விவசாயத் துறையில் கொரோனாவின் தாக்கம்!

280
0
SHARE

பெ.சண்முகம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

“ஒட்டுவாரொட்டி” என்று கிராமப்புற மக்களால் அழைக்கப்படும் தொற்றுநோய் உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது. சமூகத்தின் சகலதரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உலகம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முடங்கி இருந்தாலும் உழவர்கள் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் பெரும்பொறுப்பை விவசாயிகள் நிறைவேற்றி வருகிறார்கள். “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்” என்று போற்றுதலுக்குரியவர்கள் உழவர் பெருமக்கள். தேசம் அவர்களை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறது.

ஊரடங்கின் காரணமாக உழவர்களும் கிராமப்புற மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

விதைத்து, வளர்த்து அறுவடை செய்யும் நேரத்தில் வாங்க ஆளில்லாமல் உற்பத்தி செய்த அனைத்து மகசூல்களையும் மண்ணோடு மண்ணாக புதைக்க வேண்டிய அவலநிலைக்கு ஆளான விவசாயிகளின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால், அதுதான் நடந்தது.

தமிழ்நாட்டில் நெல், கரும்புக்கு அடுத்து வாழை பிரதான பயிராகும். குறிப்பாக திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய் விட்டதால் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் விற்பனையும் இல்லை. இந்த நிலையில், மொத்த வாழைத்தார்களையும் வெட்டி அந்த நிலத்திலேயே ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டனர். திராட்சை, தர்பூசணி, பலா ஆகிய பழங்களும் விற்பனை செய்ய முடியாமல் அழுகி வீணாகிவிட்டது. மலர் சாகுபடி செய்த விவசாயிகள் நிலத்திற்கே உரமாகவாவது ஆகட்டும் என்று செடிகளை உழவடை செய்து அழித்துவிட்டனர்.

காய்கறிகளும் சந்தைகள் மூடப்பட்டதால் விற்பனை செய்ய முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் சாலை ஓரங்களில் கொட்டிய அவலம். நெல் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டும் சாக்கு இல்லை, சுமைப்பணியாளர் இல்லை, பணமில்லை என்று காரணம் கூறி வாரக்கணக்கில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் கிடந்து கோடை மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணமாகும். தமிழக அரசு குளிர்பதன கிடங்கு வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால், விவசாயிகளால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம், இரண்டு முறை வண்டி வாடகை, இரண்டு முறை ஏற்று, இறக்க கூலி, விலை உத்தரவாதமின்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் இதை பயன்படுத்தவில்லை.

கோடைகால சாகுபடி நடைபெற்ற காலத்தில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உரம், விதை, பூச்சிமருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் நடைபெறவில்லை. இப்போது விவசாய கடன் வசூல் மூன்று மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் பருவமழை துவங்கிய பிறகு அடுத்த சாகுபடி பணிகள் துவங்குவதற்கு விவசாயிகள் கையில் பணப்புழக்கம் இல்லை. எனவே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடன்கள் வழங்கினால்தான் விவசாயத்தை மேற்கொள்ள முடியும். புதிதாக கடன் பெற வேண்டிய நிலையிலுள்ள விவசாயிகள் பழைய கடனை கட்ட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சமீபத்தில் வெளியான தகவல், இந்தியாவின் 50 முதலாளிகளுக்கு பெற்ற கடன் ரூ. 68,607 கோடி வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ள விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதோடு ஒப்பிடும் போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது அரசுக்கு பெரும் சுமையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மத்திய- மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நேரடியாக எந்தவிதமான புதிய பொருளாதார உதவிகளையும் செய்யவில்லை என்பது அரசு வேளாண் சமூகத்தை புறக்கணிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. பிரதம மந்திரி விவசாய உதவித்திட்டத்தில் 2000 ரூபாய் முன்கூட்டியே தரப்பட்டது. அது ஒன்றும் கொரானா ஊரடங்கு பாதிப்புக்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டமல்ல. இதிலும் 25 சதவீத விவசாயிகளுக்கு அந்தப் பணம் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை அரிசி பெறும் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய் வழங்கியதோடு சரி. இந்த ஆயிரம் ரூபாயையும், அரிசியையும் வைத்துக்கொண்டு இரண்டு மாத காலம் ஒரு குடும்பம் எப்படி உயிர்வாழ முடியும்?

கிராமப்புறங்களில் வீட்டிலிருந்த பண்ட பாத்திரங்களை அடகு வைத்துத்தான் மக்கள் சமாளித்திருக்கிறார்கள். அதற்கும் வழியில்லாதவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காலம் தள்ளுகிறார்கள். அரசிடமிருந்து பொருளாதார ரீதியான உதவிகள் கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவுகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. குடும்பஅட்டை இல்லாத குடும்பங்களின் நிலைமை படுமோசம். இவ்வளவு காலமும் குடும்பஅட்டை கொடுக்காமல் இருந்தது ஆட்சியாளர்களின் அலட்சியம் தானே காரணம். ஆனால், அதற்கான தண்டனையை மக்கள் அனுபவிக்க வேண்டுமா?

இந்த பேரிடர் காலத்தில் கூட குடும்ப அட்டை இல்லை என்பதற்காக குடும்பத்தை பட்டினி போடும் இந்த ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமான மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்பதிலிருந்தே இவர்களின் கருணையுள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல் வீடற்றவர்கள், நாடோடி சமூகத்தினர், ஆதிவாசிகள், சாலையோரங்களில் வசித்தவர்கள் என உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும், செய்வதறியாது திகைத்து போயினர். தன்னார்வலர்களின் உதவியால்தான் இவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

கிராமப்புற மக்களுக்கு உள்ள பெரிய வேலைவாய்ப்பு திட்டம் தேசிய கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் வேலைபெற வேண்டிய பெரும்பாலானோருக்கு இன்னமும் வேலை வழங்கப்படவில்லை. பல கிராமங்களில் வேலை துவக்கப்படவே இல்லை.

இத்திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கினால் கிராமங்களில் பணப்புழக்கம் ஏற்படும். ஓரளவு நெருக்கடியை சமாளிக்க முடியும். வேலை வழங்குவதில் ஏதாவது நடைமுறை சிக்கல் இருக்குமானால் ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்கி விட்டு பின்னர் பணியை செய்யச் சொல்லலாம். இதுபோன்ற மக்களுக்கு சாதகமான எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு அரசுகளுக்கு மனம் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், நுண்நிதி நிறுவனங்கள் கந்துவட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பக் கட்டச்சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். ஊரடங்கு முடிவுற்றால் கடன்காரர்களின் தொல்லையிலிருந்து எப்படி மீள்வது என்பது மக்களுக்கு மிகப்பெரிய சவால். எனவே, இத்தகைய கடன்கள் உட்பட சில மாதங்களுக்கு தள்ளி வைக்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் வாழும் வீட்டை இழந்தும், தற்கொலை உள்ளிட்ட கொடுமைகள் நடைபெறும் என்பதை எச்சரிக்கிறோம்.

அரசு செய்ய வேண்டியது;

  • ஊரடங்கு காரணமாக உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை விற்க முடியாமல் பாதிப்புக்கு ஆளான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று சிறு- குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும்.
  • விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்வதுடன் அடுத்த பருவ வேளாண் பணிகளை துவக்குவதற்கு புதிதாக கடன் வழங்க வேண்டும்.
  • நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்குவதுடன் அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்குவதை உறுதிப்படுத்துவதுடன், விவசாய பணிகளுக்கு இத்திட்ட பணியாளர்களை பயன்படுத்திட அரசு உத்தரவிட வேண்டும்.
  • இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் ரேசன் பொருட்களும், உதவித்தொகையும் கிடைத்திட அரசு உத்தரவிட வேண்டும்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...