முசிறி – பட்டிணம் – தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி

2020
0
SHARE

(ஏப்ரல் 23-2010 அன்றும் அதற்குப் பிறகும் ஃபிரண்ட் லைன்  இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தழுவியது)

“சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க

யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னோடு வந்து கறியோடு பெயரும்.

வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ

அரும் சமர் கடந்து, படிமம் வவ்விய

நெடுநல் யானை அடுப்போர்ச் செழியன்

(அக நானூறு பாடலின் சில வரிகள்-149)

(சுள்ளி எனும் பெரிய ஆற்றின் நுரை பொங்க வரும் யவணர்களின்(ரோமானியர்கள்)  படகுகள் வளம்மிகுந்த  முசிறி நகரத்தில்,  தங்கத்தை எடுத்து வந்து அதற்கு ஈடாக மிளகை பெற்றுச் சென்றனர். அகப்பாடல் – 149)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர வம்சத்தினர் ஆண்டு வந்த முசிறி ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டு இருந்தது என்பதை மேலே கண்ட  அக நானூற்று பாடல் தெரிவிக்கிறது. இப்பொழுது இது பழங்கவிஞரின் கற்பனையோ அல்லது புராணமோ அல்ல என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. தற்போது உலகின் பல இடங்களில் குறிப்பாக, இத்தாலியின் ரோம், கீரிஸின் ஏதென்ஸ்,எகிப்துவின் பெரேனிகேவில் நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுகளும் சமீபத்தில் கேரளா வரலாறு ஆய்வு குழுமத்தின் அகழ்வு ஆய்வுகளும், இவைகளின் மூலம் கிடைக்கிற தடயங்களும் அக்கால தமிழ் பேசிய மக்களின் கடல் வணிக  தொடர்புகளை உறுதி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.

தடயங்களின் புதையல்

2007ம் ஆண்டிலிருந்து  கேரள வரலாற்று ஆய்வுக் குழுமம் பட்டினம் என்ற கிராமத்தில்  நடத்திவரும் ஆய்வுகளில் முக்கிய கண்டுபிடிப்புகளை முறையாக வெளியிட்டுவருகிறது.இதுவரை கிடைத்துள்ள  தடயங்களின் படி அங்கு செங்கல் கட்டிடங்கள், ரோம நாட்டு பெரிய ஜாடிகள், தட்டுகள், கோப்பைகள், வட இந்தியப்பகுதியிலிருந்து வந்த சக்கர கருவியால் உருவாக்கப்படும் பாண்டங்கள், மேற்கு ஆசியா, அரபிய நாடுகளில் காணப்படும் பாண்டவகைகள், பச்சைவைரம் பதித்த ஜாடிகள்  ரோமாபுரியின் ஏற்றுமதிக்கென தயாரிக்கப்படும் நகைகள் அகழ்வில் கிடைத்துள்ளன. பாசி மணிகள், பல ரக வைரமல்லாத கற்களால் ஆன ஆபரணங்கள், கண்ணாடி குவளைகளின் உடைந்த துண்டுகள், சித்திரம் வரைந்த விளக்குகள், (கி.மு 100ஆம் ஆண்டு காலத்தியதென உத்தேச மதிப்பீடு  செய்யப்படுகின்றன) கிடைத்துள்ளன, இரும்பாலான கத்திகள்,கொண்டிகள், தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் போது மிஞ்சும் கழிவு, சதுர, வட்ட சேர நாணயங்கள்,தங்க நாணயங்கள் தமிழ்பிரம்மி எழுத்துக்களை கொண்ட பொருட்கள்,நவீன சீன பீங்கான் பொருட்கள் என பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பட்டிணம் என்ற இடம்  தற்போதைய கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள, கூடங்களூர் அருகே உள்ள சிறிய கிரரமம்.   கி.மு.300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.1200 ஆம் ஆண்டுவரை  சேர  பரம்பரையினர் ஆண்ட பகுதியாக முசிறி கருதப்படுகிறது.இந்த மன்னர்களைப்பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன.  யூத மதம, கிருத்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவைகள் இந்தியாவில் நுழைவதற்கும், வளர்வதற்கும், கடைப்பிடிப்பதற்கும் இந்த சேர பரம்பரையை சார்ந்த மன்னர்கள் உதவி செய்ததாக கருதப்படுகிறது.

திசை மாறிய பெரியாறு

முசிறிக்கு அருகில் இருந்த கூடங்கலூரில் இயற்கையாகவே அமைந்த  துறைமுகத்திற்கு  கப்பல்களைக் கொண்டுவந்து அரேபியர்கள், எகிப்தியர்கள், ரோமானியர்கள், கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வணிகம் செய்து வந்துள்ளனர். முன்பிருந்த முசிறி துறைமுகம் தற்போது காணாமல் போனதற்கு காரணம் .பெரியாறு  திசை வழியை முற்றிலும் மாற்றிக்கொண்டதால் ஏற்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாகும் . வரலாற்று அறிஞர்களான இராஜன் குருக்கள் (துணைவேந்தர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் – கோட்டயம்) டிக் வைட்டேகர் (னுiஉம றாவைவயமநச  சர்ச்சில் கல்லூரி கேம்பிரிட்ஜ் ஆகிய இருவரும்)” முசிறியைத் தேடி” என்ற தங்களுடைய ஆய்வுக்கட்டுரையில்  “கொச்சி துறைமுகமும், வேம்ப நாடு உப்பங்களியும் கேரளாவின் தெற்கு பகுதி) தற்பொழுது வைப்பீன் தீவு என்று அழைக்கப்டும் பகுதி மண் மேடாகியதால் உருவாகியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.” சந்தேகமில்லாமல் பெரியாறு திசை மாறியதால்  இது நேர்ந்தது. நெடுங்காலமாய் இந்த மண்மேடு உருவாகியுள்ளது. பூமியின் அமைப்பு ஆராய்ச்சியின்படி 200 அல்லது 300 ஆண்டு களுக்கு முன்  கடற்கரை இப்பொழுது இருக்குமிடத் திலிருந்து 3அல்லது 4 கிலோமீட்டர் கிழக்கே இருந்தது. அந்த கணக்குப்படி பார்த்தால்2000 ஆண்டுகளுக்கு முன் கடற்கih 6 அல்லது 7கிலோமீட்டர்கிழக்கே முசிறியை தொட்டு கடற்கரை இருந்திருக்கவேண்டும்”.  “பெரியாறு கடலில் கலக்கிற இடமாக முசிறி இருக்கவே ரோமானியர் காலத் துறைமுகமாக அது இருந்திருக்கும். கடல் மணலை கொண்டுவந்து தள்ளி தள்ளி  காலப் போக்கில் ஆறு வேறு வழியை தேடியதால் துறைமுகம் தூர்ந்துவிட்டது”என்பது அவர்களது கணிப்பு.

புவியின் தொல் இயல் ஆய்வு அறிஞர் ஷாஜன் கே.பால் பெரியாற்றின் திசைவழி மாற்றம் பற்றி குறிப்பிடுவது “ பரவூர் பகுதியிலிருந்து வடமேற்கு திசைக்கு அதாவது தற்போது உள்ள இடத்திற்கு மாற்றம் அடைந்து இருக்கலாம்” என்கிறார்.

இலக்கிய ஆதாரங்கள்

முன்னொரு காலத்தில் இந்தியாவின் வணிகத்தொடர்பு கொள்ள நுழைவு வாயிலாக இருந்தது என்பதற்கு பல வரலாற்று குறிப்புகள் உள்ளன.   சங்க காலப் பாடல் களான புறநானூறு  அகநானூறு முசிறி பற்றி குறிப்பிடுகின்றன. சங்க காலமென்பது  இரும்பு உலோகம் அறிமுகமான காலகட்டம் என்பது அறிஞர்களின் கணிப்பு, மேலும் கீரிக், ரோமன் தொன்மை கால இலக்கியங்களும் முசிறி பற்றி குறிப்பிடுகின்றன. கி.பி முதல் நூற்றாண்டு ஆவணமான பெயர்  தெரி யாத கடல் மாலுமி  வணிகன் எழுதியுள்ள ‘பெரிப்பிளஸ் மாரிஸ் எரித்திரேயில்’ முசிறி பற்றிய குறிப்பும் அடங்கும். பிளினி எழுதிய “மூத்தோரின் இயற்கை வரலாறு” என்ற ஆவணத்தில் முசிறிபற்றி குறிப்புள்ளது. அதில் முசிறி முதல் தரமான அங்காடி, இருந்தாலும் கடற் கொள்ளையர்கள் அருகில் இருப்பதாலும், துறைமுகத்திலிருந்து  சிறிய படகுகள் மூலமே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதாலும் அங்கு போவதை தவிர்க்க என்ற குறிப்பு உள்ளது . தற்போது வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எகிப்த்திய ஆதிகால காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணமொன்றில் (கி.மு.150ஆம் ஆண்டு)  கடனை அடைத்த குறிப்பொன்றில் முசிறி பற்றிய குறிப்பு உள்ளது .  கூடங்களூர் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஏராளமான நினைவுச் சின்னங்கள்  பல விதமான மத அடிப்படையிலான கற்பனைகளுக்கும், புராணங்களுக்கும் ஊற்றுக் கண்ணாய் உள்ளன. கோட்டைகள், அரன்மணைகள் இவைகளின் மிச்ச சொச்சங்கள் சமீபகால வரலாற்றை கூறும் தடயங்களாக உள்ளன. ஆனால் பழைய சங்க பாடல்களில் குறிப்பிடப்படும் மலபார் கடற்கரைக்கும், ரோமபுரிக்கும் இடையே இருந்த பெருமைமிகு வர்த்தக உறவினை காட்டவல்ல எந்த தடயங்களும் இது நாள்வரை கிட்டவில்லை. Òபுராணங்களை நம்புகிறவர்களுக்கு அகழ்வராய்ச்சி தேவையில்லை என்று இந்திய அரசு கருதியது போலும்!

தொல்லியல் ஆய்வும், தற்செயல் கண்டுபிடிப்பும்.

இரண்டு இளம் தொல்லியல் ஆய்வாளர்களான கே.பி.சாஜன் வி.செல்வக்குமார் ஆகியோர் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பட்டணம் என்ற சிறிய கிராமத்தில் வீடுகளின் முற்றத்தில் பானைகளின் துண்டுகளை தற்செயலாக கண்டனர். அங்கு சோதனை அகழ்விற்கு இந்த கண்டுபிடிப்பே காரணமாக இருந்தது. அதில் இந்திய ரோமாபுரி வர்த்தக உறவினைக்காட்டும் தடயங்கள் கிடைத்தன. அதன் பிறகு கேரள அரசின்  ஆய்வுக் குழுமம் தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளால் ஏற்கனவே குறிப்பிட்ட தடயங்கள் இந்தியாவின் தென்பகுதியின் பழங்கால வரலாற்றின் கற்பனைகளை ஒதுக்கி உண்மைகளை அறியும் நிலை உருவானது.

ஆய்வுகள் தொடர

2008 ல் இரண்டாம் கட்ட அகழ்வில் கிடைத்த தடயங்களை பரிசீலித்த  பிரிட்டன் அருங்காட்சியகத்தை சேர்ந்த, இந்திய பெருங்கடல் வணிக நிபுணரான ‘ரொபர்த்தோ தொம்பெர்’ தன்னுடைய ஆய்வான ‘செங்கடல் துறை முகங்களும் இந்தியாவும் ரோமானியர் கால களிமண் கைவினை பொருட்களும்’ என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வகத்தில் சமர்ப்பிக்கபட்ட தன்னுடைய கட்டுரையில், முசிறி ரோமன் வணிகம் நடந்த காலத்தில் ரோமனில் இறக்குமதி செய்யப்பட்ட மண் பாண்டங்களிலிருந்த எழுத்துக்கள் முசிறியிலிருந்து ரோமானியர்களுக்கு தேவையான அதிமுக்கிய பொருட்களை இறக்குமதி செய்ததற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றன எனத் தெரிவிக்கின்றனர். பட்டணம் அல்லது முசிறியில் கடல் வழியாக புறப்பட்டவர்கள் பாரசீக வளைகுடா, அரபு நாடுகள், ரோம், சீனம் போன்ற நாடுகளிலும் தங்களின் வணிகத்தை பரவலாக செய்து வந்தனர் என ரோமில் கிடைத்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என கூறுகின்றார்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த வருட மார்ச்சில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் முதன்முதலாக மத்தியதரக் கடல் பகுதியுடன் தொடர்பிருந்ததின் அடையாளமாக ஏராளமான பாண்டங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன.இவைகள் ரோம சாம்ராஜ்யத்திற்கு அப்பாற்பட்ட பகுதியுடனும் உறவு இருந்ததை காட்டுபவைகள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதன்முதலாக பழங்கால இத்தாலி நாட்டின் சிக்லிட்டா எனும் மெருகேரிய பாண்டங்களின் துண்டுகள் பட்டிணம் ஆகழ்வில் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்படத் தக்கதாகும்.

கேரளா வரலாற்று ஆய்வுக் குழுமம் பட்டிணத்தில் கிடைத்த தடயங்களை வரலாற்றின் 4 பண்பாட்டு காலகட்ட பொருட்களை கொண்டதென வகைப்படுத்தி அறிவித்துள்ளது. இரும்பை கண்டுபிடித்த காலம் (கி.மு.10 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை) அதனைத் தாண்டும் காலம்,  (கி.மு.4 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு 2 ஆம் நூற்றாண்டு வரை) ஏடறிந்த வரலாற்றின் ஆரம்ப காலம் (கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.நான்காம் நூற்றாண்டு வரை) நவீன காலம் (கி.பி.16 ஆம் நூற்றாண்டிலிருந்து, சோதனை என்ன வெனில் மத்திய கால கட்ட (கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை) தடயங்கள் எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி நிபுணர் செறியனின் கணிப்பு படி இங்கு கிடைக்கும் கறித்துண்டுகளை கறிம சோதனை செய்ததில் கி.மு 1000ம் ஆண்டிலேயே மக்கள் வாழும் பகுதியாக பட்டிணம் ஆகிவிட்டது . ரோம சாம்ராஜ்யம் உருவாவதற்கு முன்னரே இங்குள்ள மக்கள் மத்தியதர கடற்கரை நாடுகளோடும் மேற்காசிய நாடுகளோடும் வர்த்தக உறவு கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. கி.பி முதலாம் நூற்றாண்டில் நகர்ப்புற வாழ்வை கொண்ட பகுதியாக பட்டினம் இருந்திருக்கிறது.கி.மு 1முதல் கி.பி 4வரை வட இந்திய பகுதியோடும் மேற்கு ஆசிய நாடுகளோடும் வர்த்தகம் கன ஜோராய் நடந்திருக்கிறது. கி.பி 11 முதல்,கி.பி 15 வரை இப்பகுதி மனித நாடமாட்டம் அற்ற பகுதியாகிவிட்டது. இதற்கான காரணங்களை இனி தான் கண்டுபிடிக்க வேண்டும்.

தொண்டி- முசிறி தொடர்பு

முசிறி, சோழ மண்டல கடற்கரையில் உள்ள அரிக்கமேடு இடங்களில் எகிப்தியர்கள், மாயாக்கள்(அமெரிக்க கண்டத்தின் பூர்வ குடிகள்), ரோமானியர்கள் இந்துமாக் கடல் செங்கடல் வழியாக வணிகம் செய்ததற்கான தடயங்கள் உள்ளன.

முசிறியில் பத்துக்கும் மேற்பட்ட தடயங்கள் உள்ளதாக ஆய்வு செய்த பழம் தொல்லியல் மற்றும் பழம் வரலாற்று அறிஞரான அமெரிக்க தெலெவார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் இசைடு போத்தம் கூறுகிறார். இவ்விஷயங்களை உறுதிசெய்யும் விதமாக ரொபர்த்தோ தொம்பர் கூறுவதை கேட்போம். தமிழ் பிராம்மி எழுத்து தரவுகள் முசிறியில் கிடைத்துள்ளதானது, இந்திய பெருங்கடல், செங்கடல் வழியாக ரோமானியர்கள் கடல் பயணம் செய்யும் போது ஏமன், ஓமன் ஆகிய இடங்களில் தங்கி சென்று உள்ளனர். சோழ மண்டல கரையிலுள்ள அரிக்கமேட்டிற்கும் – முசிறிக்கும் இடையேயான பொதுவான நலன்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. முசிறியில் கண்டெடுக்கப்பட்ட சுட்ட களி மண்ணில் உள்ள எழுத்து ஆதாரங்கள் வெளிநாட்டு பொருட்கள் முசிறிக்கு வருவதற்கு முன்பே அரிக்கமேட்டிற்கு கடல் வழியாக அல்லது தரைவழியாக சென்றதை அறிய முடிகிறது. முசிறியில் கிடைத்துள்ள எழுத்துகள் இந்திய பெருங்கடல் முழுவதும் நடந்த வணிகத்தை நாம் புரிந்து கொள்ள வெகுவாக உதவுகிறது. அகழ்வு ஆய்வு நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ மேற்கே உள்ள பாலேவ் கடற்கரையில் முன்னதாகவே எண்ணற்ற மிகப்பெரிய அளவில் எழுத்து வடிவங்களை கண்டுபிடித்து இருப்பது இவ்விடத்தின் முக்கியத்து வத்தை நமக்கு தெரிவிக்கிறது.

வரலாற்றை புரிய- கே.என்.பணிக்கர்

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முன்னாள் வரலாற்றுதுறை பேராசிரியர்  பட்டணம் அகழ்வு பற்றி குறிப்பிடுவது வரலாற்றை புரிவதற்கு உதவுகிறது.  நவீன காலம் வரை மலபார் கடற்கரையில் இந்திய  ரோமானிய வணிகம் நடந்து வந்ததற்கான எவ்வித தொல்லியல் ஆதாரங்கள் நமக்கு கிடைக்காமலேயே இருந்து வந்தது. நம்மிடம் இருந்ததெல்லாம் பழைய இலக்கிய பதிவு மட்டுமே முசிறியைப்பற்றி பல்வேறு விஷயங்களை கதைகளை வெகுமக்கள் மட்டுமே பேசி வந்த நிலையில் பட்டிணம் கிராமத்தில் அல்லது முசிறியில் நடந்த முதல்  அகழ்வு ஆய்வின் மூலம் நமக்கு ரோமானியர்களுடன் நடந்த வணிகத்தை நிரூபிக்கும் வகையில் போதுமான தரவுகள் கிடைத்துள்ளன. இன்னொரு முக்கிய விஷயம் நம் முன்னோர்கள் மத்திய கிழக்கில் வணிகத்தை நடத்தத் தொடங்குவதற்கு முன்னரே ரோமானியர்களுடன் வணிகம் நடத்தியுள்ளனர் என தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இவைகள் உண்மையாகும் பட்சத்தில் நாம் பல்வேறு விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொண்டவர்களாவோம்.

முதலாவதாக ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னரே  நமது வணிகத்தொடர்பு மிகப் பரவலாக இருந்ததுடன் அப்பகுதியில் இருந்த அனைத்து வகை வணிகப் பொருட்களை சேகரிக்கும் இடமாகவும் இருந்ததோடு அல்லாமல் வணிக ரீதியாக வெளி உலகை இணைக்கின்ற மையமாகவும் முசிறி இருந்து வந்துள்ளது. இவை மிக முக்கிய முடிவுகள் என்றாலும் இவற்றை நிரூபிக்க மிக மிக அதிக அளவில் அகழ்வு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இரண்டாவதாக வணிகத்தில் நடந்த பொருட்களின் பரிவர்த்தனை பற்றிய விவரங்களின் ஆதாரம் நம்மிடையே இருக்கின்றது. வழிவழியாக மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களு;காக ஐரோப்பியர்கள் முசிறிக்கு வந்து தங்கம் அல்லது அதனைப் போன்ற மதிப்புள்ள பொருட்களை கொடுத்து வாங்கிச்சென்றுள்ளனர். இவ்விஷயத்திலேயும் நாம் நிறைய விவாதிக்க வேண்டி உள்ளது. ஏன் எனில் வணிகம் நடந்து வந்ததை நாம் அறிந்து வைத்திருந்தாலும் இதற்கான ஆதாரம் நம்மிடையே மிகக் குறைவாகவே உள்ளது. அக்காலத்தில் வணிக, பொருளாதார, அரசியல் நிறுவனங்கள் முசிறியில் எவ்வாறு வளர்ச்சி அடைந்திருந்தன? இரண்டு பக்கத்திலும் இருந்த  தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் வணிகத்தை நிலை நிறுத்தவும், தொடரவும் செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தனர் எனத் தெரிகிறது. ஏனெனில் ரோமானியர்களுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ வணிகத்திலும் மற்ற விஷயங்களிலும் முரண்பாடுகள், பகைமைகள் தோன்ற வில்லை என்பது உறுதியாய் தெரிகிறது. ரோமன் வணிகப்பொருட்கள் எந்தெந்த பகுதியில் கிடைக்கின்றனவோ அவ்விடங்களில் இந்திய வகைப்பட்ட நாணயங்கள் கிடைப்பதை கொண்டு மேலே கண்ட செய்தியை நாம் உறுதி செய்து கொள்ள முடியும். எந்த ஒரு அரசியல் சக்தியும் வணிகத்தில் பகைமை பாராட்டவில்லை என்பதும் வணிகம் அக்கால மக்களிடத்தில் பொருளாதார ரீதியில் செல்வாக்கு செலுத்தி உள்ளது என்பதும் முசிறியில் கிடைத்த  ஏராளமான ரோமன் ஜாடிகளைக் கொண்டு அறியமுடியும். மேலும் என்னென்ன வகையான பொருட்கள் வணிகத்தில் கையாளப்பட்டன என்பது விரிவான பகுதியில் அகழ்வு ஆய்வு செய்வதின் மூலம் தான் வெளிக்கொணரமுடியும். சிலர் குறிப்பிடுவதை போன்ற சிறிய அளவிலான தொழிற்கூடங்கள், ஆரம்ப கால தொழிற்சாலைகள் ஆகியவை இவ்வகை வணிகச்சங்கிலியில் இணைந்து செயல்பட்ட தற்கான சாத்தியங்கள் இருந்தனவா?

இதைப்பற்றி தற்போது கூறுவது அவ்வளவு சாத்தியமில்லை என்று நான் கருதுகிறேன். தொடக்க கால வரலாற்றில் தவறான அடிப்படையற்ற பல்வேறு கருத்துக்கள் நிலவுவதை நாம் தவிர்க்க முடியாது. ஆரம்ப கட்டத்தில் முசிறி என அழைக்க நான் மிகுந்த தயக்கம் அடைந்திருந்தேன். தற்பொழுது அந்த தடுமாற்றம் எனக்கு இல்லை.

கிழக்கிந்திய கடற்கரை (சோழமண்டல கடற்கரை)யில் இருந்த அரிக்க மேட்டைவிட முசிறி எவ்வாறு வணிகத்திற்கு பொருத்தமாய் இருந்தது என கூறமுடியுமா? முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத் தகுந்த விஷயமாகவே இதனை கருதுகிறேன். கிழக்கிந்திய கடற்கரையை விட ரோமானிய ஜார்கள் முசிறியில் எண்ணற்ற வகையில் இருப்பது இச்செய்தியை உறுதிப்படுத்துகிறது. எனவே அரிக்கா மேட்டைவிட முசிறி வணிக ரீதியில் முன்னணியில் இருந்து வந்துள்ளதென்றே கருதுகிறேன். அரிக்கமேட்டைவிட முசிறியில் பல்வேறு சிறப்பான வணிகசெயல்பாட்டு முறைகள் இருந்தது முசிறி முன்னிலை வகித்ததற்கு காரணம் எனலாம்.

வணிக ரீதியாக முசிறியின் சிறப்புத்தன்மைகள்

மிக முன்னேற்றமடைந்த அரசியல் செயல்பாடுகள், அரசு பொருளாதார கட்டமைப்பு வசதிகள், விவசாயத்துறையின் மேம்பட்ட வளர்ச்சி ஆகியன மிகச்சிறப்பாக இருந்தன எனக் கூறலாம். ரோமானியர்கள் மேற்கிந்திய கடற்கரை அல்லது முசிறியில் வணிகம் செய்ய அதிகப்படியான அக்கறை செலுத்தியதின் காரணம் மற்ற பகுதிகளை விட முசிறியில் வணிகம்  செய்வது மிக எளிதாக இருந்ததே காரணம் எனலாம். இயற்கையாகவே வணிகத்தில் உற்பத்திப்பொருட்கள் நாட்டின் உள்பகுதிகளிட மிருந்தே கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்பட்ட தெனில் எவ்வாறு வாங்கப்பட்டது? யாருக்காக வாங்கப்பட்டது? யார் எதற்க்காக வாங்கினார்கள்?  எந்த மக்கள் எவ்வகையான உற்பத்தியில் ஈடுபட்டார்கள்? ஏன் ஈடுபட்டார்கள்? இடைத் தரகர்கள் இருந்தார்களா? வேறு எவராவது உற்பத்தி செய்த பொருட்களை வகைப்படுத்தி கட்டுப்படுத்தினார்களா? அல்லது நிர்வகித்தார்களா? எனக்கேள்விகள் நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எந்தவித அடிப்படையும் அற்று இந்திய தொல்லியல் துறை மிக நீண்டகாலமாகவே மேற்கிந்திய கடற்கரையில் (மலபார் கடற்கரை) ஏன் அக்கறை காட்டாமல் இருந்தது எனவும் தற்போது முசிறியில் எதார்த்தமாக அகழ்வு ஆய்வில் ஈடுப்பட்டதால் கிடைத்த தொல்லியல் பொருட்களின் மதிப்புகளை விளக்க முடியுமா? மிகப் பழங்காலத்தில் இருந்தே முசிறியின் முக்கியத்து வத்தை குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் பேசியும், எழுதியும் வந்துள்ளனர். தற்போது மிகக்குறைந்த அளவே அகழ்வு ஆய்வு நடத்தி இருப்பதின் மூலம் அவை உறுதி செய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது. இந்திய அரசின் தொல்லியல் துறை ஆரம்ப காலத்தில் முசிறியில் தேவையான ஆர்வம் காட்டவில்லை என்பதோடு நிறுவனம் சாரா வகையினர் ஆய்வு செய்த பிறகே தற்போது இந்திய தொல்லியல் துறை மிக லேசாக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது.

கேரளா மாநில அரசு தன்னால் இயன்ற அளவில் ஆய்வுக்கு உதவி வருகிறது. முசிறியில் மிகப்பரந்த அளவில் அகழ்வு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதும் உள்ளுர் வாசிகளை அதிருப்தி அடையாமல் பார்த்து கொள்வதும், ஜனநாயக தொல்லியல் என எனக்கு நானே சொல்லிக்கொள்கின்ற முறையில் வெகுமக்களை ஈடுபட வைப்பதும், ஆர்வம் ஏற்பட வைப்பதும் தற்போதைய தேவைகளாக உள்ளது என்றாலும் துறை சாந்த பிரச்சினைகள் இதில் நீடிக்கவே செய்கின்றன. மாநில, மத்திய அரசிடம் அனுமதி வாங்குவதும் பிரச்சினைக்குரிய விசயமே. மிக பெரிய அளவில் மத்திய மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால்தான் அகழ்வு ஆய்வு செய்து மேலதிக விபரங்களை பெற முடியும்.

முசிறி என்கிற துறைமுக நகரத்தை நாம் இன்னும் முழுமையாக வெளிகொண்டு வரவில்லை என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக அன்றைக்கு அங்கிருந்த ஜனத்தொகையின் அளவு நமக்கு தெரியாது. ஒரு வரலாறு படித்த மாணவன் என்ற முறையில் நான் கூறுவது என்னவெனில், மிகப்பரந்த அளவில் முசிறி இருந்து இருக்க வேண்டும் என்பதுதான். தற்போது அகழ்வு ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட தரவுகள் மூலம் சிறந்த முறையில் வடிவமைக் கப்பட்ட குடியிருப்பு வீடுகளை கண்டுள்ளோம். பட்டணம் எவ்வாறு வணிக மையத்தோடு இணைந்து இருந்தது எனவும் நம்முன் கேள்வி எழுகிறது. இவ்வளவு பெருமிதமிக்க பட்டணமும், முசிறியும் எவ்வாறு காலவெள்ளத்தால் அழிந்து போயின என்பதை அறிய பரந்துபட்ட பகுதியில் அகழ்வு ஆய்வு செய்யும்போதுதான் நமக்கு தெரியவரும்.

மக்கள் தொகையால்தான் முசிறி அழிந்து போனதா?

இருக்கலாம். வருங்காலத்தில் தான் இதற்கான சரியான பதிலை தரமுடியும். ஆப்பிரிக்காவில் செய்யப்பட்ட ஒரு சில அகழ்வு ஆராய்ச்சியில் பல நகரங்கள் மக்கள் தொகைப்பெருக்கத்தால் அழிந்துவிட வில்லை என நிரூபணமாகியுள்ளது. என்றாலும் அன்றைய காலத்தில் முசிறி அளவுக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்டு இருந்தது உண்மைதான். இதனை நிரூபிக்க தற்போதைய பட்டணத்தை சுற்றி அரை மைலுக்கும் அதிகமான பரப்பளவில் அகழ்வு ஆய்வு செய்யும் போதுதான் உண்மைகளை வெளிக்கொணர முடியும். முடிவுகள் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய தலைமுறையினருக்கு பல செய்திகள் அதில் உள்ளன. அகழ்வு ஆய்வில் மேம்பட்ட முறைகளைக் கற்றுக் கொண்ட எதிர்கால  தலைமுறையினர்களால்தான் நமக்கு உண்மைகள் தெரியவரும். முசிறியின் பேரழிவை இன்று நாம் விளங்கிக்கொள்வதற்கு மிகவும் கடினம் தான்

பெரியாறு அதீத வெள்ளப்பெருக்கால் கி.பி 1341ல் அழிந்திருக்க வேண்டும் என்பது ஊகமே.  முசிறி அழிவிற்கு, வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவாக இருக்கலாம் என்பது எனது ஊகம். ஏன் ஏற்பட்டது என்பதற்கான விடைகள் கிடைக்க ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மத வரலாறும் தொன்மங்களும்

நம்முடை தொல் வரலாற்று தரவுகளை நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றபடியே பாதுகாக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இது நாள் வரையிலான மக்களின் வாய்மொழி கதைகளையும் தொகுத்து ஆய்வுக்குரிய அடிப்படை விசயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் வாய்மொழி கதைகளுக்கு உகந்த வகையில் வரலாற்று தரவுகளை கொண்டு வருவதே நம் வேலை முறையாக இருக்கவேண்டும். விமர்சன ரீதியான கண்ணோட்டத்தில் இவற்றில் உள்ள உண்மைகளை தேடுகிற முயற்சியாக இருக்க வேண்டும். அறிஞர் பணிக்கரின் கருத்துக்கள் வரலாற்றை புரிய நமக்கு பெரிதும் உதவுகிறது

மனது உயர

முசிறி- தொண்டி – அரிக்கமேடு தடயங்களான, ரோம நாட்டு ஜாடித்துண்டுகள் நமக்கொரு செய்தியை கூறிக்கொண்டே இருக்கிறது. ஆதித் தமிழர்கள் பகைமையற்ற இன உணர்வோடு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முறையில் வாழ்ந்து, மொழியின் இளமையையும் காத்து வந்தனர் என்பது தெறிகிறது

நாடுகளுக்கிடையே பகைமை அற்ற வர்த்தகம் சாத்தியமே  என்பதை அந்த மிச்சங்கள் நினைவூட்டிக்கொண்டே  இருக்கின்றன.  இன்றைய மேலை நாட்டு  முதலாளித்துவ வர்த்தகமே யுத்தத்திற்கும் பேரழிவு ஆயுத உற்பத்திக்கும் பண மோகத்திற்கும் அடிப்படை என்பதையும் உணர்த்துகிறது.

 

–திருவண்ணாமலை – ஆர் .ரவி

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்