமது தொழிற்சங்க இயக்க நடவடிக்கைகள் இலாபமா அல்லது நட்டமா என ஆய்வு செய்தால் நட்டம்தான் உள்ளது என்பது வெளிப்படுகிறது”

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதில் நமக்கு தேவையான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை தோழர். பி.டி. ஆர். அவர்கள் கூர்மையாக முன்வைக்கிறார். இந்த பலவீனம் இன்றும் தொடர்கிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் உணர்வு ஊட்டுவது முதல் கடமை. உழைக்கும் மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கடமையை வரலாறு தனக்கு பணித்துள்ளது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும். அந்த உணர்வை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊட்ட வேண்டும்.

தோழர் பி.டி ஆர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு தொழிலாளி வர்க்க போராளி எத்தகைய அரசியல் உணர்வுகளை பெற்றிருக்க வேண்டும்?

  • தன் சொந்த வர்க்கத்தின் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து பல்லயிரக்கணக்கான தொழிலாளர்களை இயக்கத்தில் ஈடுபடுத்தும் உணர்வு.
  • தன் நேச வர்க்கங்களை குறிப்பாக விவசாய மற்றும் விவசாய தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்களை தம் பக்கம் அணிதிரட்ட வேண்டும் எனும் உணர்வு
  • தொழிலாளர்களில் மிகப்பெரும்பான்மையாக உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோரை திரட்ட வேண்டும் எனும் உணர்வு
  • வேலையில்லா இளைஞர்களும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியே எனும் உணர்வின் அடிப்படையில் அவர்களை திரட்டுவது
  • சமூகத்தின் அடிமட்ட பகுதியிலிருந்து தொழிலாளர்களாக பரிணமிக்கும் தலித் மற்றும் சிறுபான்மை தொழிலாளர்களின் விசேட பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது
  • தொழிலாளர் இயக்கத்தை பிளவு படுத்தும் சாதியவாதம் மற்றும் பெரும்பான்மை சிறுபான்மை மதவாதத்திற்கு எதிரான போராட்ட உணர்வு
  • பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பது

ஆகிய உணர்வுகளை ஒரு தொழிலாளி வர்க்க போராளி பெற்றிருப்பது அவசியம் என தோழர் பி.டி.ஆர். அவர்கள் தனது பல்வேறு ஆவணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய உணர்வு இன்றைக்கும் மிகவும் தேவையாக உள்ளது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இருக்க இயலாது. அத்தகைய உணர்வுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றால் இடதுசாரி இயக்கம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுவதை எவராலும் தடுக்க இயலாது!

-இக்கட்டுரைக்கான ஆதாரங்கள்

1. ஆங்கில மார்க்சிஸ்ட் இதழ் (ஜூலை- செப்டம்பர் 1983)
2. தொழிலாளி வர்க்கமும் தேர்தல் முடிவுகளும் (ஒர்க்கிங்க் கிளாஸ் இதழ் /பிப்ரவரி 1985)
3. பெங்களூர் பொதுத்துறை மாநாடு தலைமை உரை/1985
4. சி.ஐ.டி.யூ. பொதுக்குழு தலைமை உரைகள்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்