வரலாற்றியல் அறிஞரின் கண்ணோட்டத்தில் “அயோத்தியா பற்றிய தீர்ப்பு”

679
0
SHARE

 

இந்தத் தீர்ப்பு  ஒரு அரசியல் பூர்வமான தீர்ப்பு. இத்தகைய தீர்ப்பை அரசே, பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருக் கலாம், மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தமானது, இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டப்படுவது – இவைதான் இந்தத் தீர்ப்பின் மையக் கருத்தாயிருக்கிறது. சமய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட, தற்கால அரசியலோடு தொடர்புடையது இந்தத் பிரச்னை. அதே நேரத்தில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களை அடிப்படை யாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது வரலாற்று ஆதாரங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டது. ஆனால் இறுதியில் வரலாற்று ஆதாரங்கள் ஓரங்கட்டப்பட்டன.

இந்து சமய நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு ஒரு முறையீடு செய்யப்பட்டது. இதற்கு விடையளிக்கும் வகையில் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட இடத்தை ‘தெய்வீகமான அல்லது தெய்வாம்சம் பொருந்திய ஒரு நபர் பிறந்த இடமென்றும் அந்த இடத்தில் புனித நபர் பிறந்ததை நினைவு படுத்தும் விதத்தில் கோயில் கட்டப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.’

தெய்வாம்சம் பொருந்திய நபர் இங்குதான் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறிருக் கையில், நீதிமன்றமொன்றில் இப்படியொரு தீர்ப்பு வந்தது எதிர்பாராததொரு நிகழ்வாகும். ராமன் என்ற தெய்வத்தின் மீது இந்துக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால் ராமனின் மீது இந்துக்கள் வைத்திருக்கும் மரியாதையும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு கட்டத்தை இடித்ததும் ராமனுக்குக் கோயில் கட்டுவதற்கான இடத்தைப் பெறுவதற்கும் சட்ட ரீதியான உரிமையைப் பெறுவதற்கும் போதுமான ஆதாரங்களாகி விடுமா?

12-ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தில் ஒரு கோயில் இருந்ததாகவும், அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. இதனால் மட்டுமே அதே இடத்தில் கோயில் கட்டப்படுவது நியாயப்படுத் தப்படுகிறது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் (ஹசஉhநயடடிபiஉயட

ளுரசஎநல டிக ஐனேயை) அகழ்வு ஆய்வுகளும், அந்த நிறுவனத்தின் கருத்துக்களும் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கருத்துக்களை வேறுபல தொல்லியல் ஆய்வாளர்கள் கேள்விக்குட் படுத்தியுள்ளனர். மேற்கூறிய விசயங்களைப் பற்றி தொல்லியல் மற்றும் வரலாற்றியல் ஆய்வளார்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டிய விசயங்கள். ஆனால் இந்த விசயத்தில் ஒரே ஒரு தரப்பினரின் கருத்தை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை நீதிமன்றத் தீர்பபின் மீதுள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது.

நான் ஒரு வரலாற்று அறிஞரல்ல. அதனால் வரலாறு தொடர்பான விசயங்களுக்குள் நான் போகவில்லை என்றார் ஒரு நீதிபதி. ஆனால் அதே மூச்சில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு, வரலாறு மற்றும் தொல்லியல் அறிவு இன்றியமையாததல்ல என்றும் கூறினார். ஆனால் உண்மையில் நம் முன் உள்ள முக்கியப் பிரச்னை இதுதான்- ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததாகச் சொல்லப்படும் கட்டங்களை, அவை இருந்ததாகக் கூறப்படும் கருத்துகள் – இவையெல்லாம் எந்த அளவுக்கு, வரலாற்றுப்பூர்வமான உண்மைகள் என்பதாகும்.

500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மசூதி, நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்கிய ஒரு மசூதி இடிக்கப்பட்டது. இந்த மசூதியை ஒரு வெறிபிடித்த கூட்டம் இடித்தது. இந்த கும்பலை ஓர் அரசியல் கட்சியின் தலைவர் உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார். நமது பாரம்பரியத்திற்கு எதிரான இந்த குற்றம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது. இதைக் குறித்து, தீர்ப்பின் சுருக்கத்தில் எந்தவிதமானதொரு கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மசூதியின் இடிபாடுகள் இருக்கும் இடத்தில், புதிதாகக் கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலின் கருவறை கட்டப்படும். இந்தக் கருவறை கட்டப்படும் இடம்தான் ராமன் பிறந்த இடமாகக் கூறப்படுகிறது. அங்கே கோயில் ஒன்று இருந்ததாக நம்பிக்கையின் அடிப்படையில்  ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கோயில் இடிக்கப்பட்டது கடுமையான கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. ஆனால் மசூதி இடிப்பு நிகழ்ச்சியை ‘இந்தக் குறிப்பிட்ட வழக்கிற்கு அப்பாற்பட்டது’ என்று மிக வசதியானதொரு வாதத்தை முன்வைத்து மசூதி இடிப்பைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது.

இது ஒரு முன்னுதாரணம் :- ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஓர் இடத்தை, தெய்வாம்சம் பொருந்திய அல்லது தெய்வத்தின் அவதாரமான  ஒரு நபர் பிறந்த இடம் என்று கோரிக்கை வைத்தால், அந்தக் குறிப்பிட்ட இடத்தின் மீது, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரு நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக உரிமை கொண்டாடலாம்’ என்ற முறையில் ஒரு முன்னுதா ரணத்தையே இந்த தீர்ப்பு ஏற்படுத்தி விட்டது. எங்கெல்லாம் வசதியாக நிலம் கிடைக்குமோ அங்கெல்லாம் ஒரு தெய்வாம்சம் பொருந்திய அவதார புருசன் பிறந்த இடம் என்று இனிப்பல இடங்கள் கூறப்படும், அல்லது தேவையான நிலத்தைப் பெறுவதற்கு, அங்கே ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டால் போதும், அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடலாம். இவ்வாறு இனிப் பல ஜன்ம ஸ்தானங்கள் தோன்றலாம். ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த ஒரு கட்டத்தை இடித்ததை நீதிமன்றமே கண்டு கொள்ளவில்லை. அதனால், இனி அத்தகைய வரலாற்றுச் சின்னங்களைத் தகர்ப்பதை யார் தடுக்கப்போகிறார்கள். அண்மைக்காலத்தில், 1993-இல் வழிபாட்டுத் தலங்களின் நிலைமையை மாற்றுவது குறித்த சட்டம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. இந்தச் சட்டம் பயனற்றுக் கிடக்கிறதென்று தெரிகிறது.

வரலாற்றில், நடைபெற்ற நிகழ்ச்சி நடந்து முடிந்தது – என்பது- அத்தோடு முடிந்ததுதான். நடந்தது, நடந்ததுதான். அதை மாற்ற முடியாது, ஆனால் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்சசியை முழுமையாகப் புரிந்து கொள்ள, அந்த நிகழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், நடைபெற்ற நிகழ்வை, நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் ஊன்றிப்பார்க்க முயற்சி செய்ய வேண்டும். தற்போதைய அரசியல் நியாயப்படுத் துவதற்காக, கடந்த கால வரலாற்றை மாற்றுவது சரியல்ல. இந்தத் தீர்ப்பு வரலாற்றுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத் துடைத்தெறிந்துவிட்டது. வரலாறு இருக்க வேண்டிய இடத்தில் மத நம்பிக்கையை வைத்து விட்டது. இந்நாட்டில், ‘சட்டம், ஆதாரப் பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையிலானது. மத நம்பிக்கையின் அடிப்படையில் இயற்றப்பட்டதல்ல’ என்ற நம்பிக்கை இருந்தால்தான் மக்களிடையே, சமரசம் உணர்வு ஏற்படும்.

– தமிழில் எஸ்.ஹேமா

“இந்து” நாளேட்டில்

ரொமிலா தாபரின் கட்டுரை

 

 

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்