பேரழிவின் மீது முதலாளித்துவம் நடத்தும் பேரம்

1331
1
SHARE

நவீன தொழில் வளர்ச்சி காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து உமிழப்படும் கரியமில வாயு மற்றும் இதர சில வாயுக்கள் காற்று மண்டலத் தில் சூழ்ந்து கொண்டுள்ளதால் பூமிப்பந்து வெப்பமடைந்துவருகிறது. இதை புவி வெப்ப மாதல் என்கின்றனர். இந்த வாயுக்களை பசுங் குடில் வாயுக்கள் என்றழைக்கிறார்கள். புவி வெப்பமாதல் விளைவாக கடல் நீர் மட்டம் உயர்வதும் நிலப்பகுதிகள் கடலுக்குள் செல்வ தும் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு கடும் வெப்பம் வறட்சி ஒருபுறமும் கடும் வெள்ளம் மறுபுறமும் நிகழும்.
1992 ம் ஆண்டு நடந்த புவி உச்சி மாநாட்டில் (Earth Summit) ஒரு நிகழ்ச்சிநிரலாக பருவநிலை மாற்றம் விவாதிக்கப்பட்டது.

இதற்கென்ற தனியான அமைப்பு உருவாகி ஆண்டு தோறும் தனியாக விவாதிக்க வேண்டும் என்ற முடிவு அதில் ஏற்பட்டதின் அடிப்படையில் 1995 ம் ஆண்டு முதல் இது நடந்துவருகிறது. இது உடந்தையாளர்கள் மாநாடு Conference of Partids) என்றழைக்கப்படுகிறது. இத்துடன் பருவநிலை மாற்ற சர்வதேச நிபுணர் குழு (Intergovernmental Panel on Climate Change – IPCC) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பானது தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்து அறிக்கைகளை வெளியிடுகின்றது. இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே உடந்தை யாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. 2015ம் ஆண்டு நடந்த மாநாடு 21வது மாநாடு இது பாரிஸ் நகரில் நடந்தது. இதை CoP-21 என்றழைக்கின்றனர். இதுசம்பந்தமாக 2016 ஜனவரி மார்க்சிஸ்ட் இதழில் தோழர் பகுராஜன் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியே இந்தக் கட்டுரை பாரிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கையானது யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் அதன் இலக்குகள் அடையப்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் சூழலியல் அமைப்புகள் கூறிவந்தன. எனினும் இன்னின்னார் இன்னின்ன செய்யவேண்டும் என்று தெளிவாகவே கூறப் பட்டிருக்கிறது. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் செய்யத் தவறினால் உலக சமுதாயம் இந்த தண்டனையை வழங்கும் என்பது போன்ற வலியுறுத்தல் எதுவும் இல்லை. எனவே எந்த நாடு யார்வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இதைச் செய்யப் போவதில்லை என்று அறிவிக்கலாம்.
இந்த உடன்பாட்டிலிருந்து விலகப்போவ தாக தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் கூறிவந்தார். இப்பொழுது அறிவித்து விட்டார். பருவநிலை மாற்றத்திற்கான உடன் படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 1997ம் ஆண்டு நடைபெற்ற CoP-3 என்றழைக்கப்படும் மூன்றாவது உடந்தையாளர் கள் மாநாட்டில் எட்டப்பட்ட க்யோட்டா உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக புஷ் அதிபரானவுடன் கூறினார். இப்பொழுது இரண் டாவது முறையாக சர்வதேச உடன் படிக்கையி லிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.

க்யோட்டா உடன்படிக்கை
பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. எனினும் இதன் பாதிப்பு உலகம் முழுவதும் ஒரு சீராக இல்லை. குட்டித் தீவுநாடுகள் இதில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த நாடு கள் அழிந்துபோகும் பெரும் அபாயம் உள்ளது.
பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் பங்கு அதிகமானது. எனவே இதை சரி செய்வதற்கு அதிக செலவை வளர்ச்சியடைந்த நாடுகள் செய்யவேண்டும் என்ற கோரிக்கை உடந்தையாளர்கள் மாநாடுகளில் முன்வைக் கப்பட்டுவந்தது. இதை மேலை நாடுகள் முழுமை யாக ஏற்காவிட்டாலும் வளர்ச்சியடைந்த நாடு களை அதிகக் கடப்பாடு உள்ளதாக மாற்றியது க்யோட்டா உடன்படிக்கை.

பருவநிலைமாற்ற சர்வதேச நிபுணர்குழு வானது 1990க்கும் 2100க்கும்இடையில் 1.4லிருந்து 5.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உயரும் என்று கணக்கிட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்து வதே க்யோட்டா உடன்படிக்கையின் நோக்கம். இதில் 1990ம் ஆண்டு நடைபெற்ற உமிழ்வில் 5.2 சதவீதம் குறைவாக உமிழவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வளர்ந்த நாடுகள் அதிக சதவிதத்தில் குறைப் பதற்கும் மற்றநாடுகள் அதன் வளர்ச்சிக்கேற்ற விதத்தில் குறைப்பதற்கும் உடன்பாடு எட்டப் பட்டது. அமெரிக்காவிற்கு 7 சதவீதமும் ஐரோப் பிய யூனியனுக்கு 8 சதவீதமும் இலக்கு நிர்ணயிக் கப்பட்டன. அடுத்தது இந்த இலக்கை எட்டு வதற்கு வரம்பு மற்றும் வணிகம் (Cap and Trade) என்ற கொள்கை அமெரிக்காவால் முன்வைக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரம்புக்கு மேல் உமிழ்ந்தால் கட்டணமும் வரம்புக்குகீழ் உமிழ்ந் தால் விற்பனை செய்யக்கூடிய பணப்பத்திரமும் உண்டு. இது நாடுகளுக்கும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்தியா, சீனா போன்ற நாடுகள் அன்றைய தினத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளாக கூறப்படாததால் இதற்குள் சேரவில்லை.

கோபன்ஹேகன்உடன்படிக்கை
1990ம் ஆண்டு உமிழ்வில் 7 சதவீதம் உமிழ்வை அமெரிக்கா குறைக்க வேண்டும் என்பது கிளிண்டன் அதிபராக இருந்தபொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் புஷ் அதி பரானவுடன் உடன்படிக்கையை உடைத்து விட்டார். இதுவரை அதிகமாக உமிழ்ந்தவர்கள் அதிகமாக செலவிடவேண்டும் என்றகொள் கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது. இதன் மூலமாக அவர்கள் உமிழ்ந்ததற்கு மற்றவர்கள் செலவழிக்க வேண்டும் என்று மறைமுகமாக அமெரிக்கா வாதிட்டது. இந்தக் கொள்கை சர்வ தேச அளவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது. இழுபறிநிலையேநீடித்தது. பின்தங்கிய நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றவர் கள் அளவிற்கு வளரும்வரை இதில் பங்கெடுக்க முடியாது என்று அவை வாதிட்டுவந்தன. எனினும் இந்த தேக்க நிலையில் ஒருமாற்றம் 2009 ம் ஆண்டு கோபன்ஹேகன்நகரில் நடைபெற்ற 15வது உடந்தையாளர்கள்மாநாட்டில் வந்தது.

இந்த மாநாட்டில் பின்தங்கிய நாடுகளும் உமிழ்வு குறைக்கும் முயற்சியில் பங்கெடுப்பது என்று ஒரு அடி முன்வைத்து உடன்பாட்டுக்கு வந்தன. ஆரம்பகட்டமாக ஒவ்வொருநாடும் அதன் மொத்த உமிழ்விற்கும் உள்நாட்டு உற் பத்திக்கும் (Emission/GDP Ratio) உள்ள விகிதத்தை சரிசமமாக பராமரிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதாவது பின்தங்கியநாடுகள் கோரிய தலா (per capita) உமிழ்வு என்பது கைவிடப்பட்டு Emission/GDP Ratio வந்துவிட்டது. இதன் பிரச் சனை என்னவென்றால் அதிக GDP உள்ளநாடுகள் அதிகமாக உமிழலாம் அதாவது அதிக GDP உள்ளவர்களுக்கு மட்டும் தலா உமிழ்வு அதிகமாக வைத்திருக்க உரிமை உண்டு. எனினும் வளர்ச்சியடைந்தநாடுகள் அதாவது அதிக ழுனுஞ உள்ளநாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன.

இதை அடைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு தொழில் நுட்பத்தை வழங்குவது என்றும் மூலதனத்தை வழங்குவது என்றும் 2020க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டி பின்தங்கிய நாடுகளுக்கு உதவுவது என்று முடிவெடுக்கப் பட்டது. இப்படிச்செய்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையில் 2 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் என்றும் கணக்கிடப்பட்டது.

டர்பன்திட்டம்
குட்டித்தீவு நாடுகளுக்கு கோபன்ஹேகன் உடன்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் வாழும் பகுதிவேகமாக மூழ்கிவந்தநிலையில் அவர்கள் தீவிர நடவடிக்கை கோரிவந்தனர். எனவே தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 2011ம் ஆண்டில் நடைபெற்ற 17வது உடந்தை யாளர்கள் மாநாட்டில் காரசாரமான விவாதம் முன்னுக்கு வந்தது. குட்டித்தீவு நாடுகளின் அச் சத்தை முன்வைத்து பருவநிலை பிரச்சனையை சரிசெய்ய வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அதிக மான கடப்பாடு இருக்கிறது என்ற கொள்கையை ஒழித்துக்கட்டின வளர்ந்த நாடுகள்.

இந்தக் கொள்கை இருப்பதால்தான் உருப் படியாக எந்த நடவடிக்கையும் எடுப்பது நடை முறையில் சாத்தியப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்து இதை நீக்குவதற்கு கோரிக்கை வந்தது. அழியும் நாடுகளின் கூக்குரலுக்கு எல்லாரும் செவிசாய்க்க வேண்டும் என்ற நிலையில் பின்தங்கிய நாடுகள் இக்கொள்கையை வலியுறுத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டன. இது சரியானதல்ல அத்துடன் இக்கொள்கை நிறுத்திவைக்கப்பட்டால் ஓராண்டுக்குள் உருப் படியான நடவடிக்கை எடுக்கும் உடன்பாட்டுக்கு வழிகோல முடியும் என்றும் வளர்ந்த நாடுகள் வாக்குறுதியளித்தன. அப்படி நடக்காவிட்டால் 2015 க்குள் கண்டிப்பாக உருப்படியான உடன் படிக்கை எட்டுவது என்ற இலக்கிற்கு வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டனர். உருப்படியான நடவடிக்கை என்றால் ஒவ்வொரு உடந்தையாளர் நாடும் சட்டரீதியாக உமிழ்வு குறைப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் அதீத வலதுசாரி குடியரசுக்கட்சியினர் பெரும்பான்மை யாக இருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் பெரும்பான்மையாக இருந்த பொழுது தான் க்யோட்டா உடன்படிக்கையை சட்ட ரீதியாக ஏற்றுக்கொண்டதை ரத்துசெய்தார்கள்.

பாரிஸ் மாநாட்டு முன் நடவடிக்கைகள்
2015ம் ஆண்டு நெருங்கி வருவதையொட்டி அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்றுவந்தன. இதற்கிடையில் சீனாவும் அமெரிக்காவும் 2014ல் ஒரு பருவநிலை உடன்பாடு செய்து கொண்டது. இதன்படி 2030க்குள் சீனா அதன் உமிழ்வின் உச்சத்தை அடைந்துவிடும் என்றும் அதன் பிறகு அது படிப்படியாக குறைக்கத்து வங்கிவிடும் என்பதும் அந்த உடன்பாட்டில் கூறியிருக்கிறது. அத்துடன் படிம எரிபொருட் களின் உபயோகத் தில் 20 சதவிதம் குறைப்பதாக வும் கூறியிருந்தது.

படிம எரிபொருட்கள்தான் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுவே புவி வெப்பமயமாவதற்கு காரணம். தன்னுடைய தரப்பில்அமெரிக்காவானது 2005ம் ஆண்டு உமிழ்வில் 26-28 சதவீதத்தை 2025க்குள் குறைப்பதாக ஒப்புக்கொண்டது. எனினும் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் இது சாத்தியப் படாது என்பதால் அதிபர் ஒபாமா அவர்கள் நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் சுற்றறிக்கை மூலம் அமல்படுத்த முயன்றார். விஷயம் நீதிமன்றம் சென்று நிறுத்திவைக்கப் பட்டு விட்டது. இதனையடுத்து 2015ம் ஆண்டு நவம்பரில் சீனாவும் ஃபிரான்சும் ஒரு கூட்ட றிக்கை வெளியிட்டன. இதன்படி அதேயாண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெறும் மாநாட்டில் இரண்டும் இணைந்து செயல் பட்டு ஒரு உடன்பாடு உருவாவதை வெற்றி கரமாக்க முயற்சிக்கும் என்று அறிவித்தன. எப்படிச் செய்யப் போகின்றன என்று அறிவிக்க வில்லை.

பாரிஸ் உடன்பாடு
பாரிஸ் மாநாட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தன்னால் எவ்வளவு உமிழ்வை குறைக்க முடியும் என்பதும் அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு என்பது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மிகவும் பின்தங்கிய நாடு களை நெருக்கி அவர்களிடம் வாக்குறுதியளிக்க வேண்டுமென வலியுறுத்தி, அதைச் செய்யவும் வைத்தன வளர்ந்த நாடுகள். இதனால் சில நாடுகள் தங்களின் வளர்ச்சித் திட்டத்தில் சமரசம் செய்து கொண்டு உடன்படிக்கைக்கு முன்வந்தன. இவர்களை அணி சேர்த்துக்கொண்டு வளர் முக நாடுகளை குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நெருக்கி வந்தன.

பாரிஸ் மாநாட்டில் உடன்படிக்கை என்பது ஒருவழியாக எட்டப்பட்டுவிட்டது. வளர்ந்தநாடு களின் கோரிக்கையான பருவநிலை மாற்றத் தினால் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதும் பின்தங்கிய நாடுகளின் கோரிக் கையான பொதுவான ஆனால் வித்தியாசமான பொறுப்பு ( Common but differentiated Responsibilities) என்ற கோரிக்கையும் உடன்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன. நாடுகளின் வாக்குறுதி களும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் எதுவும் சட்ட ரீதியானது கிடையாது. ஐந்தாண்டுக்கொரு முறை பரிசீலனை செய்து உமிழ்வு குறைப்பில் மாற்றங்கள் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண் டும் என்பதும் உடன்பாட்டில் உண்டு. இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இது சம்பந்தமாக இன்னும் சில விஷயங்களைப் பார்க்கவேண்டும்.

அறிவியல்பூர்வகணக்கீடு
பாரிஸ் உடன்படிக்கை ஒருபுறம் இருக் கட்டும். எவ்வளவு உமிழ்வைக் குறைத்தால் புவிவெப்பமடைதலை எவ்வளவு குறைக்க முடி யும் என்பது இங்கு அடிப்படைக் கேள்வி. இதற் கான விடை பருவநிலை மாற்ற சர்வதேச நிபுணர் குழுவின் ஐந்தாவது அறிக்கையில் உள்ளது. 2012 லிருந்து 2100 க்குள் செய்யப்படும் உமிழ்வை 1,30,000 கோடி டன்னாக வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் வெப்ப உயர்வு 2 டிகிரி செல்ஷியஸூக்கு கீழ் இருப்பதற்கு 50 சதவீத வாய்ப்புள்ளது. இதையே நாம் 1,00,000 கோடி டன்னாக வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் வெப்ப உயர்வு 2 டிகிரி செல்ஷியஸூக்கு கீழ் இருப்பதற்கு 66 சதவீத வாய்ப்புள்ளது. இதையே நாம் 85,000 கோடி டன்னாக வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் வெப்பஉயர்வு 1.5 டிகிரி செல்ஷியஸூக்கு கீழ் இருப்பதற்கு 33 சதவீதவாய்ப்புள்ளது. இதையேநாம் 55,000 கோடி டன்னாக வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் வெப்ப உயர்வு 1.5 டிகிரி செல்ஷியஸூக்கு கீழ் இருப்பதற்கு 50 சதவீத வாய்ப்புள்ளது. பாரிஸ் உடன் படிக்கை நிறைவேற்றப்பட்டால் கூட 54,200 கோடிடன் 2015க்குள் உமிழப்பட்டுவிடும் அல்லது 74,800 கோடிடன் 2030க்குள் உமிழப்பட்டுவிடும். எனவே வெப்ப உயர்வை 1.5 டிகிரி செல்ஷியஸூக்குள் மட்டுப்படுத்துவது என்பதுநடக்காது.
வெப்பஉயர்வை 2 டிகிரி செல்ஷியஸ்-க்குள் கொண்டுவர மொத்த உமிழ்வை நிர்ணயித்து அதற்குள் யார் யாருக்கு எவ்வளவு என்று பேச்சு வார்த்தை மூலம் முடிவெடுக்க வேண்டும். அப் படிச் செய்யும் பொழுது வளர்ந்த நாடுகளுக்கு குறைவாகவும் வளரும் நாடுகளுக்கு அதிகமாகவும் ஒதுக்கவேண்டும். இதற்கான அடிப்படை 1870 லிருந்து 2100 க்குள் ஏற்படும் மொத்த உமிழ்வை தனிநபர் ஒருவருக்கு இவ்வளவு என்று கணக் கிட்டு முடிவெடுக்கவேண்டும். பாரிஸ் உடன் படிக்கையில் இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப் படவில்லை. இது வளர்ந்த நாடுகளுக்கு உள்ள வரலாற்றுக் கடமையை புறக்கணிக்கிறது.

உடன் படிக்கையானது உயிரோடும் எழுத் தோடும் நிறைவேற்றப்படவில்லை யென்றால் விளைவுகள் என்ன என்பதை ஏற்கனவே ப.கு.ராஜன் எழுதிய ’பேரிடர் தொடரோட்டம்’ என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விபரங்களை வாசிக்க பாரதி புத்த காலயம் வெளியிட்ட பேராசிரியர் பொ.ராஜ மாணிக்கம் எழுதிய “சூடாகும்பூமி“ என்ற புத்தகத்தையும், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “ஏமாற்றம் தரும் பாரிஸ் ஒப்பந்தம்” என்ற புத்தகத்தையும் வாசிக்கவும்.

ட்ரம்ப்திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை மூலதனத்தின் குரலாகவே பார்க்க வேண்டி யிருக்கிறது. மூலதனமானது அடிப்படையில் எந்த கட்டுப்பாடும் அதன் மீது விதிப்பதை விரும்பாது. உமிழ்வு, சுற்றுச்சுழலுக்காக இதைச்செய் என்ப தெல்லாம் மூலதனத்திற்கு உகந்ததல்ல.
மூலதனத்தின் பிடிவலுவாக உள்ள அமெரிக் காவில் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு எழுவது இயல்பானதுதான். கிளிண்டன், ஒபாமா போன்றவர்கள் முன்முயற்சி எடுப்பவர்கள் போல் தோற்றமளித்தாலும் நெருக்கிப் பிடித்துவரும் பொழுது உதறிவிட்டுச் சென்றுவிடுவார்கள். எனினும், ஒரு காலத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறியது போல் இப்பொழுது கூற முடியாது காரண காரியங்களுடன் விளக்க வேண்டும்.
எனவேதான் புவி வெப்பமயக் கோட் பாட்டையே ட்ரம்ப் நிராகரிக்கிறார். அத்துடன் புவிவெப்பமயக் கோட்பாடே அமெரிக்காவின் போட்டியிடும் தன்மையை மட்டுப்படுத்த சீனா வால் கிளப்பிவிடப்பட்ட போலி அறிவியல் கோட்பாடு என்கிறார். ஒபாமாவின் சுத்தமான ஆற்றல் திட்டமானது ஆற்றல் தொழிலை நசி வடையச் செய்து அமெரிக்க பொருளாதாரத்தை நாசாமாக்கிவிட்டது என்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

இப்படி வெளிப்படையாகப் பிரசாரம் செய்த வர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் அதிபராக இருந்த ரெக்ஸ்டில்லர் சன் என்பவரை அந்நாட்டின் வெளியுறவு செயலளராக (அமைச்சர்) நியமித்துள்ளார். படிம எரிபொருளை மட்டுப்படுத்த ஒபாமா எடுத்த முயற்சிகள் எல்லாம் படிம எரிபொருள் தொழிலதிபரை வெளியுறவு செயலராக நியமித் தன் மூலம் கிடப்பில் போட்டுள்ளார் ட்ரம்ப் . அத்துடன் நில்லாமல் அமெரிக்காவில் அதிக ஷேல் ஆயில் உற்பத்தி நடைபெறும் டெக்ஸஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்தவரும், புவி வெப்பமயமாகும் கோட்பாட்டை எள்ளி நகையாடுபவருமான ரிக்பெரி என்பவரை ஆற்றல் துறைச்செயலராக (அமைச்சர்) நியமித்துள்ளார். ஆக உள்நாட்டில் இதுவரை எடுக்கப்பட்ட புவி வெப்பமயத்திற்கெதிரான நடவடிக்களை முடக்க இதன் எதிர்ப்பாளரை ஆற்றல் அமைச்சராகவும் வெளிநாட்டில் புவிவெப்பமய எதிர் நடவடிக் கையை முடக்க படிமஎரிபொருள் தொழிலதி பரையே வெளியுறவு அமைச்சராகவும் நியமித் திருப்பது அவர் தேர்தல் பிரசாரத்தில் கூறியதை நிறை வேற்றுகிறார் என்பதையே உறுதிப்படுத்தியது.

பாரிஸ் உடன்பாட்டிலிருந்து வெளியேறு வதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா பருவநிலை மாற்றத் தடுப்புக் குழுக்களின் விவாதங்களில் பங்கெடுக்க முடியாது. ஆனாலும் பாரிஸ் உடன் படிக்கையானது சட்டபூர்வமானது அல்ல என்பதால் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் செயல்படுவார்.

இன்னொருபுறம் இதை வெளிப்படையாக எதிர்த்து வெளியேறினால் 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளசுத்த ஆற்றல் சந்தையிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலையும் ஏற்படும். பாரிஸ் உடன் படிக்கையில் அமெரிக்கா ஒப்புக்கொண்டபடி அதன் உமிழ்வானது 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2025ம்ஆண்டுக்குள் 25-28% குறைப்பது என்பது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை சீனாவுடனும் செய்திருக்கிறது. எனவே சீனா உடன்பாட்டை அமல்படுத்த நெருக்கடி கொடுக் கும். சீனப் பொருளாதாரமானது வலுவாக இருப்பதால் அமெரிக்காவானது தன்னுடைய இஷ்டத்திற்கு வெளியேற முடியாது.

அதேபோல் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இதுபற்றிக் கூறுகையில் அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறக் கூடாது என்றுள்ளார். ஆக உலகநாடுகளிட மிருந்து தனிமைப்படும் நிலைமை அமெரிக் காவிற்கு ஏற்பட்டுள்ளது. இன்னொருபுறம் உலக நாடுகள் துரித நடவடிக்கையில் இறங்கிவருவ தால் சுத்த ஆற்றல் தொழில் முதலீடு அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்த மூலதனச்சந்தையி லிருந்து அமெரிக்க மூலதனம் எப்படி ஒதுங்கி யிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக அதிபர் ட்ரம்பால் தற்போது நியமிக்கப்பட்டிருக் கும் நிக்கிஹேலி சுத்த ஆற்றல் சந்தையின் வளர்ச்சி பற்றி கூறுகையில், நாங்கள் எங்கள் தொழில் வாய்ப்புகளை எந்தக் காரணம் கொண்டும் நழுவவிடமாட்டோம் என்கிறார்.

புவிவெப்பமயமாக்கலுக்கு முதலாளித்துவத் தீர்வு
அமெரிக்காவைப் பொருத்தவரை மூலதனத் தின் இரு உற்பத்திக்கிளைகளுக்குள் சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது படிம அடுத்த கட்டத்திற்கு அவர்களின் இந்த அணுகுமுறை செல்கிறது. சந்தையை வைத்து தீர்க்க முயற்சிப்ப தும், மூலதன இயக்கப் போக்கில் மனிதத் தலையீடு கூடாது என்பதும் மனிதசமூகத்தின் பகுத்தறியும் ஆற்றலை மூலதனத்திற்கு பின்னால் நிறுத்துவதும் ஆபத்தான போக்காகும். இந்த ஆபத்தானது மூலதனப் பிரிவுகளுக்குள் நடை பெறும் பேரம் ஒரு முடிவை எட்டும் முன் மனிதசமூகத்தின் இருத்தலுக்கு பேரபாயத்தைத் தோற்றுவித்துவிடும். இப்போதைக்கு அமெரிக் காவின் படிம எரிபொருள் மூலதனம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக நினைக்கிறது. அதன் வெற்றி நீண்டகாலம் நிலைக்காது.

ஒரு கருத்து

  1. […] அவரது ஆட்சி நூறு நாட்கள் முடிவடைவதற்குள் அமெரிக்க மக்கள் தங்களது அதிபர் தேர்வு சரியானதல்ல என்று உணரத் துவங்கினர். ஜூன் இதழில் தோழர் விஜயன் உலக வெப்பமயமாதல் பிரச்ன…. […]

கருத்தைப் பதிவு செய்யவும்