இந்திய விடுதலைப் போராட்டமும், சமூக விடுதலைக்கான முன்னெடுப்புக்களும்

409
0
SHARE

முனைவர் ப. குமார்

இந்திய விடுதலை இயக்கமும் சாதியும் என்ற தலைப்பு பல முக்கியமான வினாக்களை உள்ளடக்கியது. இந்திய விடுதலைப் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக இருந்ததா? அல்லது சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட சமூக விடுதலையை உள்ளடக்கியதாக இருந்ததா? இந்திய விடுதலைப் போராட்டத்தையும் சமூக விடுதலையையும் இணைத்துப் பார்க்கும் நிலையில் அவற்றுக்கு இடையிலான தொடர்பு மற்றும் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு புரிந்துகொள்வது?  என்ற கேள்விகள் முக்கியமானவை.

இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றிக் குறிப்பிடும் போது பிபின் சந்திரா, கே. என். பணிக்கர் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

“இந்திய விடுதலைப் போராட்டம் நவீன உலகில் நடைபெற்ற ஒரு முக்கியமான மக்கள் திரள் போராட்டம். அது மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம், இனம், சாதி, முரண்பாடான கருத்துக்கள் மற்றும் வெவ்வேறான நம்பிக்கைகளைக் கொண்ட பல பிரிவு மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாகும்.”

இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி பல்வேறு பிரிவுகளைக் கொண்ட மக்களை பிரதிபலித்ததோ அதேபோல் சமூக சீர்திருத்தம் குறித்த பல சிந்தனைப்போக்குகளும் அதன் ஊடாக விவாதிக்கப்பட்டது; முன்னெடுக்கப்பட்டது.

19ம் நூற்றாண்டின் எழுச்சி

இந்தியாவின் அரசியல் தன்மையும் சமூகத்தன்மையும் பல அந்நிய படையெடுப்புகளுக்கு காரணமாக இருந்ததாக கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மேம்படுத்தப்பட்ட நவீனப் போர்கருவிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட பலமான இராணுவம், அரசியல் அதிகாரம், வலுவான பொருளாதாரம் போன்றவையே காலனிய படையெடுப்புகளுக்கு காரணங்களாக அமைந்தன. இவற்றோடு ஐரோப்பிய கலாச்சார மேலாதிக்கமும் காலனிய படையெடுப்பிற்கும் காலனிய ஆட்சி நீடித்து நிலைத்திருப்பதற்கும் கணிசமாக பங்காற்றியதாக நிக்கோலஸ் ட்ரிக்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்திய சமூகத்தை காட்டுமிராண்டிகளின் சமூகம் எனவும், பண்பாடற்ற சமூகம் எனவும் குறிப்பிட்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இத்தகைய காட்டுமிராண்டிகளின் சமூகத்தை நாகரீகப்படுத்தும் வரலாற்றுப் பணி தங்கள் கைகளில் இருப்பதால் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டனர்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது என்ன? ஆங்கில ஆட்சி நடைமுறைபடுத்திய சமூக பொருளாதாரக் கொள்கைகள், அடிப்படையில் இந்திய வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும், இந்திய மக்களின் உழைப்பை சுரண்டுவதற்குமே உருவாக்கப்பட்டன. இதன் மூலம் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சில உரிமைகள் கிடைத்த அதே வேளையில் அவர்கள் முழு உரிமைகளையும் அடைய முடியாமல் பார்த்துக்கொண்டது. காலனிய ஆட்சியில் சாதிய அமைப்புமுறை நிறுவனமயமாக்கல் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஆங்கிலேயர்களுக்கு முன்னால் இந்தியாவின் நிலவுடமை ஆட்சியாளர்கள் (பண்டைய காலந்தொட்டு இடைக்காலம் வரை ஆட்சி செய்த இந்து மற்றும் முஸ்லீம் ஆட்சியாளர்கள்) எப்படி சாதிய அமைப்புமுறையை தங்களுடைய சுரண்டலுக்காக பயன்படுத்திக் கொண்டார்களோ அப்படியே ஆங்கிலேயர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

நவீன கல்வி முறை

இந்தியர்களை நாகரீகப்படுத்தும் முயற்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி முறை முதன்மையான பங்கை வகித்ததாக பெர்னார்டு கோண் குறிப்பிடுகிறார். இந்த நவீன பள்ளிகளை தொடங்கியவர்கள் கிறித்துவ மிஷனரிகளே.

1813ஆம் ஆண்டு சார்ட்டர் சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவில் கிறித்துவ மிஷனரிகள் தங்களுடைய மதப்பிரச்சாரங்களுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். அதற்கு முன்புவரை அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாத பிரஞ்சு ஆளுமைக்குட்ட இந்தியப் பகுதிகள், குறிப்பாக பாண்டிச்சேரி மற்றும் இந்திய சிற்றரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் கிறித்துவ மதப்பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். இம்மதப் பிரச்சாரங்கள் இரண்டு மிகமுக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தன. முதலாவது, இந்திய சமூகத்தின், குறிப்பாக இந்து சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களை கேள்விக்குள்ளாகுவதன் மூலம் கிறித்துவ மதப்பிரச்சாரத்தை முன்னெடுப்பது. மற்றொன்று நவீன கல்வியை முன்னெடுப்பதன் மூலம் தங்கள் மதப்பிரச்சாரத்தை மேற்கொள்வது. இந்த இரண்டு செயல்பாடுகளுமே இந்திய சமூகத்தில் ஒரு எழுச்சிக்கு வித்திட்டன.

இந்து சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த, நவீன காலத்திற்கு பொருந்தாத பல பழக்கவழங்களை கிறித்துவ மிஷினரிகள் விவாதப் பொருளாக்கினர். பெண்ணடிமைத்தனம், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் போன்றவை அவற்றில் முக்கியமானவை. பதினைந்தாம் நூற்றாண்டு முதலே இந்தியாவில் அச்சுப்பொறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அவை கிறித்தவ மதபிரச்சாரத்தில் பெரும்பங்காற்றின. உதாரணமாக 1847 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் முதன்முதலாக அச்சுப்பொறி அமைக்கப்பட்டது. முதல் பத்தாண்டுகளுக்குள் 63 வகையிலான பிரச்சார நோட்டிசுகள் சுமார் 4 லட்சத்து 30 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. இப்படி தமிழகத்தில், பம்பாயில், கல்கத்தாவில் கிறித்துவ மிஷனரிகளால் முன்னெடுக்கப்பட்ட மதப்பிரச்சாரம் அன்றைக்கு நவீன கல்விக்கு ஆட்பட்டிருந்த இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர்கள் கிறித்தவ மிஷினரிகளை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ இந்து சமூகத்தை சீர்திருத்த முயன்றனர்.

தாமஸ் பெயின், ஜெர்மி பெந்தம், ஜேம்ஸ் மில், ஜான் ஸ்டுவர்ட் மில் மற்றும் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் போன்றவர்களின் முயற்சியால் சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, அரசியல் விடுதலை போன்ற கருத்துக்கள் இந்தியாவில் பரவத்தொடங்கியது. இது அவ்வெழுச்சியை மேலும் வலுப்படுத்தியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியர்களின் எழுச்சியின் துவக்கப் புள்ளியாக சமூக சீர்திருத்தம் இருந்தது. சமூக சீர்திருத்தத்தின் மூலம் முதலில் கவனம் செலுத்தப்பட்டது இந்திய பெண்களின் நிலைமையாகும். குறிப்பாக அவர்கள் இந்து மதத்தில் நடத்தப்பட்ட விதம் குறித்தானது.

பிபன் சந்திரா மேற்கோள்காட்டும் ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிடுவதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கள் நிலையை ஓரளவிற்குப் புரிந்து கொள்ளமுடியும். அன்றைக்கு வங்காளத்தில் இருந்த 80 வயதைக் கடந்த ஒரு பிராமணருக்கு சுமார் 200 மனைவிகள் இருந்ததாகவும், அவர்களில் மிக வயது குறைந்த மனைவியாக 8 வயது சிறுமி இருந்ததாகவும் பிபன் சந்திரா குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் பின்பற்றப்பட்ட சதி என்ற உடன்கட்டை ஏறுதல் நடைமுறையால் கணவனை இழந்த பெண்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். சமூகத்தின் அடித்தட்டில் இவ்வழக்கம் இல்லை என்றாலும், அது பிராமண சமூகத்தில் பெரும்பான்மையாக கடைபிடிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், பெண் சிசுகொலை போன்றவையும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தன.

சமூகசீர்திருத்த இயக்கங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பெரும்பான்மையான சமூகசீர்திருத்த இயக்கங்களும் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளிலும் பின்னர் படிப்படியாக சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தின. வங்காளத்தில் உருவாகிய பிரம்ம சமாஜம் (1828) மற்றும் அதனோடு தொடர்புடைய மற்ற அமைப்புகள், மகாராஷ்டிரத்தில் உருவான பிரார்த்தனை சமாஜம் (1867) பரமஹம்ச மாண்டலி (1840) ராஜஸ்தான் – பஞ்சாப் பகுதிகளில் உருவான ஆரிய சமாஜம் (1875) போன்றவை முக்கியமானவை.

இராஜா ராம்மோகன் ராய் (1772-1833), அக்சய குமார் தத்தா (1820-1886), ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (1820-1891), கேசப் சந்திர சென் (1838-1884) பக்கிம் சந்திர சட்டர்ஜி (1838-1894), சுவாமி விவேகானந்தா (1863-1902) மற்றும் தயானந்த சரஸ்வதி (1824-1883), போன்ற இந்து மேல்தட்டு வர்க்கத்திலிருந்து உருவான தலைவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் அதற்குள்ளாகவே சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தனர்.

மதமும் மதம்சார்ந்த சடங்குகளும் இந்திய சமூகத்தை கட்டுப்படுத்துவதால் சமூக சீர்திருத்தத்தின் முதல்படியாக மதத்தையும் அதுசார்ந்த சடங்குகளையும் சீர்திருத்துவது இன்றியமையாதது. ஆனால் துவக்கக்கால சமூக சீர்திருத்தவாதிகள் பெரும்பாலும் மதத்தின் துணையோடு சீர்திருத்தங்களை முன்வைத்தனர். இதற்கு துணையாக அவர்கள் கடந்த காலத்தை பொற்காலமாக சித்தரித்து தங்களின் கோரிக்கைகளுக்கு துணைக்கு அழைத்தனர். மதத்தையும் அதனுடைய பங்கையும் அவர்கள் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எம்.ஜி. ராணடே (1842-1901) போன்ற ஒருசிலரே இதிலிருந்து வேறுபட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்து சமூகத்தில் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறிப்பாக தீண்டாமைக் கொடுமைகள் மீது கவனம் செலுத்தின. இந்த காலகட்டத்தில்தான் இந்து மதம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.  மகாராஷ்ட்ராவின் ஜோதிராவ் புலே (1827-1890) மற்றும் கேரளத்தின் நாராயண குரு (1855-1928) ஆகியோரே இத்தகைய மகத்தான பணியை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் மிகத்தீவிரமாக சாதியமைப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்ததோடு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

ஜோதிராவ் புலே இந்தியர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இந்து மதமும் அதை பாதுகாக்கும் பிராமணியத் தன்மையுமே முக்கிய காரணங்கள் எனக் கருதினார். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுக்கும் பணியைத் தொடங்கிய புலே படிப்படியாக 1873இல் சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பை தோற்றுவித்து சாதியமைப்புக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றமாகக் கருதப்படும் ஜோதிராவ் புலேவின் செயல்பாடு போற்றத்தக்கது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூக நிலைமைக்கு எப்படி பார்ப்பனர்கள் காரணமோ, அதேபோல தீண்டப்படாதாரின் நிலைமைக்கும் பார்ப்பனர்களும் அவர்களின் மதமுமே காரணம் என்ற புரிதலையே அவருடைய செயல்பாடுகள் கொண்டிருந்தன.

“ஒரு மதம், ஒரு கடவுள், ஒரு ஜாதியே மனிதருக்கு போதுமானது“ என்ற நாராயண குருவின் கொள்கை அவருடைய சீடரான சகோதரன் அய்யப்பனால் “மனிதருக்கு மதமோ, கடவுளோ, சாதியோ தேவையில்லை“ என முன்னேற்றம் கண்டது.

இந்திய தேசிய காங்கிரசும் சமூக சீர்திருத்தமும்

1885ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இதன் மூலம் அன்றைக்கு சென்னை, பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட இந்திய நகரங்களில் தோன்றியிருந்த பல மாகாண அமைப்புகள் ஒன்றுபடுத்தப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியர்களின் விடுதலை உணர்வு நிறுவனமயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியர்களின் விடுதலை உணர்வுகளை ஒருங்கிணைத்த அதே நேரத்தில் சிதறிக் கிடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களையும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியையும் ஆற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட இரண்டாண்டுகளில் அது சீர்திருத்த மாநாடுகளையும் முன்னெடுத்தது. பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்கள் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஆர். ஜி. பந்தர்கர் (1837-1925), எம்.ஜி. ரானடே (1842-1901), என்.ஜி. சந்தவார்கர் (1855-1923), ஜி.ஜி. அகர்கர் (1856-1895) போன்றோர். அரசியல் விடுதலையையும் சமூக விடுதலையையும் இணைத்தே பிரச்சாரம் செய்யப்பட்டன. 1887ஆம் ஆண்டு முதல் 1906 வரை சமூக சீர்திருத்த மாநாடுகளும் காங்கிரஸ் மநாடுகளின் ஒரு பகுதியாக நடைபெற்றன. இந்திய தேசிய காங்கிரஸில் சீர்திருத்தவாதிகளைப் பின்னுக்குத் தள்ளி திலகர் உள்ளிட்ட தீவிர தேசியவாதிகள் முன்னுக்கு வந்த காலத்தில் சீர்திருத்த செயல்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட அதேகாலகட்டத்தில்தான் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் சாதிய சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ளுதல் முக்கியமானதாகும். 1880-கள் முதலே ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய சங்கங்கள் பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் கொள்கைகள் இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைந்தன. 1857ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழங்களின் ஆண்டு பட்டமளிப்புவிழா உரைகளில் இத்தகைய சாதி, இன, மதப் பிளவுகளை மேலும் கூர்மையாக்கும் பேச்சுக்கள் காணப்படுவதாக வரலாற்றுப் பேராசிரியர் சுமித் சர்க்கார் குறிப்பிடுகிறார்.

காந்தியின் வருகைக்கு முன்பிருந்த காங்கிரஸின் செயல்பாடு அதை முன்னெடுக்கும் வர்க்கத்தின் நலன்களை கோரிக்கைகளாக மாற்றி பிரிட்டிஷ் அரசுக்கு மனுப்போடும் அமைப்பாக இருந்ததாலும் பழைமைவாதிகள் மற்றும் வைதீக இந்துக்களின், குறிப்பாக பிராமணர்களின், ஆதிக்கம் மேலோங்கியிருந்த காரணத்தால் இத்தகைய சாதிய சங்கங்கள் இந்திய விடுதலைப் போராட்டங்களிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டன. உதாரணமாக கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாடுகளால் உந்தப்பட்ட சென்னை மகாஜன சபா (அன்றைக்கு இருந்த சென்னை மகாணத்தில் இந்திய தேசிய இயக்கத்தை முன்னெடுத்த முக்கிய அமைப்பு) தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அயோத்திதாச பண்டிதரை தங்கள் வருடாந்தர கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தது.

1892ஆம் ஆண்டு சென்னையில் மகாஜன கூட்டத்தில் அயோத்திதாசர் கலந்துகொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்துதல் தொடர்பாக அயோத்திதாசர் பல கோரிக்கைகளை காங்கிரஸ் தேசியவாதிகளின் முன் வைத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை வழங்குதல், நிலம் ஒதுக்குதல் போன்ற பொருளாதார கோரிக்கைகளை சென்னை மகாஜன சபை ஏற்றுக்கொண்டது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைத்துக் கோயில்களிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அயோத்திதாசரின் கோரிக்கை வைதீக தேசியவாதிகளால் பலமாக எதிர்க்கப்பட்டது. சென்னை மகாஜன சபையின் வைதீகத் தன்மையை உணர்ந்த அயோத்திதாசர் காங்கிரஸ் கூட்டத்திலிருந்து வெளியேறியதோடு தாழ்த்தப்பட்ட மக்களை பௌத்த சித்தாந்தத்திற்குள் வழிநடத்தத் தொடங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸின் துவக்கக்காலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை ஆதரிப்பதில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டது. இத்தகைய ஏற்ற இறக்கங்களை காந்தியின் தலைமையேற்பிற்கு பின்னாலும் கூட நம்மால் பார்க்க முடியும்.

புதிய சகாப்தத்தின் துவக்கம்

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு பல்வேறு வகைகளில் இந்திய விடுதலை இயக்கத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. உலகம் இதுவரை கண்டிராத உலக மகாயுத்தம் மற்றும் அதன் தாக்கங்கள், ஆயுத புரட்சியின் மூலம் ஜார்மன்னரின் கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டு ரஷ்யாவில் சோவியத் குடியரசு அமைக்கப்பட்டதன் மூலம் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட தொழிலாளர் எழுச்சி மற்றும் காங்கிரஸிற்கு மகாத்மா காந்தி தலைமையேற்றலும் மக்கள் இயக்கமாக காங்கிரஸின் உருமாற்றம் என்பன முக்கியமானவை.

காந்தியின் வருகைக்கு பின்னால் காங்கிரஸ் இயக்கத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாவது காங்கிரஸ் நிர்வாகம் மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இது அந்தந்த பிராந்திய மொழியிலேயே காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் அமையவும் வழிவகுத்தது. ஆங்கிலம் படித்தவர்களையும் தாண்டி பிராந்திய மொழிகளில் தலைவர்கள் உருவானார்கள். அடுத்தது, காங்கிரஸின் சந்தா தொகை குறைக்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரும் மற்ற தொழில் செய்வோரும் காங்கிரஸில் பெருமளவிற்கு பங்கெடுக்கும் வகையில் இயக்கம் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழகத்தில் பிராமணரல்லாதார் சங்கம் உருவாகியதோடு, அது தன்னை தேசிய போராட்டத்தில் இணைத்துக் கொள்ளாமல், காங்கிரஸை பிராமணர்களின் சபை என்று கருதியதாலும், விடுதலைப் போரட்டத்தை பிராமணர்கள் தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான போராட்டமாக பார்த்ததாலும், இந்திய தேசிய காங்கிரஸிற்கு எதிராகவே செயல்பட்டது. காந்தியின் வருகைக்கு பின்னால் தமிழகத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜகோபாலாச்சாரி முன்முயற்சியால் பிராமணரல்லாதர் தலைவர்கள் குறிப்பாக திரு. வி. கல்யாணசுந்தரம், பெரியார் ஈ. வெ. ரா., டாக்டர் பி. வரதராஜுலு உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸின் தலைமை பொறுப்பிற்கு வந்தார்கள். இதன் காரணமாக படிப்படியாக தமிழக காங்கிரஸின் வைதீக பிடி தளர ஆரம்பித்தது.

காந்தியின் தீண்டாமை ஒழிப்பு

காந்தியின் வருகைக்கு பின்னால் காங்கிரஸில் தீண்டாமை ஒழிப்பு ஒரு முக்கிய பணியாக மாறியது. காங்கிரஸின் தீண்டாமை ஒழிப்பு பணியை புரிந்துகொள்வதற்கு காந்தியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த புரிதலை அறிவது அவசியமாகிறது.

இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த தீண்டாமையை ஒரு பாவச் செயலாக காந்தி பார்த்தார். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது மிக முக்கியமான மற்றும் முதன்மையான தேசியப் பணியாக காந்தி கருதினார். ஆனால் தீண்டாமைக்கு அடிப்படையாக விளங்கும் சாதி அமைப்பையோ அல்லது வர்ணாசிரம கோட்பாட்டையோ காந்தி கேள்விக்குள்ளாக்கவில்லை. தீண்டாமையை இந்து மதமும் அதன் வேத சாத்திரங்களும் ஆதரிக்கவில்லை என்று வாதிட்டதோடு தன்னை ஒரு இந்துவாகவும் வர்ணாசிரம வாதியாகவும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறார். காந்தியின் தீண்டாமை விலக்கு பிரச்சாரம் எந்த வகையிலும் சாதிமறுப்பு திருமணத்தையோ அல்லது சமபந்தி போஜனத்தையோ ஆதரிக்கவில்லை. காந்தியின் தீண்டாமை ஒழிப்பு என்பது நவீன காலத்திற்கேற்றாற்போல் இந்து மதத்தை சீர்திருத்துவது என்ற அளவிலேயே இருந்தது. இத்தகைய புரிதலோடுதான் தேசியவாதிகள் தீண்டாமை ஒழிப்பை தமிழகத்திலும் இந்தியாவிலும் முன்னெடுத்தனர்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்பு கொள்கை பல முக்கிய குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் அது முதன் முறையாக அகில இந்திய அளவில் விடுதலை இயக்கத்தோடு சேர்த்து முன்னெடுக்கப்பட்டது என்பது ஒரு மகத்தான திருப்புமுனையாகும். 1920கள் முதலே தமிழகத்தில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான காங்கிரஸ் மாநாடுகளில் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் கோயில் நுழைவு போன்ற பல தீர்மானங்கள் பெரும்பான்மை பலத்தோடு நிறைவேற்றப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும் இந்திய தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. 1920களின் கடைசியில் பெரியாருக்கும் காந்திக்கும் இடையிலான சாதி, மதம் மற்றும் தீண்டாமை குறித்த விவாதங்கள், அதேபோல் 1932இல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான நெருக்கடி போன்றவை காந்தியையும் காங்கிரஸையும் வெகுவாக பாதித்தன. அவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான வேலை அதிகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாகவே 1932ஆம் ஆண்டு இறுதியில் தீண்டாமை ஒழிப்பிற்கான ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதுபின்னர் 1934இல் ஹரிஜன சேவா சங்கமாக பெயர் மாற்றப்பட்டு மாநில, மாவட்ட, கிராம அளவில் கிளைகளை அமைத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கியது. அதேபோல் 1930களில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமைக்காக பல கோயில் நுழைவுப் போராட்டங்களை காங்கிரஸ் முன்னின்று நடத்தத் துவங்கியது.

இத்தகைய பணிகள் புதுவேகம் பெறுவதற்கு அப்போது காங்கிரஸ் வேலைகளில் பங்கெடுக்கத் தொடங்கியிருந்த முற்போக்கு சக்திகளான சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளும் மற்றுமொரு காரணமாகும். 1920கள் முதலே சென்னையின் முக்கிய தேசியவாதியாகவும் கம்யூனிஸ்டாகவும் இருந்த சிங்காரவேலர் பெரும் பகுதியான காங்கிரஸ் இயக்கங்களை தீண்டாமை ஒழிப்போடு இணைத்தே நடத்தினார். சிங்காரவேலரின் சீரிய முயற்சியால் சென்னைச் சேரிகளிலிருந்து பல படித்த இளைஞர்கள் காங்கிரஸ் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். 1934இல் ஹரிஜன சேவா சங்கத்தின் சென்னை மாவட்ட முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட இரண்டு பேரில் ஒருவர் பி. ராமமூர்த்தி.

சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பை தீவிரமாக முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி வீரர்களாக செயல்பட்ட பி. ஜீவானந்தம், கே. முருகேசன், டி.என். ராமச்சந்திரன், சி.பி. இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கம்யூனிஸ்ட்டுகளே.

கம்யூனிஸ்டுகளின் பங்கு 

1936  முதல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் அமைப்பின் மூலமாக வெளிப்படையாக காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்த கம்யூனிஸ்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார்கள். ஒருபுறம் காங்கிரஸ் மற்றும் காந்தியின் தீண்டாமை ஒழிப்பில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டியும் பிரச்சாரங்களை அவர்கள் மேற்கொண்டனர். தாழ்ப்பட்டவர்களின் உரிமை என்பது வெறும் சமூக மற்றும் கலாச்சார உரிமை மட்டுமல்ல; அது அவர்களின் அரசியல் உரிமை என்று கம்யூனிஸ்டுகள் உரக்க குரல்கொடுத்தனர். ஆறு கோடி தீண்டப்படாதவர்களை முன்னேற்றாமல் தேசத்தின் முன்னேற்றம் இல்லை என்றும், காந்தியும் காங்கிரசும் இதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பிரச்சார அளவில் மட்டுமல்ல, செயல்பாட்டளவிலும் கம்யூனிஸ்டுகள் தீண்டாமை ஒழிப்பை முன்னெடுத்தனர். கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் காந்திய இரவுப் பள்ளிகள் மற்றும் சமத்துவப் பள்ளிகள் செயல்பட்டன. இப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு அனைவரையும் அமரவைத்து பாடங்கள் போதிக்கப்பட்டன. இராமநாதபுரம் உள்ளிட்ட சில இடங்களில் கம்யூனிஸ்டுகளின் இத்தகைய முயற்சிக்கு பலமான எதிர்ப்புகளும் தோன்றின. வைதீக எதிர்ப்புகளுக்கு அஞ்சிடாமல் இத்தகைய பணிகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கம்யூனிஸ்டுகள் அப்பணிகளில் காங்கிரஸின் குறைகளையும் சுட்டிக்காட்ட தயங்கவில்லை.

தொழிலாளர்களையும், கூலி விவசாயிகளையும் அடித்தட்டு மக்களையும்  பெரிய அளவில் காங்கிரஸின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்து காங்கிரஸ் இயக்கத்தை ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்றிய கம்யூனிஸ்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களையும் வெகுவாக பங்கெடுக்க வைத்து போராட்ட உணர்வை ஊட்டினர்.

இப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில் இந்தியாவின் எழுச்சியாக ஆரம்பித்த சமூக சீர்திருத்த சிந்தனைகள் பின்னர் அரசியல் விழிப்புணர்வாக பரிணமித்தது. இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் அதன் செயல்பாட்டிலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இந்திய விடுதலையில் நேரடியாக பங்களிப்பு செய்யாத தலைவர்களும் அதனுடைய கொள்கை மற்றும் செயல்பாடுகளை மறைமுகமாக வளர்த்தெடுத்ததில் பங்காற்றியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய தேசிய காங்கிரஸில் இருந்த பிற்போக்கு சக்திகள் சமூக சீர்திருத்த இயக்கத்தை பின்னுக்கு இழுத்த நிலையில் அவ்வியக்கத்தில் இருந்த முற்போக்கு சக்திகள் மேலும் பலமான முறையில் சமூக சீர்திருத்தத்தையும் இந்திய விடுதலை இயக்கத்தையும் இணைத்தே முன்னெடுத்தனர் என்பதைத்தான் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...