லெனின் வாழ்வும் சிந்தனையும்

1524
2
SHARE

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. அரசியல்வாதிகள், சமூகவியலார், புரட்சியாளர்கள், இலக்கியவாதிகள், சரித்திர ஆய்வாளர்கள், பத்திரிகை நிருபர்கள் என பன்முகத்தினர் அவரைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதிவிட்டனர். இதில் சோவியத் யூனியனின் பங்கு மகத்தானது. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.

அதோடு அந்தச் சிந்தனைச் சிற்பி எழுதிய, பேசிய, கலந்துரையாடிய அனைத்தும் சேர்க்கப்பட்டு, கோர்வைபடுத்தப்பட்டு 45 பாகங்களாக வெளிவந்து விட்டன. பெரிய சாதனை! இந்த மாமனிதர் காலைக் கடன்களைக் கழிக்கின்ற போது கூட பேப்பரும், பேனாவோடும்தான் இருந்திருப்பாரோ என யூகிக்க வேண்டியுள்ளது.

ஓயாத படிப்பு – தீராத பயணம் தலைமறைவு வாழ்க்கை, நாடு கடத்தப்படல், சிறை வாழ்க்கை, காவல்துறையினரின் கழுகுப்பார்வை, எதிரிகளின் நோட்டம், இவ்வளவுக்கும் இடையில் எப்படி இவரால் இவ்வளவையும் எழுத முடிந்தது. நமக்கு மலைப்பாய் இருக்கிறது. இந்த மாமனிதர் அவர் வாழ்வில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்கவில்லை போலும், நேரம் அவருக்கு விலை மதிப்பற்றது.

அவரின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும், ஒவ்வொரு நிமிட வாழ்க்கையிலும் அவர் எப்படி இந்த நேரங்களைப் பயன்படுத்தினார் என்று கூட ஆய்வாளர்கள் விவரங்கள் சேகரித்து எழுதிவிட்டார்கள். அவர் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நேரத்தில், டாக்டர்களின் அறிவுரைகளையும் மீறி அவர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பது கூட பதிவு செய்யப்பட்டுள்ளன; அவையெல்லாம் சுவையான விஷயங்கள்.

என் அறிவுக்கு எட்டிய வரையில் கடந்த நூற்றாண்டுகளில் உலகில் பைபிலுக்குப் பிறகு, இவர் எழுதிய நூல்கள், இவரைப் பற்றி எழுதிய நூல்கள் தான் உலக மக்களால் அதிகமாகப் படிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனால் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!

இந்த நூலைப் படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்ரதாயப் பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது.

லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர் – அவரின் வாழ்க்கைப் பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது. அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைந்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளனாக அருணன் தன் எழுத்து பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்வது பாராட்டும்படியாக இருக்கிறது.

– தே. இலட்சுமணன்

2 கருத்துக்கள்

Please start yout discussion here ...