மக்கள் ஒற்றுமைக்கு உதவும் வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்

104
0
SHARE
[எர்ணாகுளம் மகாராஜா அரசு கலைக்கல்லூரி மாணவர் தலைவருக்கு பி. சம்பத் அளித்த பேட்டி]

முதலாளித்துவ அமைப்புக்கு முந்தைய கட்டமைப்பில்தான் தீண்டாமை  உருவாயிற்று;  சாதிகள்  உருவாயிறறு என்கிறோமே. இன்றைக்கும் அது நீடித்திருப்பதற்கு என்ன காரணம்?

தீண்டாமை என்பது சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதி. இவையெல்லாம் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புக்கு முன்பே உருவாயிற்று.இன்னும் சரியாகச் சொன்னால், சாதி அமைப்பு பண்ணை  அடிமைச்  சமூகத்தில்  உருவாகி,  நிலப்பிரபுத்துவ  சமுதாயத்தில்  கெட்டிப்படுத்தப்பட்டது. உலகில்  மற்ற  நாடுகளில்  முதலாளித்துவத்திற்கு  முந்தைய  காலத்து  நிலப்பிரபுத்துவ  சமூக  அமைப்பை,  உறவுகளை, உடைத்து நொறுக்கி, அதன் அஸ்திவாரத்தின் மீதுதான் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கப்பட்டது.  ஆனால்  இந்தியாவில்  ஒரு பிரத்யேகமான  சூழல்  உள்ளது.  இங்கே  விடுதலைப் போராட்ட  காலத்திலேயே   செல்வாக்கு  பெற்றவர்களாக  பெருமுதலாளிகள்   இருந்தார்கள்.  இவர்கள்  இயல்பாகவே, நாடு விடுதலையடைந்ததும்  ஆளும்  வர்க்கங்களின்  தலைமையாக மாறினர்.  முதலாளித்துவத்திற்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ  அமைப்பை  உடைத்து  நொறுக்காமல்  அவர்களோடு  பெருமுதலாளிகள்  சமரசம்  செய்து  கொண்டனர். ஏன் அப்படி  செய்தார்கள் என்றால், அதை உடைத்து நொறுக்குவதால் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்படும்.  நிலப்பிரபத்துவ  அமைப்பிலிருந்து  நிலத்தை  எடுத்து  அதை  ஏழை  மக்களுக்குப்  பிரித்துக்  கொடுப்பதன்  மூலம் உண்மையிலேயே ஒரு ஜனநாயக எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சி குறித்து பெருமுதலாளிகள் அச்சம் கொண்டனர். எனவே அவர்கள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கவில்லை. பெருமுதலாளிகள், பெரிய  நிலப்பிரபுக்கள் இருப்பது நல்லது என்று எண்ணினார்கள். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கெட்டிப் படுத்தப்பட்ட  சாதிய  அமைப்பை  முதலாளித்துவ  சமூகம்   ஏற்றுக்  கொண்டது.  மேலும்  முதலாளித்துவ  சமூகத்திற்கு  இந்த  சாதிய  அமைப்பு  ஒரு  வரப்பிரசாதம்  என  எண்ணினார்கள். தங்களுக்கெதிராக உழைப்பாளி மக்கள் ஒன்று திரண்டால் ஆபத்து என எண்ணினார்கள். அப்படி ஒன்றுபடாமல் இருப்பதற்கு இந்த சாதிய அமைப்பு பயன்படும் என்று கருதினர். எனவே  முதலாளித்துவ  அமைப்பில் இந்த சாதிய அமைப்பு வலுவாக இருந்து வருகிறது.

வர்க்கஅரசியல் பேசும் கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது சரியான போக்கா? அல்லது வர்க்க அரசியலைத்தாண்டி கூடுதலாக இதைப் பார்க்கிறோமா? அதன் ஒரு பகுதியாகப்  பார்க்கிறோமா?


சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே வர்க்கப்போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிதான். உலகின் எந்த நாடுகளிலும் சாதி கிடையாது.  இந்தியாவில்தான் இருக்கிறது. இதைப் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் ஏராளமாக  உள்ளன.  குறிப்பாக, டி டி கோசாம்பி  அதில்  மிகப் பெரிய  பங்களிப்பு  செய்திருக்கிறார்.  மற்ற நாடுகளில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான்அடிமைச் சமுதாயம்  உருவானபோது இந்தியாவில் அது வர்ண சமுதாயமாக உருவெடுத்தது. நான்கு வர்ணங்கள் – பார்ப்பனர்,  சத்திரியர், வைசியர், சூத்திரர். இதில் முதல் மூன்று வர்ணங்களும் ஆளும்வர்க்கம். சூத்திரர்கள்  சுரண்டப்படம் வர்க்கம் என்றார் இ.எம்.எஸ். பின்னாளில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் எல்லாம் வளர்ச்சி  அடைந்து, ஏராளமான வேலைப்பிரிவினை ஏற்பட்ட போது  வர்ணத்துக்குள் வர்ணம், உபவர்ணம் என  ஏராளமாக  உருவாகி ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பரிணமித்திருக்கிறது. இது சுரண்டும் வர்க்கத்திற்கு பெரும் உதவிகரமாக, உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி  அவர்களுக்கு ஆதாயம் தரக் கூடிய சாதி  அமைப்பாக இருக்கிறது என்பதால்  அவர்கள் இதைப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இந்த பிரத்யேகத்  தன்மையை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்திருக்கிறோம்.  இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றால் உழைக்கும் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்த  வேண்டும்.  ஒற்றுமைப்படுத்த  வேண்டுமென்றால் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திட வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழ்நாட்டில் தீண்டாமைஒழிப்பு முன்னணி என்பது பிரத்யேகமான அமைப்பாக உள்ளது.  கம்யூனிஸ்டுகள்தான் இதை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வாறு ஏற்படுத்தியபோது, உழைக்கும்  மக்களின்  ஒற்றுமையைக் கட்டமைப்பதில் அது ஏதாவது ஒரு சாதகமான பலனை ஏற்படுத்தி உள்ளதா?


நிச்சயமாக. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமைக்  கொடுமை இவற்றிற்கெதிராகப் போராடும்போது இரண்டு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்  கொண்டிருக்கிறது. ஒன்று  இதில்  மிகவும்  பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள்  என்ற  முறையில்  அந்த  தலித்துகளை அணிதிரட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிப்பது. இரண்டாவது  தலித் மக்கள் மட்டும்  ஒன்றுபட்டால் இக்கொடுமையை ஒழிக்க முடியுமா? யார் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்களோ அந்த சாதியைச் சேர்ந்தவர்களை, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை தீண்டாமையைக் கைவிட வைக்க  வேண்டும் அல்லவா? எனவே தலித் அல்லாத இதர சாதியைச் சேர்ந்த, இதர சமூகங்களைச் சேர்ந்த, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, அதில்  ஜனநாயக  எண்ணம்  வைத்திருக்கக்  கூடிய,  மனித  உரிமைகள்  விசயத்தில்  அக்கறை இருக்கக் கூடிய,  ஒரு பிரிவை  தீண்டாமை ஒழிப்பு  முன்னணி  திரட்டி  வருகிறது. அவர்களைத் திரட்டி, ஏற்கனவே திரட்டப்பட்ட  தலித் மக்களை  இணைத்துக்  கொண்டு  போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களும்  பங்கேற்பர். எனவே, இந்தப்  போராட்ட  வடிவங்களுக்கு  ஒரு  ஜனநாயக  வடிவம்  கிடைக்கிறது.  இந்த  தலித் அல்லாத,  இதர சமூகங்களைச் சார்ந்த,  ஜனநாயக பகுதியினர்  அவர்கள்  பகுதியில்  தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் மக்கள் மத்தியில் தீண்டாமை தவறு  – சாதிய ஒடுக்குமுறை நல்லதல்ல – இது  நமது  ஒற்றுமையைப்  பாதிக்கும்  என்ற  முறையில்  அதில் உள்ள  உழைப்பாளிகள்  தீண்டாமை போன்ற சாதியக் கொடுமைகளை  முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்  என்ற  முறையில்  பணியாற்றுகின்றனர். ஆகவே இது மக்கள் ஒற்றுமைக்கு பயன்படுகிறது.  ஒரு உதாரணமாகச்  சொல்வது  என்றால்,  மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில்  ஒரு தீண்டாமைச் சுவர்.  அது சாதி இந்துக்கள் பகுதியையும்,  தலித்  மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதியையும்  பிரிக்கும் சுவர். அந்தப் பக்கம் தலித் மக்கள் இருப்பார்கள்.  இந்தப்  பக்கம் சாதி இந்துக்கள் இருப்பார்கள்.  எதற்காக அந்த சுவர் கட்டியிருக்கிறார்கள் என்றால் சாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதிக்கு தலித் மக்கள் வரக் கூடாது என்பதற்காக. கிட்டத்தட்ட 20  வருடமாக  அந்தச் சுவர்  நீடித்திருந்தது. யாரும் அதை வைத்து சர்ச்சை பண்ணவில்லை. நாங்கள் தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பாக கள ஆய்வு செய்தோம்.  ஆய்வு நடத்தும்போது  உங்கள் ஊரில்  இரட்டைக் குவளை  முறை  இருக்கிறதா? கோவிலுக்குப் போக முடிகிறதா? பொது மயானத்தில், இறந்து போன தலித் மக்கள் உடலை புதைக்க முடியுமா? என்பது போன்ற  கேள்விகளை  வரிசையாக  கேட்கிறோம்.  கள ஆய்வு  மேற்கொள்ளும்போது  இந்த சுவரும்  கூடவே வருகிறது.  இது என்ன சுவர்? என்று  கேட்கும்போது  20 வருசத்துக்கு முன்பாக அந்தப் பக்கம் இருக்கிற சாதி இந்துக்கள்  கட்டியிருக்கிறார்கள்;  நாங்கள்  அந்தப்  பகுதிக்கு போகக் கூடாது  என்பதற்காக  என்று தலித் மக்கள்  கூறினர்.  இவ்வளவு நேரம்  சொல்லவில்லையே  என்று கேட்டதற்கு  இப்பத் தானே கேட்கிறீர்கள் என்றனர்.  காலம் காலமாக  ஒடுக்கப்பட்டதால்  அந்தப் பிரச்சனையை   சொல்ல வேண்டும் என்று கூட  தோன்றவில்லை.  அந்த ஒடுக்குமுறை அடையாளத்தோடு வாழ்ந்து விட்டனர். அந்தப்பிரச்சனையை தீண்டாமை ஒழிப்பு  முன்னணி   கையில்  எடுத்தது.  அந்த சுவரை  உடைக்க வேண்டும்  என்று  தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்தோம்.  அதற்காக  பெரும்  போராட்டங்கள்  நடந்திருக்கிறது.  அப்படி  போராட்டங்கள்  நடக்கும்போது  அந்த சுவர்  கட்டுவதற்கு  காரணமாக  இருந்த  சாதி இந்துக்களைத்  திரட்டுவதில்  தனிக் கவனம்  செலுத்தினோம். போராட்டத்தில் சாதி இந்து அமைப்புகளைச் சார்ந்தவரும் கலந்து கொண்டனர். பேரையூர் என்ற கிராமத்திலே உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடை  என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்தினோம். 2000 பேர்  இந்தப் போராட்டத்தில்  கலந்து கொண்டனர். 1000 பேர் தலித்துகள்; 1000 பேர் தலித் அல்லாதவர்கள்  என்ற அளவில்  பங்கேற்றனர்.  அந்தப்  போராட்டம்  அரசுக்கு  பெரிய  எச்சரிக்கையாக  இருந்தது.  அந்தப்  போராட்டம்  வெற்றியடைவதற்கே  இத்தகைய  போராட்டங்கள்  முக்கிய காரணமாக அமைந்தது.  உண்மையிலேயே இது எதற்குப் பயன்பட்டிருக்கிறது என்றால், இந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பரந்த ஒற்றுமையைக்  கட்ட முடிந்தது. வெறும் தலித்துகள் ஒற்றுமை அல்ல; தலித்துகளுக்கு அப்பாற்பட்ட  உயர் சாதி இந்து  அமைப்பினரையும்  ஒற்றுமைப்படுத்த  முடிந்தது.  இம்மாதிரியான   வழிமுறைகளை  நாடு முழுவதும்  அமல்படுத்தினால்,  இதே முறையில் கொண்டு போனால்,  கட்டாயமாக இந்தியாவில்  சாதி  ஒடுக்குமுறையை  ஒழித்து,  வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதற்கு  நிச்சயமாகப்  பயன்படும்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அனைத்துப் போராட்டங்களிலும் இத்தகைய வழிமுறையைக் கடைப்பிடித்திருக்கிறோம். அது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு செய்யும் போது தலித் அமைப்புகள் குறிப்பாக அம்பேத்கருடைய மேற்கோள்களைப்  பயன்படுத்தியே சாதியைக் கணக்கில் எடுக்காத மார்க்சியம் தேவையில்லை என்று கூறுகிறார்களே!  அவர்களுடைய நோக்கம் என்ன?


இடதுசாரி இயக்கம், மார்க்சிய இயக்கம் வளரக் கூடாது என்று விரும்புகிறவர்கள்  முன்வைக்கக் கூடிய  வாதங்களில் இதுவும் ஒன்று.  மார்க்சியம் இந்தியாவிற்குப் பொருந்தாது. ஏன் என்றால் எங்கேயுமே  இல்லாத சாதி இந்தியாவில் இருக்கிறது என்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்வது  என்னவென்றால், மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல; எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி  நடைமுறைப்படுத்துவதற்கு. அந்தந்த நாடுகளில் பிரத்யேகமாக  இருக்கக் கூடிய  சமூகப்  பொருளாதாரச்  சூழல்,  பிரச்சனைகள்  இவற்றைக்  கணக்கில்  எடுத்துக்  கொண்டு  அதற்குத்  தகுந்தவாறு  பொருத்த  வேண்டும்.  இந்தியாவில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி  இந்தியாவில்  சாதி அமைப்பு  இருக்கிறது;  அது மிக  வலுவாக இருக்கிறது;  மக்களின் உணர்வாக இருக்கிறது;  வர்க்கமும் சாதியும் பின்னிப்  பிணைந்திருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த சாதி ஒடுக்குமுறைக்கெதிரான  போராட்டத்தையும்  சேர்த்தே  நடத்துகிறோம். இன்னும்  சொல்லப் போனால்   சாதிய ஒடுக்குமுறைக்கு  எதிராக  மிக வலுவான  குரல் கொடுத்த  முதல் அரசியல் இயக்கம்  கம்யூனிஸ்ட் இயக்கம்  என்று சொல்ல  முடியும். கம்யூனிஸ்ட்  இயக்கம் உருவானது 1920ல். இந்தியாவில்  முதல்  கம்யூனிஸ்ட்  கட்சித்  திட்டம்  ஒரு மாதிரி வரைவு அறிக்கையாக (1931) இருந்தது. அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்றால்  இந்தியாவுக்கு விடுதலை என்றால், அது தலித்துகளுடைய விடுதலையாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் சாதிய அமைப்பை முற்றாக ஒழிப்பதில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக இருப்போம்  என்றெல்லாம் அந்த பிரகடனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தெலுங்கானா போராட்டம், புன்னப்புரா-வயலார் போராட்டம், தேபேகா போராட்டம்,  தமிழ்நாட்டில், கீழத் தஞ்சையில் நடைபெற்ற போராட்டம்  ஆகியவை எல்லாம் சமீபத்திய போராட்டமல்ல. நீண்ட நெடிய போராட்டம். இந்தப் போராட்டத்தில்  வர்க்கப் போராட்டத் தன்மையும் இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான தன்மையும் இருக்கிறது.  இரண்டும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இரண்டுக்கும் எதிராக, ஒரே நேரத்தில்   போராட்டம்  நடத்திய இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம்.
அவர்கள் உள்நோக்கத்தோடு சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா? அதாவது இப்படிப்பட்ட சாதனை  விடுதலைக்கு வாய்ப்பிருக்கிற இயக்கத்தை புறந்தள்ளி விட்டு  ஒரு  அடையாள  அரசியலை  வளர்க்க  வேண்டும் என  ஒரு குறுகிய வாக்கு வங்கிப் பார்வையோடு கூறுகிறார்கள் என்று சொல்லலாமா?
இந்தியாவில் இடதுசாரி இயக்கமும், செங்கொடி இயக்கமும் வளரக்கூடாது என்று சில சக்திகள்  நினைக்கிறார்கள். அத்தகைய பார்வையிலிருந்து இத்தகைய தவறான வாதங்களை முன்வைக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் தன் வரலாறு முழுவதுமே  இத்தகைய  எதிர்விமர்சனங்களையும்,  கண்டனங்களையும்,  தவறான  அம்சங்களையும்  எதிர்த்துப் போராடிக்  கொண்டே தான்  வளர்ந்து  வந்துள்ளது.  இன்றைக்கு  மேற்குவங்கம், கேரளா,  திரிபுராவில்  கம்யூனிஸ்டுகள் வலுவாக  இருக்கக் கூடிய மாநிலங்கள்.  இந்த மாதிரி  மாநிலங்களிலும்  உண்மை நிலை என்ன  என்று கேட்டால்,  சாதிய ஒடுக்குமுறையின்  கொடூரத் தன்மை  குறைவாக இருக்கிறது.  வன்கொடுமைகள் குறைவு. அரசாங்கத்துடைய  மனித உரிமை  ஆணையத்தின்  புள்ளி விவரங்கள்  இதை தெரியப்படுத்துகிறது.  ஏன் சாதிய மோதல்கள் மேற்கு வங்காளத்தில் இல்லை? ஏன் சாதி சண்டைகள் கேரளாவில் இல்லை? ஏன் என்றால், கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் அங்கு வலுவாக இருப்பதுதான் காரணம்


தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் தலித்துகள் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் செயல்பட முடியாத  நிலை உள்ளது.  அரசு நிர்வாகத்தால் கூட  சாதியை  எதிர்கொள்ள  முடியவில்லை  என்ற  சூழ்நிலை இருக்கும் போது  தீண்டாமை  ஒழிப்பு முன்னணி   எப்படி அதில் தலையிடுகிறது?  என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்க முடிகிறது?


உண்மை தான். தலித்துகளுக்கென்று  ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய,  பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய,  ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக்களில் தலித்துக்களை  தேர்தலில் நிற்க  வைப்பதையே  அனுமதிக்க மறுக்கிறார்கள்.  பாப்பாப்பட்டி,  கீரிப்பட்டியில் பார்த்தோம்.  ஒரு வேளை  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால், அவர்களை அங்கீகரித்து செயல்பட அனுமதிப்பதில்லை. சாதிய  சக்திகள் பெரிய முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்த பிரச்னைக்கு அரசாங்கம் நினைத்தால் நல்ல தீர்வை  ஏற்படுத்த முடியும். ஏன் ஏற்படுத்தவில்லை? ஏன் என்றால், சாதிய உணர்வுள்ளவர்கள் கணிசமான அளவில் அதிகார வர்க்கத்தில் இருக்கிறார்கள். ஆளும் முதலாளித்துவ கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்  நிறைய பேர் சாதிய உணர்வோடு இருக்கிறார்கள். எனவே தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.  அதற்காகப் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதற்கென  ஒரு தனி ஆய்வை இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதில் வினோதமாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உரிமைக்குப்  போராடுவது தீண்டாமை ஒழிப்பு முன்னணியாக உள்ளதே?


ஆமாம். ஏனெனில் முதலாளித்துவ கட்சி அணிகளுக்குள்ளேயே சாதிய வேறுபாடுகள் இருக்கிறது. மற்ற  கட்சிகளில் என்ன நிலைமை என்றால், எஸ்சி எஸ்டி மக்களைத் திரட்டுவதற்கென்றே  எஸ்சி  எஸ்டி  பிரிவு  என்று  வைத்திருக்கிறார்கள். அதற்கு சில பொறுப்பாளர்களை அந்த சாதியிலேயே போட்டு  அவர்களை  எப்படி  நடத்த வேண்டுமோ, அப்படித்தான் நடத்தப்படுகிறார்கள்.  அவர்களுக்கு  பெரிய மரியாதை எதுவும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டில் அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, பெரியாரிய இயக்கத்தின்  தொடர்ச்சி என்று சில இடங்களில் சொல்லி வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்டுகள் எடுக்கிற அளவுக்கு அந்த அமைப்புகள் சாதிப் பிரச்சனையைத் தொடாமல் அல்லது இயக்கம் நடத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவர்களை எப்படி பார்க்கிறீர்கள்?


உண்மையிலேயே பெரியார் ஒரு சாதி ஒழிப்புப்போராளி; ஒரு மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. அவர்  காலத்தில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது என்பதும் உண்மை.  ஆனால், பெரியாருக்குப் பிறகு, பொறுப்புக்கு வந்திருக்கக் கூடிய திராவிட இயக்கக் கட்சிகள் என்று  தங்களை சொல்லிக் கொள்ளக் கூடிய கட்சிகளின்  தலைவர்கள் அல்லது அந்தத் தலைமை பெரியார்  பாதையிலிருந்து வெகு தூரம் விலகிப்  போய் விட்டார்கள் என்பதும் உண்மை. இவர்கள் சாதி  அமைப்பை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்காகப்  போராடுவதற்குப் பதிலாக, சாதி அமைப்பை வாக்கு  வங்கியாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, இவர்கள் தங்களை சாதி அமைப்பை ஒழிப்பதற்காக  நிற்கிறோம் என்று எப்படி சொல்ல முடியும். இந்த சமூக நீதி என்பது பரவலானது. சமூக நீதி என்பது சாதிய அமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கான மிகப் பெரும்  போராட்டம்.  ஆனால்,  இதை மிகவும் குறுக்கி  இடஒதுக்கீடு  என்பதற்குள் நிறுத்தி விட்டார்கள். இட ஒதுக்கீடு தான் சமூக நீதி என்கிறார்கள். அதிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான்  இட ஒதுக்கீடு  என்பதில்  அதிக  அக்கறை  காட்டுகின்றனர்.  ஏன் என்றால், அவர்களது வாக்குகளை வாங்குவதற்காக. ஆயிரக்கணக்கான கிராமங்களில் தீண்டாமை  தலைவிரித்தாடுகிறது. கோயில்களுக்குள் நுழைய முடியவில்லை. பொதுத் தெருக்களில்  நடக்க  முடியவில்லை.  பொது மயானத்தில் புதைக்க முடியவில்லை.  சைக்கிள் ஓட்ட  முடியவில்லை.  வேட்டியை  மடித்துக் கட்ட முடியவில்லை. மீசை வைக்க  முடியவில்லை.  இப்படி நிறைய விசயங்களை  சொல்லிக் கொண்டே  போகலாம்.  நிறைய தீண்டாமைச் சுவர்களை  கட்டி வைத்திருக்கிறார்களே, இவற்றிற்கு எதிரான போராட்டங்களில் திராவிட இயக்கங்கள்  பங்கேற்றிருக்கிறதா? இல்லை. பங்கெடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. உண்மையில், அங்கு போய் தலித் மக்களுக்கு எதிராக இவ்வளவு கொடுமைகளும், இவ்வளவு ஒடுக்குமுறைகளும் யார் செய்கிறார்கள் என்று பார்த்தால், திராவிட இயக்கக் கட்சியினுடைய  உறுப்பினர்கள்  பல பேர்  அங்கு  ஆதிக்கம்  செலுத்தக்  கூடிய  சாதிய அமைப்போடு சேர்ந்து கொண்டு  தலித்துகளுக்கு  எதிராக  நிற்கிறார்கள்.  அப்படிப்பட்ட  காட்சியை நாம் பார்க்க முடியும். திராவிடக் கட்சிகள்  இன்றைக்கு  சாதி அமைப்புக்கு எதிராகவும்  சாதிய  ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவதில் மிகப் பெரிய பலவீனம் உள்ளது. குறிப்பாக  தலித்துகளுடைய விடுதலைக்காக, அவர்கள் உரிய குரல் கொடுப்பதில்லை. காரணம் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு  எதிராக போராடினால்  உயர் சாதி  இந்துக்களுடைய  வாக்குகளை  இழந்து  விடுவோம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் இவ்விசயத்தில் தலையிடுவதில்லை.


நாம் நடத்துகிற ஜனநாயகப் போராட்டங்களில் ஏராளமான களப்பலிகளை எதிர்கொள்கிறோம். சமீபத்தில் அசோக் உட்பட பல  களப்பலிகளை எதிர்கொள்கிறோம். இதை எப்படி பார்ப்பது?  ஆயுதம் தாங்கிய சில குழுக்கள்  இந்த  அரசுக்  கட்டமைப்பை எதிர்க்கின்றன.  அந்தப் பாதை  சரியானதாக இருக்குமா?  அல்லது ஒரு விடாப்பிடியான போராட்டத்தை  ஜனநாயக தளத்தில்  நடத்துவதுதான்  பொருத்தமாக  இருக்குமா?


அசோக் போன்ற இளைஞர்கள் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடைய உரிமைகளுக்கான போராட்டத்தில்  முன்னணியில் இருந்தவர்கள். அது மட்டுமல்ல; எல்லா சாதிமக்களும் சேர்ந்த உழைப்பாளி மக்களுடைய  ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் அசோக் போன்றவர்கள் பாடுபட்டனர். அப்படித்தான் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பாளராக அவர் இருந்தார்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால்,  இந்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய முதலாளித்துவ வர்க்கத்தையும்,  நிலப்பிரபுத்துவ  வர்க்கத்தையும், அதன் கருவியாகச் செயல்படக் கூடிய அரசு நிர்வாகத்தையும், அது ரொம்ப வலுவானது என்ற வகையில்   அதை வீழ்த்துவதற்கு  பெரும் வெகுஜன  கிளர்ச்சி தேவை.  கோடிக்கணக்கான  மக்களைத்  திரட்ட வேண்டும். அது மிக கடினமான பணி. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஜனநாயக உணர்வு  கூட போதுமான அளவு இல்லாமல் இருக்கக் கூடிய, கோடிக்கணக்கான மக்களுக்கு, ஜனநாயக உணர்வு ஊட்டி விழிப்படைய வைத்து, அவர்களை, புரட்சிகரமான அத்தகைய பாதைக்குத் திரட்டுவது ரொம்ப  கடினமான பணி. அந்தப் பணியை செய்வதை விட்டு விட்டு, தனிநபர்கள் சிலபேர் அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் கலகம் செய்கிறோம் எனக்கூறி ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்துவது என்பது மக்களை புறக்கணித்து விட்டு தனிநபர் அடிப்படையில் செய்யக்கூடிய  ஒரு சாகச நடவடிக்கையாகும். இதன் மூலம் நிச்சயமாக மாற்றத்தை  ஏற்படுத்த முடியாது. காரணம், உலக வரலாற்றில் தனிநபர்கள் மட்டும் திரண்டு நின்று ஆயுதம் தாங்கிப் போராடி வெற்றி பெற்ற வரலாறே இல்லை. அத்தகைய  நடவடிக்கைகள் இந்தியாவிலும் எடுபடாது என்பது தான் உண்மை. சாதாரண மக்களுக்கு  படிப்படியாகத்தான்  அரசியல் உணர்வை  ஊட்ட முடியும்.  முதலில்  அவர்களது  சொந்தப்  பிரச்னைக்கு போராடச் செய்ய வேண்டும்.  அப்பொழுது அரசாங்கம் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும். உன்னுடைய உரிமைக்காகப்  போராடும் போது அரசு உனக்கு எதிராக நிற்கிறது. அப்படி என்றால் அரசைஎதிர்த்து  நிற்க வேண்டும் என்று அப்பொழுது தான் அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பி விட வேண்டும்.  ஜனநாயக உணர்வோடு போராடக் கூடியவனுக்கு ஒரு அரசியல் உணர்வை உருவாக்கி, பிறகு அரசுக்கு  எதிராக மக்களைத் திரட்டுவது என்பது கடினமான பணி. மார்க்சிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிக்  கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் மாவோயிஸ்ட்கள் இந்த மக்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சில  தனிநபர்களை சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின்மூலம் அல்லது  அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள் சில பேரை படுகொலை செய்வதன் மூலம், மாற்றத்தை உருவாக்க  முடியும் என்று நம்புகிறார்கள். அத்தகைய மாற்றத்துக்கு இந்தியாவில் வாய்ப்பு இல்லை. இந்தியாவில்  மட்டுமல்ல; உலக அனுபவத்தில் அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.


கேரள அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதில் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த சமூக  தளத்தில் கேரளத்தின்சாதனைகள் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கும் போது எப்படி உள்ளது?


கேரளாவில் ஒரு காலத்தில் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. இங்கே தொட்டால்தான்  தீண்டாமை; அங்கு பார்த்தாலே தீண்டாமை. அய்யங்காளி, ஸ்ரீநாராயண குரு உள்பட சமூக  சீர்திருத்தவாதிகள் அப்பொழுதே இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கடுமையாகப்  போராடியிருக்கிறார்கள். அந்த சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் கேரளாவில் கம்யூனிஸ்டுகள்  தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்தனர். எப்படி அக்கறை செலுத்தி  வந்தனர்என்றால், ஒரு புறம் வாழ்வாதாரப் பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பது – பொருளாதாரப்  பிரச்சனைகளுக்கான  போராட்டதிற்கு  தலைமை தாங்கிக் கொண்டே,  மறுபுறம், சாதியாக  ஒடுக்கப்பட்டிருக்கக் கூடிய, பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய, மக்களுடைய பிரச்சனைகளுக்கும் போராட்டம்  நடத்தினர். உதாரணத்திற்கு, ஏ.கே கோபாலன் ஒரு பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அவர் நிலத்திற்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார். ஆனால் அதே ஏ கே  கோபாலன்  குருவாயூர்  கோயிலில்  தலித் மக்களைத் திரட்டி  ஆலய நுழைவுப் போராட்டத்தையும்  நடத்தியிருக்கிறார்.  அந்தப் பாதையில்  கேரளா  பெரிய  அளவிற்கு  முன்னேறியுள்ளது.  இந்தியாவில்  சாதியை ஒழிக்க  வேண்டுமென்றால்  இரண்டு முனை  போராட்டம் தேவை.  ஒன்று,  சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான  சமூக சீர்திருத்த இயக்கம்; பெரியார் -அம்பேத்கர் இப்படிப்பட்ட  சமூக நீதிப்  போராளிகளுடன்  இணைந்து  அந்தப்  போராட்டத்தை  நடத்துவது என்பது ஒரு அம்சம்.  இன்னொரு அம்சம்,  இந்த சாதி  என்பது  வர்க்க ஒடுக்குமுறையினுடைய ஒரு பகுதியாக இருக்கிறது  என்ற  பின்னணியில்  வர்க்க  ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் – இந்த இரண்டையும் இணைத்து நடத்தும் போது தான்  சாதிய  ஒடுக்குமுறையையும்  முடிவுக்குக் கொண்டுவர முடியும். பொருளாதார ஒடுக்குமுறையையும்  முடிவுக்குக்  கொண்டு வர  முடியும்.   இந்த இரண்டுக்கும் எதிரான சரியான  போராட்ட  அணுகுமுறை  என்பது  கம்யூனிஸ்டுகளிடம் இருக்கிறது
தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  இத்தனை ஆண்டு கால அனுபவத்திலிருந்து சில  கேள்விகளுக்கு உங்களிடம் பதில் கேட்க வேண்டியுள்ளது.


தலித் அமைப்புகள் ஒரு அடையாள அரசியல் அமைப்புகளாக இருக்கிறதா? அல்லது  சமூக ஒடுக்குமுறை  எதிர்ப்பில் என்ன பாத்திரத்தை வகிக்கிறார்கள்?


மற்ற சாதி அமைப்புகள் எல்லாம் நாங்க ஆண்ட பரம்பரை; ஆதிக்கப் பரம்பரை என்று சொல்லி, தங்களுக்குக் கீழாக ஒரு  பிரிவினர் இருக்க வேண்டும் என்ற முறையில், சாதிய அமைப்புகளை நடத்துகிறார்கள். அவை எல்லாம்  ஜனநாயக அமைப்புகளே அல்ல. பாசிசத் தன்மை  வாய்ந்த  சாதி அமைப்புகள்.  ஆனால்  தலித்  அமைப்புகளைப்  பொறுத்த வரை  நாங்கள்  ஒடுக்குமுறைக்கு  உள்ளாக மாட்டோம்.  இந்த  அடக்குமுறையை நாங்கள் எதிர்க்கிறோம்; நாங்களும் மனிதர்கள் தான் என்ற உரிமைக்காகப்  போராடுகின்றனர். எனவே, இதில் ஒரு ஜனநாயகத் தன்மை உள்ளது . அப்படித்தான் தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தலித் அமைப்புகளைப் பார்த்து அரவணைத்துக் கொண்டு போகிறோம். ஆனாலும் கூட சில  தலித் அமைப்புகள், தலித்துகளைத் திரட்டுவதற்கு தங்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. இதில் வேறு யாரும் தலையிடக்கூடாது. இது எங்கள் பிரச்சனை. இதை நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள்  ஒன்றும் தலையிட வேண்டியதில்லை என்கிற முறையில், ஆதரவுக் கரம் நீட்டக் கூடிய இயக்கங்களை புறம் தள்ளுகின்றனர். அது கட்டாயமாக அடையாள அரசியல்தான்.  இப்பாதையில் தலித் மக்களைத்  திரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்தப் பாதையில் போனால் தலித் மக்களுடைய  விடுதலை சாத்தியமாகாது என்பது தான்  உண்மையான நிலைமை.


பாலினப் பாகுபாடு எல்லா தளத்திலும் நிலவுகிறது. இந்த சாதி ஒடுக்குமுறைப் போராட்டத்தில் பெண்கள்  பங்களிப்பு என்பது எப்படி இருக்கிறது? அதை எப்படிப் பார்க்க வேண்டும்? இதில்  தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் அனுபவம் என்ன?


இது ரொம்ப முக்கியமான கேள்வி. இந்தியாவில் பெண் அடிமைத்தனத்திற்குக் காரணம்  வர்க்க  ஒடுக்குமுறை ஒரு முக்கிய காரணம். ஆணின் சொத்துரிமைக்கு வாரிசு வேண்டும். வாரிசு வேண்டும் என்று சொன்னால், பெண்கள் ஆண்களுடைய உடைமையாக இருந்தால் தான், அதன் மூலம் தங்களுடைய  வாரிசை உருவாக்க முடியும். இது ஒரு பகுதி.  பெண்ணடிமைத்தனத்திற்கு  மற்றொரு காரணம், சாதி  அமைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதாகும்.  சாதி சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என சாதிய வாதிகள் வாதாடுகின்றனர். அகமண முறையே  சரியானது  என  இவர்கள்  வாதாடுகின்றனர். சாதி அமைப்பினை  கெட்டிப்படுத்துவதே  இந்த  அகமணமுறை  தான். அதனால், இந்த மநு என்ன சொல்கிறார் என்றால், பெண் பருவமடைகிற வரைக்கும் அவளுக்குத் திருமணம் செய்யாமல்  விட்டு விடாதே.  பருவமடைந்தால்  அவளுக்கு  விவரம்  தெரிந்து விடும்.  விவரம் தெரிந்தால்,  அவள் விரும்புகிற ஆண் மகனை  சாதி பார்க்காமல், திருமணம் செய்து விடுவாள். எனவே  அவள் குழந்தையாக  இருக்கும் போதே 30வயது ஆணுக்கு 12 வயது பெண்ணை திருமணம் செய்து வை. 12 வயது ஆணுக்கு  8 வயது பெண்ணை திருமணம் செய்து வை. அப்படித்தான்  சாதி அமைப்பைப்  பாதுகாக்க  முடியும்  என்கிறார்கள். சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்த பெண்ணடிமைத்தனம் என்பது வலுவாக  அமல்படுத்தப்படுகிறது.


 இதற்கு எதிராக பெண்கள் வருவது பற்றி?

இதற்கு எதிராக பெண்கள் திரட்டப்படுகிறார்கள். முன்பை விட பெண்கள் மத்தியில் தற்போது  விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. ஜனநாயக உணர்வு அதிகரித்துள்ளது. பெண்ணுரிமைப் போராளிகள்  நிறைய பேர் உருவாகியுள்ளனர். சில மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் வெகுதூரம்  மாற வேண்டியுள்ளது. ஒரு பகுதி தான் மாறியுள்ளதே தவிர, பெரும் பகுதி  இன்னமும் மாற வேண்டிய  நிலைதான்  உள்ளது.  அதற்காக,  பெண்கள்  மத்தியில்  ஜனநாயக  இயக்கங்கள் வலுவாக பணியாற்ற வேண்டும்.


 சாதி உணர்வுகளைத் தாண்டி விவசாயிகளைத் திரட்டுவது பற்றி கூறுங்களேன்?

சாதி அமைப்பு இறுக்கமாக நிலவக் கூடிய கிராமப்புறங்களில் பெரும்பாலும்அதைத் தூக்கிச்   சுமப்பது விவசாயக் குடியானவர்களாகத்தான் உள்ளனர். இன்றைக்கு விவசாயிகள் கடுமையான  நெருக்கடியை சந்திப்பதையும் பார்க்கிறோம். அவர்கள் போராட்டக் களத்துக்கு வருகின்றனர்.  விவசாயத்திற்கு எதிராக  அரசின்  கொள்கைகள்  இருப்பதால்  அதை  எதிர்த்துப்  போராடி  வருகின்றனர். அவர்களோடு கூட கம்யூனிஸ்டுகளும் நிற்கிறோம். ஆனால் ஒரு கிராமத்திற்கு போய்  தீண்டாமைப் பிரச்சனையைக் கையில்  எடுத்தால்,  அதை எதிர்க்கக்கூடியவர்களாக, ஒடுக்கக் கூடிய சாதிய சக்திகள் இருக்கின்றனர். இந்த எதிர்ப்பை முறியடித்துக் கொண்டே, விவசாயத் தொழிலாளர்கள்,  விவசாயிகள உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.
இது ஒரு கடினமானபணி தான். இதில் நிறைய அனுபவம்  எங்களுக்குக்  கிடைத்திருக்கிறது.  இதில்  நம்பிக்கை  தான்  ஏற்பட்டிருக்கிறது  என்பதை  சொல்ல  விரும்புகிறேன்.  இப்பொழுது  கிராமத்துக்குப்  போய்  தீண்டாமைக்கு  ஆட்பட்டிருக்கக் கூடிய தலித் மக்களைத் திரட்டி,  தீண்டாமைக்கு  எதிராகப்  போராடும் போது பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்க ஒன்றாகத்தான்  இருக்கிறோம்; ஊர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. நீங்கள்  வந்துதான்  எங்களிடம் கலகம் பண்ணுகிறீர்கள்; எங்களை பிளவுபடுத்துகிறீர்கள் என்று சொல்கிறார்கள். போராட்டம் நடக்கும் போது, கொஞ்சம் முகத்தை சிணுங்குகிறார்கள்; கோபப்படுகிறார்கள். இப்படி  போராட்டம் நடத்தறவர்களுக்கு எதிராக வருகின்றனர். அந்த மக்கள் மத்தியில் இது தவறு என்ற  பிரச்சாரத்தை செய்து கொண்டே, அதே நேரத்தில், சட்டத்தை உறுதியாக பாதுகாப்பதற்கான  போராட்டத்தை நாம் உறுதியாக நடத்த வேண்டும். உண்மை நிலை என்ன என்றால், பல கிராமங்களில்  இப்படி போராட்டம் நடத்தி தீண்டாமை  ஒழிக்கப்பட்டது. இப்படி ஒழிக்கப்பட்ட பிறகு, அங்கு நிறைய  பொதுப் பிரச்சனைகள் உள்ளது. அவர்களுக்கு அங்கு ரேசன் பொருட்கள் சரியாகக் கிடைப்பதில்லை;  குடிநீர் கிடைப்பதில்லை; சாலை வசதி கிடையாது; பஸ் போக்குவரத்து வசதி கிடையாது; விலைவாசி  தாங்க முடியவில்லை; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சனைகள் எல்லா  சாதி மக்களையும் பாதிக்கிறது அல்லவா? எனவே,  இந்தப் பிரச்சனைகளுக்காக  கம்யூனிஸ்டுகள் போராடும் போது,  அப்போது இரு தரப்பு ஜனங்களும்  போராட்டத்திற்கு  வந்து  விடுகின்றனர்.  இந்தப் போராட்டத்திற்கு வராமல் இல்லை. எனவே இரு போராட்டத்தையும்  ஒரே நேரத்தில் நாம் நடத்தினால், கட்டாயமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த முடியும்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் நடத்த வேண்டும்; எல்லோருக்கும் பொதுவான  பொருளாதாரப் பிரச்சனையையும் கையில் எடுக்க வேண்டும். அப்படிப் போராடுவதன் மூலம்,  மக்களுடைய ஒற்றுமையை  உருவாக்க முடியும்;  உருவாக்க  முடிந்திருக்கிறது.  இப்படி  ஏராளமான  அனுபவங்கள் கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைத்திருக்கிறது.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்