ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

1039
0
SHARE

இந்திய சுதந்திரத்தின் 70 -ம் ஆண்டையொட்டி இரண்டு கட்டுரைகள் இந்த இதழிற்கு சிறப்பு சேர்க்கின்றன. தோழர் என்.சங்கரய்யா அவருக்கே உரிய கம்பீரத்துடன் எதிர்வரும் கடமைகளை நினைவுறுத்துகிறார். விடுதலைப் போராட்ட நினைவுகளையும் பகிர்ந்து கொள்கின்றார்.

விடுதலைக்குப் பின்னர், பொருளாதாரம், சமூகம் என பல தளங்களில் இந்திய சூழலை விளக்குகிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.
விடுதலைக் கால இலட்சியங்கள் நிறைவேற வேண்டுமானால் இந்தியா இடதுசாரி கொள்கைத் தடத்தில் செல்ல வேண்டுமென்ற சிந்தனையை இரண்டு படைப்புக்களுமே பதிய வைக்கின்றன.

கடந்த இதழில், தோழர் பிரகாஷ் காரத் எழுதியிருந்த கட்டுரை, சாதி பற்றிய மார்க்சிய சித்தாந்தப் பார்வையை விளக்கியது. இந்த இதழில், சாதியையும், சாதீயத்தையும் எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள் பங்கு, வழிமுறை குறித்து தோழர் பிரகாஷ் காரத் விரிவாக விவரிக்கின்றார்.

ஆட்சி நிர்வாகம், நீதி மன்றம், உள்ளிட்ட அன்றாட அலுவல்களிலும், கல்வியிலும் தமிழ் உரிய இடம் பெறத் தவறியதற்கான காரணங்களை தோழர் கே.பாலகிருஷ்ணன் ஆராய்கிறார். மத்திய அரசு, மற்றும் திமுக, அதிமுக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திமுக, அதிமுக இதனை செய்யத் தவறியதற்கு அவர்களின் வர்க்கத் தன்மையும் முக்கிய காரணம்.

தேசிய இன, மொழி உணர்வுகளை முதலாளித்துவ வர்க்கம் மக்களைத் திரட்ட பயன்படுத்திக் கொள்கிறது. சந்தைக்கான முதலாளித்துவப் போட்டியில் பிரதேச முதலாளி வர்க்கம் இந்த மக்கள் திரட்டலை தனது ஆதாயத்திற்காக ஊக்கப்படுத்துகிறது.

ஆனால், மக்கள், தங்களது இன, மொழி உரிமைகளுக்காக அணிதிரளுகின்றனர். இது அவர்களது ஜனநாயகத் தேவை. நியாயமான ஜனநாயக உணர்வு என்ற அடிப்படையில் எழும் தேசிய உணர் வாகும். ஆனால், அதனையொட்டிய மொழி, இன உரிமை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பிரதேச முதலாளி வர்க்கத்திற்கு அக்கறை கிடையாது.
அந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் பாதையில் பாட்டாளி வர்க்க இயக்கமே செல்ல முடியும். ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்தும் படைப்பாக தோழர் கே.பாலகிருஷ்ணன் கட்டுரை அமைந்துள்ளது.

ஏங்கெல்ஸ் குறிப்பிட்டவாறு, உலகத் தத்துவ வளர்ச்சி அனைத்துமே, பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு முகாமின் போராட்டமாக அமைந்துள்ளது. இந்தக் கருத்தை மையமாக வைத்து என்.குணசேகரன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மார்க்ஸ் 200 நிகழ்வையொட்டி இது வெளிவருகிறது. அடுத்தடுத்த இதழ்களில் மார்க்ஸ் 200 பொதுத் தலைப்பில் கட்டுரைகள் வெளிவரும்.

அகில இந்திய விவசாயிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான, தோழர் விஜூ கிருஷ்ணன் கட்சித் திட்டத்தின் பார்வையில் விவசாயப் பிரச்னை குறித்து எழுதியுள்ளார். கேள்விகளுக்கு விஜய் பிரசாத்தின் பதில் தொடர்கிறது.
தோழர் கே.பி.ஜானகி அம்மாள் அவர்களின் நூற்றாண்டு நினைவாக தோழர் பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள கட்டுரை வந்துள்ளது. தோழர் கே.பி.ஜானகி அம்மாள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் விடுலை, சோசலிசம் போன்ற மேன்மையான மார்க்சிய மாண்புகளை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த உன்னதமான போராளி.

இந்த இதழில் வந்துள்ள கட்டுரைகளை விவாதித்து கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்.

விடாது நினைவுபடுத்தி வருகிற கடமையை இப்போதும் நினைவு படுத்துகிறோம்:

மார்க்சிஸ்ட் சந்தா சேருங்கள். வாசகர் வட்டங்களில் பங்கேற்று விவாதியுங்கள்.

– ஆசிரியர் குழு .

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்