பகத்சிங்கின் சிந்தனைகளும் தியாகமும் … (Nov 2007)

1212
0
SHARE

– எஸ். கண்ணன்

பெரும் ஆரவாரம் இல்லாமல் பகத்சிங்கின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது. வாழ்ந்தது 23 வருடங்கள் மட்டுமே; ஆனால் மக்கள் மனதில் வாழும் இளைஞனாக இருந்து வருவது பகத்சிங் மட்டுமே. அரசும் கூட பகத்சிங் – ஐ இருட்டடிப்பு செய்ய முடியாமல், கட்டாயத்திற்காக, சில நூற்றாண்டு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. ஆட்சியாளர் களின் உள்ளத்தை ஆகர்ஷிக்கும் நபராகவோ ஓட்டு வங்கிக் காகவோ பகத்சிங் வாழவில்லை என்பதனால்தான் பெரும் விழாக்கள் எடுக்கப்பட வில்லை. மாறாக, ஆட்சியையும், ஆட்சி யாளர்களையும் விமர்சிக்கும் கொள்கையுடையவனாக பகத்சிங் இருந்தான். பகத்சிங் வாழ்ந்த காலத்தில் “பூரண சுதந்திரம்” என்ற முழக்கத்தைக் கூட தயங்கித், தயங்கி காங்கிரஸ் கட்சி பேசிக் கொண்டிருந்த போது, உழைக்கும் மக்களுக்கான விடுதலையை உறுதி செய்கின்ற, சமூக மாற்றம் வேண்டும். சோசலிசமே தீர்வு என்று விடுதலை இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டவன் பகத்சிங்.
ஏறத்தாழ ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஊழியனைப்போலத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் பகத்சிங் உறுதியாக இருந்ததைப் பார்க்க முடிகிறது. சிறையில் இருந்தபோது, “இளம் அரசியல் தொண்டர்களுக்கு” என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கடிதம் இதற்கு மிகச் சிறந்த சான்று. இக்கடிதத்தை சிவவர்மா, “பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சில காலம் முன்னர், புரட்சிகரத் திட்டங்கள் குறித்த நகல் ஒன்றை உருவாக்கியிருந்தார்” என்று குறிப்பிடுகிறார். அதில், “ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஆயுதமாக இந்த அரசும், அரசு இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கையில் உள்ளது. நாம் அதனைப் பறிப்பதற்கும், நமது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கும், மார்க்சிய அடிப்படையில் சமுதாயத்தை மீட்டமைப்பதற்குப் பயன்படும் வகையில் அரசைக் கையாள்வதற்கும் விரும்புகிறோம்”, என்று பகத்சிங் எழுதி வைத்துள்ளார். “விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தீவிரமான அனுதாபத்தைப் பெறுவதற்கும், அவர்களை அணி திரட்டுவதற்கும் கட்சி அவசியமானதாகும். அதைச் சரியாகச் சொல்வதானால் கம்யூனிஸ்ட் கட்சி அவசியமானதாகும்”, என பகத்சிங் தன்னை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார்.
சோசலிசம் பற்றியும், சோவியத் யூனியனில் நடந்த மாற்றங்கள் பற்றியும், தேசிய அரசியலின் பொதுத் தளத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் பலருக்கும் இருந்தது. அத்தகைய சூழலில் பகத்சிங் சோசலிசத்தைக் குறித்து நிதானமாகவும், தீர்க்கத் தரிசனப் பார்வையுடனும் பேசியது, ஆச்சர்யமான உண்மை. 1925 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில், பகத்சிங் மற்றும் அவருடைய நண்பர்கள், “நவ ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் இளைஞர்களைப் படிப்படியாக இணைத்தது. விளைவு மூன்று ஆண்டுகள் கழித்து, 1928 செப்டம்பர் 8, 9 தேதிகளில் டில்லி மாநகரம், பெரோஷா கோட்லா மைதானத்தில் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன் என்னும் அமைப்பை உருவாக்கினர். அன்றைய நாளில் பகத்சிங்கிற்கு வயது 20 மட்டுமே.

இவ்வளவு சிறிய வயதில் முன் வைத்த திட்டங்கள் ஆச்சரியமான ஒன்றாகும்.

1. சோசலிசம் தான் நமது இறுதி லட்சியம்.

2. கட்சியின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன் என மாற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் நமது இறுதி லட்சியத்தைப் புரிந்து கொள்வார்கள்.

3. இதை மனதில் கொண்டு, இதற்கு இசைவான மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும். தேவை இல்லாமல் சிறுசிறு உளவாளிகளையும், காவல் துறையினரையும் கொலை செய்து, நமது ஆற்றலை இழப்பதோடு, மக்களையும் அச்சுறுத்த வேண்டாம்.

4. பணத்திற்காகத் தனி நபர்களைக் கொள்ளையடிக்க வேண்டாம்.

5. கூட்டுத் தலைமை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆகியவை பகத்சிங் முன் வைத்த கொள்கைப் பிரகடனமாகும். சோசலிசத்தை அடைவதே சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்கிற அளவில் பகத்சிங்கினால் சிந்திக்க முடிந்துள்ளது என்ற வரலாற்றுப் பதிவு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, விடுதலை இந்தியாவில் ஆட்சி செய்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் பிடிக்காத ஒன்று.

இன்றைய அரசியல் தலைவர்களில் பலருக்கும், பகத்சிங் குறித்த புரிதல், “கைது செய்யப்படும் வரை வன்முறையைத் தத்துவமாகக் கொண்டவன்தான் பகத்சிங், சிறையில் படித்ததன் மூலமாகவே சோசலிசக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டான்” என்பதாகும். அது மட்டுமல்ல பகத்சிங் காலத்தில் சோவியத் யூனியனில் புரட்சி ஏற்பட்டு, முதல் சோசலிச நாடு மலர்ந்த சூழல் இருந்தது. நேரு தொடங்கி, தாகூர், பெரியார் போன்ற பலரும் ருஷ்யப் புரட்சி குறித்தும், சோசலிசம் குறித்தும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, சோசலிஸ்டுக்கள் உருவாகிக் கொண்டிருந்த காலம். எனவே பகத்சிங்கும் சோசலிசம் பேசியதில் ஆச்சரியமில்லை என்ற வாதத்தைக்கூட முன் வைக்கலாம். இந்த வாதம் அர்த்தமற்றது என்பதை பகத்சிங் – ன் எழுத்துக்கள் சொல்கிறது.

1929 ஜூன் 6 அன்று, நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கில் அளித்த வாக்குமூலம், புரட்சி இயக்கத்தின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை விளக்கும் ஆவணமாகக் கருதப்படுகிறது. “ அனைவருக்கும் தானியங்கள் விளைவித்துக் கொடுக்கும் விவசாயி தனது குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் நெசவாளி தன் உடலையும், தன் குழந்தைகளின் உடலையும் மறைப்பதற்குப் போதுமான ஆடைகள் இன்றித் தவிக்கிறான். நேர்த்தியான கட்டிடங்களை எழுப்பித் தரும் கட்டிடத் தொழிலாளிகளும், தச்சர்களும் இழிந்தோராய் சேரிகளில் வாழ்கின்றனர். ஆனால், சமுதாயத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகள் பணத்தைத் தங்கள் விருப்பம் போல் ஊதாரித்தனமாகச் செலவு செய்கின்றனர். இத்தகைய பயங்கரமான சமத்துவமின்மையும், வாய்ப்பு வசதிகளில் வலிந்து திணிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நிச்சயம் குழப்பத்துக்கே வழி வகுக்கும். இத்தகைய சமுதாய அமைப்பு முறை ஓர் எரிமலை வாயின் விளிம்பில் அமர்ந்திருக்கின்றது என்பது வெளிப்படை. எனவே, இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. அது சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட மாற்றமாக இருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை எனில், மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், மனித குலம் தற்போது அனுபவித்து வரும் துன்ப துயரங்களில் இருந்து விடுபட முடியாது. ஓர் சமூக அமைப்பை முதலாளித்துவத்தின் அடிமைத்தளையில் இருந்தும், ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்க வல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதிப்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகின்றோம்,” இவ்வளவு தெளிவான வாதத்தின் ஒவ்வொரு வரிகளும் ஒரு கம்யூனிஸ்ட்டைப்போல், சர்வதேசத் தரத்தோடு இருக்கிறது.

இச் சூழலில், பகத்சிங் குறிப்பிட்டதைப்போல், இந்திய விடுதலைக்காகப் போராடும் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவப் பிரதிநிதிகளால், சோசலிச அடிப்படையிலான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது உண்மை. ஆகவேதான், இந்திய ஆளும் வர்க்கம், பகத்சிங் – ஐ அன்றைக்குக் காப்பாற்றவில்லை. மாறாகக் குற்றம் சாட்டியது. பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் தீவிரவாதிகள் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகினர். ‘வன்முறையாளர்கள்’ என்பதை விட, ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான மிகச் சிறந்த முத்திரை என்பதை குற்றம் சாட்டியவர்கள் புரிந்து வைத்திருந்தனர்.

மகாத்மா காந்தி முதல் சாதாரண காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வரை பகத்சிங் மற்றும் அவரது தோழர்களை “தீவிரவாதச் செயல் புரிபவர்கள் என்றும், ‘சாகசம்’ செய்து அரசியல் நடத்த விரும்புபவர்கள்” என்றும் குறிப்பிட்டனர். பகத்சிங் ஒருபோதும் தனிநபர் சாகசத்தை விரும்பவும் இல்லை, அதன் மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை. பகத்சிங் தன்னைவிட இயக்கத்தை முன்னிறுத்துவதில் உறுதியாக இருந்ததை, விவாதங்களில் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நாளில், பகத்சிங் தானே முன்னின்று குண்டு வீசுவது என முன்மொழிகிறான். ஆனால் ழளுசுஹ – ன் மத்தியக்குழு பகத்சிங் வெளியில் இருந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சரி என்று சம்மதிக்கிறான். இரண்டாம்நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுகதேவ், “தவறான முடிவு, பகத்சிங் தான் மேற்படி செயலுக்குச் சரியான நபர். அவரால் தான் நாம் நினைத்த மாதிரி குண்டு வீசியதற்குப் பின், பிரச்சாரம் செய்ய முடியும்,” என வாதிட்டு முடிவை மாற்றி, மீண்டும் பகத்சிங் குண்டு வீசச் செல்வது என்ற முடிவை மேற்கொள்கின்றனர். அதற்கும் பகத்சிங் உடன்பட்டதை அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, தான் கொண்ட இலட்சியத்தை நிறைவேற்ற தனிநபர் சாகசம் உதவாது என்பதை, பகத்சிங்கே குறிப்பிட்டு இருக்கிறார்.

“புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனி நபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதியில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாயப், பொருளாதாரச் சூழ்நிலை மூலமாகவே வர முடியும். அத்தகைய சூழ்நிலை கொடுக்கும் எந்த வகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை,” என்று குறிப்பிடுகிறார்.

கட்சி ஸ்தாபனம் என்கிற தேவையை சிறைக்குச் சென்ற பின், ஆழமான படிப்பறிவின் மூலம் கற்றுக் கொண்டதுடன், இதை இளம் அரசியல் ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்து கிறார். “ ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களைச் செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள். லெனினது வார்த்தை களில் சொல்வதானால், புரட்சியைத் தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேரப் புரட்சியாளர்களே (Professional Revolution
arids) நமக்குத் தேவை,” என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். மேற்படி வார்த்தைகளிலிருந்து பகத்சிங், ஒரு கட்டமைக்கப்பட்ட கட்சியின் மூலம், ஊழியர்கள் பலத்தைப் பெருக்குவதன் மூலம், சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கையைக் கொண்டவன் என்பதை அறியலாம்.

காந்தி போன்ற தலைவர்களின் குற்றச்சாட்டைப் பகத்சிங் மறுத்து இருக்கிறார். “நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்கனவே புரிந்து கொண்டு விட்டேன். ழளுசுஹ – ன் வரலாற்றில் இருந்து இதனைத் தீர்மானிக்கலாம்,” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் “இந்திய முதலாளி வர்க்கம் எந்தவொரு போராட்டத்திலும், தனது சொத்துக்களுக்கோ, உடைமைகளுக்கோ ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடனேயே போராட்டத்தை வழி நடத்துகிறது. அதனால் தொழிலாளர்களின் ஆவேசமான போராட்டத்தைக் கண்டு நடுங்குகிறது. தொழிலாளர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத் துவது ஆபத்து விளைவிக்கும் என்று புலம்புவார்கள்,” என்று பகத்சிங் காந்தியை விமர்சிக்கிறார்.

காந்தியும் 1921 – ல் டைம்ஸ் பத்திரிக்கையில் இதைக் குறிப்பிட்டு தனது வர்க்கப்பாசத்தை வெளிப்படுத்தி இருப்பதைப் பார்க்க முடியும். “நாம் தொழிலாளர் களை விடுதலைப் போராட்டத்தினுள் திருப்பி விடக் கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்கு அழைத்து வருவது அபாயகரமானது” என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலையின் அடித்தளத்திலேயே முரண்படுகிற காந்தி, பகத்சிங் – ஐ எப்படி ஒரு அரசியல் ஊழியராக ஏற்றுக் கொள்வார். ஆகவே தான், காந்தி பகத்சிங் – ஐ தீவிரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார். வெடிகுண்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

“புரட்சி என்பது இரத்த வெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம் வெளிப்படையான, அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று தான் விரும்புகிறோம். வெடிகுண்டை நாங்கள் நடாளுமன்றத்தில் வீசிய போது யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம் என நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிடுகின்றார். இதனுடைய தொடர்ச்சியாக எழுந்த மக்கள் இயக்கத்தைக் கொண்டு பகத்சிங் – ன் வாதத்தை உணர முடியும்.

கொள்கைப் பிரகடனத்தில் புரட்சியைக் குறித்து அவர்கள் எழுதிய விதம் ஒரு கவிதையைப்போல் இருந்தது என்கின்றனர். “புரட்சி என்பது அன்பைக் குறிப்பிடுகிற ஒன்று. புரட்சி இல்லாமல் இயற்கையோ அல்லது மனித குலமோ வளர்ச்சி குறித்துச் சிந்திக்க முடியாது. புரட்சி என்பது உறுதியாக, சிந்தனையற்றதோ, மனிதர் களைக் கொல்லும் வன்முறைச் செயலோ அல்ல அல்லது சில துப்பாக்கிக் குண்டுகளாலும், வெடி குண்டுகளாலும் நடத்துகிற விஷயமும் அல்ல. புரட்சி என்பது வெறுப்பை உமிழும் தத்துவத் தின் வெளிப்பாடும் அல்ல. அல்லது மனித நாகரிகத்தின் அடையா ளங்களை அழித்தொழிக்கும் ஆயுதமும் அல்ல. மாறாக, நீதியையும், சமத்துவத்தையும் கூர்மைப்படுத்துகிற ஒன்று. புரட்சி ஒருவேளை கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். சத்தியமாக மனிதனுக்கு எதிரானது அல்ல. புரட்சி பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான முரண்பாட்டை அல்லது உயிர் உள்ள ஒன்றிற்கும், இறந்து போன தற்குமான வித்தியாசத்தை அல்லது இருட்டுக்கும், வெளிச்சத்துக்கு மான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும் அறிவாற்றல் கொண்டது. புரட்சி சட்டத்தைப் போன்றது, புரட்சி, கட்டளைகளைப் போன் றது. புரட்சி, உண்மையைப் போன்றது”, என்று ழளுசுஹ இன் கொள் கைப் பிரகடனம் சொல்கிற வாதம். அரசினைப் பற்றியும், அதிகாரத் தைப் பற்றியும் பேசுபவர்களை அசைத்துப் பார்க்காமல் வேறென்ன செய்யும்?
மனித குலத்தை நேசிப்பவர்கள் மட்டுமே புரட்சிகரப்பணியில் ஈடுபட முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக பகத்சிங் இருந்துள்ளார். “மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறோம். மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதி பத்திய இராணுவத்தின் கூலிப்படை விரர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள். எங்கள் நடவடிக்கையின் விளைவில் இருந்து எங்கள் நோக்கத்தை மதிப்பிட வேண்டுமேயொழிய, கற்பனையாக உருவாக்கிய சூழ்நிலைகளையும், அனுமானங் களையும் அதில் ஏற்றி வைக்க வேண்டாம்” என்று பேசியுள்ளார். இவையனைத்தும், விடுதலைக்குப் பின் இந்திய ஆட்சி குறித்த அக்கறையில் இருந்து உருவானது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பகத்சிங்கின் இத்தகைய அரசியல் பார்வையைத் தொடர்ந்தே, பல சங்கங்கள் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவாகின என்று சொன்னால் மிகையல்ல. தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாணவர் சங்கம் போன்றவற்றைப் பொதுவான பெயரில் உருவாக்குவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பங்கு, பகத்சிங் போன்றோருக்கும் இருந்தது. பகத்சிங் தனது சொந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டது ஒரு புறம். மற்ற இயக்கங்களின் அனுபவத்தைக் கற்றறிந்ததன் மூலமும் பாடம் கற்றுக் கொண்டார். உதாரணத்திற்கு 1914 – 15 காலங்களில் செயல்பட்ட கதார் கட்சியின் முயற்சிகள் தோல்வி அடைந்ததை அலசி ஆராய்ந்து பின்வரும் முடிவுக்கு வந்தார். “ கட்சித் தொண்டர்கள் எப்போதும், இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழி நடத்துபவர் களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜனப் பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் பணி துவக்கப்பட வேண்டும். கதார் கட்சியைப் போல் மக்கள் மீது அக்கறை இல்லாமலும், சில நேரங்களில் மக்களுக்கு எதிரானவர் களாகவும் செயல்படக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார். இவை, பகத்சிங் வெகுஜனங்களையும் உள்ளடக்கிய புரட்சிகரக்கட்சி குறித்து சிந்தித்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.

‘இந்திய வரலாறு’ என்ற புத்தகத்தில் இ.எம்.எஸ். குறிப்பிடுகிற போது, “தேசிய இயக்கத்தில் நிலப்பிரபுத்துவம் செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. அரை பிரபுத்துவ, முதலாளித்துவ செல்வாக்கை தகர்க்க வேண்டும் எனில், தேசிய இயக்கத்தில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பங்கேற்பை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார். “1931, 32 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கங்கள் பெரும் மக்கள் எழுச்சியுடனும், ஆவேசத்துடனும் நடந்தது. ஆனாலும், உடனே பிளவுகள் ஏற்பட்டு பின்னடைவைச் சந்தித்தது. இதற்குக் காரணம், தேசியத் தலைமைக்கு நிலப்பிரபுத்துவ அமைப்புடன் இருந்த உறவுகளே ஆகும். இந்தப் பலவீனத்தைப் போக்கும் திறனுள்ள சக்தி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் வளர்ந்து வருகிற புரட்சிகர வெகுஜன இயக்கம்தான்” என இ.எம்.எஸ். பின்னாளில் குறிப்பிட்டதைப் பார்க்க முடியும். பகத்சிங் – ன் கனவும் அது போன்ற தொழிலாளர்களை, விவசாயிகளை, இளைஞர்களை, மாணவர்களைத் திரட்டுவதாகத் தான் இருந்துள்ளது. எனவே, பகத்சிங் – ன் அரசியல் பார்வை முழுமையாகக் கம்யூனிசச் சிந்தனை கொண்டது. இதைக் காந்தியும், இதர தேசியத் தலைவர்களும் அன்றைக்குப் புரிந்து கொண்டனர். அது இன்றைக்கும் நீடிக்கிறது. அதன் வெளிப்பாடு தான் பகத்சிங் நூற்றாண்டினை சப்தம் இல்லாத சம்பிரதாய விழாவாக அரசு கொண்டாடி உள்ளது.

இத்தகைய தீர்க்கத் தரிசனப்பார்வை கொண்டவன், ஏன் வாழாமல் சாகவேண்டும்? இது அவசரப்பட்டு எடுத்த முடிவில் லையா? என்று சிலர் வாதிடுகின்றனர். பகத்சிங் – ன் உயிர்த்தியாகம் அவசரத்தில் பிறந்தது என முடிவுக்கு வருகின்றனர். அவசரத்தில் முடிவெடுத்து இருந்தால், சாவை அந்த இளைஞர்கள் தைரியமாக எதிர் கொண்டிருக்கமாட்டார்கள். எதுமக்களை எழுச்சியுறச் செய்யும் என்பதை நிதானமாக அலசிய பிறகே,ஏகாதிபத்தியத்திடம் வாதாடி உயிர்பிச்சை பெறுவதை விட தங்களது மரணமே மக்களை உலுக்கும் என்ற முடிவிற்கு வந்தனர். பகத்சிங்கும், இதர தோழர்களும் மரணத்தை தழுவுகிறபோது, அவர்களின் வயது 23, 25 என்கிற இளமைத் துடிப்பு மிக்க பருவம். உணர்ச்சி வசப்பட்டு வீரத்தை வெளிப்படுத் துவதற்காக முடிவெடுக்கவில்லை என்பதற்கு அவர்கள் படித்த புத்தகங்கள், சந்தித்த நபர்கள், சந்தித்த இயக்கங்கள், முன்வைத்த கொள்கைகள் போன்றவை

உதாரணங்கள்..
கல்லூரியில் படிக்காத ஒரு போராளிக்கு, அறிவு எட்டாக் கனி அல்ல, என்பதை நிரூபித்தவன் பகத்சிங். பிபன் சந்திரா என்ற வரலாற்றாசிரியர், பகத்சிங் இளம் வயதிலேயே சிந்தனை மற்றும் அறிவு ஜீவி என்ற குணத்தில் வல்லவனாக இருந்தான் என்கிறார். பகத்சிங்கின் நண்பர்களில் ஒருவரான சாமன் லால், “பகத்சிங்கிற்கு நான்கு மொழிகளைக் கையாளும் திறன் இருந்தது. பஞ்சாபி, ஹிந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் எழுதவும், படிக்கவும் பகத்சிங்கினால் முடிந்தது. இதற்காக முறையான கல்வியையும், பயிற்சியையும் பெறவில்லை” என்று குறிப்பிடுகிறார். இன்னும் ஒரு உயிர்த்தோழன் சிவவர்மா 1991-ம் ஆண்டு மும்பையில் கொடுத்தப் பேட்டியில் பகத்சிங் பற்றி குறிப்பிட்டுள்ளார். எது பகத்சிங்கை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டின என்ற கேள்விக்கு, சிவவர்மா, நான் ஒரே வரியில் சொல்ல முடியும். பகத்சிங், கேள்விக்கு இடமில்லாத தத்துவார்த்தத் தலைவன், ஒரு மணித்துளி அளவு நேரம் கூட பகத்சிங்கின் பாக்கட்டில் புத்தகம் ஒன்று இல்லாது இருந்ததாக, எனக்கு நினைவில்லை, என்று குறிப்பிடுகிறார். இது உண்மை என்பதை marxist archive என்கின்ற இணைய தளத்திற்கு சென்றால் பார்க்க முடியும்.

இந்தியத் திருநாட்டில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ள இடதுசாரி தத்துவ வாதிகள் இரண்டு பேர். ஒருவர் பகத்சிங், மற்றொருவர் இ.எம்.எஸ். அதே போல், சிறைச்சாலைக்குள் படித்து பதிவு செய்த குறிப்புகள் மற்றுமொரு உதாரணம். 108 நூலாசிரியர்களின் குறிப்பு களையும், 43 புத்தகங்களின் குறிப்புகளையும், பகத்சிங் சிறை வாழ்க்கைக் காலத்தில் பதிவு செய்திருக்கிறான். சிறை வாழ்க்கையில், நான் ஏன் நாத்திகனானேன் மற்றும் கனவு உலகத்திற்கான அறிமுகம் ஆகிய சிறு நூல்களைப் பகத்சிங் எழுதியது அவை இன்றைக்கும் கிடைக்கின்றன. இந்த இரண்டும் சுகதேவ், பட்டுகேஸ்வர் தத் மூலம் வெளியே கடத்தி அனுப்பியது என்று குறிப்பிடுகின்றார். இவையன்றி, சோசலிசத்தின் தத்துவம், சுயசரிதை, இந்தியாவின் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு மற்றும் சாவின் வாசலில் ஆகிய 4 புத்தகங்களை பகத்சிங் எழுதியதாகவும், அவற்றைப் போலிசார் அழித்துவிட்டதாகவும், சுகதேவ், தத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய எழுத்துக்களைப் பகத்சிங் அமைதியான சூழலில் எழுதவில்லை. சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம், சகதோழர்களான ஜதின் தாஸ், மகாவீர் சிங் ஆகியோரின் மரணம், கோர்ட் வாதங்கள் இன்னபிற போராட்டங் கள் என்ற நெருக்கடியான நிலையிலேயே எழுத முடிந்தது.
பிபன் சந்திரா தனது ஆய்வுக் கட்டுரையில், வகுப்பு வாதத்தின் அபாயத்தை மகாத்மா காந்தி, எப்படி புரிந்து கொண்டுச் செயல்பட்டாரோ, அதே அளவுக்கு அந்தக் காலத்தில், வகுப்பு வாதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் பகத்சிங் என்று குறிப்பிடுகிறார். தனது தோழர்களுடனும், நண்பர்களுடனும் உரையாடுகிற போது, காலனி ஆதிக்கம் எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதில் சற்றும் குறையாதது வகுப்புவாதம் என பகத்சிங் குறிப்பிட்டதை, அடிக்கோடிடுகிறார். பகத்சிங்கின் எழுத்துக்களும் அதற்குச் சான்று. 1928 மே மற்றும் ஜூன் மாதங்களில், வெளிவந்த கீர்த்தி மாத இதழில் பகத்சிங் மூன்று கட்டுரைகளை எழுதி இருக்கிறார். மதம் மற்றும் நமது சுதந்திரப் போராட்டம், மதக் கலவரங்களும் தீர்வும், தீண்டாமைப் பிரச்சனைகள், ஆகியவை மிகச்சிறந்த எழுத்துக்களாகும். இதைக் குறிப்பிடுகிற அசோக் தாவுலே இத்தகைய அரிய எழுத்துக்கள் அழிக்கப்பட்டது பகத்சிங் பற்றிய புரிதலுக்கு மட்டுல்ல, அன்றைய இளைஞர் இயக்கங்களைப் பற்றிய புரிதலுக்கே பேரிழப்பாகும் என்கிறார். எனவே இறந்தபின்னும் வாழும் பகத்சிங்கின் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்பிக்கும் கடமையை மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறு யாரும் செய்யப்போவதில்லை.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்