பதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது?

949
0
SHARE

வளர்ச்சி சார்ந்த அதிகமான பொறுப்புகள் மாநிலங்களுக்கு இருப்பதையும், அதற்கான வளங்களை திரட்டுவதில் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறைவு என்பதையும், கணக்கில் கொண்டு, மொத்தமாக மத்திய அரசு கையில் வந்து சேரும் வரி வருமானத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் பணித்துள்ளது.

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கு வந்து சேருகின்ற மொத்த வரிப்பணத்தை ஒருபுறம் மத்திய அரசுக்கும், மறுபுறம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பகிர்வு செய்யும் பணி உள்ளது. அடுத்ததாக, மாநிலங்களுக்கு என்று இவ்வாறு தரப்படும் வரி வருமானத்தை கோட்பாடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் பணியும் உள்ளது. இவ்விரு பணிகளையும் மேற்கொண்டு பரிந்துரைகளை உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் அமைப்பாக நிதி ஆணையம் என்ற சட்டபூர்வமான ஏற்பாட்டையும் அரசியல் சாசனம் தந்துள்ளது. இந்த நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும். அதன் பணி முடிந்தவுடன் அது கலைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஐந்தாண்டுகள் முடியும் தருணத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பரிந்துரைகளை உருவாக்க புதிதாக நிதி ஆணையம் அமைக்கப்படும்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை இவ்வாறு பதினான்கு நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த காலத்திற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பதினைந்தாவது நிதி ஆணையம் இந்திய குடியரசு தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்ற வேண்டிய பணிபட்டியல் (Terms of Reference) குடியரசு தலைவரின் ஆணையில் தரப்பட்டுள்ளது. இந்த பணிபட்டியல் பல மாநில அரசுகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

அண்மையில் கேரளா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் புதுவை மாநிலத்தின் முதல்வரும் கூட்டாக சென்று குடியரசு தலைவரை சந்தித்து பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு மகஜரை சமர்ப்பித்துள்ளனர். ஆகவே, எழுந்துள்ள பிரச்சினை நிதி ஆணையத்தின் பணிபட்டியல் தொடர்பானதாகும்.

பணிபட்டியலுக்கு எதிர்ப்பு ஏன்?

துவக்கத்தில் அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, மேலே நாம் குறிப்பிட்ட, இரண்டு பணிகளை மாத்திரம் செய்யுமாறு பணிக்கப்பட்டன. ஆனால் நமது நாட்டில் தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் 199௦களில் துவங்கியபின், 11 ஆவது நிதி ஆணையத்தில் துவங்கி, மாநில அரசுகளின் வரவு – செலவு பற்றாக்குறை தொடர்பான நெறிமுறைகளையும், அவற்றின் அமலாக்கத்தையும் நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் மத்திய அரசு இணைத்து வருகிறது. படிப்படியாக, அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்ட பணிபட்டியல்கள், மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலும், மத்திய அரசின் நிலைபாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்கும் வகையிலும் அமைந்து வருகின்றன.

பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த பாதையில் மேலும் தீவிரமாக பயணித்துள்ளது. எனவேதான் பணிபட்டியல் விவரங்கள் வெளிவந்த பின்பு  கேரள அரசு ஏப்ரல் 1௦ அன்று திருவனந்தபுரத்தில் பல மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்து ஒருநாள் ஆலோசனை கூட்டம் நடத்திட முன்கை எடுத்தது. இதனை தொடர்ந்து மே மாதம் 7 ஆம் தேதி விஜயவாடாவில் ஆந்திர பிரதேச அரசின் அழைப்பின் பேரில் இரண்டாவது கூட்டம் நடைபெற்று ஆணையத்தின் பணிபட்டியலில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டு, ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டு பின்னர்  குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பணிபட்டியலின் மீதான முக்கிய விமர்சனங்கள்

ஊடகங்களில் பரபரப்பாகவும் அதிகமாகவும் பேசப்படுவது, நிதி ஆணையம் 2௦11 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தனது பணிகளை செய்ய வேண்டும் என்ற அம்சம்தான். இது மக்கள் தொகையை நெறிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள கேரளா, தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான வரிவருமானப் பகிர்வில் பெரும் இழப்பை ஏற்படுத்தும். எனவே இம்மாநிலங்கள் இதனை எதிர்க்கின்றனர் என்ற கருத்து வலுவாக ஊடகங்களில் வந்துள்ளது. இதில் இம்மாநிலங்கள் பக்கம் நியாயம் உள்ளது, இந்தப் பிரச்சினை கணக்கில் கொள்ளப்படவேண்டும். ஏற்கெனவே, பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் விஷயத்தில் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைதான் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதும், இதற்கென பாராளுமன்றத்தில் சட்டமே நிறைவேற்றப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஆனால் பணிபட்டியலில் உள்ள வேறு பல அம்சங்கள் மாநில உரிமைகளுக்கே வேட்டு வைக்கின்றன என்பதுதான் முக்கியமான பிரச்சினை. குறிப்பாக, மத்திய அரசுக்கும் மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் வரிவருமான பகிர்வு என்பது முக்கிய பிரச்சினை. அனைத்து மாநிலங்களும் இதில் ஓரணியில் நிற்க வேண்டியுள்ளது. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாநிலங்களின் கூடுதல் பொறுப்புகளையும், குறைவான நிதி ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு, மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை சந்திக்க மத்திய அரசு மானியங்கள் தரவேண்டும் (REVENUE DEFICIT GRANTS).

இப்பொழுது தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த மானியங்கள் அவசியம்தானா? என்று பரிசீலிக்குமாறு நிதிஆணையத்தை  பணிக்கிறது. இது அரசியல் சாசனம் தந்துள்ள ஏற்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும். இதனை அனைத்து மாநிலங்களுமே எதிர்த்தாக வேண்டும். அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் மக்கள் நல திட்டங்களை, அவை அவசியமா இல்லையா என்று மதிப்பீடு செய்யவும் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத அம்சமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதுதான் ஜனநாயகமாகும். மாநில அரசு அறிமுகப்படுத்தும் அல்லது தொடர்ந்து அமல்படுத்தும் மக்கள் நல திட்டங்களை மதிப்பீடு செய்யவும், நிராகரிக்கவும் நிதி ஆணையத்திற்கு வாய்ப்பு அளிப்பது என்பது மாநில மக்களின்  ஜனநாயக உரிமைகளில் கைவைப்பதே ஆகும்.

அதிகாரங்களை மையப்படுத்தும் பணிபட்டியல்

பதினைந்தாம் நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இன்னும் பல வகைகளில் அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை புறந்தள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதியாக மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை, ஃபிஸ்கல் (FISCAL) பற்றாக்குறை ஆகியவற்றின் வரம்புகளை சட்டரீதியாக சுருக்கிட  மாநிலங்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மாநிலங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியதில் கடந்தகால நிதி ஆணையங்களுக்கும் பங்கு உண்டு.

இப்பொழுது இந்த வரம்புகளை மேலும் குறுக்கும் முயற்சி பணிபட்டியல் வாயிலாக வந்துள்ளது. ஏற்கெனவே மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3%க்கு மிகாமல் ஃபிஸ்கல் பற்றாக்குறை இருக்கவேண்டும் என்று இருந்தது. இந்த 3% ஐ  1.7% ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள மத்திய அரசு குழுவின் தலைவரான (பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர்) என்.கே. சிங் என்பவர்தான் இப்போது பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், இப்பரிந்துரையை ஆணையம் திணிக்குமானால் மாநிலங்களுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும். அரசியல் சாசனத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அதற்கு நேர் மாறாக, மத்திய அரசின் நிதி வளங்களை வலுப்படுத்துவதையே, அதுவும் மாநிலங்களின் வருமானங்களில் கைவைத்து செய்வதையே, பணிபட்டியல் முன்வைக்கிறது.

மத்திய அரசு அவ்வப்பொழுது தான்தோன்றித்தனமாக மாநிலங்களைக் கலந்துகொள்ளாமல் அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை நிறைவேற்ற போதுமான நிதி மத்திய அரசுக்கு வந்துசேர வேண்டும் என்ற அடிப்படையில், வரிபகிர்வு பிரச்சினை அணுகப்படுவதற்கு பணிபட்டியல் வழிசெய்கிறது. மேலும் மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களை எவ்வாறு அமலாக்கி வருகிறது என்பதை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் தக்க ஏற்பாடுகளை உருவாக்குமாறு பணிபட்டியல் மத்திய அரசால் ஒருதலைபட்சமாக நியமனம் செயப்படும் தற்காலிக அமைப்பான நிதி ஆணையத்தை பணிக்கிறது.  இது மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட மாநில அரசுகளின் இறையாண்மையை காவுகொடுக்கின்ற நடவடிக்கை என்பதோடு ஏற்க இயலாத ஒன்றும் ஆகும்.

அடிமையாக தமிழக அரசு?

15ஆம் நிதி ஆணையத்தின் பணிபட்டியல் இன்னும் சில ஜனநாயக விரோத அம்சங்களை, மாநில உரிமைகளுக்கு விரோதமான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மத்திய மாநில உறவுகள் பற்றி விரிவாக விவாதிக்கலாம். ஆனால் தமிழக அரசு பதினைந்தாவது நிதி ஆணையம் மூலம் தொடுக்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து இணைந்தோ தனித்தோ குரல் கொடுக்கத்தயாராக இல்லை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்யவேண்டும்.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...