வரலாறு என்னை விடுதலை செய்யும் – பிடல் காஷ்ட்ரோ

224
0
SHARE

(கியூபாவில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான முன்னெடுப்பாக 1953 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் தேதி கியூபாவின் சாண்டியாகோ டி எனும் இடத்தில் அமைந்திருந்த மான்கடா ராணுவப் படைத்தளத்தின்மீது ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரது தோழர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட தோழர் ஃபிடல், நீதிமன்றத்தில் ஆற்றிய உரையின் மிகச் சிறிய பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.)

என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன், அவனது இன்றைய கனவுகள்தான் நாளைய நீதிகளாக மாறும். ஏனெனில் அவன் வரலாற்றில் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறான். காலத்தின் கொப்பரையில் மக்கள் ரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கிறான். எனவே, எதிர்காலம் என்பதை கடமையின் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதை சிறிது கூடத் தயக்கமின்றி அறிகிறான்”

கீழ்தரமான எண்ணங்களை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். துன்புறுத்தி இன்பங்காண்போரும், கொடியவர்களும், தங்கள் முன்னோரின் இழிச்செயல்களையெல்லாம் தாங்கி, மனிதப் போர்வையில் வளையவரும் இவர்கள், உண்மையில் கொடூரர்கள்தான்.

அதிகாலை நேரத்தில் எங்களது தோழர்கள் பலரும் ராணுவ முகாமிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஊர்திகளில் அழைத்துச்செல்லப்பட்டனர். ஏற்கெனவே சித்திரவதைகளால் உருக்குலைக்கப்பட்ட அவர்கள், பின்னர், கைகள் கட்டப்பட்டும், வாயில் துணியடைக்கப்பட்டும் விடுவிக்கப்பட்டு ஒதுக்குப்புறமான பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் இறந்ததாக அவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைச் செயல் பல நாட்கள் தொடர்ந்தது. கைதிகளில் சிலர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் பலரும் தங்களது கல்லறைகளை தாங்களே தோண்டிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலரும் பின்னால் கைகள் கட்டப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டார்கள். என்றாவது ஒருநாள் புதைக்கப்பட்ட இடங்களிலிருந்து இவர்கள் தோண்டியெடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் மக்களால் தோள்களில் சுமந்து செல்லப்பட்டு, மார்த்தியின் கல்லறைக்கருகே புதைக்கப்படுவார்கள்.

வழக்கமாக வழக்கறிஞர்கள் முடிப்பதைப்போன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நான் முடிக்கப்போவதில்லை. என்னுடைய தோழர்கள் பைன் தீவின் கொடுஞ்சிறைக்குள்ளே எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு விடுதலை வேண்டுமென்று என்னால் கேட்கமுடியாது. அவர்களுடைய விதியை நானும் பகிர்ந்துகொள்ள, என்னையும் அவர்கள் இருக்குமிடத்திற்கே அனுப்பிவையுங்கள். ஒரு நாட்டின் தலைவன் குற்றவாளியாகவோ அல்லது திருடனாகவோ இருக்கும் பட்சத்தில், அந்த நாட்டின் நேர்மையான மனிதர்கள் ஒன்று உயிரை விடவேண்டும் அல்லது சிறையில் வாடவேண்டும் என்ற நியதி புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

நீதிபதிகளின் கோழைத்தனத்தாலோ அல்லது நீதிமன்றங்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள பிடிப்பினாலோ இன்னமும் சட்டத்தின் முழுவலிமையும் குற்றவாளிகளின் மீது பாயாமலிருக்குமானால், அந்த நிலையிலும் நீதிபதிகள் தங்களது பதவிகளைத் துறக்காமல் இருப்பார்களேயானால், மதிப்பிற்குரிய நீதிபதிகளே, உங்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். இதற்கு முன் எப்போதும் இருந்திராத அவமானம் நீதித்துறையின்மீது விழப்போவது குறித்து நான் வருத்தப்படுகிறேன்.

இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும், கோழைத்தனமான அடக்கு முறைகளும் மிருகத்தனமான கொடுமைகளும் அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் நன்றாக அறிவேன். இருந்தாலும், எனது உயிரினுமினிய எழுபது தோழர்களை பலி வாங்கிய அந்தக் கொடுங்கோலனின் கோபத்தைக் கண்டு நான் எப்படி அஞ்சவில்லையோ, அதைப்போன்றே இந்தச் சிறைவாசத்தை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. என்னைத் தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல.

வரலாறு என்னை விடுதலை செய்யும்.

தமிழில். வீ.பா.கணேசன்   

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்