அரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா?

933
1
SHARE
Editable vector question mark formed from many question marks

– வெங்கடேஷ் ஆத்ரேயா 

கடன் வாங்கவே கூடாது என்ற கருத்து குடும்பங்களுக்கே ஏற்புடையது அல்ல. வீடு கட்ட, கல்வி செலவுகளை ஈடு கட்ட என்றெல்லாம் கடன் வாங்குவது வழக்கமான நிகழ்வுகளாக ஆகியுள்ளதல்லவா? ஆனால் அரசு கடன் வாங்குவது கூட தவறானது என்ற பாணியில் பட்ஜெட்டுகள் பற்றிய விவாதங்கள் இப்பொழுது நடைபெறுகின்றன. இப்பிரச்சினை குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
நாட்டு வளர்ச்சிக்காக அரசுகள் முதலீடுகளை மேற்கொள்ள நிதி ஆதாரங்களை திரட்டுவது அவசியம். பட்ஜெட்டுகளை ஆய்வு செய்யும் பொழுது நடப்பு கணக்கு, மூலதன கணக்கு என்று பிரிப்பது தற்போது உள்ள அணுகுமுறை.

நடப்பு கணக்கு என்பது நடப்பு வரவுகள், நடப்பு செலவுகள் தொடர்பானது. இவற்றை “வருவாய் வரவுகள், வருவாய் செலவுகள்” என்றும் அழைப்பது உண்டு. ஒரு அரசாங்கத்திற்கு கிடைக்கும்  நடப்பு அல்லது வருவாய் வரவு  என்பதில் மூன்று வகை உண்டு: வரிகள், அரசு நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம், அரசு வழங்கிவரும் சேவைகளுக்கு (உ-ம்: மின் கட்டணம், கல்வி கட்டணங்கள்) வசூலிக்கப்படும் கட்டணங்கள். மறுபுறம்,  நடப்பு அல்லது  வருவாய் செலவு என்பது கட்டிடம், இயந்திரம் போன்ற புதிய சொத்தை உருவாக்காத  செலவை மட்டுமே குறிக்கும். (உ –ம்: அரசு ஊழியர்களுக்கு தரப்படும் சம்பளம்).
மூலதன கணக்கு என்பது மூலதன வரவுகள், மூலதன செலவுகள் தொடர்பானது. மூலதன செலவு என்பது ஒரு கட்டிடம், இயந்திரம் போன்ற புதிய சொத்தை உருவாக்கும் செலவுகளை குறிக்கும். மூலதன வரவு என்பது கடன் மூலம் கிடைக்கின்ற வரவையும் அரசாங்கம் அரசு சொத்துக்களை விற்பதன்மூலம் பெறும் வரவுகளையும் குறிக்கும்.

நமது நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1970களின் பிற்பகுதிவரை மத்திய அரசின் நடப்பு வரவு நடப்பு செலவை விட கூடுதலாகவே இருந்தது. அதாவது, நடப்பு கணக்கில் அரசுக்கு உபரி கிடைத்தது. இது அரசு முதலீடுகளை மேற்கொள்ள சிறிதளவாவது உதவியது. இந்த உபரியுடன் கடன் வாங்கியும் அரசு முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக மத்திய அரசின் நடப்பு செலவு நடப்பு வரவை விட கூடுதலாகவே இருந்து வருகிறது. ஆக, அரசின் மூலதன வரவுகள் – கடன் மற்றும் அரசு சொத்துக்களை விற்று (DISINVESTMENT) கிடைக்கும் தொகை – நடப்பு செலவுகளை ஈடுகட்டவும் பயன்படுத்தப்படும் நிலைமை உள்ளது. இது நீண்ட காலப்போக்கில் நிலைக்கத்தக்க ஏற்பாடாக இருக்க முடியாது. இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அரசின் வரிகொள்கைகள் மீது பெரு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் இருக்கும் செல்வாக்கே ஆகும். இன்றைய உலக மய சூழலில் இதற்கு ஒரு பன்னாட்டு அம்சமும் உள்ளது. தனியார் மூலதனத்தை ஈர்க்க வரிச்சலுகைகள் அளிப்பதில் நாடுகளுக்கிடையே போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினை கடன் வாங்குவது அல்ல; கடன் வாங்குவதற்கு முன், முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன? செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளின் வருமானம், லாபம், சொத்துக்கள் மீது தகுந்த வரி விதித்து அதனை முறையாக வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதன் வர்க்க தன்மையை இது வெளிப்படுத்துகிறது. இதனை செய்து, அதற்கு மேலும் நாட்டின் வளர்ச்சியை அதிகப்படுத்த தேவை என்றால், கடன் வாங்குவது தவறல்ல. கடன் வாங்கி அதனை முறையாக முதலீடு செய்து எதிர்காலத்தில் உற்பத்தியையும் அதன் மூலம் அரசின் வருமானத்தையும் பெருக்கி, வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான சவால்களை எதிர்கொண்டு, கடனையும் காலப்போக்கில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஆனால் ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் எண்ணற்ற, தேவையற்ற வரிச்சலுகைகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து கூடுதல் வரி திரட்டுவதே சாலச் சிறந்த வழி. இதற்குப்பதில் கடன் மூலம் வளங்களை திரட்டுவது என்பதில் ஒரு வர்க்க சார்பு உள்ளது. வசூல் செய்த வரி அரசுக்கு சொந்தம்; அதை நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் செலவு செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால், இதை தவிர்த்து கடன் வாங்கினால், எந்த செல்வந்தர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் அரசு கடன் வாங்கியுள்ளதோ, அக்கடனை அசலும் வட்டியுமாக அவர்களுக்கு அரசு திருப்பித் தந்தாக வேண்டும். அதாவது, செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதற்குப்பதில் அவர்களிடம் இருந்து கடன் வாங்குவது என்பது, செல்வந்தர்கள் சொத்தையும் பாதுகாத்துக் கொடுத்து அதன் மீது வட்டியும் தரும் வழியாகும்! வரி கட்ட நிர்ப்பந்திக்கப்படுவதை விட இதனையே  செல்வந்தர்களும் பெருமுதலாளிகளும் விரும்புவார்கள்!

ஆனால் இன்று பெரு முதலாளிகளை சலுகைகள் பல கொடுத்து தாஜா செய்தால்தான் அவர்கள் முதலீடுகளை செய்வார்கள்; அதுவே வளர்ச்சிக்கு வழி என்ற தாராளமய கோட்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இதனை எதிர்த்து பொதுக்கருத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நியாயமான அடிப்படையில் போதுமான அளவிற்கு பெரும் செல்வந்தர்களிடம் இருந்து அரசு வரி வசூல் செய்து, பொதுத்துறை மூலம் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சியின் அளவையும் தன்மையையும் மேம்படுத்த முடியும்.

எனினும், அரசு கடனே வாங்கக்கூடாது என்ற நிலைபாடு சரியல்ல.

ஒரு கருத்து

Please start yout discussion here ...