சொல் அகராதி: மாறா மூலதனம் (Constant Capital) – மாறும் மூலதனம் (Variable Capital)

335
0
SHARE

கே.சுவாமிநாதன்

மூலதனத்தின் சேர்மானம் மிக முக்கியமான குறியீடு ஆகும். சரக்கு உற்பத்தியில் இரண்டு வகையான மூலதனங்கள் உள்ளடங்கியுள்ளன. ஒன்று மாறா மூலதனம். இன்னொன்று மாறும் மூலதனம். 

கடந்த இதழில் சமூக அவசிய உழைப்பு நேரம், கூலி உழைப்பு, உபரி உழைப்பு, மூலதன உருவாக்கம் ஆகியவை  பற்றி நாம் பார்த்தோம். 

மூலதனத்தின் சேர்மானமும்  (CC – Composition of Capital) இன்னும் நமது புரிதலுக்கு தேவைப்படுகிற ஒன்றாகும். 

ஒரு சரக்கு உற்பத்தியில் கச்சா பொருட்கள், இயந்திரம், உழைப்பு சக்தி ஆகியவை ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றில் எவை எவை சரக்கு இறுதி வடிவம் பெறும் போது அப்படியே மதிப்பு மாறாமல் அதற்கு மாற்றப்படுகிறது? எது இறுதி சரக்கு வடிவம் பெறும் போது கூடுதல் மதிப்பை அதற்கு தருகிறது? என்ற வித்தியாசமே மேற்கூறிய இரு வகை மூலதனத்தை வகைப்படுத்துகிறது.  

உதாரணத்திற்கு, ஒரு பஞ்சாலையில் கச்சாப் பொருளாக பருத்தி (x) பயன்படுத்தப்படும். இயந்திரங்கள் (d) ஈடுபடுத்தப்படும்.  பின்னர் உழைப்பு சக்தி (v) ஈடுபடுத்தப்பட்டு சரக்கு உற்பத்தி நடைபெறும். அவர் இம் மூன்றுக்காகவும் செலவழிப்பதை இப்படி நாம் கூறலாம். 

M 1 = x+ v+ d 

இந்த நிலையில் மூன்றும் புதிய மதிப்புகளை உருவாக்காததால் 

M1 = C 1 (மூன்றின் மதிப்பு)

ஆனால் இறுதி சரக்கின் மதிப்பு இந்த M 1 ஐ விட அதிகமாக உள்ளது என்பதே உண்மை. காரணம் இந்த மூன்றோடு உழைப்பு சக்தி உருவாக்குகிற உபரி மதிப்பும் சேர்ந்து இறுதி சரக்கின் மதிப்பு (C 2) அதிகமாக இருக்கிறது. 

அதாவது கச்சா பொருள் உற்பத்தி வழிமுறைக்கு ஆளாகும் போது உரு மாறுகிறதே தவிர, அது கூடுதல் மதிப்பு எதையும் உருவாக்குவதில்லை. அதன் மதிப்பு அப்படியே இறுதி சரக்கிற்கு மாற்றப்படுகிறது. இயந்திரம் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது தேய்மானம் அடைகிறது. அந்த தேய்மானம் சரக்கின் இறுதி மதிப்பில் அப்படியே இடம் பெறுகிறது. அதுவும் கூடுதல் மதிப்பு எதையும் சேர்ப்பதில்லை. 

ஆனால் உழைப்பு சக்தி சரக்கை உருவாக்கும்போது கூலி உழைப்பிற்கும் மிகுதியாக உபரி உழைப்பை தருகிறது. அதுவே உபரி மதிப்பாக (s) இறுதி சரக்கிற்கு அது கூடுதல் மதிப்பை தருகிறது. இதுவே மூலதன உருவாக்கத்தின் ஊற்றுக் கண் ஆகும். 

இதை இப்படி நாம் கூறலாம். 

C 2 = x + v + s + d 

மீண்டும் தெளிவிற்காக சொல்வதானால் 

x – கச்சா பொருள்

v – உழைப்பு சக்தி

s – உபரி மதிப்பு

d – தேய்மானம்

C 1 ன் மதிப்பை விட C 2 மதிப்பு அதிகமாக இருக்கிறது. இச் சரக்கு விற்கப்படும் போது கிடைப்பதை M 2 என்று கொண்டால் C 2 = M 2 ஆக கொள்ளலாம்.

இதில் லாபம் எது எனில் இறுதி சரக்கின் விலையான M 2 க்கும் மூன்று உள்ளடக்கமான – கச்சா பொருள், இயந்திர தேய்மானம், உழைப்பு சக்தி – ஆகியவற்றை வாங்க செலவழித்த தொகையான M1க்குமான வித்தியாசம் ஆகும். 

அதாவது லாபம் M 2 – M 1 = s

இப்போது மாறா மூலதனம் என்றால் என்ன என்பதற்கு வருவோம். கச்சா பொருளும், இயந்திர தேய்மானமும் இறுதி சரக்கு உருவாகும்போது உரு மாறினவே தவிர எந்த புதிய மதிப்பையும் கூடுதலாக தரவில்லை. ஆகவே அவற்றை மாறா மூலதனம் (CONSTANT CAPITAL) என்கிறோம். இதை C என வைத்து கொள்வோம்.

ஆனால் உழைப்பு சக்தி மட்டும் கூடுதல் மதிப்பை இறுதி சரக்கின் மதிப்பிற்கு தருகிறது. கூலி உழைப்பிற்கு மிகுதியாக அது தருகிற உபரி உழைப்பின் பங்களிப்பு அது. அதனால் v என்பது v + s ஆகிறது. ஆகவே உழைப்பு சக்தியின் பங்களிப்பை “மாறுகிற மூலதனம்” (Variable Capital) என்கிறோம். இதை V எனக் கொள்வோம்.

கச்சா பொருள், இயந்திரம் ஆகியவற்றுக்குள்ளும் உழைப்பு இருக்கிறது. ஆனால் அது உறைந்து போன “செத்த உழைப்பு”. ஆனால் புதிய சரக்கை உற்பத்தி செய்யும் போது அதில் ஈடுபடும் உழைப்பு சக்தி ” உயிருள்ள உழைப்பாக” புதிய கூடுதல் மதிப்பை தருகிறது. 

இப்படி மூலதனத்தின் சேர்மானத்தை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? இது தொழில் நுட்ப பயன்பாட்டின் அளவை,  பங்களிப்பை பற்றிய குறியீடு என்பதே அதன் முக்கியத்துவம். ஒரு பெரும் தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகம் இருக்கும். சிறு தொழில்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருக்கும்.

மூலதன சேர்மானம் (CC) = மாறா மூலதனம்/ மாறும் மூலதனம் (C / V)

மேற்கண்ட விகிதம் அதிகமாக இருந்தால் உற்பத்தியில் தொழில் நுட்ப பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்று பொருள். இவ் விகிதம் குறைவாக இருந்தால்  உற்பத்தியில் தொழில் நுட்ப பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று பொருள். இக் கருத்தாக்கத்தை கொண்டு ஒரு தொழிற்சாலையில், தொழிலில், சமூகத்தில் மூலதன சேர்மானம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய முடியும்.

இயந்திரம் அதிகமாக பயன்படுத்தப்படும்போது சமூக அவசிய உழைப்பு நேரம் இன்னும் குறையும். ஆனால் தொழிலாளியின் வேலை நாள் அளவு குறைக்கப்படுவதில்லை. முதலாளித்துவ சமூகம் அதை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றே அலைவதை பார்க்கிறோம். அப்படியெனில் C/V அதிகமாக இருந்ததெனில் உழைப்பு சக்தி பயன்பாட்டில் கூலி உழைப்பை குறைத்து உபரி உழைப்பை அதிகமாக்குகிறார்கள்; அதிகமான உபரி மதிப்பு முதலாளிகளால் ஈட்டப்படுகிறது என்பதே அதன் பொருள். ஆகவே மூலதன சேர்மானத்தில், மாறா மூலதன உள்ளடக்கம் அதிகரிக்கும் போது சுரண்டல் அதிகரிக்கிறது என்று பொருள். தொழில் நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படும் பெரு நிறுவனங்களின் ஊழியர்க்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். ஆனால் அவர்கள் செலுத்துகிற உபரி உழைப்பு மிகுவதால் சுரண்டலும், மூலதனக் குவிப்பும் அதிகமாகிறது என்பதே உண்மை. 

தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பெருந்தரவு (Big data) பயன்பாடு ஆகியன விரிவாக்கம் பெறும் காலம் ஆகும். ஆகவே அவை உபரி மதிப்பை எவ்வாறு அதிகரிக்கும்; மேலும் மேலும் குவிக்கும் என்ற புரிதலுக்கு இச் சொற்கள் பற்றிய புரிதல் முக்கியமானது ஆகும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்