எங்கெல்ஸ் 200 “இயற்கையின் இயக்கவியல்” – நூல்அறிமுகம்

215
0
SHARE
  • த.வி.வெங்கடேஸ்வரன்

மாமேதை எங்கெல்சின் ஆகச்சிறந்த படைப்பு “இயற்கையின் இயக்கவியல்” ஆகும். நூல் என்றுதான் நமக்கு அறிமுகம் ஆகிறது என்றாலும் உண்மையில் இதை ஓர் “நூல்” எனக் கருதமுடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக எங்கெல்ஸ் திரட்டிய கருத்துகள், சேகரித்த தரவுகளின் குவியல், சிந்தனைச் சிதறல்கள் முதலியவற்றின் தொகுப்புதான் ‘நூல்’ வடிவில் பிற்காலத்தில் பிரசுரிக்கப்பட்டது.  இந்த தொகுப்பைக் கூர்ந்து கவனித்தால் அதை ஒன்றோடொன்று தொடர்புடைய ஏழு நூல்கள் உருவாவதற்கான வரைவு செயல்திட்டம் (work in progress) என்றும் கருத இடம் உண்டு.

இயற்கையின் இயக்கவியல்ஆய்வுத் திட்டம்:

மே 30, 1873 அன்று எங்கெல்ஸ் மார்க்சிற்கு எழுதிய கடிதத்தில், “இன்று காலை நான் எழுந்தவுடன், இயற்கை அறிவியல் பற்றிய சில இயக்கவியல் அம்சங்கள் என் சிந்தனையில் உதித்தன” என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து தொடங்கி, நவம்பர்23, 1882 அன்று மார்க்சிற்கு எழுதிய கடிதத்தில், “இப்பொழுது.. இயற்கையின் இயக்கவியல் பற்றிய என் படைப்பை நான் முடித்தாக வேண்டும்” என்று எழுதிய வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வின் விளைவே ’இயற்கையின் இயக்கவியல்’ நூல் எனக் கருதப்படுகிறது. இந்தக் கையெழுத்துப்படிகள் தயாரான அதேகாலகட்டத்தில் இயக்கவியல் குறித்து பின்வரும் இரண்டு முக்கிய நூல்களை எங்கெல்ஸ் எழுதினார். அவை: (1) “டூரிங்கிற்குமறுப்பு”; (2) “லுட்விக் ஃபாயர்பாக்: பண்டைய ஜெர்மன் தத்துவத்தின் முடிவு”.  இந்த இரண்டு நூல்களில் காணப்படும் கருத்துகள், மேற்கோள்கள் ஆகியவற்றின் சாயல் “இயற்கையின் இயக்கவியல்” கையெழுத்துப் படிகளிலும் காணப்படுகிறது.

இந்தப் படைப்பு தொடர்பாக ஏறத்தாழ பத்தாண்டுகளில் 197 கையெழுத்துப் பிரதிகள் கொண்ட, நான்கு உட்தொகுப்புகளாக அமைந்த ஆய்வுகள் எங்கெல்சினால் அவரது கடைசி நாட்களில் தொகுக்கப்பட்டிருந்தன. “இயக்கவியல் மற்றும் இயற்கை அறிவியல்”, “இயற்கை ஆய்வு மற்றும் இயக்கவியல்”, “இயற்கையின் இயக்கவியல்” என்ற உட்தொகுப்புகளில் அறிவியல் சிந்தனையில் உள்ள இயக்கவியல், இயற்கை பற்றிய ஆய்வுகளில் உள்ள இயக்கவியல், மனிதனுக்கு புறத்தே உள்ள புறவய இயற்கையில் உள்ள இயக்கவியல் ஆகியனவற்றைப் பற்றி எழுதியிருந்தார்.

கையெழுத்துப் பிரதிகளின் பல பகுதிகள் பெரும்பாலும் ஜெர்மன் மொழியில் இருந்தாலும்,  ஆங்காங்கே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சிலோ அல்லது இம்மூன்று மொழிகள் கலந்த வகையிலோ எழுதப்பட்டிருந்த சொற்களும் வாக்கியங்களும்கூட இருந்தன. ஆகையால், மொழியாக்கம் செய்யும்பணி கடினமானதாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக “Wenn Coulomb von particles of electricity spricht, which repel each other inversely as the square of the distance, so nimmt Thomson das ruhig hin als bewiesen” என்ற வாக்கியத்தில் மூன்று மொழிகளின் கலப்பையும் காணலாம். எனவே இந்தக் கையெழுத்துப்படிகள் நேரடியாக பதிப்பிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்பது புரியும்.

நூல் உருவான விதம்

1895இல் அவரின் மறைவிற்குப்பின் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரின் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்துத் தொகுக்கும் பொறுப்பு ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் எட்வார்ட் பெர்ன்ஸ்டீனிடம் சென்றது. அவர் எங்கெல்சினுடைய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து இரண்டு கட்டுரைகளை மட்டும் தொகுத்து இரண்டு சிறுநூல்களாக வெளியிட்டார். அவற்றில் ஒன்று, இன்றும் பலராலும் வியப்புடன் போற்றப்படும் “மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” ; அது 1896இல் சிறு பிரசுரமாக வெளிவந்தது. அதன்பின்னர் ஒரு வார இதழில் தொடர்கட்டுரையாக வெளிவந்த “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின்உலகம்” என்ற ஆக்கம் பின்னர் அது 1898இல் சிறுநூலாகப் பிரசுரிக்கப்பட்டது.  அன்றைய காலத்தில் க்ரூக்ஸ் (William Crookes), வாலஸ் (Alfred Russell Wallace) போன்ற பிரபல அறிவியல் ஆய்வாளர்களே அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி “ஆவிகள்” குறித்த தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனோடு காத்தோடு கதிர்கள்(Cathod Rays) போன்றவற்றை ஆய்வு செய்து வந்தவர் க்ரூக்ஸ். அவர் வடிவமைத்த க்ரூக்ஸ் குடுவைதான் பிற்காலத்தில் டியூப்லைட், தொலைக்காட்சி பெட்டியின் பிக்சர் டியூப் போன்றவைகளாக மாறியது. ஆயினும் அன்று க்ரூக்சிடம்,  கதிர்களை மர்மமான ஒன்றாகப் பார்க்கும் சிந்தனை இருந்தது. வாலஸ் பரிணாம மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுவந்த ஒரு விஞ்ஞானி ஆவார்.

இவர்களிடமிருந்த அறிவியல் மனப்பாங்கிற்கு விரோதமான சிந்தனைகளை விமர்சித்து எங்கெல்ஸ் எழுதியவை “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின் உலகம்” என்ற தலைப்பின்கீழ் காணப்படுகின்றன.  இந்த ஆய்வாளர்கள் அனைவரும் புலனறிவாதிகளாக (Empiricist) இருந்தாலும், இயக்கவியல் பார்வை இல்லாத காரணத்தால், “ஆவிகள்” போன்ற மூடநம்பிக்கைக்குள் சிக்கிக் கொள்கின்றனர் என எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். தனது நண்பர்களிலொருவருடன் சேர்ந்து ஆவிகளுடன் பேசுவது போன்றவை கண்கட்டிவித்தை என்பதை செயல்படுத்திக் காட்டியதாக எங்கெல்ஸ் இந்த பிரசுரத்தில் குறிப்பிடுகிறார்.

மேற்சொன்ன இரண்டு பிரசுரங்களும் போக, மீதமுள்ள கையெழுத்துப் படிகளை என்ன செய்வது என குழம்பிய பெர்ன்ஸ்டீன்,  எங்கல்சின் ”இயற்கையின் இயக்கவியல்” குறித்த கையெழுத்துப் பிரதிகள் ஆய்வு செய்யத்தக்க படைப்புகளா என்பதைத் தீர்மானிக்க, ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை சார்ந்த லியோ அரோன்ஸ் என்ற விஞ்ஞானியை அணுகினார். பெர்ன்ஸ்டீன், லியோ அரோன்ஸ் ஆகிய இருவருமே மார்க்ஸ்-எங்கெல்ஸ் மீது அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் கசப்புணர்வு கொண்டவர்கள்; புரட்சி கூடாது, சீர்திருத்த வழியில் சோசலிசத்தை அடைய வேண்டும் எனக் கருதியவர்கள். மேலும் பொருள்முதல்வாத சிந்தனையை முழுமையாக ஏற்காதவர்கள்.

அறிவியல் முன்னேறிய தற்காலத்திற்கு உதவாத, காலவழக்கொழிந்தவையே எங்கெல்சின் இந்தக் கையெழுத்துப் படிகள் என்ற முடிவுக்கு லியோ அரோன்ஸ் வந்தார். எனினும் மார்க்ஸ்- எங்கல்ஸ் மீது பலருக்கும் இருந்த ஈர்ப்பின் காரணமாக 1924இல், இந்தத் தொகுப்பின் சில பகுதிகள் (’மின்சாரம்’ பற்றிய பகுதி என்றும் சொல்லப்படுகிறது) ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் அனுப்பி வைக்கப்பட்டன. அதைப் படித்த ஐன்ஸ்டீன், “தற்கால இயற்பியல் பார்வையில் எங்கெல்சின் எழுத்துகள் காலவழக்கொழிந்தவையாகக் கருதப்படும். ஆனால் இவற்றில் எங்கெல்சினுடைய அறிவுசார் வளர்ச்சி குறித்த முக்கிய உள்ளடக்கங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார். ஆயினும் பெர்ன்ஸ்டீன் எங்கெல்சின் கையெழுத்துப் படிகளைப் பதிப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அந்தக் காலகட்டத்தில், மாஸ்கோவின் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ரையாஸனோவ் (David Ryazanov), பெர்ன்ஸ்டீன் வசம் இருந்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் 1923இல் நகலெடுத்துச் சென்றார். ஏற்கனவே சிறு வெளியீடுகளாக வந்திருந்த  “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்”, “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின் உலகம்” ஆகியவற்றையும் எங்கெல்சின் ஆய்வுத் திட்ட வரைவுகளில் இருந்த பிறவற்றையும் சேர்த்து 1925இல் ரஷ்ய, ஜெர்மன் மொழிகளில் “இயற்கையின் இயக்கவியல்”  என்ற நூலாக மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

எங்கெல்சினுடைய குறிப்புகள் தவிர ஆய்வுத்திட்ட வரைவுகள் என்ற பெயரில் இரண்டுவகை வரைவுகளை இந்த தொகுப்பில் காணலாம். 1878இல் ஒரு வரைவுத்திட்டமும், அதனை மாற்றி 1880இல் இரண்டாவது வரைவுத்திட்டமும் எங்கெல்சினுடைய குறிப்புக்களில் காணப்படுகின்றன.  அந்த வரைவுகளை நூலாகத் தொகுக்கும்போது எங்கெல்ஸ் எழுதிய காலவரிசையில் தொகுப்பதா, அவரது வரைவுக் குறிப்பில் உள்ள ‘நூல்திட்டங்களின்’ அடிப்படையில் தொகுப்பதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்றன. 1985இல் கிழக்கு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட புதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் தொகுப்பு நூல்களில் (MEGA)  இரண்டு முறைகளிலும் அவரது வரைவுகள் ”இயற்கையின்இயக்கவியல்”  என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப் பதிப்பு

1925இல் ரஷ்ய, ஜெர்மன் மொழிகளில் வெளியிடப்பட்ட மேற்சொன்ன தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம் 1940இல்தான் முதன்முதலில் முதலில் வெளியானது. 1875இல் இங்கிலாந்துக்கு மருத்துவம் படிக்கச்சென்ற உபேந்திர கிருஷ்ண தத் என்பவர்,  அங்கே ஸ்வீடனைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளரான அன்னா பாமி (Anna Palme) என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார்.  அவர்களுக்குப் பிறந்த இரு மகன்களான ரஜினி பாமி தத் (Rajani Palme Dutt), கிளெமென்ட் பாமி தத் (Clement Palme Dutt) ஆகிய இருவரும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.  அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த கிளெமென்ட் பாமி தத் தான் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

1939இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பிற்கு முகவுரையும் குறிப்புகளும் எழுதியவர்,  பரிணாம வளர்ச்சி ஆய்வில் மிகப்பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜே.பி.எஸ்.ஹால்டேன்(J.B.S.Haldane) ஆவார்.  முகவுரை தவிர அந்த நூலின் பல இடங்களில் எங்கெல்ஸுக்கு பிறகு ஏற்பட்டிருந்த அறிவியல் வளர்ச்சியின் பார்வையில் விளக்கக் குறிப்புகளும் எழுதினார் ஹால்டேன்.

ஹால்டேன் தனது முகவுரையில், எங்கெல்சினுடைய நூலில் உள்ள முக்கியமான சில தவறுகளை சுட்டிக்காட்டி, அவற்றைக் களையாமல் வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய தவறுகள் நிகழ்ந்திருக்கும் என்றும் கூறத் தயங்கவில்லை; அதேவேளை, அந்தத் தவறுகளைக் களையாமல் அந்த நூலை எங்கெல்ஸ் வெளியிட்டிருக்க மாட்டார் என்றும் கூறுகிறார். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் வோல்டேஜ் என்பதை மின்சார ஆற்றலின் அளவை போல எங்கெல்ஸ் பயன்படுத்தியிருந்தார். அது தவறு என்பதை ஹால்டேன் சுட்டிக்காட்டினார். அதேபோல கடல்களில் ஏற்றஇறக்கம் (Tidal Friction) ஏற்படும் நிகழ்வில் சுழலுந்த அழியாமை விதியை (conservation of angular momentum) எங்கல்ஸ் கவனிக்க தவறிவிட்டார் என்றும் விமர்சனம் செய்கிறார். “இவ்வாறு சில சமயங்களில் எங்கெல்ஸ் தவறிழைத்ததாக நான் குறிப்பிடுவதற்கு சில வாசகர்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம். ஆனால் நிச்சயம் எங்கெல்ஸ் தெரிவித்திருக்க மாட்டார்” என அவர் எழுதியுள்ளார்.

மேலும் இந்த பிழைகள் ஒருபுறமிருந்தாலும், எங்கெல்ஸ் இந்த நூலை எழுதியதற்குப் பிறகான அறுபது ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சியை அவர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது ஆச்சரியமூட்டுவதாக இருப்பதாக ஹால்டேன் எழுதினார்.  குறிப்பாக, இயக்கவியல் பார்வையில் உயிர்களுக்கும் புரதங்களுக்கும் இடையே உள்ள முக்கியத் தொடர்பை அவர் எழுதியபொழுது அது ஒருதலைப்பட்சமாக இருந்ததாக அந்நாளின் ஆய்வாளர்கள் கருதினாலும், அண்மைக்கால (1940களின்)ஆய்வுகள் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதாக அவர் எழுதினார். மேலும்,  “எங்கெல்சினுடைய சிந்தனைகள் பிரபலமாக இருந்திருந்தால், இயற்பியலில் கடந்த முப்பது ஆண்டுகளின் சிந்தனை மாற்றங்கள் சுமுகமாக ஏற்பட்டிருக்கும்” என்றும், “டார்வின் பற்றிய (எங்கெல்சின்) குறிப்புகள் எனக்கு முன்னரே தெரிந்திருந்தால், பல குழப்பங்களை நான் தவிர்த்திருப்பேன்” என்றும், “வருங்கால விஞ்ஞானிகளின் சிந்தனைகளை விரிவாக்க இந்த நூல் உதவும்” என்றும் ஹால்டேன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கவியல் பற்றி இந்த நூலில் கூறப்பட்டுள்ளவற்றின் சாராம்சம்

இந்த நூலில் இயக்கவியல் (dialectics), இயக்கம் (motion), மின்சாரம், வெப்பம் போன்ற மொத்தம் பத்து முக்கிய படைப்புகள் பத்து அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. “இயக்கவியல் விதிகள்தான் இயற்கையின் வளர்ச்சி குறித்த விதிகள், ஆகையால் இயற்கை குறித்த ஆய்வுகளுக்கும் அது பொருந்தும் என்பதை நிறுவவே எழுதினேன்” என்று 1879இல் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் மூன்று முக்கிய அறிவியல் வளர்ச்சிகள் குறித்து எங்கெல்ஸ் தீவிரமாக ஆய்வு செய்தார். ஆற்றலின் விதிகள் (Thermodynamics), உயிரணு (The cell), பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution) ஆகியன குறித்த நுண்ணாய்வை எங்கெல்சினுடைய கையெழுத்துப் படிகளில் காண முடிகின்றது.

”இயற்கையின் இயக்கவியல்” நூலில் சில முக்கிய அம்சங்களை அவர் குறிப்பிடுகிறார். முதலாவதாக “இயக்கம்” பற்றிய விளக்கங்கள். நாம் பெரும்பாலும் ஒரு பொருள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதையே “இயக்கம்” (Motion) என்று பார்க்கிறோம். ஆனால் அனைத்து விதமான மாற்றங்களையும் எங்கெல்ஸ் “இயக்கம்” என கருதுகிறார். எந்த ஒரு பொருளின் இருப்பும் ஏதோ ஒரு விதத்தில் இயக்கத்தில்தான் இருந்து வருகிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார்:

பொருள்களின் இயக்கம் என்பது வெறும் இடமாற்றம் ஏற்படும் எந்திர இயக்கம் மட்டுமல்ல. வெப்பம் மற்றும் ஒளி; மின்சாரம் மற்றும் காந்த தாக்கம், வேதியல் பிணைப்பு மற்றும் சிதைவு, உயிர் மற்றும் இறுதியில் சிந்தனை (சைதன்யம்) எல்லாம் இயக்கத்தின் வடிவங்களே என்கிறார் எங்கல்ஸ். மேலும்  “டூரிங்கிற்கு மறுப்பு” நூலில் இதனை விரித்து எழுதும்போது:-

”இயக்கமே பொருள் இருக்கும் முறையாகும். இயக்கம் இல்லாத பொருள் எங்கும் ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பேரண்ட வெளியில் உள்ள இயக்கம், விண்ணிலுள்ள பல்வேறு கோளங்கள் மீதும், நட்சத்திரங்கள் மீதும் நிகழும் சிறு விண்கற்களின் யாந்திரிக இயக்கம், வெப்பம் அல்லது மின்னோட்டம் அல்லது காந்தம் என்ற வடிவத்தில் மூலக்கூறுகளின் இயக்கம், இரசாயன சேர்க்கை மற்றும் சிதைவு என்கிற இயக்கம், உயிர் வாழ்க்கை என்கிற இயக்கம் எனப் பல்வேறு இயக்க வடிவங்களில்தான் பொருள் இருக்கிறது. உலகிலுள்ள பொருளில் ஒவ்வொரு தனித்தனி அணுவும் மேற்சொன்ன இயக்க வடிவங்களில் ஏதோவொன்றிலோ அல்லது ஒரே வேளையில் பல வடிவங்களிலோ நிகழ்கிறது. ஒரு பருப்பொருள் ஓய்வுநிலையில் (rest) உள்ளது. சமநிலையில் (equillibrium) உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான். ஏதோவொரு திட்டவட்டமான இயக்க வடிவத்துடன் தொடர்புபடுத்தித்தான் அது ஓய்வுநிலையில் அல்லது சமநிலையில் உள்ளது என்று கூறமுடியும்”  என்கிறார்.மேலும் இயற்கையின் வரலாறு மற்றும் மனித சமூகத்தின் வரலாறு ஆகியவற்றிலிருந்து சுருக்கியெடுத்துப் பொதுமைப்படுத்திப் பார்த்தால் (abstract) கோட்பாட்டளவாக மூன்று இயக்கவியல் நியதிகளைக் காணலாம் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்:

(1) அளவுமாற்றம் பண்புமாற்றமடைதலும், பிந்தியது முந்தியதாக மாற்றமடைதலும் என்னும் நியதி (The law of the transformation of quantity into quality and vice versa) (2) ‘எதிர்மறைகளின் பரஸ்பர ஊடுருவல் பற்றிய நியதி’ (The law of the interpenetration of opposites); (3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு (The law of the negation of the negation). [ see Chapter ‘Dialectics’ para 2 , Marx Engels Collected Works Vol 25, p.356]

ஆயினும் 1878இல் எழுதிய ஒரு குறிப்பில் இயக்கவியலின் நான்கு விதிகள் எனக் குறிப்பிடுகிறார். (1) அளவுமாற்றம் குணமாற்றத்தை உண்டாக்குதல்; (2) எதிர்மறைகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் எதிர்முரண்கள் நீட்சிஅடையும்போது ஏற்படும் மாற்றம் (3)  முரண்பாடுகள் மூலமான வளர்ச்சி அல்லது நிலைமறுப்பின் நிலைமறுப்பு; (4) சுழல் போன்ற முன்னேற்றம்.

காலந்தோறும் பூமியின் நிலவியல் (geology) மாற்றம் அடைகிறது என்பது லையல் என்பவரின் கோட்பாடு. ஆயினும் மாற்றம் அடையும் பூமியில் உயிரினங்கள் மட்டும் மாற்றம் அடையாமல் உள்ளது என்பது முரண்பட்ட கருத்து என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுகிறார். தற்செயல் நிகழ்வு (chance) அத்தியாவசிய நிகழ்வு (necessity) போன்ற எதிர்மறைகளிடையே இயக்கவியல் உறவு உள்ளதையும் விளக்குகிறார். அறிவியல் கோட்பாடுகளில் உள்ள முரண்பாடுகளைப் பட்டியலிடுகிறார். இவை தர்க்கச் சிந்தனையில் காணப்படும் முரண்பாடுகள் அல்ல; மாறாக,  இயற்கையில் உள்ள முரண்பட்ட உறவுகள் ஆகும். ஒரே பொருளின் இயக்கத்தில் காணக் கிடைக்கும் எதிரும் புதிருமான போக்குகள் ஆகும்.

இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஆக்சிஜன் மூலக்கூறும் மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்ட ஓசோனும் தமது வேதித்தன்மையில் பெரும் வித்தியாசம் கொண்டிருப்பதுபோல அளவுமாற்றம் குணமாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற கருத்துக்குப் பற்பல எடுத்துக்காட்டுகளை இயற்கை அறிவியலின் ஆய்வுகளிலிருந்து எடுத்துரைக்கிறார்.

’நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி’ பற்றி “டூரிங்கிற்கு மறுப்பு” நூலில் வழங்கப்பட்டுள்ள விரிவான விளக்கம், ”இயற்கையின் இயக்கவியல்”  கையெழுத்துப் படிகளில் காணப்படுவதில்லை.  எனினும் சில குறிப்புகள் உள்ளன. தற்போது இருக்கும்நிலை மறுக்கப்படுவதின் விளைவாகத்தான் வரலாறு சாத்தியமாகிறது என்றும், மரபுவழியாகப் பெறப்படுவதை மறுப்பதன் காரணமாகவே மாறிய சூழலுக்கு நம்மால் தகவமைத்துக் கொள்ள முடிகிறது என்றும் கூறுகிறார். புதிய சூழலுக்குப் பொருந்தி புதிய வடிவம் பெறும்போது மரபாகப் பெற்றவைகளில் சில அம்சங்களை நீக்குகிறோம். மரபைப் பேணுதல்; மற்றும் புதிய நிலைக்குத் தகவமைத்தல் ஆகிய இரண்டு முரண்பட்ட வளர்ச்சிப்போக்கில் ஏற்கனவே உள்ள மரபு அம்சங்கள் சில நிலைபெறாமல் மறுக்கப்பட்டு, புதிய தகவமைந்த நிலை உருவாகிறது. அதுவும் காலபோக்கில் நிலைமறுப்பு பெறுவதால்தான் முன்னேற்றம் சாத்தியமாகிறது என்கிறார் எங்கெல்ஸ். முன்னேறியநிலை என்பது ஏற்கனவே இருந்தநிலைக்கு திரும்பச் செல்வதல்ல; மேலும் செழுமையடைந்த நிலைக்கு உயர்வதுதான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“மாறாத நேர்தன்மை கொண்டதாக மரபுப் பண்பையும், மரபாக பெற்றவற்றை தொடர்ந்து சிதைக்கும் எதிர்தன்மை கொண்டதாக தகவமைப்பையும் காணலாம். மறுபுறத்தில் தகவமைப்பை படைப்பாக்கத் தன்மை கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் நேர்மறை செயல்பாடு எனவும், மரபு பண்பை உயிர்ப்புஅற்ற தடையை ஏற்படுத்தும் எதிர்மறைசெயல்பாடு எனவும் காணமுடியும்.  இருக்கும்நிலையை நிலைமறுக்கும் போக்காக வரலாற்று நிகழ்வுகள் அமைவதுபோல, நடைமுறை கருத்தில் தகவமைப்பை எதிர்மறை செயல்பாடு என காணலாம்” எனும் எங்கல்ஸ் பரிணாம வளர்ச்சி என்பதில் பூடகமாக நிலைமறுப்பின் நிலைமறுப்பு எனும் போக்கு பொதிந்துள்ளதை விளக்குகிறார்.

முரண்பாடுகள் இயற்கையில் தவிர்க்கமுடியாத அம்சமாக இருப்பதையும், பல்வேறு வடிவங்களில் தோன்றும் அவை வளர்ச்சியின் அடிப்படைஅம்சமாக விளங்குவதையும் அக்கால அறிவியல் வளர்ச்சிகள் மூலம் நிறுவுகிறார். மேலும், இயற்கையில் மட்டுமல்லாது, மனிதன் உருவாக்கிய அறிவியல் தத்துவங்களுக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளையும் குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு தடையற்ற ஞானம் எய்தும் ஆற்றல் உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இதை ஆய்வுசெய்யும் தனிநபர்களுக்கு உயிர், உடல், அறிவுஆற்றல்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறு தடையற்ற ஞானம் எய்தும் மனித ஆற்றலுக்கும், குறிப்பிட்ட காலத்தின் தனிநபர் கட்டுப்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு எழுகின்றது. மனிதகுலத்தின் தடையற்ற வளர்ச்சியிலும், அடுத்தடுத்த தலைமுறைகளின் ஞானத்தில் ஏற்படும் எல்லையற்ற வளர்ச்சியிலுமே இந்த முரண்பாட்டிற்கான தீர்வு உள்ளது என எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதாவது, மனித அறிவியல் அறிவின் வளர்ச்சி எல்லையற்றது என்பதை இயக்கவியல் பார்வையில் நிறுவுகிறார் எங்கல்ஸ்.

‘மனிதத் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ என்ற பகுதியில் உழைப்பின் மகிமையை அறிவியல்பூர்வமாக விளக்கும் எங்கெல்ஸ், “இயற்கையின் இயக்கவியல்” என்ற தலைப்பில் வெளிவந்த நூலின் முன்னுரையில் கூறுகிறார்:

மனிதனுடன்தான் வரலாறுதொடங்குகிறது. விலங்குகளுக்கும் அவற்றின் தோற்றத்துக்கான மூலத்திலிருந்து தொடங்கி, இப்போதுள்ள நிலைக்கு அவை படிப்படியாக பரிணமித்துள்ள ஒரு வரலாறு உண்டு என்றாலும், இந்த வரலாறு அவற்றுக்காக உருவாக்கப்பட்டதேயன்றி, அவற்றின் உணர்வும் விருப்பமும் இல்லாமல்தான் அந்த வரலாற்றில் அவை பங்கேற்கின்றன. மறுபுறம், மனிதர்கள் – குறுகிய அர்த்தத்தில் – விலங்குகளிடமிருந்து எந்த அளவுக்கு விலகிச் செல்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உணர்வுபூர்வமாக உருவாக்குகின்றனர். அந்த அளவுக்கு வரலாற்றின் எதிர்பாராத விளைவுகளும், கட்டுப்படுத்த முடியாத சக்திகளும் இந்த வரலாற்றின்மீது செலுத்தும் தாக்கம் குறைவாக அமைகின்றன. அதன் காரணமாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளுடன் வரலாற்றுரீதியான விளைவு மேலும் நுட்பமாகப் பொருந்துகிறது”

அதாவது, இயற்கையைப் புரிந்துகொண்டு இயற்கைவிதிகளின் அடிப்படையில் அறிவார்த்தமான உலகை தானே உருவாக்கிக் கொள்ளும்போதுதான் விலங்குகளின் தேவைகள் மட்டுமே கொண்ட மனித வாழ்வு அகன்று அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் என்கிறார் எங்கல்ஸ்.

இயக்கவியல் பார்வையில் அறிவியலாளர்களுக்கு எங்கெல்ஸ் முக்கிய கருத்தொன்றைக் கூறுகிறார்:

“இயற்கை அறிவியலாளர்கள்.. .. தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே செயல்படுகின்றனர். ஒரு மோசமான, பளபளப்பான தத்துவத்தின் ஆதிக்கத்தில் இருக்க விரும்புகிறார்களா? அல்லது சிந்தனையின் வரலாற்றையும் சாதனைகளையும் உணர்ந்து, அதன் அடிப்படையில் எழுந்த தத்துவத்தை ஏற்க விரும்புகிறார்களா என்பதுதான் கேள்வி”.

எங்கெல்ஸ் மேலும் கூறுகிறார்:

“ தத்துவவியலைப் போலவே இயற்கைஅறிவியலும், மனிதர்களின் சிந்தனைமீது அவர்களின் செயல்பாடு ஏற்படுத்தும் தாக்கத்தை இதுவரை அறவே அலட்சியம் செய்துவந்தது. இயற்கைஅறிவியல் இயற்கையை மட்டுமே அறிந்திருக்க, தத்துவவியலோ சிந்தனையை மட்டுமே அறிந்துள்ளது. மனித சிந்தனையின் மிக சாராம்சமான, மிக நெருங்கிய அடிப்படையாக இருப்பது, மனிதர்கள் இயற்கையை – இயற்கை ஒன்றை மட்டுமே அல்ல – மாற்றுவது ஆகும் என்பதும்,  இயற்கையை மாற்றுவதற்கு மனிதன் எந்த அளவு கற்றுக்கொண்டானோ, அந்த அளவுக்கு அவனது கூரறிவு வளர்ந்தது என்பதும்தான் சரியானதாகும்”

அறிவியல் மீது நூலின் தாக்கம்

மார்க்ஸ்-எங்கல்ஸ் நூல்கள் வெளிவரும் காலத்திலும் அதன்பின்னரும் இயற்கையின் இயங்கியல் குறித்த சிந்தனை பல அறிவியல் அறிஞர்கள் இடையே தாக்கம் செலுத்தியது. இதன் பின்னணியில்தான் ஹால்டேன் எனும் பிரபல இங்கிலாந்து விஞ்ஞானி எங்கல்ஸ் எழுதிய “இயற்கையின் இயங்கியல்” நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதற்கு முகவுரையும் குறிப்புக்களும் எழுதிட முன்வந்தார். எங்கெல்ஸ் தனது கையழுத்துப்படியில் கூறுகிறார்:

“(ஹைட்ரோ கார்பன்களில்) சாதாரண ‘பாரஃப்பின்களில்’ (normal paraffins)  கீழ்ப்படியில் இருப்பது மீத்தேன் (methane,  CH4);  இங்கு கார்பன் அணுவின் நான்கு இணைப்புகளிலும் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் ஊறி நிற்கின்றன. இரண்டாவதாக உள்ள ஈத்தேனில் (ethane C2H6) இரண்டு கார்பன் அணுக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன; மீதியுள்ள ஆறு சுயேச்சையான இணைப்புகளின் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் ஊறி நிற்கின்றன. இப்படியே C3H8, C4H10  முதலியன CnH2n+2 என்ற இயற்கணித சூத்திரத்தின்படி தொடர்ந்து செல்கின்றன. ஆக, ஒவ்வொரு தடவையும் CH2 சேர்க்கப்படும்பொழுதும் இதற்கு முந்தியதைவிடப் பண்பு வகையில் மாறுபட்ட ஒரு பொருள் உண்டாகிறது. இந்தத் தொடர் வரிசையில் மிகவும் கீழ்ப்படியில்உள்ள மூண்றும் வாயுக்களாகும். இந்தத் தொடர்வரிசையின் உச்சத்தில் அறியப்பட்டுள்ள ஹெக்ஸாடிகேன் (hexadecane) C16H34 என்பது 270 செண்டிக்ரேட் கொதிநிலை கொண்ட திடப்பொருளாகும்.                                            

கார்ல் சிக்கோர்லெமர் (Carl Schorlemmer) என்ற முக்கியமான வேதியல் ஆய்வாளர், ’கரிம வேதியலின் வரலாறு’  (Organic Chemistry) எனும் நூலில், கரிம மூலக்கூறுகளில்-CH2- என்ற கூறின் அளவு மாறும்பொழுது, மீத்தேன், ஈத்தேன் போன்ற புதிய குணமுள்ள புதிய பொருள் உருவாவதைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் எங்கெல்சின் மேற்கூறிய கருத்துகளை அடிக்குறிப்பாகச் சேர்த்துள்ளார்.

எண்கணிதவியலில் பிரபலமான Levy conjecture என்பதை உருவாக்கிய பேராசிரியர் ஹைமென் லெவி (Prof Hyman Levy) எங்கெல்சின் நூலின் தாக்கத்தில் 1938இல் எழுதிய ‘நவீன மனிதனுக்கான ஒரு தத்துவம்’ (A Philosophy for a Modern Man) என்ற புகழ்மிக்க நூலில் இயக்கவியல் பொருள்முதல்வாத கருத்துகளை அறிமுகம் செய்தார்.

பரிணாம வளர்ச்சித்துறையின் மிகப்பெரும் ஆளுமையான ஸ்டீஃபன் ஜே கோல்ட் (Stephen J Gould) பரிணாம வளர்ச்சியில் மூளையின் பாத்திரத்தை கடந்து, உழைப்பின் பங்கை முதன்முதலில் முன்னிலைப்படுத்தியது எங்கெல்சின் படைப்புகள்தான் என போற்றியுள்ளார். உழைப்பின் காரணமாக கைகள் வளர்ச்சியுற்றதால்தான் மனிதனால் நுணுக்கமான கருவிகளை உருவாக்க முடிந்தது. அதனால் இயற்கையை மாற்றி அமைத்ததால் மேலும் அறிவுவளர்ச்சி அடைந்தது என்பதை முதலில் குறிப்பிட்டவர் எங்கெல்ஸ் என குறிப்பிடுகிறார் கோல்ட்.  “இயற்கையின் இயக்கவியல்”   நூலைப் பற்றிய தனது மதிப்பீட்டில் ஸ்டீஃபன் ஜே. கோல்ட், இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆஸ்ட்ரலோ பிதிகஸ் ஆஃப்ரிகான்” என்ற உயிரினத்தின் கண்டுபிடிப்பை எங்கெல்ஸ் முன்னரே கணித்திருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

பிரையன் மோரிஸ் (Brian Morris) முதலிய மானுடவியல் ஆய்வாளர்கள் முதல் பல்வேறு ஆய்வாளர்கள் மனித நாகரிகம் மற்றும் மனித பரிணாம ஆய்வுகளில் இயங்கியல் ஆய்வுமுறைகளை பயன்படுத்தியுள்ளனர். அதேபோல புகழ்மிக்க இயற்பியலாளர் லியோன் ரோசென்பில்ட்(Léon Rosenfeld) முதல் ழாக் சாலமன் (Solomon) போன்ற இயற்பியலாளர்கள் குவாண்டம் தத்துவ வளர்ச்சி விவாதங்களில் இயங்கியல் பார்வையில் சிந்தனைகளை அளித்துள்ளனர். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்,  அதுநாள்வரை ஆதிக்கம் செலுத்திவந்த நியூட்டனின் கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி, விஞ்ஞானிகள் இடையே பிளவு ஏற்படுத்தியபொழுது, எங்கெல்சின் இயற்கையின் இயக்கவியல் நூல்தான் இந்த வளர்ச்சிகள் குறித்த ஒரு தெளிவை அளித்ததாக துகள் அறிவியல் துறையின் முன்னணி ஆய்வாளர் சியோச்சி சகாடா (Shoichi Sakata) குறிப்பிடுகிறார். அவர்மீதும், அவரின் நோபல்பரிசு பெற்ற மாணவர் யோய்ச்சிரோ நம்பூ (Yoichiro Nambu)  மீதும் எங்கெல்ஸ் எழுதிய இயக்கவியல் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. படிநிலை வளர்ச்சி உயிரியல் துறையில் (Evolutionary Biology) தலைசிறந்த ஆய்வாளர்களான ரிச்சர்ட் லெவின்ஸ் (Richard Levins), ரிச்சர்ட் லெவோன்டின் ( Richard Lewontin) ஆகியோரின் படைப்புகள் மீதும் எங்கெல்ஸ் தாக்கம் செலுத்தியுள்ளார். தற்காலத்தில்,  செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஆய்வுகளிலும் எங்கெல்ஸை மேற்கோள் காட்டும் ஆய்வுகள் வந்துள்ளன.

நம் காலத்தில் எங்கெல்சின் கருத்துகளுக்குள்ள பொருத்தப்பாடு

முற்றிய நிலையை அடைந்துள்ள முதலாளித்துவ சுரண்டலின் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை மனிதர்கள் பசி,  வறுமை, இல்லாமை போன்ற அவலங்களைச் சந்திப்பது போலக் கண்மூடித்தனமாக இயற்கை சுரண்டப்படுவதன் விளைவாக பருவநிலை மாற்றம் போன்ற பேராபத்துகளும் மனித சமுதாயத்தை சூழ்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் எங்கெல்சின் சிந்தனைகளுக்கான இடம் என்ன?

”இயற்கையின் இயக்கவியல்” நூலில்,  “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்”  என்ற பகுதியில் எங்கெல்ஸ் கூறுகிறார்:

இயற்கையின்மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நாம் அளவுகடந்த தற்புகழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதல்முறை நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானாலும், இரண்டாவது மூன்றாவது முறைகளில் நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் தருகிறது; இவை பலமுறை, முதலில் ஏற்பட்ட விளைவைத் துடைத்தெறிந்து விடுகின்றன.

இன்று வளர்ந்துவரும் சூழலியல் துறையைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் எங்கெல்சின் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொள்கின்றனர்.

மேலும், பருப்பொருள் பரிமாற்றச் சுற்றோட்டம் (merabolic cycle), அதில் வர்க்க சுரண்டல் சமுதாயத்தில் ஏற்படும் பிளவுகள் ஆகியன குறித்த மார்க்சின் கருத்துகள் ‘க்ருண்ட்ரிஸெ’ (Grundrisse) போன்ற கையெழுத்துப்படிகளில் உள்ளன. இந்தக் கையெழுத்துப்படிகள் 1970களில்தான் பதிப்பித்து வெளியிடப்பட்டன. அவரது ‘சூழலியல் குறிப்பேடுகள்’ போன்றவை சமீப காலத்தில்தான் வெளியிடப்படத் தொடங்கியுள்ளன. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் கொஹிஸய்ட்டோ (Kohei Saito) எழுதியுள்ள ‘மார்க்சின் பசுமை சோசலிசம்: மூலதனம், இயற்கை மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய முடிவுபெறாத விமர்சனப் பகுப்பாய்வு’ (Karl Marx’s Eco-Socialism: Capital, Nature, and the Unfinished Critique of Political Economy) முதலிய நூல்கள் சமகால உலகில் சூழலியல் குறித்த இயங்கியல் பார்வைகளை முன்வைக்கிறது.

இன்றைக்கும் இந்தநூல் முக்கியமானது. ஆங்கிலத்தில் இந்தநூல் வெளியானபோது உலகப் பிரசித்திபெற்ற “நேச்சர்” (Nature) என்ற அறிவியல் ஆய்விதழில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜே.டி.பெர்னால் எழுதிய நூல்மதிப்புரை வெளியானது. அதில் அவர் எழுதியது, “இயற்கையின் இயக்கவியல் நூலை அறிவியல் தத்துவம் குறித்த இறுதிவாக்கியமாக ஒருவர் அணுகினால், இந்நூலை அவர் குப்பையெனக் கருதிவிடுவார். .. .. ஆனால் உலகைப் பற்றிக் கூற இந்நூல் எழுதப்படவில்லை. உலகை எப்படி பார்க்க வேண்டும், அதை எப்படி மாற்றவேண்டும் என்பதைப் பற்றிய நூல்தான் இது” என்று குறிப்பிட்டார். அதாவது, இயற்கை, சமுதாயம் மற்றும் அறிவியல் சிந்தனை குறித்த இயக்கவியல் அணுகுமுறையை இந்த நூலிலிருந்து கற்கவேண்டும் என்கிறார்.  மார்க்சிய ஆசான்களின் நூல்கள் அருள்வாக்கு அல்ல; அவற்றிலிருந்து வரலாற்று பொருள்முதல்வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையைக் கற்கவேண்டும்; அதன் அடிப்படையில் சமகால சவால்களை அணுக வேண்டும்.

இயற்கையின் இயக்கவியல் நூலின் முகவுரையில் ஹால்டேன் குறிப்பிடுகையில், “மனித இனம் சந்திக்கும் குழப்பமான சூழலை புரிந்துகொண்டு, வெளியேறி, நல்லதோர் உலகம் காண இக்காலத்தில் தெளிவான சிந்தனை அவசியமாக உள்ளது. எங்கல்ஸை படிப்பதன் மூலம் இன்று முன்வைக்கப்படும் மேம்போக்கான தீர்வுகளிலிருந்து நம்மை காத்து, நம் காலத்தின் நிகழ்வுகளில் விவேகமான மற்றும் துணிவான பங்கை நாம் ஆற்ற உதவும்” என்று எழுதுகிறார். இந்தப் பார்வையில் இக்காலத்திற்கும் எங்கல்சினுடைய இந்த படைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

(பாரதி புத்தகாலயம் நடத்திய எங்கெல்ஸ்200 சிறப்பு நேரலை நிகழ்வின் ஒரு பகுதியாக த.வி. வெங்கடேஸ்வரன் ஆற்றிய உரையை கேட்டு தொகுத்தவர்- அபிநவ் சூர்யா)

(இந்தக் கட்டுரையை வாசித்து, சில மேற்கோள்களை பொருத்தமாக தமிழில் வழங்கிய தோழர். எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு எமது நன்றி)

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...