தோழர் பி.எஸ்.ஆர் : நீடு துயில் போக்க வந்த நிலா!

334
0
SHARE

நாகை மாலி

1936 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் இடதுசாரிகளின் வற்புறுத்தலால் கிராமப்புற பாட்டாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பாகத்திரட்ட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க கீழத்தஞ்சைக்கு வந்தவர்தான் தோழர் சீனிவாசராவ். கர்நாடக மண்ணிலிருந்து காவிரி மட்டும் தஞ்சை தரணிக்கு வரவில்லை, சீனிவாசராவும் வந்தார்.

கீழத்தஞ்சை மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது மார்க்ஸ், லெனின் கருத்துக்களை ஆழமாய் உள்வாங்கி இருந்தார். “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” எனும் நூலில், இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை மார்க்ஸ் ஆராய்ந்து விளக்கியுள்ளார். சீனிவாசராவ் மார்க்சின் இந்த கருத்தை உள்வாங்கிக்கொண்டே கீழத்தஞ்சையில் செயல்பட்டார். அடித்தள மக்களை அணி திரட்டி கீழத்தஞ்சையில் செங்கொடி இயக்கத்தை வளர்த்தெடுத்தார். வர்க்க சுரண்டலை எதிர்த்த போராட்டத்தையும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை திறம்பட ஒன்றிணைத்த்தோடு அதை மக்கள் இயக்கமாக மாற்றியதால்தான் சீனிவாசராவ், தனித்துவமிக்க கம்யூனிஸ்ட்டாக போற்றப்படுகிறார். 

சாட்டையடி, சாணிப்பால் கொடுமைகளால் வதைப்பட்ட கீழத்தஞ்சை தாழ்த்தப்பட்ட மக்களை, பல நூறு ஆண்டுகளாய் நிகழ்ந்த சாதிய கொடுமைகளுக்கு எதிரான பெரும் போர்ப்படையாய் மாற்றினார். 

பண்ணையார் கொடுக்கும் சவுக்கடிகளால் உடம்பு தீயாக எரியும். நிலப்பிரபு சாட்டையால் அடிக்கும் போது வலி பொறுக்க முழயாமல் “அய்யோ” என்று அழக்கூடாது. அப்போதும் பண்ணையடிமை “அய்யா” என்றுதான் அழ வேண்டும். உரத்த குரலில்கூட அழுவதற்கு உரிமையற்றிருந்தனர். உழவு மாடுகளைப்போலவே அந்த பண்ணை அடிமைகளும் உழவு மாடுகளாய் வாழ நேர்ந்தது.

இப்படியான தங்கள் அடிமை வாழ்விற்கு விடிவு கிடையாதா? என ஏங்கித் தவித்த பண்ணையடிமைகளுக்கு நம்பிக்கை ஒளியாய், விடிவெள்ளியாய், நீடு துயில் போக்க வந்த நிலவாய் கீழத்தஞ்சைக்கு சீனிவாசராவ் வந்தார். 

அரைக்கால் சட்டை, அரைக்கை மேல் சட்டை, கருப்புக் கண்ணாடி, தோளில் “ஜோல்னா” பை, சிவந்த மேனி, எதையோ சாதிக்க நினைக்கும் விழிகள் இவையே சீனிவாசராவின் தோற்றம். அச்சம் என்றால் என்னவென்று தெரியாதவர். செங்கொடி தாங்கி வீர முழக்கமிட்டு தஞ்சை பண்ணையடிமைகளை மீட்டெடுக்க வந்தார். சேரிகளுக்கு சென்றார். “நீங்களும் மனிதர்கள்தான் நிலபிரபுக்களும் மனிதர்கள்தான், உங்களுக்கும் இரண்டு கைகள், அவனுக்கும் இரண்டு கைகள், சாட்டையால் அடித்தால் திருப்பி அடி, என்னவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், சங்கம் உங்களை பாதுகாக்கும்.” “அடித்தால் திருப்பி அடி” என்று ஒலித்த முதல் போர்க்குரல் சீனிவாசராவின் குரலே. 

சீனிவாசராவின் அனல் கக்கும் உரைகள் பண்ணை அடிமைகளை கிளர்ந்து எழச்செய்தது, ஆவேசம் ஊட்டியது. இடைவிடாது கிராமங்கள்தோறும் சென்றார். பண்ணையடிமைகளின் குடிசைகளில் தங்கினார். அவர்கள் தந்த கிழிந்த பாய்களிலும், சாக்குகளிலும் படுத்து உறங்கினார். அவர்கள் கொடுத்த கஞ்சியை சுவைத்து குடித்தார். இவர்தான் நமக்கானவர் என்ற நம்பிக்கையை லட்சக்கணக்கான பண்ணையடிமைகளின் நெஞ்சிலேற்றினார். பி.எஸ்.ஆர். என்ற மூன்றெழுத்து பண்ணையடிமைகளுக்கு போராடும் துணிவைத்தந்தது.

சவுக்கடியை நிறுத்து! சாணிப்பால் கொடுக்காதே ! கூலியை குறைக்காதே ! அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற முழக்கம் ஒவ்வொரு கிராமத்திலும் ஓங்கி ஒலித்தது. இதுவரை நிலபிரபுக்களின் கையிலிருந்த சாட்டைகளையும், சவுக்குகளையும் பண்ணையடிமைகள் தட்டிப் பறித்தனர். “அடித்தால் திரும்பி அடி” என்ற சீனிவாசராவின் அனல்பறந்த வீர முழக்கத்தைக்கேட்டு பரவசமடைந்துதான் பி.எஸ்.தனுஷ்கோடி தமிழகம் போற்றும் தலைவராக தஞ்சையில் தோன்றினார். 

மேலை நாடுகளில் இருந்தது போன்ற அடிமை முறை கீழத்தஞ்சையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இங்கு நிலவிய பண்ணையடிமை முறையும், நிலபிரபுக்களின் ஒடுக்குமுறை வடிவங்களும் மேலை நாட்டில் நிலவிய அடிமைத்தன ஒடுக்குமுறைக்குச் சற்றும் குறைந்ததல்ல. அந்த அடிமைத்தனத்தை சுக்கு நூறாய் அறுத்தெறிந்த சீனிவாசராவை அதனால்தான் கீழத்தஞ்சை மக்கள் நெஞ்சில் நிறுத்தி போற்றி கொண்டாடுகிறார்கள். 

தியாக வாழ்க்கைக்கு சொந்தக்காரர் சீனிவாசராவ். அந்த ஒப்பற்ற கம்யூனிஸ்டின் தியாகத்தின் விளைச்சலே இன்று நாம் காணும் கீழத்தஞ்சை. தான் வாழ்ந்து போராடிய காலத்திலேயே பண்ணையடிமை முறையை ஒழித்துக்கட்டியவர். ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் அவரை வேட்டையாட எவ்வளவோ முயன்றும் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  

ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக இறுதி மூச்சு வரை பாடுபட்டார். ரோமாபுரி அடிமைகளை விடுவிக்க போராடிய அடிமை வீரன் ஸ்பார்ட்டகஸை போல், தஞ்சை பண்ணையடிமைகளை நிலபிரபுக்களிடமிருந்து மீட்டெடுக்க சீனிவாசராவ் போராடினர். 

இந்திய வர்க்கப்போரின் வரலாற்றில் தஞ்சை மண்ணில் இவர் நிகழ்த்திய சாதனை பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை. பி.எஸ்.ஆர். கூலிக்காக மட்டும் போராடவில்லை. அடித்தட்டு மக்களின் சுயமரியாதைக்காகவும் உரிமைகளுக்காவும் போராடினார். 

“பி.எஸ்.ஆர். துணிச்சல் மிக்கவர் – மேலும் துணிச்சல் மிக்கவர் – மென்மேலும் துணிச்சல் மிக்கவர்” என்றார் ஜீவா. 

கீழத்தஞ்சை மண் இன்னும் செங்கொடி இயக்கத்தின்  மாபெரும்  மக்கள் தளமாக உள்ளதென்றால், அதற்கு பி.எஸ்.ஆர். போட்ட அடித்தளமே காரணம். தமிழகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது இங்கு தீண்டாமைக்கொடுமையின் தீவிரம்குறைந்து  காணப்படுகிறதென்றால் அதற்கும் சமூக, பொருளாதார தளங்களில் தோழர் பி.எஸ்.ஆர்
முன்னெடுத்த மக்கள் போராட்டங்களே காரணமாகும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்