தோழர் ஹரிபட்….

1549
0
SHARE
தோழர் ஹரிபட்
தோழர் ஹரிபட்

சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.

கர்நாடக மாநிலத்தில் மங்களுர் அருகே பிறந்த ஹரிபட் இளமைப் பருவத்தை தாண்டுவதற்கு முன்னரே வாழ்க்கையின் கடுமைகளை அனுபவித்தவர்.  ஆரம்ப பள்ளியில் கால்வைத்ததோடு சரி, சென்னை நகரம் தன்னை உயர்த்தும் என்று வந்து விட்டார். இடையில் ஆந்திரா வழியாக வந்த பொழுது அங்கே சில காலம் தங்க நேர்ந்தது, அங்கு தெலுங்கான விவசாயிகள் போராட்டத்தை கண்டும் கேட்டும் கற்றது ஏராளம். அவரது லட்சிய நகர் சென்னையில் இத்தகையோருக்கு புகலிடமாக இன்றும் இருப்பது ஹோட்டல் தொழிலே. ஆரியபவனில் டேபிள் துடைக்கும் பையனாக ஹரிபட் வேலைக்கமர்ந்தார். இந்த இளைஞன் அடுத்த சில ஆண்டுகளில் சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தில் புதிய திருப்பத்தை உருவாக்குவதில் பங்களிக்கப் போகும் முன்னோடிகளில் ஒருவனாக ஆவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் நடித்து ஹிரோ ஆகவேண்டுமென்ற கனவோடு இருந்த ஹரிபட்டே, எதிர்பார்த்திருக்கமாட்டார். ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தது அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாயிற்று, கம்யூனிஸ்ட் தலைவர்களின் உதவியோடு பொது அறிவை வளர்த்துக் கொண்டார், ஆங்கிலம் கற்றார், சட்டங்கள், தீர்ப்புகள் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அதைவிட நிர்வாகம் தரும் லாப நட்டக்கணக்கு, வரவு செலவு கணக்கு இவைகளை அலசும் ஞானத்தை வளர்த்துக் கொண்டார். ஒப்பந்தங்களிலே ஒளிந்து கிடக்கும் ஏமாற்றுக்களை காண்பதில் கை தேர்ந்தவரானார். தொழிலாளர்களை, பிளவுபடுத்தவும், ஏமாற்றவும் கூறப்படும் கருத்தக்களை அனுபவங்களை காட்டி அம்பலப்படுத்துவதில் நிபுணரானார். இதற்காக அவர் டியுடோரியல் காலேஜில் சேரவில்லை. கம்யூனிச இயக்கமே அவரது ஆசிரியராக இருந்தது என்றால் மிகையாகாது. சுருக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வாறு பாட்டாளி வர்க்க முன்னோடிகளை உருவாக்குகிறது என்பதின் அத்தாட்சியாக அவர் இருந்தார்.

அன்று சென்னை நகரத் தொழிலாளர்கள் மரத்தை நம்பி படரும் கொடி போல் ஒரு தலைவனை சார்ந்தே இருந்தனர். சங்கம் என்பது ஒரு பெயரளவு அமைப்பே. அதற்கு தலைமை தாங்குபவர்களே தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயித்தனர். அதற்கு காரணங்கள் இருந்தன.1920 களில் சிங்கார வேலர். திரு.வி.க,  சக்கரை செட்டியார் போன்ற தன்னலம் கருதாத தலைவர்கள் தொழிலாளர்களிடையே அவரவர் வழிகளிலே விழிப்புணர்வை கொண்டுவர பாடுபட்ட தால் அந்த நம்பிக்கை ஆழமாக வேர்விட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால் தொழிலாளர்கள் தொழிற்சங்க அமைப்பையும் கூட்டு சக்தியையும் சார்ந்து நிற்காமல் தலைவர்களை நம்பியே இருந்தனர்.

இந்த பலகீனத்தை புரிந்து கொண்ட சென்னை நகர தொழில் அதிபர்கள்.முதலாளி நிர்ணயிக்கிற தலைவரை ஏற்றுக் கொண்டால் வேலைக்கு ஆபத்தில்லை. அதைவிட்டு, தொழிலாளர்கள் கூட்டு பேர சக்தியை காட்டினால் அரசு, அடியாட்கள் உதவியுடன் தொழிலாளர்கள் அடக்கப்படுவர் என்பதை நடைமுறையாக்கிக் கொண்டனர். இந்த நடைமுறை இந்திய முதலாளிகள் பிரிட்டீஷ் முதலாளிகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். இது 1921ல் பின்னி மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோறி வேலைநிறுத்தம் செய்ததை அரசும் பின்னி நிர்வாகமும் இனைந்து கையாண்ட  சூழ்சிகளாகும், வேலை நிறுத்தத்தை உடைக்க வெளியாட்களை வேலைக்கு அமர்த்தல், சாதி, மத வேறுபாடுகளை,பயன்படுத்தி பிளவுபடுத்தல், அடியாட்கள் மூலம் கலவரத்தை தூண்டுதல். துப்பாக்கி சூட்டின் மூலம் பணியவைத்தல். தொழிலாளர்கள் பணிந்து ஆலை திறந்தாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை, தலைமை தாங்கியவர்களை வேலைக்கு எடுக்காமல் குடும்பங்களை பட்டினியில் சாகவிடுதல் ஆகியவைகளே. இந்த யுக்திகளை தொழிலாளர் உறவுக்கு  அரசும், முதலாளிகளும் இலக்கனமாக்கிக் கொண்டனர்.

வேலை நிறுத்த உரிமை சட்டத்திலிருந்தாலும், மீண்டும் பணிக்கமர்த்த நீதிமன்றத்தை நாடலாம் என்றிருந்தாலும் அவைகள் ஏட்டுச் சுரைக்காயாக இருந்தன. இன்றும் அது தான் நிலை.

1950களில் விடுதலைக்குப் பிறகும் துறைமுக தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தொழிற்சங்க இயக்கம் முடக்கப்பட்டது. டிராம்வே தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1967ல் ஆட்சி மாறியது. ஆட்சியை மாற்ற முடியுமென்றால் தொழிற்சாலைகளில் நிலவும் கூலி அடிமை முறைக்கும் முடிவு கட்ட முடியுமென்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மனதிலே  பிறந்தது. ஆனால் கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடிபட்டு செத்தான் அத்தான் என்ற சோகம் தொடர்ந்தது. இத்தகைய கசப்பான அனுபவங்களாலும், சிங்காரவேலரின் வழியில் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் போன்ற மார்க்சியவாதிகளின் பொதுவான அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் தாக்கத்தாலும் 1970களில்  சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தின் திசை மாறியது..

அந்த மாற்றத்தை கொண்டு வருவதில் ஹரிபட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாகி. கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார். மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபின் வி.பி சிந்தனும் அவரும் இனைந்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், முறைசாரா தொழிலாளர் சங்கம் என்று உழைப்பாளி வர்க்கத்தின் உடலுழைப்பால் நடை பிணமாக ஆகும் அடித்தட்டு தொழிலாளர்களை திரட்டினர். இவர்களது நோக்கம் மிக தெளிவாக இருந்தது.

  1. தொழிலாளர்களின் உரிமைகள் கூட்டு பேர சக்தி மூலமே காக்க முடியுமே தவிர, ஒரு  குறிப்பிட்ட தலைவரின் சாதுர்யமல்ல என்பதை தொழிலாளர்களை உணர வைப்பது.
  2. அரசியல், மற்றும், சாதி, மத வேறுபாடுகளை தாண்டிய வர்க்க ஒற்றுமை அவசியமென்பதை உணர வைப்பது,
  3. வேலையில்லாதோரும், அத்தக்கூலிகளும்  முதலாளி களின் கருவியாக பயன் படுவதை தடுக்க அவர்களையும் பாட்டாளி வர்க்கத்தின் பகுதியாக கருதி கூட்டுபேர சக்தி மூலம் காசுவல் காண்டிராக்ட் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  4. தொழிற் தகராறில், காவல் துறையை தலையிட வைக்கும் அரசின் கோட்பாட்டை கூட்டு சக்தி மூலமே தடுக்க முடியும் என்ற ஞானத்தை தொழிலாளர்களுக்கு கொடுப்பது.

இந்த 4 அம்சமும் எந்த அளவிற்கு சென்னை நகர தொழிலாளிக்ளை அசைத்திருக்கும் என்பதை அளக்கும் வாய்ப்பாக 1971ல் எம் ஆர். எப் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் அவர்கள் விரும்பிய வழக்கறிஞராக இருந்த குசேலரை சங்க தலைவராக தேர்ந்தெடுத்தனர். நிர்வாகம் குசேலரை விரும்பவில்லை. சங்க தலைவரோடு சுமூகமாக பேசி பிரச்சினைகளை தீர்க்காமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய தள்ளியது. இதனால் எம் ஆர்.எப் தொழிலாளர் போராட்டம் தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்வு செய்யும் உரிமை யாருக்கு? என்ற பிரச்சினையாக ஆனது. அந்த உரிமை தொழிலாளர்களுக்கில்லை என்று  தி.மு.க அரசும், நிர்வாகமும் கருதியதால் சாம பேத தான தண்ட யுக்திகளை கையாளத் தொடங்கின. 1921ல் பின்னிமில் நிர்வாகமும், அரசும் கையாண்ட அதே சூழ்ச்சிகள் மீண்டும் அரங்கேறின. திருவெற்றியூர் கலவர பூமியானது. தொழிலாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டன,பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். 144 தடை உத்திரவால் தெருக்கள் ரவுடிகள் ராஜ்யமானது.

மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழு எம்.ஆர்.எப் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாவட்டம் தழுவிய கூட்டுப் போராட்டத்தை உருவாக்கிட செயல்பட்டது. ஹரிபட், சிந்தன், பரமேஸ்வரன்  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள்  ஆலை தோறும் சென்று வாயிலில் தொழிலாளர்களிடம் பேசி ஆதரவு திரட்டினர். சென்னை நகர தொழிற்சங்கங்கள் வர்க்க ஒற்றுமைக்கு அடையாளமாக திரண்டு நிற்க வேண்டினர். இதன் விளைவாக அண்ணா சாலையில் (அன்று மவுன்ட்ரோடு) 10 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்ட தொழிலாளர்களின் பேரணி பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கு  அடையாளமாக அமைந்தது.

அரசு தொழிலாளர்களை பயமுறுத்த, குசேலரோடு, வி.பி.சிந்தன், ஹரிபட், பரமேஸ்வரன் நால்வரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் தள்ளியது. ஆனால் போராட்டம் மடியவில்லை, பொது வேலை நிறுத்தமாக ஆனது.  முதலாளி தொழிலாளி உறவை குடும்ப உறவாக பார்க்க வேண்டும் என்ற திராவிட கருத்தின் பொய்மை எடுபடவில்லை. மலையாளி- தமிழன் என்ற இன பேத கருத்தும் காற்றிலே பறந்தது. அந்த சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சி முதலாளிகளையும் அரசையும் பின்னுக்குத் தள்ளியது. தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களுக்குண்டு என்பதையும், அதனைப் பறிக்க வன்முறை பயன்படாது என்பதையும் உணரவைத்தது. அதன் பிறகே தலைவர் யார் என்பதை தீர்மாணிப்பது தொழிலாளர்களின் உரிமை என்பதை அரசும்,முதலாளிகளும் அங்கிகரிக்க தொடங்கினர்.

ஹரிபட் சென்னையில் பல தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பிற்கு தொழிலாளர்களால் அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை கட்டும் பொறுப்பேற்றார். அங்கும் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்க விழிப்புணர்வை தூண்டும் பணியை தொடர்ந்தார்.

ஹரிபட்டை பற்றி சுருக்கமாக கூறுவதென்றால்  தொழிற் சங்க அரங்கில் அவர் பணிபுரிந்தாலும், அவர்  அரசியல் கலக்காத வடிகட்டின தொழிற்சங்கவாதியாக மாறவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட மார்க்சியவாதியாகவே வாழ்ந்தார். அதற்கு காரணம் தோழமை உணர்வின் எடுத்துக்காட்டாக இருந்த ஒரு கூட்டுணர்வின் அங்கமாக இருந்ததே. வி.பி. சிந்தன், பரமேஸ்வரன், கஜபதி, பி.ஜி.கே கிருஷ்ணன், இவர்களின் கூட்டால் உருவானவர். சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட அந்த குழுவின் பங்கில்லாமல் 1970-1990 வரை சென்னை நகரில்  பாட்டாளி வர்க்க போரட்டம் எதுவும் நடக்க வில்லை, என்பதே இந்தக் குழுவின் சிறப்பாகும். அவர்களது வேலைப்பாணி  சமதர்ம சமூகத்தை உருவாக்க ஆசைப்படு வோருக்கு சிறந்த வழிகாட்டியாகும். தொழிற்சங்க இயக் கத்தை பாட்டாளி வர்க்கத்தின் பல்கலை கழகமாக்க ஆர்வமுள்ளோருக்கு எடுத்துக்காட்டாகும்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...