பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்

1831
0
SHARE

கேள்விகள்: ஐதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் நெல்சன் மண்டேலா, மார்க்சிஸ்ட் இதழுக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக பேட்டியை தமிழில் மொழியாக்கம் செய்தது பேராசிரியர் பொன்ராஜ்

1.இன்றைய பிஜேபி ஆட்சியில் பல்கலைக்கழகங்களை எதுபோர்க்களங்களாக  மாற்றியுள்ளது?  மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டங்களில்                பல்கலைக் கழகங்கள்    ஆற்றியுள்ள பங்கு, குறிப்பாக மாணவர்                இயக்கங்களின் பங்கினை எப்படி பார்க்கிறீர்கள்?

           பொது மக்களின் ஒப்புதலை உருவாக்குவதில் பண்பாடும் மற்றும் கருத்துக்களும் ஆற்றக்கூடிய பங்கை சங் பரிவாரங்கள் நன்கு அறிந்துள்ளன. அதனால் பண்பாட்டு அமைப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது; அல்லது தங்கள் கட்டுபாட்டில் வைத்துக்கொள்வது என்பதை தங்கள் கொள்கையாக  அவை பின்பற்றிவருகின்றன. இந்து மதவாதத்தின் மைய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தன்னையொரு கலாச்சார அமைப்பாக வடிவமைத்துக் கொள்வது தற்செயலானதல்ல. 1970களையொட்டி   நாட்டின் பல நிறுவனங்களில் அவர்கள் ஏற்கனவே ஊடுருவி விட்டனர். சென்ற தேர்தலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும் தங்கள் நடைமுறை உத்தியை அவர்கள் மாற்றிக்கொண்டுவிட்டனர்.  ஊடுருவுவது என்பதிலிருந்து மேலாதிக்கம் செய்வது மற்றும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது என்று மாறிவிட்ட அந்த நடைமுறைத்  தந்திரத்தின் முக்கிய இலக்கு பல்கலைக்கழகங்களாகும். இத்தந்திரம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே மறைமுகமாகத் தொடங்கப்பட்டுவிட்டது. நரேந்திரமோடியின் ஆட்சியில் எவ்விதத் தடையுமின்றி செயல்பட RSS க்கு வழி கிடைத்துவிட்டது; அதன் மாணவர்  பிரிவான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் – ABVP – அரசின் உதவியோடு தன்முனைப்பை உறுதி செய்யத் தொடங்கியது. இயல்பாக ஜனநாயக சக்திகளிடமிருந்து இதற்கான எதிர்ப்பை அது சந்திக்க நேர்ந்தது. இதுதான் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலும்  மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் நடந்தது. RSS ன்  இத்தகையத்   தலையீட்டிற்கு   பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முதல் பலிகடாவானது. இது ஆசிரியர் மற்றும் மாணவரின் கல்விச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.,பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள  இத்தகைய தாக்குதலை JNU மாணவர்கள் தற்போது புதுப்புது முறைகளில் எதிர்த்து வருகின்றனர். அதைப் போன்ற எதிர்ப்பை  அமைதியான முறையில் நாடெங்குமுள்ள மாணவர்கள்   காட்ட  வேண்டும்.

 1. தேசியம்’ என்பதைமக்களைத் திரட்டும் ஒரு  வலுவான கருவியாக  பிஜேபி பயன்படுத்துவதை எப்படி புரிந்து  கொள்வது? அதனை  இடதுசாரிகள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்?

பிஜேபியின் தேசியம் என்ற கருத்தாக்கம் மதம் சார்ந்தது. அது இந்து ராஷ்டிரா  சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களின் மத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டுகிறது. ராமஜென்மபூமி போராட்டத்தின் போது, நல்லதோ கெட்டதோ, இதன் முன்மாதிரியை நாம் பார்த்தோம்.மதவாத  உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கான  சரியான இலக்கை, வாய்ப்பை எப்போதும் பிஜேபி தேடி வருகிறது. அத்தகையதொரு இலக்காக சமீபத்தில் கோமாதா இரையாகிப் போனது. பல்வேறு கலாசாரங்களையும் மதங்களையும் கொண்ட மதச்சார்பின்மையே இந்திய இயல்பாகும். .  இந்திய தேசத்தின் இந்த உண்மையான இயல்பை பரப்புவதன் மூலம் தான் இடதுசாரிகள்  சங் பரிவாரங்களை   எதிர் கொள்ளமுடியும். அத்தகைய எதிர்  நடவடிக்கை  அனைத்துப் பகுதி மக்களையும் பெருவாரியாக உள்ளடக்கிய மிகப்பெரும் அணிதிரட்டலாக இருக்க வேண்டும்.  இன்றைக்கு மதசார்பின்மைக்கான வெளி சுருங்கி விட்டது.மதசார்பின்மை உணர்வுகளின் எல்லைகள்   விரிவுபடுத்தப்பட  வேண்டும்.. அத்தகையப் பணியில், அறிவுஜீவிகளின் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கின் மூலம் இடதுசாரிகள் பெரும்  பங்காற்ற இயலும். இந்த  சக்தியை இடதுசாரி இயக்கம்  பயன்படுத்திடவில்லை.

 1. இந்தியாவில் இந்துமத அரசை நிறுவிட சங் பரிவாரப் படைகள் தற்போது  முயற்சி செய்கின்றனவா? 

தொடக்கத்திலிருந்தே அதுதான் அவர்களின் எண்ணமாக  இருந்து வருகிறது. தற்போது மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அனைத்து  அரசு இயந்திரங்களுக்கும் காவி வண்ணம் ஏற்ற முயற்சிக்கின்றனர்.   பல்வேறு மத இன கலாசாரங்களின் தொகுப்பாக இந்திய மக்கள் உள்ளனர். இந்திய தேசம் வலுவான ஜனநாயகப்  பாரம்பரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது  ஒரு .மதவாத அரசை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெற முடியுமா? என்பதில் எனக்கு பெரும் ஐயம் உள்ளது.

 II  மதவாத கொள்கையும் நடைமுறையும் .

 1. மதவாதத்தின் நிகழ்காலத் தாக்குதல் பாசிசத்தின் குணாம்சத்தைக் கொண்டுள்ளதா? பாசிசத்தின் இயல்புகள் என்ன? மதவாதம் எவ்வாறு அதனுள் பொருந்துகிறது? 

வெவ்வேறு ஆய்வாளர்கள் பாசிசத்தின் இயல்புகளை  வெவ்வேறாக  சித்தரிக்கிறார்கள். எனினும் சில அடிப்படையான இயல்புகளை அடையாளப்படுத்த முடியும். அவையாவன: 1. எதேச்சதிகாரம் 2. இன ரீதியான வெறுப்பு  3. வன்முறை 4. அடாவடி தேசியம்.  இந்து மதவாதத்தில் இவை யாவும் உள்ளன. RSS ஒரு எதேச்சதிகார அமைப்பாகும். மோடி அரசாங்கம்  செயல்படும் விதங்களில்   இது  பிரதிபலிக்கிறது. சிறுபான்மையினர் வேறு மதத்தைச்  சார்ந்தவர் என்று துன்புறுத்தப்படுகின்றனர். அரசு வன்முறை என்பது நடைமுறை விதியாகிப் போனது. அமைதியான, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தேசியம், அடாவடி  தேசியத்திற்கு வழிவிடுகிறது. இத்தகைய அடாவடி தேசியம் குறித்து நம்மை  ரவீந்தரநாத்தாகூர் எச்சரித்துள்ளார்..

 1. இந்தியாவில் முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை நாடு விடுதலை பெற்ற  பிறகு மதவாதம் எழ வழி அமைத்து விட்டதா? . 

இந்திய மதசார்பின்மை இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அடிப்படையாக கொண்டது. அதன் பலவீனங்களில் இதுவும் ஒன்று.  இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்பது மதசார்பின்மையின் விளைவேயன்றி, அதுவே மதசார்ப்பின்மையாகி விடாது. இந்திய ஒற்றுமை என்பது  பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆக ஒரு சமூக தத்துவவாதியின் பார்வை மேலோங்கியது. அது மதவாத கோட்பாடுகள் செழிப்பதற்கான களம் அமைத்துக் கொடுத்தது .

 1. இந்தியாவில் மதவாதத்தின் எழுச்சியை நீங்கள்விவரிக்க இயலுமா? நாடு விடுதலை பெற்ற பிறகு மதவாதம் எப்போது,  எப்படி,  அதன் வேகத்தைப் பெற்றது?

மதக் கலவரத்தையும் மதவாதத்தையும் ஒன்றாகப் பார்க்கிற தன்மையுள்ளது. அது முழுவதும் சரியல்ல. மதக்கலவரம் மதவாதத்தின் வெளிப்பாடு என்பது உண்மைதான்.  ஆனால் கலவரம் இல்லாமலும் மதவாதம் நிலைத்திருக்கும்..பதிவு செய்யப்பட்ட முதல் கலவரம் பதினாறாம் நூற்றாண்டில் அகமதாபாத்தில் நடந்தது. படி நிலை அமைவு கொண்ட சமூகத்தில் பதற்றம் நிலவுவது இயல்பானதுதான். எனவே சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் பதற்றமும் மோதல்களும் இருந்ததில்லை என்று நம்புவது நியாயமல்ல. எனினும் காலனி ஆட்சியின் போதுதான் மதவாதம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நாட்டின் பிரிவினை மற்றும் விடுதலைக்குப் பிறகு இக்கொடிய  மிருகம்  வீழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக அரசியல் அதிகாரம் பெறும்  முயற்சியில் மதவாதம்  மீண்டும் தலையெடுத்தது .1970 வாக்கில் மதவாத சக்திகள் பல்வேறு மக்கள் பிரிவுகளுக்கு மத்தியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டனர். அத்தகைய செல்வாக்கை அவர்கள் பெறுவதற்கு பல்வேறு  காரணிகள் உதவி செய்தன. வட இந்தியாவில் பிரிவினையின் போது இடம் பெயர்ந்த மக்களின் பிரிவினை எதிர் உணர்வு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு எதிராக இருந்தது. மதவாத சக்திகள் இதன்மூலம் பயன்பெற்றனர். ஜனசங்கத்தின்  சமூக அடித்தளத்தின் மையத்தை  இது உருவாக்கியது. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நடுத்தர வர்க்கம் எழுச்சி பெற்று உலகமய சகாப்தத்தில் பெரும் பகுதியானது. சமூக கலாச்சார வாழ்விற்கும் பொருளியல் நிலைமைக்கும் இடையில் பொருத்தமற்ற சூழல் நிலவியது. இவ்விரண்டிற்கும் இடையிலான  முரண்பாட்டை . பழமைவாத மற்றும் மதவாத செயல்பாட்டின் மூலம் தீர்க்குமாறு கோரப்பட்டது.  நடுத்தர மக்கள் மதவாத சக்திகளின் இந்த பிரச்சாரத்திற்குச் செவிமடுத்தனர்; மதவாத அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்குப் பின்னால் அணி திரண்டனர். கலாச்சார ரீதியாக வறுமையிலிருந்த அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் இந்து அமைப்புக்களுக்கு பெருமளவில் நன்கொடை அளித்து உதவினர்.

 1. சிறுபான்மை மதவாதம் தரும் அச்சுறுத்தல்களை நாம் பெரும்பான்மை மதவாதத்திற்கு சமமாக எடுத்துக்கொள்ளலாமா? சிறுபான்மை மற்றும்  பெரும்பான்மை மதவாதங்கள் இரண்டும் ஒன்றை மற்றொன்று வளர்த்து விடுகிறதா? 

உண்மையில் சிறுபான்மை மதவாதம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் முடிந்து போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக வளர்ந்து வருகிற இந்து மதவாதத்தின் தன்முனைப்பு சிறுபான்மை மதவாதம் மீண்டும்  துளிர்விட வழி .அமைத்துக் கொடுத்துள்ளது. இது சிறுபான்மை மதவாதத்திற்கும் பொருந்தும். இந்து மதவாதம் தன்  கூட்டத்தைக்  கெட்டிப்படுத்திக் கொள்ள சிறுபான்மை மதவாதம் உதவுகிறது. இரு மதவாதங்களும் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதால் தன்னில் மற்றதைப் பார்த்துக் கொள்கின்றன.

III  இடதுசாரிகளின் தலையீடு 

 1. மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் பங்கு பாத்திரம் என்னவாக இருக்க  வேண்டும்?   இந்து மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் சிறுபான்மை அமைப்புக்கள் குறித்து இடதுசாரிகளின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

மதவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இடது மற்றும் ஜனநாயக சக்திகள் தலைமையேற்றாக  வேண்டும். இந்த சக்திகளைப் பிரநிதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளை  மட்டுமல்லாது எண்ணற்ற மதவாத எதிர்ப்புக் குழுக்களையும் மற்றும் எந்த அரசியல் கட்சிகளோடும் இணையாதிருக்கும் தனிநபர்களையும் இந்த அணிக்குள் கொண்டுவரவேண்டும். நாட்டிலுள்ள மதவாத எதிர்ப்பு சக்திகளின் பெரும் படையை அது உருவாக்கும். அவர்களை அணிதிரட்டாமல் மதவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் வெற்றி பெறாது. ஓர் அவசர உணர்வோடு இதனை செய்திட  வேண்டும். இல்லையெனில் ஒன்று அவர்களை ,மதவாத சக்திகள் இணைத்துக் கொண்டுவிடும் அல்லது அவர்கள் விரக்தி அடைந்துவிடுவார்கள். பாதிக்கப்பட்டப் பகுதியினரான சிறுபான்மையினர் மதவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். இயல்பாகவே அவர்கள் இடதுசாரிகளின் கூட்டாளிகள். இடதுசாரிகள் கொள்கையளவில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்த போதும், நடைமுறையில் அத்தகைய நிலையான நிலைபாட்டை எடுக்க முடிவதில்லை. உதாரணமாக கேரளாவில் சிறுபான்மையினர் காங்கிரசோடு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இடதுசாரிகளோடு இருக்க வேண்டும். கூட்டணி அரசியலில் எங்கோ அந்த உறவு அறுபட்டுவிட்டது.

 1. கலாசாரத் தளத்தில் சங் பரிவாரங்களை எதிர்த்து அர்த்தமுள்ள தலையீடுகளை செய்வதில் இடதுசாரிகள் தோற்றுப் போனார்கள் என்று எண்ணுகிறீர்களா?

ஆம்.. தங்கள் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக படைப்பாளிகளை அணி திரட்டுவதில் முன்முயற்சி எடுத்து இடதுசாரிகள் பணியை நன்கு தொடங்கினர். அம்முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு இருந்தது என்பதற்கு  முற்போக்கு இலக்கிய இயக்கம் மற்றும் இந்திய மக்கள் நாடக மன்றம் ஆகியவற்றின் தொடக்க கால சாதனைகள் சான்றாகும்.. எனினும் அவை விரைவில் உதிர்ந்து போயின கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் இடது கலாச்சார செயலூக்கம் மிகவும்  வலுவானதாக இருந்து வந்தது. . ஆனால் அவர்களின் கலாச்சாரம் குறித்த ஓர் இயந்திரத் தனமான அணுகுமுறை, படைப்பாளிகள்  அவர்களை விட்டு நீங்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. இரண்டாவதாக பாரம்பரியம் என்பது   குறித்தும் அவர்களிடம் இயந்திரத் தனமான .பார்வை இருந்தது. அதன் காரணமாக படைப்பூக்கத்தோடு அணுகுவதற்கு மாறாக பலசமயங்களில் இறந்த காலத்தைப் புறந்தள்ளும் நிலைக்கு செல்ல நேர்ந்தது. இடதுசாரிகளின் இந்த இயலாமையின் விளைவாக மதவாத சக்திகள் பயன்படுத்தக்கூடிய பிற்போக்குப் பண்பாட்டு உணர்வுகள் கெட்டிப்படுத்தப்பட்டன.

IV  தென்னிந்திய நிலைமை

 1. பொதுவாக தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்து மதவாத

அமைப்புக்கள் வட இந்தியாவோடு ஒப்பிடுகையில்  பலவீனமாக இருந்தது.        பிராமணர்  அல்லாத திராவிட இயக்கத்தின் வெற்றியை இதற்குக்  காரணமாகக் கொள்ளலாமா?   இதற்கான இதர காரணங்கள் யாவை?

பெரியார் ராமசாமி மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரின் கவர்ச்சியும் சொல்வாக்கும் மிக்க ஆளுமைகளின் தலைமையிலான பிராமணர் அல்லாதோர் இயக்கம் வெகு பிரபலமாக இருந்ததோடு பெரும் பகுதி மக்கள் அந்த கவர்ச்சிகர செல்வாக்கின் கீழ் இருந்தனர். பெரும்பாலான பிராமணர்கள் காங்கிரசில் இருந்தனர். வலுவான  இடைப்பட்ட ஜாதிகள் ஏதுமில்லை. எனவே இந்து மதவாத கோட்பாடுகள் செழிப்பதற்குப் போதுமான வெளி தென்னிந்தியாவில் இருந்திடவில்லை. மேலும் RSS முக்கியமாக மகாராஷ்டிராவை – வட இந்தியாவை  அடிப்படையாகக் கொண்ட அமைப்பு. இதன் காரணமாக தெற்கே வேர்பிடிக்க RSSக்கு வெகு காலம் ஆனது. ஆனால் தற்போது RSS  தெற்கே பரவிவிட்டது. பிஜேபி கர்நாடகாவில் பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது; கேரளாவில் அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.

 1. 1990 ன் பிற்பகுதியில்திராவிட கட்சிகளுக்கும் பிஜேபிக்கும் இடையில்

ஏற்பட்ட கூட்டணியை  தத்துவார்த்தத்தில்  ஏற்பட்ட  ஒரு சமரசமாகப் பார்க்கிறீர்களா?          நிகழ்காலச்  சூழலில் மதவாத சக்திகளை எதிர்ப்பதில் திராவிட கட்சிகளுக்குப்          பங்கேதும்  உள்ளதா?

       ஆம். அது ஒரு தத்துவார்த்த சமரசம் மட்டுமல்ல,  அரசியல் சந்தர்ப்பவாதமும் கூட. அவர்கள் பொதுவான கண்ணியத்தை இழந்து விட்டார்கள். இன்று திராவிடக்  கட்சிகள் தனிநபரைச் சார்ந்திருக்கும், தலைவரின் அதிகாரத் தேடலுக்காகச் செயல்படும் கட்சிகள் ஆகிவிட்டன. மதவாத சக்திகளை எதிர்ப்பதில் அவர்கள் பங்கேதும் ஆற்றுவதற்கு சாத்தியமில்லை.

 1. சமீப காலமாக உயர்சாதி குழுக்கள் பிற்படுத்தபட்டோருக்கான இடஒதுக்கீடு தங்களுக்கும் வேண்டுமெனக்கோரி அதிக அளவில் போராட்டங்கள் நடத்துவதை நாடு பார்த்து வருகிறது.  இப்போராட்டங்கள் பிஜேபியை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா?  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்போராட்டங்கள் பிஜேபியை பலவீனப்படுத்தும். எனினும் அக்கட்சி எவ்வாறு சாதி சமரசம் செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே இறுதி விளைவு அமையும். இம்மாநில அரசுகள் இதற்கு  முயற்சிப்பதாகவே  தோன்றுகிறது.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்