கொரோனா நோய் தொற்றும் முதலாளித்துவ “கொள்ளை“ நோயும்

226
0
SHARE

எஸ். கண்ணன்

கொரோனா நோய்த் தொற்று புலம் பெயர் தொழிலாளர்களை, அவர்களது பிறப்பிடம் நோக்கி விரட்டுகிறது. நடந்தே செல்வது உள்ளிட்டு அனைத்து வழிமுறைகளிலும் சொந்த ஊர்களை நோக்கிய பயணம் குவியல் குவியலாக அரங்கேறியது. முதலாளித்துவத்தை ஆதரிப்போரும் கூட இந்த பயணங்களை கண்டு பரிதாபப்பட்டார்கள். உணவு, தண்ணீர் தருவது என சிறு சிறு உதவிகளைச் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தன்னார்வ குழுக்கள் ஒருபகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அமைப்புகளும் பல்வேறு வகையில், அரசுகளை நிர்பந்தித்து, உணவு, இருப்பிடம், வாடகை வசூலித்தலில் இருந்து காப்பது, வேலை செய்த நிறுவனங்களிடம் வர வேண்டிய கூலியை பெற்று தருவது போன்ற பணிகளை, தனது வர்க்க நலனில் இருந்து செய்துள்ளன. ஆனாலும் அரசின் அக்கரையின்மை, வேலைக்கு அழைத்து வந்த நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாக, பலகோடி தொழிலாளர்கள் இன்னும் வழியில்லாமல் தவித்து வருகின்றார்கள். தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய தொழிலாளர்களும், துயரத்தை அனுபவிக்கின்றனர்.

உலகில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து உழைக்கும் உழைப்பாளர்களும் தங்களின் சொந்த புரிதல், வருமானம், வசிப்பிடத்தில் உள்ள சமூகப்பாதுகாப்பு ஆகிய தன்மைக்கு ஏற்ப, ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இந்தியாவிற்குள் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்தோர், ஒரு மாநிலத்திற்குள்ளேயே புலம்பெயர்ந்தோர் என இருவிதமானவர்கள் உள்ளார்கள்.

இவ்வகைப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய நிலைப்பாட்டை அரசு பொதுமுடக்கத்தின் முதல் 45 நாட்களுக்கு வெளியிடவில்லை. அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை மதிக்கவில்லை. நடக்க துவங்கியவர்களை பார்த்து ஆறுதல் சொன்னவர்களையும் அரசு ஏளனம் செய்தது.

நீதிமன்றம் தொடர்ந்து அரசின் கொள்கைகளில் தலையிட முடியாது என மறுத்து, பின் 65ஆம் நாளில் தனது ‘ஞானக்கண்ணைத்’ திறந்து, இது சமூக அவலம் என்று கூறியதுடன், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 5 விதமான வழிகாட்டுதல்களையும் அளித்தது.

புலம் பெயர்தல் புதிதல்ல

நிறைய பஞ்சங்களின் வரலாறும், போர்களின் வரலாறும், புலம் பெயர் வாழ்க்கை உலகம் முழுவதுமே இருந்துவருவதை காட்டுகிறது. புலம்பெயர்தல் பலஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. காலனியாதிக்கம், குடியேற்றம், இப்போது நடைபெறும் மறுகுடியேற்றம் ஆகியவையும் புலம் பெயர் நடவடிக்கைக்கு காரணமாக இருந்துவருகின்றன. 20ஆம் நூற்றாண்டு காலத்தில் உள்நாட்டுப் போர்கள் காரணமாக புலம்பெயர்தல்கள் நடந்திருக்கின்றன. யூதர்கள், இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் இவ்வகையில் புலம் பெயர்ந்து வாழத் தள்ளப்பட்டுள்ளனர். அகதிகள் ( டயஸ்போரா) என்ற பெயரில் தற்காலிக புலம் பெயர்ந்த வாழ்க்கை என அழைக்கப்பட்டலும், நீடித்த வாழ்க்கை முறை, அடுத்த தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, தஞ்சம் புகுந்த நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்க்கையைத் தொடரும் சூழலும் உருவாகியுள்ளது.

சீனர்கள், ரோம் நகர மக்கள், இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளனர். இரண்டாம் உலக போருக்கு முன்பு தொடங்கி   யூதர்களும், போர் முடிவு பெற்றதற்கு பின் கணிசமான ஜெர்மானியர்களும், கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்காத பணக்காரர்களில் ஒருபகுதியினரும், அமெரிக்காவிற்கு சென்று குடியுரிமை பெற்றார்கள்.

இந்தியாவில் இருந்து 3 கோடி மக்கள் உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில், 0.23 சதம். ஆனால் அவர்கள் தேடித்தரும் செல்வம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2015 கணக்கு படி, 6900 கோடி டாலர். இது ஜி.டி.பி. யில் 3.4 சதவீதம் என்கின்றனர். அமெரிக்காவின் 25 சதம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தியர்கள் என்பதை டியூக் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன, (இந்த விவரம் காரணமாக,  மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கூடுதல்  கரிசனத்தை வெளிப்படுத்துகிறதோ, என்ற எண்ணமும் தோன்றுகிறது).

அட்லாண்டிக் கடல் பகுதியில் நடந்த அடிமை வர்த்தகம் முக்கியமானது. 16ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க மக்கள் ஏராளமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டார்கள். பின்னர் 1910 முதல் 1970 வரை அமெரிக்காவில் ஏற்பட்ட அடுத்த கட்ட நகர்மயமாதலுக்காக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆகியோர், உழைப்பு சுரண்டலைத் தொடர்ந்து அல்லது தரம் குறைவான வேலையைச் செய்வதற்காக புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் உலகின் பல நாடுகளின் உழைப்பாளர்களும் அமெரிக்காவில் மிக கொடிய உழைப்பு சுரண்டலை சந்திக்கும் அவலத்தை ஏராளமான எழுத்தாளர்கள் வெளிக்காட்டுகின்றன. வளர்ந்த பல நாடுகள், ஏற்கனவே இந்த அவலத்திற்கு வழிகாட்டுதல்கள் செய்துள்ளது.

கூலி உழைப்பாளர்களின் புலம்பெயர்வு:

இப்போது இந்தியா கண்ணுற்று வருகிற புலம் பெயர் தொழிலாளர்களின் அவலம், தாராளமய பொருளாதார கொள்கை கிராமங்களை அழித்து வருவதில் இருந்து உருவாவதாகும். நிலமற்ற கூலி தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு அவமானங்கள், அவர்களை கூலி உழைப்புக்காக கிராமங்களை விட்டு விரட்டுகிறது. புலம் பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை பல ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். கூலி அடிமைகளாக நிலத்தில் உழைப்பதை விட, தொலை தூரத்தில், தன்மானத்தை தொலைத்து வாழ்வது மரியாதை என உணர்கின்றனர்.

சாதி ஒடுக்குமுறையும், நிலமற்று வாழ்வதன் சிரமங்களும், கங்கை, பிரம்மபுத்ரா, யமுனை, மகாநதி, ஹூப்ளி, காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை என ஆறுகள் பாய்ந்து வளம் கொழித்தாலும், “எங்களுக்கு இடமளிக்கவில்லை. இந்த பிழைப்பு எனது பெற்றோர்களுடன் போகட்டும், என புறப்பட்டவர்கள்” இத்தகைய கூலித் தொழிலாளார்கள் என காட்டுகின்றன  சில ஆய்வுகள். சிறு, குறு நிலவுடைமையாளர்களும் உணவு தேவைவைக்காக, நிலத்தில் உழைக்கின்றனர். பகுதியளவில் புலம் பெயர்ந்து பணத் தேவையை ஈடுகட்டுகின்றனர்.

நிலமற்ற மக்களிடம் உழைப்புச் சாதனம் ஏதும் சொந்தமாக இல்லை. உழைப்புச் சக்தியை விற்க பயணப்படுவது அதிகரித்த காலமாக தாராளமய காலகட்டம் அமைந்தது. குறிப்பாக பழங்குடி மக்கள் இக்காலத்தில் அதிக அளவில் தங்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தெற்கு குஜராத் வனங்களில் வசித்த, பில்ஸ் எனும் பழங்குடி மக்கள் 85 சதம் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். இது போல் தான், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி பழங்குடி மக்கள் மிகப்பெரிய அளவில்  புலம் பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பில்ஸ் மற்றும் தானே (மகாராஷ்ட்ரா) பழங்குடி மக்கள் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து செல்கின்றனர். இவர்களை பொறுத்தளவில் பெண்கள் வேலைக்கு செல்வது பண்பாட்டு ரீதியில் இழுக்கானது. ஆனால் புலம்பெயர்ந்த இடத்தில், பெண்களும் வேலை செய்யாமல், குடும்ப பாரத்தை இழுக்க முடியாது. இதன் காரணமாக மனப்போராட்டத்திற்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களின் கருத்து மாறுகிறது. பெண்களும் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

புலம் பெயர்தலுக்கு மற்றொரு காரணமாக சாதியும் இருக்கிறது. நிலமற்ற கூலி உழைப்பாளர்களில் தலித் மக்களே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவை பொறுத்தளவில் கடந்த காலத்தில் சாதி அடிப்படையிலான சுரண்டலை தக்கவைக்கும் எஜமானிய முறை ( Jajmani System) இருந்தது. இது 1980கள் வரையிலும் சில கிராமங்களில் நீடித்ததாக சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போதும் ஒருசில கிராமங்களில் இந்த கொடுமையான சூழல் இருக்கிறது.  உணவுக்காக மட்டும் அனைத்து வகை உழைப்பையும் மேற்கொள்ளும் கொடுமையை எஜமானிய முறை என்கின்றனர். பெரும்பகுதி தலித், உழுபடைகருவிகள் உற்பத்தி செய்கிற அல்லது பராமரிக்கிற சாதியினர், சலவை தொழிலாளர், மருத்துவர்கள் என்று அழைக்கப்படுவோர் இதில் அடங்குவர். இந்த பிரிவினர் கிராமங்களில் நடைபெறும் சமூக கொடுமைகளை பொறுக்க முடியாமல் புலம் பெயரும் நிலை உருவாகிறது. அதேபோல் கணிசமான பகுதி இஸ்லாமியர்கள் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் இருந்தும், புலம் பெயரும் நிலை உள்ளது. இந்த மாவட்டங்களில் புலம்பெயர்வுக்கு மதக்கலவரம் காரணமாக தெரியவில்லை. அதே சமயம் ஜார்க்கண்ட், உ.பி, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கு  மத அடையாளமும், அதன் காரணமான மோதல்களும்  அடித்தளமாக இருக்கிறது.

மொத்தத்தில், நிலமின்மை, சமூக சுரண்டல் அல்லது ஒடுக்கு முறை, வனங்களில் இருந்து வெளியேற்றப்படல் ஆகிய காரணங்களே கூலி உழைப்பாளர்களின் புலம்பெயர்தலுக்கு பிரதான காரணங்களாக அமைகின்றன. மேலே குறிப்பிட்ட மக்களில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து இதர பகுதி மக்களில் ஒருபகுதி குடும்பத்துடன் புலம் பெயர்கின்றனர். பழங்குடி மக்கள் தவிர்க்க முடியாதபடி குடும்பத்துடன் புலம் பெயர்கின்றனர்.

இவைகளுடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை, அது உருவாக்கும் நகரமயமாக்கலும் புலம்பெயர்தலுக்கான காரணங்களில் ஒன்றாகும்.  அமைப்பு சார்ந்த உழைப்பாளர் எண்ணிக்கையைக் குறைந்து, அமைப்பு சாரா தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாராளமயமாக்கல் சலுகைகளை பயன்படுத்தி, மூலதனம் தூண்டுகிறது. அமைப்பு சாரா, சமூக பாதுகாப்பு  குறைந்த வேலைகளை செய்வதற்கு புலம்பெயர் தொழிலாளர் மூலதனத்திற்கு தேவைப்படுகிறார்கள்.

எங்கு செல்கின்றனர்?

பீகார், உ.பி, ம.பி, பஞ்சாப்  மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், டில்லி, மும்பை, காஜியாபாத், குர்காவ்ன், அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாம், மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் உழைக்கிறார்கள். சுமார் 30 சதம் இந்தியர்கள் இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்க்கை நடத்துகிறார்கள். சூரத் இந்தியாவிலேயே அதிக அளவு, (59 சதம்) புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட நகரம் என்கின்றனர். தமிழகத்தில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகராஷ்ட்ரா, டில்லி ஆகிய பகுதிகளுக்கு புலம்பெயர்தல் நடக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில், மும்பை, கொல்கத்தா, சென்னை, சூரத் ஆகிய நகரங்கள் காலனி ஆதிக்க காலத்திலும், பின்னர் டில்லி, பெங்களூர், புனே, ஹைதராபாத், விசாகபட்டினம், கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, திருப்பூர், சேலம், ராணிப்பேட்டை, கொச்சின், வடக்கு மத்திய பகுதி (North Central Region), அதாவது டில்லியின் புறநகராக உள்ள அரியானா, ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களின் பகுதிகள் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உருவெடுக்கிறது. 1980களில் இது நடக்கிறது. இந்த காலத்தில்தான் கிராமங்களில் இருந்து, கணிசமான வெளியேற்றமும் நடைபெறுகிறது. பின்னர் அடுத்த கட்டமாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை, பெங்களூர்-மும்பை நெடுஞ்சாலை, மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை, மும்பை-டில்லி நெடுஞ்சாலை ஆகியவை கிராமத்து உழைப்பாளர்களை, ஓரளவு பள்ளிக் கல்வி முடித்தோரை பெருமளவில் வெளியேற்றி, தன்னகத்தே ஈர்த்தது. இந்த பகுதிகளில் 2000 ஆண்டுக்குபின், மிகப்பெரிய அளவில் தொழில் மூலதனத்தின் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

ஒரு பகுதி ஆலை உற்பத்தியில் ஒப்பந்த தொழிலாளர்களாக, காவல் பணி செய்வோராக, அதற்கு முன் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோராக, சாலை கட்டமைப்பு பணிகள் செய்வோராக பணி செய்கின்றனர். ஆலை உற்பத்தி துவங்கிய பின்னர், ஒப்பந்த தொழிலாளர்களாக தொடர்வதும், ஆலைகளை ஒட்டி வளரும் சேவைத் துறைகளான உணவகங்கள், தேநீர் கடைகள், சிற்றுண்டி சாலைகள், வாகன ஓட்டிகள், வீட்டு வேலை செய்வோர், அழகு நிலையங்களில் ஆண், பெண் உழைப்பாளர்கள், பிளம்பிங், எலெக்டிரீசியன், மதுக்கடைகளில் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு பணிகளில் என பல்வேறு வேலைகளை செய்யக் கூடியவர்களாகவும் தொடர்கின்றனர்.

பெண் தொழிலாளர்கள் கணிசமாக பாலியல் வணிகத்தில் தள்ளப்படும் சமூகக் கொடுமைகளை சில ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் நகரின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பெண்களில் சுமார் 30 சதமானோர், குறைவான வருவாயை ஈடுசெய்ய பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்டதாக, ஆக்கார் பதிப்பகம் வெளியிட்ட, புலம்பெயர் தொழிலாளர்களின் அரசியல் பொருளாதாரம், என்னும் புத்தகம் தெரிவிக்கிறது. குடிநீரும் வணிகமாகியுள்ள நிலையில், குடிநீர் உற்பத்தி, விநியோகம் போன்ற பணிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1980களுக்கு முன், உப்பளங்கள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், சுரங்கம் போன்ற பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவை மிக அதிக தொலைவு கொண்டதாக இல்லை. பெரும்பாலும் ஒரு மாநிலத்திற்குள்ளேயே புலம்பெயர்ந்து வேலை தேடும் கட்டமாக அது இருந்தது.  குறிப்பிட்ட பணிக்காக மட்டும் புலம்பெயர்ந்து அந்த சீசன் வேலைகளை முடித்து திரும்புதலும் உள்ளது. குறிப்பாக கரும்பு வெட்டும் பணியில் குஜராத் மாநில பில்ஸ் பழங்குடியினர் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்திலும் இத்தகைய விவசாய பணி செய்யும் தொழிலாளர்கள் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உண்டு. இந்த மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு அறுவடைக்காலங்களில் மட்டும்  சென்று திரும்பும் தொழிலாளர்களும் உள்ளனர். குறைவான கூலியில் விரைவான வேலை என்கிற முறையில்தான், இத்தகைய தொழிலாளர்களை, பெரும் விவசாயிகள் பயன்படுத்தினர். இந்த பணி இப்போது குறைந்து வருகிறது.

புலம்பெயரும் வழிமுறைகள்:

ஊரில் சூழல் சரியில்லை, எனவே வெளியேறலாம் என தனி நபர் முடிவு செய்து வெளியேறுவது, மிகக் குறைவு. ஆனால் இதற்கான வழிமுறைகள் நெடுநாள்களாக ஆறுகளின் வழித்தடத்தை போல் செயல்பட்டு வருகிறது. மூன்று வழிகளில் புலம் பெயர்தல் நடைபெறுகிறது.

1. ஒப்பந்தம் செய்பவர், தெகடெர், சர்தார், முக்கடம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சம்மந்த பட்ட தொழிலாளர்களை அழைத்து செல்வதுடன், கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முதலாளியிடமும், அழைத்து சென்ற தொழிலாளர் மூலமாக ஒரு தொகை, என இரண்டு கூலி பெறுபவராக இருக்கிறார்.

2. ஏற்கனவே வெளியூரில் வேலை செய்யும் குடும்பத்தார் மூலம் புலம் பெயர்தல். இவர் சகோதர உறவு வழி என குறிக்கப்படுகிறார். வேலை பெற்று தருவது, உடன் தங்க வைத்து கொள்வது. அனைத்து விதமான பாராமரிப்பு பணிகளையும் செய்து தருவது என்ற முறையில் செயல்படுகின்றனர்.

3. நாகாஸ் என்ற முறையில், பல்வேறு உதிரிகளாய் வந்து சேர்ந்தவர்களுக்கான ஏற்பாடு. அநேகமாக இந்த முறையில், தனித்தனி நபர்களாக வந்து சேர்ந்தோரை பயன்படுத்துவது. சிறு குறு தொழிற்சாலைகள், ஓட்டல் பணி ஆகியவற்றில் இத்தகைய தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.  இவ்வாறு அழைத்து செல்லப்படுவதானது புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை செயலிழக்கச் செய்கிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் ஏற்படுத்தும் தாக்கம்

அடிப்படையில் குறைவான கூலிக்கு, அதிக நேரம் வேலை செய்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது. சங்கம் வைத்து போராடும் நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் இல்லைசங்கம் வைப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் அழைத்து வந்த நபர்களால் உடனே வெளியேற்றப்படுகிறார்கள். அழைத்து வந்தவர்களை எதிர்த்து தொழிலாளர்கள் எதுவும் செய்வதில்லை என்பது இந்தியாவில் உள்ள இதுவரையிலான நிலை. மற்றொரு புறம், நிரந்தர தொழிலாளர்களின் கூட்டு பேரம், வேலைநிறுத்தம் ஆகியவற்றை பலவீனப்படுத்தும் சக்தியாக, புலம்பெயர் தொழிலாளர்கள் முதலாளிகளால் நிறுத்தப்படுகின்றனர். அதாவது காரல் மார்க்ஸ் சொன்னதைப் போல் சேமநலப்படையாக ( Reserve Army) இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் மேலும் மூலதனம் குவிவதற்கு தங்களை அறியாமலேயே உதவுகின்றனர்.

செய்யவேண்டியவை

மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்துவதைப் போல், முதலில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, நிலமற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும்.

இரண்டு, புலம் பெயரும் இடத்திலும், சேர்ந்த இடத்திலும் இந்த சமூகம் பின்பற்றும் சாதிய அல்லது சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக சமவேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை, வலுவாக இந்தியா முழுவதும் அரசுகள் அமலாக்க வேண்டும். இது இரண்டு வகைகளில் பயன்படும். அதாவது உள்ளூர் தொழிலாளருக்கும், புலம் பெயர் தொழிலாளருக்கும் ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என்ற நிலையில், உள்ளூர் தொழிலாளிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல் புலம்பெயர் தொழிலாளி மீதான சுரண்டல் அளவு குறையும். இவை தேவைப்படும் நிரந்தர ஏற்பாடுகள் ஆகும். புலம் பெயர் தொழிலாளர் சட்டப்படி, பதிவு செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

மற்றொரு புறம் புலம் பெயர்தல் தவிர்க்க கூடியதா? தவிர்க்க முடியாததா.? என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மூலதனம் கூலி உழைப்பு மலிவான சந்தையை நோக்கி பாய கூடியது. அதற்காக தொழிலாளர்களை ஒரு கோடியில் இருந்து மற்றொரு கோடியை நோக்கி விரட்டி கொண்டே இருக்கும். வேலையின்மையும், புலம்பெயர்தலும் ஆகியவை முதலாளித்துவத்துடன் ஒட்டி பிறந்தவை. தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஊர் திரும்பியிருப்பதால், அந்த பகுதியிலேயே அவர்களின் உழைப்பை பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதும், செயல்படுவதும் வேண்டும். அதற்காக விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி சார்ந்த ஆலைகளை உருவாக்கிட, வழி வகை செய்ய வேண்டும். மேக் இன் இந்தியா என்று வெற்று முழக்கத்தை முன்வைப்பது மட்டும் போதாது.

கடந்த காலத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்த போது முன் மொழிந்து செயல்படுத்தப்பட்ட இரண்டு சட்டங்களை தீவிரமாக அமலாக்க வேண்டும். ஒன்று மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலை உறுதி சட்டம். இதை நகர்புறத்திற்கும் விரிவாக்கம் செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு உறுதியாகும். வேலைநாள்களை 200 ஆகவும், கூலியையும், உயர்த்துவது, இளம் தொழிலாளர்களும் பங்கெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு மேம்படும். அடுத்தது, வன உரிமை  சட்டம் 2005. தற்போது இந்த சட்டம் பெயரளவில் இருக்கிறது. முறையாக செயல்படுத்தப்பட்டால், மிகப் பெரிய அளவில், பழங்குடி மக்களின் புலம்பெயர்தலைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருக்கும். இது இந்தியாவின் காடுகளைப் பாதுகாக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் உதவிடும். இந்த சமூக புரிதலுடன் புலம் பெயர் தொழிலாளர்களை திரட்டுவதும், தீர்வு காண முயலுவதும் நாகரீக சமூகத்தின் கடமையாகும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்