நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

9504
1
SHARE

குரல்: தேவி பிரியா

ஆடியோ எடிட்: மதன்ராஜ்

என். குணசேகரன்

இந்திய நாடு இன்று எதிர்நோக்கும் சவால்கள் பன்முகத் தன்மை கொண்டவை. அரசியல்,சமூகம்,பொருளாதாரம் என பல தளங்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்திலும் தவறான கொள்கைகளை மேற்கொண்டு, வெகு மக்கள் நலன் பறிபோகின்ற தவறான பாதையில் நாட்டை ஆளுகிற சக்திகள் வழிநடத்தி வருகின்றனர்.

இவற்றை ஆராய்ந்து முற்றிலும் புதியதோர் பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு வழி வகுத்துள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் நலன் சார்ந்த இடதுசாரி பாதையே இந்தியப் பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பதனை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாநாட்டிலிருந்து…

கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை அடிப்படையில் இந்தக் கட்சி காங்கிரசில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் ஸ்தாபன அறிக்கை எனப்படும் ஆவணமும் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.

இந்த அறிக்கையில் கடந்த 21வது கட்சிக் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் அமலான விதம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுக் காலத்தில் நவீன தாராளமயம், வகுப்புவாதம், சமூக ஒடுக்குமுறை ஆகிய தீமைகளை எதிர்த்து கட்சி தீரமிகு போராட்டங்களை நடத்தியுள்ளது.

பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தனியாகவும் கூட்டாகவும் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் போராடி வந்துள்ளன.

நவீன தாராளமயக் கொள்கைகளினால் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்குவது, பொது விநியோக முறையை சீர்குலைப்பது், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாய நெருக்கடி போன்ற பல பிரச்னைகளால் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அவற்றுக்கான இயக்கங்களை நாடு தழுவிய அளவிலும், மாநில அளவிலும் கட்சி மேற்கொண்டது.

பணமதிப்பு நீக்கம், ஜி. எஸ். டி. போன்ற பிரச்னைகள் முன்வந்தபோதும் கட்சி வலுவாக எதிர்ப்பியக்கத்தைக் கட்டியது.

இந்தப் பணிகள் அனைத்தையும் பரிசீலித்த கட்சிக் காங்கிரஸ் கீழ்க்கண்ட குறைபாட்டை முன் வைத்துள்ளது.

” ..இந்த எதிர்ப்பு இயக்கங்களின் பங்கேற்பு, பெருமளவில், நமது கட்சித் தோழர்கள், கட்சி ஆதரவாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளாகவே இருந்துள்ளது. ”

மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்த வேண்டுமென்பது முக்கிய படிப்பினை.

அறிக்கையில், “மாநிலங்களில் பொதுக் கோரிக்கையோடு இணைந்து, உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்திய இயக்கங்களில் விரிவான பங்கேற்பு இருந்துள்ளது.” என்று உள்ளூர் முன் முயற்சிகளின் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வகுப்புவாத எதிர்ப்பின் பல தளங்கள்

திரிபுரா தேர்தல் பற்றிய பரிசீலனையில், பாஜகவின் வகுப்புவாதத்தை முறியடிக்கும் நமது நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது அரசியல் பிரச்சாரம் என்ற மட்டத்தில் நடத்தினால் போதுமானதல்ல. சமூக, கலாச்சார, கல்வி தளங்களிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உழைக்கும் வர்க்கங்கள் வாழுமிடங்களில், சமூக, கலாச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களிடம் மதச்சார்பற்ற, அறிவியல் உணர்வுகளை ஆழமாக பதிய வைத்திட சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.

சாதிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகள், நடைமுறைகள், மூடத்தனமான கருத்துக்கள் போன்றவற்றுக்கு எதிரான பிரச்சாரம் அவசியம். இதற்கு வெகுமக்களை எட்டுகிற அறிவியல் இயக்கம் பலப்படுத்திட வேண்டும்

பிளீனத்தின் ஐந்து முடிவுகள்

கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு ஸ்தாபன மாநாடு (பிளீனம்) தற்போதுள்ள நிலையில் வேகமான ஸ்தாபன வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், ஐந்து முக்கிய அம்சங்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென முடிவெடுத்தது. பிளீனத்திற்குப் பிறகு அவற்றை அமலாக்கிட கட்சி எடுத்த முயற்சிகளும், நீடிக்கும் குறைகளும் கட்சிக் காங்கிரசின் ஸ்தாபன அறிக்கையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

1.கட்சி செல்வாக்கு உயர்வு – இடது ஜனநாயக அணி கட்டுதல்

இன்று முதலாளித்துவ அரசின் கொள்கைகள் அனைத்து வர்க்க மக்களையும் தாக்கி வருகின்றன. இதனையொட்டி பல போராட்டங்களை கட்சியும் வெகுஜன அமைப்புக்களும் கடந்த மூன்றாண்டுகளில் நடத்தியுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும்,மஹாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகள் நெடும் பயணமும் கட்சி, மற்றும் விவசாய சங்கங்களின் முன்முயற்சியால் நடத்தப்பட்டு வெற்றியை ஈட்டிய போராட்டங்கள்.

தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் பல்வேறு பிரிவு சார்ந்த போராட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் பரவலான பங்கேற்புடன் நடைபெற்றுள்ளன.

அரசின் வகுப்புவாத நடவடிக்கைளை எதிர்த்த போராட்டங்களும் தீவிரமாக நடந்துள்ளன. குறிப்பாக மாணவர்கள் அரசின் கல்வி உரிமை பறிப்பு, காவிமயம் போன்ற பிரச்னைகளுக்காக எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் கட்சியும் வெகுஜன ஸ்தாபனங்களும் அயராது பணியாற்றியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது.

தனியாகவும்,கூட்டாகவும் இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் அனைத்து வர்க்கப் பிரிவு சார்ந்த மக்களும் தன்னெழுச்சியாகவும் போராடியுள்ளனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகள் போராட்ட ஆண்டுகளாக அமைந்தன.

ஆனால் இந்த போராட்ட எழுச்சிகள் கட்சியின் செல்வாக்கினை உயர்த்தவும், அமைப்பு விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கிறதா?அவ்வாறு பயன்படும் வகையில் கட்சி தரப்பில் திட்டமிட்ட முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட்டதா? இக்கேள்விகள் முக்கியமானவை.

நாடு தழுவிய அனுபவத்தை பரிசீலிக்கிறபோது இந்த கடமையை நிறைவேற்றுவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இயக்கங்களால் கிடைத்த தொடர்புகள், கட்சிக்கு கிடைத்த அறிமுகம், மரியாதை ஆகியவற்றை கட்சியின் அமைப்பு விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.

கட்சியின் செல்வாக்கும் அமைப்பு விரிவாக்கமும்தான் இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கு உறுதுணையாக அமைந்திடும்.

இடது ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த வர்க்கக் கூட்டணியை அமைப்பதற்கான பாதையை அமைத்திடும்.

தேசிய அளவில் இடதுசாரி வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களின் மேடை அமைக்கப்பட்டுள்ளது. பல சமூக இயக்கங்களும் இந்த மேடையின் அங்கமாக உள்ளன. இந்த மேடை சார்பில் சில இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. இது வர்க்கங்களைத் திரட்டுவதற்க்கு வாய்ப்புள்ள மேடை. ஆனால், இது அனைத்திந்திய மட்டத்தில் இயங்கினால் மட்டும் போதாது. கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்.

பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 6 இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்ட இயக்கங்கள் சிலவற்றை நடத்தியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.

2. மக்களோடு உயிரோட்டமான தொடர்பு-வெகுமக்கள் பாதை :

உண்மையில் வெகுமக்கள் பாதை எனப்படுவது மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது, கற்றுக் கொண்ட படிப்பினைகள் அனுபவங்கள் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது என்பதுதான். இதற்கு மக்களோடு வலுவான பிணைப்பும் நெருக்கமும் தேவை.
கடந்த மூன்று ஆண்டுகளில் போராட்டங்களையொட்டி,மேலிருந்து கிளை மட்டம் வரை,மக்களோடு நெருக்கம் காண முயற்சிக்கப்பட்டுள்ளது.எனினும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அனைத்து மட்டங்களிலும் மக்களோடு உயிரோட்டமான நெருக்கம் காண இடையறாது முயற்சித்திட வேண்டுமென அறிக்கை வலியுறுத்துகிறது.

3. ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்துவது-தரம் உயர்த்துவது:

புரட்சிகர கட்சியை கட்டும் வகையில் ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். இதற்கு கட்சியின் அரசியல் தத்துவார்த்த தரத்தை அனைத்து மட்டங்களிலும் உயர்த்திட வேண்டும்.

அகில இந்திய கட்சி மையத்தின் செயல்பாடு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவது,வர்க்க வெகுஜன அமைப்புக்களின் அகில இந்திய உபகுழுக்கள் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது, அகில இந்திய கட்சி மையத்தின் ஒற்றுமை ஆகியவற்றில் கடந்த ஆண்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

வாலிபர் விவசாய,விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வழிகாட்டும் ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவை மாநில கட்சி மட்டங்களில் விவாதிக்கப்பட்டு,செயல் திட்டங்கள் உருவாக்கி செயலாற்றிட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அரசியல் தத்துவார்த்த புரிதலை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாலிபர்கள், பெண்கள், தலித், ஆதிவாசியினர் மத்தியில் பணியாற்றி, அவர்களை கட்சி உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் உருவாக்க வேண்டும்.பெண்கள் கட்சியில் கொண்டு வருவதற்கு இலக்கு வைத்து முயற்சிக்க வேண்டும்.31-வயதுக்குட்ப்பட்ட வாலிபர்களை கட்சிக்குள் கொண்டு வரவும் திட்டமிட்ட முயற்சிகள் தேவைப்படுகின்றன.

கட்சி உறுப்பினரைப் புதுப்பிக்க 5 நிபந்தனைகளை அவர் கடைப்பிடித்திருக்க வேண்டுமென்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சிக் கல்வி

கட்சியின் தரத்தை உயர்த்திட கடந்த மூன்று ஆண்டுகளில் கட்சி கல்வி உபகுழு பல முயற்சிகளை மேற்கொண்டது.
1. கட்சி உறுப்பினர் அனைவருக்கும் கட்சி திட்டம்,கட்சி ஸ்தாபனம்,மார்க்சிய தத்துவம்,மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிய 4 தலைப்புக்களில் கல்வி அளிக்க வேண்டும்.
2. தத்துவார்த்த விஷயங்களை விவாதித்து உட்கிரகிக்கும் வகையில் வாசிப்பு வட்டங்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.
3. அனைத்து மட்டங்களில் பணியாற்றும் தோழர்களுக்கு ஏற்ப,கட்சி பாடத்திட்டம்,படக்குறிப்புக்கள் உருவாக்கி கல்விப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மூன்று ஆண்டுக் காலத்தில் மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், கட்சியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்பது பிளீனத்தின் வழிகாட்டுதல்.இதற்கு அயராத கட்சிக்கல்வி பணிகள் அவசியமானது.

4. இளைய தலைமுறையை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகள்;

எதிர் வரும் இரண்டு ஆண்டுகளில் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 20 சதமானோர் வாலிபர்கள் என்ற நிலையை எட்ட முயற்சிக்குமாறு மாநிலக்குழுக்களை கட்சி காங்கிரஸ் அறிக்கை வலியுறுத்துகிறது.

இதற்காக, கட்சியின் அனைத்து மட்டங்களும் வாலிபர், மாணவர் அமைப்புக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

5. சித்தாந்தப் போராட்டம்

சுயநலத் தன்மை கொண்ட நவீன தாராளமய கண்ணோட்டங்கள், சமூக ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்கான கருத்துக்கள், வகுப்புவாதக் கருத்து நிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துத் தளத்தில் வலுவான போராட்டத்தை நடத்த ப்ளீனம் வழிகாட்டியது. இதில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும் மேலும் அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

இதற்கு, கட்சி நடத்தும் அரசியல் தத்துவார்த்த பத்திரிக்கைகளின் தரம், கிளர்ச்சிப் பிரச்சாரக் குழுவின் செயல்பாடு, சமூக ஊடகங்களின் முயற்சிகள் மேம்பட வேண்டும்.

கலாச்சாரத் துறையில் செயல்பட ஒரு வழிகாட்டு ஆவணம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதனையொட்டி செயல்பாடுகளை கலாச்சாரத் தளத்தில் அதிகரிக்க வேண்டும்.

தற்போது மார்க்ஸ்-200 பிறந்த ஆண்டை முன்னிட்டு தத்துவார்த்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இது பல வடிவங்களிலும் தொடர வேண்டும்.

பன்முக தளங்களில் செயல்பாடு;
தற்போது மாற்றுத் திறனாளிகளைத் திரட்டும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள மேடையின் செயல்பாடுகள் ஊக்குவிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோரை திரட்டும் முயற்சிகள் நடந்துள்ளன. இதனை முன்னெடுத்துச் செல்ல கட்சி வழிகாட்டுதல்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. இதன் அடிப்படையில் தலையீடுகள் அதிகரிக்க வேண்டும்.

தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தனியாரை கண்மூடித் தனமாக அனுமதிக்கிற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அறிவியலற்ற பிரச்சாரங்களை எதிர்கொண்டு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கள் அறிவியல் இயக்கம் செயலாற்றி வந்துள்ளது. கீழ்மட்ட அளவில் இப்பணிகள் விரிவாக்கப்பட வேண்டும்.

நகர்ப்புற மக்களைத் திரட்டவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. கட்சி மாநிலக் குழுக்கள் நகர்மய கொள்கைகள், நகர்ப்புற உள்ளூர் கோரிக்கைகளை எடுப்பதிலும், குடிசை வாழ் மக்கள், குடியிருப்போர் கூட்டமைப்பு அமைப்பது போன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

சமூக ஒடுக்குமுறை, தலித் மக்கள் பிரச்னைகளை முன்னெடுக்க சில முயற்சிகள் கூட்டாகவும் தனியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்துத்துவ தாக்குதல் சூழலில் அதனை எதிர்கொள்ள தலித், ஆதிவாசி ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள் குழந்தைகள் மத்தியில் தீவிரமாக இந்தக் காலத்தில் பணியாற்றி வருகின்றனர்.இதன் ஆபத்தை உணர வேண்டும். பாலர் சங்கம் அமைத்து செயல்படுத்திடும் முயற்சிகளை வேகப்படுத்துவது அவசியம்.

அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.

வெகுமக்கள் பாதையில் பயணிக்கிற புரட்சிகர கட்சியைக் கட்டுவது என்பதுதான் தற்போது கட்சி அடைய வேண்டிய குறிக்கோள். அரசியல் ஸ்தாபன அறிக்கையின் வழிகாட்டுதல்களை தீவிரமாக முன்னெடுப்பது, அத்தகு கட்சியை கட்டவும், நாடு தழுவிய பலம் வாய்ந்த கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை உயர்த்திடவும் உதவிடும்.

ஒரு கருத்து

Please start yout discussion here ...