வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …

1387
0
SHARE
Editable vector question mark formed from many question marks

வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் இடதுசாரி இயக்கம் சந்திக்கும் பின்னடைவா? அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?

டிசம்பர் 6ஆம் தேதியன்று வெளியான வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் உலகின் முற்போக்கு சக்திகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் ஏகாதிபத்திய ஆதரவுடன் செயல்பட்டு வந்த எதிர்ப்புரட்சி சக்திகளை தொடர்ந்து முறியடித்து வந்த முற்போக்கு அணியான PSUV 46 இடங்களையும் எதிர்ப்புரட்சி அணியான MUD 99 இடங்களையும் வென்றுள்ளன. இன்னும் வரவிருக்கும் 22 இடங்களின் முடிவுகள் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற நிலையில் இத்தேர்தல் புதியதொரு சவாலை அந்நாட்டு உழைக்கும் மக்களின் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி கட்சிகள் தோல்வியை சந்தித்த போதெல்லாம் “வெனிசுவேலா ஓர் எதேச்சாதிகார நாடு” என்றும், “அங்கு கருத்துச் சுதந்திரமே இல்லை” என்றும், “அது ஒரு கொடுங்கோல் ஆட்சி” என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த உலக முதலாளித்துவ ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் இப்போது குதூகலத்துடன் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ கட்சிகள் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் தலைதூக்கும் ‘எதேச்சாதிகாரம்’, புரட்சிகர சக்திகள் தோல்வியை சந்திக்கும்போது மாயமாக மறைந்து விடுகிறது என்பது உண்மையிலேயே வியப்பான ஒரு விஷயம்தான்.

2013ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் பதிவான 80 சதவீத வாக்குகளை விட இப்போதைய தேர்தலின் 74.25 சதவீதம் குறைவானதுதான் என்ற போதிலும் 2010ஆம் ஆண்டின் வாக்குவிகிதத்தை விட இது 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்தது. ஒரு சில இடங்களில் அதற்கும் மேலாக வரிசையில் நிற்பவர்கள் வாக்குப்பதிவு செய்யும் வகையில் தொடர்ந்தது. ‘ஜனநாயகம்’ பற்றி வாய்கிழியப் பேசும் எதிர்க்கட்சியானது தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கண்டித்ததோடு, வாக்குச் சாவடிகள் குறிப்பிட்ட நேரத்தில் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் கோரியது!

மேலோட்டமாகப் பார்க்கும்போது, 2010ஆம் ஆண்டுத் தேர்தலை ஒப்பிடுகையில் புரட்சிகர சக்திகளின் வாக்கு விகிதம் அப்படியே இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தளம் பெருமளவு அதிகரித்திருப்பதும், குறிப்பாக புதிய வாக்காளர்களின் ஆதரவை அவை கணிசமான அளவில் கவர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

எதிர்ப்புரட்சி சக்திகளின் இந்த வெற்றிக்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. குறிப்பாக, அதிகார வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகள் அனைத்தையும் தனக்கேயுரிய வகையில் படிப்படியாக முறியடித்து வந்தது. சமூகத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிப்பை அகற்றுவதற்கான முயற்சிகளை சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து கொண்டே போன நிலையில், சமூக நல்வாழ்வுத் திட்டங்களுக்கும், உள்நாட்டுச் சந்தையை சீர்படுத்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் தேவையான நிதி அரசின் கையில் இல்லை என்ற நிலை உருவானது. மேலும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை எதிர்த்து முதலாளித்துவ உற்பத்தியாளர்கள் கிளர்ச்சிகளை மேற்கொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கினர். அதிகமான பணவீக்கம், அடிப்படைப் பொருட்களின் தட்டுப்பாடு, தறிகெட்டு நீடித்த கள்ள மார்க்கெட் ஆகியவை இத்தேர்தலில் முக்கிய பங்கினை வகித்தன என்றே கூறலாம்.

தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் புரட்சியின் சாதனைகள் அனைத்தின் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வெனிசுவேலா தற்போது சந்தித்து வரும் தீவிர பொருளாதார நெருக்கடியை விலைவாசியை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடுவது, சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்டிக் குறைப்பது, நாணய மதிப்பைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் சமாளிக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முயற்சிகள் அனைத்துமே பொருளாதார நெருக்கடிக்கான விலையை தொழிலாளி வர்க்கம் கொடுக்க வேண்டியதாக மாற்றிவிடும் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன எனலாம்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்