பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்

1653
0
SHARE

தொகுப்பு: கோபிநாத்

 இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கம்

(பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவை கவுரவிக்கும் விதமாக அவரின் ஆராய்ச்சி மாணவர்களால் நடத்தப்பட்டது)

பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் ஆராய்ச்சி மற்றும் அவரது சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் விதமாக அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் இணைந்துபொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்என்ற இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கத்தை சென்னை .சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடத்தினார்கள். இக்கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு இந்தியாவில் நிலவிவரும் வேளாண் நெருக்கடி, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பான விவாதங்களை எடுத்து வைத்தனர்.

கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் ஆத்ரேயாவின் முதல் ஆராய்ச்சி மாணவர் என்ற முறையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாராயணமூர்த்தி வரவேற்றார். துவக்க உரையாற்றிய கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. என். ராம் அவர்கள் பேராசிரியர் ஆத்ரேயாவின் குடும்பம் மற்றும் கல்வி பெறுவதில் அவர் கடந்து வந்த பாதை ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். சென்னை IIT-யில் வேதிபொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் (மாடிசன்) பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை பொருளியல் துறையில் பெற்றதோடு அந்த துறையில் வல்லுநராகவும் பேராசியராகவும் ஆத்ரேயா மாறிய விதத்தை ராம் அழகாக எடுத்துரைத்தார். மேலும், பேராசிரியர் ஆத்ரேயாவின் சமூகபொருளாதார ஆய்வின் விளைவாக கொண்டுவரப்பட்Barriers Brokenமற்றும் அவரின் அறிவொளி பணிகளின் மூலம் எழுதப்பட்ட Literary and Empowerment’ ஆகிய புத்தகங்களின் சிறப்புகளையும் திரு. ராம் அவர்கள் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து கருத்தரங்கம் ஆறு அமர்வுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதல் அமர்வில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் உத்சா பட்நாயக் அவர்கள் தலைவராக செயல்பட்டார். இந்த அமர்வில் முதலில் உரையாற்றிய பேராசிரியர் நரசிம்ம ரெட்டி அவர்கள் கூட்டு முயற்சி மற்றும் கூட்டுப் பொறுப்பேற்றலின் மூலம் விவசாய மந்தத்தை அணுகிய தெலுங்கானா விவசாயிகளின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்கினார். மேலும், விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் தேவைப்படுவதன் முக்கியதுவத்தையும் ரெட்டி எடுத்துக்கூறினார். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் அவ்வப்போதைய அவசர தேவைகளை நிறைவேற்றும் (ad-hocism) நோக்கத்துடன் செயல்படுவதை நிறுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுமுயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாறவேண்டியதன் அவசியத்தை ரெட்டி வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆர்.எஸ்.தேஷ்பாண்டே அவர்கள் விவசாய மந்தத்தின் பரிணாமம் மற்றும் விவசாயிகள் தற்கொலையின் இடம்சார் பரிணாமத்தை (Spatial dimension) பற்றி விளக்கினார். மேலும், நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் தான் அதிகளவில் விவசாயிகள் படுகொலை செய்துகொள்கின்றனர். . ஆனால் இவற்றின் சமிக்ஞை மற்றம் பரிமாணத்தை முன்னமே புரிந்துகொள்ள அரசு இயந்திரம் தவறிவிட்டது என்றும் தேஷ்பாண்டே வலியுறுத்திக் கூறினார். விவசாய நெருக்கடியை மேலும் வலுவாக்கும் பொருட்டு, அரசாங்க உதவிகள் விவசாயத்துறைகளுக்கு தொடந்து குறைந்துகொண்டே வருகின்றது. வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் கண்டறியப்படும் புதிய ரக பயிர்கள் விவசாயிகளின் தேவைய பூர்த்திசெய்யும் விதத்தில் அமைவதில்லை. அதோடு விவசாயிகளுக்கான மானியங்கள் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, உண்மையான வருமான உயர்விற்கும் வேளாண் பொருட்களின் விலைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை (mismatch) தொடந்து அதிகரித்து வருகின்றது. இவற்றிக்கு கொள்கை மற்றும் தொழில்நுட்ப களைப்பே (Fatigue) காரணமென்று தேஷ்பாண்டே கூறினார்.

கருத்தரங்கின் இரண்டாம் அமர்விற்கு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சோமர்வில் கல்லூரியின் கௌரவப் பேராசிரியர் ஜுடியத் ஹேயர் தலைமை வகித்தார். இந்த அமர்வில் பேராசிரியர் உத்சா பட்நாயக் அவர்கள் பேசும் போது, 1943-44 ஆண்டுகளில் நடைபெற்ற முப்பது லட்சம் மக்களின் உயிரழப்பிற்குக் காரணமான வங்கப் பெரும்பஞ்சம் இயற்கைசார் உணவு பற்றாக்குறையால் ஏற்படவில்லை என்றும் காலனி அரசின் கொள்கைகளே காரணம் என்றும் ஆங்கிலேய அரசாங்கத்தினால் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் விளக்கினார். மேலும் பெரும் வளத்துடன் விளங்கிய வங்கம், ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதையும் எடுத்துறைத்தார். இவையனைத்திற்கும் ஆங்கிலேய அரசு தனது போர் செலவிற்கும், தளவாடப் பொருட்களை பெறுவதற்கும் வங்கத்தை சுரண்டியதே காரணமென்பதை தெளிவாக விளக்கினார். அதேபோன்றதொரு நிலை தற்போது நாட்டில் நிலவுவதை பேராசிரியர் உத்சா கோடிட்டுக்காட்டினார். வேலை வாய்ப்புகளை குறைத்து மக்களின் வாங்கும் சக்திகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு தேவை சுருங்கி வருகிறது என்று உத்சா எடுத்துரைத்தார். அவரைத்தொடந்து பேசிய இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் பார்பராஹாரிஸ் ஒய்ட் அவர்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய நாளில் உள்நாட்டு வர்த்தகத்தில் பெரும் வர்த்தகர்களின் தாக்கம் அதிகமாகியுள்ளதை எடுத்துரைத்தார். இவ்வகை பெருவர்த்தகர்களின் அதிகாரங்கள் உற்பத்தியான பொருட்களை சந்தையிடலில் குறிப்பாக தொழிலாளர் தேவைகளில் கடுமையான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் அந்நிய முதலீடுகள், சில்லறை விற்பனையில் பெருமளவில் நுழைவதையும் அதன்மூலம் சிறு வணிகர்கள் அழித்தொழிக்கப்படுவதன் நிலையையும் விளக்கினார். இம்மாற்றத்தை முழுகவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதோடு அறுவடைக்குப் பிந்தைய துறையில் (post-harvest sector) பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளின் அளவு அதிகரித்துள்ளது. வெறும் லாபநோக்கோடு செய்யப்படும் இவ்வகை முதலீடுகளால் தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கின்றனர். நெல் அறவை மற்றும் வர்த்தகத்தில் இவை கண்கூடாகத் தெரிகின்றது. எனவே, பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பிந்தய இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தய மறும் சில்லறை வணிகத்தில் பெருகிவரும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் லாபம் ஈட்டப்படுவது தொழிலாளர்களின் கூலி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் எந்தவித சாதகமான பாதிப்புகளையும் ஏற்படுதவில்லை என்பதை பேராசிரியர் பார்பரா விளக்கினார்.

மூன்றாம் அமர்விற்கு சென்னை பொருளியல் பள்ளியை சேர்ந்த பேராசிரியர் மரியா செலத் தலைமை வகித்தார். இந்த அமர்வு வளங்குன்றா விவசாயம் மற்றும் ஊரக வருமானத்தை தொடர்ந்து பெருக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்தது. இயற்கை வளங்களை மேம்படுத்துவதன் மூலம் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியமென்று சென்னை பொருளியல் பள்ளி முன்னாள் இயக்குனர் பேராசிரியர் சங்கர் வலியுறுத்தினார். மேலும் விவசாயிகள் உயிர் சார்ந்த இடுபொருட்களுக்கு (Bio – based inputs) மாற வேண்டுமென்றும் சங்கர் வலியுறுத்தினார். தற்போதைய நிலையில் வேளாண்துறை திட்டங்களை உருவாக்கும்போது இயற்கை வளப்பாதுகாப்பை போதிய அளவில் கவனத்தில் கொள்வதில்லை என்றும் சங்கர் கோடிட்டுக் காட்டினார். ஸ்வீடன் லுண்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டஃபான் லிட்ண்ட்பெர்க் கட்டுரை ஊரகப்பகுதியில் குறிப்பாக விவசாய மந்தநிலை நிலவிய பகுதியில் தலித்துகளின் இருப்பையும், இவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் அரசாங்கத்தின் முதலீடுகள் மூலம் ஏற்படும் முன்னேற்றத்தையும் ஏடுத்துரைத்தார். கடந்த 50 ஆண்டுகளில் தலித்துகள், குறிப்பாக அருந்ததியினர் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளனர். என்றபோதிலும், நிலவுடைமைதாரர்களால் தலித் விவசாய கூலிகள் சுரண்டப்படுவது தொடந்துகொண்டுள்ளது. இதோடு தலித்துகள் கொத்தடிமைகளாக அருகில் உள்ள இயந்திரநெசவு தொழில் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர் என்று ஸ்டஃபானின் கட்டுரை விளக்கியது. பேராசிரியர் ஷஷாங் பிடே வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட சுமையை பற்றி விளக்கினார். மேலும், ஊரக இந்தியாவின் வளர்ச்சி வேளாண்துறை அல்லாத ஏனைய துறைகளை மையப்படுத்தி வருவதாக கூறினார்.

முன்னாள் திட்டக்குழு உறுப்பினறும் பிரபல பொருளாதார வல்லுனருமான பேராசிரியர் வைத்தியநாதன் கருத்தரங்கத்தின் நான்காவது அமர்விற்கு தலைமை தாங்கினார். இந்த அமர்வில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இந்தியாவின் வேளாண்துறையின் தோற்றத்திற்கும் உண்மையான உள்ளடக்கத்திற்கும் உள்ள முரண்பாட்டை விளக்கினார். அதனை தொடர்ந்து பேராசிரியர் ஜுடியத் ஹேயர் தமிழகத்தின் ஊரகப்பகுதியில் உள்ள ஒரு கிராமம் எவ்வாறு கடந்த ஆண்டுகளில் மாற்றத்திற்கு உள்ளாகியது என்ற விவரங்களை பகிர்ந்துகொண்டார். துவக்கமூலதனக்குவியலின் (primitive accumulation) தாக்கம் எவ்வாறு இந்திய விவசாயத்துறையை பாதிக்கின்றது என்பதை பிரபாத் விளக்கினார். மக்களின் வாங்கும் திறனை திறனாய்வு செய்வதும், பெருகிவரும் அபரிமிதமான உணவுப்பொருட்கள் விற்பனையாகாமல் குவிவதன் காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது. அதனோடு விவசாயத்துறையில் குறைந்து வரும் பொது முதலீடு என்பதை மறைமுக வரிகளின் ஏற்றமாகத் தான் கணக்கில் கொள்ள வேண்டுமென்றும் பிரபாத் விளக்கினார். இவரை தொடர்ந்து பேசிய ஜுடியத் ஹேயர், திருப்பூர் மாவட்டத்தின் கிராமங்கள் பயிரிடும் விதம், நீர்ப்பாசன மாற்றங்கள் மற்றும் கால்நடை பொருளாதார மாற்றங்களை உள்வாங்கி எவ்வாறு விவசாயத்துறை கடந்த 1980/81 முதல் தற்போதுவரை மாறியது என்பதை விளக்கினார். மேலும் திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களும் பின்னலாடை தொழில்களை உள்வாங்கிக்கொண்டு தங்களது வாழ்வாதாரங்களை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்றிக்கொண்டது. தற்போது விவசாயத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்நோக்கியுள்ளனர். தொழில்துறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் பலர் விவசாயத்திற்கு திரும்பும் நிலையும் இங்கே நிலவுகின்றது. ஆனால், இக்கிராமங்களில் உள்ள தலித்துகள் இன்றளவும் பிரதானமாக விவசாய கூலிகளாகவே உள்ளனர். இதற்கு விவசாயத்தில் பெருகிவரும் கூலியும் முக்கிய காரணமாகும். இதோடு, நகர்ப்புறங்களில் தலித்துகளுக்கு இருப்பிடம் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்களும் இவர்களி கிராமங்களிலேயே இருப்பதற்கு காரணமாக அமைகின்றன. இம்மாற்றங்கள் அந்தப்பகுதியில் உள்ள தலித்துகளின் மீது ஏற்படுத்திய தாக்கத்தினையும் ஜுடியத் விளக்கிக் கூறினார். நில விற்பனை அதிகரிப்பும், அதன் காரணமாக தனிநபர் நில உடைமை குறைவதையும் விளக்கினார்.

ஐந்தாவது அமர்வு விவசாயத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அமர்விற்கு பேராசிரியர் நரசிம்ம ரெட்டி தலமை வகித்தார். ஸ்வீடன் லுண்டு பல்கலைக்கழக பேராசிரியர் யோரான் யூர்பெல்ட் விவசாயத்துறையின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்கினார். இவறைத் தொடர்ந்து பேசிய பெங்களூரு புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன், பெரும்பான்மையான சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நிலங்களை இழந்து கூலித்தொழிலாளர்களாக மாறுவதையும் அவர்கள் விவசாயத்துறையை விட்டு விலகுவதையும் ஆதாரத்துடன் விளக்கினார். வேளாண் இயந்திரமயமாக்கலினால் குறிப்பிட்ட கால கட்டத்தின் அபரிமிதமான தொழிலாளர்களின் தேவையையும் ஏனைய கால கட்டத்தில் வேலையின்மையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக விவசாயத்தில் சொந்த வேலையாட்களின் தேவை அதிகரிக்கின்றது என்ற கருத்தை ராமச்சந்திரன் வலியுறுத்தினார். பெரும்பான்மையான விவசாயிகள் மிகச்சிறிய அளவிலான நிலங்களை வைத்திருப்பதால் மார்க்ஸ் கூறும்நிரந்தர கூலிப்படை’ (Reserve army) விவசாயத்துறையில் ஏற்படுவதையும் இவர்கள் நிலமில்லாமல் இருந்தாலும் முழுமையாக சுதந்திரமாய் இல்லையென்பதையும் ராமச்சந்திரன் விளக்கினார்.

கருத்தரங்கத்தின் ஆறாவது மற்றும் இறுதி அமர்விற்கு திருநெல்வேலி மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் போராசிரியர் மணிக்குமார் தலைமை வகித்தார். முதலில் பேசிய பெங்களூரு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் மதுரா சுவாமிநாதன் நிபந்தனைகளுக்குட்பட்ட பணப் பட்டுவாடா (Conditional Cash transfer) மூலம் ஏற்படும் தவறானவர்களை உட்சேர்த்தல் (inclusion Error) மற்றும் தகுதியானவர்களை திட்டங்களிலிருந்து வெளியேற்றல் (Error of Exclusion) போன்றவற்றை தெளிவுறக் கூறினார். தற்போது நடைமுறையில் உள்ள பொருட்களை மக்களுக்கு சகாயவிலையில் தருவதில் இருந்து அவற்றிற்கு இணையான பணத்தை நேரடியாகக் தருவதன் மூலம் ஏற்படும் பாதக விளைவுகளை விளக்கினார். மேலும், கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது விநியோகக் திட்டத்தின் கொள்முதல் ஆகியவையின்றி விவசாய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே ஏற்படும் பாதகங்கள் விரிவாக அலசப்பட்டன. நிபந்தனைகளுக்குட்பட்ட பணமாற்றத்தினை செயல்படுத்திவரும் பிரேசில் போன்ற நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டாக கொண்டு விளக்கப்பட்டது. பேராசிரியர் ராகுமார், பொருளாதார சீர்திருத்ததிற்குப் பிந்தைய விவசாயக் கடன்கள் எவ்வாறு முறைசாராக் கடன்களாகப் பெருகி வருகின்றதென்பதை புள்ளிவிவரங்களோடு எடுத்துக் கூறினார். சமீபகாலங்களில் வங்கிகள் விவசாயிகளுக்கும் சேரவேண்டிய கடன்களை விவாசயம்என்று சொல்லுக்கான பொருளில் மாறுதல்களை ஏற்படுத்தி பெருமுதலாளிகள் பன்னாட்டு நிறுனங்கள் மற்றும் நகர்ப்புற முகவர்கள் மூலம் எவ்வாறு விவசாயமில்லாத துறைகளுக்கு கடன்களைத் தருகின்றனர் என்தையும் ராகுமார் விளக்கினார். விவசாயத்திற்கு தேவையான முதலீடுகளின் தேவையை விடக்குறைவான அளவில் வங்கிக்கடன் விவசாயிகளுக்குத் தரப்படுவதை புள்ளிவிவரங்கள் விளக்குவதை ராமகுமார் குறிப்பிட்டார்.

இருநாள் கருத்தரங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியா பேராசிரியர் ஆத்ரேயாவின் சமூக செயல்பாடுகளைப்பற்றி ஷீலாராணி சுங்கத்தும் அவரின் பத்திரிக்கைகளின் கட்டுரைகளை பற்றி பத்திரிக்கையாளர் ஸ்ரீதரும் எடுத்துக்கூறினார்கள். ஷீலாராணி சுங்கத் பேசும்போது பேரா. ஆத்ரேயா அவர்கள் ஒரு கல்வியாளர் என்பதை தாண்டி சமூக போராளியாகவும், அறிவொளி இயக்கத்தில் செயல்படும்போது பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அடிதட்டு மக்களை ஒருங்கிணைத்து சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்ட விதத்தை அழகாக எடுத்துக் கூறினார். பத்திரிகையாளர் ஸ்ரீதர் பேசும்போது, பேராசிரியர் ஆத்ரேயா ஒரு பத்திரிகையாளராய் அன்றாட நிகழ்வுகளை பற்றிய கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாய் எளிய முறையில் எடுத்துக் கூறுவதை விளக்கினார். தோழல் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் பொதுவுடமை இயக்க தோழர்களின் சித்தாந்த அறிவைப் பெருக்குவதில் பேராசிரியர் ஆத்ரேயாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டினார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய பேராசிரியர் ஆத்ரேயா, தான் வளர்ந்த விதம் மற்றும் தனது சமூக பயணத்தை பற்றி விளக்கி, தன்னை வளர்த்த குடும்பத்தார்க்கும் இயக்கத்திற்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்