வியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்

1118
0
SHARE

கியூபா (மொழியாக்கத்தில் கூபா) குறித்து  நியூ லெப்ட் ரிவியூ என்ற இணையதளத்தில் எமிலி மோரிஸ் எழுதிய கட்டுரை தமிழில் புத்தகமாக வந்துள்ளது. ரூ.60 விலையில் தடாகம் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சிறு பகுதி.

————————————-

இரண்டாவது முறை குடியரசுத் தலைவராகியுள்ள ராவுல் காஸ்ட்ரோவின் (இறுதியான) பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டில் முடிவடையும். தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிகளின்படி ‘காலத்திற்கேற்ப தகவமைக்கும்’ பணி 2016 ஆம் ஆண்டு முடிவடையும்போது, கூப பொருளாதாரம் உற்பத்திக்கான அகன்ற அடித்தளத்தையும், பெரியதோர் தனியார் துறையையும் கொண்டதாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் மருத்துவம், கல்வி, மக்கள் நலத்திட்டம் ஆகியவற்றை வழங்கும் திறனை தக்கவைத்துக் கொண்டிருக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையை அடைய முதலீட்டின் அளவு கட்டாயமாக  அதிகரிக்கப்பட வேண்டும். சீனா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்வதில் வெற்றியடைந்துள்ள கூபாவில், அந்நிய முதலீட்டை போதுமான அளவுக்கு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. வருவாய் ஏற்றத்தாழ்வையும், அரசின் சோசலிசத் திட்டங்களை அச்சுறுத்தும் சமூகப் பிளவுகளையும் ஒழித்து உள்நாட்டுப் பொருளாதாரத்தின் இயங்கு திறனையும் ஆற்றலையும் மேம்படுத்துவதே தற்போது கூபாவின் முன்புள்ள சவால்.

கூபா ஒரு ஆவிபோன கூடி என்று முடிவுகட்டும் (விமர்சகர்கள்), அதற்கு முன் அந்த நாட்டின் அசாத்திய சாதனைகளைப் பாராட்டியே ஆகவேண்டும். சந்தையின் இயக்க நுட்பங்களை மேலும் பரந்துபட்ட செயலாற்றல் மிக்க பொருளாதாரத்தை உருவாக்க உதவக் கூடும் என்று கூபாவில் கொள்கைவகுப்போர் கருதுகின்றனர்.
முழு முற்றாக தனியார் மயமும் தாராளமயமும் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நம்பவில்லை. சமூகத்தின் அவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளைக் குறித்து கவனத்துடன் இருந்திருக்கிறார்கள். அளவிடற்கரிய இடர்பாடுகள் மிகுந்த சர்வதேச சூழலில் உருக்கொண்ட இத்தகைய அணுகுமுறைதான் கூபாவின் பெருமிதம்; ‘வாஷிங்டன் மாதிரி’ (Washington consensus) கணித்ததை விட அதிகமான பொருளாதார வளர்ச்சியையும் சமூகப் பாதுகாப்பையும் வெற்றிகரமாக சாதிக்க இந்த அணுகுமுறை உதவியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள முன்னாள் சோவியத் முகாம் நாடுகள் அல்லது சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூபாவின் பாதையில் தனித்தன்மைவாய்ந்த இயல்புகளைக் கண்டறிய முடியும்.

அவற்றுள் முதலாவது, பிற நாடுகளில் நடந்ததற்கு நேரெதிரானது – கூபாவில் கடும் நெருக்கடிக் காலத்திலும் சமூகப் பாதுகாப்பு வளையம்  பாதுகாக்கப்பட்டது. புறக் காரணங்களால் கூபத் தீவுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சியும் வெளியே பகைச் சூழலும் நிலவியபோதும், அனைத்து சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்படையவில்லை இரண்டாவதாக கூப அரசு மூன்று முக்கியமான தருணங்களில் விவாதங்கள் நடத்தி மக்களிடம் ஆலோசனைகளைப் பெற்றது: நெருக்கடி நிலை ஏற்பட்டபோது (2) கூப பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை மீட்கும் முயற்சியின் போது (3) ராவுல்காஸ்ட்ரோவின் புதிய தகவமைப்புக் கட்டம் தொடங்கப்பட்ட போது.

மூன்றாவதாக, அதிர்ச்சிக்குள்ளான சமயத்திலும், அதிலிருந்து மீண்டெழுந்த சமயத்திலும்  சம்பளமும் விலைவாசியும் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டன. அதனால், பணவீக்கத்தை இறுக்கிப் பிடித்து, விரைவாக நிலைத்த தன்மையை ஏற்படுத்திட முடிந்தது. நிலையான சம்பளமும் விலைவாசியும் அரசு சாரா சந்தைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தாலும் கட்டுப்பாட்டிலுள்ள பொருளாதாரத்தில் வருவாய் ஏற்றத்தாழ்வைக்  குறைக்கவும், சீர்குலைவை கட்டுக்குள் வைக்கவும் உதவின. கூபாவின் அனுபவமும் சீனாவின் அனுபவமும் முற்றிலும் மாறுபட்டவை. ஆனாலும் இந்த உத்தியை சீனாவின் இரட்டைத் முறையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் அதில் ‘திட்டமிட்ட’ தடம் நிர்வகிக்கப்படுகிறது. கூடவே ஒரு சந்தைத் தடம் தானாகவே உருவாகிறது. அதில் சோதனைகளுக்கும் கற்பதற்குமான வாய்ப்புகள் உருவாகின்றன. எவ்வளவுதான் குறைகளும், குழப்பங்களும் நிறைந்திருந்தாலும் கூபாவின் இரண்டு பிரிவுகளைக் கொண்ட பொருளாதாரம் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகித்தது.

நான்காவதாக, பொருளாதார  மறுகட்டமைப்புச் செயல்பாட்டில் அரசு தன் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டது. தேர்ந்தெடுத்த தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கையிருப்பிலுள்ள சொற்ப டாலர் வருவாயைத் திருப்பிவிட்டு, அதைப் போல பல மடங்கு அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டிப் பெரும் முன்னேற்றம் கண்டது. இது போன்ற தொழில் நிறுவனங்கள் கூபாவின் திட்ட வல்லுனர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மாறிவரும் சர்வதேச நிலைமைகளுக்கேற்ப தம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பதைக் ‘கற்கும் வாய்ப்புகளையும்’ வழங்கின. இந்த வகையில் உருவாக்கப்பட்ட ஏற்றுமதிக்கான அடித்தளம், நீண்ட காலத்திற்கு நீடித்த  வளர்ச்சிக்கு உதவுமளவு வலுவானதாக இல்லாவிட்டாலும் நெருக்கடிக் காலத்தை சமாளித்து உற்பத்தித் திறனை மீட்டெடுக்கும் சிறப்பான வழியாகத் திகழ்ந்தது இறுதியாக, முதலாளித்துவத்திற்கு நிலை மாறும் பாதையை நிராகரித்து மாறிய நிலைமைகளுக்கும் வரம்புகளுக்கும் ஏற்ற சீரானதோர் தகவமைப்பு முறைக்கு இடமளித்த பாதையை கூபா தேர்ந்தெடுத்தது.

இறுதியாக முதலாளித்துவத்திற்கு ‘நிலை மாறும்’ பாதையை நிராகரித்து, மாறிய நிலைமைகளுக்கும் வரம்புகளுக்கும் ஏற்ற சீரானதோர் தகவமைப்பு முறைக்கு இடமளித்த பாதையை கூபா தேர்ந்தெடுத்தது. பிற முன்னாள் சோவியத் நாடுகள் தேர்வு செய்து பயணித்த இடர்ப்பாடுகள் நிறைந்த தாராளமய – தனியார்மய பாதை, கூபாவின் பாதைக்கு நேரெதிரானது.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்