பண்பாட்டுத் தளத்தில் களமாட…

7981
0
SHARE

பண்பாட்டுக் களத்தில்” என்கிற இந்நூல் இன்றைய சமூக, அரசியல் சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவகையில் எதிர்வினை ஆற்றிட எத்தனிக்கும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகமாகும். சீத்தாராம் யெச்சூரி, கே.என்.பணிக்கர், எம்.பாலாஜி மற்றும் என்.குணசேகரன் ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் மார்க்சிஸ்ட் மாத இதழின்ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டுள்ளது.

“பா.ஜ.க ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ் வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது.

இத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வழங்கிடும்” என்று என்.குணசேகரன் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதும் இந்நூலின் அவசியத்தை விளக்கிடும்.“தேவை புதியதொரு செயல்திட்டம்” என்கிற யெச்சூரியின் கட்டுரை “இந்தியாகுறித்த கருத்துருவம் (ஐனநய டிக ஐனேயை)” என்பது என்ன? அது எவ்வாறு பரிணமித்தது என்றும் அதைஇன்றைய தாக்குதலில் இருந்து காத்து வளர்த்தெடுப்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசுகிறது.கம்யூனிஸ்டுகள் முன்நின்று நடத்தியநிலத்திற்கான போராட்டங்களும், மொழிவழி மாநிலத்திற்கான கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட இயக்கங்களும், மதச்சார்பின்மையை முன்நிறுத்தியதுமே இந்தியா குறித்த கருத்துருவத்தை நனவாக்கியது என்கிறார் யெச்சூரி. சுதந்திர இந்தியா அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய கருத்துருவம், நமது நாட்டின் பெரும்பாலான மக்களின் பொருளாதார நலன்களையும் உள்ளடக்கியதாக இல்லாமல் ஆளும் வர்க்கம் தடுத்தது.

எனினும் அதை அடைவதற்கு விவசாய சீர்திருத்தம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்டவை தேவையான அடிப்படை அம்சமாகும். இன்று ஆர்.எஸ்.எஸ் பாசிச சக்திகள் இந்த அடிப்படையையே சிதைக்கின்றன. உள்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு எதிரிகள் என்றுசிறுபான்மை மக்களை ஒதுக்கி, பெரும்பான்மைவாதம் பேசும் தேசியத்தை முன்வைக்கின்றனர். இந்தியாவின் முதல் குடிமகன் என்று சொல்லப்படும் குடியரசு தலைவர் பதவிக்கு பா.ஜ.க-வால் முன்நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்தும் இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் வேற்று கிரகவாசிகள் என்று பேசியவர்தான். யெச்சூரி முன்வைக்கும் கருத்தை ராம்நாத் கோவிந்தின் வார்த்தைகளோடு உரசிப் பார்த்தால் அதன் உள்ளர்த்தம் தெளிவாக விளங்கிடும்.

அறிவெதிர் நிலையில் இருக்கும் மதவாத சக்திகளை வீழ்த்துவது அறிவுசார் நிலையில் உள்ள அனைவரின் கடமை என்பதை இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார் யெச்சூரி.பிரச்சாரப் போராட்ட முறைகள் பல சமயங்களில் பொதுவான அனுதாபத்தை கூட பெற தவறி விடுகிறது. ஜனநாயக போராட்டத்தின் கட்டாய பங்காக இம்முறையிலான போராட்டங்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழலில் உள்ளூர் சமூகங்களோடு, மக்களோடு ஆழமான உறவுகளை உருவாக்கும் வகையில் போராட்ட முறைகள் குறித்து தீவிரமான மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுப்பு, எதிர்ப்பு மட்டும்போதுமானதல்ல. ஒரு எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை.

அன்னியோன்யமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில்தொடர்ச்சியாக தலையிடக்கூடிய உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதுதான் எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமான துவக்கப்பணி என்கிறார் கே.என்.பணிக்கர். “கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?” என்கிற கட்டுரையில் மேலே குறிப்பிட்ட அம்சங்கள் பற்றி ஆழமான புரிதலை அவர் முன்வைக்கிறார். “பொதுவெளியில் மதம்” என்கிற பணிக்கரின் மற்றொரு கட்டுரையும் இந்நூலில் உள்ளது. கிராம்சியின் சிந்தனைகள் வழியே பண்பாட்டு தளத்தின் மீது செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிறப்பாக முன்வைக்கிறது எம்.பாலாஜியின் “பண்பாட்டின் வழியே நடத்த வேண்டிய போராட்டம்” என்கிற கட்டுரை.

“பண்பாட்டு இயக்கம் வெறும்கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம்மட்டுமல்ல; சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் பங்கேற்கச் செய்யும், சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும், ஒரு இயக்கமாகும்” என சுட்டிக்காட்டப்படுகிறது. பணிக்கர் கூறிய உள்ளூர் சமூகமும், கிராம்சி சுட்டிக்காட்டும் சிவில் சமூகமும் ஒன்றுதான் என்பதை நாம் அறிவோம். உள்ளூர் சமூகத்தில் பணியாற்றுதல் என்பதை வெறும் கருத்தளவில் மட்டும் நின்றுவிடாமல் அதை களத்தில் நடைமுறைப்படுத்தியதன் அனுபவ பதிவாகவே என்.குணசேகரனின் “மக்கள் திரட்டலில் சில படிப்பினைகள்; அரூரில் ஒரு கள அனுபவம்” என்கிற கட்டுரை அமைந்துள்ளது.கருத்தியல் ரீதியான புரிதலோடு, களமாட கற்றுக்கொடுக்கும் கையேடாக இந்நூல் உள்ளது. காலத்தின் தேவை கருதி வாசித்து உள்வாங்கி களமாட தயாராவோம்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்