மரபீனி சூதாட்டம்

603
0
SHARE

 

அறிவியல் தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் புகுத்துவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, மரபணு மாற்ற தொழில்நுட்பம் வேளாண்துறையில் அறிமுகப் படுத்தப்பட்டு  உலகெங்கிலும் பெரிய சர்ச்சை நடைபெற்று வருகிறது. இன்று உலக நாடுகள் பலவும் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், மரபணு மாற்றப் பயிர்தான் உணவு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என ஒருசாரார் வாதிடுகின்றனர். ஆனால், மறுபுறம் மரபணு மாற்றப் பயிர்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், மரபணு மாற்றப்பயிர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாதென்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். எந்த ஒரு தொழில்நுட்பமாக இருப்பினும் அதனுடைய சாதக, பாதக விளைவுகளை ஆராய்வது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

கோபி கிருஷ்ணா-ஜெய்கிருஷ்ணா ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஜெனடிக் காம்பிள் (ழுநநேவiஉ ழுயஅடெந)’ என்ற நூலை முனைவர் ராமகிருஷ்ணன் தமிழில் மொழியாக்கம் செய்து, விடியல் புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் தலைப்பு ‘மரபீனிச் சூதாட்டம்’ என்பதாகும். தலைப்பை பார்க்கும் பொழுது மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் பாதக விளைவுகளை விளக்கப்போகிறது என்பது உறுதியாகி விடுகிறது. முனைவர் ராமகிருஷ்ணனின் முன்னுரையை வாசிக்கும் பொழுது, அந்தக் கருத்து வலுப்பெறுகிறது. மரபணு மாற்றம் சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பதையும், சுற்றுச்சூழல் அழிவுக்கு “பேராசை பொருளாதார முறை (முதலாளித்துவம்) கோலோச்சுவது” காரணம் என்று கூறியுள்ள அவரின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் பேரழிவுக்கு காரணம் என்று கூறுவது ஏற்க இயலாதக் கூற்று. மனிதகுல வரலாற்றை நோக்குகையில், மனிதன் இயற்கையுடன் தொடர்ந்து போராடி வந்துள்ளான். நெருப்பு முதல் ரோபோ வரை மனித கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நூலுக்கு முன்னுரையாக நிகில்டே மற்றும் அருணா ராய் ஆகியோரின் கட்டுரை தரப்பட்டுள்ளது. மரபீனி தொழில்நுட்பத்தை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன என்றும், இதை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசும் பன்னாட்டு கம்பெனிகள் பக்கம் சேர்ந்து கொள்கின்றன என்பது உண்மையே. மரபீனி மாற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து நாடுகளை தாயகமாகக் கொண்டுள்ளன என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரபணு மாற்ற விதை ஆய்வு, உற்பத்தி மற்றும் வணிகத்தில் முதலிடத்தில் இருப்பது மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனமாகும்.

முனைவர் மீராசிவா முகவுரை எழுதியுள்ளார். உணவு பயிர்களில் மரபணு மாற்றம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை அவர் விளக்கியுள்ளார். மரபணு மாற்ற உணவு பயிர்களை புறக்கணிப்போம் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த நூல் ஏழு அத்தியாயங்களையும், ஐந்து பின்னிணைப்பு களையும் கொண்டுள்ளது. முதல் அத்தியாயத்தில், மரபணு மாற்றப்படுதல் என்றால் என்ன என்றும், அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். மரபணு மாற்றப் பயிர்களுக்கு ஆதரவான வாதங்கள் யாவை? அவைகளைக் கொல்லிகளை தாங்கும் திறன் படைத்தவை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் தாங்கக் கூடியவை, விளை பொருட்களின் வாட்டத்தை அதிகரிக்கக்கூடியவை, மாறுபடும் சூழலை தாங்கும் திறன் கொண்டவை. உண்ணக்கூடிய தடுப்பு மருந்துகளை உருவாக்கக்கூடியவை என்றெல்லாம் கூறப்படு கின்றது. ஆனால்,  க்ரை, ஏரி எனப்படும் புரதம் உடல்நலத்தை பாதிக்கவல்லது என்பதை நிறைய விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல், ஒரு பயிரில் புகுத்தப்பட்ட மரபணுக்கள் அப்பயிரின் வளர்ச்சியில், எளிதில் புலப்படாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மரபணு மாற்றப்பயிர்கள் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்பது உண்மை அல்ல என பல ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக மரபணு மாற்றப்பயிர்கள் கலப்படத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. இதை வலியுறுத்தும் வகையில், இந்நூலில், மரபணு மாற்றப் பயிரை சோதனை செய்வது, ஆராய்ச்சிக்காக பயிரிடுவது அவற்றின் விதைகளை விற்பது ஆகியவை காரணமாக எந்த ஒருவகை பயிரும் விரைவில் கலப்படத்திற்குள்ளாகிறது என்றும், மரபணு மாற்றப்பயிர்களின் மகரந்தமும், இயல்பு பயிரின் மலரிலும், இயற்கையில் தானாக முளைத்த பயிரின் மலரிலும் சேர்ந்து அவற்றை கலப்படமாக்கும் என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “மரபீனி மாற்றப் பட்ட பயிர்களை தன் நாட்டினுள்ளே அனுமதிக்க விரும்பாத அரசும் கூட அந்தப் பயிர்களோ அவற்றில் விளைந்த பொருள்களோ தன் நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களில் கலந்துள்ளனவா என்று அறிய முடியாது”(பக்கம்.26)

எந்தெந்த நாடுகள் மரபணு பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றன. எவை எதிர்க்கின்றன என எடுத்துக்காட்டு களுடன் விளக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பயிரில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கிறது. பெரும்பகுதி ஸ்பெயின் நாட்டில் உள்ளது. பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் மரபணு மாற்றப்பயிர்களுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளன. 2008 மே மாதம் பிரெஞ்ச் நாடாளுமன்றம் மரபணு மாற்றப் பயிருக்கு ஆதரவான மசோதாவை நிராகரித்து விட்டது. ருமேனியா ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியது . ஆனால், பின்னர் மரபணு மாற்றத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 2013 வரை மரபணு மாற்ற பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் தடை உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2012 வரை தடை உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 41 உணவு பயிர்கள் உட்பட சுமார் 56 மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஆய்வில் உள்ளன என ஆசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2006-இல் நெற்பயிரில் கட்டுப்பாடில்லாத கள ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பதுடன், பி.டி. கத்திரியைப் பற்றிய சுருக்கமான விளக்கம் தரப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பயிர்கள் நமது உடல்நலத்தில் எப்படிப்பட்ட தாக்கங்களை செலுத்தும் என்பதை விளக்குகையில் “நம்பகமான தகவல்கள் போதுமான அளவில் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது சரியே. எங்கு, எந்த பயிரில், எவ்வளவு ஏக்கர் பரப்பளவில், எவ்வாறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன என்றும், அவற்றின் முடிவுகள் முறையாக, வெளிப் படையாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். ஸ்காட்லாந்து ரௌலட் ஆய்வகத்தில் உருளை மீதான ஆய்வும், மக்காச்சோளத்தின் மீதான ஆய்வும் நடைபெற்றுள்ளன. சோதனைக்குட்படுத்தப் பட்ட எலிகளின் எடை, கணைய சுரப்பி, சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல ஒவ்வாமை ஏற்படுமென்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மரபணு மாற்றம் என்பது சந்தையை முதன்மைப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கும் ஆசிரியர்கள், பி.டி. பருத்தியின் மர்மம் என்ற பெட்டி செய்தியில் 2006-இல் வாரங்கல்லில் பி.டி. பருத்தி அறுவடையான ஒரு வாரத்தில் அந்த தோட்டங்களில் மேய்ந்த 1600 ஆடுகள் இறந்து விட்டன என்றும், அதற்கு ஆதாரமாக ஆந்திர கால்நடை இயக்கத்தின் அறிக்கை உ.பி. கால்நடை ஆய்வு  கழக அறிக்கை, ஆந்திர அரசின் கடிதம் ஆகியவற்றில் முரண்பாடு உள்ளதென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இது தேவையற்ற பீதியை கிளப்பியது என்ற கருத்தும் நிலவுகிறது. அதேபோன்று மரபணு மாற்ற உணவு பயிர்களை நுகர வேண்டாம் என்று பெட்டி செய்திகளாக, பேராசிரியர்கள், ஒலிம்பிக் வீரர் ஆகியோரின் கருத்துக்கள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

மரபணு மாற்றப்பயிர்களின் தீமைகளை விளக்குகையில் திடீரென அஸ்பெஸ்டாசின் தீமைகளை எடுத்துக்காட்டாக விளக்கி இருப்பது பொருத்தமே இல்லாமலிருக்கிறது. அதையடுத்து பசுமைப் புரட்சியைப்பற்றிய விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது. பசுமைப்புரட்சி கிராமப்புறங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது என்பதையும், வேறு சில பாதகமான விளைவுகளையும் யாரும் மறுக்க இயலாது. எனினும், 60-களில் நிலவிய கடுமையான உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க பசுமைப் புரட்சி உதவியது என்பதையும் உணவில் தன்னிறைவு பெற இயலுமென்ற நம்பிக்கையையும் தோற்றுவித்தது என்பதை இந்நூல் ஆசிரியர்கள் ஏற்கவில்லை. மாறாக, பசுமைப் புரட்சிக்கு பின் 40 ஆண்டுகள் ஆகியும் நுண்சத்து குறைவு உள்ளது என்கின்றனர். பசி, பட்டினி, நுண்சத்து குறைவு ஆகியவற்றிற்கு அரசின் கொள்கைகள் காரணம் என்பது அழுத்தமாக நூலில் வெளிவரவில்லை.

தொடர்ந்து இந்தியாவில் மரபணு பொறியியலை ஒழுங்குபடுத்தும் மண்டலம், அதன் குறைகள் பற்றி நூலாசிரியர்கள் விளக்கியுள்ளனர். இது தொடர்பாக தற்போது ஆறு குழுக்கள் உள்ளன. பல மாநில அரசுகள் குழப்பமுடன் செயல்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மட்டும் விதிவிலக்கு என்பதை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். “கள ஆய்வுகளை மாநிலங்களின் மீது மரபீனி பொறியியல் ஏற்புக்குழு திணிப்பதை இதுவரை கேரள மாநிலம் மட்டுமே தடுத்து நிறுத்தியுள்ளது… 2006ல் மஹிகோ கேரளத்தை தேர்ந்தெடுத்திருந்து. ஆனால், அம்மாநில மக்களும், அரசும் மஹிகோவின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டன. அத்துடன் பி.டி. பருத்தி கள ஆய்வுகள் பற்றி மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது” என்பது கவனத்தில்கொள்ளத்தக்கது.

தற்போதுள்ள ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் மரபணு மாற்ற உயிரிகள், சட்டத்திற்கு புறம்பான, கட்டுப்பாடில்லாத வழிகளில் நம் உணவு வளையத்தில் நுழைவதை தடுக்கும் வல்லமை இல்லை. 2005-இல் பி.டி. பருத்தி வேரூன்றி விட்டதை எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள் கூறி, ‘சட்டப்படியான பருத்தி வகைகள் பயிரிடப் படும் பரப்பளவை விட சட்டத்திற்குட்படாத பருத்தி வகைகள் பயிரிடப்படும் பரப்பளவு அதிகம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். (பக்கம் 60)’. ‘எலிகளும் மனிதர்களும்’ என்ற தலைப்பின் கீழ் அரசின் அலட்சியப்போக்கை இந்நூல் சாடியுள்ளது.

மரபணு மாற்றப் பயிர்கள், நுகர்வோர்-விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கின்றன என்பதை மருத்துவ அதிகாரி உமா மேத்தா (பெட்டி செய்தி) க்ரின் பீஸ் என்ற அமைப்பின் ஆய்வு, செயல்பாடு மூலம் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். தவிர இயற்கை உழவர் சங்கத் தலைவர்கள் கருத்துக்கள் மூலம் இயற்கை வேளாண் பொருட்கள் மாசுபடுதல் விளக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் நிலைமைக்கேற்ப, தனது நிலைபாட்டை எப்படி மாற்றிக் கொள்கின்றன என்பதும், குறிப்பாக இந்தியாவில் செயல்படும் ‘பெப்சிகோ இந்தியா , நெஸ்லே இந்தியா’ போன்றவற்றின் நிலைபாடு விவரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பார்வையில் மரபணு பயிர்கள் பற்றிய எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

“எங்கெங்கு காணினும் மரபீனி மாற்றப்பட்ட உணவு பண்டங்கள்” என்ற அத்தியாயத்தில், 2005-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பங்கும் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆய்வுகளில் இந்தியாவில் தனியார் – பொதுத்துறை மற்றும் ஒப்பந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் விதம், கள ஆய்வு நிலை விபரங்களின் பட்டியல் மூலம் வாசகர்கள் நிறைய விபரங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட மரங்கள், மூலிகைகள் போன்றவற்றிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நான்கு பின்னிணைப்புகள் பயிர்கள், ஆய்வுகளை மேற்கொண்ட பல்கலைக் கழகங்கள் / நிறுவனங்களின் பட்டியல்களை கொண்டவையாக உள்ளன.

நூலில் காணும் குறைபாடுகள்

மரபணு மாற்றப் பயிர்கள் என்றால் என்ன என்பதன் விளக்கம் நூலின் ஆரம்ப்பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போதாது. ஒவ்வொரு பயிர் / தாவரத்தை எடுத்துக் கொண்டாலும், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன என்பது பலவகை கண்டுபிடிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (உ.ம் விதை இல்லாத திராட்சை, மாதுளை, ஒட்டுவகை பழங்கள், காய்கள்…. என ஏராளமானவை உண்டு)

மரபணு மாற்றப் பயிர்களின் வரலாற்றுப் பின்னணி தரப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பல நாடுகள், பல பயிர்களில் மரபணு மாற்றம் செய்துள்ளன. 2000இல் 13 நாடுகள் அதிக அளவில் மரபணு பயிர்களை பயிரிட்டன. அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா இதில் அடங்கும். 1996-இல் 4.3 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரபணு மாற்ற தாவரங்கள் 2000ஆம் ஆண்டில் 109 மில்லியன் ஏக்கர் நிலபரப்பில் பயிரிடப்பட்டது. (ஆதாரம்: டாக்டர் பாலசுப்பிர மணியம் மரபணு மாற்றிய தாவரங்கள் – ஒரு பார்வை)

1984-இல் பி.டி. மரபணு தொழில் நுட்பத்திற்கு மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை பெற்றது. 2005இல் அந்த காப்புரிமையை (னுடிற) ரசாயன நிறுவனம், அமெரிக்காவில் வழக்கு தொடுத்து வென்றது. இந்தியாவில் மான்சான்டோ தான் காப்புரிமை வைத்துள்ளது. 2005இல் மட்டும் அமெரிக்காவில் 90 லட்சம் பி.டி., சோளம், சோயா விதைகள் விற்பனையாகின. 2009 சீசனில் மட்டும் 275 லட்சம் பாக்கெட் பி.டி. விதைகளை மான்சான்டோ இந்தியாவில் விற்றுள்ளது. (ஆதாரம்: ஹரீஷ் தாமோதரன் – பிசினஸ் லைன்)

இந்தியாவில் மான்சான்டோவின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் / விளக்கங்கள் இல்லை. 1996-இல் இந்தியாவில் பி.டி. பருத்தியை அறிமுகப்படுத்தி 2002-இல் விற்பனைக்கு அனுமதி பெற்றது. அதன் பின் தனியார் நிறுவனங்கள் மூலம் 1000 கோடி ரூபாய் லாபம் ஒரு ஆண்டில் மான்சான்டோவுக்கு கிடைத்தது. ஆனால் பி.டி. கத்திரியை வணிகரீதியாக இந்திய சந்தையில் புகுத்த முயன்று நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக விஞ்ஞானி ‘சொலினி மற்றும் கார்மென் அறிக்கை’ மான்சான்டோவை நோக்கி பல கேள்விகளை எழுப்பியது.

விடப்பட்ட செய்தி

இந்த நூலில், விதை வர்த்தகம் / விதைச் சந்தை எந்த அளவு பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளது என்பது விடப்பட்டுள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் விதை வர்த்தகம் சிக்கியுள்ளது பற்றி விமர்சிப்பதில்லை. குறிப்பாக, இந்திய விவசாயிகளின் விதைகளை உற்பத்தி செய்யும் உரிமை, பரிவர்த்தனை செய்யும் உரிமை, விற்பனை செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விதைகள் தான் உணவு சங்கிலியின் முதல் கண்ணி – விதைகள் தான் பல்லுயிர் வளத்தை பாதுகாக்கும் அரண். எனவே, மரபணு சூதாட்டம் பற்றிய நூலில், இந்த விஷயங்கள் இடம் பெற்றிருந்தால் இன்னும் முழுமையான பார்வை கிட்ட உதவியாக இருந்திருக்கும்.

இந்த நூல் கோர்வையாக எழுதப்படவில்லை. விபரங்கள் தொடுக்கப்பட்டுள்ளனவே தவிர, தலைப்பு வாரியாக இணைத்து கொடுக்கப்படாததாலும், பெட்டி செய்திகளாக சில முக்கிய கருத்துக்கள் தரப்பட்டுள்ளதாலும், படிப்பவர்களுக்கு மரபணு மாற்றத் தொழில் நுட்பம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது. கலை சொற்கள் பட்டியல் இறுதியில் கொடுக்கப் பட்டிருந்தாலும், பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் சாதாரணமாக வழக்கில் உள்ளவை அல்ல. சில ஆங்கிலச் சொற்கள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு தூய தமிழ் மாற்று சொல் பயன்படுத்தப்படும் பொழுது உள்வாங்கிக் கொள்வது எளிதல்ல. (பாக்டீரியா – குச்சில் செல் – சிற்றரை, தீங்குயிர் வைரஸ் – நுண்ணி – ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்) அறிவியல் சார் நூல்கள் எளிமையான நடையில், வழக்கிலுள்ள சொற்களை பயன்படுத்தி எழுதும் பொழுது, படிப்பவர்கள் எளிதில் கிரகித்துக் கொள்ள முடியும்.

பொது அறிவிற்கு எதிராக..

மரபணு மாற்றப் பயிர் வேண்டுமா / வேண்டாமா என்று பட்டிமன்றம் இன்றைய சூழலில் நடக்கும் போது, வேண்டாம் என்பதற்கான வாதங்களை இந்நூல் முன்வைக்கிறது. ஆனால் பிரச்சனை எப்படி அணுகப்பட வேண்டும்? நவீன தொழில்நுட்பமே கூடாது என்ற நிலைபாடு சரியல்ல. மரபணு மாற்றத் தொழில்நுட்பம், குறிப்பாக, பி.டி. வகை பயிர்கள் எப்படி புகுத்தப்படுகின்றன, வெளிப்படைத் தன்மை உள்ளதா என்பது முக்கியம். அரசு இதுபோன்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பொதுத்துறையில் ஆய்வை வலுப்படுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விதை வர்த்தகத்தில் அனுமதிக்கக் கூடாது. உணவுப் பயிரில் மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கும் போது, அனைத்து சோதனைகளையும் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய விவசாய சங்கம் எடுத்துள்ள நிலைபாடு தான் சரியானதே தவிர, கண்மூடித்தனமாக மரபணு மாற்றப் பயிர்களை எதிர்ப்பது சரியல்ல. ஆனால், அதே சமயம், பிரதமர் மன்மோகன் சிங் “21ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற 97வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்றுகையில் “மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. பருத்தியைப் போன்று உணவு தானியப் பயிர்களிலும், மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது” என்று கூறியதை கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது. நாடாளு மன்றத்தில் இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் 2010 விதை மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற துடிக்கிறது மத்திய அரசு. வேளாண்துறையில் அன்னிய கம்பெனிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பது அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, முடிவுகள் எடுப்பது அவசியம்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...