தோழர் கி. வரதராசன் – ஓர் பன்முகத் தலைவர்

261
0
SHARE

ஆர். ஸ்ரீதர்

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் பேரதிர்ச்சியை சந்தித்துவரும் நிலையில் நமக்கெல்லாம் மற்றுமொரு பேரதிர்ச்சியாய் வந்தந்த செய்தி. நம் அன்புத் தலைவர் கே. வரதராஜனின் மறைவுச் செய்தி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. கே.வி. என்றழைக்கப்பட்ட தோழர் கே.வரதராஜன் திருச்சி மாவட்டம் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வரிசையில் மற்றொரு அற்புதமானத் தலைவர்.

             திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பட்டய பொறியியல் படிப்பில் தேர்ச்சிபெற்று, நெல்லையில் பொறியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். அங்கு  தோழர்  பாலவிநாயகம்  அவர்கள் மூலமாக பொதுவுடைமை தத்துவத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். நேர்மையும், போர்க்குணமும் மிக்க அவரால் அரசுப் பணியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. வேலையை ராஜினாமா செய்து நேரடி அரசியலில் ஈடுபட திருச்சிக்கு வந்து சேர்ந்தார்.

பொன்னி  அச்சகம் என்ற பெயரில் துவங்கப்பட்ட அச்சகம் பெயரளவுக்குத்தான். கே.வி. யின் முழு கவனமும் கட்சிப் பணியில்தான் இருந்தது. திருச்சி மாவட்டத்தில் கட்சியின் வட்டாரச் செயலாளர், மாவட்ட செயலாளர், விவசாய இயக்கத்தின் தலைவர் என பல பொறுப்புகளில் பணியாற்றினார்.  அவசரநிலை காலத்தில் தலைமறைவாக கட்சிப் பணியாற்றி, கட்சியின் 10-வது மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் கே.வி. மாவட்டத்தில் இயக்கப்பணி ஆற்றிய காலம் திருச்சி மாவட்ட கட்சி வரலாற்றில் பொற்காலம் எனலாம். கட்சி பெரிதும் வளர்ச்சிபெற்ற காலம் அது.                   

போராட்ட அலையை பயன்படுத்திய வியூகம்

தொழிற்சங்க அமைப்புகள் மட்டுமே செயல்பட்டு வந்த காலத்தில் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் கிராமப்புற இயக்கங்களை வலுவாக உருவாக்கிட  தோழர் கே.வி. எடுத்த முன்முயற்சிகளின் பலனாக வலுவான செங்கொடி இயக்கத்தையும், கட்சிக்கு தலைவர்கள் முதல் பொருத்தமான ஊழியர்களையும்  கொண்டுவர முடிந்தது என்றால் அது மிகையாகாது.

இந்திய நாட்டில் அவசர நிலையை எதிர்த்து எழுந்த ஜனநாயக பேரெழுச்சி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் உருவானது.  இதனை தொடர்ந்து மே.வங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில்  அடுத்தடுத்து இடதுசாரிகளின் ஆட்சி அமைந்தன.  இடதுசாரி அரசியல் ஊக்கம் பெற்றது.  உழைக்கும் மக்கள் தமது உரிமைகளுக்காக போராட்டக் களம் கண்டனர். இதனால் நாடு முழுவதும் போராட்ட அலைகள் உருவாயின. 

இந்த பின்னணியில் தமிழகத்திலும், அதன் ஒரு பகுதியாக ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்திலும், பல குறிப்பிடத்தக்க போராட்டங்கள் வெடித்தன. அக்காலத்தில் மாவட்டத்தில் வெடித்த வீரம் செறிந்த போராட்டங்கள் சிம்கோ தொழிலாளர் போராட்டம், தினமலர் தொழிலாளர் போராட்டம், BHEL மற்றும் கரூர் LGB தொழிலாளர் போராட்டங்கள் ஆகும். இவை அனைத்தும் தொழிற்சங்க போரட்டங்கள் என்றாலும் கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற முறையில் அனைத்து போராட்டங்களிலும் தோழர் கே.வி. யின் வழிகாட்டுதல் மற்றும் பங்கு மகத்தானது. 

விவசாய இயக்கத்தின் சிற்பி

தோழர் கே.வி. யின் பங்களிப்பின் பிரதான முனை கிராமப்புற இயக்கங்களை வளர்ப்பதிலேயே இருந்தது. கிராமப்புற இயக்கம் வலுவடையாமல் மக்கள் ஜனநாயகப் புரட்சி மலராது. எனவே நமது அடிப்படை பணி கிராமப்புற மக்களைத் திரட்டுவதே என்பதை உணர்ந்து அதைத் தனது முன்னுரிமைப் பணியாக தேர்வு செய்தார். கிராமப்புறத்தின் அடித்தட்டு மக்களான சிறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரையும்  திரட்டி இயக்கங்களை நடத்தினார்.  திருச்சி, லால்குடி, காட்டுப்புத்தூர் உட்பட்ட முசிறி தாலுகாக்களில் அக்காலத்தில் உக்கிரமான கூலிப் போராட்டங்கள் நடந்தது. அவை அனைத்தும் தோழர் கே.வி. யால் திட்டமிடப்பட்டு, நல்ல தயாரிப்புடன் வெற்றிபெறச் செய்த, ஏராளமான தாக்குதல்களும், வழக்குகளும் சந்தித்து நடந்த அந்த போராட்டங்களில் நிறைய தலைவர்கள் உருவானார்கள்.  இந்த போராட்டத்தின் பொழுது அரியலூர் பகுதியில் அவரை கொல்ல சதி நடந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை  “திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில்  வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடைந்துள்ளன. செங்கொடி இயக்கம் கிராமப்புறங்களில் இளைஞர்களை ஈடுபடுத்தி திட்டமிட்டு ஊடுருவல்” என  முழுப்பக்க கட்டுரை வெளியிட்டது.               பச்சைமலையில் உள்ள மலையக மக்களை திரட்டிட முயற்சிக்கப்பட்டு வலுவான இயக்கங்கள் நடந்தன. 

விவசாய இயக்கத்தில் அவரது பணி இறுதிவரை தொடர்ந்தது. மாநில பொது செயலாளர் பின்னர் அகில இந்திய பொது செயலாளர் என விவசாய இயக்கத்தில் தொடர்ந்து ஆழமான கவனம் செலுத்தினார்.

ஊழியர்கள் கட்சியின் சொத்து           

போராட்டப் பணியானாலும், தேர்தல் பணியானாலும் அல்லது மாநில அளவிலான மாநாட்டு பணிகள் என்றாலும் அதன் தயாரிப்பு பணிகளை திட்டமிடுவது/ பணிகளுக்கு  பொருத்தமான ஊழியர்களைத் தீர்மானிப்பது, உரிய ஸ்தாபன ஏற்பாடுகளைச் செய்வது, அதைத் தொடர்ந்து கண்காணித்து இயக்குவது என தோழர் கே.வி. யின் பணி திட்டமிட்டதாகவும், துல்லியமாகவும் இருக்கும். இந்த பணிகள் முடிவுற்றாலும் அந்த பணியில் கிடைத்த கட்சிக்கு அப்பாற்பட்ட தொடர்புகளை கட்சிக்கு ஆதரவாக மாற்றுவதில் திட்டமிட்டு செயலாற்றினார். கட்சிக்கு ஊழியர்களை வென்றெடுத்தார்.

கிளர்ச்சிக்காரர், பொதுக்கூட்ட பேச்சாளர், எழுத்தாளர் என அவருக்கு பன்முகம் . இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மிகச் சிறந்த அமைப்பாளர் (ஆர்கனைசர்) என்ற அம்சமே மேலோங்கிய பண்பாகும்.  அவர் காலத்தில் ஏராளமானவர்கள் கட்சி ஊழியர் ஆனார்கள். ஊழியர்களைக் கண்டறிவது, அவர்களுக்கு தைரியமாக பொறுப்புகளை அளிப்பது, சுதந்திரமாக செயல்படவிட்டு அனுபவத்தின் மூலம் கற்றுத் தருவது, நல்ல பண்புகளை ஊக்குவிப்பது என செயல்பட்டு கட்சிக்கு ஏராளமான தோழர்களை, நல்ல  ஊழியர்களை   உருவாக்கினார்.   அந்த ஊழியர்களை கட்சி விரிவாக்கத்திற்கும், கிராமப்புற இயக்கங்களை கட்டுவதற்கும் பயன்படுத்தினார்.

அனைத்து ஒன்றியங்களிலும் பொருத்தமான ஊழியர்களை கண்டறிந்து அவர்களை அவ்விடங்களுக்கு அனுப்பிவைத்து கிராமங்களிலேயே அவர்கள் தங்கி வெகுஜன அமைப்புகளை உருவாக்கி கட்சி ஸ்தாபன விரிவாக்கத்திற்கு பல வகையிலும் உதவியர்  தோழர் கே.வி.     

அவர் எப்போதும் ஊழியர்களை கட்சியின் சொத்தாக நினைப்பார். அவர்களது குடும்ப பிரச்சனை முதல், வாழ்வாதாரம் வரை அக்கறையுடன் தலையிட்டு தீர்வு காண்பார்.  அவரிடம் எப்போது வேண்டுமானாலும் எந்த பிரச்சனை குறித்தும் மனம்விட்டு பேசலாம். தவறுகள் ஏற்படும்போது அவற்றை சுட்டிக்காட்டி திருத்துவார். ஆனால் ஊழியரை பாதுகாப்பார்.  பல ஸ்தாபன பிணக்குகளிலிருந்து தோழர்கள் சோர்வுற்ற நிலையில் அவரால் பாதுகாக்கப்பட்ட பலர் இன்றும் தலைவர்களாக உள்ளனர்.

கட்சி தோழர்களை பாதுகாப்பதில் நெகிழ்வான அணுகுமுறை கடைபிடித்த அதே சமயத்தில் குழு மனப்பான்மையை கடுமையாக எதிர்த்தார். கட்சிக்குள் குழுமனப்பான்மை எழுந்த பொழுதெல்லாம் மிக விழிப்புணர்வுடன் இருந்து கட்சிக்கு பாதகம் ஏற்படாமல் இருப்பதை உத்தரவாதம் செய்தார்.

தோழர் கே.வி. காலத்தில்தான் திருச்சி மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட குழுவுக்கு சொந்த கட்டிடம் உறையூர் பகுதியில் வாங்கப்பட்டது. கட்சிக்கு நிதி திரட்டுவதிலும் கே.வி. ஆழமாக கவனம் செலுத்தினார். அவரது மாவட்ட செயலாளர் காலத்தில் அனேகமாக ஒரு மாதம் கூட எந்த ஊழியருக்கும் அலவன்ஸ் நிலுவை இருந்தது இல்லை.

இவரது காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் அமைப்பான சோசலிஸ்ட் ஜனநாயக வாலிபர் முன்னணி சார்பாக முதல் முறையாக திருச்சியில்தான் இளைஞர் முழக்கம் பத்திரிக்கை அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.  பின்னர் இந்த பெயர் தமிழக அளவில் வாலிபர் இயக்கத்தின் பத்திரிக்கைக்கு தேர்வு செய்யப்பட்டது.

வாசிப்பை நேசித்த தலைவர்

தோழர் கே.வி. அவர்கள் ஆழமான புத்தக வாசிப்பாளர். பலதரப்பட்ட நூல்களை வாசிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. அரசியல் நூல்கள் மட்டுமல்லாது அப்பொழுது தமிழகத்தில் பிரபலமாக இருந்த ஆனந்த விகடன்/குமுதம் ஆகியவற்றையும் தவறாது வாசிப்பார். இத்தகைய வாசிப்புகள் அரசியல் உரைகளின்போது தனக்குப் பயன்பட்டன என கூறுவார்.

தோழர் கே.வி. மாநிலம் முழுவதும் கட்சிக் கல்விப் பணியில் ஈடுபட்டு வகுப்புகள் எடுப்பார். இந்திய தத்துவம் குறித்து தத்துவ தரிசனம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  விவசாய இயக்கத்திற்காக ஏராளமான சிறு நூல்களையும் எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்சனையையொட்டி தேசிய இன பிரச்சனை பற்றிய கட்சியின் நிலைபாடு குறித்த விவாதங்கள் கட்சிக்குள்ளும் வலுவாக எழுந்தது. தேசிய இனப் பிரச்சனையை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து அக்காலத்தில் தோழர் கே.வி. அவர்கள் தான் எழுதிய கட்டுரைகள் மூலமும், பேரவை கூட்டங்கள் மூலமும் விளக்கினார். கட்சித் தோழர்களுக்கு குறிப்பாக இளம் தோழர்களுக்கு இந்த சிக்கலான பிரச்சனையில் கட்சியின் நிலைபாடு குறித்து நல்ல புரிதலை ஏற்படுத்தினார். இதற்காக தேசிய இனப் பிரச்சனை குறித்து லெனின் மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களை அவர் ஆழமாக கற்றார். அவற்றை நமது தோழர்களுக்கு எடுத்து கூறினார். குறிப்பாக தேசிய பிரச்சனை குறித்து லெனினுக்கும் ரோசா லக்சம்பர்க்குக்கும் இடையே நடந்த செறிவான கருத்து பரிமாறல்களை விளக்கி எப்படி இலங்கை பிரச்சனையை அணுக வேண்டும் என்பதை வழிகாட்டினார். அவரது அணுகுமுறை காரணமாக 1980இன் தொடக்கத்தில் பல புதிய தோழர்கள் குறிப்பாக பி.எச்.ஈ.எல். பகுதியில் தமிழ் தேசிய வெறிக்கு பலியாவதை தடுத்தார்.

இந்திய நிலையில் சாதியம் குறித்து சரியான புரிதலுடன் பொருளாதார போராட்டத்துடன் சமூக பிரச்சனை போராட்டங்களையும் இணைக்க வேண்டும் என்றார்  தோழர் கே.வி.    மிகவும்  உறுதியாக இருந்து தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு  முன்னணி உருவாக்கப்படுவதற்கு தோழர் கே.வி. காரணமாக இருந்தார். அகில இந்திய அளவிலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை என்ற அமைப்பு உருவானபோது தோழர் கே.வி. அதில் முக்கிய பங்கு வகித்தார். மாவட்ட பொறுப்புகளிலிருந்து விடுபட்டு மாநில, அகில இந்திய மட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக, அகில இந்திய விவசாய சங்க பொதுச் செயலாளராக என பல பொறுப்புகளில் இருந்தபோதும் எப்போதும்போல்  அணுகுவதற்கு யாருக்கும் எளியவராகவே இருந்தார்.

அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தேன். நான் பார்த்த அனேகமாக பெரும்பாலான புகைப்படங்களில் கே.வி.யை சுற்றியிருந்தவர்கள் புன்னகையுடனேயே இருப்பதை பார்க்க முடிந்தது.  நகைச்சுவையும், கலகலப்பான குணமும் அவரது இயல்பு. எந்த கடுமையான சூழலையும் இலகுவாக மாற்றும் குணம் அவரிடம் இருந்தது. 

 தோழர் கே.வி. கட்சியை தன்  குடும்பமாக கருதியது மட்டுமல்ல; குடும்பத்தையும் அரசியல்படுத்தினார். அவரது மனைவி தோழர் சரோஜா மாதர் சங்க செயல்பாட்டில் இருந்தார்.  மகன் பாஸ்கர், சகோதரர்கள், மருமகன்கள் என தன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் கம்யூனிஸ்டுகளாக ஆக்கியதில் தோழர் கே.வி. யின் பங்கு உண்டு. 

பன்முகத் தன்மையுடன் சிறந்த தலைமைப் பண்பாளர், நமக்கெல்லாம் வழிகாட்டிய அன்புத் தலைவர் கே.வி. இன்றில்லை. ஆனால் அவர் விட்டுச்சென்ற மகத்தான வாழ்க்கை நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக என்றென்றும் விளங்கும்.  

(தோழர் கே.வரதராஜன் மார்க்சிஸ்ட் இதழுக்கு 1980-1990 ஆண்டுகளில் பல தத்துவார்த்த கட்டுரைகளை பங்களித்திருக்கிறார்.)

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்