சொல் அகராதி: உற்பத்தி அராஜகம்

291
0
SHARE

ச.லெனின்

திட்டமிடல் அற்ற உற்பத்தி நிலவும் சமூக அமைப்பில் உற்பத்தி அராஜகம் இயல்பானதாகும். சமூகத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், அதாவது இருக்கின்ற வள ஆதாரங்களை சமுதாயம் முழுமையின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல்,  தனியார்  சொத்துடைமையை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமூக அமைப்பு முறை அனைத்திலும் உற்பத்தி அராஜகம் நிலவும். ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் இந்த உற்பத்தி அராஜகம் என்பது பொதுவானதாகவும், சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கும். 

சந்தையை மையமாகக் கொண்டு, லாப நோக்கோடு மட்டும் செயல்படும் மூலதன உடைமையாளர்கள், இருக்கின்ற வள ஆதாரங்களை சமுகத்தின் மக்கள் அனைவரின் தேவைகளை கருத்தில் கொண்டு செயலாற்றுவதில்லை. இதன் விளைவாகக் குறிப்பிட்ட பொருட்கள் தேவைக்கு அதிகமாகவும் சில பொருட்கள் மிகக் குறைவாகவும் சந்தைக்கு வருகிறது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் ஒருமுகப்படுத்தப்பட்ட தேசிய சந்தை கிடையாது.  அதேபோல் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியும் உற்பத்தியின் அளவும் குறைவாகவே இருந்தது. எனவே முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தில் உற்பத்தி அராஜகத்தின் தாக்கமும் குறைவே.

சந்தையில் நிலவும் தேவை மற்றும் அளிப்பு ஆகியவற்றை மட்டுமே கவனத்தில்கொண்டு முதலாளித்துவம் உற்பத்தி செய்கிறது. சமூக உழைப்பு முழுமையும் இதற்காக ஒருங்கிணைக்கப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான சாதனங்களைக் கிடைக்கச் செய்கிறது. எனவே உற்பத்தி சக்தியின் வளர்ச்சியும் உற்பத்தியின் அளவும் உயருகிறது. ஆனால், முதலாளித்துவ அராஜக உற்பத்தியால் ஏற்படும் இந்த உற்பத்தி உயர்வு, ஒருகட்டத்தில் வர்த்தக உலகம் முழுவதையும் தடம் புரளச் செய்கிறது.

ஒவ்வொரு முதலாளியும் தங்களைத் தனிப்பட்ட உற்பத்தியாளர்களாகவே கருதிக்கொள்கின்றனர். ஒவ்வொரு முதலாளியும் மற்றவர்களை பொருத்தமட்டில் சுதந்திரமானவராகவும் தனது சுயநல நோக்கத்திற்காகவும் செயல்படுபவராகிறார். ஆனால் முதலாளித்துவ சமூக இயக்கத்தின்படி உண்மையில் ஒவ்வொரு முதலாளியும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்களாகவே உள்ளனர். ஒருவரை ஒருவர் சார்ந்தே உள்ளனர். எந்த சந்தைக்காக இவர்கள் தங்களின் உற்பத்தியை மேற்கொள்கிறார்களோ அந்த சந்தையில் உற்பத்தியான பொருட்களை விற்க முனையும்போது இது வெளிப்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளி தனது உழைப்பு சக்தியை விற்றே வாழ்க்கையை நடத்துகிறார். உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் கிடைக்கும் கூலியைக் கொண்டே தான் இழந்த சக்தியை உணவு உள்ளிட்ட பொருட்களின் மூலம் மீட்டுருவாக்கம் (புனருற்பத்தி) செய்துகொள்கிறார். அதுபோலவே முதலாளித்துவமும் மூலதனத்தை விரிவுபடுத்திக்கொள்ள (புனருற்பத்தி நடைபெற) அது உற்பத்தி செய்த பொருட்களை விற்பதற்கான வாய்ப்பு அதற்கு இருக்க வேண்டும்.

“வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில் துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது.” லாப வேட்கையால் உந்தித்தள்ளப்படும் முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கால் சந்தையில் அதன் விற்பனை குலைகிறது. இதன் விளைவாகச் சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்குகிறது. இதை ‘மிகை உற்பத்தியின்’ விளைவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி என்று முதலாளித்துவம் கூறுகிறது. உண்மையில் இந்த பொருளாதார நெருக்கடி என்பது முதலாளித்துவத்துடன் சேர்ந்தே பிறந்த ஒன்றாகும். 1820களில் இருந்தே இப்படியான பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை முதலாளித்துவ அமைப்பு முறை உருவாக்கி வந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியும் அதன் தொடர்ச்சியே. சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்குவதற்கு மிகை உற்பத்திதான் காரணம் என்று முதலாளித்துவம் கூறினாலும் உண்மை அதுவல்ல.

சந்தையில் உள்ள பலப்பொருட்கள் மக்களுக்கு தேவையானவை ஆகவே உள்ளது. ஆனால் அதை வாங்குவதற்கான பணம்தான் அவர்களிடம் இல்லை. முதலாளித்துவக் கொள்கைகளால் ஏற்படும் வேலையின்மையாலும், வேலையிழப்பாலும் தொழிலாளிகளை ஒட்டச்சுரண்டி அவர்களின் கூலியை மோசமாக வெட்டிச்  சுருக்குவதாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. அதுவே சந்தையில் பொருட்களை தேங்கிக்கிடக்கச்செய்கிறது.

உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு மிக அத்தியாவசியமான பொருட்கள் ஏராளமாகவே தேவைப்படுகிறது. மிகை உற்பத்தி என்பதை ஒப்பீட்டுத் தன்மையுடைய சொல்லாகவே நாம் இங்கு பார்க்க வேண்டியுள்ளது. மக்களின் தேவைகளோடு ஒப்பிட்டால் சந்தையில் இருக்கும் பொருட்கள் மிகை உற்பத்தியாக இருப்பதில்லை. அதேநேரம் முதலாளித்துவத்தின் சுரண்டலால் மக்களின் வாங்கும் சக்தி குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிட்டால் அது மிகை உற்பத்தியாகக்  காட்சிப்படுத்தப்படுகிறது.

உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்றால் சுரண்டலின் அளவும் அதிகரித்துள்ளது என்பதே அதன் உள்ளீடு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே உற்பத்தியின் அளவை உயர்த்துகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிடைக்கப்பெறும் இயந்திரங்களோடு நவீன பாட்டாளிகளின் மேம்பட்ட உழைப்பு சக்தியின் பங்களிப்புமே உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் அதே நேரம் தொழிலாளி அதிக அளவில் சுரண்டப்படுவதும் நிகழ்கிறது. உபரி  உழைப்பின் விகிதம் அதிகமாகும் போது சந்தை சுருங்குகிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப்பெறாமல் அவர்களின் வாங்கும் சக்தி குறைகிறது. வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவே உற்பத்தியாகியுள்ள அதிகமான பொருட்கள் சந்தையில் தேங்குகிறது. இதையே “தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தை தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன” என்று மார்க்சும் எங்கெல்சும்  “கம்யூனிஸ்ட்  அறிக்கை” யில் குறிப்பிடுகின்றனர். 

தொழிலாளர்கள் தலைமையில் நடைபெறும் புரட்சியின் மூலம் அமையும் புதிய சோஷலிச சமூகத்தில் அராஜக உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கும் தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும். “இருக்கிற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுமையின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். வணிக (பொருளாதார) நெருக்கடி இல்லாமல் போகும். ‘மிகை உற்பத்தி’ துன்பங்களை  உருவாக்குவதற்குப் பதிலாகச் சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் அப்பால் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும்.” தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞான வளர்ச்சிகளும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் உறுதி செய்யப்படும் என்று எங்கெல்ஸ் தனது “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” எனும் நூலில், சமூக நலன் சார்ந்த, அராஜக உற்பத்தியல்லாத மிகை உற்பத்தியின் சமூக பயன்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறார்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்