மக்களின் அபின்

796
0
SHARE

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்-லெனின் ஆகியோரின் தத்துவமான இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கடுமையாக எதிர்ப்பவர்களானாலும் சரி, தீவிரமாக ஆதரிப்பவர் களானாலும் சரி, ஒரு விஷயத்தில் ஒத்துப் போகின்றனர். அனைவராலும் அடிக்கடி எடுத்தாளப்படும் மேற்கோளான  மதம் மக்களின் அபின் என்பதே மதத்தைப் பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் தத்துவத்தின் சாரம் என்பதில் அவர்கள் ஒத்துப் போகின்றனர். மார்க்சிய, லெனினியர்கள் மதத் தலைவர்களுடன் இணைந்து, நாட்டு விடுதலை, ஜனநாயகம், உலக அமைதி மற்றும் சமூக நீதிக்காகப் போராடும் போது மதத்தைக் குறித்த மார்க்சியப் பார்வையை புறந்தள்ளி விட்டனர் என்று மார்க்சிஸ்ட் அல்லாத பகுத்தறிவுவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். மாறாக, தீவிர மத அபிமானம் கொண்ட மதத் தலைவர்களோ மார்க்ஸ் கூறிய மதம் மக்களின் அபின் என்ற மேற்கோளை மார்க்சிஸ்ட்டுகள்  வறட்டுத்தனமாக பின்பற்றுவதாகக் கூறி மார்க்சிஸ்ட்டுகளைச் சாடுகின்றனர் ஆனால் இருவருமே இந்தக் கணிப்பை மார்க்ஸ் எந்தச் சந்தர்ப்பத்தில் கூறினார் என்பதை மறந்து விடுகின்றனர். ஹெகெலின் நூலை விமர்சித்து எழுதிய நூலில் மார்க்ஸ் கூறியது;

“மனிதன் தன்னைவிட சிறப்பியல்புகள் கொண்ட சூப்பர் மனிதனை, தானே கண்டுபிடித்த அருமையான சொர்க்கத்தில் தேடுகிறான்; அவனைக் காணக் கிடைக்காது, மாறாக தன்னுடைய பிரதிபலிப்பையே காண்கிறான். இதனால் அவன் தன்னையே காணும் ஆர்வத்தால் உந்தப்பட்டு தான் தேடும் மனிதன் அல்லாதவனை காண்பதை தவிர்த்து தன் யதார்த் தத்தையே தேட முனைகிறான்”. மேலும் அவர் கூறுவது:

“மனிதன் மதத்தை உருவாக்குகிறான்; மதம் மனிதனை உருவாக்குவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் மதம் என்பத இன்னும் தன்னைக் கண்டுபிடிக்காத அல்லது கண்டுபிடித்து மீண்டும் தன்னை இழந்து நிற்கும் மனிதனின் சுயப்பிரக்ஞை மற்றும் சுய உணர்ச்சியாகும். ஆனால் மனிதன் ஸ்தூலமற்ற, உலகிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு இருப்பு அல்ல. மாறாக மனிதன், மனிதனின், அரசின் சமூகத்தின் உலகம் என இருப்பவன். இந்த அரசும் இந்த சமூகமும் மதத்தை உருவாக்குகிறது; மற்றும் இடம் மாற்றப்பட்ட (தலைகீழான) உலகப்-பிரக்ஞைகளை உருவாக்குகிறது. ஏனெனில் அவர்களே இடம் மாறிய உலகமாவர். (தலைகீழாக அமைந்த உலகம் என்றும் கூறலாம்). மதம் என்பது அப்படிப்பட்ட உலகின் பொதுவான தத்துவ கருதுகோள் ஆகும்; அறிவுத் தகவல் திரட்டின் களஞ்சியத் தொகுப்பாகும்; மக்கள் புரிந்துகொள்ளும் எளிய தர்க்கமாகும்; ஆன்மீகத்தின் பெருமைமிகு புள்ளியாகும்; உற்சாகத்தின் உருவமாகும்; நீதி நெறிக்கட்டுப்பாடுகளாகும்; புனிதமான மொத்த உருவகமாகும்; ஆறுதலுக்கும், அனைத்து நியாயப்படுத்துதலுக்கும்  பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்திய களமாகும். மனித சாரத்தின் வியத்தகு சாதனையாகும். ஏனெனில் மனிதசாரம் என்பது உண்மையான யதார்த்தம் இல்லை. ஆகவே மதத்திற்கெதிரான போராட்டம் என்பது அடுத்த உலகத்தை எதிர்த்தப் போராட்டமாக உள்ளது. மதம் என்பது அடுத்த உலகின் ஆன்மீக வாசனையாகும்”. அவர் இவ்வாறு முடிக்கிறார்.

மதம் சார்ந்த துன்பங்கள் என்பது உண்மையான துன்பங் களின் வெளிப்பாடே. உண்மையான துன்பங்களுக் கெதிரான எதிர்ப்பு உணர்வாகும். மதம் ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சு ஆகும்.; இதயமற்ற உலகின் இதயம் ஆகும். ஆன்மிகக்கூறு இல்லாத நிலைமையின் ஆவி ஆகும். அது மக்களின் அபின் ஆகும்…. மதத் தலைவர்கள் அபின் என்ற பொருளே, மார்க்சின் மதம் குறித்த அணுகுமுறையின் சாரம் என்று கருதி மார்க்ஸையும் மார்க்சிஸ்டுகளையும் விமர்சனம் செய்கிறர்கள். மார்க்ஸ் கூறிய அந்த குறிப்பிட்டக் கருத்தை அவர் கூறிய சந்தர்ப்பத்திலிருந்து பிரித்தெடுத்து கையாள்கிறார்கள். அதன் உண்மையான பொருள் இதுதான்-வர்க்க வேறுபாடு உள்ள சமூகத்தால் ஒடுக்கப்படும் போது, வேறுவழியின்றி, மனிதன் மதத்திடமிருந்து கற்பனையான உதவியை நாடுகிறான். எப்படி தாங்க முடியாத வலியின் துன்பத்திலிருந்து  தப்பிக்க அபின் எவ்வாறு  உதவி செய்கிறதோ அப்படியே; இந்த உடனடி நிவாரணம் என்பது, ஒரு உண்மையான நிரந்தரத் தீர்வுக்கு மாற்றாக இருக்க முடியாது….. பின்னதற்காக மனிதன் அமைப்பு ரீதியாக ஒன்று திரள வேண்டும்; வர்க்க ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டும்; அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும். உழைக்கும் வர்க்க புரட்சிகர அரசியல் கட்சியின் மனப்பாங்கு மதத்தைப் பொறுத்த வரையில் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்விக்கு லெனின் சோஷலிஸம் மற்றும் மதம் என்னும் கட்டுரையில் பதிலளிக்கிறார். அவருடைய மூன்று கணிப்புகளை அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது; மதம் என்பதை தனிப்பட்ட மனிதரின் விவகாரமாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகளின் மூலம் சோஷலிஸ்டுகள் மதத்தைக் குறித்து தங்கள் மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இந்த வார்த்தைகளின் பொருள் எந்த விதமான தவறான புரிதலுக்கும் இடம் கொடாமல் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். நம்முடைய கோரிக்கையே அரசைப் பொறுத்த வரையில் மதம் தனிப்பட்ட விவகாரமாக கருதப்பட வேண்டும் என்பதே. ஆனால் நம் கட்சியைப் பொருத்த வரையில் மதத்தை எந்த வகையிலும் தனிப்பட்ட விவகாரமாகக் கருத முடியாது. மதத்தைப் பற்றிய அக்கறை அரசுக்கு இருக்கக் கூடாது; மத அமைப்புகளுக்கு அரசு அதிகாரத்துடன் எந்தவித தொடர்பும் இருக்கக் கூடாது. சோஷலிசப் பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பொறுத்த வரையில் மதம் என்பது தனிப்பட்ட விவகாரம் அல்ல. நமது கட்சி உழைக்கும் வர்க்க விடுதலைக்காகப் போராடும் தேர்ச்சிப்பெற்ற, வர்க்க உணர்வு கொண்ட போராளிகளின் கூட்டமைப்பாகும். அப்படிப்பட்ட கூட்டமைப்பு மத நம்பிக்கைகள் என்ற பெயரால் நிலவும் அறியாமைகளையும், பழமைவாதங்களையும் வர்க்க உணர்வற்ற சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

ஆகவே நாம் கோருவது எல்லாம் மதச்சபையை (அரசிலிருந்து) தனியாகப் பிரித்து எடுக்கப்பட வேண்டும் என்பதே. அப்போதுதான் மதம் என்னும் பெயரால் சூழ்ந்தி ருக்கும் பனிமூட்டத்தை  தத்துவார்த்த ஆயுதங்களை  மட்டுமே கை கொண்டு போராட முடியும். அப்போதுதான் தத்தவார்த்த ஆயுதங்களை பத்திரிகைகள் மற்றும் பிரச்சாரம் மூலம் பயன் படுத்த முடியும். இரண்டாவதாக லெனின் நாம் ஏன் நமது திட்டத்தில் நம்மை நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார்.   நம்முடைய திட்டம் விஞ்ஞான ரீதியான பார்வையும் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது.  ஆகவே நமது திட்டத்தைப் பற்றிய விளக்கவுரைகள் மதப் பனிமூட்டத்தின் உண்மையான வரலாற்று மற்றும் பொருளாதர மூலக் காரணங்களைக் குறித்த விளக்கங்களையும் உள்ளடக்கியதாக இருப்பது அவசியமாகிறது. நம்முடைய பிரச்சாரத்தில் நாத்திகப் பிரச்சாரத்தை சேர்த்துக் கொள்வது தேவைதான்; இதுவரை இந்த  யதேச்சதிகார நிலப்பிரபுத்துவ அரசு தடை செய்துள்ள, பழிவாங்கிய விஞ்ஞான ரீதியான எழுத்துக்களை வெளியிடுவதை களப்பணியாக நமது கட்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால் எந்தச் சமயத்திலும் வர்க்கப் போராட்டத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் அறிவுஜீவித் தனத்துடன் கூடிய பிரச்சனையாக அதைப் பார்க்கக் கூடாது. ஒரு ஸ்தூலமற்ற, கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்துடன், மதம் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் தவறை எந்தக் காலத்திலும் நாம் செய்யக்கூடாது.

முதலாளித்துவ தீவிர ஜனநாயகவாதிகள் இந்தத் தவறைத்தான் அடிக்கடி செய்கிறார்கள். உழைக்கும் மக்களை முடிவின்றி அடக்கியும் சுரண்டியும் நடத்தும் அமைப்பைக் கொண்ட சமூகத்தில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட தவறான கருத்துக்கள் வெறும் பிரச்சாரம் மூலமே களையப்பட்டு விடும் என்று நம்புவது முட்டாள் தனமே. மனித சமூகத்தை அழுத்திப் பிடிக்கும் நுகத்தடியாகக் காட்சியளிக்கும் மதம் என்பது மனிதனை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நுகத் தடியின் விளைவாக உருவானதும் அதன் பிரதிபலிப்பும் ஆகும்; இந்த உண்மையை  மறப்பது முதலாளித் துவ குறுகிய மனப்பான்மையாகும். முதலாளித்துவ கருஞ்சக்தி களுக்கெதிராக தனிப்பட்ட போராட்டங்கள் நடத்துவதன் மூலமே  பாட்டாளி வர்க்கம் தெளிவு பெற இயலும்;

மாறாக கணக்கில்லா துண்டுப் பிரசுரங்களினாலோ, எண்ணற்ற பிரச்சாரங்களினாலோ அவர்கள் தெளிவு பெற முடியாது. பரலோகத்தில் இருக்கும் சொர்க்கத்தைக் குறித்த பாட்டாளி வர்க்க கருத்தின் ஒற்றுமையை விட, இந்த மண்ணிலேயே சொர்க்கத்தை உருவாக்குவதற்காக நடத்தப்படும் உண்மையான புரட்சிகரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமையே முக்கியமாகும். மூன்றாவதாக, இதன் காரணமாகத்தான் நமது திட்டத்தில் நாத்திகத்தை முன்வைப் பதில்லை; முன்வைக்கவும் கூடாது. ஆகவேதான் பழைய நம்பிக்கைகளின் மிச்ச சொச்சங்களை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்களை நம் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதிலிருந்து தடுப்பதில்லை; தடுக்கவும் கூடாது. விஞ்ஞான ரீதியன அடிப்படையில் அமைந்த உலகக் கண்ணோட்டத்தை நாம் எப்பொழுதும் பிரச்சாரம் செய்வோம்.

மேலும், பல்வேறு வகைப்பட்ட  கிருத்துவர்கள் இடையே உள்ள முரண்களுக்கு எதிரான போராட்டம் அவசியமான ஒன்றே. “ஆனால் இதன் பொருள் மதம் குறித்த பிரச்சனையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதல்ல; அது தேவையும் இல்லை அந்த முதல் இடமும் அதற்குரியது இல்லை. மேலும் அரசியல் முக்கியத்துவத்தை விரைவாக இழந்து கொண்டி ருப்பது மட்டுமல்லாமல், தன் போக்கிலேயே சென்று கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் குப்பைகள் என்று பெருக்கித் தள்ளப்படக்கூடிய, மூன்றாந்தரக் கருத்துக்கள் மற்றும் அர்த்தமற்ற சிந்தனைகள் காரணமாக உண்மையான புரட்சிகர பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளை பிரிந்து சிதறிச் செல்ல அனுமதிக்கலாம் என்று பொருள்படுத்திக் கொள்ளக்கூடாது”.

– தமிழில்: அபராஜிதன்

(மக்களின் அபின் …. இ.எம்.எஸ்.,

டிசம்பர் 1, 1995இல் ப்ரன்ட்லைனுக்கு எழுதிய பத்தியிலிருந்து)

 

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...