நெருக்கடியை தீவிரப்படுத்தும் மத்திய பட்ஜட் 2013-14

1486
0
SHARE

தாராளமயக் கொள்கைகளின் அறுவடை

இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலை சந்திக்கும் பொழுது தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி காங்கிரஸ் கட்சி குறிப்பிடவில்லை. ஆனால், தேர்தலுக்குப் பின், நரசிம்ம ராவ் பிரதமராகவும் மன்மோஹன் சிங் நிதியமைச்சராகவும் இருந்த சிறுபான்மை காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மிக வேகமாக தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கோட்பாடுகளை மையமாகக் கொண்ட நவீன தாராளமயக் கொள்கையை அமலாக்கியது. இதனை நியாயப்படுத்த அரசு இரண்டு நெருக்கடிகளை முன்வைத்தது. ஒன்று, நாட்டின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைவெளி பெரிதும் அதிகரித்துவிட்டதால் ஏற்பட்ட அன்னியச் செலாவணி நெருக்கடி. இரண்டு, அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டதால் ஏற்பட்டுள்ள அரசு நிதி நெருக்கடி.

இந்த இரு நெருக்கடிகளும் தொடர்புடையவை என்றும் இவற்றை தீர்க்க இரண்டு விஷயங்கள் மிக அவசியம் என்றும் அரசு வாதிட்டது. ஒன்று, எப்படியாவது அன்னிய மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் அதன் மூலம் மட்டுமே அன்னியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது. இரண்டாவதாக, அரசு நிதி நெருக்கடியை சரிசெய்ய செலவுகளை குறைக்க வேண்டும் என்றும், முக்கியமாக மானியங்களை வெட்ட வேண்டும் என்றும் அரசு கூறியது. மேலும் இவற்றை செய்வதற்கு உலகமய, தாராளமய தனியார்மய கொள்கைகளை அமலாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இருபத்தி இரண்டு ஆண்டுகள் இக்கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு இன்று இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிலமை என்ன? 1991 இல் ஆட்சியாளர்கள் நெருக்கடி என்று எதை சொன்னார்களோ, அது இன்று மேலும் வீரியமாக இந்தியாவை எதிர்கொள்ளுகிறது. நமது சரக்கு ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள இடைவெளி நாட்டு மொத்த உற்பத்தியில் 10.8 சதவீதமாக  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய உழைப்பாளி மக்கள் அவர்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வரும் அன்னியச் செலாவணி பணம் இந்த பள்ளத்தை ஓரளவு சமாளிக்க உதவுகிறது. அவ்வாறே, மென்பொருள் ஏற்றுமதி மூலம் பெரும் அன்னியச் செலாவணி சற்று உதவுகிறது. இருப்பினும் இவை போகவும் நமது அன்னியச் செலாவணி பள்ளம் நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக உள்ளது. கடுமையான அன்னியச் செலாவணி நெருக்கடியை நாடு எதிர்நோக்குகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 2007-08 இல் சராசரியாக 40 ரூபாய் என்றிருந்த நிலை மாறி 2011-12 இல் 55 ரூபாய் என்று ஆகியுள்ளது. இதன் பொருள் என்ன? நாம் கடுமையாக உழைத்து, கூடுதலாக ஏற்றுமதி செய்து குறைந்த அன்னியக் காசு பெறு‍கிறோம் என்பதே. அது மட்டும் அல்ல. நமது இறக்குமதி செலவு ரூபாய் கணக்கில் கூடுகிறது, நாட்டில் பணவீக்கத்திற்கு இதுவும் முக்கிய காரணம். இதுதான் அரசின் தாராளமயக் கொள்கைகள் நாட்டிற்கு செய்துள்ள நன்மை!

பிரச்சினை இதோடு முடியவில்லை. அரசின் வரவு-செலவு நெருக்கடியும் தீவிரமாகியுள்ளதாக 2012-13க்கான எகனாமிக் சர்வே (நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஆண்டு அறிக்கை) புலம்புகிறது. இதற்குத் தீர்வாக மானியங்களை வெட்ட வேண்டும் என்ற பல்லவியை மறுபடியும் பாடுகிறது. இந்திய பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 201-11 இல் 9.3 சதவீதத்திலிருந்து 2012-13 இல் 5 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் புலம்புகிறது. பணவீக்கம் 10 சதவீதம் உள்ளது என்ற உண்மையையும் சர்வேயால் முழுமையாக மறுக்க முடியவில்லை.

ஆக, இருபதாண்டு தாராளமய கொள்கைகள்  நிதிநெருக்கடியிலும் அன்னியச் செலாவணி நெருக்கடியிலும் கடும் பணவீக்கத்திலும் இருந்து நாட்டை விடுவிக்கவில்லை என்பது மட்டும் அல்ல. அவற்றை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன என்ற உண்மையின் பின்புலத்தில் பட்ஜட் 2013-14 பற்றி பரிசீலிப்போம். பட்ஜட் 2013-14

சில விஷயங்களை முதலில் தெளிவுபடுத்தி விடுவோம்.

அரசுக்கு உள்ள பல பொருளாதாரக் கருவிகளில் ஒன்றுதான் பட்ஜட். அரசின் தாராளமயக் கொள்கைகளின் வெளிப்பாடாகவே அது இருக்கும். மத்திய அரசின் பட்ஜட்டில் செலவு செய்யப்படும் தொகை நாட்டு வருமானத்தில் சுமார் 14 சதம், அதாவது ஏழில் ஒரு பங்கு. எனவே, அதை பரிசீலிப்பது அவசியம். பட்ஜட்டில் சொல்லப்படும் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் மதிப்பீடுகள் (பட்ஜட் எஸ்டிமேட்ஸ்). சென்ற ஆண்டு தரப்பட்ட பட்ஜட் மதிப்பீடுகள் அமலாகியதா என்பதை இந்த பட்ஜட்டில் முன்வைக்கப்படும் கடந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (ரிவைஸ்டு மதிப்பீடுகள்) நமக்கு காட்டும்

பட்ஜட் ஒரு ஆண்டிற்கான அரசின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய ஆலோசனைகளை முன்வைக்கும். இதில் இரண்டு முக்கிய அம்சங்கள், எவ்வாறு நாட்டு வளர்ச்சிக்கான வளங்கள் திரட்டப்படுகின்றன என்பதும், அரசு திரட்டும் வளங்கள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பதும் ஆகும்.

2013-14க்கான மத்திய பட்ஜட் தாராளமயக் கொள்கைகளை முழுமையாக பின்பற்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால், செல்வந்தர்கள் மற்றும் பெருங்கம்பனிகளிடமிருந்து வளர்ச்சிக்கான பணத்தை திரட்டுவதற்குப் பதிலாக, ஒதுக்கீடுகளை குறிப்பாக ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்குமான மானியங்களை – வெட்டிச் சாய்த்து அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. அதேபோல், அந்நியச் செலாவணி நெருக்கடியை சந்திக்க, இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அந்நிய மூலதனத்தை எப்படியாவது கொண்டு வரவேண்டும் என்று முயல்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மக்களின் வாங்கும் சக்தியையும் நுகர்வையும் குறைப்பதே வழி என்ற பாதையில் பயணிக்கிறது.

செலவுகள்

2013க்கான பட்ஜட் கடந்த ஆண்டு பிரணாப் முகர்ஜி முன்வைத்த பட்ஜட் மதிப்பீடுகள் அமலாகவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக திட்ட ஒதுக்கீடு இலக்குகள் அமலாகவில்லை. மத்திய திட்ட ஒதுக்கீடு பட்ஜட் மதிப்பீட்டின் படி 2012-13 இல் ரூ 6,51,509 கோடி. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 5,56,176 கோடி. அதாவது, ரூ. 95,333 குறைவு. சதவிகிதக் கணக்கில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் வெட்டு. ஊரக வளர்ச் சிக்கு பட்ஜட் மதிப்பீட்டின்படி ரூ.  50729 கோடி. ஆனால்,  திருத்தப்பட்ட  மதிப்பீடு ரூ. 43704 கோடி. அதாவது, 7025 கோடி அல்லது 14  சதவிகிதம் வெட்டு. தொழில் மற்றும் கனிம வளத்திற்கான ஒதுக்கீடு பட்ஜட் மதிப்பீட்டின் படி ரூ. 57227 கோடி.திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 39228 கோடி, கிட்டத்தட்ட 33 சதம் வெட்டு. இதே போல், போக்குவரத்து துறையின் ஒதுக்கீடு பட்ஜட் மதிப்பீட்டின்படி ரூ. 1,25,357 கோடி. திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 1,03,023 கோடி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி திட்ட ஒதுக்கீடுகளையும் மத்திய அரசின் திட்டச் செலவுகளையும் கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஃபிஸ்கல் பற்றாக்குறையை குறைத்துக் காட்டியுள்ளார் நிதி அமைச்சர். இவ்வாறு பெரிதும் குறைக்கப்பட்ட 2012-13 திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் 2013-14 பட்ஜட் ஒதுக்கீடுகளை ஒப்பிட்டுக் காட்டி, அவற்றை பெரிதும் கூட்டியுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நிதி அமைச்சர் தனது பட்ஜட் உரையில் முயன்றுள்ளார். ஆனால் உண்மையில் ஒதுக்கீடுகள் சொற்பமாகவே கூட்டப்பட்டுள்ளன. விவரங்களை கீழே காணலாம்:

மத்திய திட்ட ஒதுக்கீடு

பட்ஜட்     திருத்தப்பட்ட   பட்ஜட் (அனைத்தும் ரூபாய் கோடிகளில்)

துறை

மதிப்பீடு 2012-13

மதிப்பீடு 2012-13

மதிப்பீடு 2013-14
வேளாண் மற்றும்
சார்துறைகள்
17,692 15,971 18,781
ஊரக வளர்ச்சி 50,729 43,704 56,438
பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு 1,275 428 1,200
ஆற்றல் 1,54,842 1,48,230 1,58,287
தொழில் மற்றும்
கனிம வளங்கள்
57,227 39,228 48,010
சமூக துறைகள் 1,78,906 1,58,339 1,93,043
மொத்தம் 6,51,509 5,56,176 6,80,123

இதன் பொருள் நடப்பு ஆண்டில் மக்கள் நலதிட்டங்களுக்கும் அரசு முதலீடுகளுக்குமான ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளன என்பதாகும்.மேலும் நடப்பு ஆண்டு பட்ஜட் மதிப்பீடுகளுக்கும் திருத்தப்பட்ட மதிப்பீடு களுக்கும் உள்ள உறவுதான் வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, பட்ஜட்டில் முன்வைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஒதுக்கீடு உயர்வுகள் கூட அமலாகப் போவதில்லை. இது ஏழை எளிய மக்களின் துன்பங்களை அதிகரிக்கும் என்பது ஒருபுறம் இருக்க, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரிகட்டவும் உதவாது.

மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 2012-13 இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மானியங்களின் மொத்த அளவு ரூ 2,57,654 கோடி. இது வரும் ஆண்டு பட்ஜட் மதிப்பீட்டில் ரூ 2,31,084 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. இது போதாது என்று, பட்ஜட்டிற்குப் பிறகு அளித்த பேட்டி ஒன்றில் நிதி அமைச்சரின் ஆலோசகர் ரகுராம் ராஜன் (இவர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்) டீசல் மானியத்தை முழுமையாக நிறுத்துவதன் மூலம்தான் ஃபிஸ்கல் பற்றாக்குறை இலக்கை சந்திக்க முடியும் என்று திருவாய் மலர்ந்துள்ளது மக்கள் எதிர்நோக்கும் பேரபாயத்தை நினைவுபடுத்துகிறது. மத்திய அரசின் மொத்த செலவு நடப்பு ஆண்டில் ரூ. 14,90,925 கோடி என்ற பட்ஜட் மதிப்பீட்டிலிருந்து ரூ. 14,30,825 கோடி என்று திருத்தப்பட்ட மதிப்பீடின்படி குறைந்துள்ளது. அதாவது, 60,000 கோடி ரூபாய் வெட்டு. இதில் மிக அதிகபட்சமாக  மத்திய அரசின் 91,838 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். வரும் ஆண்டிற்கு, மத்திய அரசின் மொத்த செலவு பட்ஜட் மதிப்பீடின்படி ரூ. 16,65,297 கோடி. இது 10.5 உயர்வு. அதாவது, விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், உண்மை உயர்வு 2 கூட இருக்காது. இதுவும் இந்த ஆண்டு போலவே மேலும் வெட்டப்படும் வாய்ப்பும் உள்ளது. திட்ட செலவில் பண அளவில் கூட உயர்வு மிகக்குறைவு என்பதை முன்பே பார்த் தோம். உண்மை அளவில் திட்டச் செலவு சரியும். இது வளர்ச்சிக்கு உதவாது.

வரவுகள்

செல்வந்தர்கள் மீதும் கொள்ளை லாபம் பெரும் பகாசுர கம்பனிகள் மீதும் வரி போட அமைச்சர் முயலவில்லை. பெயரளவிற்கு, ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கு அதிகம் என்று ஒத்துக்கொண்டுள்ள 42,900 பேர் மேல் மட்டும் வரியின் அளவில் 10 சதவிகம் சர்சார்ஜ் போட்டுள்ளார். இந்த எண் ஒரு கேலிக்கூத்து. எந்த அளவிற்கு நாட்டின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மறைக்கிறார்கள் என்பதற்கு சான்றாகவே இந்த எண் அமைகிறது. இதனால் செல்வந்தர்களுக்கு பாதிப்பு இருக்காது, சொற்ப வரியே வரும்.

நேர்முக மற்றும் மறைமுக வரிகள் மூலமாக ரூ. 18,000 கோடி கூடுதல் வரி வருமானம் அரசுக்குக் கிடைக்கும் என்று அமைச்சர் அனுமானித்துள்ளார். அரசின் மொத்த வரி வருமானம் வரும் ஆண்டில் ரூ. 12,35,870 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் சொற்பமே.

நடப்பு ஆண்டில் அரசின் வரி வரவுகள் பட்ஜட்டில் மதிப்பிட்டதை விட ரூ. 39,500 கோடிக்கும் அதிகமாக குறைந்துள்ளன. ஆனாலும், வரும் ஆண்டில் இந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடி கிட்டத்தட்ட 20  சதவிகிதம் அதிகரிக்கும் என்று பட்ஜட்டில் அமைச்சர் கணக்கு எழுதி வைத்துள்ளார். இதுவும் நம்பகத்தன்மை அற்ற கணக்கு.

மொத்தத்தில், ஒழுங்காக வரி செலுத்திவரும் கூலி, சம்பள பகுதியினருக்கு எந்த சலுகையையும் அளிக்காத பட்ஜட், செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது உரிய வரியைப் போடவும் போட்ட வரியை வசூலிக்கவும் தயாராக இல்லை என்பதையே பட்ஜட் காட்டுகிறது. அண்மையில், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் 2,74,000 கோடி ரூபாய் கொடு படா வரி என்றும் ஆனால் அதில் சுமார் 66,000 கோடியை மட்டுமே வசூலிக்க இயலும் என்று கூறியுள்ளது நினைவு கூறத்தக்கது.

வரி ஏய்ப்பு எதிர்ப்பு விதிகள் (General Anti Avoidance Rules)

சென்ற ஆண்டு பிரணாப் முகர்ஜி தனது பட்ஜட் உரையில் வரி ஏய்ப்பு எதிர்ப்பு விதிகள் அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார். இதற்கு பெரும் முதலாளிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் அலுவலகமே நேரில் தலையிட்டு, இது பற்றி பரிந்துரைக்க ஒரு நபர் குழு ஒன்றை அமைத்தது. இந்த சௌகர்யமான ஏற்பாட்டை  பயன்படுத்தி,  இந்த பட்ஜட் உரையில் கார் (GAAR) 2016-17 நிதியாண்டில்தான் கொண்டு வரப்படும் எனவும், அது முதலாளிகள் எதிர்க்காத வகையில் அமைக்கப்படும் என்று பொருள்படும் வகையிலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், வோடஃபோன் கம்பனி வரி செலுத்தாத பிரச்சனையில், வரிபாக்கியை வசூல் செய்ய ஏதுவாக 1961 வருமான வரி சட்டத்தில் உரிய மாற்றம் செய்யும் ஷரத்து சென்ற ஆண்டு பட்ஜட் மசோதாவில் சேர்க்கப்பட்டது. இந்த ஆண்டு அதைப் பற்றி மௌனம் சாதிப்பது என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, பிரச்சனை தீர்க்கப்படும் என்பதே அரசின், நிதி அமைச்சகத்தின் நிலையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னிய மூலதனத்தை மண்டியிட்டு வரவேற்பது, இந்திய அன்னிய பெரும் கம்பனிகளின் நலன்சார்ந்தே செயல் படுவது என்ற நிலைபாட்டையே இவை காட்டுகின்றன.

இதன் இன்னொரு வெளிப்பாடுதான் செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள வரி சலுகைகளின் காரணமாக நடப்பு ஆண்டில் 5, 73,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி இழப்பை அரசு சந்திக்க வேண்டியுள்ளது. 1,45,000 கோடி ரூபாய் செலவில் அனைவருக்குமான உணவு தானிய வழங்கலை உறுதி செய்ய மறுக்கின்ற மத்திய அரசு மறுபுறம் வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது. இதுதான் அரசின் வர்க்கத்தன்மை.

பட்ஜட்டும் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளும்

பொருளாதார ஆய்வறிக்கை முன்வைத்த அன்னியச் செலாவணியில் கடும் பற்றாக்குறை, அரசின் நிதி நெருக்கடி, கடும் பணவீக்கம் ஆகிய மூன்று பிரச்சனைகளுக்கு பட்ஜட்டில் விடை காணும் முயற்சி உள்ளதா?

முதல் பிரச்சனைக்கு, அன்னிய மூலதனத்தை பார்த்து ஆதிமூலமே, காப்பாற்று என்று வேண்டுகின்ற சரணாகதி ஓலம்தான் உள்ளது. அப்படி எல்லாம் அன்னிய மூலதனம் ஓடி வந்து காப்பாற்றி விடாது. மேலும் மேலும் சலுகைகளைக் கோரும். பிரச்சனை தீவிரம் அடையும்.

அரசின் நிதி நெருக்கடியை பொருத்த வரையில், மானியங்களையும் மக்கள் நல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் வெட்டுவதன் மூலம் செலவை குறைப்பதும், பொதுத்துறை பங்குகளை விற்று வரவை கூட்டுவது என்ற வகையில்தான் பட்ஜட் அமைந்துள்ளது. மானியங்களை வெட்டுவது, மக்களை கடுமையாக பாதிக்கும் என்பது மட்டும் அல்ல, கடும் பணவீக்கத்தையும் எற்படுத்தும். அரசின் செலவுகள் வெட்டப்பட்டிருப்பது வளர்ச்சி விகித சரிவை தீவிரப்படுத்தும். இதனால் அரசுக்கான வரி வரவும் குறையும். இதன் விளைவாக, அரசின் பற்றாக்குறை சரிவதற்குப் பதிலாக கூடும். ஆக இவ்விரு பிரச்சனைகளுமே தீவிரம் அடையும். மொத்தத்தில், 2013-14க்கான மத்திய பட்ஜட் பணவீக்கம், அரசின் வரவு-செலவு பற்றாக்குறை, அன்னியச் செலாவணி நெருக்கடி ஆகிய மூன்று பிரச்சனைகளையும் தீர்க்க உதவாது. மாறாக, தீவிரமாக்கும். மறுபுறம், வறுமையை போக்கவோ, வேலையின்மையைக் குறைக்கவோ, ஓரளவு நிவாரணம் அளிக்கவோ பட்ஜட் உதவாது.  உற்பத்தியில் தொடரும் வேளாண் நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைகள், உணவுப்பொருள் பணவீக்கம், சரிந்து வரும் தலா தானிய உற்பத்தி, மந்தமான தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட பல எரியும் பிரச்சனைகள் மீது எண்ணெய் ஊற்றுவது போலவே மத்திய நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. தொடரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளின் முத்திரைதான் மத்திய பட்ஜட்டில் பளிச்சென்று தெரிகிறது. இதை எதிர்த்து வலுவான போராட்டங்கள் அவசியம்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்