மூன்றாவது அணி பேச்சுக்களும் – சரியான பாதையும்

1440
0
SHARE

மூன்றாவது அணியை மீண்டும் உருவாக்க முலாயம் சிங் தீவிரம் – தினமலர் செய்தி.

மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது அணி என்பது கடந்துபோன வரலாறு அல்ல. அது நாளைய இந்தியாவின் எதிர்காலம். -முன்னாள் பிரதமர் தேவ கௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி.

மூன்றாவது அணி என்பது, இந்திய அரசியலின் நீடித்திருக்கும் கானல் நீர் – மத்திய மந்திரி மணிஷ் திவாரி.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை மூன்றாவது அணி அமைய  வாய்ப்பில்லை. அப்படி அமைந்தாலும் அது வெற்றி பெறாது. -விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

ஆக, வட இந்தியத் தலைவர்கள் முதல் தென்னிந்திய தலைவர்கள் வரை தற்போது மூன் றாவது அணி பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தப் பேச்சு அடிபடத் துவங்கிய உடனே காங்கிரசும், பாஜகவும் அப்படிப்பட்ட அணி சாத்தியமில்லை என்று அதிரடியாக மறுத்து வருகின்றனர். இந்த இரு கட்சிகள் மூன்றாவது அணிபற்றி கொண்டிருக்கிற பயம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இப்படி ஒரு அணி உருவாவது என்றால் அது இந்த இரண்டு கட்சி கூட்டணிகளுக்கும் எதிராகத்தான் உருவாகிடும். தனிக்கட்சி பெரும்பான்மை வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றினால் கடந்த காலங்கள் போன்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்படும் நிலை உருவாகும். இதனால்தான் இரு கட்சிகளும் அதனை கானல் நீர் எனக் கூறி ஒதுக்கிட முயற்சிக்கின்றனர்.

அவர்களது மூன்றாவது அணிக் காய்ச்சலுக்கு மற்றொரு முக்கிய காரணம் இரண்டு கட்சிகளும் மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை இழந்து வருகின்றனர். மன்மோகன்சிங் அரசின் நவீன தாராளமய கொள்கைகள் ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்து வரும் நிலையில் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். ஊழல் செய்வதிலும், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நவீன தாராளமயத்தை அமலாக்குவதிலும் காங்கிரசிற்கு எந்த விதத்திலும் சளைக்காமல் இயங்கும் கட்சியாக பாஜக விளங்குகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார், நாடு முழுவதும் வகுப்புவாதப் பிரச்சாரத்தையும் கலவரங்களையும் செய்து வருகிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.  இந்நிலையில் இரண்டுக்குமான மாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டுக்குமான மாற்று என்பது கானல் நீராக இருக்க முடியாது. அத்தகைய மாற்று எப்படிப்பட்டது? கட்சிகளை ஒன்று சேர்த்த மூன்றாவது அணி என்ற வடிவில் அதனை அமைப்பதா? அல்லது வேறு வடிவம் இருக்கிறதா? என்பதெல்லாம்தான் விடை காண வேண்டிய கேள்விகள்.

மூன்றாவது அணி பேச்சுகளுக்குப் பின்னால்,,,,,,,,,

முலாயம் சிங் யாதவ் சமீபத்திய கூட்டம் ஒன்றில் பேசுகிற போது  மத்தியில், ஒரே கட்சியின் ஆட்சி, இனி நடக்காது. மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சியே அமையும். ஒரே கருத்துள்ள, மாநில கட்சிகள், இதற்காக ஓர் அணியில் திரள வேண்டும். காங்., – பா.ஜ.க, அல்லாத, மூன்றாவது கூட்டணியை அமைத்து, ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரப்போகிறது; கட்சித் தொண்டர்கள், இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார். இதில் ஒரே கருத்துள்ள, மாநிலக் கட்சிகள், இதற்காக ஓர் அணியில் திரள வேண்டும் என்று பேசிய அவர் ஒரே கருத்து என்பது என்ன கருத்து என்று விளக்கவில்லை. இங்குதான் இவர்கள் சொல்லும் மூன்றாவது அணியின் அடிப்படையான குறைபாடு வெளிப்படுகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவர் சொல்லும் ஒரே கருத்து என்றால் முலாயம் சிங்கின் காங்கிரஸ் எதிர்ப்பு இலட்சணம் அனைவருக்கும் தெரியும். காங்கிரசிற்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் காங்கிரஸ் கூட்டணி அரசைப் பாதுகாத்தவர் அவர்; இன்று வரை பாதுகாத்து வருபவர் அவர்.

முலாயம் மட்டுமல்ல; காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத பல கட்சிகள் காங்கிரஸ் – பாஜக எதிர்ப்பில் உறுதி காட்டவில்லை. அவ்வபோது இந்த இரு கட்சிகளோடு சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்துக் கொள்ள அவர்கள் தயங்கியதில்லை. இதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சி இந்த ஊசலாட்டங்களும், சந்தர்ப்பவாத அரசியல் கண்ணோட்டமும் உள்ளவர்களை இணைத்து ஒரு அணி – மூன்றாவது அணி சாத்தியமில்லை என்று கருதுகிறது.

ஆனால் தற்காலிகமாக இந்த கட்சிகள் மக்கள் பிரச்னைகளுக்காக காங்கிரஸ் அல்லது பாஜக மீது எதிர்ப்புடன் செயல்பட்டால் அவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிகளின் பின்னால் மதச்சார்பற்ற மக்கள் திரண்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கத் தவறவில்லை. ஆனால் நிரந்தர கொள்கை சார்ந்த அணி என்ற இடத்திற்கு இவர்களைக் கொண்டு செல்வது சாத்தியமில்லை.

எனினும், நீண்டகால நோக்கில் மார்க்சிஸ்ட் கட்சி இந்த இரண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டணிக்கு மாற்று தேவை என்று கருதுகிறது. இந்த மாற்றினை இடது ஜனநாயக அணி என்று பெயரிட்டு அதன் பல்வேறு பரிமானங்களை கட்சி 20-வது அகில இந்திய மாநாட்டுத் தீர்மானத்தில் விளக்கியுள்ளது.

இடது ஜனநாயக முன்னணி ஏன்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணி என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்று விரிவாக விளக்குகிறது. முதலில், மக்கள் முன் ஒரு மாற்று அரசியல் வழியை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது ஜனநாயக மாற்றை முன் வைக்கிறது.

இடது ஜனநாயக மேடையே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஒரே மாற்றாக இருக்க முடியும்.  (அரசியல் தீர்மானம்: பாரா 2.138)

அதாவது காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும், பொருளாதாரத்தில் புதிய தாராளமயம் என்ற வலதுசாரி பிற்போக்குக் கொள்கையை பின்பற்றி வந்துள்ளன. இந்த வலது பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகள், நாட்டின் பெருமுதலாளித்துவக் கூட்டத்தையும், அந்நிய மூலதன சக்திகளையும், கிராமப்புற பணக்கார நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும் தான் வளர்த்துள்ளன. அவர்களின் சொத்துக்களும், மூலதனக்குவியலும் அதிகரிப்பதற்கு இக்கொள்கைகள் உதவியுள்ளன. அதன் எதிர்விளைவாக உழைப்பாளி மக்களின் வருமான வீழ்ச்சிக்கும் இந்த வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

எனவே, சமுக ஏற்றத் தாழ்வினை உருவாக்கும் கொள்கைகளுக்கு மாற்றாகத் தேவைப்படுவது, இடதுசாரி முற்போக்குக் கொள்கைகள். பொதுத்துறை, பொதுச் சொத்துக்கள், இயற்கை வளங்கள், கனிம வளங்கள், தொழில், விவசாய, சேவை உற்பத்தி வளர்ச்சிகள் அனைத்தும் பெருவாரியான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இந்த இடதுசாரிக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்திப் போராடி வந்துள்ளன.

இந்திய ஜனநாயகம் உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், மேலும் வலுப்படுத்திட வேண்டும். உழைக்கும் மக்கள் தங்களது அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமைகள் படைத்தவர்களாக மாறும் வகையில் இந்திய ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக்கப்பட வேண்டும். தங்கள் உரிமைகள், வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராட்டங்கள். ஏதேனும் ஒரு பகுதியில் பட்டா கோரிக்கையை வைத்து சில நூறு பேர் போராடினாலும் அது பெரும்பான்மை மக்களின் நிலத்துக்கான உரிமையை பிரதிபலிப்பதால் அத்தகு போராட்டங்கள் ஜனநாயகப் போராட்டங்கள். அந்த போராடும் மக்களின் துவக்க கட்ட ஜனநாயக உணர்வை வலுப்படுத்த வேண்டும். படிப்படியாக ஒரு மாற்றம் வேண்டும் என்கிற இடதுசாரி உணர்வாக அது உயர்த்தப்பட வேண்டும். எனவே, இடது ஜனநாயக மாற்று உழைக்கும் மக்கள் போராட்டங்களால் உருவாகும் உன்னத மாற்றாகத் திகழ்கிறது. இதையொட்டி, மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சி இந்த ஜனநாயக அமைப்புகளோடு, இணைந்து நீடித்த ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களை நடத்தி, முதன்மை இடத்திற்கு வந்த வரலாறு சிறந்த படிப்பினையாகத் திகழ்கிறது. (மறைந்த மேற்கு வங்க மாநில செயலாளர் அனில் பிஸ்வாஸ் குறிப்பிட்டார்)

இடது ஜனநாயக மேடை

கட்சியின் அரசியல் தீர்மானத்தில் இடது ஜனநாயக மேடை குறித்துப் பேசப்படுகிறது. இது ஒன்றுபட்ட செயல்பாட்டுக்கான தளம், இடதுசாரி முற்போக்கு கொள்கைகளை ஆதரிப்போரும், இன்றைய ஜனநாயக அரசியல் நெறியை பாதுகாத்து, விரிவுபடுத்த விரும்புவோரும் ஒன்றுபட்டு, கைகோர்த்து சங்கமிக்கவும்,செயல்படவும், வாய்ப்பை உருவாக்குவது இந்த மேடை. மார்க்சிஸ்ட் கட்சி, இடது ஜனநாயக மேடையின் கீழ் பல்வேறு சக்திகளை இணைத்து ஒன்றுபட்ட செயல்பாட்டை உருவாக்க விரும்புகிறது.

இந்த மேடையில் செயலாற்றுவது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் கூறுகிறது.

இடதுசாரிக் கட்சிகளுக்கு வெளியே இடதுசாரி மனோபாவம் கொண்ட குழுக்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளனர். இடதுசாரிகள் முன்னிறுத்தும் கொள்கை அடிப்படையிலான மேடையில் இவர்களை யும் கொண்டு வர முடியும். இதற்கான முயற்சிகளை கட்சி மேற்கொள்ளும். (பாரா:2.149).

இடது ஜனநாயக மாற்று என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப் பார்வை. இன்றைய இந்திய அரசியல், சமூகப் பொருளாதார நிலைமைகளில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களிலிருந்து விடுபட மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான ஆய்வுக்குப் பிறகு உருவாக்கிய ஒரு தத்துவார்த்தப் பங்களிப்பு, இடது ஜனநாயக மாற்று. இந்த மாற்று தற்போது கருத்து தளத்தில் இருந்தாலும், இது வலுவான கூட்டணியாக, இடது ஜனநாயக முன்னணியாக அமைந்திடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி இது தேர்தல் காலத்தில் அமையும் கூட்டணி போன்றதல்ல என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தோழமை வர்க்கங்கள்

நாளை உருவாக உள்ள இந்த முன்னணிக்கு இப்போது யார் யாரை அணுக வேண்டும்? யார் யாரைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டும்? இதையும் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.

ஆலைத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு கடை வியாபாரிகள் மற்றும் அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன்களை இடது ஜனநாயகத் திட்டமே பிரதிநிதித்துவப்படுத்தும். (பாரா:2.150)

இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான் இடது ஜனநாயக அணி எனப்படுவது. இந்தப் பிரிவினரின் நலன்களை இடது ஜனநாயகப் பாதையில் சென்றால் மட்டுமே பாதுகாத்திட முடியும். எனவே, அவர்கள் இருக்க வேண்டிய இடம் இடது ஜனநாயக மேடைதான். இந்த தோழமை வர்க்கங்களை இங்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி அயராது பாடுபடும்.

அதுமட்டுமல்லாது, மேலும் பல்வேறு பிரிவினரையும் இந்த மேடை உள்ளடக்கியதாக இருக்கும்.

தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பொதுவான ஜனநாயக மேடையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். (பாரா: 2.143)

….இளைஞர்கள் மற்றும் வேலை கிடைக்காது அவதிப்படுவோர். நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைப்பகுதி ஏழைகள். (பாரா: 2.145) ஆதிவாசிகள்…. (பாரா: 2.155)

சமூக, பண்பாட்டுத் தளத்திலும் இந்த மேடை தேவைப்படுகிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, பன்முக கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது என்ற நிகழ்ச்சி நிரலின் பின்னால் அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். இந்த முயற்சிக்கு கடசி முழுமையாக துணை நிற்கும். (பாரா: 2.115) என அரசியல் தீர்மானம் கூறுகிறது.

ஆக இடது ஜனநாயக முன்னணி என்பது உழைக்கும் மக்களின் வர்க்கக் கூட்டணியாக விளங்குகிறது. இதுதான் நாட்டை சீரழித்து வரும் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கூட்டணிகளை அப்புறப்படுத்தும் சக்தியாக மலரும்.

இதற்கு, தோழமை வர்க்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

 • ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய தாராளமயக் கொள்கைகள் மீதான ஒன்றுபட்ட  உறுதியான  எதிர்ப்பை  வளர்த்தெடுக்க வேண்டும். மறுபுறம் பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய தாராளமயக் கொள்கைகளையும் சேர்த்து எதிர்க்க வேண்டும். இந்த இரண்டு கூட்டணிகளில் ஏதேனும் ஒன்றை ஆதரிப்பது தற்கொலைப் பாதை என்பதை அனைத்து தொழிலாளி வர்க்கமும் உணரச் செய்தல் வேண்டும்.
 • பெரும்பான்மை, சிறுபான்மை வகுப்பு வாதத்தையும், இந்துத்துவா கொள்கைகளையும், எதிர்ப்பதோடு மதச்சார்பின்மை கொள்கை காப்பதில் உறுதியாக நிற்க வேண்டும்.
 • கட்சியின் அகில இந்திய மாநாடு வரையறுத்துள்ள 12 – அம்ச பொதுத் திட்டம் அடிப்படையில் அனைத்து தரப்பினரையும் திரட்டிட உழைக்கும் வர்க்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

12 அம்ச திட்டம் வருமாறு:

இடது மற்றும் ஜனநாயகத் திட்டம்

 1. முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்துதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகபூர்வ மாற்றம்.
 2. வளர்ச்சிக்கு சுயசார்பு பாதை, சர்வதேச நிதிமூலதனப் பாய்ச்சலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங்களை தேசிய மயமாக்குவது, திட்டமிட்ட மற்றும் சமச்சீரான வளர்ச்சி.
 3. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, ஏகபோகத்தைத் தடுப்பது, பொதுத் துறையை மேம்படுத்துவது, செல்வத்தை மறு விநியோகம் செய்ய நிதி மற்றும் வரிசார்ந்த நடவடிக்கைகள்.
 4.  ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசியல் முறை; மத்திய – மாநில உறவுகளைச் சீரமைத்தல் மற்றும் வலிமையான ஜனநாயகபூர்வ அதிகாரப் பரவல்; ஜனநாயகத்தை ஆழமாக வேர்பிடிக்கச் செய்ய அரசியல் சட்ட மாற்றங்கள், சர்வதேச உடன்பாடுகளை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற் கான நடவடிக்கை;
 5. உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த உறுதி யான நடவடிக்கை; தேர்தல் சீர்திருத்தம், பகுதிப் பட்டியல் முறையோடு விகிதாச்சார பிரதிநிதித் துவ முறையை அறிமுகப்படுத்துவது.
 6. அரசியல் சாசனத்தின் அடிநாதமாக அமை யும் வகையில் மதச்சார்பின்மை நெறிமுறையின் அடிப்படையில் மதத்தையும் அரசியலையும் பிரிப்பது; வகுப்பு வாத சக்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
 7. நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப் பிற்கான உறுதி, நிர்வாகத்தில் தொழிலாளர் களுக்குப் பங்கு, உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
 8. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் களுக்கு ஒருங்கிணைந்த பொது விநியோக முறைத் திட்டம்.
 9. பொது மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் திற்கான உரிமையை உறுதிப்படுத்த பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதார முறையை வளர்த் தெடுப்பது.
 10. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டு வதன் மூலம் சமூக நீதியை உறுதிப்படுத்துவது, பெண்களுக்கு சம உரிமை, தலித்துகள் சிறு பான்மையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
 11. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி, தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பெறுவதில் சமவாய்ப்பு.
 12. ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையிலான சுயேச்சையான வெளி யுறவுக் கொள்கை.

கோடானு கோடி இந்திய மக்கள் இத்திட் டத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்கிற போது இந்தியாவின் அரசியல் சரியான வழித்தடத்தில் செல்லத் துவங்கிடும். அப்போது உழைக்கும் வர்க்கங்கள் தலைமை தாங்கும் மக்கள் ஜனநாயக அரசு என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தொலை நோக்குத் திட்டம் நிறைவேறுகிற புரட்சிகர சூழல் உருவாகிடும்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...