மரணமில்லாப் பெரு வாழ்வு

957
0
SHARE

ஜோதிபாசு, இனி இந்திய மக்களின் மனங்களிலே சுடர்விடும் ஜோதி. அவரது உடல் மறைவு கட்சி உறுப்பினர்களின் மனங்களை உலுக்கியதோடு நிற்கவில்லை, மனதைக் காட்டில் அலையவிடாமல் நன்றின் பால் உய்க்கும் அறிவைச் சுடர் விட செய்துள்ளது. அவரைப் பற்றி பத்திரிகைகளும், தொலைக்காட்சி களும் தரும் இது வரை கேள்விப்படாத பல தகவல்களும், மறதியெனும் தூசி மறைத்ததை துடைத்த நினைவூட்டல்களும் நம்மை ஒரு புதிய மனிதனாக வாழ உறுதி பூண வைத்து விடுகிறது. இன்று நாம் அறிந்த பிரபலமான பல அரசியல் தலைவர்களின் சொந்த வாழ்க்கையை ஒருவர் பின்பற்ற முடியுமா என்பது கேள்விக் குறியே. ஜோதிபாசு வாழ்ந்த விதம், மரணத்தை தழுவியபொழுது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஈந்த விதமும் காட்சியாக மனத்திறையில் ஓடுகிற பொழுது அவர் போல் நெடுநாள் மக்களுக்காக வாழவும், சாகவும் நாம் ஆசைப்பட்டு விடுகிறோம்.

கம்யூனிசப் பாசறை

குணத்தால் அவர் ஒருவரல்ல, பலர், இவர்கள் மீடியாக்களின் கண்ணில்படாமல் போயிருக்கலாம். பதவிகளைப் பெறாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவரைப்போல்  குணங்கள் படைத்த பாட்டாளி மக்களை நேசிக்கும் பல ஆயிரம் மார்க்சிஸ்டுகள்  நம்மிடையே இருந்தனர், இன்றும் உள்ளனர் என்பது அவரை இழந்து நிற்கிறபொழுது நம்மால் உணரமுடிகிறது.

மார்க்சிஸ்டுகளும், கம்யூனிச குணம் பெற்றோரும் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அவரது பிறப்பு, வாழ்வு, மறைவு, அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்தவர்களின் கருத்துக்கள் ஆகியவைகள் மீண்டும், மீண்டும் நிருபிக்கின்றன .

தைரியமும், மன உறுதியும், நேர்மையும், மக்களை நேசிக்கும் பண்பும், சாகும்வரை கற்கும் ஆர்வமும், மெய்பொருள் காணும் அறிவும், உண்மையை தேடுவதில் ஈடுபாடும், ஊழி (கடல்) பெயரினும் தாம் பெயரா சான்றாண்மையும், தன்னடக்கமும், தூய்மையும், துணைமையும், துணிவுடைமையும், அறிதோறும் அறியாமை காணும் அருங்குணமும், சில சொல்லால் சிந்திக்க வைக்கும் ஆற்றலும்,செம்பொருள் கண்ட வாய்ச்சொல்லும், பணிவுமிக்க இன்சொலன் ஆதலும்  ஒருவரின் பிறவி குணங்களல்ல, வாழ்கிற பொழுது ஒருவர் விரும்பி உருவாக்கிக் கொள்கிற குணங்களாகும். இவைகள் வர்க்கப் போராட்டத்திலே பாட்டாளி மக்களின் சார்பாக நின்று முழுமையாக ஈடுபடுகிறபொழுது எளிதில் யார் விரும்பினாலும் சம்பாதிக்கக் கூடிய மனச் செல்வங்களாகும்.

ஜோதிபாசுவின் சிறப்பு, அந்த குணங்களை சம்பாதிக்க விரும்பினார், அவர் நிறையவே சம்பாதிக்கவும் செய்தார். சாகிறவரை அக்குணங்களை சம்பாதித்துக் கொண்டே இருந்தார். ஹோசிமின் ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல் வளரும் நாடுகளில் இளமையில் கம்யூனிஸ்டாக இருப்பவர்கள் கடைசிவரை கம்யூனிஸ்ட்டாக இருப்பதில்லை, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு இது ஒரு சவாலாக இருந்துவிடுகிறது. நமது நாட்டு நாடாளுமன்ற அரசியலும், பதவியும், புகழும் ஒருவரை தடுமாற வைக்கும் என்பதை நாம் அறிந்ததே. உதட்டில் சோசலிசம், உள்ளத்தில் சுரண்டலிசம் என்ற ஜென்டில்மேன் அரசியல்வாதிகளாக மாறிய பலரை நாம் அறிவோம்.  கடைசிவரை மார்க்சிஸ்ட்டாகவே வாழ்ந்தார் என்பதே ஜோதிபாசுவின் சிறப்பு.

அவர் லண்டனில் மார்க்சிசம் பற்றி தெரிந்து கொண்டார். ஆனால் இந்திய பாட்டாளி வர்க்க இயக்கமே அவரை சிறந்த மார்க்சியவாதியாக ஆக்கியது.

இந்திய விடுதலையின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அறியப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் அமைப்பு 1944இல் துவக்க காலத்தில் அவருக்கு கம்யூனிஸ்ட் குண நலன்களை பெற பயிற்சி அளிக்கும்  முதல் பாசறையாக ஆனது. அடுத்து மேற்கு வங்க குத்தகை விவசாயிகள் சங்கம் நடத்திய போரராட்டம், ஆசிரியர்கள் சங்கம் என பாட்டாளி மக்களின் போராட்ட அமைப்புகள் அவரை சிறந்த கம்யூனிஸ்ட் குண நலன்களை பெற உதவின. அவரது  சிறப்பு அங்கு கற்றபடி பின்னர் நின்றார் என்பது பதவிகளை பெற்றபொழுது வெளிப்பட்டது .

பதவிகளும் – பயன்பாடும்

நமது நாடாளுமன்ற அமைப்பில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் ஆட்டம் போடுவது எளிது,சொத்து சேர்ப்பது மிக எளிது. அதை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அதை விட எளிது. ஆனால் அடக்கமாக அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்துவது சிரமம். அதைவிட சிரமம் துதிபாடிகளின் கூற்றை நம்பி தான் ஒரு ஆற்றல் மிகு அவதாரபுருஷன், அபூர்வப் பிறவி என்ற தலைக்கணம் இல்லாமல் இருப்பது, செல்வாக்கைத் தக்கவைக்க துதிபாடிகளை பராமரிக்காமல் இருப்பது, குழிபறிக்கும் விளையாட்டை விளையாடாமல் கட்சி முடிவுகளை மதித்து நடப்பது, தான் அங்கம் பெறும் குழுவோடு மனமுவந்து ஒத்துழைப்பது, பிறர் கருத்தை முத்திரைக் குத்தாமல் பரிசீலிப்பது சிரமத்திலும் சிரமமாகும். பாட்டாளி வர்க்க அமைப்புக்களிலே ஈடுபாட்டுடன் செயல்பட்டால்  இவைகள் சிரமங்களல்ல, கைவந்த கலை ஆகிவிடுகிறது என்பதை மீண்டும் அவரது வாழ்வு நிருபித்துவிட்டது.

புதிய கலாசாரம்

மார்க்சிஸ்ட் முதலமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்திய விதமே அலாதியானது. அவர்களால் அரசியலில் புதிய ஜனநாயக நாகரிகம் புகுந்தது, மக்களின் சேவகனாக கருதும் பண்பாடு குடியேறியது. இரும்புக்கரங்களும், அடக்கு முறைச் சட்டங்களும் இல்லாமல் அரசு  நிர்வாகத்தை இயக்கி காட்டினர். அதிகாரம் கையில் கிடைத்த பிறகும் அந்த வழியில்  கம்யூனிஸ்டு தொண்டனைப் போல் ஜோதிபாசு செயல்பட்டார் என்பதுதான் அவரது சிறப்பு. அதிகாரப் போதை அவரை தீண்டவில்லை. அவரது நிர்வாகத் திறமை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா, 18-1-2010இல் வெளியிட்ட செய்தியை படித்தோர் கண்கள் குளமாகும். அது சில நிகழ்வுகளைக் காட்டி எழுதி இருந்தது.

“எஸ்.யு.சி.ஐ ஊழியர்களால் இரண்டு போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதையொட்டி 1969இல் ஒரு குரூப் போலிஸ் காரர்கள் உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசுவின் அறையைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். செக்ரடேரியட் காவலர்களால் அவர்களைத் தடுக்க முடியவில்லை அவர்களது கோபத்தின் நியாயத்தை அறிந்த ஜோதிபாசு அறையைவிட்டு வெளியே வந்து அவர்களை அமரச் செய்து விவரத்தைக் கேட்டு கலையச் செய்தார். தடியடி செய்து கலைக்காமல், ஒழுங்கீனத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் அவர் காவல்துறையினரை நடத்தியவிதம் புதுமையாக இருந்தது.

1992இல் பங்களா தேசத்திற்கு, எல்லையில்  ஒரு ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுத்ததற்காக பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அப்பகுதிக்கு சென்ற ஜோதிபாசு மீது கற்களை வீசினர், துணிந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நெருங்கி விட்டுக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை விளக்கிப் பேசி ஜோதிபாசு அவர்களை கலையச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய அரசு விட்டுக் கொடுத்து செய்த ஒப்பந்தத்தை அரசியலாக்காமல் நியாயத்தை பேசிய ஜோதிபாசுவை வியந்து பாராட்டியதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

அப்பத்திரிகை கூறுகிறது; ஜோதிபாசு கோபப்பட்டதை ரைட்டர்ஸ் பில்டிங்கில் இருக்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் யாரும் பார்த்ததில்லை, ஆனால் 1992 டிசம்பர் 6 அன்று பிரதமரிடம் கோபமாக பேசி டெல்லியில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் கலவரம் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்தாராம். மசூதி இடிக்க பாஜக திட்டமிட்டிருப்பதை அறிந்த பாசு அதனை தடுக்க கல்யாண்சிங் அரசை கலைக்க ஆலோசனைக் கூறியதை கேட்க மறுத்த நரசிம்மராவ் மீது கடும் கோபமாக இருந்ததை அதிகாரிகள் கண்டனர். மேற்கு வங்கத்தில், ஒரு இடத்தில் மசூதி இடிக்கப்பட்டதை கேள்விப்பட்டவுடன் தனியார் காண்ட்ராக்டரை அழைத்து உடனே கட்டச் செய்து முதலமைச்சர் நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கி சிவப்பு நாடா நியதிகளை ஓரம் கட்டினாராம்.

அவர் ஒரு தொழிலாளி போல் வேலை செய்வார், அதிகாரிகளை மதித்து நடப்பார். அவர் ஒரு நடைமுறைவாதி என்றெல்லாம் அவருடன் பணிபுரிந்த அதிகாரிகள் கூறியதை அப்பத்திரிகை விரிவாகவே எழுதியுள்ளது.

தன் பேச்சை கேட்க லட்சக்கணக்கில் மக்கள் திரளுவதை கண்டவுடன் நினைத்ததை முடிப்பவராக தன்னை கருதாமல், அகங்காரம் கொள்ளாமல், தான் என்றுமே மக்கள் ஊழியன் என்று கருதும் மனப்பக்குவத்தை அவர் எங்கே கற்றார்? அது உலக கம்யூனிஸ்ட் இயக்கம் கற்றுத்தந்த பாடமாகும்.”

தனி நபர் வழிபாடு

அரசியல் தலைவர்களை அவதார புருஷர்களாகவும், அபூர்வ பிறவிகளாகவும் கருதி வழிபடும் வியாதி சோவியத், சீனக் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் புகுந்ததையும் அதனால் தலைக்கணம் ஏறிய தலைவர்கள் கண்மூடிப் போனதுவும், துதிபாடிகள் போட்ட ஆட்டமும், அதனால் ஏற்பட்ட தீய விளைவுகளையும், கம்யூனிசப் பாங்கோடு விமர்சிப்பதில் ஒருவராக அவர் இருந்தார். தவறுகளிலிருந்து பாடம் கற்கத் தவறாத பண்பாட்டை வியட்நாம் நாட்டு ஹோசிமின் போல், கியூபா நாட்டு காஸ்ட்ரோ போல் இவரும் வளர்த்துக் கொண்டதால், அதிகார ஆணவம் அவரை நெருங்கவில்லை. இது வெறும் புகழ்ச்சியல்ல.

எம். ஜே. அக்பர் என்ற பிரபல பத்திரிகையாளர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்ற ஆங்கில தினசரியில் ஜோதிபாசுவின் தனிப்பட்ட குணச்சிறப்புகளை நினைவு கூர்ந்து எழுதியது.

“ஒரு மா மனிதனின் நினைவுகள் என்பது இரண்டு பரிமாணங்களை கொண்டது.ஒன்று கூட்டாக உருவாகும் பொது பரிமாணம். மற்றொன்று தனிப் பட்ட உறவால் உருவாகும் பரிமாணம். அவரது ஆளுமையை விளக்க, வல்லவர், நுண்ணறிவு படைத் தவர் (‘வவையn’ யனே ‘பநnரைள’) என்ற இரண்டு சொற்களின் பொருள்களை விளக்கும் திசாரசில் (நிகண்டுவில்) உள்ள எல்லா சொற்களும் தீர்ந்துவிடும். அதை விட அவரது தனிப்பட்ட சில செயல்களை நோக்கும் பொழுது அவரது ஆளுமையின் தன்மைகளை மேலும் தெளிவாக காட்டிட முடியும்.

ஒரு நேர்காணலில் நான் கேட்டேனா, இல்லை அவரா சொன்னாரா என்பதை அலச இயலாது. பிரதமர் பதவியை மறுக்க சொன்னது வரலாற்று பிழை என்றார். இது ஒரு பத்திரிகையாளனுக்கு கிடைக்காதா என்று கனவு காணும் பரபரப்பு செய்தி என்பதை அறிந்தேன். இந்த சொற்களை அவர் சொல்லுகிற பொழுது கோபமோ, வருத்தமோ இன்றி  சொன்னார். அவர் எதார்த்தங்களை கூறும் வரலாற்றாசிரியனாக இருந்தார். தனிப்பட்ட முறையில் பேசுகிறபொழுது அவர் மவுனம் குறைந்தே இருக்கும், அதே நேரம் வார்த்தை களில் சிக்கனம் இருக்கும். அவர் துளைக்கும் பார்வை யால் கவனிப்பவர். ஆனால் அவர் பார்வை முறைப்பாக இருக்காது. அவர் கண்ணால் கவனிப்பவர். மாற்றுக் கருத்துக்களை அறிய அவருக்கு நேரமுண்டு, துதிபாடுவதை கேட்பதற்கோ, பேராசைப்படுவதற்கோ, துவேஷப்படுவதற்கோ அவருக்கு நேரமில்லை.

எங்களது வழிகள் தூரவே இருந்தும் விநோதமான முறையில் குறுக்கிட்டன. 1968இல் ஏற்பட்ட வகுப்பு கலவரம் காரணமாக நான் வசிக்கும் டெலினிபராவில் இருக்கும் சிறிய நகரான மொகல்லாவில் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டேன். அவர் அப்பொழுது மேற்குவங்க அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார். எங்கள் பகுதிக்கு மேற்பார்வை யிட வந்தார், எங்கள் நகருக்கு வரவில்லை, ஆனால் பல வாரங்களாக புகழ் பெற்ற பிரசிடென்சி கல்லூரிக்கு நான் செல்ல இயலவில்லை என்பதை அறிந்தவுடன் கல்லூரி செல்ல பாதுகாப்பிற்கு காவல் துறையை ஏற்பாடு செய்தார். எப்பொழுதெல்லாம், கலவரம் எனும் தொத்தும் சொறிநோய் தொந்திரவு ஏற்படும் போதெல்லாம் எங்கள் நகருக்கு பாதுகாப்பு கொடுக்க செய்தி அனுப்பிவிடுவார். அமளி துமளிக் கூட்டத்தில் கூட அவர் அறிந்த ஒருவரை அடையாளம் காணாமல் போவது அபூர்வமே.

சில மாதங்களுக்கு முன்னால். அவரைச் சந்திக்க ஒரு உந்துதல் ஏற்பட்டு சென்றேன். வழக்கம் போல் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். வயது அவரது முகத்தை சுருக்கியிருந்தது. மக்களால் மிகவும் நேசிக்கப் பட்ட முதலமைச்சர், அவரது ஒரு வாக்கியம் அதிகார இயக்கத்தை மாற்றிவிடும் ஆற்றல் கொண்டிருந்தது, அவரது ஒரு சொல் வங்காளியை  இந்துவோ, முஸ்லிமோ நம்பிக்கையூட்டியது, அவரது இந்த முந்தைய தோற்றம் இறுக்கமான முகமூடிக்குள் சுடர்விட்டதைக் கண்டேன். அவரோடு அளவளாவ முயன்றேன். அவரிடம் இரண்டு புத்தகங்களை கொடுத்தேன். அவர் சொன்னார் “என்னால் இனி படிக்க முடியாது”. மீண்டும் அந்த சுடர் சுடராகவே திரும்பியது.

“டாக்டர்கள் தினசரி வந்து போகிறார்கள். பார்த்துவிட்டு போனபிறகு உள்ளுக்குள் சிரிப்பார்கள் என நினைக்கிறேன்”. சிறிது மவுனம், மீண்டும் தொடர்ந்தார் ‘ஏன் வந்தாய்? செத்தவனை பார்க்க ஏன் வந்தாய்?’ நான் நிலை குலைந்து விழுந்தேன்” – என்கிறார் அக்பர்.

மேற்கு வங்க மார்க்சிஸ்ட்  தலைவர்கள் உடல் தானம் செய்வதை உயர்வாக கருதுபவர்கள். அந்த வழியில் ஜோதிபாசுவும் உடல் தானம் செய்தார். அதுபற்றி கன தர்ப்பன் (உடலை தானம் செய்யும் அமைப்பு) என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் ராய் கூறியது;

உடலை தானம் செய்யும் அமைப்பு பற்றி நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்ட ஜோதிபாசு எங்களோடு தொடர்பு கொண்டு தனது உடலை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். 2003இல் (ஏப்ரல்-4) அன்று நாங்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தை துவக்கிவைத்து பேசினார். தனது உடலை தானம் செய்வதாக அறிவித்தார். பின்னர் என்னிடம் கூறினார்.

“கம்யூனிஸ்டுகள் சாகிறவரை மக்களுக்காக பணிபுரிவதை அறிவேன். மரணத்திற்குப்பிறகும் சேவை செய்யமுடியும் என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டேன்” என்று கூறியதாக ராய் சொல்கிறார்- டெலிகிராப் (18-1-10).

சில பிரபலமான பத்திரிகைகள், அவரை புகழ்வதோடு நிற்கவில்லை, கம்யூனிச துவேஷத்தை தூவவும் செய்தன. வரலாறு என்று கூசாமல் பொய்களையும் விதைத்தன. நாம் அவர்களுக்கு சொல்லுவோம்;

“நீங்கள் பொய்களை விதையுங்கள், கம்யூனிச லட்சியத்திற்கு அர்ப்பணம் செய்த ஜோதி பாசுவின் வாழ்வு தந்த உறுதி எங்களிடம் உள்ளது. நாங்கள் அந்த உறுதியுடன் உண்மையைத் தேடி மக்களிடம் சேர்ப்போம் ”.

இப்பொழுதும் தலை நிமிர்ந்து கூறுகிறோம்;

“ஒரு மார்க்சிய இயக்கம்தான் ஜோதிபாசு போன்ற குணநலன்களை கொண்டோரை எளிதில் உருவாக்கிட முடியும்.”

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்