மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா?

1498
0
SHARE

– ச.தமிழ்ச்செல்வன்

கேள்வி: சமீபத்திய மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறையில் நடைபெற்ற போராட்டம் எனச்சிலர் மதிப்பிடுகிறார்களே அது சரியா?

பதில்: முதலில் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதல் இருந்தால்தான் இந்தப்போராட்டத்தை அதனடிப்படையில் எடை போட முடியும். தமிழகத்தில் நவீன இலக்கியவாதிகள்தாம் முதன் முதலாக இச்சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினார்கள். யதார்த்தவாதம் செத்து விட்டது. இனி பின் நவீனத்துவம்தான் இலக்கியத்தின் பாதை என்கிற முழக்கத்துடன் அது ’80 களில் வெளிப்பட்டது. ஆனால்  இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் இலக்கிய உலகில் யதார்த்தவாதமும் சாகவில்லை.பின் நவீனத்துவமும் கொடி நாட்டிவிடவில்லை.

நம்மைச்சுற்றியுள்ள யதார்த்தம் எப்படி சாகும்? யதார்த்தத்தை எல்லோருக்கும் சமமானதாக மாற்றும் போராட்டம்தானே நம் வரலாறு. ஆகவே தமிழகத்தில் பின் நவீனத்துவம் கலை இலக்கியத்தைக் கைவிட்டு விட்டு 90 களில் அரசியல் அரங்கில் நுழைந்தது.

பின் நவீனத்துவம் என்பது ஒற்றைத்தத்துவம் அல்ல. பல்வேறு கூறுகளைக் கொண்ட ஓர் அவியல். பின் நவீனத்துவம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். அது தரும் பொருள் என்ன? நவீனத்துவத்துக்குப் பின்னர் வந்தது என்கிற பொருளை அது உணர்த்துகிறது. நவீனத்துவம் என்றால் என்ன? தொழிற்புரட்சிக்குப்பின் 1900-1930 களில் கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற துறைகளில் எழுந்த  ஓர் எதிர்க்குரல் எனலாம். பழமைக்கும் மரபார்ந்த சிந்தனைகளுக்கும் வடிவங்களுக்கும் எதிராக- மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடும் எல்லாவற்றுக்கும் எதிராக -எழுந்த ஓர் எதிர்ப்புக்குரல்.

அதற்குப் பினர் வந்தது பின் நவீனத்துவம் என்று சொன்னால் அது இன்னமும்  வீரியத்துடனும் போர்க்குணத்துடனும் இருக்கும்போல என்கிற  ஊகம் நமக்கு வருவது இயல்பு.ஆனால் பின் நவீனத்துவ சிந்தனையாளர்களாகக் கருதப்படும் லியோதார்த், பூக்கோ,தெரிதா போன்ற தத்துவவாதிகள் ”மார்க்சியத்துடன் மிகக்கடுமையான முறையில் பிணக்கும் மோதலும் ,பகைமையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்” என்று மார்க்சிய சிந்தனையாளரான தோழர் ஐஜாஸ் அகமது குறிப்பிடுகிறார்.

பின் நவீனத்துவத்தை ஓர் அவியல் எனக்குறிப்பிட்டோம்.கட்டுடைத்தல், மையம்-விளிம்பு என சமூகத்தைப் பிரித்துப் பார்த்தல்,பகுதிகள் இணைந்த முழுமையைக் காண்பது தவறு என வாதிட்டு பகுதிகளைப் பகுதிகளாகவே பார்க்கும் கண்ணோட்டம்,பின் அமைப்பியல்வாதம் ,பொதுவான வரலாற்றைப் பெருங்கதையாடல் எனச்சொல்லி அதைவிட சிறு சிறு கதையாடல்களுக்கு அழுத்தம் தரும் போக்கு என இவை போன்ற பல்தரப்பட்ட கருத்துக்களையும் பின் நவீனத்துவம் என்கிற பெயரில் சுட்டுகிறார்கள்.

இக்கூறுகளில் சில சமூகத்தைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.ஆனால் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கலாம்.அடையாள அரசியல் எனப்படுகிற இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகில் எழுந்த அரசியலுக்கு உகந்த தத்துவமாகப் பின் நவீனத்துவம் முன் வைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.இந்தக் கருத்தாக்கங்கள் எல்லாமே ஒரு விஷயத்தில் ஒன்றாக நிற்பதைப் பார்க்கலாம். சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்கிற மிக மிக முக்கியமான அடிப்படையைப் பற்றி மௌனம் காக்கின்றன என்பதே அது.

இப்போது மெரினா எழுச்சிக்கு வருவோம். மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையின் கீழ் இல்லாத எழுச்சி, தமிழன் என்கிற அடையாள அரசியலை அணிந்து கொண்ட எழுச்சி,அனைத்துவகையான அரசியல் கட்சிகளையும்(பெருங்கதையாடல்களை !) புறக்கணித்த எழுச்சி என்கிற வகைக்குள் இவ்வெழுச்சியை வைத்துப் பார்த்து இது பின் நவீனத்துவப்போராட்டம் எனச் சிலர் கூறுவதாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்த எழுச்சியை என்ன வைகையான தத்துவத்துக்குள் அடைக்கலாம் என்று விவாதிப்பதைப் பார்க்கிலும் இந்தப்போராட்டத்தை எப்படிப்புரிந்து கொள்வது, இதிலிருந்து என்ன படிப்பினையைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் மிக முக்கியமானது.

”1968 மே எழுச்சி ” என வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட பிரான்ஸ் நாட்டு மாணவர் எழுச்சியும் இப்படி ஒரு மையப்பட்ட தலைமையின் கீழ் இல்லாமல் துவங்கியதுதான். அதிபர் சார்லஸ் டி காலே யின் ஆட்சிக்கு எதிராகத் துவங்கிய அந்த எழுச்சியில் பின்னர் தொழிற்சங்கங்களும் கூட வேலை நிறுத்தம் செய்து இணைந்தன.நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்தும் முடிவுக்குச்செல்ல அந்த எழுச்சி அரசை நெட்டித்தள்ளியது. ஆனால் மறு தேர்தலில் டி காலேயின் கட்சி முன்பை விட அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

2011 இல் டுனீசியாவில் துவங்கி எகிப்து வரை பரவிய எழுச்சிகளும் இதுபோல வலைத்தளங்களின் மூலம் பல்வேறு சமூகக் குழுக்கள் ஒரு தலைமை என்றிலாமல் தெருக்களை ஆக்கிரமித்த எழுச்சிகள்தாம்.எகிப்தில் இதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ராணுவத்தின் கையில்தான் ஆட்சி சென்றது.ஜனநாயகம் மலர்ந்திடவில்லை.பின்னர் தேர்தல் நடந்தாலும் ராணுவ கெனெரல் அப்துல் ஃபெடா எல் சிசி யே போட்டியிட்டு அதிபராகியிருக்கிறார்.

இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு தலைமை இல்லாமல் நடந்ததால் வன்முறைகொண்டு அப்போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது கேட்க ஒரு நாதியில்லாமல் போனது. இவ்வெழுச்சி புறக்கணித்த அரசியல் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளுமே குரல் கொடுக்க நேர்ந்ததைப் பார்த்தோம். இப்படிச் சொல்வதன் பொருள் இத்தகைய போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது.

அமெரிக்காவில் ஒரு சதவீதமான கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக WE ARE 99%  இயக்கம் 2011இல் துவக்கப்பட (OCCUPY WALL STREET MOVEMENT)  முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தவை எகிப்தின் தஹ்ரிர் சதுக்க எழுச்சியும் 1968இன் பிரஞ்சு பல்கலைக்கழக முற்றுகைகளும்தாம் என்பதை மறுக்க முடியாது.அவை சில முக்கிய நடவடிக்கைகளுக்கு அரசுகளைத் தள்ளின.

ஆனால் அதற்கு மேல் போராட்ட்த்தை முன்னெடுத்துச் செல்ல இத்தகைய எழுச்சிகளுக்குப் பின் யாருமில்லாமல் போனதும் வரலாறுதான்.

வாழின் முப்பது கோடியும் வாழ்வோம். வீழின் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் என்கிற பாரதியின் கனவுப்படி சுதந்திர இந்தியா நடைபோடவில்லை.ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி பிரதேச அரசியலுக்கு வழி திறந்து விட்டது. ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டிய பிரதேசக் கோரிக்கைகள், மொழிப்போராட்டங்களை தீவிர அடையாள அரசியல் எல்லைக்குக் கொண்டு சென்றது ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவைப்பற்றிய கண்ணோட்டமும்தான்.தொடர்ச்சியான மாநிலப்புறக்கணிப்பு,பண்பாட்டுத் திணிப்பு,மாநில அரசின் கையாலாகாத் தனம்,அரசியல் கட்சிகளின்  உள்ளீடறற போலித்தனம் இவையெல்லாம் மெரினா எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாது.

இவையெல்லாம் பின் நவீனத்துவ அம்சங்கள் அல்ல என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி முடிப்போம்.

– ச.தமிழ்ச்செல்வன்

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...