ஏகாதிபத்திய யுகத்தின் மார்க்சியம் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

433
0
SHARE


விளாடிமிர் இலிச் லெனினின் தத்துவார்த்த கோட்பாடுகளும், புரட்சிகர நடைமுறைகளுமே ஏகாதிபத்திய யுகத்தின் மார்க்சியம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்ஸும் ஏங்கல்ஸும் உருவாக்கிய மார்க்சிசத்தின் விசுவாசமிக்க சீடராக அவர் இருந்ததோடு நின்றுவிடாமல், அந்த கோட்பாடுகளை தன்னுடைய சொந்த மண்ணில் நடைமுறைப்படுத்தியது மட்டுமின்றி, அதனை மேம்படுத்தவும் செய்தார்.

ஆரம்பகால தத்துவ போராட்டங்கள்

நிலப்பிரபுத்துவ சூழலில் சிக்கியிருந்த ஜாரின் ரஷ்யாவில் பிறந்த அவர், தனது நாட்டில் முதலாளித்துவம் மெதுவாக வளர்ந்து வருவதைக் கவனித்தார். ரஷ்ய நிலைமைகளுக்கு மார்க்சியம் பொருந்தாது என்ற பொருத்தமற்ற கோட்பாட்டை ஆதரித்த நரோட்னிக்ஸை எதிர்த்துப் போராடினார். “ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூல்தான் தத்துவார்த்த ரீதியாக அவர் செய்த முதல் பிரம்மாண்ட வேலையாகும். நிலப்பிரபுத்துவ சூழல் இருந்தாலும், ரஷ்யாவில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அதில் அவர் நிரூபித்தார். சமூகத்தின் வளர்ச்சியில் முக்கிய அரசியல் சக்தியாக இருப்பது தொழிலாளி வர்க்கம்தான் என்ற மார்க்சிய கோட்பாட்டின் உண்மையை மட்டுமின்றி, பின்தங்கிய நிலைமையிலுள்ள நிலப்பிரபுத்துவ ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமையும் தொழிலாளர்-விவசாயிகளின் கூட்டணி புரட்சிகர சக்திகளின் மையத்தை உருவாக்கும் என்பதையும் அவர் உணர்த்தினார்.

இவ்வாறு நரோட்னிக்ஸின் கருத்துக்களை அவர் முறியடித்ததோடு மட்டுமல்ல; முதலாளித்துவத்திற்கு எதிரான சட்டரீதியான போர்கள்தான் மார்க்சியத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற மார்க்சீய சட்ட வல்லுனர்களின் கருத்துக்களையும் அழித்து முன்னேறினார்.

ரஷ்யாவில் சமூக மாற்றத்திற்கான தயாரிப்பு என்பது உண்மையில் கூர்மையான வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; அது இறுதியில் பாட்டாளி வர்க்க புரட்சியில் முடிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ரஷ்யாவில் நிலவி வந்த சட்டவிரோத நிலைமைகளுக்கு ஏற்ப போராட்டத்தின் வடிவம் அமைய வேண்டியதின் அவசியத்தையும் சேர்த்தே வலியுறுத்தினார்.

இதைப் போன்றே, பாட்டாளி வர்க்க புரட்சியை முன்னெடுக்கும் அரசியல் கட்சியும் பிற முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போன்றதே என்ற கூற்றிற்கு வக்காலத்து வாங்கியவர்களுக்கும் தீர்மானகரமான தோல்வி அவரால் வழங்கப்பட்டது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட அவரது படைப்பான “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில், புரட்சிகரமான தொழிலாளர் வர்க்க கட்சி என்பது மற்ற முதலாளித்துவ கட்சிகளில் இருந்து அடிப்படையிலேயே எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை நிரூபித்து காட்டியிருப்பார். அவர்களைப் போலன்றி, முதலாளித்துவத்திற்கு எதிரான சமரசமற்ற, ஒரு கருத்தியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக பாட்டாளி வர்க்கத்தை அதன் அறிவார்ந்த பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் கொண்டுவர அது எப்போதும் பாடுபடுகிறது.

ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கட்சி ;-

மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போலன்றி, பாட்டாளி வர்க்க கட்சி என்பது ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்டதாகும். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவர் (அவன்/அவள்) சார்ந்துள்ள கட்சிக் கிளையின் கட்டுப்பாடுகளுக்கும், ஒழுங்குகளுக்கும் உறுதியாக உடன்படுகிறவர்களாயிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்காக வெற்றிகரமாக போராடி வந்தார். கட்சி உறுப்பினர்கள் அவர்களது கிளைக்குள் அவர்களின் கருத்துக்களை சுதந்திரமாக கூற முழு உரிமையுண்டு. ஆனால் ஒரு கூட்டு முடிவு வந்த பின், அவர்களது சொந்த கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, கிளை முடிவினை முழுமனதாய் நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை சுதந்திரமாக செய்ய உரிமை இருக்க வேண்டும் என்ற ஒரு தொள தொளப்பான அரசியல் இயக்க கருத்தின் ஆதரவாளர்களுக்கு எதிராக அவர் போராடி வந்தார். கட்சியில் உள்ள எந்தவொரு பிரச்சினையிலும் அவர்களது பார்வைகளையும், கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த உறுப்பினர்களுக்கு முழு உரிமையிருக்கும் அதே வேளையில், கட்சியின் மத்திய தலைமைக்கு உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் ஒழுங்கு நடவடிக்கைகளின் தேவையிருப்பதையும் அவர் நிரூபித்தார். கட்சிக்கும் கட்சி உறுப்பினருக்குமிடையிலான இந்த மோதல்களின் வெளிப்பாடாகத்தான், ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி இறுதியில் பெரும்பான்மையினர் (போல்ஷிவிக்குகள்) மற்றும் சிறுபான்மையினர் (மென்ஷிவிக்குகள்) என்று பிளவு பட்டது. இந்த யுத்தம்தான் அவரை ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் இளம் தலைவராக்கியது.

ஏகாதிபத்தியம்-ஒரு புதிய நிலை

போல்ஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையிலான இந்த போராட்டம் சர்வ தேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வலதுசாரி தலைவர்களுக்கும் புரட்சிகர இடதுசாரிகளுக்கும் இடையில் சர்வதேச அரங்கில் பெரும் கருத்தியல் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இதில் பின்னவர்களின் பக்கம் லெனின் நின்றார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் விவரித்த கோட்பாடுகளுக்கு வலதுசாரிகளால் கூறப்பட்ட திருத்தங்கள் எதுவும் தேவையில்லை என்பதை நிரூபித்தார். மாறாக, முதலாளித்துவத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அதன் அரசியலின் பின்னணியில், மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் புரட்சிகர கொள்கைகளை உறுதியுடன் கடைப்பிடித்துக் கொள்வது மட்டுமல்ல; அதனை மேலும் செழுமைப் படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உண்மையில், மார்க்ஸும் ஏங்கெல்ஸும், அவர்களின் உன்னத படைப்புகளில் குறிப்பிட்டிருந்தபடி முதலாளித்துவத்தின் கட்டத்தை மறுபரிசீலனை செய்ய லெனின் தொடங்கினார். மார்க்ஸ்-ஏங்கெல்ஸுக்கு பின்பு உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், முதலாளித்துவத்தின் தன்மையில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அவர் கண்டறிந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் நாட்களில் இருந்த முதலாளித்துவம் இப்போது ஒரு ஏகபோகமாக வளர்ந்துள்ளதை கணித்த அவர் அதனை “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” என்று அழைத்தார்.

“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” என்ற தலைப்பிலான அவரது புகழ்பெற்ற தத்துவார்த்தப் பணி, உண்மையில் அது மார்க்ஸ் எழுதிய “மூலதன”த்தை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திற்கேற்ப செழுமைப்படுத்திய ஒன்றாகும். அந்த நூல் உலக முதலாளித்துவம் பற்றிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரது கோட்பாடுகளை இருபதாம் நூற்றாண்டிற்கேற்ப மேம்படுத்தியதொரு முக்கிய பங்களிப்பாகும். உண்மையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகிய இருவரும் இருபதாம் நூற்றாண்டின்ஆரம்பத்தில் வாழ்ந்திருந்தால் அவர்களே இப்பணியை மேற்கொண்டிருப்பார்கள்.

ஆகவே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய லெனினின் முக்கிய தத்துவார்த்தப் பணி என்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளின் தொடர்ச்சி மட்டுமல்ல; அதனை மேலும் செழுமைப் படுத்தி வளர்த்தெடுத்ததாகும்
முதலாளித்துவம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பான்மையான பின்தங்கிய மற்றும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நாடுகள், சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வளர்ந்த முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. இதுதான் ஏகாதிபத்தியம் குறித்த லெனினிச கோட்பாட்டின் சாராம்சம். பின்தங்கிய மற்றும் சார்பு நாடுகளை தங்களிடையே பிரித்துக் கொள்வது பற்றி, வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நாடுகளின் சிறிய குழுவினரிடையே ஏற்பட்ட கூர்மையான போட்டியே ஏகாதிபத்திய யுகத்தில் முதலாளித்துவ பொருளாதார அரசியலின் மையப்புள்ளி என்பதே உண்மையாகும்.

ஏகாதிபத்தியங்களும் போர்களும்

தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் காலனி நாடுகளை மறுபங்கீடு செய்வது குறித்தும், பலவீனமானவர்கள் கையில் உள்ள காலனிகள் மீது தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டவும் அவர்களுக்குள் போர்கள் தொடுக்கப்படும். அது தவிர்க்க முடியாத உலக யுத்தத்தில்தான் முடியும் என்ற முடிவுக்கு அவர் இதிலிருந்து வந்தார். ஏகாதிபத்திய யுத்தங்கள், காலனிகளின் பங்கீடு மற்றும் மறு பங்கீட்டிற்கான போர்கள், அரை காலனீய நாடுகள் மற்றும் சார்பு நாடுகள் என்பது ஏகாதிபத்திய யுகத்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படை விதியாகும்.

காலனி நாடுகளிலும், அரை காலனி நாடுகளிலும் மற்றும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருக்கும் நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் தேசிய சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட தேசிய புரட்சிகள் ஏகாதிபத்திய யுகத்தின் சிறப்பியல்புகளாகும்.

பங்கீடு மற்றும் மறு பங்கீட்டிற்காக ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நடந்த ஏகாதிபத்திய யுத்தங்கள், இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்காக, காலனீய, அரைக் காலனீய, மற்றும் சார்பு நாடுகளில் நடந்த தேச விடுதலைக்கான புரட்சிப் போர்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புதான் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை விதியாகும்.

ஏகாதிபத்திய யுகத்தில், உலக முதலாளித்துவ தன்மையின் இந்த அடிப்படை விதியிலிருந்து, முதலாளித்துவம் உருவாகாத நாடுகளில் கூட அதிகாரத்தை கைப்பற்ற உலக தொழிலாள வர்க்கத்தால் சாத்தியமாகும் என்ற முடிவை லெனின் எடுத்தார். உலக ஏகாதிபத்திய சங்கிலியில், அதன் பலவீனமான இணைப்பில் அதை உடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதென காட்டினார். அவரது சொந்த நாடான, ரஷ்யாவும் இந்த வகையைச் சார்ந்ததே. ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஒரு முதிர்ச்சியற்ற தன்மையிலேயே இருந்தது. ஒரு சோசலிச புரட்சியை சாத்தியமாக்கும் அளவிற்கு அங்கு முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படவில்லை. இருப்பினும் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடும். இதில் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் கூட்டணியோடு உழைக்கும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, சோசலிச சமூக கட்டுமானத்தைத் தொடங்க தொடர்ந்து செயல்பட முடியும்

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கோட்பாட்டின் முன்னேற்றமே-விலகல் இல்லை:

முதலாளித்துவம் முழுமையாக முதிர்ச்சியடைந்த நிலையில்தான் தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறது, அதாவது, சோசலிச புரட்சிகள் நடைபெறுகின்றன என்ற மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கோட்பாட்டில் இருந்து, லெனினிசம் விலகி செல்லவில்லை. மாறாக, அதனை வளர்த்தெடுத்து செறிவூட்டுகிறது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை விட .பூர்ஷூவாக்களும், அவர்களின் கூட்டாளிகளுமான நிலப்பிரபுக்களும் ரஷ்யாவைப் போன்ற ஒரு நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியைப் பொறுத்தவரை பின்தங்கியிருக்கும் நிலையில் அரசியல் அதிகாரத்தை கையிலெடுக்க தொழிலாளி வர்க்கம் தகுதி உடையதானது என்று அவர் சுட்டிக்காட்டினார்
நாடுகள் பலவற்றில் அல்லது ஒரு நாட்டில் கூட பாட்டாளி வர்க்கம் அதன் பாட்டாளி வர்க்க புரட்சியை மேற்கொள்வது, அதிகாரத்தை எடுத்துக்கொள்வது என்ற சாத்தியக் கோட்பாட்டை இவ்வாறு அவர் உருவாக்கினார். நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி பற்றிய அவரது தெளிவான புரிதல், அவரது நாட்டின் தொழிலாளி வர்க்கம் ஒரு வர்க்க போரை நடத்த முடியும் என அவரை அறுதியிட்டு உறுதி கொள்ள வைத்தது.

வளர்ந்த முதலாளித்துவத்தின் பாட்டாளி வர்க்கத்தை விட முன்னதாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம் ஒரு சோசலிச சமுதாயத்தை அதன் நாட்டிலேயே உருவாக்க முடியும். இருந்தாலும், மிகவும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் புரட்சி ஏற்பட்டிருந்தால் மட்டுமே சோசலிச சமுதாயத்தின் கட்டுமானம் முழுமையானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவின் பாட்டாளி வர்க்க புரட்சி, மற்ற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட, ரஷ்யாவை அரசியல் ரீதியாக முன்னேறியதாக ஆக்கியபோதும் அது சமூக கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற குறிப்பிடத்தக்க அவதானிப்பை மேற்கொண்டார். மேலும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில், பாட்டாளி வர்க்க புரட்சிகள் நடந்தவுடன் ஆளும் பாட்டாளி வர்க்கம்,சோசலிசத்தை கட்டத் தொடங்குகையில் சோசலிச ரஷ்யா ஒப்பீட்டளவில் அதன் பின்தங்கிய நிலைக்கு திரும்பக்கூடும்.

ரஷ்யா அரசியல் பின்தங்கிய நிலைக்கு திரும்பாதது, பாட்டாளி வர்க்க புரட்சிகள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் நடந்ததால் அல்ல. மாறாக, துரோகத்தால் பாட்டாளி வர்க்க நோக்கம், சோசலிசம் தூக்கியெறியப்பட்டதால் ஏற்பட்ட வரலாற்றின் விபத்து இது.

ஒரு புறம் பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருந்த ரஷ்யாவில் வெற்றிகரமான பாட்டாளி வர்க்க புரட்சிகள் மற்றும் சோசலிசத்தை கட்டியெழுப்புதலும், மறுபுறம் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்க புரட்சிகள் மற்றும் சோசலிச கட்டுமானம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஆகும். லெனின் கூறினார்: ரஷ்யாவின்சோசலிச கட்டுமானத்தின் விரைவான வளர்ச்சி,வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்க புரட்சிகளை துரிதப்படுத்த உதவும். பிந்தையது சோசலிச கட்டுமானம் மற்றும் அதன் வளர்ச்சி, அதன் வாயிலாக கம்யூனிச சமூகம் உருவாக்கம் என்கிற செயல்முறைக்கு உதவும்.

பாட்டாளி வர்க்க அகிலம்:

இதுதான் மூன்றாவது (கம்யூனிஸ்ட்) அகிலத்தில் லெனின் தலைமை வகித்த தத்துவார்த்த அடிப்படையாகும். சோசலிசம் உதயமான மண்ணிற்கு விசுவாசம் மற்றும் சோசலிச புரட்சிகளுக்காக வளர்ந்துள்ள அனைத்திற்குமான சகோதர ஒற்றுமை என்பவை அகிலத்தின் ஒவ்வொரு குழுவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டிய அடிப்படைகள் ஆகும். மூன்றாவது (கம்யூனிஸ்ட்) அகிலம் லெனினின் நேரடித் தலைமையின் கீழ் நிறுவப்பட்டது இதன் தொடர்ச்சியாகும். மற்றும் மார்க்ஸ், ஏங்கெல்ஸின் நேரடி தலைமையின் கீழ் நிறுவப்பட்டு செயல்படுகிற இரண்டு அகிலங்களின் கூடுதலான வளர்ச்சி ஆகும். ஒரே நேரத்தில் ரஷ்ய பாட்டாளி வர்க்க புரட்சியின் அமைப்பாளராக, நாட்டின் சோசலிச கட்டுமானத்தின் ஆரம்பகர்த்தாவாக மற்றும் மூன்றாவது (கம்யூனிஸ்ட்) அகிலத்தின் அமைப்பு தலைவராக இருந்தார் என்பது லெனின் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறது. எவர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஐரோப்பிய முதலாளித்துவ புரட்சியில் பங்கேற்று மற்றும் தொழிலாள வர்க்கத்தை அமைப்பு ரீதியாக திரட்டி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் தலைமை பொறுப்பை அடைவதற்கு செயல்பட்டார்களோ அந்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் புகழ்பெற்ற மரபுகளை இவ்வாறு அவர் முன்னோக்கி கொண்டு சென்றார்.

பின்னர், உலகின் முதல் சோசலிச புரட்சி -1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூன் வெடித்தது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகளை அதிலிருந்து பெற்று பாட்டாளி வர்க்க புரட்சிகளை எதிர்காலத்தில் ஒழுங்கமைப்பதற்கான வழிகாட்டுதல்களாக உருவாக்கினர்.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் உடைய பாரிஸ் கம்யூனின் அனுபவத்தின் வழிமுறைகளை லெனின் தனக்கு அடிப்படையாகக் கொண்டு 1905 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சி, பிப்ரவரி 1917 மற்றும் நவம்பர் 1917 புரட்சிகளை அவர் ஒருங்கமைத்தார். இதனால்தான் இவர் ரஷ்ய புரட்சியின் நடைமுறை அமைப்பாளராகவும், மார்க்ஸ் ஏங்கல்ஸ் கோட்பாட்டை பிறழாது பின்பற்றுபவராகவும் இருந்தார்.

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கோட்பாடுகளின் தொடர்ச்சியும், வளமையும் மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சிகளின் நடைமுறைகள்தான் லெனினிசத்தின் முக்கியத்துவமென்பதை இவ்வாறு வெளிக்கொணர்ந்த நாம் பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாட்டின் துறைகளில் லெனினின் பங்களிப்புகளை ஆராய்வோம்.

பொருள் முதல் வாதத்தை பலப்படுத்தல்:

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கோட்பாடான இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் மீதான இலட்சியவாத தத்துவவாதிகளின் தாக்குதல்களை எதிர் கொள்ள லெனின் தனது முதல் முக்கிய தத்துவார்த்த நூலான “பொருள்முதல்வாதம் மற்றும் எம்பீரியோ விமர்சனம்”(Materialism and Emprio Criticism) என்ற நூலை எழுதினார். இயற்பியலின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஆற்றல் (பொருளின் இருப்பை மறுப்பதாக கருதப்பட்டது) என்பதே அதனளவில் பொருளினொரு குறிப்பிட்ட வெளிப்பாடாகும் என நிரூபித்தது என்பதை நிறுவி மாற்றார்களின் கோட்பாடான பொருள் பொருளற்றது என்பதை பொடிபொடியாக்கினார். பொருள் என்பது நமது மனதில் இருந்து தனித்து வெளியே இருப்பதும், ஆனால் அதேசமயம் மனித மனத்தில் பிரதிபலிப்பதுமாகும் என்பதை கூறி, அவர் மார்க்ஸ் – ஏங்கல்ஸின் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வளப்படுத்தினார்.

சிந்தனை, உணர்ச்சிகள் இன்ன பிற, சார்ந்ததும் மற்றும் அவை மனித மனதில் இருந்து வெளியே சுயமாக இருக்கும் பொருளின் படைப்புமாகும். ஆன்மீக உலகம் பொருளைச் சார்ந்தது மற்றும் பொருளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் முந்தையது, பிந்தையதை அது எப்படி செல்ல வேண்டும், உருவாக வேண்டும் என்பதில் தனது செல்வாக்கை செலுத்த முடியும் என்ற மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கருத்தை, வாழ்க்கையே நிரூபித்துள்ளதை மீண்டும் வலியுறுத்தியது. பொருள் முதல் வாதத்தை தத்துவத்திலிருந்து வெளியேற்ற விரும்பிய அவரது காலத்தின் முதலாளித்துவ திருத்தல்வாத தத்துவவாதிகளை மறுப்பதற்கான சிறந்த வழி லெனினின் பொருள்முதல்வாதம் மற்றும் எம்பீரியோ விமர்சனம் ஆகும்.

முன்னதாக, ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போன்ற அவரது படைப்புகள் மூலம் ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு சிறந்த தலைவராக லெனின் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இப்போது பொருள்முதல்வாதமும் எம்பீரியோ விமர்சனமும் அவரை மார்க்சிஸ்டுகளின் சிறந்த உலகத் தலைவரின் பீடத்திற்கு உயர்த்தின.

அரசின் வர்க்க இயல்பு :

அரசின் வர்க்க நிலை கோட்பாட்டை நிறுவி, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோர் கோட்பாட்டை வளப்படுத்தியது லெனின் செய்த மிகப்பெரிய பங்களிப்பு ஆகும். மேலும், “பாராளுமன்ற ஜனநாயகம்” என்ற போர்வையில் வரும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கும், முதலாளித்துவத்தை பொறுத்தவரை சர்வாதிகாரமான தொழிலாளி வர்க்க ஜனநாயகத்திற்குமான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பிற்குள் சோசலிச மாற்றத்தை கொண்டு வர முடியாதாகையால், முதலாளித்துவ அரசை அழித்தல், சோசலிச மாற்றத்தை கொண்டு வருதல் ஆகியவையும் லெனினது மிகப்பெரிய பங்களிப்பாகும். தத்துவார்த்த ரீதியான வாதங்களில் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தில், ரஷ்ய கட்சியில் லெனின் திருத்தல்வாதிகளுடன் போராட வேண்டியிருந்தது. இந்த பெரிய அபாயத்தில் கவனம் செலுத்துகையிலேயே, அவர் “இடது” குறுங்குழுவாதம் மற்றும் வறட்டுவாதத்திற்கு எதிராகவும் தனது போராட்டத்தை நடத்தினார்.

திருத்தல்வாதத்திற்கெதிரான போரில், கால இடைவெளியில் வரும் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகளைத் தவிரவும், இரு முக்கிய நுல்களை லெனின் எழுதினார்: “அரசும், புரட்சியும்”; “தொழிலாளி வர்க்க புரட்சியும், திருத்தல்வாத காட்ஸ்க்கியும்” ஆகும் அவை. “பொதுவாக ஜனநாயகம்”, முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போல (உழைக்கும் மக்களுக்கு இது முதலாளித்துவ சர்வாதிகாரம்) பேசியவர்களுக்கு எதிராகவும், மற்றும் பழைய ஆளும் வர்க்கங்களின் புரட்சிக்குப் பிந்தைய எச்சங்களை கையாள்வதில் .பாட்டாளி வர்க்க ஜனநாயகம் சர்வாதிகாரமாக இருக்க வேண்டும் என இந்த இரண்டு பெரிய படைப்புகளில் அவர் வாதிட்டார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அவர்களின் பல முக்கிய படைப்புகளில் “பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்” என அழைக்கப்படுவது போல லெனின் இதனை அழைத்தார்.

இவ்வாறு மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கோட்பாட்டின் வலது திருத்தல்வாத மற்றும் சீர்திருத்தவாதிகளின் தவறான விளக்கத்தை அடித்து நொறுக்கிய பின் அவர்,”இடது” கம்யூனிச தந்திரோபாய தேர்தல் புறக்கணிப்பை, முதலாளித்துவ பாராளுமன்றங்கள் புறக்கணிப்பை நொறுக்க தலைப்பட்டார். “இடதுசாரி கம்யூனிசம் ஒரு சிறு பிள்ளை கோளாறு”. என்ற தலைப்பில் ஒரு சிறிய பிரசுரத்தில் இது பற்றி அவர் எழுதினார். மூன்று படைப்புகளும் சேர்ந்து மார்க்சிச-லெனினிசத்திற்கு அடிப்படையாக அமைந்தன
ஒன்று, பொருளாதாரத்தின் தன்மை மற்றும் முதலாளித்துவ அரசின் அரசியல் பற்றிய புரிதல். இரண்டு பொருளாதாரத்தின் வர்க்க இயல்பு மற்றும் மூன்றாவதாக முதலாளித்துவ அரசின் அரசியல் மற்றும் புரட்சியின் வர்க்க இயல்பு.

முதலாளித்துவத்தின் ஒழிப்பைத் தொடர்ந்து வரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் புதிய சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது – துவக்கநிலையில் சோசலிஸ்ட் சமூகம் மற்றும் மேல் நிலையில் கம்யூனிஸ்ட் சமூகம் என்று அழைக்கப்படும் கட்டம்.

மூன்று படைப்புகளும் சேர்ந்து புரட்சியில், தொழிலாள வர்க்கத்தின் கட்சியால் பின்பற்றப்பட வேண்டிய மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களின் அடிப்படையாகவும் மற்றும் அதன் அடுத்த சோசலிச கட்டுமானம் காலத்திற்குமாக அமைந்தன. கருத்தியல், அரசியல் மற்றும் நடைமுறை ஆயுதம் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் கட்சி, முதலாளித்துவ அரசை அழித்து சோசலிச மற்றும் கம்யூனிச சமுதாயத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம். கட்டியெழுப்ப துவங்கும்.

நவீன வகையானதொரு கட்சி :

அரசும் புரட்சியின் கோட்பாட்டை லெனின் முக்கிய படைப்புகள் மூன்றில் விரிவாகக் கூறுகிறார். அது பாட்டாளி வர்க்க புரட்சியின் அமைப்பாளர் மற்றும் தலைவராக கட்சியின் கோட்பாட்டை வளர்க்க அவருக்கு உதவியது. மார்க்சிஸ்ட் கட்சி “ஒரு புதிய வகை கட்சி” என அவர் அழைத்தார். அவர் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ கட்சிகளில் இருந்து அதனை வேறுபடுத்தினார்.

புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சி பின்வரும் சிறப்பியல்பு அம்சங்களைக் கொண்டுள்ளது:

முதலாவதாக, தொழிலாள வர்க்கத்தின் கட்சி என்றாலும், அதுநிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் போராடும், உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினருக்கும் தலைமை தாங்குகிறது. முதலாளித்துவத்திலிருந்து தொழிலாள வர்க்கம்அதன் விடுதலையை பெற முடியாது. மற்ற அனைத்து பிரிவு உழைக்கும் மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை முதலாளித்துவத்திலிருந்து விடுவிக்காமல் தொழிலாள வர்க்கம் விடுதலை பெற முடியாது. முதலாளித்துவத்தின் முக்கிய தலைமைக்கு எதிரான ஜனநாயக மற்றும் முதலாளித்துவ பிரிவினரைக் கூட தொழிலாள வர்க்கம் அதனுடன் எடுத்துக் கொள்கிறது. அதன் சொந்த தேசத்தின் மற்றும் மனிதகுலத்தின் ஆளும் கட்சியாக பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஆக வேண்டும் என்பதே லெனினின் பார்வை. அதனால்தான் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் குறுகிய கண்ணோட்டத்தை அவர் போராடி தோற்கடித்தார். மக்கள் சாம்பியனான தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சிக்காக போராடினார்.

இரண்டாவதாக, இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் மேம்பட்ட கோட்பாட்டை தொழிலாள வர்க்கத்தின் கட்சி மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் பிரிவுவினர்களும் கைக் கொண்டது. ஒரு புரட்சிகர கோட்பாடு இல்லாமல் ஒருபுரட்சிகர கட்சி இருக்க முடியாது என அவர் கூறினார்.

மூன்றாவதாக, இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் மேம்பட்ட கோட்பாடு ஒரு கருத்து கோட்பாடு அல்ல, மாறாக நடைமுறையில் பயன்படுத்தப்படும் கோட்பாடு. இது நடைமுறையின் அனுபவத்தால் வளப்படுத்தப்படுகிறது. அதனால்தான் லெனின் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தேசிய பத்திரிகைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். ரஷ்யாவின் பழைய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் ஒரு “அனைத்து ரஷ்யா” பத்திரிகைக்கான அவரது போராட்டம் கட்சியின் அடித்தளத்திற்கான ஆரம்பம்.
கருத்துக்களின் மோதல்

நான்காவதாக, கட்சி தனது சொந்த பத்திரிக்கைகளையும் மற்ற மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளால் இயக்கப்படுகின்ற எல்லா பத்திரிகைகளையும் முதலாளித்துவம் – அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் எதிரிகளையும் கருத்தியல் போர்களில் ஈடுபடுத்த பயன்படுத்துகிறது. தொடர்ச்சியான சமரசமற்ற, அவர்களின் எதிரிகளுடனான கருத்துபோர்களால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் தங்களை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆக வளர்த்துக் கொண்டனர்.

ஐந்தாவது, கட்சியும் அதன் அதிகாரபூர்வ பத்திரிக்கையும் இயக்கத்துடன், அதன் அரசியல் எதிரிகள் தலைமையிலான அமைப்புகள் உட்பட, நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு காலவரிசையில் தொடர்ச்சியான சமரசமற்ற கருத்து மோதல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதே மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஆகும். மூலதனம், ஏகாதிபத்தியம், பொருள்முதல்வாதம் மற்றும் எம்பீரியோ விமர்சனம் மற்றும் பல, இது போன்ற அடிப்படை தத்துவார்த்த தொகுதிகளான இந்த எழுத்துக்கள்தான், மார்க்சியம் மற்றும் லெனினிசம், அதன் விரிவாக்கம் ஆகியவை தோன்ற காரணம்.

ஆறாவதாக, தொடர்ச்சியான கருத்துப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் கட்சி சமூக மற்றும் அரசியல் போர்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறது. ஏங்கல்ஸ் கூறியது போல (இது லெனினால் மேற்கோள் காட்டப்பட்டது), பாட்டாளி வர்க்கம் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக கோட்பாட்டளவிலும் அதன் வர்க்க எதிரியை எதிர்த்துப் போராடி தோற்கடிக்கவும் செய்ய வேண்டும். இது போன்ற எதிரியுடனான விரிவான போரின் மூலம்தான் தொழிலாள வர்க்கத்தின் கட்சி, பாட்டாளி வர்க்க புரட்சியின் அமைப்பாளராக மாறும்.
சரியான நேரத்தில் தாக்குவது.

ஏழாவது, கட்சியும் தொழிலாளர் வர்க்கமும் புற சூழ்நிலையில் உறுதியான மாற்றங்களை சரியாக மதிப்பிடுவது மற்றும் அகநிலை சக்தியை உருவாக்கும் – அரசியல் புரட்சியை நடத்தி சரியான சமயத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் ஸ்தாபனம் – கலையில் தேர்ச்சி பெற வேண்டும்.

அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக லெனின் குறிப்பிட்டது போல, “பத்து நாட்களுக்கு முன்பு ஒரு புரட்சியை நடத்த முயற்சிப்பது குறைப்பிரசவமாகிவிடும் ஆபத்தானது. பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு புரட்சியை ஏற்பாடு செய்யவது மிகவும் தாமதமானது. “தீர்க்கமான அடியினால் வர்க்க எதிரி தாக்கப்பட வேண்டிய சரியான தருணத்தை லெனின் உணர்ந்திருந்தார் என்பது அவரின் பெருமையாகும்.

ரஷ்ய புரட்சிகள் 1905, பிப்ரவரி 1917 மற்றும் நவம்பர் 1917 மூன்றையும் புரட்சிகர ரஷ்ய தொழிலாளி வர்க்க கட்சி உருவாக்கப்பட்டிருந்ததால்தான் லெனினால் ஒழுங்கமைக்க முடிந்தது. லெனின் ரஷ்ய புரட்சிகளின் அனுபவங்கள் பற்றி ஒரு அத்தியாயம் அரசும் புரட்சியும் என்ற அவரது நூலில் எழுத திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த நேரத்தில் முதல் அத்தியாயத்தின் முதல் வாக்கியம் எழுதப்பட்ட பொழுது நவம்பர் 1917 இல்புரட்சி வெடித்தது. எனவே, ஒரு புரட்சியைப் பற்றி எழுதுவதை விட,புரட்சியில் பங்கெடுப்பது மிக அதிக பலனளிக்கும்என்று எழுதினார்.

அரசியல் ரீதியாக வேறுபட்டது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கருதியிருந்த புரட்சிகளில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது நவம்பர் 1917 புரட்சி சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் பின்தங்கியதொரு நாட்டில் அது நடந்து கொண்டிருந்தது. எனவே அவரது ஆசான்களிடமிருந்து எந்த வழிகாட்டுதல்களும் அவருக்கு முன் இல்லை. ரஷ்யாவின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் கொள்கைகளை (அவற்றில் அவர் மிகவும் தேர்ந்தவர்) அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஒரு பின்தங்கிய நாட்டில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது சரியானதா, விரும்பத்தக்கதா என்ற கேள்வி அவருக்கு முன் எழுந்தது. ஜெர்மனியின் கௌட்ஸ்கி மற்றும் ரஷ்யாவின் பிளெக்கானோவ் போன்ற “மார்க்சிய அறிஞர்கள்” ரஷ்ய பாட்டாளி வர்க்கம் ரஷ்யாவில் சமூக நிலைமைகள் முதிர்ச்சியடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று நினைத்தனர். அதாவது ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை தன் கையில் எடுப்பதற்கு முன் ரஷ்ய முதலாளித்துவம் முன்னேறி வளர்வதற்கான நிலைமைகள் உருவாகியிருக்க வேண்டும் என கருதினர்.

லெனின் அதை ஏற்கவில்லை, அரசியல் அதிகாரம் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு வருவதால் அது ரஷ்யாவின் பின்தங்கிய நிலைமையை, வெல்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். பின்னர் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை முடித்து சோசலிச புரட்சிக்கு செல்ல வேண்டும்.

இது அவரது ஏப்ரல் (1917) ஆய்வறிக்கைகளின் சாராம்சமாகும். பிப்ரவரி புரட்சி ஒரு முதலாளித்துவ புரட்சி. ஆனால் அது ”இரு அதிகார மையங்களை” உருவாக்கியது. ஒன்று தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் படை வீரர்கள் தலைமையிலான சோவியத்துகளின் அதிகாரம்; இன்னொன்று திருத்தல்வாதிகள் மற்றும் முதலாளித்துவ சக்திகளின் தலைமையிலான அரசியல்வாதிகளின் அதிகாரம்… அவர் உருவாக்கிய தந்திரங்கள், (இது தற்செயலாக ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாற்றப்பட்டது) ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்த ஆட்சியின் தன்மை தொடர்பான ரஷ்ய வெகுஜனங்களின், அணுகுமுறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த உதவியது; ஆட்சியின் ஆரம்ப கால மாயைகளை அகற்றியது.

இப்படித்தான் 1917 அக்டோபர்-நவம்பர் இன் அந்த “பத்து நாட்கள்” ரஷ்யாவை மட்டும் மாற்றவில்லை; முழு உலகையுமே மாற்றியது. வரலாற்றில் முதல் முறையாக, தொழிலாளர் மற்றும் விவசாய மக்கள் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சோசலிசத்தை கட்டமைக்கத் தொடங்கினர்.

இந்த செயல்முறை அமுலாக்கத்தில் லெனின் ஒரு புதிய பாதையை பின்பற்றினார். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் அவர்களின் பின்வருவோர் கண்டுபிடிப்பதற்காக விட்டு வைத்திருந்தது அது. பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு அரசு அதிகாரம் வரும்போது அதை எப்படி மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவருக்கு முன் இருந்த கேள்வி. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸிடமிருந்து இதற்கு எந்த வழிகாட்டுதல்களும் இல்லாதிருந்ததால் தனது சொந்த ரஷ்ய பாதையை லெனினே திட்டமிட வேண்டியிருந்தது

போர் கம்யூனிசம்- முதல் பரிசோதனை:-

நவம்பர் புரட்சி நடந்து முடிந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே, இளம் சோவியத் ரஷ்யா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளால் தாக்கப்பட்டது.
ரஷ்யாவின் அரியணையிலிருந்து தூக்கி எறியப்பட்ட ரஷ்ய ஆளும் வர்க்கங்கள், புதிய பாட்டாளி வர்க்க அரசுக்கெதிராக உள்நாட்டு கலகங்களை உருவாக்கின. அதே நேரத்தில், அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் இளம் சோவியத் ரஷ்ய அரசினை அழிக்க ஒரு தலையீட்டுப் போரைத் தொடங்கின. லெனினுக்கு, இந்த ஸ்தூலமான சூழ்நிலையை எதிர் கொள்ள எந்த விதமான வழிகாட்டுதல்களையும் மார்க்ஸ்-ஏங்கல்ஸிடமிருந்து கண்டு பிடிக்க முடியவில்லை.

அப்போது நிலவிய ரஷ்ய நிலைமைகளுக்கு தகுந்த இயங்கியல் கோட்பாடுகளை அமுல் படுத்திய லெனின் “போர் கம்யூனிசம் ” என்று அழைக்கப்பட்டதை உருவாக்கினார். ரஷ்யாவில், சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் உள்ளும்,புறமும் இருந்து வரும் எதிரிகளை தோற்கடிக்க வேண்டிய தேவைக்கு உட்பட்டதாக இருந்தது. நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் வாழ்க்கை மீது அதிகபட்ச கட்டுப்பாடு விதிக்கப்பட்டது (போரில் மூழ்கியுள்ள எந்தவொரு நாடும் என்ன செய்யுமோ அதைப் போலவே நடந்தது). தனது கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பின் லெனின் மேற்கொண்ட முதல் சோதனை உள்ளிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் தாக்கும் எதிரிகள் இரண்டையும் வீழ்த்தி சோவியத் ரஷ்யாவைக் காப்பாற்றுவதாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை

இந்த நோக்கத்தை அடைந்த பின்னர், “போர் கம்யூனிச” த்தின் கடுமை தொடர வேண்டுமா அல்லது அதில் தளர்வுகள் இருக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. ரஷ்ய மக்களில் பெரும்பகுதியாக உள்ள விவசாயிகள், தங்கள் தயாரிப்புகளை சந்தையில் விற்று லாபம் சம்பாதிக்க விரும்பினர் என்பதை லெனின் கண்டு கொண்டார். விவசாய பெருமக்கள் வரவேற்கும் சந்தையானது, அவர்களின் இலாபத்திற்கான ஆர்வத்தை காட்டுவதை லெனின் உணர்ந்தார். இதனால் அவர் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை போர்க் காலத்தின் “போர் கம்யூனிச”த்திலிருந்து ஒரு சிறு முறிவாகும்; முதலாளித்துவத்தை நோக்கிய ஒரு அடியாகும். ஆனால், அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தால் பயன்படுத்தப்படுவதால், சந்தை சக்திகளின் செயல்பாட்டினை பாட்டாளி வர்க்கத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே புதிய பொருளாதார கொள்கை மூலம் ரஷ்யாவால் ஒரு சோசலிச ரஷ்யாவாக வளரமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதிய பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ கூறுகளை உருவாக்கும் என்று முதலில் எச்சரித்ததும் லெனின் தான். சோசலிசத்தைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் சோசலிச அரசு அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

புதிய உலகம் பற்றிய உளத் தோற்றம்

முடிவுரைக்கு வருவதற்கு முன், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஜனநாயக நாடுகளில் சோசலிசத்திற்கேற்பட்ட பின்னடைவுகளிலிருந்து- கம்யூனிஸ்ட் இயக்கங்கள் புத்துயிர் பெற்று மீண்டு வந்துள்ளது பல தகவல்கள் நிறைந்த போதனைகளை தந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முந்தைய நாட்களின் உலக கம்யூனிச இயக்கம் என்பது இன்று பொருத்தமற்றதாகி விட்டது. சீனாவில், அவர்கள் உருவாக்கும் சோசலிசம் என்பது சீன தேசியப் பண்புகளோடுதான் உருவாக்கப்படும் என்பதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம், மிகுந்த தன்னடக்கத்தோடு கூறலாம் — 45 ஆண்டுகளுக்கு முன்பே (1951 இல்) -அப்போது பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த போதே இது சோவியத் அல்லது சீன பாதையை பின்பற்றாது என்றும், ஆனால் சோசலிசத்திற்கான நமது சொந்த இந்திய பாதையை உருவாக்கும் என்றும் அறிவித்திருந்தோம்.

எனவே இன்றைய உலக நிலைமையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள் அவரவர்களின் தேசத்திற்கு பொருத்தமான சோசலிச, கம்யூனிச பாதையை உருவாக்க வேண்டும். அதனால்தான் 1993 இல் கல்கத்தாவில் ஒன்றுகூடிய சர்வதேச மார்க்சிஸ்ட்டுகள் அதனை சர்வ தேச மாநாடு என்றுஅழைக்காமல் ஒரு சர்வதேச கருத்தரங்கு என்று அழைத்தனர். ஒவ்வொரு தேசிய மார்க்சிஸ்ட்-லெனினிச கட்சியும் ஒரு மையப்படுத்தப் பட்ட உலகத் தலைமையை சார்ந்திராமல், ஆனால் அதே நேரத்தில் மார்க்சிய- லெனினிய புரட்சிகர கொள்கைகளை உறுதியாக கடைப்பிடித்துக் கொண்டு சோசலிசத்திற்கான அவர்களின் சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், உலக அளவில் உள்ள அனைத்து மார்க்சிச-லெனினிச கட்சிகள் பல்வேறு நாடுகளில் உள்ள அவர்களின் சகாக்களுடன், தோழமையோடு ஒன்றுபட்டு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதால், பிற நாடுகளிலுள்ள கம்யூனிச இயக்கத்தின் பல்வேறு தேசிய குழுக்களுடனான அவர்களது அனுபவம் மற்றும் பார்வைகள் பற்றியதொரு நிலையான பரிமாற்றம் அவசியம் ஆகிறது. நமது பல பத்தாண்டு கால அனுபவங்களிலிருந்து, இந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வடிவம் பெற்ற ஏகாதிபத்திய யுக மார்க்சியம் குறித்து நாம் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்.

லெனின் 125 வது பிறந்த ஆண்டில் எழுதப்பட்டது

மொழியாக்கம்: ஜி.பாலசந்திரன் & எஸ்.திருவேங்கடம்

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்