ஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை

605
0
SHARE

சுகுமார் முரளிதரன்

தமிழில்: வீ. பா. கணேசன்

சில காலத்திற்கு முன்பு வரையிலும் கூட பணம் கொடுத்து சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது அல்லது யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு ஊடகம் இடமளிக்கும் என்பது இந்திய ஜனநாயக அமைப்பில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. நீண்ட காலமாகவே நீடித்து வரும் ஒரு விஷயமாக இருந்தபோதிலும், 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போதுதான் இது ஆழமாக வேரூன்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய பத்திரிக்கை கவுன்சில் அப்போது விரிவானதொரு விசாரணையை மேற்கொண்ட போதிலும் இந்த ஊடகத் தொழிலுக்கேயுரிய ‘திறமை’ காரணமாக அதன் அறிக்கை வெளிச்சத்திற்கு வராமலே போனது.

ஆனால் இந்நாட்களில் முன்னுரிமைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. நாடு முழுவதிலும் நடக்கவுள்ள தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போலிச் செய்திகள் எதிரணியின் மீதான அவதூறான பேச்சுக்கள் ஆகிய இரண்டு அபாயங்களை குறிப்பாகச் சுட்டிக் காட்டியது. ஆணையத்தின் அவசர அழைப்பை ஏற்ற சமூக ஊடக நிறுவனங்கள், இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது செயல் தளங்களின் உள்ளடக்கங்களை கடுமையாகத் தணிக்கை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரவித்தன.

தேர்தல் ஆணையத்திற்கு ஒரே ஒரு வாரத்திற்குள் பதிலளித்த இவை அரசியல் ரீதியான விளம்பரங்களை வெளியிட இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பிடம் முன்பாகவே சமர்ப்பித்து உரிய சான்றிதழைப் பெற்றே வெளியிடுவோம் என்றும் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதி கூறின.

இத்தகைய உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிப்பதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது தளங்களில் வெளியாகும் செய்திகளையும் தகவல்களையும் உருவாக்கி, பதிப்பிடுவது தங்களின் நுகர்வோரின் கைகளில்தான் உள்ளது என்ற நிலையில் இவ்வாறு பங்கேற்பவர்கள் இந்த விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது வெவ்வேறு வகையில்தான் இருக்கும் என்றும், எனவே தங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக முடியாது என்பதையும் குறிப்பிட்டிருந்தன.

2019 மக்களவைத் தேர்தல் ஒரு ‘வாட்சப்’ தேர்தல் என்ற நிபுணர்களின் கருத்தையே குறுஞ் செய்தி செயலிகளின் அதீதமான செல்வாக்கு அங்கீகரிப்பதாக அமைகிறது. குறுகிய வட்டத்திற்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளின் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் வாட்சப் குழுக்களில் இணைந்து கொள்ள பாஜகவின் தொண்டர்கள் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்ததாகவும் தெரிய வந்தது. ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைத்ததன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டுஅவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டு வலைவீசப்பட்டது.

இதற்கிடையில் ஊரோடு ஒத்துப்போகும் போக்கு நிலவிவரும் சூழலில் செய்திகளை விமர்சன ரீதியாக வழங்கும் ஒரு சிலவற்றில் ஒன்றான இணைய தளத்தின் பதிப்பாளர் ஓர் எச்சரிக்கையைச் செய்தார். “குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் செயலிகளின் சேவை மூலமாக திகைப்பூட்டும் அளவிற்கு திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள், செய்திகள் பெருமளவிற்குப் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் வரும் செய்திகளைப் படித்து வருவோரின் மீது இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன.”

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி “64 சதவீத இந்தியர்கள் இணையத்தில் போலிச் செய்திகளையே எதிர்கொள்கின்றனர். இது ஆய்வு மேற்கொள்ளப்
பட்ட 22 நாடுகளிலேயே மிக அதிகமானது” என்று தெரிவித்திருந்தது. 2018 நவம்பரில் பிபிசி உலக சேவை நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. குறுஞ்செய்தி சேவைகளின் மூலமாக தீவிரமாக சமூக ஊடகங்களில் தாங்களாகவே விரும்பி செயல்பட்டு வருவோரின் செய்திகளில் வெளிப்படும் ‘தேசியவாதம்’ என்று அவர்கள் கூறிக் கொள்வதுதான் போலிச் செய்திகளை அதிக அளவில் பரப்பும் சாதனமாக உள்ளது என்று அது தெரிவித்தது. “தேசிய அடையாளத்தை உணர்வு பூர்வமாக வலுப்படுத்த முனையும்போது உண்மைகளுக்கு மிகக் குறைவான முக்கியத்துவம்தான் கிடைக்கும்” என இந்த ஆய்வில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.

“தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகளை மேலும் மேலும் தள்ளிவிடும் வேலையை இடதுசாரிகளை விட வலதுசாரிகள்தான் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்” எனவும் சமூக ஊடகம் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘தேசவிரோதிகள்’ எனக் கருதப்படும் சமூக குழுவினரை தீவிரமாக எதிர்ப்பது; கூட்டு வன்முறை, கும்பலாகச் சேர்ந்து கொண்டு அடித்து உதைப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவது போன்றவற்றின் மூலம் இத்தகைய தேசியவாத உணர்வு வலுப்படுத்தப்படுகிறது. பரவலாகச் சுற்றுக்கு விடப்படும் போலிச் செய்திகளின் அளவு, சமூக ஊடகங்களில் அவை ஏற்படுத்தும் வன்முறையைத் தூண்டிவிடும் வகையிலான வாதப் பிரதிவாதங்கள் ஆகியவற்றில் இருந்தே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெளிவாகிறது. எனினும் வாக்குப்பதிவில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவது கடினமாகும்.

2014 மக்களவைத் தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தின என்று பெரிதும் நம்பப்பட்டது. எனினும் 2013 ஜூன் முதல் 2014 மே வரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல்கள் குறித்த தேசிய ஆய்வு (என் இ எஸ்) முடிவுகள் இந்தவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாக இல்லை. “இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பயன்படுத்தவில்லை; 5 சதவீதம் பேர் மட்டுமே செய்திக்காக தினமும் இணையத்தை அணுகுபவர்களாக இருக்கின்றனர்” என்பது அந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில் 10 சதவீதம் பேரிடம் மட்டுமே முகநூல் கணக்கு இருந்தது. 3 சதவீதம் பேர் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்தி வந்தனர்.

இவர்களிலும் கூட மூன்றில் ஒருவர் மட்டுமே தினமும் முகநூலை பயன்படுத்துபவராகவும், ஐந்தில் ஒருவர் மட்டுமே தினமும் ட்விட்டரை அணுகுபவராகவும் இருந்தனர். சமூக ஊடகங்களின் மூலம் அரசியல் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒருவரே இதற்கென சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர் என்பதோடு பாதிக்கும் மேற்பட்டோர் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தோடு கூடவே அரசியல் செய்திகளை பாரபட்சத்தோடு வெளியிடுகின்ற பாரம்பரிய ஊடகம் மூலமே பாஜக பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது. 1996க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சி மூலம் செய்திகளை பின்பற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்தது என்பதையும், 1996க்கும் 2009க்கும் இடைப்
பட்ட காலத்தில் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்ந்தது; இந்தப் போக்கு 2014 வரை தொடர்ந்தது என்பதையும், 1996 முதல் 2004 வரையிலான காலத்தில் வானொலி மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக மட்டுமே உயர்ந்த போதிலும் 2014-ம் ஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைந்தது என்பதையும் இந்தத் தேர்தல் குறித்த தேசிய ஆய்வு தெரிவித்தது.

எனினும் இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் ஊடக வெறியாட்டம் 2014ம் ஆண்டில் வெளிப்பட்டது. கட்சிப் பிரச்சார விளம்பரத்திற்காக மட்டுமே பாஜக அத்தேர்தலில் ரூ. 5000 கோடியை ஒதுக்கியது. இது மேலும் கூடுதலாகவும் இருக்கக் கூடும். இந்தியா முழுவதிலும் மூன்று மாத காலத்திற்கு 15,000 விளம்பரப் பலகைகளை பாஜக பதிவு செய்திருந்தது. நாடு தழுவிய அளவிலும், பிரதேச அளவிலும், உள்ளூர் மொழிகளிலும் வெளிவரும் பத்திரிக்கைகளில் பளிச்சென்று தெரியக் கூடிய இடத்தில் விளம்பரங்களை 40 நாட்களுக்கு அக்கட்சி வெளியிட்டது. மேலும் இந்தி, ஆங்கில, உள்ளூர் மொழிகளில் வெளிவரும் செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு 2,000 விளம்பரங்
களையும் அது விலைக்கு வாங்கியிருந்தது.

ஊடகங்களில் மோடிதான் எங்கும் இருந்தார் என்பதோடு அவரது பிரச்சாரமும் தொடர்ந்து நீடித்த ஒன்றாக, சிறப்பானதாக இருந்தது. தொலைக்காட்சி செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்று நினைத்தவர்களும் கூட பாஜகவிற்கு வாக்களிக்கத் தயாராக இருந்தனர். உண்மை எப்படியானதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முன் உதாரணமாக குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது. ஊடகங்களை பெருமளவு பின்பற்றும் வாக்காளர்கள் “எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது குஜராத் மாநிலம்தான் சிறப்பாகச் செயல்படுகிறது” என நான்கு மடங்கு சொல்லக் கூடிய அளவிற்கு இந்தப் பிரச்சாரம் அமைந்திருந்தது.

இத்தகைய பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகையில் ஊடகங்களை பெருமளவு பின்பற்றுவோர் இடையே பாஜகவிற்கான ஆதரவு மிக வேகமாக அதிகரித்தது. தொலைக்காட்சிச் செய்திகளை தொடர்ந்து கவனிப்பவர்களிடையே 2013 ஜூலைக்கும் 2014 மே மாதத்திற்கும் இடையே இந்த சதவீதம் 3 லிருந்து 20 புள்ளிகள் என அதிகரித்தது. பாரம்பரியமான அச்சு ஊடகங்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வோரிடையே இது 7 லிருந்து 20 புள்ளிகளாகவும், இணையம் மூலமாக செய்திகளைத் தெரிந்து கொள்வோரிடையே 13லிருந்து 26 புள்ளிகளாகவும் பாஜகவின் ஆதரவு அதிகரித்தது.

2014 தேர்தலுக்குப் பிறகு ஊடகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது போலிச் செய்திகள், அப்பட்டமான பிரச்சாரம் ஆகியவற்றின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-ல் பயன்பாட்டில் இருந்த கைபேசிகளின் எண்ணிக்கை 90 கோடி எனில் அதில் 14.3 கோடி கைபேசிகள் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகும். 2017-ல் இது 120 கோடியாக, அதாவது மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் பயன்படுத்தும் கைபேசிகளாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இதில் பெரும் உயர்வு ஏற்படவில்லை எனினும் 42 கோடியாக இருந்த ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனும் பயன்படுத்தும் இணைய வசதியின் அளவும் அதற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போனது. 2017 தொடக்கத்தில் மாதம் 4.3 ஜி.பி.ஆக இருந்த இணையப் பயன்பாடு அந்த ஆண்டு இறுதியில் மாதம் 5.4 ஜி.பி.ஆகவும் 2018-ல் 6.8 ஜி.பி. ஆகவும் உயர்ந்தது.

இந்த உயர்விற்குப் பின்னால் ஒரு காரணமும் இருந்தது. மிகச் சிறிய, பெரிதாக யாருக்கும் தெரியாத ஒரு நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக இணைய வசதியை வழங்கியதும் இதற்குக் காரண மாகும். ஊடகத் தளத்தில் ஏகபோக அதிகாரம் அதிகரிக்கும் போக்கை இது கணிசமான அளவில் தீவிரப்படுத்தியதோடு வாக்காளர்களின் முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் செய்திகளின் உள்ளடக்கத்தை திருத்தி அமைக்க வும் வழிவகுத்தது.

இன்று பாரம்பரிய ஊடகமானது போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. தத்துவார்த்த ரீதியில் செயல்படும் போக்கிற்கும் இதில் ஓரளவிற்குப் பங்குண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தோல்வி கள் ஏற்பட்ட போதிலும் ஊடக அதிபர்கள் அடிமைத்தனமான ஓர்மையுடன் தான் இருந்து வருகின்றனர். அப்பட்டமாகச் சொல்வதெனில் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதாகவே மோடியின் ஆட்சி அமைந் துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய மூலதனத்தின் வழிவகைகளோடு ஒன்றிணைந்ததாக, அதன் உத்தரவுகளை நிறை வேற்றும் அடிமையாகவே இந்த ஊடகத் துறை உருவெடுத்துள்ளது.

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்கான வருமானம் 2018-ல் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இது கொஞ்சம் குறையுமென்றாலும் 18 சதவீத அதிகரிப்பாக ஆவது இருக்கும். டிஜிட்டல் ஊடகத்தைப் பொறுத் தவரையில் விளம்பரத்தின் மூலம் வருமானம் மிக வேகமானதாக உள்ளது. இப்போது 25.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள இது 2019ல் 33.4 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. மொத்த விளம்பர வருமானத்தில் டிஜிட்டல் ஊடகத்தின் பங்கு 22 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களை விட பின்தங்கியிருந்த போதிலும்கூட டிஜிட்டல் ஊடகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

ஊடகங்களுக்கான விளம்பரங்களைத் தருவதற்கான பட்ஜெட்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது பழைய வகைப்பட்ட செய்தி ஊடகங்களின் உள்ளடக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்து
கிறது. வாசகர்களை பெருமளவிற்குக் கவர்ந்திழுக்கும் வகையில் குறிப்பிட்ட சில வாசகங்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது போன்ற வகையில் டிஜிட்டல் ரீதியான மேடைகளுக்கு இத்தகைய விளம்பரங்கள் மடைமாறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் பல்வேறு வகையான வியாபார உத்திகளைக் கையாளுகின்றன.

வாசகர்களின் ஆர்வத்தோடு கூடவே குறிப்பிட்ட வாசகர் பிரிவின் வாங்கும் சக்தி எவ்வளவு உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் மதிப்பிடுவதும் இதோடு சேர்ந்து கொள்கிறது. தங்கள் ஊடக வாசகர்களின் ஆர்வத்தை லாபகரமாக்கிக் கொள்ள விளம்பரதாரர் விற்பனை செய்ய முயலும் பொருளை உண்மையிலேயே வாங்கக் கூடிய வகையில் மக்களில் ஒரு பகுதியினரை தங்கள் பக்கம் கவர்ந்திழுத்து வைத்துள்ளோம் என ஊடகங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய வியாபார உத்திகள் புதிய வகைப்பட்ட ஊடகங்களைப் போன்றே நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை பழைய வகைப்பட்ட ஊடகங்களின் மீது திணிக்கிறது. மோடியும் பாஜகவும் வழங்குகின்ற காரண காரியமற்ற அதீத தேசிய வாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் புதிய ஊடகம் வெகு வேகமாக இயங்குகின்ற போது இந்த டிஜிட்டல் தளத்தின் குரலை எதிரொலிப்பதன் மூலம் அங்கு வந்து குவியும் விளம்பரத்தில் ஒரு பகுதியாவது நமக்குக் கிடைக்காதா என்று பழைய ஊடகங்கள் ஏங்கி நிற்கின்றன. இந்த அதீத தேசியவாதம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஏகபோக ஊடகங்களின் வளர்ச்சியும் கூட உதவி செய்கிறது. தனியார் லாபத்திற்காகவும் அரசியல் பிம்பங்களை வளர்த்தெடுக்கவும் உதவும் வகையில் பொது ஆதாரவளமான ஒளிபரப்பு அலைக்கற்றையின் மீதான கட்டுப்பாடுகளும் மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றன.
கட்டுக்குள் இல்லாத ஒழுங்குமுறை – வளர்ந்து வரும் ஏகபோகம்
17வது மக்களவை தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே கேபிள் டிவி, நேரடி அலைவசதி (டிடிஎச்) ஆகியவற்றை செயல்படுத்தி வருவோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோடியின் பெயரைத் தாங்கிய நமோ டிவி என்ற ஒரு தொலைக்காட்சியை ஒளிபரப்பத் தொடங்கினர். ஒளிபரப்புக்கான உரிய அனுமதியைப் பெறாமல் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பு சோதனை
களுக்கு உட்படாமல் ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடந்து வருகிறது என ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே செய்திகளை வழங்கிவரும் இணைய தளங்கள் தெரிவித்தன. “இடைவெளி ஏதுமின்றி நரேந்திர மோடி
யின் உரைகளையும் பாஜகவிற்கு ஆதரவான செய்திகளையும் மட்டுமே இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது” என ஸ்க்ரோல் இணைய தளம் தெரிவித்தது. “செய்திகளை வழங்கி வரும் மற்ற தொலைக்காட்சிகலைப் போல் இது இல்லை” என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.

இதில் முக்கிய வேறுபாடு என்னவெனில் கேபிள் டிவி அல்லது நேரடி அலைவரிசை சேவையைப் பெறுகின்ற எந்தவொரு நுகர்வோரும் தனது விருப்பப்பட்டியலில் இருந்து இந்த நமோடிவி தொலைக் காட்சியை நீக்கவேமுடியாது என்பதாகும். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பலவற்றின் விசாரிப்புகளுக்குப் பிறகு மத்திய அரசின் செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த தொலைக்
காட்சியின் தகுதி குறித்து ஆய்வு செய்தபோது கேபிள் டிவி மற்றும் நேரடி அலைவரிசை சேவையை வழங்குவோர் வழக்கமாக தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அலைவரிசையைப் போன்ற ஒன்றுதான் இந்த நமோடிவி என்றும் அது தனியொரு தொலைக்காட்சியே அல்ல என்பதையும் கண்டறிந்தது.

தனிநபர் துதிபாடலை உருவாக்க பொது ஆதாரவளத்தை இவ்வாறு கபளீகரம் செய்வது குறித்து விரிவான அளவில் கவலை தெரிவிக்கப் பட்டபோது, சுனில் அரோரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம் அதன் வழக்கமான சஞ்சல புத்தியோடு இந்தப் புகாரை கணக்கில் எடுத்துக் கொள்ளவே தயாராக இல்லை.
ஒழுங்கமைவு விஷயங்களை கையாளுவதில் வேண்டுமென்றே கண்டும் காணாத போக்கை கடைப்பிடிப்பது என்ற கொள்கை கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ள நிலையில் உரிமை குறித்த விஷயங்கள், குறிப்பாக ஒருமுகப்போக்கை கட்டுப்படுத்தி, பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற மிக முக்கியமான, முன்னுரிமையான விஷயங்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமலே இருந்து வருகிறது. சாட்டிலைட் மூலமாகவும், கேபிள் மூலமாகவும் ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் ஹாத்வே, டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ஆகிய இரு முக்கியமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றுள்ளதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. பெயரளவிற்கே வெளியில் தெரிவிக்கப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் பல்வேறு ஊடக உள்ளடக்கங்களில் தீர்மானகரமான அதிகாரத்தையும் அது பெற்றுள்ளது.

தன்னிடமுள்ள பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் 2018 நவம்பரில் ரிலையன்ஸ் நிறுவனம் நியூ எமர்ஜிங் வேர்ல்ட் ஆஃப் ஜர்னலிசம் என்ற புத்தம்புது நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையை விலைக்கு வாங்கியுள்ளது. கைபேசி மூலமாக செய்திக்கான உள்ளடக்கங்களை பல்வேறு வடிவங்களில் இந்த நிறுவனம் உருவாக்கும் திறமை கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வளரும் நாடுகள் உள்ளிட்ட இதர பெரும்பாலான சந்தைகளை விட இந்தியாவில் கைபேசி சந்தையே தற்போது உச்சத்தில் உள்ளது. இதழி
யல் ஆய்விற்கான ராய்ட்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் செய்திகளை தெரிந்து கொள்ள தங்கள் ஸ்மார்ட்ஃபோனையே நம்பியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். தங்கள் கைபேசியைத் தவிர வேறெந்த வசதியும் தங்களிடம் இல்லை என 31 சதவீதத்திற்கும் குறையாதவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மிக நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழிலை ஒழுங்குபடுத்தி பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உருவாக்க வேண்டும் என முயற்சித்து வந்துள்ளது. பரம்பரை குடும்பச் சொத்தை மிக கவனமாகப் பாதுகாத்து வருவதும், இலைமறை காயான முதலீட்டு முறையே அதன் வழக்கமான செயல்பாடாக இருப்பதுமான ஓர் உலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் இத்தகைய முயற்சியில் ஆண்டுதோறும் ஃப்ரேம்ஸ் மாநாடு என்ற நிகழ்வில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் ஒன்று கூடி தங்களுக்கென தனிப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்புவது வழக்கமாக இருந்தது.

கையிலுள்ள புள்ளிவிவரங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இத்தொழிலைப் பற்றிய அறிக்கை ஒன்றும், எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் இந்த நிகழ்வில் வெளியாவது வழக்கம். எனினும் இந்த நிகழ்வு இத்தொழில் குறித்த தீவிர மான அல்லது சவாலான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தருணமாக இருந்ததில்லை. மாறாக, எரிச்சலூட்டும் சில தொழிலாளர் நலச் சட்டங்கள், அரசின் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதைத் தவிர எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற கூட்டு ணர்வை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வந்துள்ளது.

வேறு எதைப்பற்றியும் பேசாமல் மவுனமாக இருப்பது என்ற இவர்களின் ஒப்பந்தம் 2013 மார்ச் மாதத்தில் மிகவும் அரிதான வகையில் மீறப்பட்டது. ரூபர்ட் முர்டாஷூக்கு சொந்தமான, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டார் டிவி குழுமத்தின் தலைமை செயல் அலுவலரான உதய் சங்கர் இந்த நிலையின் மற்றொரு பக்கத்தைக் காண முற்பட்டார். மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாக அவரது வார்த்தைகள் இருந்தன. இந்திய ஊடகத் தொழிலில் நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் பெருமளவிற்கு இல்லவே இல்லை என்றே கூறலாம். எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடும் ஒரு தலைவர் இடையூறுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு பாதையை கண்டறிய வேண்டுமெனில் புள்ளி விவரங்களில் ஓரளவிற்கு நம்பிக்கை வைத்தே அதைச் செய்ய முடியும். இந்த வகையில் மிகுந்த கவலைதரத்தக்க சூழலையே உதய் சங்கர் சந்திக்க வேண்டியிருந்தது.

“பகுத்தறிவு பூர்வமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டு
மெனில் அதற்கு எண்கள்தான் அடித்தளமாக அமைய வேண்டும். எண்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிபுணர்களாகிய நாங்கள் இந்த எண்களை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை எனில் எப்படி முடிவுகளை எடுக்க முடியும்? ஒரு தொலைக்காட்சி நிர்வாகி என்ற முறையில் எப்படி என்னால் செயல்பட முடிகிறது என்று சில நேரங்களில் நானே ஆச்சரியப்படுவேன். எனது பார்வையாளர்கள் பற்றி எனக்குப் போதுமான விவரம் தெரியாது. அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட எனக்குத் தெரியாது. இந்தியாவில் 14 கோடி குடும்பங்கள் கேபிள்- சாட்டிலைட் மூலம் இணைக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் 6.2 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்தக் கணக்கில் தென்படுகின்றன. விளம்பரச் சந்தையின் அளவு என்ற அடிப்படையான விஷயத்தில் ஒத்துப்போகாத நிலையில்தான் இந்தியாவின் முக்கிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன.”

உள்ளார்ந்த பொருளாதார வரம்புகளை எல்லாம் கடந்து விரிவடைந்து கொண்டே செல்ல முயன்ற இந்திய ஊடகத்தின் இருபது ஆண்டுக்கால செயல்பாட்டை நினைவு கூர்வதாகவும் இந்த உரை அமைந்திருந்தது. 1990களை அடுத்து வந்த தசாப்தங்களில் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக விளம்பரத் துறை விரிவடைந்ததோடு ஊடகங்கள் விரிவடையவும் தூண்டுதலாக இருந்தது. இத்துறையின் வருவாய்க்கான திட்டமும் கூட வாசகர்கள்-பார்வையாளர்களின் நலனுக்கு உகந்த நிலையில் இருந்து விளம்பரதாரர்களின் நலனைத் திருப்திப்படுத்துவதாகவும் மாறியது.
தொலைக்காட்சித் துறையின் மொத்தவருவாயில் கிட்டத்தட்ட 67.5 சதவீதமாக இருக்கும் பார்வையாளர்களின் சந்தாவில் பெரும்பகுதியை சந்தாதாரர்களின் வீட்டுக்கு தொலைக்காட்சி சேவையை கொண்டு செல்லும் கடைசிக் கண்ணியாக விளங்கும் கேபிள் நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.

அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரையில் மொத்தவருவாயில் 65 சதவீதம் விளம்பரங்களின் மூலமே பெறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, `ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து போன்ற நாடு தழுவிய பெரும் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரையில் மொத்த வருவாயில் 85 அல்லது அதற்கும் மேலான சதவீதத் தொகை விளம்பரங்களில் இருந்தே பெறப்படுகிறது. தொலைக்காட்சி- அச்சு ஊடகம் ஆகிய இரு துறைகளிலும் அவற்றின் வருவாயில் சந்தாதாரர்களின் பங்கு குறைந்து கொண்டு வரும் நிலையில் வாசகர்களுக்கு இது
வரை வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை மாற்றப்பட்டு, விளம்பரதாரர்களுக்கு சிறந்தவகையில் சேவை செய்வதாக மாறியது.
1980களில் இருந்து தொடங்கி, அதையடுத்து வந்த பத்தாண்டுகளில் உலகளாவிய விளம்பரத் தொழிலானது தொடர்ந்து வேகமாக ஒருமுகப்படுத்தப்பட்டு வருவதைக் கண்டது. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்கு மாபெரும் நிறுவனங்கள் – அதாவது பிரிட்டனின் டபிள்யூ ப்பி ப்பி, அமெரிக்காவின் இண்டர் பப்ளிக் மற்றும் ஓம்னிகாம், பிரான்சின் பப்ளிசிஸ் ஆகியவை- தான் உலகத்தில் உள்ள விளம்பர நிறுவனங்களில் பாதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த வர்த்தகத்தில் அவற்றின் பங்கு அதைவிடவே அதிகமாக இருக்கும். இவற்றோடு ஜப்பானின் டெண்ட்ஸூ குழுவையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஐந்து பெரு நிறுவனங்களும்தான் உலகளா விய விளம்பரத் தொழிலை மேலாதிக்கம் செய்து வருகின்றன. டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான வர்த்தகம் குறித்த விவரக் குறிப்பில் இந்திய விளம்பர சந்தையில் 50 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்தப் பெரும் நிறுவனங்கள் இத்தொழில் தொடர்புடைய நிறுவனங்களை – குறிப்பாக சந்தை குறித்த ஆய்வு, வாசகர்களை அளவீடு செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்
களை – கைப்பற்றுவதன் மூலம் ஊடகங்கள் மீதான தங்கள் வலிமையை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன. தனது சுய அதிகாரத்திற்கு ஏற்படக் கூடிய – அது உண்மையானதோ அல்லது கற்பனையானதோ – எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக எதிர்வினை புரியும் ஊடகத் தொழில் தனது சொந்த வர்த்தகத்திற்கான முக்கிய திறவுகோலை தன் கையில் வைத்திருக்கும் தொழிலான விளம்பரத்துறையில் அதிகரித்துக் கொண்டே வரும் ஒருமுகப்படுத்தலின் தாக்கங்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது மிகுந்த வியப்பிற்குரியதே ஆகும்.

இதுபற்றிய நெடியதொரு கருத்தோட்டத்தை உருவாக்கிக் கொள்ள இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளுக்கு நாம் மீண்டும் பயணம் செய்தோமெனில், இத்தொழிலின் மிக வேகமான வளர்ச்சிக்குப் பிறகு மற்றொரு துரித வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி அது நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்ப்போம். தேசியம் என்ற கோட்டைக் கொத்தளத்தின் மீது அது நின்று கொண்டிருந்த கடைசிக் காலமும் அதுவே. 2001 ஜனவரியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை தடை செய்து வந்த நீண்ட நாள் கொள்கை பற்றிய கருத்துக்களை செவிமடுக்கத் தொடங்கியது. 2001 ஜனவரி தொடங்கி இந்த நிலைக்குழு 13 முறை கூடி மூத்த பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டது.

அந்நிய முதலீடு குறித்த முக்கிய முடிவு

2001 டிசம்பர் மாத வாக்கில் இது குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ச்சியான ஒரு பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, பரவலான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரன் இதழின் உரிமையாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன நரேந்திர மோகன் -ஐச் சார்ந்த பிரிவினர் அச்சு ஊடகத்தில் 26 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். 2002 பிப்ரவரியில் நாடாளுமன்ற நிலைக்குழு மீண்டும் கூடியபோது அதன் முன்னால் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு ஆலோசனைகள் இருக்குமளவிற்கு மோகனின் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்தது. அதில் ஒரு ஆலோசனை மோகனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்தது எனில் மற்றொரு ஆலோசனை அச்சு ஊடகம் இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை 1955-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு பெருமளவிற்கு ஆதரவைப் பெறத் தவறியது. 2002 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மோகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒரு சில நடைமுறை உத்திகளும் கூட தோல்வியுற்றன. இடதுசாரி கட்சிகளோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் 1955-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலைபாட்டையே ஆதரித்தது. எனினும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முடிவுகள் இக்கொள்கையின் தொடர்ந்த செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதை
யும் கொண்டு வரவில்லை. இந்திய ஊடகத் தொழில் மிக ஆழமான வகையில் பிளவுபட்டிருந்ததே அதற்குக் காரணமாகும். அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்ரன் குழுவிற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ஆனந்த பஜார் பத்ரிகா ஆகிய குழுக்களின் ஆதரவு இருந்தது. எனினும் 1990களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வந்த இந்தப் பிரச்சாரம் பெருமளவிற்கு முன்னேறவில்லை. கணிசமான அளவிற்கு தேசிய உணர்வை முன்வைத்த வலுவான ஒரு குழுவின் எதிர்ப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இந்தக் குழுவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து ஆகிய செல்வாக்கு மிக்க மூன்று ஆங்கில நாளிதழ்கள் முறைப்படுத்தப்படாத கூட்டணியாக இருந்தன.
இந்தக் குழுவின் அபரிமிதமான வலிமைக்குப் பின்னால் பிரதேசரீதியான, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள் பலவற்றின் ஆதரவும் இருந்தது. இவை சிறப்பாக ஒழுங்கமைந்தவையாக இருந்ததோடு, புதுமைத் தன்மையும் நிதியளவில் பலமும் கொண்டவையாகவும் இருந்தன.

தாராளமயமாக்கல் கொள்கையில் பரவலான வீச்சினை அச்சு ஊடகம் எதிர்ப்பது அல்லது விலகி நிற்பது என்பதற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை என்ற வாதத்திற்கு பதிலடியாக இந்தக் குழு வலுவான பதிலையும் முன்வைத்தது. தொலைக்காட்சி ஊடகத்தை விட அதிகமான அளவில் மக்களின் உணர்வுகளின் மீதும் அரசியல் நிகழ்வுகளின் மீதும் ஆழமான செல்வாக்கு செலுத்துகின்ற, பிரத்தியேகமானதொரு கலாச்சார அம்சம்தான் நாளிதழ்கள் என்பதே இக்குழுவின் பதிலாகும்.

இத்தகையதொரு துறையை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதென்பது முற்றிலும் அந்நியமான, அரசியல் செயல்பாட்டை அரித்துப் போகச் செய்யும் வகையில் செல்வாக்கு செலுத்த வழிவகுப்பதே ஆகும். இந்தியர்களின் கைகளில் பத்திரிக்கையின் கட்டுப்பாட்டு உரிமையை வைத்திருப்பது என்பது செயல்படத்தக்க ஒன்றாக இருக்காது என்பதோடு பெரியதொரு வெளிநாட்டு முதலீட்டாளர் நுழைவதன் மூலம் சமநிலையற்ற அதிகாரமும் அதிலிருந்து உருவாகும்.

எனினும் 2000களின் தொடக்கத்தில் ஊடகத்துறைக்குள் செயல்பட்டு வந்த சக்திகளின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் அதுவரையிலான தனது நிலைபாட்டில் இருந்து மாறியது இந்தச் சமநிலையில் முக்கிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. டெல்லியில் முன்னணி நாளிதழாக இருந்த அது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வரவுக்குப் பின் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைப்பதில் ஏற்பட்ட இழப்பே அந்த நாளிதழ் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவான குழுவுடன் இடம் பெயர்வதற்குக் காரணமாக இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சு ஊடகத்தொழிலுக்குள் இருந்த வலுவான பிரிவினரின் கோபத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர போதுமான ஆதரவு அத்தொழிலில் நிலவுகிறது என்ற உத்தரவாதத்தை பெற்றது. அதன் விளைவாக அச்சு ஊடகத்தில் மொத்த பங்குத் தொகையில் 26 சதவீதம் அளவிற்கு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆசிரியர் பொறுப்பு இந்தியர்களிடமே இருக்கும் என்பதோடு செய்திக்கான திட்டங்களில் செல்வாக்கு செலுத்துமளவிற்கு அனைத்து முக்கிய பதவிகளிலும் நான்கில் மூன்று பங்கு பதவிகளில் இந்தியர்களே இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு குறிப்பிட்டது.

இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இந்திய அச்சு ஊடகத் தொழில் இரண்டாகப் பிளவுபட்டது. இத்தொழிலின் உச்ச அமைப்பான இந்திய பத்திரிக்கை கழகம் ( ஐஎன்எஸ் ) இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர நாளிதழ்களின் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்று சற்று கவலையுடன் கருத்து தெரிவித்தது. பிசினெஸ் ஸ்டாண்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற தனிப்பட்ட பத்திரிக்கை குழுக்கள் இத்தொழிலுக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் மூலதனம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டுவர இது வழிவகுக்கும் என்றும் மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டன.

கபளீகரமான விளம்பரப் பகுதி

நேரடி அந்நிய முதலீடு குறித்து தொடர்ச்சியான வாதப் பிரதிவாதங்களில் அச்சு ஊடகம் ஈடுபட்டு வந்த அதே நேரத்தில் மறுபுறத்தில் அத்தொழில் வெளிநாட்டு நலன்களால் முற்றிலு மாகச் சூழப்படுவதற்கான வழியேற்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. விளம்பர நிறுவனங்கள், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்களில் 100 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான கொள்கையை மேற்கொள்வதற்கான முயற்சி எவ்வித விவாதமும் இன்றி 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது இந்திய நாளிதழ்கள் இந்தக் கொள்கையின் அறிகுறியை உணர்ந்து கொள்ளத் தவறின. அச்சு ஊடகமானது விளம்பரத்தின் மூலமான வருவாயை பெரிதும் நம்பியிருந்த ஒரு சூழலில், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்
களின் முடிவுகளைச் சார்ந்தே விளம்பரத்தை வெளியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கொள்கை முடிவு எவ்வித தீவிரமான எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இன்னும் சொல்வதெனில் அதன் நீண்ட கால தாக்கங்கள் குறித்து மேலோட்டமான அலசல் கூட மேற்கொள்ளப்படவில்லை.

ஊடகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து நடைபெற்று வந்த விவாதங்கள் பயனற்றவை என்பது மட்டுமின்றி மேலோட்டமானதும் கூட என்று 2002-ம் ஆண்டில் சந்தை குறித்த ஆய்வு நிபுணரும் ஊடக ஆய்வாளருமான என். பாஸ்கர ராவ் எழுதியிருந்தார். “இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஊடகம் குறித்த திட்டங்கள் சந்தை குறித்த ஆய்வையே நம்பியுள்ளநிலையில், அதனடிப்படையில் வெளியிடப்படும் விளம்பரங்களே ஊடகத்தின் செயல்வேகத்தையும் வழியையும் தீர்மானிக்கும் நிலையில், அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்த பொதுவிவாதம் முழுவதுமே இந்த உண்மையைக் காணத் தவறிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அச்சு ஊடகமும், பத்திரிக்கை அதிபர்களும் நேரடி அந்நிய முதலீடு குறித்த போலிச் சண்டையில் ஈடுபட்டு உயரிய கருத்துக்களை முன்வைத்த அதே நேரத்தில் அதைச் சுற்றியிருந்த பகுதி முழுவதும் இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் நலன்களால் முற்றிலுமாகவும், மிக வேகமாகவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்திய விளம்பர உலகத்தை மேலாதிக்கம் செய்து வரும் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் வளர்ச்சிப் பாதையைக் கொண்டே இதை விளக்கிவிட முடியும். 1990களில் உலகம் முழுவதிலும் அது ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் இந்தியாவில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டதாக அது இருக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியன் மார்க்கெட் ரிசெர்ச் பீரோ (ஐ எம் ஆர் பி) என்ற நிறுவனத்தின் மூலமும் தனது துணை நிறுவனங்களின் மூலமுமே அது கணிசமான செல்வாக்கை செலுத்தி வந்தது.

1993-ல் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது சிக்கலான வலைப்பின்னலுக்குள் கந்த்தார் குழு என்ற சந்தை ஆய்வுக்கான பிரிவை உருவாக்கியது. 1998-ல் இந்த கந்த்தார் குழு இத்துறையில் முன்னோடியாக இருந்த ஏசி நீல் சன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொலைக்காட்சி நேயர்கள் குறித்த அளவீட்டுப் பிரிவை (டாம்) உருவாக்கியது. அப்போது வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஒளிபரப்பு தொழிலுக்கு மிகவும் தேவையான திறனை வழங்கும் என்றும் அது உறுதியளித்தது. இத்தகைய அளவீட்டு முறையில் அதன் போட்டி அமைப்பாக இருந்தது அதன் போட்டி நிறுவனமான ஓஆர்ஜி-மார்க்- இன் ஒரு பிரிவாக இருந்த இண்டாம் ஆகும்.

2000-ம் ஆண்டில் டபிள்யூ ப்பி ப்பியும் வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் இந்த ஓஆர்ஜி-மார்க் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டாம் மற்றும் இண்டாம் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தன. இதன் மூலம் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் விளம்பரம் செய்வதை தீர்மானிக்கும் தர
வரிசை முறையை கட்டுப்படுத்தும் நிறுவனமாக டபிள்யூ ப்பி ப்பி உருமாறியது.

உலகமயமாக்கல் பத்திரிக்கை வாசகர்கள் குறித்த ஆய்வுலகத்தில் மிகத் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1990கள் முழுவதிலும் பத்திரிக்கை தொழில், விளம்பர நிறுவனங்களின் கழகம், பத்திரிக்கை விநியோகம் குறித்த தணிக்கை அமைப்பு ஆகியவற்றின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய வாசகர் ஆய்வு (என் ஆர் எஸ்) அமைப்பு என்பதே இத்தொழில் குறித்த தர மதிப்பீட்டு அளவையாக நீடித்து வந்தது. 1995-ல் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் உருவாக்கிய புதியதொரு கூட்டணி இதற்கு மாற்றாக இந்திய வாசகர் ஆய்வு (ஐ ஆர் எஸ்) என்ற அமைப்பை தொடங்கியது. என் ஆர் எஸ்-ஐ எதிர்த்து நேரடியாக மோதிய ஐ ஆர் எஸ் பெருநிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் கால அட்டவணைக்கு உகந்த வகையில் காலாண்டு ஆய்வுகளை வழங்க உறுதியளித்தது.
இந்தப் போட்டியின் விளைவாக தங்களுக்குப் பயனேதும் தராத நிலையில் இத்தொழிலில் உள்ள முக்கிய நிறுவனங்கள் வாசகர் குறித்த அளவீட்டு முறையையே சந்தேகிக்கத் தொடங்கின. பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த நிலையில் என்ஆர்எஸ் அமைப்பு 2004-ல் தனது செயல்பாட்டை நிறுத்தியதும் ஐஆர் எஸ் இத்துறையில் ஏகபோகமானது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் ஐஆர் எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அமைப்போடு இணைந்திருந்த பல பத்திரிக்கைகளும் இதன் மூலம் தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று கூறி ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று அச்சுறுத்திய நிலையில் அதன் வாசகர் எண்ணிக்கை குறித்த துவக்க நிலை மதிப்பீடுகளை கணிசமாகத் திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஐஆர் எஸ் ஆளானது.

உலகளாவிய அதிகாரத்தைப் பொறுத்தவரையில் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களை வழங்குவது குறித்து ஆலோசனை கூறுவதில் பங்கு வகித்து வந்த என் ஆர் எஸ் செயல்பாட்டை நிறுத்திய நிலையில் அதனை மேலாதிக்கம் செய்து வந்த டபிள்யூ ப்பி ப்பி நிறுவனத்தின் வலிமை ஆம்னிகாம் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. தனது இந்திய துணைநிறுவனமான ஹன்சா ஆய்வு நிறுவனத்தின் மூலம் போட்டி பத்திரிக்கை நிறுவனங்களின் கூட்டணியின் உதவியுடன் 1990களின் இறுதியில் ஐஆர் எஸ் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. 2008-ல் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் ஒரு பகுதியான ஐஎம் ஆர் பியின் தொழில்நுட்ப மேற்பார்வையில் என் ஆர் எஸ் மீண்டும் தனது செயல்பாட்டை தொடர முயற்சித்தது. அந்த முயற்சி தோல்வியடைந்த போதிலும் தொலைக்காட்சிக்கான தரவரிசையில் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தொடர்ந்து வலுவோடு இருந்து வருகிறது.
ஊடக உரிமை, விளம்பரத் தொழில், சந்தை குறித்த ஆய்வு ஆகிய துறைகளில் ஒருமுகத் தன்மை அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய நிலையோடு கூடவே மற்றொரு அம்சமும் வெளிப்படுகிறது. அதுதான் அரசியல் ரீதியான விளம்பரத்தில் மிகப் பெரும் விளம்பர நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவதாகும். 2014 தேர்தல் காலத்தில் பாஜக இண்டர் பப்ளிக் மற்றும் டபிள்யூ ப்பி ப்பி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களை மாறிமாறி பயன்படுத்திக் கொண்டது. இறுதியில் இத்தொழிலைச் சார்ந்த நிபுணர்களையே தனிப்பட்ட வகையில் தனது ஆலோசகர்களாக அது நியமித்துக் கொண்டது. செயல்திட்டங்களை உருவாக்குவதில் கருத்துக் கணிப்புகள் உதவி செய்வதோடு மக்களின் உணர்வுகளிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. இவை டபிள்யூ ப்பி ப்பி மற்றும் ஆம்னிகாம் குழுக்களுடன் இணைந்த நிறுவனங்களால் மேற்கொள்ள ப்படுகின்றன.

பொது நோக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அதை ஆழமாக அரிக்கும் சக்தியாக உலகமயமாக்கல் விளங்குகிறது. உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனங்களுக்கு அடிபணிந்து நிற்பதென்பது ஊடகத்திற்கும் அதன் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த உறவு சீர்குலையவும் காரணமாகியுள்ளது.

இதன் விளைவாக, இந்திய சூழல் உலகமயமானதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் அதற்குப் போட்டியாக எழுந்து வருகின்றன. மோசமான வகையில் கரைந்து போன நம்பிக்கை, மூழ்கடிக்கும் வகையில் திரண்டு வரும் போலிச் செய்திகள் ஆகிய சூழலில்தான் இன்றைய ஊடகம் உள்ளது.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...